சதிவிரதன்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 25, 2023
பார்வையிட்டோர்: 18,951 
 
 

புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, பேராசிரியர் வெளியே எட்டிப் பார்த்தார்.

இந்த மண்ணுக்கே சொந்தமான பனிப்புயல் ‘ஊ..’ என்ற சத்தத்தோடு வேகமாக வீசிக்கொண்டிருந்தது. காது நுனியை ஊசியால் குத்திக் கிழிப்பது போன்ற, உறைய வைக்கும் அந்த மோசமான காலநிலையையும் பொருட்படுத்தாது அவர் அவசியம் வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது.

இந்தக் காலநிலை மாற்றங்களின் பாதிப்பு பற்றி ஆராயத்தான் அரசின் ஆலோசனைக் கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்திற்கு பேராசிரியர் ராம் என்று அழைக்கப்படும் ராமகிருஷ்னனையும் அழைத்திருந்தார்கள். பேராசிரியர் என்றதும் வயது போன ஒருவரை நீங்கள் கற்பனை செய்து பார்த்தீர்களானால் அங்கே தவறு செய்வீர்கள். இவர் அப்படி ஒன்றும் வயது போனவராகத் தெரியவில்லை. அப்போது தான் திருமணமாகியவர் போலவும், கொஞ்சம் அழகாகவும், இளமையாகவும் இருந்தார்.

அவருக்கு அந்தக் கூட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் கொடுத்திருந்ததால், அந்தக் கூட்டத்திற்கு கட்டாயம் சமூகம் கொடுக்க வேண்டிய நிலையில் அவர் இருந்தார். அவரது தலைமையிலான குழுவால் அறிமுகப் படுத்தப்பட்ட உறங்குநிலைத் திட்டத்தை  (Hibernating) நடைமுறைப் படுத்துவது பற்றிய இறுதி முடிவெடுக்கும் கூட்டமாகவும் அது இருந்தது.

நிர்வாகக்குழுவினர் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அவரது உறங்குநிலைத் திட்டம் உடனடியாகவே அமல் நடத்தப்படலாம். அவரது திட்டத்தைப் பரிசோதனைக்காகத் தெரிந்தெடுத்து, நாட்டின் ஒரு பகுதி மக்களிடம் மட்டுமே ஏற்கனவே பரிச்சார்த்தமாகச் செயற்படுத்திப் பார்த்த போது, அவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிக பலனை அந்தத் திட்டம் கொடுத்திருந்தது.

சாதாரணமாக மனிதன் தினமும் தூங்கி எழுவதைப்போல, குறைந்தது நான்கு மாதகாலத்திற்காவது மனிதனைத் தொடர்ச்சியாகத் தூங்க வைப்பதுதான் அந்தத் திட்டத்தின் நோக்கமாக இருந்தது. பலகாரணங்களை முன்வைத்து, நாடு முழுவதும் பனிக் காலத்தில் அந்தத் திட்டத்தைச் செயற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்தக் கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டது. நாட்டின் உயர் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்களும், பொருளாதார நிபுணர்களும், முக்கிய அரசியல் பிரமுகர்களும் அந்தக் கூட்டத்திற்கு வருகை தந்து அந்தத் திட்டத்திற்கு முழுமையான ஆதரவைத் தந்திருந்தார்கள்.

பனிக்காலம் வந்தால் இந்த நாட்டின் பகுதிகள் பனியால் மூடப்பட்டு முற்றாகச் செயலிழந்து விடும். ஆனால் இந்த நகரம் மட்டும் எப்போதும் தேவைகருதி விழித்திருக்கும். முன்பெல்லாம் பனிக்காலத்தைப் பயனுள்ளதாகப் பயன்படுத்தும் நோக்கத்தோடு, வீடுகள், வேலைத் தளங்கள், வண்டிகள் எல்லாம் செயற்கை முறையில் சூடாக்கப்பட்டு பனிக்கால ஆடைகள், அதற்கான பாதஅணிகள், பனிக்கால விளையாட்டுக்கள் என்று வித்தியாசமாய்க் கொண்டாட்ட விழாக்கள் போல நாடு முழுவதும் கலகலப்பாக இருக்கும்.

பனிக்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் நிறையப் பணமும் நேரமும் செலவிட்டாலும், அந்த நிலை அதிக காலம் நீடிக்கவில்லை. சூழல் மாசடைந்ததாலும், ஓசோன் துவாரங்களால் ஏற்பட்ட விரைவான காலநிலை மாற்றங்களாலும், பூமிப்பந்திலும் பெரும் அனர்த்தங்கள் ஏற்படத் தொடங்கின. என்றுமில்லாதவாறு மனித உடம்பு விறைத்துப் போகுமளவிற்கு உறைபனியால் ஏற்பட்ட கடுமையான பாதிப்பு, பனிக்காலத்தில் நாட்டில் ஏற்பட்ட உணவு பற்றாக் குறை, பனி விபத்துக்கள், அளவிற்கதிகமான எதிர்பாராத மருத்துவச் செலவுகள் போன்ற பல காரணங்கள் எல்லாம் சேர்ந்து இன்று இந்த நாட்டையே சுமார் நான்கு மாதகாலங்களுக்கு அவசரகால நிலைபோன்ற கட்டாய உறங்கு நிலையில் வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளிவிட்டது.

பொதுவாக மார்கழி மாதத்தில் தொடங்கும் உறங்கு நிலைத் திட்டம் பங்குனி மாதத்தில் தான் முடிவடையும். சுமார் நான்கு மாதங்களுக்கு இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும். புவியியல் மாற்றங்களால் இனிவரும் காலங்களில் பனிக்காலம் மேலும் அதிக நாட்களுக்கு நீடிக்கலாம். பனிக்காலத்தில் மிருகங்கள், பறவைகள் போல, உறங்கு நிலையில் மனிதனும் இருக்கலாம் என்பதைத் தனது கடின உழைப்பால் கண்டுபிடித்த பேராசிரியர் ராமுக்கு கலாநிதிப் பட்டம் மட்டுமல்ல, அதற்காக அறிவியல் நிறுவனங்களிடம் இருந்து மிகப் பெரிய பாராட்டுகளும், பரிசுகளும் கிடைத்தன.

பொருளாதாரச் சீரழிவிற்குள்ளான அந்த நாடு, இப்படியான ஒரு மாற்றத்திற்காக எங்கே என்று காத்திருந்தது. முக்கியமான கடமையில் ஈடுபட்டு, இதற்காகக் குறிக்கப்பட்ட சில முக்கிய நகரங்களின் கட்டுப்பாட்டு நிலையங்களில் தங்கி இருப்பவர்களைத் தவிர, மற்றவர்கள் எல்லோரும் இந்த நான்கு மாதகாலமும் உறங்கு நிலைக்குப் போயாகவேண்டும் என்ற கட்டாய சட்டமும் கொண்டுவரப்பட்டு, நாடு முழுவதும் முதன் முதலாக இந்தத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. விடுமுறையில் ஓய்வு எடுப்பதுபோல, இந்த உறங்கு நிலையில் மனிதர்கள், மிருகங்கள், செல்லப்பிராணிகள் என்று எல்லா உயிரினங்களும் அவர்கள் விரும்பிய இடங்களிலேயே இந்தத் திட்டத்தை மேற்கொள்ளுவதற்கான சகல வசதிகளும் அரசாங்கத்தால் அவர்களுக்குச் செய்து கொடுக்கப்பட்டது.

வடஅமெரிக்காவில் உள்ள வடமேற்கு பென்சில்வேணியா என்ற இடத்தில் கிறவுண்ட்கொக்  (Groundhog) என்ற பிராணி பனிக்கால உறங்கு நிலையில் இருந்த எழுந்து வரும் தினத்தைப் பெரிதாக விழா எடுத்துக் கொண்டாடுவது வழக்கம். இதன் மூலம் பனிக்காலம் நிறைவுபெற இன்னமும் எத்தனை நாட்கள் இருக்கின்றன என்று பாரம்பரிய முறைப்படி கணித்துச் சொல்வதுண்டு. பாரம்பரிய பழக்க, வழக்கங்களில் நம்பிக்கை கொண்ட மக்கள், அந்தத் தினத்தைப் பாரம்பரிய முறைப்படி கொண்டாடி மகிழ்வதுண்டு.

பேராசிரியர் ராம் சின்னவயதில் இருந்தே இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வந்ததால் அவரது சிந்தனை உறங்கு நிலை என்றால் என்ன, எப்படி இந்தப் பிராணிகளால் அதை மேற்கொள்ள முடிகிறது என்பது பற்றி ஆராய்வதாகவே இருந்தது. ராமின் பெற்றோர்கள் இந்தியாவில் இருந்து தொழில் நிமித்தம் வடஅமெரிக்காவில் வந்து குடியேறியவர்கள். ராம் வடஅமெரிக்காவிலே பிறந்து வளர்ந்து கல்வி கற்றாலும், பெற்றோரைப் போல சமுதாயக் கட்டுப்பாடுகளையும், அவர்களது பாரம்பரிய முறைகளையும், பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றையும் பேணிக்காப்பதில் மிகவும் கவனமாக இருந்தார்.

 புலம்பெயர்ந்த மண்ணில் பண்பாடு, கலாச்சாரத்தைப் பேணவேண்டிய கடப்பாடுமட்டுமல்ல, இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு கலாச்சர நிர்ப்பந்தத்தில்தான் அவர் வளர்க்கப்பட்டிருந்தார். இன்றைய சூழலில் புலம் பெயர்ந்த இந்த மண்ணுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் சரிவருமா என்பதில் அவருக்குள் நிறையவே முரண்பாடுகள் இருந்தன.

பனிக்காலங்களில் உறங்குநிலைக்குப் போகும் கரடிகளிடம் இருந்து உறங்கு நிலை  (Hibernating) என்றால் என்ன என்ற பாடத்தை அறிந்து கொள்ள அவர் முற்பட்டார். பனிக் குளிர் காலத்தில் இந்த மிருகங்கள், பறவைகள் எல்லாம் எப்படி உயிர் தப்பிப் பிழைக்கின்றன என்பதைப் பற்றி தனது கலாநிதிப் படிப்பிற்காக ஆராய முற்பட்ட போது, குறிப்பாக பனிப் பிரதேசத்தில் வாழும் கரடிகளைப் பற்றி ஒரு விரிவான ஆராய்ச்சி செய்தார்.

வேடிக்கையாகத் தொடங்கிய அந்த முயற்சி அவருக்குப் பிடித்துப் போகவே பனிக்குளிர் காலத்தில் இந்த மிருகங்களைப்போல, உயிர் தப்பி வாழ்வதற்கு மனிதருக்கு எப்படித் தன்னால் உதவமுடியும் என்று ஆராய்ந்து பார்த்தார். நீண்ட தூரம் பயணம் செய்யும் விண்வெளி பயணிகளுக்கு இந்த உறங்கு நிலைத் திட்டம் பயனளிக்குமா, அவர்கள் உறங்குநிலையில் இருந்தபடி நீண்டதூரம் பயணிக்க முடியுமா? என்ற ஆர்வம் காரணமாக ஏற்பட்ட முயற்சியில்தான் தனது ஆராய்ச்சியை முதலில் தொடங்கினார்.

பொதுவாக கரடிகளின் இருதயம் நிமிடத்திற்கு சுமார் ஐம்பத்தைந்து தடவைகள் துடிப்பதுண்டு. ஆனால் அவை உறங்கு நிலையில் இருக்கும் போது சுமார் பத்துத் தடவைகள் மட்டுமே துடிப்பதை தனது ஆராய்ச்சி மூலம் அவர் அறிந்து கொண்டார். அதுமட்டுமல்ல, அவற்றின் உடம்புச் சூடும் ஐந்து தொடக்கம் ஒன்பது டிகிரி வரை சாதாரண நிலையில் இருப்பதை விட, உறங்கு நிலையில் இருக்கும் போது குறைவாக இருப்பதையும் கவனமாக அவதானித்தார். உறங்குநிலைக் காலத்தில் உடம்பின் தேவைக்காகக் உடம்பில் உள்ள கொழுப்புக் கரைவதால் பதினைந்து தொடக்கம் நாற்பது வீதம் வரையிலான உடற்பாரம் குறைவடையக் கூடிய சந்தர்ப்பமும் உண்டு. இக்காலத்தில் உடம்பின் தேவைக் கேற்ப, தேவைக்கு அதிகமாக உடம்பில் இருக்கும் இந்தக் கொழுப்பே உடம்பின் தேவையைப் பூர்த்தி செய்தது. அதன் மூலம் உணவுத் தேவை கட்டுப் படுத்தப்பட்டது.

இப்படியாகப் பலவிதமான ஆராய்ச்சிகளும் செய்து பார்த்த போது, அதன் பலனாகக் கிடைத்த முடிவுதான் இன்றைய மனிதரின் உறங்கு நிலை முயற்சியாகும். ஒரு ஊசி மூலம் குறிக்கப்பட்ட அளவு மருந்தை மனித உடம்பில் செலுத்துவதன் மூலம் மனிதரையும் உறங்கு நிலையில் வைக்க முடியும் என்பதைத் தனது கடினமான ஆராய்ச்சி மூலம் அவர் கண்டறிந்தார். மருந்தின் அளவைப் பொறுத்து உறங்கு நிலைக் காலத்தை குறைக்கவோ அல்லது கூட்டவோ முடியும் என்பதையும் நிரூபித்துக் காட்டினார். மிக அவதானத்தோடு, தகுந்த முறையில் இதைச் செயற்படுத்தினால், மனிதனையும் உறங்குநிலையில் வைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருந்தார்.

இதன் மூலம் அறிவியலில் பெரியதொரு சாதனையைப் படைத்திருந்தார். பனி வீழ்ச்சியால் பாதிக்கப்படும் நாடுகள் இவரது கண்டுபிடிப்பைப் பாராட்டி, ஆதரவு கொடுத்து வரவேற்றிருந்தன. சென்ற வருடம் பரிட்சார்த்தமாக உறங்கு நிலைத்திட்டம் குறிப்பிட்ட ஒரு பகுதியில் அறிமுகப் படுத்தப்பட்ட போது அந்தத் திட்டம் வெற்றி பெறவேண்டும் என்ற ஆவலில் மிகவும் கடுமையாகப் பேராசிரியர் உழைத்தார். அந்தப் பரபரப்பில் நேரம் ஓடிப்போனதே அவருக்குத் தெரியவில்லை.

 அவருடைய முக்கிய உதவியாளர்களான மைக்கேலும் யூலியும் அந்தத் திட்டம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக அவருடன் சேர்ந்து இரவு பகல் பாராது கடுமையாக உழைத்தார்கள். யூலியின் தனியறை அவரது அறைக்கு எதிர்த்தாப் போலவே இருந்தது. அவள் அழகானவளாகவும், எல்லோரோடும் சகஜமாகப் பழகக்கூடியவளாகவும், துள்ளும் இளமைத் துடிப்புள்ளவளாகவும் இருந்தாள்.

அவர்களைப் போலவே பல உதவியாளர்களும் தங்கள் குடும்பத்தையே மறந்து இந்தத் திட்டம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக அங்கே தங்கியிருந்து சிறந்த முறையில் அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் பாடுபட்டார்கள். ஆனால் இந்த வருடமும் அதே திட்டத்தை மேலும் விரிவாக அறிமுகப்படுத்திய போது, எல்லாமே திட்டமிட்டபடி வழமைபோல சீராக நடந்ததால் பேராசிரியருக்கு ஓய்வு நேரம் நிறையவே கிடைத்தது.

மனித மனங்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப அவ்வப்போது மாறிக் கொள்வது போல, என்னதான் அறிவியல் முன்னேறினாலும், இப்படியான பாரிய திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும் போது, ஆங்காங்கே சில குறைகளும் இருக்கத்தான் செய்யும். உறங்கு நிலைத் திட்டம் நடைமுறையில் இருந்தபோது, கட்டுப்பாட்டு நிலையத்தில்தான் ராம் தங்கியிருந்தார். அப்படித் தங்கியிருந்தபோது, தனிமையின் பாதிப்பு அவரை வாட்டத் தொடங்கியது. பாதிப்பின் தாக்கத்தை அவர் உணர்ந்ததால், இப்படியான உறங்கு நிலைத் திட்டத்தைத் தான் அறிமுகப் படுத்தியிருக்கக் கூடாதோ என்றுகூட சில சமயங்களில் சிந்தித்தார். மனசு எதற்கோ ஏங்கிக் தவித்தபோது, இயற்கையின் நியதியில் இருந்து தப்பிப்பது அவ்வளவு சுலபமல்ல என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உணர்ந்தார்.

தனிமையில் நான்கு மாதங்கள் காத்திருப்பது என்பதும் அவருக்கு நீண்ட காலம் போலத் தெரிந்தது. அவ்வப்போது அவரது மனம் வேண்டாத நினைவுகளால் அங்குமிங்கும் அலை பாய்ந்தது கொண்டிருந்தது. வேலை, வேலை என்று குடும்பத்தைப் பிரிந்திருப்பவர்கள் இப்படித்தான் தவிப்பார்களோ என்று நினைத்துப் பார்த்தார். போதாக் குறைக்கு ஓய்வு நேரங்களில் உதவியாளர்களான மைக்கேலும் யூலியும் கதைத்துச் சிரித்துப் பேசுவதையும், அவர்கள் ஜாலியாக இருப்பதையும் ஜாடைமாடையாகக் கவனிக்கவும் செய்தார். வேண்டாத கற்பனையில் மூழ்கிப்போன இவரது மனமோ எதையோ எல்லாம் நினைத்துச் சஞ்சலப்பட்டது.

இயற்கையின் தேவைகளைக் கட்டுப்பட மறுத்த மனதைத் திசைதிருப்பி, உறங்கு நிலையில் இருக்கும் இளம் மனைவியைப் பற்றிய இனிய நினைவுகளில் மூழ்கிப் போக நினைத்தார். அதுவும் ஏமாற்றத்திலேயே முடிந்தது. 

‘கள் குடித்தால்தான் வெறிக்கும் காமமோ நினைத்தாலே வெறிக்கும்’ என்பது போல, அந்தத் தேடலின் வெறுமையில் திருப்திப்படாத மனமோ மீண்டும் எதற்கோ ஏங்கித் தவிக்கத் தொடங்கியது. இயற்கையின் தேவைகளைச் சரிவரப் பூர்த்தி செய்யாமல், உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு உறங்கு நிலைக் காலம் முடியும் வரை சாதாரண மனிதனால் தாக்குப் பிடிக்க முடியுமா, என்ற கேள்வியும் அவரிடம் எழுந்தது. என்னதான் படித்திருந்தாலும், பலமும் பலவீனமும் ஒன்றாய்ச் சேர்ந்தவன்தானே மனிதன் என்று தனக்குத் தானே சமாதானப் படுத்திப் பார்த்தார்.

இயற்கையின் தேவைகளைத் தள்ளிப் போடலாம், ஆனால் அவை தவிர்க்க முடியாதவையே என்பதை அவரது தனிமையின் தவிப்பிலிருந்தே அவர் பாடம் கற்றுக் கொண்டார். பல தடவை தூங்குவதற்கு முயற்சி செய்தும், தூக்கம் வராமல் போகவே எழுந்து அறைக் கதவைத் திறந்து நடைபாதை வாசலில் நின்று எட்டிப் பார்த்தார். பார்வையைப் படரவிட்ட போது, எதிர்ப்பக்கத்தில் இருந்த யூலியின் அறைக்கதவு ஏனோ சிறிதளவு திறந்து வைத்தபடி இருப்பதும், அந்த அறையின் விளக்கு வெளிச்சம் கதவிடுக்கில் நீண்டு உள்ளக நடைபாதையின் குறுக்கே மெல்லிய கோடாய்ப் படர்ந்து கிடப்பதும் அவர் பார்வையில் பதிந்து கிளுகிளுப்பூட்டியது.

யூலியின் அறை வாசமாய் இருக்கலாம், வரையறுக்க முடியாத ஏதோ ஒரு வாசம் சுவாசத்தில் கலந்ததுபோல, அவரது தனிமையின் ஏக்கத்திற்கு உரமூட்டி, உடம்பில் முறுக்கேற்றி அவரை ஒரு கணம் சஞ்சலப்பட வைத்தது. நிசப்தமான அந்த இரவில் அதையும் தாண்டி, மங்கிய வெளிச்சத்தில், எப்படியோ உள்ளே நுழைந்துவிட்ட விட்டில் பூச்சி ஒன்று உள்ளக நடைபாதை ஒளிக்கீற்றில் முட்டி மோதிக் கொண்டிருப்பது அவரது கண்ணில் பட்டது.

என்னதான் மனதைக் கட்டுப்படுத்தினாலும், மீண்டும் அவரது பார்வை முட்டி மோதும் அந்த விட்டில் பூச்சியில் தான் வந்து பதிந்தது. வேண்டாத சிந்தனைகளைத் திசை திருப்ப அவர் முனைந்தாலும், அவருக்குள் ஏற்பட்ட அந்த உணர்வுகளை அவரால் தவிர்க்க முடியாமல் போனது. மதில் மேல் பூனைபோல தாவித்தவித்த பொல்லாத மனசோ, விட்டில் பூச்சியை ஓரம்கட்டி விட்டுத் தன்னிச்சையாக எதிர்ப்பக்க வாசற்கதவில் ஆக்ரோஷமாய் முட்டிதியது.

இப்போ எதிர்பக்க கதவு முற்றாகச் சாத்தப்பட்டதில் உள்ளக நடைபாதையில் நீண்டு கிடந்த ஒளிக்கீற்று தேய்ந்து மறைந்து போயிருந்தது. பின்னிரவின் நிசப்தத்தின் பாதிப்பு அவரையும் அரவணைத்துக் கொண்டதில் உடம்பு சோர்ந்து போய்க்கிடந்தது. அணைத்திருந்த யூலியின் கையை மெதுவாக விலத்திவிட்டு, அதிகாலைத் தூக்க கலக்கத்தோடு எழுந்து நடைபாதையைக் கடந்து திரும்பித் தனது அறைக்கு வந்த போது, இரவு முழுவதும் ஆக்ரோஷமாய் முட்டி மோதிக் கொண்டிருந்த அந்த விட்டில் பூச்சி சிறகொடிந்த நிலையில் தரையில் வீழ்ந்து கிடப்பது அவர் கண்ணில் பட்டது.

(சதிவிரதன் என்ற தலைப்பு ஆசிரியர் குரு அரவிந்தன் அவர்களால் தேவைகருதிப் புதிதாக உருவாக்கப்பட்ட சொல்லாகும். ஏற்கனவே பாவனையில் இருக்கும் ‘பதிவிரதை’ என்ற சொல்லின் எதிப்பாலான இந்தச் சொல் விரைவில் தமிழ் அகராதியில் இடம் பெற இருக்கின்றது.)

Print Friendly, PDF & Email

1 thought on “சதிவிரதன்

  1. சதிவிரதன் என்ற சொல் தமிழுக்குப் புதிய சொல், அதை உருவாக்கிய ஆசிரியர் தமிழ் வளர்க்கும் குரு அரவிந்தனுக்குப் பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *