(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
(பக்கம் 45 இல்லை, உங்களிடம் இருந்தால் அனுப்பவும்)
“ஹே…கார் வருது..வருது கார்…’
குழந்தைகளின் கூச்சல்…கும்மாளம் வானத்தைப் பிய்த் தது. மைக்காரர் அசடு வழிய திகைப்புடன் தவித்தார்.கூச்சல் மைக்கில் எதிரொலிக்கிறது.
“அமைதி, அமைதி… நமது மதிப்பிற்கும் பாசத்துக்கும் உரிய அண்ணன் கோவை வந்து விட்டார்……அமைதி …. அமைதி’’
‘மைக்’கின் சப்தமான வேண்டுகோள்… குழந்தைகளின் குதூகலக் கூப்பாட்டில் மூழ்கி பயனற்றுப் போயிற்று.
கார் வந்து நின்றது. முன்னணி ஊழியர்கள் மொய்த் தனர். குழந்தைகள் குதூகலமாக ஓடிச்சென்று வண்டியைத் தொட்டுப் பார்த்தனர். சுற்றிச் சுற்றி வந்தனர்.
காரிலிருந்து இறங்கிய ‘கோவை’யிடம் உடன் பிறப்பு களின் அன்புக் கெஞ்சல்கள்….
“அண்ணே… இன்னும் டோர் சிலிப் வரலேண்ணே”
‘தலைமைக்கழக போஸ்டர் இன்னும் ரெண்டு வேணும்”
“பூத் பணம் எப்ப வரும்?”
எல்லாவற்றுக்கும் மொத்தமாகச் சிரித்துவிட்டு மழுப்பலான பதில்களுடன், வணங்கியவர்களுக்கு வணக்கம் கூறிவிட்டு, பந்தாவாக மேடையேறினார்.
வெண்ணிற டெரிக்காட்டன் நீலமாக சிரித்தது. தோளில் தொங்கிய துண்டு முதுகைச் சுற்றி…. மறுகையில் சுருண்டு கிடக்க கம்பீரமாக அமர்ந்தார்.
அவருடன் வந்த வேட்பாளர் வெங்கடாசலம்…. வேட்டி, சட்டை துண்டு எல்லாம் கதராக இருந்தார். கறுப்பான உடம் பாக இருந்தாலும்… முகத்தில் பண்ணையார்த்தனம் இருந்தது.
போடுகிற கும்பிடுகள் இயல்பில்லாத பணிவாக-செயற்கை யாக இருந்தன.
அவரும் மேடையில் ஏறி, எல்லாருக்கும் பொதுவாக ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு அமர்ந்தார்.
“நமது கழகத்தின் முன்னணிப் பேச்சாளர். நமது. அன்பு உடன்பிறப்பு, அருமை அண்ணன்… கோ. வையாபுரி அவர்கள் உங்கள் முன் பேசுவார்…”
என்று முழங்கிவிட்டு மைக்கை விட்டார் ஒருவர். புகழ்ச் சியை சகித்துக் கொள்ளாத புன்சிரிப்புடன் காலை செல்லமாக ஆட்டிக் கொண்டிருந்த கோவை எழுந்தார். ஷர்ட்டை ஏனோ பிடித்து இழுத்து சரிப்படுத்தி… துண்டை ஒழுங்கு படுத்தி, செரு மலுடன் மைக்கைப் பிடித்தார்…
பேசி முடித்த அண்ணன்களை விளித்து, கூட்டணி ‘ஐயா’க் களை மரியாதையுடன் அழைத்து, தேர்தலில் பம்பரமாக சுழன்ற உடன்பிறப்புக்களை அழைத்து, நீளநீள அடுக்கு வார்த்தைகளில் ‘அவர்களே’ போட்டு பேச ஆரம்பிக்க… ஆரம்பமே நீண்ட நேரத்தை சாப்பிட்டது. கூட்டத்தையும் பிரமிக்க வைத்தது.
“நள்ளிரவுக்குக் பின் இன்னும் ஆறு கூட்டங்கள் இருப்ப தாலும், அங்கெல்லாம் மக்கள் காத்துக் கிடப்பதாலும்.உங்கள் முன் நீண்ட நேரம் உரையாற்ற முடியாத இக்காட்டான நிலை காண, மனதுக்கு – நெஞ்சுக்கு – இதயத்துக்கு வருத்தமாக இருப் பதாலும் சுருக்கமாக ஒன்றிரண்டு கருத்துக்களை உங்கள் மத்தி யில் வைத்துவிட்டு போக இருப்பதாலும், ‘எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும்’ என்று வள்ளுவப் பெருந்தகை கூறிய தற்கொப்ப, கேட்கிற உரைகளில் உண்மை எது- பொய்யெது என்று பார்க்கும் தெளிவு படைத்த தமிழ் மக்களாக நீங்கள் இருப்பதாலும்…”
இப்படி நிறைய ‘லும்’கள்.முடியாமல் தொடரும் மூளியான வாக்கியங்கள்.
(பக்கம் 48 இல்லை, உங்களிடம் இருந்தால் அனுப்பவும்)
தாயிருக்கட்டும். நல்ல சமர்த்தான பையங்க… செவண்டி ஃபைவ் பரசெண்ட் நமக்குக் கிடைக்கும்…”
“அப்படியா!” வேட்பாளர்” குரலைப் புரிந்து கொள்ள முடியவில்லை. மகிழ்ச்சி கலந்த வியப்பா! பயம் கலந்த அவ நம்பிக்கையா! எது தொனிக்கிறது என்பது விளங்கவில்லை.
”இங்க ‘இலை’க்காரங்க ரொம்ப இருக்கிறதாச் சொன் னாங்களே‘”
“இருக்கத்தான் செய்றாங்க’புடிடா’ன்னா புயலா ஓடிப் போயிடுவானுக, பொடிப் பயலுக…’
என்ற கோவை கடைசி வார்த்தையை அனுபவித்து சொல் வது போலிருந்து.
“அருவாக் கட்சிக்காரங்க தீவிரமா செயல்படுறாங்களாமே?”
லட்சத்துக்குமேல் பணத்தை பணயம் வைக்கிற பதைப்பு, அவர் சந்தேகங்களில் ஒளிந்து கொண்டு தலை நீட்டியது.
கோவை அலட்சியமாகப் பேசினார்.
”ஊருக்கு நாலுபேரு… அவுங்களாலே என்ன செய்துட முடியும்?”
கோவையின் மனசுக்குள் வன்மம் கனன்றது. வெங்கடா சலத்தை இருட்டில் ரகசியமாக பார்த்தார். ‘பாவி… படுபாவி… என்று நெஞ்சம் கூச்சலிட்டது.
பாவித்தனம் நெஞ்சில் அலை அலையாக புரண்டது. நெருப்பலைகள்.
அதை அன்று அனுபவித்த நாட்கள் எத்தனை கொடூரமாக இருந்தது; மனம் எப்படி வதைபட்டு புலம்பக்கூட வழியின்றி கண்ணீர் வடித்தது. இன்று அதுவே வெறும் நினைவுகளாகிப் போன பின்னர்…அந்த உஷ்ணம் இல்லைதான்! ஆயினும் –
அந்த நெருப்பு சிருஷ்டித்த காயத்தின் வடுக்கள் இன்னும் நெருடுகிறது; அந்த காயத்தின் வலி,இன்னும் நினைவில் இருக் கிறது…
கார் விரைகிறது. சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார் கோவை.சிகரெட்டின் புகை மார்புக்குள் பிரவேசித்து வெளி நடப்பு செய்கிறது. அத்தனை சுகமாக இல்லை.
மனசுக்குள் பழைய நினைவுகளின் வெம்மை
குமைந்து கொண்டேயிருக்கிறது. அந்த குமைச்சல், சாமான்யமானதல்ல. பொது நியாயம் சம்பந்தப்பட்டதல்ல… சொந்த வாழ்வை – ரத்த பந்தங்களை சூறையாடிய கொடூரத்தினால் உருவான குமைச்சல்.
வெங்கடாசலம் வெற்றிலையின் முதுகுத் தோலை உரிக்கிறார். பாக்கை பல்லுக்குள் வதைக்கிறார்; வாய் ரத்தம் கொப்பளித் தது. அவர் சுவைத்தார். சலித்துப் போன பிறகு-
புளிச்சென்று காருக்கு வெளியே துப்பி விடுகிறார்.
வாய்த்துணை எதுவுமின்றி தனிமைப்பட்டு சலித்துப்போய் விட்ட டிரைவர் ஏதோ நினைவில் ‘டேப்’பை தட்டிவிட்டார். உள்ளிருந்து டி. எம். எஸ். கேட்டார் ..
நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா? சொல்லுங்கள்.
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.’
வெங்கடாசலத்தினால் இப்பாடலை ஏனோ சகித்துக் கொள்ள முடியவில்லை. சற்று உஷ்ணமாகவே கூறினார்: “நிறுத்தித் தொலையப்பா… இதுவேறெ இந்நேரம்… தொல்லை…
நாலைந்து மாதங்களுக்கு முன்பு வந்த தேர்தலுக்கே இந்தக் கூட்டணி முடிச்சு விழுந்து விட்டது. கோவைக்கு அப்போது மனசுக்கு குமட்டியது. நினைக்கவே அருவருப்பாக இருந்தது.
அவர்களால் கொல்லப்பட்டு அனுப்பிய பிணங்களைப் பார்த்துப் புலம்பினோமே! காரண காரியம் எதுவுமின்றி சிறைச் சாலைகளில் நிரப்பி, அடித்துத் துவைத்து… சித்திரவதை களுக்குப் பிறகு வெளிப்படுத்திய நடைப்பிண “மிஸா’க்களைப் பார்த்து மனதுக்குள் ஆவேசப்பட்டு அனல் வார்த்தைகளை சிதற விட்டோமே!
இந்த அசுர குணத்தை முன்னுணர்ந்து, வெட்கக்கேடான கோழைத்தனத்தை, பத்திரிகைகளில் விளம்பரப்படுத்திவிட்டு ஓடிப் போனவர்களின் பட்டியலை பத்திபத்தியாக பார்த்து காறிக் துப்பினோமே…
இப்படி ராட்சஸ விலையாட்டு அசுரர்களுடன் அரசியல் உறவா? ஊஹூம்…ச்சே!‘
கோவை ‘தலைமை’யை நோக்கி விழியுயர்த்தினான்.
”என்ன இது, வெட்கக் கேடான கூட்டு….?”
“இது வெறும் தேர்தல் கூட்டு மட்டுமல்ல, லட்சிய உறவு”
“நமது லட்சியங்கள்…. தன்மானம் எங்கேபோய்த்தொலைந்தது?”
“இப்போது நமது லட்சியமே வெற்றி ஒன்றுதான். வேறொன்றும் இல்லை”
“வெற்றி ஒன்றுமட்டும்தான் லட்சியமா? இப்படியோர் லட்சியமா? லட்சியங்கள் இல்லாமல் வெற்றி நிச்சயமா?”
“இப்போது நமது லட்சியம் இதுதான்; நம்ம பங்காளி ஒழிந்தாக வேண்டும்”
“பங்காளியை ஒழிக்க, பகையாளியுடன் உடன்பாடா? இந்த விபீஷணத்தனம் எனக்கு உடன்பாடல்ல…”
தலைமையின் மழுப்பல்களுடன் உடன்பாடு கொள்ள முடி யாமல் கோவை தவித்தான். ‘லட்சிய உடன்பாடை’ அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. சகித்துக்கொள்ளவே முடியாத போது… உடன்பாடுக்கு விசுவாசம் எங்கிருந்து வரும்?….
பாராளுமன்றத் தேர்தலில் தனிமைப்பட்டு வீட்டில் முடங்கிக் கொண்டான். தலைமையிலிருந்து தூதுமேல் தூதுக்களாக வந்து அவனை ரொம்ப ஊசலாட வைத்தது; மன நிம்மதியற்று தவித்தான். நிறைய ‘தண்ணி’ சாப்பிட்டான். போதை வந்த வுடன் நிம்மதியின்மை தலை நீட்டி நெஞ்சை வதைத்தது.
கோவை… பெரிய வசதிக்காரனல்ல…ஆட்சிக்காலத்தில் ஒரு வட்டாரத்தில் தலைவனான… நல்ல மேடைப் பிரசங்கியான இவன் நகரத்தில் ஒரு வீட்டையும், கொஞ்சம் பணத்தையும் ஒரு பிரிண்டிங் பிரஸையும்தான் சம்பாதித்துக் கொண்டான்.
வட்டாரத் தலைவன்தானே! கட்சியின் பெரிய தூணல்ல. இருப்பினும், அவனது…மேடைப்பிரசங்கத் திறமை அவனுக் கொரு சிறப்பான ஆயுதம். நிறைய ரசிகர்களை சம்பாதித்துக் கொடுத்திருந்தது. கோ.வையாபுரியை உடன் பிறப்புக்கள் ‘கோவை’ என்று சுருக்கி, அன்புப்பெருக்கை வெளிப்படுத்தினார்கள்.
தேர்தல் வெற்றி, இவனது ஊசலாட்டத்தை ரொம்பப் படுத்தியது. லட்சியங்களின் விலையாக கிடைத்த போதிலும், அந்த வெற்றி இவனுக்கு உற்சாகத்தையே கொடுத்தது, அதை விட பங்காளியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ரொம்பச் சந்தோஷ மளித்தது…சட்டமன்றத் தேர் தலின் தேதிகள் அறிவிக்கப் பட்டது.
அப்போதுதான் வெங்கடாசலத்தின் கார் பிரஸ் முன் வந்து நின்றது. ஒரு கதர்ப் பிரமுகர் வந்தார்.
“ஐயா வாங்க…வாங்க… டேய் மாரி. சுடையிலே போய் கோல்டுஸ்பாட் வாங்கிட்டுவா”
கோவை வரவேற்றான்.
பிரமுகர் நல்லதனமாக சிரித்தார்….
”கோல்டுஸ்பாட்டெல்லாம் வேண்டாம் கோவை”
“வேறென்ன வேணும் ஐயா?”
“கோவைதான் வேணும்”
திகைத்து நின்றான், புரியாமல் தவித்தான். கதர்ப் பிர முகர் சிரிப்பு மாறாமல் கூறினார்:- நம்ம பண்ணையார் வெங்கடா சலம் முதலாளி அவுகதான் இந்தத் தொகுதியிலே ‘நிக்கிறாக’! நீங்கதான் ஜெயிக்க வைச்சுக் காட்டணும்.
கோவையின் மனதில் நெருப்பலைகள் ஓசையுடன் புரண்டு மோதித் தகித்தன. ஏதேதோ பழைய காட்சிகள். பழைய நினைவுகள்… பழைய ரத்தக் காயங்கள்… அதன் வடுக்கள். மரத்துப்போன இருதயம்.
சிரிக்க முயன்றான்; உதடுகள் உலர்ந்து போய் ஒத்துழைக்க மறுத்தன.
“நானென்ன ஐயா, சின்ன மனுஷன்…என்னாலே என்ன ‘ஆகி’க் கிடக்குது”
“அப்படிச் சொல்லக் கூடாது. பத்து விரல்களும் ஒத்துப் பிடிச்சால் தான் எந்தப் பொருளையும் பத்த முடியும்… விரல்களிலும் நீங்க கட்டை விரலாச்சே….”
“கட்டை விரலைத்தான் நறுக்கியாச்சே…” பழைய அனு பவங்களின் சிறுதுளி ரத்தமாக வார்த்தையில் கசிந்தது.
“நீங்க அப்படியெல்லாம் பேசப்படாது. நம்ம தலைவர் களே பழசையெல்லாம் மறந்துட்டு, மேல் மட்டத்திலே முடிவு செய்ஞ்சு, வெற்றியும் அடைஞ்சாச்சே. நாம மட்டும் அதையே நினைக்கலாமா…? நாங்க எதுக்கு அலையுறோம்…? உங்க தலைவரை முதல்வராக்கத் தானே! நீங்க மட்டும் விலகி நிக்கலாமா? இதையெல்லாம் யோசிச்சுத்தான் நம்ம முதலாளி ஐயா அவுக எங்கிட்டே காரைக் குடுத்து… ‘கோவையை கையோட அழைச்சிட்டுவா… மத்ததை நா பேசிக்கிறேன்’னுட்டாரு.’
“அதெல்லாம் சரிதான் … இங்க பாருங்க. பிரஸ் கிடக்கிற அலங்கோலத்தை நா இல்லேன்னா இதைக்கவனிக்க ஆளில்லை. எலெக்ஷன் வொர்க்னு இறங்கிட்டா… இருபது முப்பது நாளைக்கு இங்க எட்டிப் பாக்க முடியாது. தொழில் என்னாகும்? பொழைக்க வழி என்ன இருக்கு, இந்தத் தொழிலை விட்டா?
”அதான் நான் சொல்றேனே அதையெல்லாம் முத லாளி ஐயா அவுகிட்டே பேசிக்கிடலாம்’னு. இதுக்கெல்லாம் ஒரு வழி பார்க்காமல், முதலாளி ஐயா அவுகவிட்டுவிடுவாரா?’
‘கைப்பிடியாக கோவையை அழைத்துக் கொண்டு, காரில் போட்டு முதலாளி ஐயாஅவுக’ முன் நிறுத்தினார், கதர் பிரமுகர்.
அந்தப் பெரிய ரெண்டு மெத்தை காரை வீட்டிற்குள் பேசி முடிக்கப்பட்டது. தேர்தல் கால தொழில் பாதிப்புக்கு ஈடாக, மொத்தமாக ஒரு கணிசமான தொகை கை மாறியது.
தேர்தல் பணிகளில் பெரும் பகுதியும்.. அதற்கான செல வுப் பணமும் தாராளமாக அவன் வசமே ஒப்படைக்கப்பட்டது. ஒப்படைக்கப்பட்ட சர்க்கரைப் பானையில் கைவிட்ட அவன், தேவைக்கு நக்கிக் கொள்ள முடியும். அதற்கொன்றும் தடை கள் இல்லை. அவனும் காற்றடிக்கும். சமய்த்தில் தூற்றிக் கொள்ளாமல் இருந்துவிடவில்லை.
இதெல்லாம் அவன் இதயக்காயத்தின் வலிகளை மாற்றுவ தாக இல்லை. மாறாக காயத்தைக் கிளறி விட்டது. சீழும் ரத்த மும் வடியச் செய்தது.
வேட்பாளரைப் புகழ்ந்து பேசும் போதெல்லாம் மனதுக் குள் இன்னொரு கோவை, கோவையை “துரோகி, துரோகி” என்று திட்டியது. ‘மானங்கெட்டவனே” என்று உள்கோவை கூச்சலிட்டான்…
இந்தக் கூச்சல், படுக்கைக்குப் போகும்-சமயத்தில் வீட்டின் வெறுமையில் பெரிதாக எதிரொலித்து வதைக்கிறது. தூக்க மும் ஒரு கனவாக – ஒரு பொய்யாகப் போய் விடுகிறது. மனக் கோவையின் கூப்பாடு, நிம்மதியை சாப்பிட்டு ஏப்பமிட்டு விடுகிறது
அந்தச் சமயங்களிலெல்லாம் ‘தண்ணி’ தான் அடைக்கலம். ‘அதற்கும் வெங்கடாசலம் ஏற்பாடு செய்துவிடுவார்.
கார் விரைகிறது அதோ கிராமம் …. இந்தக்கூட்டம் முடிந்துவிட்டால்… இன்னும் ஐந்து கூட்டங்கள் … அதுவும் முடிந்துவிட்டால்… தண்ணி …. படுக்கை. தூக்கம்… தூக்கத்திலும் மகனின் இறுதிக் கூவல் கேட்கும்…. தமிழ்ச்செல்வி மரணப் புலம் பல் ஒலிக்கும்… முகமெல்லாம் ரத்தகாயங்களினால் குரூரமாகிப் போன மனைவி தெரிவாள்.
கோவை பெருமூச்சு விட்டான். மனத்துயரை தழுவி வந்த பெருமூச்சு உஷ்ணமான ஓசையாக இருந்தது.
“என்ன கோவை…?”
“ஒன்னுமில்லே ஐயா… நாளை செய்ய வேண்டிய வேலை களைப் பத்தியோசிச்சேன்…”
”என்ன செய்யணும்?”
“நாளையிலேயிருந்து பகல்லே ஒவ்வொரு கிராமத்தின் நாட்டாண்மைகளை தனிச்சு நாமெ சந்திச்சுப் பேசணும்…. நைட்லே பப்ளிக் மீட்டிங்ஸை பார்க்கலாம்…”
‘சரி…எப்படியோ கோவை ஜெயிச்சாகணும். ரெண்டு லட்சத்துக்கு மேலே போட்டாச்சு… பயமாயிருக்கு…”
“ஜெயிச்சுடலாம் அதுலே ஒன்னும் சந்தேகமில்லை. சென்ற தேர்தல்லே இந்த சட்டமன்றத் தொகுதியிலே, நம்ம கூட்டணிக்கு எண்ணாயிரத்துச் சொச்சம் ஓட்டு அதிகமா கெடைச்சிருக்கு… அதுலேயெல்லாம் சந்தேகமில்லை… இதுலே இன்னொரு விஷயம் என்னான்னா…?” கோவையின் நீடடல், அவரைப் பதைக்க வைத்து.
“என்ன?”
“விலைவாசிப் பிரச்னை. தங்கம், டீசல்… சீனிப் பற்றாக்குறை யெல்லாம் நமக்கு இடைஞ்சலா யிருக்கு. விவசாயிகள் கூட இப்ப நமக்கு எதிராகத்தான் இருக்காங்க”
அதுவும் நிஜந்தான். இந்த எலெக்ஷன் எனக்கு கௌரவப் பிரச்னையாயிடுச்சு. இந்த ஏரியாவுலேயே பெரிய பண்ணையார்னு பேர் வாங்கிட்டு.. தோத்துப் போனேன்னா… இந்தக் கேவலம், ஏழு சென்மத்துக்கு!”
நீண்ட பெருமூச்சு அவரிடமிருந்து வெளிப்பட்டது.கார் விரைகிறது இதே மாதிரியான உரையாடல்களை திரும்பத் திரும்பக் கேட்டு சலித்துப் போன டிரைவர் ஓசையில்லாமல் திட்டினான் :
“அட முட்டாள்களே, உங்கள் பாவ மூட்டைகளை எந்த ஜென்மத்துலே இறக்கப் போறீக…”
அடுத்த கூட்டம்…
“நமது வேட்பாளர் வெங்கடாசலம் ஐயா அவர்களை உங் களுக்கு நன்றாகத் தெரியும்… தூங்கும்போதுகூட தொகுதி நன் மையையே நெஞ்சில் கொண்டு தொண்டுகள் செய்பவர்… இவர் மலையாளியல்ல. நம்மவர். நம் தமிழினத்தின் துயர்களை- சோகங்களை அறிந்தவர்… ஈ, எறும்புக்குக்கூட துன்பம் விளை விக்க சகிக்க மாட்டார்… ஏழைகளின் மீது இரக்கமும், அன்பும், வற்றாத பாசமும் கொண்டவர். அவருக்கு உங்களது பொன்னான வாக்குகளை அளித்து…”
வாங்கி முடித்து காரில் ஏறினார். இன்னும் இரண்டு கூட்டம். தொண்டை வலித்தது. உடம்பெல்லாம் சோர்வு. ஓய்வுக்காக ஏங்கும் எலும்புகள்.
கோவை சிகரெட்டை பற்ற வைத்தார். சிகரெட்டின் புகை சற்று இதமாகத் தெரிந்தது.
சில நிமிஷங்களுக்கு முன் ஒளி வெள்ளத்தில் பேசிய பேச்சுக் கள், முழுச்சக்தியுடன் இப்போது முகத்தில் மோதுகிறது.
“நல்லவர்… நம்மவர்… ஈ, எறும்புக்குக்கூட துன்பம் விலை விக்க சகிக்க மாட்டார்…. ஏழைகளின் மீது இரக்கமும்…”
கேரவைக்கு மனம் எரிகிறதா, கசக்கிறதா? இனம் பிரிக்க முடியவில்லை.
ஊரறிய – உலகறிய – விளக்குகளின் வெளிச்சத்தில் ஒலி பெருக்கியில் பொய்களை முழக்கியிருக்கிறேன்… மனசறிந்த பொய்கள்… ஊரறிந்த பொய்கள்…
உறுத்தல்… உறுத்தல் … உறுத்தல்கள் … நெஞ்சுவலி யெடுத்தது.
மூன்று வருஷத்துக்கு முன்னால்-
தேசம் பூராவும் இருண்ட நிலை. பகலிலும் இரவிலும் இருட்டு. இருட்டுக்குள் சர்வாதிகாரத்தின் ராட்சஸக் கரங் களின் அசுரப் பாய்ச்சல்கள், ஜனநாயகத்தின் கழுத்து இறு கியது.மூச்சுத் திணறியது.
இங்கேயும் ஆட்சி கலைக்கப்படும் என்கிற ஹேஷ்யங்கள் சிறகு கட்டிப் பறந்தன; பீதியை விதைத்தன ‘இன்றோ நாளை யோ’ என்கிற திகில் ஒவ்வொருவருக்கும்! தனக்கு சொந்த முறையில் பாதிப்பு வராது என்று நினைத்திருந்தான் கோவை. இவன் கட்சியின் பெருந்தூண்களில் ஒன்றல்லவே! சாதாரண வட்டாரத் தலைவன் தானே!
நள்ளிரவு நேரம். புதிதாக கட்டிய அந்த வீட்டிற்குள் ஃபேன் சுழற்சியின் ரீங்காரத்தில் மயங்கி உறங்கிக் கொண் டிருந்த கோவை, ஏதோ தடதட, திடு திடும்’ சப்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தான்.
பொறுமையில்லாத கைகளின் மோதலில் கதவு ஓலமிட்டது. பல பூட்ஸ்களின் சப்தமும் கேட்டது.
கதவைத் திறந்தால்
”நீ தானே… கோ.வையாபுரி?”
“ஆமாம்…”
சொல்லி முடிக்கவில்லை. முகத்தில் ஒரு குத்து. பொறி கலங்கியது!
கட்டுப்பாடில்லாமல் வீட்டுக்குள் நுழைந்த காக்கிப்படை, பாயில் படுத்துத் தூங்கிய மணிமாறனை – இருட்டில் தெரியா மலோ – தெரிந்தோ-ஒரு காக்கிச் சட்டையின் கனத்த பூட்ஸ் கால்கள் மிதிக்க…
‘ஓவென்ற அலற முடியாத திணறலுடன் அலறி… ஓய்ந்தான். பூட்ஸ்கால் தொண்டையிலேயே மிதித்து விட்டதோ!
திடுக்கிட்டு விழித்து…இன்னது நடக்கிறது என்பது விளங் காமல் திகைத்து நின்ற மனைவி மாரியம்மா… அலறிச் செத்த மகனைப் பார்த்து குலைப்பதற அலறினாள்…
“அடப்பாவிகளா… எம் புள்ளையை மிதிச்சுக் கொன்னுட்டீகளே…”
அவள் முகத்தில் ஒரு குண்டாந்தடி ரத்தப்பசியுடன் மோது கிறது. அந்தக் குண்டாந்தடி மீண்டும், மீண்டும்… அவள் முகத்தில் நாத்தனமாடுகிறது.
மற்றொரு காக்கிச்சட்டை, தாவணி கட்டிய தமிழ்ச் செல்வி யின் கூந்தலைப் பற்றி, வெட்டி வெட்டியிழுக்கிறான். அவனது பூட்ஸ்கால்…வயிற்றுக்குக் கீழே மிதிக்கிறது கேட்போர் நெஞ்சை பீதிய டயச் செய்யும் அவளது அலறல்… சன்னஞ் சன்னபாக மரணத்தில் புதைந்தது.
கோவைக்கும் மாறி மாறி அடிகள் ; அசிங்கமான வசவுகள்… கையில் விலங்குடன் வீட்டுக்கு வெளியே இழுக்கிறார்கள். வாசலுக்குத் தள்ளி வீதியின் ஓரத்தில் ஒரு கார்.
காருக்குள் பண்ணையார் வெங்கடாசலம், அவருடன் பெரிய அதிகாரி சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்.
சமீபகால அரசியலில் பண்ணையாருக்கு இவன் ஆகாதவன், ஆரம்ப காலத்திலிருந்தே… கோவை ஒரு அரசியல் வாதியாக பரிணமிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே… வெங்கடாசலம் பகை யாகிப் போனார்… ‘ஏதுமத்த வெறும் பயல், எனக்குச் சமமா புகழ் பெறுவதா’ என்கிறகுமைச்சல். .
இதோ அவர் வன்மத்தை தீர்த்துக் கொண்டார் ”பாவி…காத்து எப்பவும் இப்படியே வீசாது…’
கோவை மனம் குமுறினான் … அவனைச் சுமந்து கொண்டு வேன் பறந்தது,இருட்டுக்குள்.
“…ல்லவர்…ஈ எறும்புக்குக்கூட துன்பம் விளைவிக்க சகிக்க மாட்டார். ஏழைகளின் மீ…”
இவனது பிரசங்கமே இவனது நெஞ்சில் சாடி மோதியது.
கூட்டங்கள் முடிந்தன.
கார் இவனை இவனது வீட்டில் இறக்கிவிட்டது. வீட்டை சுடுகாடாக்கிவிட்டு தன்னை விலங்கிட்டு இழுத்துச் செல்லும் சமயத்தில், இதே கார் தான் வீதியோரத்தில் நின்றது. நினைக் கும் போது கோவையின் மனம் கனத்தது ; கசந்தது.
வீட்டைத் திறந்து கொண்டு நுழைந்ததும், வீட்டின் வெறுமை முகத்தில் மோதியது. யாருமேயில்லை. தனிமை… தனிமை… தனிமை…
மணிமறவனின் மரணக் கூவல்…தமிழ்ச் செல்வியின் நெஞ்சு பிளக்கும் கூச்சல்… குலைபதற் அலறிய மனைவியின் அலங்கோல முகம்… வீதியோரத்தில் சிரித்துக் கொண்டிருந்த தனவான் வெங்கடாசலம்…
நெஞ்சில் ரத்தம் கசிந்தது.
தூரத்தில் ஏதோ பொதுக் கூட்டம் போலும். இந்த நேரத் திலுமா! பின்னிரவு அமைதியில் பொதுக்கூட்ட சப்தம் துல்லிய மாக மெல்லிதாகக் கேட்கிறது
“…தாலி கட்டிய மனைவியின் ஆத்மா, அலறாதா? அடப் பாவியே…என்னையும் நமது அருமைப் பிள்ளைகளையும் வதைத் துக் கொன்று, உன்னையும் சிறையில் அடைத்து வேடிக்கை பார்த்த வெங்கடாசலத்துக்கா, ஓட்டுக் கேட்டு அலைகிறாய்?
பணத்துக்காக மானத்தையா அடகு வைப்பது? உனக்கு பாச உணர்வே கிடையாதா? குடும்பத்தை சுடுகாடாக்கி சந் தோஷப்பட்ட அந்தப் பாவிக்கு ஓட்டுக்கேட்டா, ஊர் ஊராக அலைகிறாய்?” என்று அந்தத் தாயின் ஆத்மா அலறாதா?…
‘நண்பர்களே…கோவை நல்லவர்’ எனக்குப் பழைய சிநே கிதர். அந்த அன்புச் சகோதரருக்கு ஏற்பட்ட அவலம், உங்க ளுக்கும் ஏற்படாமல் இருக்க வேண்டாமா? அப்படியானால் வெங்கடாசலத்தை தோற்கடியுங்கள் ஆகவே பெரியோர் களே. தாய்மார்களே…’
இந்தத் துல்லியமான குரல்.., எதிர்க்கட்சி மேடைக் குரலா…? இவனது மனசாட்சியின் குரல் போலல்லவா இருக்கிறது!
பீரோவைத் திறந்தான். பாட்டிலை எடுத்தான். தண்ணி தான் மனத்தீயை சற்று அணைக்கும், வேறு பாதையில்லை. மன அவஸ்தையிலிருந்து தற்காலிக விடுதலையாவது வேண்டும்…
பாட்டிலைத் திறந்தான்…
சில நாட்கள் நகன்றன.
தேர்தல் முடிந்து விட்டது. இதோ, முடிவுகள் வானொலி யில் வருகின்றன.கோவைக்கு ரொம்பச் சோர்வாக இருக்கிறது. மாநிலம் பூராவும் தனது கட்சியின் தோல்விச் செய்திகள்…
இன்னும் இந்தத் தொகுதி முடிவு தெரியவில்லை…ஆனால் மாநிலம் பூராவும் சரிவு. முதல்வர் பதவி ஒரு கனவாகப் போவது மட்டுமல்ல.. கேவலமான வீழ்ச்சிகள்! நம்பிக்கைகள் மொத்தமும் நொறுங்கிச் சிதறி விட்டன.
கோவைக்கு மனம் ரொம்ப வேதனைப்பட்டது. எரிச்சல் பட்டது…யார் யார் மீதோ கோபப்பட்டது. மனம், வெறி பிடித்த குருட்டு நாயாக அலைபாய்ந்தது… “துரோகிகள்… கூட்டணித் துரோகிகள்…”
நிம்மதிக்காக பாட்டிலைத் திறந்தான் நிதானமாக.
அதற்குள் இதோ-
இந்தத் தொகுதி அறிவிக்கப்படுகிறது. கோவையின் மனம் திக்திக்கென்று அடித்துக் கொள்கிறது. இறுதிக்கணம்- மனைவி-மகள் – மணிமறவன்!
தவிப்பு…. தவிப்பு…. தவிப்புகள்….
நாலாயிரத்து சொச்சம் வாக்கு வித்தியாசத்தில் வெங்கடா சலம் தோற்றார்….!
பாட்டிலை தூர எறிந்தான். குபுக்கென்று காற்று நெஞ்சுக் குள் பிரவேசித்து, இனிய ராகம் மீட்டியது. நரம்புகளில் ஏதோ ஒரு புத்துணர்ச்சி ஓடிப்பாய்கிறது… அப்பாடா…!
தண்ணியில்லாமலேயே இன்று அவன் சந்தோஷமாகத் தூங்குவான்.
– மேலாண்மை பொன்னுச்சாமியின் முதல் சிறுகதைத் தொகுப்பு.
– மானுடம் வெல்லும் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: ஏப்ரல் 1981, கரிகாலன் பதிப்பகம், மேலாண்மறைநாடு, இரமநாதபுரம் மாவட்டம்.