சந்தையும் சந்திப்புகளும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 4, 2023
பார்வையிட்டோர்: 1,225 
 
 

 (2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“மலர்..பிள்ளை ..மலர்”காலை உணவை முடித்து விட்டு ஹாலில் தன் பழைய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த ஜெயராஜ் அவர்கள் சென்றதும் தன் அக்கா மகள் மலர்விழியை அழைத்தான். 

“இதோ வந்திட்டன் மாமா” சமையலறையில் அலுவலாக இருந்தவள் பரபரத்து ஓடிவந்தாள். 

மலர் நான் நம்மட சந்தைக்கு போய் சாமானுகள் வாங்கி வாறன். ஒரு வாஸ்கர் தாறீரா. எத்தனை வருசமாச்சி சந்தையைப் பார்த்து.” என்றான் ஜெயராஜ். 

“போயிட்டு வாங்க மாமா. நேற்றே நிறைய காய்கறி, வீட்டுச்சாமான்கள் எல்லாம் இவர் வாங்கிப்போட்டார். பரவாயில்ல உங்களுக்கு என்ன பிடிக்குதோ அதை வாங்குங்க. இதோ கொண்டுவாறன் நல்ல வாஸ்கெட் ஒன்று.”என்ற மலர் ஒரு பிளாஸ்டிக் கூடையை கொண்டு வந்து கொடுத்தாள். 

அதை வாங்கிக்கொண்ட ஜெயராஜ், அங்கிருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு சந்தைக்கு கிளம்பினான். 

பல வருடங்களுக்குபின் சைக்கிளில் சந்தைக்கு போவது அவனுக்கு பரவசத்தையும்,மகிழ்ச்சியையும் கொடுத்தது. 

ஞாயிற்றுக்கிழமை பொதுச்சந்தை ஜெயராஜ்ஜின் ஊரில் மிக ஆரவாரமாக ஆரம்பமாவது அந்தக்காலம் தொடங்கி நடப்பது ஒன்றுதான். பக்கத்துக்கிராம மக்கள் வந்து கூடுவார்கள். அயலூர்களில் இருந்தும் வியாபாரிகள் தங்கள் கடைகளைக் கொண்டுவந்து விரிப்பார்கள். கிழமைக்கு ஒருதரம் அது கூடுவதால் சனத்திரள் நிறைந்து இருக்கும். 

அந்தப் பிரதேச சேனைகளில் விளைந்த காய்கறிகள், இலைக்கறிகள், கடல்மீன், ஆற்றுமீன், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, வெங்காயம், மிளகாய்,மற்றும் மலைநாட்டிலிருந்து வரும் கரட், பீட்ரூட், பீன்ஸ், லீக்ஸ், உருளைக்கிழங்கு என்று அனைத்து பொருட்களும் வந்து குமியும். இது தவிர அலுமினியப் பாத்திரங்கள், பிளாஸ்டிக் சாமான்கள், சட்டி,பானை, தட்டுமுட்டு சாமான்கள் என்று ஏகப்பட்ட வீட்டுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும். ஜெயராஜ் தனது ஊரின் பழைய சந்தையை நினைத்துக்கொண்டான். அது காட்டுக் கம்புதடிகள் கொண்டு கட்டப்பட்ட கொட்டில்களாகவே இருந்த சந்தை. ஆனால் இன்று கட்டிடத் தொகுதியாக அழகாக அமைக்கப் பட்டிருக்கும் மத்திய சந்தையாக அவனை வரவேற்றது. 

மேற்கு ஐரோப்பிய நாடான டென்மார்க்கிலிருந்து கால் நூற்றாண்டுக்குப் பின்னர் அவன் ஊருக்கு சென்றிருந்தான். தன் சின்ன வயசிலும், வாலிப வயசிலும் தனது அப்பா,அம்மா, நண்பர்களுடன் ஒவ்வொரு ஞாயிறும் ஜெயராஜ் சந்தைக்கு செல்வதுண்டு. பள்ளியில் படிக்கும் காலத்தில் தன் நண்பன் மணியுடன் வந்து, சந்தையில் தேயிலைக் கடை விரித்திருக்கும் பதுளை செட்டியாரிடம் மஞ்சள் கடலை வாங்கிக் கொண்டு, மாலைநேரம் வந்ததும் கடற்கரைக்கு சென்று அமர்ந்து கடலையை கொறித்துக்கொண்டே ஊர், உலக நடப்புகளை பேசுவதுண்டு. தமிழ் இலக்கியம் பற்றி கதைப்பதுண்டு. கம்பராமாயணத்தில் மந்தைரை சூழ்ச்சிப் படலம், கைகேகி சூழ்வினைப் படலம் என்று அக்குவேறு ஆணிவேராக அலசுவதுண்டு. பள்ளிக்கூடத்தில் இரத்தினம் ஆசிரியர் இலக்கியம் படிப்பிக்கும் போது அவரை கேள்வி கேட்டு துளைப்பதுண்டு. இப்படிதான் ஒருநாள், இரத்தினத்தார், இராமனின் முடிசூட்டு விழாவிற்கு அயோத்திமானகரை அலங்கரித்த விதம்பற்றி கம்பன் புனைந்த பாடலொன்றை சொல்லிக்கொண்டிருந்தார். 

‘மங்கையர் குறங்கென வகுத்த வாழைகள்
அங்கவர் கழுத்தென கமுகமார்ந்தன
தங்கெளிர் முறுவலில் ராமனாண்டன.
கொங்கையை நிகர்த்தன கனக கும்பமே” 

என்ற பாடலுக்கு இரத்தினம் மாஸ்டர் உரை சொல்லிக் கொண்டு இருந்தார். ஜெயராஜ்ஜின் வகுப்பில் குழப்படியும், துடிப்பும் மிக்க மாணவன் ஜோதி. 

அவனும் எதையும் சிந்திக்காமல் எழுந்து, “சார் கொங்கை என்றால் என்ன சார்” என்று கேட்டுவிட்டன்.. மாஸ்டர் தடுமாறிக்கொண்டே 

“கொங்கை என்றால்..அது.. அது வந்து இந்த கொங்கையைப் போல வீதி முழுவதும் கும்பம் வைத்து அலங்கரித்தார்களாம்.” என்று மழுப்பலாக சொல்ல, அவன் மீண்டும் எழுந்து, 

“அதுதான் சார் கொங்கை என்றால் என்ன” என்று கேட்டு வைக்க, மாஸ்டர் கொஞ்சம் சங்கோசப்பட்டு நெளிந்தவுடன், ஜோதியை,ஜெயராஜ்தான் இருக்கச் சொல்லி அமைதிப் படுத்தினான். 

கொங்கை என்றால் எல்லோருக்கும் பொருள் தெரியும். இருந்தாலும் அதை இரத்தினம் மாஸ்டர் வாயால் வேறு விதமாக கேட்க விரும்பினான் ஜோதி.அப்படி கேட்பதில் அவனுக்கு ஒரு சந்தோசம். 

ஜெயராஜுக்கு இந்த இந்துத்துவ இதிகாசங்களில் உள்ள இடக்கு முடக்குகள் பல இன்றுவரை புரிவதே இல்லை. 

அன்றும் அப்படியே.ஞாயிறு வந்தால் சந்தைக்கு வந்து செட்டியாரிடம் வறுத்த மஞ்சள் கடலை வாங்கிக் கொண்டுபோய் கடற்கரையில் இருந்து அவன் தன் நண்பனுடன் விவாதிப்பான். இராமன், கடவுள் அவதாரம் என்றால் கானகத்தில் மாரீசன் மாயமான் வடிவத்தில் வந்ததை ஏன் அறிந்து கொள்ளவில்லை? தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவிமார் என்றால் அவர்களுக்கு என்ன நடந்தது? ஏன் கோசலை, கைகேகி, சுபத்திரை முன்னிலைப் படுத்தப்பட்டார்கள்? இனி, பாரத சுருக்கத்தையும் அவன் விட்டு வைப்பதில்லை. ஆசிரியர் படிப்பித்துக் கொண்டு இருக்கும்போதே “சார் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது” என்பான். “என்ன சந்தேகம்” என்று அவர் கேடால், சொல்லுவான். துரியோதனன் உள்ளிட்ட கெளவர்கள் அந்தகன் திருதராட்டினன் பிள்ளைகள். அவனின் தம்பி பாண்டு. இவருக்கு பிள்ளைகள் இல்லை. ஒரு சந்தர்ப்பத்தில் குந்திதேவிக்கு முனிவர் ஒருவர் கொடுத்த மாத்திரைகளை ஒருத்தருக்கும் தெரியாமல், அவர் சூரியக் கடவுளை நினைத்து, ஒன்றை சாப்பிட, அவர்முன் சூரியன் தோன்றி ஒரு குழந்தையை கொடுக்கிறார். அந்த குழந்தையை ஆற்றில்விட்டுவிட்டு, பின்னர் எமதர்மன்,, வாயு பகவான், இந்திரன் முதலானவர்களை நினைத்து குந்தி மாத்திரைகளை உட்கொள்ள பஞ்சபாண்டவர் தோன்றுகிறார்கள். 

ஆக இவர்கள் பாண்டுவின் பிள்ளைகள் இல்லை அல்லவா? அப்படியென்றால் அவர்கள் எப்படி பஞ்ச பாண்டவர்கள் ஆக முடியும். எப்படி நாட்டில் உரிமை கேட்கமுடியும்? இந்த வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் குருசேத்திர யுத்தமே ஒரு அபத்தமல்லவா? இப்படி இரத்தினம் மாஸ்டரை கேள்வி கேட்பான்.மேலும், தருமன், தன்னையும் வைத்து சூதாட்டத்தில் தோர்த்தபின், எப்படி பாஞ்சாலியை சூதாட்டத்தில் வைத்து ஆடலாம். அவர் தோற்றத்தோடு அங்கு ஆட்டமே முடிவுபெறுகிறதே. மற்றும் பொய்யே சொல்லாத தருமன், எப்படி “அசுவத்தாமா இறந்தான்” என்று துரோணர் காதுபட கூவலாம். 

இறந்தது யானையாக இருக்கலாம். ஆனால் துரோணர், தன் மகன் அசுவத்தாமா இறந்து விட்டான் என்று கலங்கி நின்றபோதே வஞ்சகமாக கொல்லப்பட்டாரே. இதெல்லாம் உண்மைக்கு மாறாக இல்லையா? இப்படி லாஜிக் இல்லாத விடயங்களை அவன் கேட்காமல் விடுவதில்லை. மாஸ்டரும் பதில் சொல்ல தடுமாறாமல் விடுவதில்லை. படிக்கும் காலத்தில் பின்னேரங்களில் பக்கத்து ஊர்களுக்கு சைக்கிள் சவாரி தன் நண்பனுடன் செல்வதுண்டு. பத்து கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஊரில் இருக்கும் திரையரங்கத்துக்கும் படம் பார்க்க செல்வதுண்டு. நண்பர்களோடு கடலில் குளிப்பது, கரப்பந்தாட்டம் ஆடுவது, கால்பந்தாட்டம் ஆடுவது, துடுப்பாட்டம் ஆடுவது என்று ஊரில் கழித்த பொழுதுகள், நாட்கள் எல்லாம் ஜெயராஜுக்கு ஒருதரம் மனதில் வந்து விரிந்து சுருண்டது.அவன் சந்தைக்கும் வந்து விட்டன். சைக்கிளை கொண்டு சென்று அங்குள்ள ஸ்டாண்டில் வைத்து பூட்டிவிட்டு சந்தையினுள் நுழைந்தான். 

கையில் பையும் கையுமாக சந்தையில் நின்ற ஜெயராஜை பலரும் பார்த்து சிரித்துக் கொண்டு போனார்கள்.தன்னோடு படித்த பலர் சந்தைக்கு வந்திருந்தார்கள். சிலரை அடையாளம் காண்பது கஷ்டமாக இருந்தது. அவர்கள் உருவத்தில் மாற்றம். முகத்தில் முதிர்ச்சி, இப்படி சிலர். பலருக்கு தலை முடி உதிர்ந்து தட்டையாக இருந்தது.இன்னும் சிலருக்கு தலை பஞ்சுப் பெட்டிபோல் இருந்தது. ஒரு சிலரை அடையாளம் கண்டு பேசவும் முடிந்தது. ஜெயராஜுடன் படித்த சண்முகம் அடையாளம் கண்டு பேசினான். “என்ன மச்சான் எப்படா வந்த நீ… எப்ப போறாய்… ஒரு தலைமுறை இடைவெளி இல்லையா?’ கேட்டன் சண்முகம். 

நேற்றுத்தான் வந்தனான். மூன்று வாரம் நிற்பதாக உத்தேசம். நீ எப்படி இருக்கிறாய்.. வீட்டில் எல்லோரும் நல்லா இருக்கிறாங்களா?” 

‘ஆ. எல்லோரும் நல்லா இருக்கிறாங்க.எனக்கு இப்போது பென்சன்தானே.மனிசிக்கும் பென்சன் வந்திட்டுது. பிள்ளைகள் மூன்று.இரண்டுபேர் படிச்சிட்டு வேலையில இருக்கிறாங்க. மூத்தவன் பிரதேச செயலகத்தில். இரண்டாவது மகள் படிப்பிக்கிறாள்.கடைசி மகன் கம்பஸில் இருக்கிறான்.” 

“அப்ப,பிறகென்ன. பிள்ளைகள் எல்லாம் படிச்சிட்டாங்க. என்று சொல்லு” ‘ஓம் மச்சான் ஓரளவுக்கு நல்லா போயிட்டு இருக்கு. மகளுக்குத்தான் ஒன்றும் சரிவருகுதில்ல. அவளுக்கு ஒரு நல்ல சம்பந்தம் வந்திட்டுதென்றால், முடிச்சிடலாம். பிறகு மூத்தவனை கொத்திக்கொண்டு போக பலர் பேசி வாறாங்க” 

“ஒன்றும் யோசிக்காத எல்லாம் நல்லபடியாக முடியும்.” 

“ஏதோ உன் வாக்குப்படி நல்லது நடக்கட்டும். உன்னைக் கண்டதில் பெரிய சந்தோசம். எவ்வளவு காலம்டா.. 
பள்ளில படிக்கும்போது உன் பேச்சு, சிரிப்பு, கலகலப்பு,எல்லாம் நேற்றுபோல இருக்கு மச்சான். நீ அப்படியேதான் இருக்கிறாய். என் பார்வைக்கு அப்படிதான் தெரியுது. வயசின் முதுமை தவிர. எப்படிடா” 

இதில ஒண்டும் சிதம்பர ரகசியம் இல்ல. குளிர்நாடு. வெயில் வரும் ஆனால் இப்படி வெக்கையா இருக்காது. அலைச்சல், உலைச்சல் கிடையாது. ஏறினா கார், இறங்கினா வீடு. எல்லாவற்றிற்கும் மேலாக மன அமைதி, சந்தோசம். இவைகள்தான் முடி நரைக்காமல். முகத்தில் சுருக்கம் விழாமல் இருப்பதற்கு காரணங்கள். 

ஆனால் இங்கு நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழல், அதனால் வந்த கஷ்டங்கள் எம் மக்களை பல வழிகளிலும் சீர்குலைத்து சின்னாபின்னமாக்கி இருந்தது. இல்லையா” 

“நீ சொல்வது உண்மைதான் மச்சான். மக்கள் மிகவும் கஸ்டப்பட்டு நலிந்து போனார்கள்.. இப்பொழுது ஓரளவு பரவாயில்ல. நல்லது நடக்கட்டும். சரி மச்சான் நான் அங்கு மீன் மார்க்கட்டுக்கு ஒரு நடை போகவேணும் வரட்டே” 

“ஓம் ஓம்.சரி. போயிட்டு வா மச்சான், நானும் அந்தப் பக்கம் போய் கொஞ்சம் கீரை வாங்கப் போறன்.” 

என்று சண்முகத்துக்கு விடைகொடுத்த ஜெயராஜ் கீரை விற்கும் பகுதிக்கு வந்தான். பல பெண்கள் வரிசையாக இருந்து 

பொன்னாங்கண்ணி, குப்பைக்கீரை, வல்லாரை, குறிஞ்சா இலை,வாழைப் பூ, என்று விற்றுக் கொண்டு இருந்தார்கள். ஜெயராஜைக் கண்டதும், “வாங்க தம்பி, நல்ல முளைக் கீரை இருக்கு வாங்குங்க.” என்றா ஒருவர். 

“தம்பி நல்ல பொன்னாங்கண்ணி இருக்கு. கட்டு இருபது ரூபாதான்.” என்றார் மற்றவர். 

அடுத்தவரோ, வல்லாரை, வாழைப்பூ இருக்குத் தம்பி” என்று தன் பங்குக்கும் சொன்னார். 

ஜெயராஜ் எல்லோரிடத்திலும் அவர்கள் சொன்னபடி வாங்கிக்கொண்டான். 

அவர்களுக்கு பெரிய சந்தோசம். கைபேசிக் கமராவால் அவர்களை படம் எடுத்துகொண்டான். 

அந்த பெண்களுக்கெல்லாம் இனி இல்லையென்ற மகிழ்ச்சி. அவர்களை கடந்து சென்றபோது. 

நல்ல பப்பாசிப் பழங்கள் இருந்தன. ஒரு நல்ல பழம் வாங்கிகொண்டான். பக்கத்தில் நல்ல ஒற்றைவேர் மரவள்ளிக் கிழங்கு குமியல் இருந்தது.அதில் இரண்டு கிலோ வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்ப தயாரானான் ஜெயராஜ். 

இவைகள் எல்லாம் அவன் வாழும் நாட்டிலும் கடைகளுக்கு வருகின்றனதான். ஆனால் இப்படி “பிரஷ்சா” வாங்க முடியுமா? அங்கு மரவள்ளிக் கிழங்கில் மெழுகு பூசி வருகிறது.பொன்னாங்கண்ணி ரெஜிபோமில் அடைக்கப்பட்டும், வல்லாரை பொலித்தினில் சுற்றியும் வருகின்றன. இப்படி ஊரில் வாங்குவதுபோல் அங்கு வாங்க முடியுமா? என்று நினைக்க,ஒரு குதூகலமும், துள்ளலும் அவனுக்குள் ஏற்பட்டது. சனங்கள் போவதும், வருவதுமாக இருந்தார்கள்.முப்பது வருடங்களுக்கு முன் இருந்த சந்தை இப்பொழுது முற்றாக மாறி இருந்தது. 

கார்களும், மோட்டர் சைக்கிள்களும் ஏராளம். ஒரு நகர் புறம்போல தான் இருந்தது. 

ஜெயராஜ் தன் சைக்கிள் இருந்த இடம் வந்து வாஸ்கற்றை சைக்கிள் ஹன்டிலில் கொழுவிக் கொண்டு வீதிக்கு வர கிளம்பினான். ஒரு சில அறிந்த முகங்களைப் பார்க்க முடிந்தது.பலர் பார்த்து சிரித்துக் கொண்டு சென்றார்கள்,பலர் கண்டும் காணாத மாதிரி சென்றார்கள்.அவர்களில் சிலர் முன்பு தன் தந்தையார் வயலில் வேலைசெய்தவர்கள்.ஆனால் அவர்கள் ஜெயராஜை அடையாளம் காணவில்லை என்பது அவனுக்கு மனதை உறுத்தியது. ஒரு கால் நூற்றாண்டுக்குள் காலம் எப்படி மாறி விட்டது என்று எண்ணிக்கொண்டே சைக்களை மிதிக்கத் தொடங்கினான். 

முன்பு வீதியெல்லாம் வீர மரங்கள், நாவல் மரங்கள், புளியை மரங்கள் நின்று இருந்தன. இன்று அப்படி எதுவும் இல்லை. வீதியோரம் எல்லாம் கடைகள், வங்கிகள், ஹார்ட்வேர் ஸ்டோர்கள்,ஐஸ்க்ரீம் கடைகள், பூட் சிட்டி என்ற சுப்பர் மார்கெட் என்று ஊரையே ஒரு புதுக் கோலத்தில் மாற்றிப் போட்டிருந்தது காலம். 

ரோட்டைப் பற்றி சொல்லவே வேண்டாம்.அவ்வளவு நேர்த்தி. சுனாமிக்குப் பின் பல தன்னார்வ தொண்டு நிறுவனமும், அரசும் சேர்ந்து வீடுகளை, வீதிகளை நிர்மானித்திருப்பதை காண முடிந்தது. தன் ஊர் மாவட்ட வைத்திய சாலையை கடந்து செல்ல முற்பட்ட ஜெயராசுக்கு எதிரே தாதிமார் இருவர் தங்கள் சீருடைகளுடன் வீதியில் வந்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் அண்மித்ததும், இருவரில் ஒருவர் தன் பெரியப்பா மகள் சுகன்யா என்று தெரிந்தது. அவளும், ஜெயராஜைக் கண்டுகொண்டு சிரித்தாள். சைக்கிளை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு இறங்கினான். 

“அண்ணன், எங்களையெல்லாம் மறந்திட்டிங்க என்ன? எப்பண்ணே வந்தீங்க” கேட்டாள் சுகன்யா. 

“நேற்று வந்தனான் பிள்ள. மருமகள் மலர் வீட்டில் தங்கிறன். எப்படி வீட்டில் எல்லோரும்? 

பெரியம்மா யாரோடு இருக்கிறா? அக்கா எப்படி இருக்கிறா?” 

நல்லம் அண்ணன். அம்மா தங்கச்சியோடதான் இருக்கிறா. நாங்க எல்லோரும் போய் பார்துக்கொளுவோம். 

அம்மாவுக்கு கொஞ்சம் முடியாது. வயசும் போயிட்டுதானே..” 

“ஆமால்ல…அவவுக்கு இப்ப எண்பதைத் தாண்டி இருக்குமல்ல.”

“ஓம் அண்ணன் எண்பத்திரெண்டு” 

“ஆ, அதுதானே…அது சரி சுகன்யா. இது.யாரு” 

“இவ பக்கத்து ஊர். என்னோடுதான் ட்ரைனிங் இருந்தவ”

“அப்படியா? அது சரி எங்க யூனிபோமுடன் கிளம்பிட்டீங்க”

“பக்கத்தில பூட் சிற்றிக்கு போயிட்டு வரலாம் என்று வந்தோம்.” 

“யூனிபோமுடனா? திரும்பவும் ஹொஸ்பிடல் போறீங்களா?” 

“ஓம், டொக்டர் பதினொருமணிக்கு வாட்ஸ் ரவுண்ட்ஸ் வருவார். அதற்கு இடையில் திரும்பவேணும்” 

ஜெயராஜ் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். 

“என்ன,அப்படி பார்க்கிறீங்க.நான் கல்யாணம் கட்டி குழந்தைகளும் பெற்றதால், கோலமா போயிட்டன். நீங்க முதல் பார்த்த மாதிரி இருக்க முடியுமா ஆளே மாறிப் போயிட்டன் பார்த்தீங்களா?” 

“அதுவும் தான் சுகன்யா. அதைவிட எனக்கு பெரிய ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருப்பது நீங்கள் இந்த யூனிபோமுடன் வெளியில் வந்தது. அதுவும் சுப்பர்மார்கெட் போவதாக சொல்வது. அதன்பின் திரும்பவும் ஹாஸ்பிடல் போய் டாக்டருடன் நோயாளிகளுக்கு சேவை செய்வது என்பதும்” 

“என்னண்ணன், என்ன பிரச்சினை” என்றாள் வெள்ளந்தியாக சுகன்யா. “நோயாளர்களுக்கு சேவை, பணிவிடை செய்பவர்கள்தானே நர்ஸ்கள். அவர்கள் நோய் காவிகளாக இருந்தால் எப்படியம்மா? 

ஹாஸ்பிடலைவிட்டு எப்படி நீங்க சீருடையுடன் வரலாம்? அப்படி வருவதாக இருந்தால் உங்கள் பிரத்தியோகமான லொக்கரில் உங்கள் சீருடைகளை வைத்துவிட்டு, சாதாரண உங்கள் ஆடைகளை உடுத்திக் கொண்டு வரவேண்டும். உங்களுக்கான வாடரூப் ஒதுக்கி தந்திருப்பார்கள்தானே.” 

“அண்ணன் எங்களுக்கு அப்படியான வசதி ஒன்றும் இங்கு கிடையாது. நாங்க வீட்டில் இருந்துதான் தாதிமார்களின் சீருடை அணிந்து செல்கிறோம். வேலைமுடிந்து வரும்போதும் அதே உடையுடன்தான் வீடு திரும்புகிறோம்.” 

“இதெல்லாம் சரியா சுகன்யா? சுகாதாரம், என்னாவது? வெளியில் இருக்கும் கிருமிகள், பக்டீரியாக்கள் எல்லாம் உங்கள் உடைகளில் தொற்றிக் கொள்ளுமே. அது நோயாளர்களை பாதிக்காது என்பது என்ன நிச்சயம்? 

இதை இங்குள்ள சுகாதார அமைச்சோ, அதன் அதிகாரிகளோ, அல்லது வைத்தியசாலை வைத்திய அதிகாரியோ கவனித்து நடவடிக்கை எடுக்க மாட்டாங்களா?” 

ஒருவரும் எங்களுக்குரிய வசதிகள் செய்து தருவதுமில்லை. அதற்கு சம்மந்தப்பட்ட அமைச்சுடனோ, அமைச்சருடனோ, எங்கள் மேலதிகாரிகள் பேசுகிறார்களோ தெரியாது?” என்றாள் சுகன்யாவின் தோழி. 

“அண்ணன் உங்க வெளி நாடு மாதிரி, வசதிகள்,வாய்ப்புகள் நமது நாட்டில் வருவதற்கு இன்னும் பல தலைமுறைகள் மாறவேண்டும் என்று தோணுது.” 

ஜெயராஜுக்கு ஒரு நொடி என்ன பேசுவதென்றே தெரியவில்லை. பின் தன்னை சுதாகரித்துக்கொண்டு “சரி சுகன்யா,நீங்க புறப்படுங்க. உங்க பூட் சிற்றிக்கு. நான் ஆறுதலாக வீட்டுக்கு வந்து பெரியம்மாவை பார்க்கிறன்” என்றதும் சுகன்யாவும், அவள் தோழியும் விடைபெற்று நகர்ந்தார்கள். அவர்கள் போவதையே பார்த்துகொண்டிருந்த ஜெயராஜ் ஒரு கணம் பிரமைபிடித்து நின்றிருந்தான். 

இலங்கையில் இருக்கும் எல்லா வைத்திய சாலைகளும் இப்படிதான் இருக்குமா? அல்லது தமிழர்கள் பகுதில் உள்ள வைத்திய சாலைகளில்தான் இப்படியா? அவன் நாட்டில் இருந்த காலத்திலும் சரி, பின் போர் நடந்த காலத்திலும் சரி போதுமான வைத்திய வசதிகள் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை என்பது உண்மைதான். 

ஆனால் போர் முடிந்த பின் ஏற்பட்ட மாற்றங்கள், அதன்பின் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம், என்பன நாட்டில் மாற்றங்களைக் கொண்டுவரவில்லையா? அரசு, இவற்றைப்பற்றி கண்டு கொள்ளவில்லையா? சுகாதார அமைச்சு, மாகாண சுகாதார அமைச்சு என்பன இவை பற்றி சிந்திக்க வில்லையா? இதைவிட உலக சுகாதார அமைப்பு இது பற்றிக் கவனம் கொள்ளவில்லையா? என்ற பல கேள்விகள் அவன் மனதில் எழுந்தும், அவற்றிற்கு பதில்கள் கிடைக்காமல் சைக்கிளில் ஏறி இருந்து அதை மிதித்துக்கொண்டு மருமகள் மலர் வீடு நோக்கி சென்றுகொண்டு இருந்தான்.

– ஊருக்குத் திரும்பணும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2016, மெய்கண்டான் பிரைவேட் லிமிடெட். இலங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *