சமூகத் துரோகி?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 5, 2024
பார்வையிட்டோர்: 255 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

கதிரவன் மறைந்தான்; வானத்தின் மேற்குத் திசை உலகினர் மனத்தை ஈர்த்தது—- செக்கர் வானம், மாலைக் காலத்தை அணி செய் தது. மலையடிவாரத்தில் மேயச் சென்ற மந்தைகள் ஊர் திரும்பின. மாட்டோடு மல்லுக் கட்டி நாளெல்லாம் உழைத்த உழவர்களும் வீடு திரும்பினர். அவர்கள் மேனியில் வடிந்த வியர்வை யெல்லாம் இரத்தம்தான் என்பதைச் செக்கர் வானம் காட்டிற்று என்று உணர்ந்து விட்ட கொக்குகள் நிற்க மனமில்லாமல் கரங் களால் மார்பிலடித்துக்கொண்டு முடிவு தெரியாத இடத்தை நோக்கி விரைந்துகொண்டிருந்தன. 

ஊர்ப்புறத்தே நெடுஞ்சாலையில் தள்ளாடி நடமாடும் ஒருவன் நகர்ந்து நகர்ந்து கிராமத் துக்குள் வருகிறான். கைகள் ஊஞ்சலாடு கின்றன; தோள்பட்டையோடு பிணைக்கப்படா மல் இருப்பதுபோலத் தொள தொளவென்று ஆடுகின்றன. கால்கள் பின்னிப் பின்னி அவன் சடலத்தை ஆட்டிவைக்கின்றன. குடிவெறி யாக இருக்கலாமோ? இல்லை. 

அவனைக் கடந்து வந்த ஓர் இடையன், 

கஞ்சிக் கவலை ஐயா 
கடன்காரன் தொல்லை ஐயா 
நெஞ்சுத் துயரமையா 
நொந்தகுடி ஆனேனையா 

என்று பாடிக்கொண்டு போகிறான். இடைச் சிறுவனுக்கென்ன கவலை? எருமை மாட்டு முதுகு மீது அமர்ந்துசெல்லும்போது, குதிரைச் சவாரி செய்யும் அரசிளங்குமரனாகவே தன்னைப் பற்றி எண்ணிக்கொள்ளுகின்றான். உழைப் பற்று உணர்வற்று உணர்விழந்து தள்ளாடும் கந்தனைப் பார்த்தபோது பாடிய அதே வாய், சென்னையிலிருந்து விடுமுறைக்குக் கிராமத்தை நாடி வந்திருக்கும் பண்ணையார் மகன் சந்திரனைக் கண்டதும், 

சாலையிலே போறவரே 
சந்திரரே என் கொழுந்தா–நீரு
இங்கிலீசு படிக்கப்போயி-நான் 
என்ன சொல்லிக் கூப்பிடட்டும் 

என்று நையாண்டியாகப் பாடுகிறது. கவலை கவடுகளற்ற அவன் உள்ளத்திலே சாலையில் போகிறவர்கள் அத்தனை பேரும் இடம் பெறுகிறார்கள். கந்தனுக்கு உதவ அவனிடம் காசும் இல்லை; சந்திரனிடம் சென்று பேசிக்கொண்டிருக்க அவனுக்குச் சந்தர்ப்பமும் இல்லை. என்றாலுங்கூடக் கந்தனைக் கண்டவுடன் அவன் உள்ளக் கண்ணாடியில் ஒரு துன்ப உருவம் நிழலிடுகிறது; துயர உணர்வு பாடலாய் மலர்கிறது. சந்திரனைக் கண்டவுடன் அதே கண்ணாடி யில் அவனுடைய இளமைத் துடிப்பும், அவன் பருவ விளையாட்டும் நிழலிடுகின்றன. உடனே இடைச் சிறுவனுடைய உள்ளத்திலே ஒரு காதல் கதை உருவாகிறது. பாட்டுப் பிறக்கிறது; பாடுகிறான். கவலையற்ற வாழ்வு! 

கந்தனுக்கு நாளைக்கு வரப்போகும் நிலையும் தெரியாது; சந்திரன் எங்கே காதல் நாடகம் ஆடினான் என்பதும் தெரியாது. உருவத்தைப் பார்த்து உள்ளத்து நிலையைச் சித்திரம் தீட்டும் கவிஞன் அவன் வெறும் நாட்டுபுறத்து இடையன்தான். 

சரி, கந்தனைப் பார்ப்போம். தள்ளாடித் தள்ளாடி எவ்வளவுதான் நடக்க முடியும்? அதோ, ஒரு மரத்தடியில் அமர்ந்து அடி மரத்தில் சாய்ந்துவிட்டான்…. 


“தற்கொலை முயற்சி, பெரும் பாவமான காரியமாகும். தற்கொலை செய்துகொள்ளுகிறவர்கள் தாம் பேய்களாகத் திரிகிறார்கள். ஆண்வனுடைய விருப்பத்துக்கு எதிராகத் தங்களை மாய்த்துக்கொள்ளுகிறவர் படுநரகில்….” என்று புராணப் பிரசங்கி விளாசு விளாசென்று விளாசிக்கொண்டிருக்கிறார். ஏதோ கதையின் நடுவிலே தற்கொலைபற்றிய பௌராணிகரின் விளக்கம். பேயுலக ஆராய்ச்சி செய்துவிட்டது போலப் பேசுகிறார்! தற்கொலை செய்துகொள்ளாமல் உலகத்து மக்களை யெல்லாம் மனித உருவிலிருந்தே பிடித்தாட்டும் பேய்கள் எத்தனையோ உண்டு என்பதை மட்டும் விளக்க அவருக்கு மனமில்லை. மனிதப் பேய்களைப் பற்றிச் சொன்னால் எத்தனையோ இடத்துப் பொல்லாப்பு. 

சென்னையிலும் இத்தகைய புராணப் பிரசங்கங்கள் நடப்பதுண்டு. இரவு ஒன்பது மணிக்குக் கதை தொடங்கும். பதினொன்று, பன்னிரண்டு மணி வரையிலும் கதை நடக்கும். ‘சத் விஷய’ங்களில் ஆர்வங் கொண்டவர்கள் அங்கே கூடியிருப்பார்கள். கதை நடக்கும்; வெறும் கதையல்ல. சரித்திரம் சொல்லும் போதே சாத்திரம் வரும். அதுமட்டு மல்ல. மறுமையில் வீட்டின்பம் எய்தவேண்டு மாயின் என்னென்ன செய்யவேண்டுமென்ற அறிவுரைகளும் பிறக்கும். அந்தக் கூட்டத்தாருக்கு அவை வேண்டியவைதாம். 

நாட்டுப் புறத்திலிருந்து பிழைப்பை நாடிச் சென்னைக்கு வந்த கந்தனுக்கு அங்கே என்ன வேலை? அவனும் ஒரு பக்கத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்தான். திடீரென்று நடுவே புறப்பட்டுப் போகலானான். அப்போது கூட்டத்திலிருந்து எழுந்து ஓடப் பார்த்த ஒரு சிறுவனை அவன் பாட்டி இழுத்துவைத்து, “புண்ணியக் கதை கேட்க வந்து, நடுவிலே போகலாமோ ? பாவமாச்சே” என்று முணு முணுத்தாள். 

கந்தனுக்கு அதெல்லாம் தெரியாது. ஏதா வது இரண்டு காசு கிடைக்காதா என்று எண்ணி அங்கே வந்தான். சத் விஷயங்களில் சத் ஜனங்களோடு கலந்து மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய எண்ணிய அந்தக் கூட்டத்தில் அவனுக்குப் பிச்சை இடுவார் யாரும் இல்லை; புறப்பட்டுவிட்டான். 

வாழ வகையில்லாத அவனுக்கு வானுலக வழி புரியவில்லை. கதை கேட்டதால் ஒரே பலன் மட்டும் ஏற்பட்டது. தற்கொலை என்ற எண் ணத்தை அந்தப் ‘புண்ணியவான் ‘தான் கந்தன் மனத்தில் உண்டாக்கினார். 

தற்கொலை 

தற்கொலை 

தற்கொலை-அதை ஏன் பாவச் செயல் என்று சொல்ல வேண்டும் ? “ஒவ்வொரு மனிதனும் சமூகத்துக்குச் சேவை செய்யவே இறைவனால் படைக்கப்படுகிறான். எனவே பிறந்துவிட்ட எவனுக்கும் தற்கொலை செய்து கொள்ள உரிமை கிடையாது….” என்று கதைக்காரர் சொன்ன வாதம் அவன் மனத்தில் எழுந்தது. 

அவனைப் பொறுத்தவரையில் சமூகத் துக்குப் பாடுபடத் தயார்தான். உழைப்புக்கு அஞ்சி ஒதுங்கும் இயல்போ, உழைப்பை மற்றவர் தோளிலே எறியும் ‘பெருந் தன்மை’யோ அவனுக்குக் கிடையாது. உடல் உள்ளவரை, உடலில் வலிமை உள்ளவரை உழைப்பதற்கு அவன் தயார்தான். ஆனால், அவனை ஏற்றுக் கொள்ள-இல்லை இல்லை-அவன் உழைப்பை ஏற்றுக்கொள்ளச் சமூகம்தான் தயாராக இல்லை. 

‘உழைத்தால் உணவு’ என்கிறது சமூகச் சட்டம். அவன் உழைக்கத் தயார்; ஆனால் உழைப்பில்லை. ‘உணவும் கிடையாது’ என்கிறது சமூகம். அதோ அந்த மாடி வீட்டார் மட்டும்…?’ என்று ஒரு மெல்லிய குரல் அவன் மனத்திலே எழுகிறது. உடனே ‘விதி’ என்று ஒரு பெருங்குரல் எழுந்து அதை விழுங்கி விடுகிறது. 

கந்தன் படித்தவனல்ல. ‘சத் விஷயங்கள்’ கேட்டவனுமல்ல. அவன் மனத்திலே இப்படி யெல்லாம் கேள்விகள் எழுந்தன. பயன் என்ன ? ஒரே குழப்பந்தான். 

தற்கொலை! தற்கொலை!-அதை ஏன் பாவச் செயல் என்கிறார்கள் ? தற்கொலை செய்கிறவன் சாமிக்குத் துரோகி என்கிறார்களே, ஏன்?” 


நீதி மன்றம் 

சமூகத்திலே அநீதி நிகழ்ந்துவிடாமல் பாது காவல் புரிவதற்காக அரசாங்கத்தார் ஏற்படுத்திய நீதிமன்றத்திலே கந்தன் குற்றவாளிக் கூண்டிலே நிற்கிறான். 

சர்க்கார் தரப்பு வக்கீல் கையை வீசி வீசி – வாதாடுகிறார். கந்தன் செய்தது தப்பு என்பதை நிறுவுவதற்காக அவர் இவ்வளவு அரும்பாடுபட வேண்டியதே இல்லை. இருந்தாலும் அவர் பெரிய வக்கீல். வெறும் சட்டம் பேசுவதோடு நிற்கலாமா? 

“ஒவ்வொரு மனிதனுக்கும் சமூகத்தில் கடமை உண்டு. ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் அங்கமாவான். எனவே, சமூகத்தின் அங்கமாகிய எந்த மனிதனும் தன் கடமையை ஆற்றாமல் தற்கொலை செய்து கொள்வதென்பதை அறிவுள்ள எந்த அரசாங்கமும் ஏற்றுக்கொள்ளாது. சுருக்கமாகச் சொல்லவேண்டு மென்றால் தற்கொலை செய்பவன் ஒவ்வொருவனும் சமூகத் துரோகி ஆவான்.” 

இது சுருக்கந்தான். அந்தச் சட்டம், இந்தச் சட்டம் என்று சட்டப் பெயர்களோடு, பள்ளிக்கூடத்தில் தமக்கு உதவி புரியாத கணக்குப் புத்தகத்தின் எண்களைப் பழிவாங்க நினைத்து அவற்றையும் சேர்த்து விளக்கினார்; விரிவாக விளக்கினார். ஒருவாறாக அவராகவே முடித்து அமர்ந்துவிட்டார். 

நீதிபதி கந்தனைப் பார்த்துக் கேட்டார் : 

“என்ன’ப்பா, நீ ஏதாவது சொல்ல வேண்டுமா?” 

“ஒண்ணும் இல்லீங்க” 

“நீ செய்தது குற்றந்தானா? 

“ஆமாங்க” 

“ஏன் செய்தாய்?” 

“எனக்கு ஒண்ணும் புரியலீங்க. உழைச்சுப் பிழைக்க ஊரிலே வழி இல்லேண்ணு இங்க வந்தேனுங்க. இங்கேயும் அப்படித்தானுங்க….”

“அதெல்லாம் கேட்டதார்……..” 

“சரிதாங்க. வயித்துக்கு இல்லீங்க ; கிடைக்கவும் வழி இல்லீங்க. சரிதான், இன்னமே இங்கே நமக்கு வேலை இல்லைன்னு…. “

“தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தாயோ?” 

“ஆமாங்க.” 

“ஏண்டா, உன் மனைவி மக்கள்….”

“ஐயோ சாமி, அந்த நெனவு எனக்கு என்னாத்துக்குங்க? பாசம் கிடக்குது பாதாளம் வரையிலும். இருந்தாலும் என்னங்க? பணமும் பருக்கையும் இல்லாதவனுக்கு அந்த நெனவெல்லாம் என்னத்துக்கு?” 

“அவர்கள் பிழைப்பு என்ன ஆகிறது?”

“எம் பொளப்புத்தான் அவங்களுக்கும்.” 

“அட, பாவி….” 


திண்ணென்ற சிறைக் கதவு மூடிற்று. கந்தன் கைதி. அவன் சிந்தனைக் கதவு திறந்தது. எழுந்தது ஒரு கேள்வி : 

” சமூகத் துரோகி….! யார் ? வக்கீல் ஐயர் சொன்னாரே! நானா துரோகி?” 

சர்க்காருக்கு அவன் உயிர்மேல்தான் எவ்வளவு அக்கறை ! சமூகத்துக்குத் துரோகம் செய்துவிடாமல் அவனைக் காப்பாற்றிவிட்ட சர்க்கார் மிகவும் திறமை உள்ளதுதான்! 

கந்தன் அடைபட்டுக் கிடந்தான். அவனுடைய ‘கூண்டில்’ மேல் உத்தரத்தில் இரண்டு குருவிகள் பேசிக்கொண்டன. கந்தன் நினைத்தான் : “வாழ வைக்கத்தான் வகையில்லை; சாக விடவும் இந்த மனிசருக்கு ஏன் மனமில்லை?”

– இடமதிப்பு, முதற் பதிப்பு: 1962, மல்லிகா வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *