சம்ஸய ஆத்மா விநஸ்யதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 28, 2020
பார்வையிட்டோர்: 7,181 
 
 

அந்தச் சின்னைக் கிராமத்தில் 1970 களில் ஒரு அக்கிரஹாரம் இருந்தது.

ஆனால் இப்போது அதில் பல ஜாதியினரும், ஏன் பல மதத்தினரும் கூட குடியேறி விட்டனர்.

அது அக்கிரஹாரமாக இருந்தபோது, ஒரு வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் காவியுடை அணிந்த ஒரு வயதான சாமியார் தன்னுடைய உஞ்சுவர்த்தியை முடித்துக்கொண்டு, ஒரு பெரிய வீட்டின் முன்புறத் திண்ணையில் அமர்ந்தபடி, கிடைத்த அரிசிகளை பிரித்து ஒரு துணிப் பையில் மாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது வீட்டினுள் கணவனும், மனைவியும் வாஞ்சையுடன் ஒருவரையொருவர் கொஞ்சிக் கொண்டிருந்த காதல் பேச்சுக் குரல் சாமியாருக்குக் கேட்டது. பரவாயில்லையே பகலில் மனைவியைக் கொஞ்சுகிறாரே என்று நினைத்து சாமியார் தனக்குள் அமைதியாகச் சிரித்துக் கொண்டார்.

சற்று நேரத்தில் அந்த மனைவி கதவைத்திறந்து “இங்கெல்லாம் நீங்க உட்காரக் கூடாது…. எழுந்து வேற இடத்துக்குப் போங்க” என்று சற்றுக் கடுமையாகக் கூறினாள். சாமியார் திடுக்கிட்டு அமைதியாக அந்த இடத்தை விட்டு எழுந்து நின்றார்.

அவர் அந்த வீட்டை விட்டு அகலுவதற்குள், “என்னங்க ஒரு பக்கெட்டில் தண்ணீர் எடுத்துகிட்டு வாங்க…” என்று கணவனுக்கு குரல் கொடுத்தாள். கணவன் தண்ணீர் எடுத்து வந்து திண்ணையில் ஊற்ற, மனைவி சாமியார் உட்கார்ந்திருந்த இடத்தைக் கழுவிவிட்டாள்.

இதைப் பார்த்த சாமியார், இதை தனக்கு நேர்ந்த மிகப்பெரிய அவமானமாகக் கருதினார்.

தூரத்தில் இருந்த ஒரு மரத்தடிக்கு சென்று உட்கர்ந்தார். தான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இந்த அக்கிரஹாரத்துக்கு வந்து உஞ்சுவர்த்தி எடுத்த போதும் இந்த ஆதர்ஷ தம்பதிகள் ஒருநாள் கூட தனக்கு அரிசி பிட்சையாகப் போட்டதில்லை… போகட்டும் அது அவர்கள் விருப்பம்.

ஆனால் தன்னை இன்று அவர்கள் திண்ணையிலிருந்து விரட்டியதும் அல்லாமல் அந்த இடத்தைக் கழுவிவேறு விட்டு அவமானப் படுத்தி விட்டார்கள். ‘இவர்களை இனி சும்மா விடக்கூடாது, மனித மனம் ஒரு குரங்கு. இவர்களைத் தூண்டிவிட்டு சண்டை போடவைத்து, பிரித்தால்தான் என் சினம் ஆறும்…’ என்று கறுவிக் கொண்டார்.

அன்றிலிருந்து தினமும் அக்கிரஹாரம் வந்து பிட்சை எடுப்பதுபோல் அந்த வீட்டை நோட்டம் விட்டார்.

சாமியார் எதிர் பார்த்த மாதிரியே, ஒருநாள் அந்த வீட்டின் கணவன் சட்டையை மாட்டிக்கொண்டு எங்கோ வெளியே சென்றான். மனைவி கதவைச் சாத்திவிட்டு உள்ளே சென்றாள்.

இதுதான் சரியான சந்தர்ப்பம்.

சாமியார் அந்த வீட்டின் முன் போய் நின்று, “தாயே பிட்சை’ என்றார். மனைவி எட்டிப் பார்த்து, “போங்க.. போங்க நான் எதுவும் போட மாட்டேன்” என்றாள். சாமியார், “தாயே, நீங்கள் எதுவும் போடவேண்டாம்… ஆனால் தங்களிடம் ஒரு மட்டும் உண்மையை செல்லிவிட்டுப் போய்விடுகிறேன்” என்றார்.

“அப்படியா, உள்ளே வாருங்கள், அமருங்கள்.”

“நான் உட்கார வரவில்லை தாயே… நான் முக்காலமும் அறிந்தவன். அடியேன் சென்ற மாதம் காசிக்குச் சென்றிருந்தேன். காசி விஸ்வநாதரே என் கனவில் தோன்றி தாங்களிடம் ஒரு உண்மையை சொல்லி வரச் சொன்னார்” என்று ரீல் விட்டார்.

அவளின் ஆர்வம் அதிகரித்தது. “அது என்ன ஸ்வாமி சொல்லுங்கள்.”

“உங்களைப் பார்த்தாலே தெய்வீகக் களை சொட்டுகிறது. ஆனால் உங்களுக்கு வாய்த்த கணவர்தான் சரியில்லை… அவசரப்பட்டு விட்டீர்கள்.”

“என்ன சொல்கிறீர்கள்?”

“ஆமாம்… போன ஜென்மத்தில் அவர் தூத்துக்குடி உப்பளத்தில் பாத்தி கட்டி வேலை செய்த ஒரு சாதாரணன்… நீங்களோ போன ஜென்மத்தில் ஒரு அரசருக்கு மனைவியாக இருந்த மஹாராணி.”

“நீங்கள் சொல்லுவதை நான் எப்படி நம்புவது?”

“இன்று மாலை ஆறரை மணிக்கு இங்குள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளை வணங்கிவிட்டு வாருங்கள். இரவு சாப்பிட்டுவிட்டு உங்கள் கணவர் குறட்டை விட்டுத் தூங்கும்போது, நைஸாக அவர் உள்ளங் கால்களை நக்கிப் பாருங்கள்… அது பயங்கரமாக உப்புக் கரிக்கும்…”

“அவருக்கு குறட்டை விடும் பழக்கம் கிடையாதே?”

“நான் முக்காலமும் அறிந்தவன் என்று சொன்னேனே? இன்று குறட்டை விடுவார் பாருங்கள்.” சாமியார் அகன்றார்.

வெளியே சென்றிருந்த கணவர் மதியம் வீடு திரும்பினார்.

அன்று மாலை ஆறு மணிக்கே மனைவி கிளம்பி பெருமாள் கோயிலுக்குச் சென்றாள்.

காத்திருந்த சாமியார் உடனே அந்த வீட்டின் முன் நின்று “சாமீ..” என்று குரல் கொடுத்தார்.

“இங்க ஒண்ணும் கிடையாது” என்று கணவர் கடுமை காட்டினார்.

“சாமி… எனக்கு ஒன்றும் வேண்டாம். ஒரு உண்மையை உங்களிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்றுதான் வந்தேன்.”

“என்ன அது? சீக்கிரம் சொல்லிவிட்டு இடத்தைக் காலி பண்ணுங்கள்…”

“நீங்கள் மிகவும் நேர்மையானவர். போன ஜென்மத்தில் தாங்கள் ஒரு ராஜ்ஜியத்தை ஆண்ட மஹாராஜன். அந்த அரச குணம் இந்த ஜென்மத்திலும் உங்களுக்குள் வியாபித்து இருக்கிறது… ஆனால்….”

“பரவாயில்லை சும்மா சொல்லுங்க சாமி.”

“இந்த ஜென்மத்தில் உனக்கு வாய்த்த பாரியாள் சரியில்லை.”

“அதெப்படி அவ்வளவு சரியாகச் சொல்லுகிறீர்கள் சாமி?”

“நான் முக்காலமும் அறிந்தவன்… போன ஜென்மத்தில் உன் பாரியாள் தெருவில் அலைந்து கொண்டிருந்த ஒரு சொறிநாய். அந்தப் புத்தி இன்னமும் அவளை விட்டுப் போகவில்லை. அதனால் தினமும் நீ தூங்கும்போது, அவள் உன் கால்களை ரகசியமாக வந்து நக்குகிறாள். அது உனக்குத் தெரிவதில்லை…”

“அப்படியா சாமி?” கண்கள் விரிந்தன.

“உண்மையை அறிந்து கொள்ள இன்று இரவு நீ குறட்டை விட்டுத் தூங்குவது போல் வேண்டுமென்றே நடித்துப் பார். உன் சொறிநாய் மனைவி நீ தூங்கிவிட்டாய் என்று நினைத்துக்கொண்டு உன் கால்களை நக்குவாள்….”

“கண்டிப்பா சாமி… இது மட்டும் உண்மையாக இருந்தா, அந்த நாயை வீட்டை விட்டே துரத்தி விடுகிறேன்.”

சாமியார் விடைபெற்றுக் கொண்டார்.

அன்று இரவு கணவன், மனைவி இருவரும் சீக்கிரமாகச் சாப்பிட்டுவிட்டு உடனே படுத்துக் கொண்டார்கள். மனைவியை சோதனை செய்ய எண்ணி, கணவன் சீக்கிரமாக குறட்டை விட்டுத் தூங்குவது போல பாசாங்கு செய்தான்.

இதற்காகக் காத்திருந்த மனைவி, மெதுவாகப் போர்வையை விலக்கிவிட்டு எழுந்து நின்றாள். கணவனையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தாள்.

பிறகு மெதுவாக கணவனின் வேஷ்டியை கால்கள் தெரியும்படி விலக்கினாள். நிதானமாக அவனின் வலதுகால் பாதத்தை நக்கினாள். ஆனால் அது உப்புக் கரிக்கவில்லை… சரி, இடது பாதத்தை நக்கிப் பார்க்கலாம் என நினைத்து நக்கிக் கொண்டிருந்தபோது, கணவன் திடீரென முழித்துக்கொண்டு “அடச் சீ, சொறி பிடித்த தெரு நாயே…” என்று காலை அவள் முகத்தில் உதறினான்.

மனைவி மிகுந்த கோபமடைந்து, “நீ போன ஜென்மத்தில் உப்பளத்தில் பாத்தி கட்டிய பனாதிப்பய… நீ எப்படிடா என்னைத் தெரு நாய் என்று சொல்லலாம்?” என்று திருப்பிக் கத்தினாள்.

கணவன் எழுந்து நின்று மனைவியின் தலை முடியை கொத்தாகப் பிடித்து அவளை அப்படியே சுவற்றில் மோதினான்.

சண்டை பெரிதாகி பக்கத்து வீட்டினரும், தெருவில் உள்ளவர்களும் திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர்.

இதனால்தான் பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்வாவும் “சம்ஸய ஆத்மா விநஸ்யதி” அதாவது சந்தேகப் பேர்வழிகள் அழிகிறார்கள் என்றார். (பகவத் கீதை 4-40).

நம் பாரதியாரும் ‘நம்பினார்க் கெடுவதில்லை, இது நான்கு மறைத் தீர்ப்பு’ என்கிறார்.

ஊரில் அசிங்கப்பட்டு விட்டதால், தம்பதிகள் அந்த வீட்டைப் பூட்டிவிட்டு வெளியேறினர்.

சாமியார் அடிக்கடி அந்த வீட்டின் திண்ணையில் அமர்ந்துகொண்டு அரிசியுடன் நிம்மதியாக இளைப்பாறினார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *