சன்னலொட்டி அமரும் குருவிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 4,196 
 

இதற்குமுன்பு இரண்டு முறை அவனைப் பார்த்திருக்கிறான். பிரான்சில் இறங்கிய முதல் நாள், இவன் பயணித்த சென்னை – பாரீஸ் டெல்டா ஏர்லைன்ஸில் முதன்முறையாக அவனைக்கண்டு தமிழில் பேசப்போக அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். இரண்டாவது முறை. சூப்பர் மார்க்கெட்டொன்றில் வாங்கியப்பொருட்களுக்கானப் பணத்தைச் செலுத்தவென்று வரிசையில் காத்திருந்தபோது பார்த்திருந்தான். வரிசையில் நின்று ஒரு காரியத்தைச் செய்வதென்பது இவனுக்குப் பிடிக்காத விஷயம், அந்த எரிச்சலில் அவனிடத்தில் அக்கறை காட்டவில்லை.

இவனுடைய நிறத்தில் யாரையாவதுப் பார்க்கச் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. தவிர மொரீஷியர், பாகிஸ்தானியர், பாங்களாதேஷ், இலங்கையர் என எல்லோருமே இவனைப் போலத்தான் இருக்கின்றார்கள். அவர்களிடம் உரையாட மனமும் விழைந்திருக்கிறது. அதனைச் செயல்படுத்த முயன்று இரண்டொருமுறை சூடுபட்டிருக்கிறான். முதன் முறையாகச் அப்படியொரு சந்தோஷம் பொசுக்கென்று அணைந்தபோது வெகு நாட்கள் இங்கே குளிர்காலத்தில் பெய்தப் பனி திப்பித் திப்பியாக சாலையிற்கிடந்து மிதிபடுவதுபோல மனதிற் கிடந்து மிதிபட்டிருக்கிறது. வரிசையில் இறங்கியிருந்த பிளாஸ்டிக் தம்ளர்களில் ஒன்றை எடுத்து அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு கையிலிருந்த ஒற்றை யூரோ நாணயத்தை மஷினில் போட்டுவிட்டு சில நொடிகள் தயக்கம் காட்டினான், பானங்களின் பெயர்கள் வரிசைக்கு ஐந்தென்கிற கணக்கில், மஞ்சள், ஆரஞ்சு, பழுப்பு, ஊதா பின்புலத்தில் அச்சிடப்பட்டிருக்க, அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம்: கறுப்புகாப்பி, பால் கலந்த காப்பி, கப்புச்சினோ, எஸ்பிரஸ்ஸோ, கிரீம் காப்பி, சாக்லேட், பால் கலந்த டீ, பால் கலவாத டீ, சூப்…பின்னாலிருந்து செருமப்படும் சத்தம், திரும்பினான், இவனைப் பொடியனாக்கிவிட்டு ராட்ஷசன்போல நிற்பவன் வெள்ளைத் தோல் மனிதன் அல்லது இவனுக்குப் புரியாத மொழி பேசும் அந்நியன். சட்டென்று கையில் கிடைத்த ஒரு பொத்தானை அழுத்தினான். பழுப்பு வண்ணத்தில் திரவம் பிளாஸ்டிக் தம்ளரில் இறங்கியது. அதனை எடுத்துக்கொண்டு மீண்டும் நாற்காலியில் உட்கார்ந்தான். இவனுக்கு முன்னும் பின்னுமாக வரிசை வரிசையாக நாற்காலிகள், நாற்காலிகள் மாத்திரமல்ல, நாற்காலியில் அமர்ந்திருப்பவர்கூட அமைதியாக இருக்கிறார்கள், வாய்த்த நேரத்திற்கு மேலும் கீழும் பக்கவாட்டிலும் அவரவர் வசதிக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப பார்க்கிறார்கள். இவனுக்கும் எதிரே வண்ணத்தில் ஒட்டியிருந்த பிரெஞ்சு மொழி போஸ்ட்டரில் கவனம் சென்றது, எழுத்துக்களைத் தவிர்த்துவிட்டு, நீலச் சீருடையில் நிற்கிற போலிஸார் படங்களைப் பார்த்தான்: அவர்கள் கண்களைப் பார்த்தான்; அதில் ஒருவனுடைய தொப்பி கொஞ்சம் கூடுதலாகவே வலதுபக்கம் சரிந்திருப்பதாகத் தோன்றியது; பெண்போலிஸ் ஒருத்தி மார்பின்றி இருந்தாள். மனிதர்களையும் பொருட்களையும் இப்படி நிதானமாகப் பார்த்து வெகுநாட்கள் ஆகியிருந்தன. பகல் நேரத்திலும் அத்தனை மின்சார விளக்குகளையும் போட்டிருந்தார்கள். ஒளி வெண்மை நிற திரவமாக சுவர், சுவரிலிருந்த போஸ்ட்டர்கள், உட்கூரை, தரை, மேசை நாற்காலிகள், அமர்ந்திருப்பவர்களென அத்தனையிலுமாகப் பரவி கொழகொழவென்று ஒட்டிக்கிடக்கிறது. இடப்பற்றாகுறை இருக்கவேண்டும், நடந்துபோகிறவர்கள் உடகார்ந்திருப்பவர்களின் கால்களை மிதிப்பதுபோல நடந்து செல்கிறார்கள்; மற்ற இடங்களிலும் நாற்காலிகள், மேசைகள், இடையில் நகலெடுக்கும் எந்திரங்களென்றிருந்தன; சற்று தள்ளி டாய்லெட் இருக்கவேண்டும், ஒரு சில விநாடிகளுக்கு முன்பு, ஜிப்பை திறந்துகொண்டு போன உயரமான போலீஸ்காரன் ஞாபகம் வந்தது.

வரிசையில் அமர்ந்திருந்த மனிதர்களுள், இவனிலும் பார்க்க கறுப்பு நிறத்திலிருந்த இரண்டு ஆப்ரிக்கர்கள், ஒரு அல்ஜீரியன், இரண்டு வெள்ளைத்தோல் மனிதர்கள் பிறகு இவனிடத்தில் இதுவரை வாய் திறவாமல் அமர்ந்திருக்கும் அவன். இவன் அமர்ந்ததைத் கவனித்தவன், பார்வையைத் தவிர்க்க விரும்புவன்போல, எதிர்ச் சுவரில் பார்வையை ஓட்டினான். இவனுக்கும் அவனிடத்தில் பேசும் உத்தேசமில்லை, தலையை விசுக்கென்று வலப்புறம் திருப்பியதில், மூடிய கபினேக்கள் தென்பட்டன, சலித்துபோய், இவனது கண்களும் மற்றவன் பார்வைத் திசைக்காய் பயணித்தித்திருந்தன. திறந்திருந்த சன்னலில் ஏப்ரல் மாதத்து ஐரோப்பிய வானம் சாம்பல் நிறத்தில் அடிவானத்தில் நுரைத்துத் தெரிந்தது. இலேசாகத் தூறல் போட்டுக்கொண்டிருக்கிறது, தொடர்ச்சியாய் மீண்டும் வரிசைகளில் மேற் தளங்களற்ற முன்னும் பின்னும் சரிந்த கூரைகளுடனானக் கட்டிடங்கள், விளம்பரப் பலகையில் தண்ணீர் பாட்டிலுக்கென்று நிர்வாணமாகியிருந்த இள நங்கை, அவளைச் சுற்றிலும் மீண்டும் இவனுக்குப் பிடிக்காத வரிசைகளில் தண்ணீர் போத்தல்கள் – பிரபல பிராண்டொன்றின் விளம்பரம். சன்னல் இருக்கும் திசை கிழக்காகத்தான் இருக்கவேண்டும். சூரியனிருந்தால் ஒருவேளை அனுமானிக்கலாம். இங்கே வந்து ஆறுமாதங்கள் கடந்துவிட்டன, இன்னமும் திசைகள் குறித்து தெளிவில்லாமலேயே இருக்கிறான். சன்னலொட்டி நின்றிருக்கும் மரத்தில் கிளைகளை ஒளித்துக்கொண்டு பருத்திக் காய் வெடித்தமாதிரி வெள்ளைவெளேரென அடர்த்தியாய் பூக்கள். மழைத்தூறலுக்குப் பயந்த குருவியொன்று உட்காருவதற்கு இடம்தேடி மரத்தைச் சுற்றி சுற்றி வருகிறது.

இவனுக்குப் பேரு பேரு சின்னதுரை. பிறந்தது, வாட்டசாட்டமாய் வளர்ந்தது, எட்டாம் வகுப்பு வரை படித்தது, பெற்ற தகப்பனோடு கடலுக்குப் போனது, உள்ளூர் டிராவல்ஸ் ஒன்றில் டிரைவர் உத்தியோகம் பார்த்தது, லோக்கல் கட்சிக்காரன் ஒருத்தனுக்கு அடியாளாக இருந்தது எல்லாமே குருசுகுப்பம் – புதுச்சேரி.

சின்னதுரைக்குப் பதினான்கு வயதிலேயே பிரச்சினைகள் ஆரம்பித்துவிட்டன. அக்டோபர் மாதமொன்றில், இரவு முழுக்க பெய்தமழையும் அடித்தக் காற்றும், வரிசையாக கடல் பார்க்க நிறுத்திவைத்திருந்த கட்டுமரங்களை தாயக்கட்டைகளாக இறைத்துப் போட்டிருந்தன. குப்பத்துவாசிகள், கூரைசிலுப்பியக் ஆரம்பப்பள்ளிக் கட்டிடத்தில் தற்காலிகமாக அடைக்கப்பட்டிருந்தனர். புதுச்சேரி அரசாங்கத்தின் வருவாய்த்துறை கேமராக்கள் புடைசூழ சம்பந்தப் பட்ட அமைச்சரை வைத்து குடிசைக்கு இருநூறு ரூபாயும், சோற்றுப்பொட்டலமும் வழங்கி முடித்த ஆரவாரம் தணிந்திருந்தது, மழை ஓய்ந்திருந்தது, கடல் கொந்தளிப்பு மாத்திரம் அடங்காமல் இருந்தது. நெருக்கத்தில் வரவிருந்த தீபாவளிப்பண்டிகையும், வயிற்றை நிரப்பாத சோற்றுபொட்டலங்கள் கிளப்பிய பசியும் ஒரு சிலரை துணிச்சலோடு கடலில் இறங்கச் செய்தது. அப்படிக் கடலுக்குப் போனவர்களின் வீரப்பனும் ஒருவன், வீரப்பன் – சின்னதுரையின் தகப்பன். ஒரு நாளாயிற்று இரண்டு நாளாயிற்று. கடலுக்குப் போனவர்களின் பிணங்கள் வேதாரண்யத்தில் ஒதுங்கியிருந்ததாக தகவல் வந்தது. போய் பார்த்ததில், வீரப்பன் பிணமாகக் கூட ஒதுங்கி இருக்கவில்லை. சின்னதுரையின் அம்மா திலகம், அன்றைக்குக் கூடை எடுத்தவள்தான். காலையில் கூலிக்குப் படகுவலிப்பர்களிடம் கிடைக்கிற மீன்களை அலுமினியக் கூடையிற் போட்டுக்கொண்டு, ஒரு தூக்கில் பழையதையும் எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக முத்தியால் பேட்டை அல்லது புதுச்சேரி பெரிய மார்க்கெட்டென்று சென்றாளென்றால், திரும்புவதற்கு மாலை நான்குமணியாகும்.

ஒரிரவு திலகத்திற்காக வெகுநேரம் காத்திருந்த சின்னதுரை வெறும் வயிற்றுடனேயேத் தூங்கிப்போனான். ‘சின்னதுரை ஏய் சின்னதுரை எழுந்திரு’, திலகம் போட்டக் கூச்சலில் அலறியடித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தவன், திலகத்தின் பின்னால் நிக்கர் தெரிய லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு நின்றவனைப் பார்க்கிறான்: பூவரசமரத்தின் கிளைபோல பிரிந்திருந்த

ஒருஜோடிக் கால்கள், முட்டிக்குமேலே நிறமற்ற லுங்கி, அதற்குமேலே மற்றவை ஆக்ரமித்திருந்த இருளில் மூழ்கியிருந்தன, தொலைந்துபோன தகப்பனிடம் வரும் பீடியும் சாராயமும் கலந்த வாடை.. திலகத்திடம் கேட்டான், “பின்னால யாரு?” ‘வெடிஞ்சதும் சொல்றேன், இப்போது இதை துண்ணுட்டுப் படு”, வெடுக்கென்று பதில். ஒரு பொட்டலத்தைப் இவன் கையில் திணித்துவிட்டு, லுங்கி மனிதனோடு உள்ளே நுழைந்த வேகத்தில் கதவினைச் சட்டென்று மூடினாள். இவன் பொட்டலத்தைத் தூக்கி அடைத்திருந்த கதவின்மீது எறிந்துவிட்டு, கோபத்தோடு சுருண்டு படுத்தான். விடிந்து பார்த்தபோது, வந்திருந்தவன் பெரிய மார்கெட் முனிசிபாலிடி தண்டல்காரன் என்று புரிந்தது. ஆரம்ப காலத்தில், திலகம் சேர்த்துக்கொண்ட தண்டல்காரன் இவன்மீது பிரியமாகத்தான் இருந்தான், கமலாம்பாவிடம், காலையில் வெண்ணைபுட்டும், தோசையும், மாலையில் அவிச்சக் கடலையும் வாங்கித் தந்தான். நாடாவில் காசு வைத்து சூதாடவும், சினிமாவுக்குங்கூட அவன் காசுகொடுத்திருக்கிறான், திலகம் தெரு அதிர, தொலைந்துபோன சின்னதுரையின் தகப்பன் வம்சத்தை சந்திக்கிழுத்து சத்தம்போடுவதோடு சரி. ஒன்றிரண்டு வருடங்களில் தண்டல்காரன் புத்திக் கோணலாயிற்று. வேலைக்குப் செல்லாமல் வீட்டிலேயேப் பழியாய்க் கிடந்தான். அந்தி சாய்ந்தால் போதும், திலகத்திடம் நைச்சியம் பேசி, அவள் கொடுக்கும் காசை வாங்கிச் சென்று குடித்துவிட்டுவருவான். தெருக்கோடிவரை திலகத்தைத் துரத்திக்கொண்டு ஓடுவான். சின்னதுரை பக்கமும் கை நீளும், இரவுவெகு நேரம்கழித்து மூக்கைச் சிந்தியபடி திலகம் வீட்டிற்குள் நுழைவாள், திண்ணையிற்படுத்திருக்கும் தண்டற்காரன் அவள் முதுகொட்டியபடி பின்னாற் செல்வான், அவள் அழுது ஆர்பாட்டம் செய்வாள், அவனை வெளியலே நிறுத்தி கதவைச் சாத்த முயற்சிப்பாள், கடைசியிற் தண்டற்காரன் ஜெயித்துவிடுவான்.

குப்பத்தில் இவன் வயது பையன்களில் சிலர் கடலுக்குப் போனார்கள், இவனும் போனான். சிலர் அரவிந்தர் ஆஸ்ரமத்து கம்பெனிகளில் வேலைக்குச் சென்றார்கள், இவனும் சென்றான். தேர்தலின்போது, அரசியல் கட்சியொன்றிற்காக குப்பத்து மனிதர்களுக்குச் சாராயப் பாக்கெட் வினியோகம் செய்யப்போக, சமப்ந்தப்பட்டக் கட்சிக்காரன், இவனை எடுபிடியாக வைத்துக்கொண்டான். கட்சிக்காரன் கொடுத்தத் தெம்பில் நிறைய தப்புகள் செய்தான். காவல் நிலையம், நீதிமன்றம் போய்வருவதும் அதே வீதாச்சாரத்தில் அதிகரித்தது. .சின்னதுரைக்கு அலுத்துவிட்டது.

இந்த நரகத்திலிருந்து விடுபட்டாக வேண்டும். ‘டிராவல்ஸ்’ ஒன்றில் இரண்டு வருஷம் டிரைவராக இருந்தபோது ஏர்போர்ட்டுக்குச் சென்று பிரான்சிலிருந்து திரும்புகிறவர்களை அழைத்து வந்திருக்கிறான். சிநேகிதன் ஒருத்தனை ஆலோசித்ததில், பிரெஞ்சு நேஷனாலிட்டியுள்ள பெண்ணைக் கல்யாணம் செய்தால் பிரான்சுக்கு போனதுபோல என்றான். அப்படியானவர்களைத் தேடி உழவர்கரை, உப்பளமென புதுச்சேரியைச் சுற்றிவந்ததில், ஒரு சில பெண்களுக்கு இரண்டுலட்சம் மூன்றுலட்சம் வரை விலை பேசினார்கள், நம்மால் முடியாதென்று சின்னதுரை சோர்ந்திருந்த வேளை, தரகன் ஒருத்தன் ஐம்பதாயிரத்திற்கு விதவையொருத்தியைக் கொண்டுவந்தான். ஐம்பதாயிரத்தைக் கண்டுபிடித்துக்கொண்டு தேடிச்சென்றபோது அவளுக்கு வயது நாற்பத்தெட்டென்று தெரிய வந்தது, மூன்று பிள்ளைகள் வேறு. ஏற்பாடு செய்த தரகன் தைரியம் சொன்னான். “பிரான்சுக்குச் போனவுடன் வேறொருத்தியை கல்யாணம் பண்ணிக்கொண்டு இவளை டிவோர்ஸ் செஞ்சிடு”, சம்பந்தப்பட்டப் பெண்மணியிடம் தகவலைச் சொல்ல, தனக்கு அதுதான் வழக்கமென்றாள்’. அவளுக்கு அப்படி நடப்பது நான்காவது திருமணமாம். தேவாலயத்தில் வைத்து முறைப்படித் திருமணம் செய்துக்கொண்டாயிற்று. இனி பிரெஞ்சு கான்சலேட்டில் திருமணத்தைப் பதிவு செய்யவேண்டும். காலை ஆறுமணிக்கே கூட்டம் வரிசையில் முண்டியடித்தது. இவன் முறைவந்தபோது டோக்கன் முடிந்துவிட்டதென்றுசொல்லி மறுநாள்காலை வரச் சொன்னார்கள். மறுநாள் ஐந்துமணிக்கெல்லாம் வரிசையில் நின்றான். இம்முறை அதிர்ஷ்டவசமாக டோக்கனும் கொடுத்தார்கள். பிறகு இவன் டோக்கன் எண்ணைக் குறிப்பிட்டு அழைக்க காலை பதினொன்றாகியிருந்தது. சம்பந்தபட்ட ஊழியனின் அறைக்குள் நுழைந்தான்.

ஊழியனும் இவனைப்போலவே ஒரு புதுச்சேரி தமிழன். ஆனாலும் சின்னதுரையை ஒரு புழுவைப் பார்ப்பதுபோல பார்த்தான். வேண்டுமென்றே பிரெஞ்சில் பேசினான். இவன் விழிப்பதைப்பார்த்து அவன் உள்ளுக்குள் சந்தோஷப்படுவதுபோல இருந்தது. கடைசியில் ஒரு தாளை நீட்டினான். இதிலுள்ளபடி எல்லா தாள்களையும் கொண்டுவரணும்: உன்னோட திருமணத்திற்கான ஆதாரம், உன்னோட பிறந்த பதிவு, அவளோட பிறந்த பதிவு, உனது மனைவியோட பிரெஞ்சு குடியுரிமைக்கான அரசாங்கத்தின் சான்றிதழ், உங்க அப்பா அம்மாவுடைய திருமணப் பதிவு, உன் மனைவியுடைய அப்பா அம்மாவுடைய திருமணப் பதிவு எல்லாவற்றையும் கொண்டுவரணும், என்றான். ‘நீயெல்லாம் எதற்காகப் பிரான்சுக்குப் போகணுங்கிற மாதிரி”. சின்னதுரைக்கு இதெற்கெலாம் பொறுமையில்லை, ஒருமுறை கான்சலேட் ஊழியனை முறைத்துப் பார்த்துவிட்டு வெளியில் வந்தான். தெருவாசலில் வரிசையில், கைகளில் துணிபையுடன் தலைகாய்ந்த கூட்டமொன்று காத்திருக்க, இரண்டொருவர் சர்வசாதாரணமாக கான்சலேட்டுக்குள் நுழைந்துகொண்டிருக்கிறார்கள்.

கட்சிதலைவர் வீட்டில்வைத்தே அந்த ஆசாமியைச் சந்தித்திருந்தான். பிற்பாடு விசாரிக்கையில் அவன் நாகர்கோவில் பக்கத்தைச் சேர்ந்த கேரள ஆசாமியென்று தெரியவந்தது. சென்னையில் கோடம்பாக்கத்தில் சினிமா கம்பெனிகளில் எடுபிடியாக இருந்தவன், ஒரு சனிக்கிழமை புதுச்சேரிக்கு வந்திருந்தபோது அங்கே பழக்கமான பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, பிரான்சில் குடியேறிவிட்டான். சின்னதுரை அந்த ஆசாமியைச் சந்தித்தபோது பிரான்சிலிருந்து வந்திருந்தான். கை நிறைய பிரெஞ்சு பாஸ்போர்ட்டுகள். இரண்டு இலட்சம் வேண்டுமென்றான். பிரான்சுக்குள் நுழைந்ததும், பாஸ்போர்ட்டைத் திருப்பி ஒப்படைக்கக் கோரினான். கூடுதலாக ஐந்தாயிராம் யூரோவை பிரான்சுக்கு வந்ததும் கொடுக்கவேண்டியிருக்கும், என்றான்.

பாரீஸ் ஷார்ல் தெகோல் பன்னாட்டு விமானதளம். அந்நியமண்ணில், பொய்யான அடையாளத்துடன் காலை வைப்பதற்கு அச்சமாகத்தானிருந்தது. நா வறண்டிருந்தது, வயிற்றைக் கலக்கியது, உடன் இறங்கியிருந்தவர்கள் தங்கள் தங்கள் பாஸ்போர்ட்டுடன் வரிசையில் நின்றார்கள். இவன் கால்கள் சோம்பியிருந்தன. வெளிநாட்டவர், ஐரோப்பிய யூனியன் என வரிசைகள் பிரிக்கபட்டிருக்க, இவனுக்கு எங்கே நிற்கவேண்டுமென்பதில் குழப்பம். பிரெஞ்சு பாஸ்போர்ட் வைத்திருந்த சில புதுச்சேரி வாசிகள் ஐரோப்பிய யூனியன் வரிசையில் நின்றிருந்தார்கள். இவன் கையிலிருப்பதும் பிரெஞ்சு பாஸ்போர்ட், அவர்கள் பின்னாலேயே போய் இவனும் நின்றுகொண்டான். இவனிடமிருந்து பாஸ்போர்ட்டை வாங்கிப்பார்த்த அதிகாரி, தலைமுதல் கால்வரைப் பார்த்தான். இவனுக்கு வியர்த்திருந்தது. பிரித்த பாஸ்போர்ட்டை கணணியில் சரிபார்த்தவன், ஏதோ கேட்டான், இவன் புரியாமல் நின்றான். அவன் மீண்டும் ஏதோ சொல்ல, ‘போகச் சொல்கிறான்’ என்பதுமட்டும் புரிந்தது. ட்ராலியைத் தள்ளிக்கொண்டு வெளியே வந்துவிட்டான். பிரான்சுக்குள் திருட்டுத் தனமாய் நுழைந்தாயிற்று. பயண ஏற்பாடு செய்திருந்தவன் வெளியில் காத்திருந்தான். பாஸ்போர்ட்டுக்கெனவே காத்திருந்ததுபோல அதனை வாங்கி வைத்துக்கொண்டான். இவன் பெயருக்குப் போலியாகத் தயாரித்திருந்த ஓர் அடையாளை அட்டையைக்கொடுத்தான். அதில் இவனுக்குப் பூர்வீகம் ஸ்ரீலங்கா என்றிருந்தது, வாங்கி வைத்துக்கொண்டான்.

கடந்த இரண்டு மாதமாக பாகிஸ்தானியன் நடத்தும் இந்திய ரெஸ்டாரெண்ட்டொன்றில் உதவி சமையல்காரன் என்கிற அந்தஸ்தில் களவாய் ஒரு வேலை. காலையில் பத்தரை மணிக்கெல்லாம் ரெஸ்டாரெண்டைப் பெருக்கிச் சுத்தம் செய்துவிட்டு, காய்கறிகளை நறுக்கி வைக்கவேண்டும், இறைச்சியைக் கழுவிவைக்க வேண்டும்; சர்வர்களுடன் சேர்ந்து நாற்காலிகளையும் மேசைகளையும் ஒழுங்குபடுத்தவேண்டும், சாப்பிட்டுமுடித்து குசினிக்குத் திரும்பும் பிளேட்டுகளிலுள்ள மிச்சம் மீதிகளை வழித்துப் போடவேண்டும், ஒன்றிரண்டு எலும்புகளை, பாகிஸ்தானியனின் தற்காலிக

பொண்டாட்டியான பிரெஞ்சுக்காரி வளர்க்கும் நாய்க்கு பத்திரப்படுத்த வேண்டும். இரவு பன்னிரண்டு மணிவரை பிளேட்டுகளையும், அதற்குப் பிறகு ஏனைய பாத்திரங்களையும் கழுவி வைத்துவிட்டு, பாகிஸ்தானியன் காரிலேயே அதிகாலை இரண்டு அல்லது மூன்றுமணிக்கு ஜாகைக்குத் திரும்ப வேண்டும்..

ஏப்ரரல் மாதம் 3ம் தேதி, காலை ஒன்பது மணிக்கு தமிழ்க் கடைகள் இருக்கிற கார் துய் நோர் சென்றுவரலாமென்று தீர்மானித்தான். கடந்த ஒரு மாதமாகவே பிரெஞ்சு அரசாங்கத்தின் புதிய வேலைவாய்ப்புத் திட்டத்தை எதிர்த்து பிரான்சே கொந்தளித்துகிடந்தது. பாரீஸ் நகர பாதாள இரயிலான மெட்ரோவில் பயணம் செய்துகொண்டிருந்தான். இரண்டு ஸ்டேஷன் கடந்து மூன்றாவது ஸ்டேஷனில் வண்டி நின்றபோது, திபுதிபுவென இளைஞர் கூட்டமொன்று, அனோரக்கை தலைவரை இழுத்துவிட்டுக்கொண்டு, இவனிருந்த கம்பார்ட்மெண்டில் ஏறியது. டி.வி. திரையில் கார்கள் கொளுத்தப்படும்போதும், கடைகள் அடித்து நொறுக்கப்படும்போதும் காட்டப்படும் பையன்களை ஒத்திருந்தனர். வண்டியில் ஏறியவுடனே ரகளை பண்ண ரம்பித்தனர். கொண்டுவந்திருந்த பெயிண்ட் டின்களைக் கொண்டு, கம்பார்ட்மெண்டெங்கும் பீய்ச்சி கறுப்பு வண்ணத்தில் எழுத ரம்பித்தார்கள். அடுத்து வரும் ஸ்டேஷனில் இறங்கிக்கொள்ளவேண்டுமென சின்னதுரை தீர்மானித்திருந்தான், அநேகமாக பெரும்பாலான பயணிகளின் முடிவும் அதுவாகத்தான் இருக்கவேண்டும்.

அடுத்த ஸ்டேஷனில் இவனும் மற்றவர்களும் இறங்குவதற்கு முன்பாகவே ஏறிய போலீஸ், சந்தேகத்திற்குட்பட்ட இளைஞர்கூட்டத்தை இரயிலைவிட்டு இறங்கச் செய்தது. இவனும் இறங்கவேண்டியிருந்தது. அவர்களோடு சேர்த்து இவனையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். இவனது அடையாள அட்டையைக் கேட்க, கொடுத்தான். பரிசோதித்துப் பார்த்தார்கள். போலி என்றார்கள். விசாரணைக்கென்று கூப்பிட்டுச்சென்றார்கள். கடந்த இருவாரங்களாக காவலில் வைத்திருந்தவர்கள் மறுபடியும் அழைத்து வந்திருக்கிறார்கள். சொந்த நாட்டுக்கு இவனைத் திருப்பி அனுப்பப்போவதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

கையிலிருந்த பிளாஸ்டிக் தம்ளரில் எஞ்சியிருந்த காப்பியில் தேனீயொன்று விழுந்து கிடக்கிறது. இறக்கைகள் திரவத்தில் நோய்ந்ததில் மெல்ல நகர்ந்து தம்ளரின் திரவப் பரப்பினின்று விடுபட முடியாமற் தவிக்கிறது. எழுந்து சென்று காப்பி மஷினுக்கு அருகிலிருந்த குப்பைக்கூடையில் போட்டுவிட்டுத் திரும்பிவன், அவனை மீண்டும் பார்த்தான், தலையைத் திருப்பிக்கொள்ளும் உத்தேசமேதும் இருப்பதாகத் தெரியவில்லை. சரி இந்தமுறை பேசிப்பார்ப்போமே எனத் தீர்மானித்தவன்போல அவன் அருகில் காலியாகக் கிடந்த நாற்காலியில் சென்று அமர்ந்தான்.

‘நீங்கள் இந்தியாவா?’, அவனிடம் கேட்டான்.

‘இல்லை, இலங்கை. ஆனால் இந்தியக் கடவுசீட்டில்தான் களவாய் வந்தனன். நீங்கள்?,

‘நான் இந்தியன், பாண்டிச்சேரி. என்னோட ஐடி. கார்டுபடி, நான் ஸ்ரீலங்கன்.’ சொன்னவன் சட்டென்று சூழ்நிலைமறந்து சிரித்தான். இவனது சிரிப்பிற்கான காரணம் புரிய மற்றவனும் சிரித்தான். சற்று முன் மரத்தைச் சுற்றிவந்த குருவி, சன்னலொட்டி அமர்ந்தது. எந்த நேரமும் துரத்தப்படலாம் என்பதாலோ என்னவோ அச்சத்துடனேயே அமர்ந்திருக்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *