சர்க்கஸ் – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 2, 2022
பார்வையிட்டோர்: 8,016 
 

பார் விளையாட்டு முடிந்தது. கோமாளி பொத் என்று விழுந்தான். பார்வையாளர்கள் கத்திக் கை தட்டி ஆரவாரித்தனர்.

கூண்டோடு வந்தது சிங்கம். கூண்டைத் திறந்தனர் பணியாளர்கள். கர்ஜித்துக் கொண்டே பாய்ந்தது சிங்கம். பார்வையாளர் மொத்தமும் திகிலில் இருந்தார்கள்.

ஹ ஹீ..ஹ..கீ…ய்…என்று வாயால் வித்தியாசமாகக் கத்தி கையில் இருந்த சாட்டையில் ‘பட்…பட்…பட்…’ என்று ஓசையெழுப்பினார் ரிங்மாஸ்டர். சப்த நாடியும் ஓய்ந்த நிலையில் அந்த ஆண் சிங்கம் பிடரி குலுங்கி ரிங் மாஸ்டர் முன் வந்து வளர்ப்பு நாயாய் வந்து நின்றது.

ரிங் மாஸ்டர் ஒரு சக்கரத்தை அதன் முன் நீட்ட அதற்குள் பாய்ந்து மறுபுறம் குதித்தது சிங்கம்.

மீண்டும் நீட்ட மீண்டும் அதற்குள் புகுந்து வந்தது.

அடுத்து சக்கரத்தைச் சுற்றி நெருப்பு மூட்டியபின் அதே போல் வளையத்திற்குள் புகுந்து வந்தது சிங்கம்.

அரே… அரே… அரே… அரே… என்று கோமாளி கூவிக் கூவி ரிங் மாஸ்டர் காட்டிய வளையத்தில் பூர முடியாமல் கீழே விழுந்து பார்வையாளர்களை மகிழ்வூட்டினான்.

அடுத்து சிங்கம் வாயைப் பிளந்தது. ரிங் மாஸ்டர் தலையை சிங்கத்தின் வாயில் நுழைத்தார். இரண்டு மூன்று நிமிடங்கள் தலையை அதன் வாய்க்குள் வைத்திருந்தார் ரிங் மாஸ்டர்.

மூச்சைப் பிடித்துக்கொண்டு டென்ஷனாக உட்கார்ந்திருந்த கூட்டம் ரிங் மாஸ்டர் சிங்கத்தின் வாயிலிருந்து தலையை எடுத்ததும் கூட்டம் கைதட்டி ஆரவாரித்து.

அன்றைய காட்சி முடிந்து விடுதிக்கு வந்தார் ரிங் மாஸ்டர்.

விடுதி அறையில் நுழைந்ததும் கொசு வலைக்குள் புகுந்துகொண்டு, மொஸ்கிடோ மேட்டால் பட் பட் என்று கொசுவை அடித்துவிட்டு நிம்மதியாகத் தூங்கினார்.

– கதிர்ஸ் (ஜனவரி 1-15-2022)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *