சட்டத்தால் ஆகாதது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 5, 2024
பார்வையிட்டோர்: 270 
 
 

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கள்ளக் கோழி பிடிப்பவன், கஞ்சா விற்ப வன், கள்ளச் சாராயம் காய்ச்சுபவன், எப்போதா வது நிகழும் ஒரு கொலையைச் செய்தவன் ஆகியோரைத்தான் ஒரு காலத்தில் பொலிஸார் கையாண்டனர். 

பின்னர் ஒரு வீட்டுக்குள் எந்த நேரத்தி லும் ஒரு பொலிஸ் படையே புகுந்து கிண்டிக் லும் ஒரு கிளறிப் பார்க்கவும் வரிசையில் நிறுத்தி விசாரிக்க வும் அதிகாரம் வந்தது. 

பொலிஸ் நிலையத்துக்குச் செல்வதைப் போல் எரிச்சல் பிடித்த காரியம் எதுவும் இல்லை. நாட்டின் தென் பகுதியில் வீட்டுக்கு யார் புதிதாக வந்து தங்கினாலும் பொலிஸுக்குச் சொல்லி விட வேண்டும். சொந்த வீட்டில் குடியிருப்பவன், வாட கைக்கு வீட்டைப் பெறுபவன், வாடகைக்குக் கொடுப்பவன் எல்லோருமே பொலிஸில் பதிவு செய்ய வேண்டி வந்தது. 

அவனும் வேறு வழியில்லையாதலால் அதிகப்படியான எரிச்சலுடன்தான் பொலிஸுக்குக் கிளம்பினான். 

புதிதாக வீட்டு வேலைக்கு வந்த பெண்ணைப் பொலீஸில் பதிவு செய்யவேண்டியிருந்தது. முதலில் ஒரு விண்ணப்பப் படிவத்தைப் பெற வேண்டும். பிறகு அதைப் பூர்த்தி செய்து வேலைக்காரப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு போய் வரிசையில் நின்று உரியவரின் புகைப் படத்துடன் பதிந்து கொள்ள வேண்டும். 

வேலைக்காரப் பெண் வீட்டுக்கு வந்த இரண்டாம் நாளே பொலிஸ் படை வந்து வீட்டுக்குள் புகுந்தது. நல்ல வேளையாக அவன் வீட்டில் இருந்தான். வேலைக்காரப் பெண் இன்றைக்குத்தான் வந்தாள் என்று சொல்லி ஒருவாறு சமாளித்து விட்டான். சோதனைக்காக வந்த பொலிஸ் படை அவன் வசிக்கும் பிரதேசத்துக்குரியது அல்ல. அவ்வப் போது எல்லா நிலையங்களிலிருந்தும் சிலரைப் பிடித்து இராணுவத்துடன் சேர்த்துச் சோதனைக்காக அனுப்பி விடுவார்கள். வந்தவர்களுக்கு ஒரு சின்னச் சந்தேகம் இருந்தால் போதும். அள்ளிக் கொண்டு போய் விடுவார் கள். அவர்களுக்கேற்படும் சந்தேகம் சில வேளை நியாய முரணாகவும் இருக்கலாம். அக்குழுவில் உள்ள ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் மன நிலை கூட அதைத் தீர்மானிக்கலாம். 

இந்த விண்ணப்பத்தைப் பெறுவதற்காக எத்தனை முறை அலைய வேண்டியிருக்குமோ என்ற சந்தேகத்துடன்தான் அவன் கிளம்பி னான். ஒரே எத்தனத்தில் விண்ணப்பம் கிடைத்து விட வேண்டும் என்று மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டான். போன வருஷம் திருட்டுப் போன சைக்கிளால் பட்ட அவஸ்தையைப் போல இருந்து விடக் கூடாது என்று நினைத்தான். அந்த சைக்கிளும் சம்பவமும் ஞாபகம் வரும் போதெல்லாம் அந்த ஏழைச் சிறுவனின் குழந்தை முகம் மனதைச் சஞ்சலப்படுத்திக் கொண்டேயிருந்தது. 


அது மிக நெருக்கமான குடியிருப்புப் பிரதேசம் மட்டுமல்ல, பெருங் ‘குடி’மக்கள் நிறைந்த பிரதேசமுங்கூட. காலையிலேயே மூன்று கால்களில் நடந்து செல்லும் மனிதர்களை அப்பகுதியில் சர்வ சாதாரண மாகக் காண முடியும். பிரதான வீதியிலிருந்து இறங்கிப் பத்து யார் குறுக்கு வீதியில் வந்து இடது புறமாகத் திரும்பியதும் இருக்கும் இரண்டாவது வீட்டில்தான் அவன் வாடகைக்குக் குடியிருந்தான். 

அது ஒரு மாடி வீடு. மேல் வீட்டில் ஏதோ ஒரு தொண்டு நிறுவனம் செயற்பட்டு வந்தது. காலை கடமைக்கு வரும் ஊழியர்கள் பிற்பகலில் கடமை முடிந்து சென்று விடுவார்கள். கீழ்த் தளத்தில் இவன் குடியிருந்தான். இரண்டு வீடுகள் என்ற படியால் கீழ்ப் பகுதியில் குடியிருப் பவர்களுக்கு வலது புறமும் மேல் மாடிக்காரர்களுக்கு இடது புறமும் நுழைவாயில்கள் இருந்தன. 

ஒரு நாள் காலையில் காரியாலயத்துக்குச் செல்வதற்காகக் குளித்து விட்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்த போது அரக்கப்பரக்க வந்த அவன் மனைவி சொன்னாள்:- 

“தெரியுமா… சின்னவனின் சைக்கிளைக் காணவில்லை!” என்றவள் தொடர்ந்தாள்.. 

“மேல வேல செய்யுற பியோன் பொடியன்ட சைக்கிளையும் காணல்லயாம்! அவன் சொன்னத்துக்குப் பொறகுதான் பார்த்தன்… சின்னவன்ட சைக்கிளயும் காணல்ல…” 

அப்போதுதான் குளித்து வெளியேறிய அவனது உடம்பில் சற்றுச் சூடேற ஆரம்பித்தது. மேலே உள்ள காரியாலயப் பையனை அழைத்தான். 

“நீ நேற்று உனது சைக்கிளைக் கொண்டு போகல்லியா…?”

“இல்ல சேர்… நேற்று இங்கேயிருக்கிற அக்கா வீட்டில்  தங்கினேன்.” 

“இப்போ என்ன செய்யிறது…. பொலீஸுக்குச் சொல்லுறதா…?”

“போகணும் சேர்..!” 

“அப்பிடியென்றால்… எங்கள் வீட்டிலும் களவு போனதைச் சொல்லு… அதோட வீட்டுச் சொந்தக் காரருக்கும் ஒரு கோல் போட்டுடு!” 

“சரி சேர்!” 

அதன் பிறகு இரண்டு சைக்கிள்களையும் எப்படித் தூக்கிச் சென்றிருப்பார்கள் என்று எல்லோரும் ஆளுக்கொரு கருத்தைச் சொன்னார்கள். மேல் காரியாலயத்தில் இருந்தவர்கள், முன் வீட்டில்  இருந்தவர்கள், அவன், பெரிய சைக்கிளைத் திருட்டுக் கொடுத்த சிற்றூழியன் எல்லோரும் ஆய்வுகளை மேற்கொண்ட பின் வாயிற் கதவு கள் பூட்டுக்கள் போட்டு மூடப்படுவதால் மதிலோடு இணைந்த படிகளின் மூலமாகத் தூக்கி எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆகக் குறைந்தது இருவர் அதில் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் முடிவுக்கு வந்தார்கள். 

இரவு இரண்டு மணிக்கும் அதிகாலை நான்கு மணிக்குமிடையில் அவை திருடப்பட்டிருக்கலாம் என்று அவன் யூகித்தான். இரவு பன்னி ரண்டு மணிக்கும் ஒரு மணிக்குமிடையில் ஒரு வாகனம் வந்து அவனது வீட்டுத் தெருவில் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் தரித்துச் செல்வதை அவன் அறிவான். அந்த வாகனத்தில் கசிப்போ, ஹெரோயினோ கூட பரிமாறப்படலாம் என்பதால் அவன் அதைப்படுத்தியதில்லை. அதன் பிறகே இக்களவு இடம்பெற்றிருக்க வேண்டும் என்று அவன் நேரங் கணித்தான். இனி எதைக் கணித்து என்ன செய்வது? களவு போய்விட்டது! 

இனிமேல்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அவன் மனம் சொன்னது. இதை அப்படியே விடக் கூடாது. விட்டால் நாளை வீட்டுக்குள்ளும் தைரியமாக நுழைவார்கள் என்று அவனுக்குள் ஓர் எச்சரிக்கை மணி அடித்தது. செய்ய வேண்டும்..! ஏதாவது செய்ய வேண்டும்! 

அவனது சின்ன மகன் ஆசையோடு கேட்ட சிறிய சைக்கிள் அது. வாங்கி ஒரு வருடம் கூட முழுமையாக நிறையவில்லை. அதில் அவனது மகன் ஏறி ஓடிக்கொண்டே சென்று இறங்கும் தறுவாயில் சைக்கிளிலிருந்து பாய்ந்து இறங்கி விட்டுச் சைக்கிளை அப்படியே விட்டு விடுவான். அது தன்பாட்டுக்குச் சென்று மரத்திலோ மதிலிலோ முட்டிக் கீழே சரியும். அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனது மகன் ஒரு நாள் அப்படிச் செய்ததைக் கண்டித்துச் சொன்னான். 

“இதை நீ இப்படி உடைத்தால் இன்னொன்று வாங்கித் தரவே மாட்டேன்…!” 

ஆனால் அவ்வழக்கத்தை அவன் கைவிடவில்லையென்று சில மாதங்கள் சென்ற பின் சைக்கிளை உன்னிப்பாகப் பார்த்ததும் புரிந்து கொண்டான். அந்தச் சைக்கிளில் உள்ள சிறிய பாகங்கள் காணாமல் போயிருந்தன. சைக்கிளை மிதித்து ஓடுவதற்குரிய பாகங்கள் மட்டும் அதில் எஞ்சியிருந்தன. புதிய வீட்டுக்குச் செல்வதற்குள் அதைச் சரிப் பண்ணிக் கொடுக்குமாறு மனைவி சிபார்சு செய்தாள். எனவே தனது சாரதி மூலமாக அந்தச் சைக்கிளைத் திருத்தி மெருகு படுத்தினான். புதிய வீட்டின் தெருக் கள் ஆபத்தானவை என்பதால் அவனுடையவோ அல்லது அவனது னைவியினதோ கண்காணிப்பின் கீழ் மட்டும் சின்ன மகன் சைக்கிள் ஓட்டினான். சாரதிக்கு நேரம் கிடைத்தால் பிற்பகலில் பக்கத்திலுள்ள விளையாட்டு மைதானத்துக்குச் சின்ன மகனை சைக்கிள் ஓடுவதற்காக அனுப்பி வைப்பான். 

பிள்ளைகளின் பாடசாலைக்கு நெருக்கமாகக் குடியிருந்தால் பலதுக்கும் வசதியாக இருக்கும் என்று நினைத்த அவன் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டான். 

வீட்டுச் சொந்தக்காரர் ஓர் அமைதியான, நல்ல மனிதராயிருந்தார். நியாயமான தொகைக்கான வாடகை இணக்கப்பாட்டுடன் இரண்டு வருடங்களுக்கு வீட்டை வாடகைக்குப் பெற்றான். அச்சுறுத்தும் சூழல் இல்லை என்று அவரும் வாக்களித்திருந்தார். வீட்டுக்கு முன்னால் தெரு ஓரத்தே கௌதம புத்தரின் சாந்தமே வடிவான மோனத் தவச் சிலை. ஆனால் நான்காவது மாதம் களவு நடந்து விட்டது! 

காரியாலயத்துக்குச் சென்றதும் வீட்டுரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தான். ஆனால் அந்தத் தகவல் அவன் சொல்லு முன்பே அவருக்குக் கிடைத்திருந்தது. திருடர்களைப் பிடிப்பதற்கான ஏற்பாடுகளை அவர் செய்திருப்பதாகச் சொன்னார். களவு நடந்த வீட்டில் அவர் நீண்ட காலம் குடியிருந்தவர் என்பதால் அப்பகுதியில் எல்லோரையும் அறிந்திருந்தார். 

களவு நடந்து இரண்டாம் நாள் இரவு ஏழரை மணிக்கு வீட்டுக்கு வந்த அவனுக்கு மனைவி சொன்ன தகவல் ஆச்சரியமளித்தது. பிற்பகல் ஆறு மணிபோல் வந்த ஓர் இளைஞன் ‘சைக்கிளைத் திருடியவரைத் தனக்குத் தெரியும் எனவும் தன்னால் காட்டித்தர முடியும் எனவும் பகரமாகத் தனக்குப் பணம் தரவேண்டும்’ என்றும் அவன் சொல்லியிருந்தான். 

விடயம் பொலீஸுக்குப் போய் விட்டதால் நம்மால் அதில் தலையிட முடியாது என்று மனைவிக்குச் சொன்ன அவன் அந்த இளைஞன் மீண்டும் வந்தால் அவ்வாறே சொல்லும் படியும் சொன்னான்.

வீட்டு வாயிலுக்கு எதிர்ப்புறம் உள்ள பெட்டிக்கடைப் பெண் மணியிடமும் அதே இளைஞன் அதற்கு அடுத்த தினம் இதே தகவலைச் சொல்லியிருந்தான். இதை அறிந்தவுடன் இவனுக்கு அந்த இளைஞன் மீது சந்தேகம் தட்ட ஆரம்பித்து. 

பெட்டிக் கடைப் பெண்மணியிடம் இவன் அந்த இளைஞனைப் பற்றி விசாரித்த போது அந்த இளைஞன் போதைப் பொருளுக்கு அடிமை யானவன் என்று தெரிய வந்தது. அன்றிரவே வீட்டு உரிமையாளரை அதே இளைஞன் சந்தித்து இதே விபரத்தைச் சொல்லியிருந்தான். வீட்டு உரிமையாளர் அந்த இளைஞனுக்குப் பணம் கொடுக்கும் படி அவனைக் கேட்டுக் கொண்டார். சைக்கிள் கைக்குக் கிடைக்காமல் தன்னால் யாருக் கும் பணம் கொடுக்க முடியாது என்று அவன் தீர்க்கமாகச் சொல்லி விட்டான். 

அந்தச் சைக்கிள்களைத் திருடியவர்களுள் அந்த இளைஞனும் ஒருவனாக இருக்க வேண்டும். பாகப் பிரிவினையின் போது திருட்டில் ஈடுபட்ட இருக்குவருக்குமிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. எனவேதான் சைக்கிள் எடுத்தவனைக் காட்டிக் கொடுக்க அந்த இளை ஞன் அவதிப்படுகிறான் என்பது அவனுக்குப் புரிந்தது. சகாவிடம் கிடைக் காத பணத்தை அவனைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் தன்னிடம் பெற்றுக் கொள்ள அவன் முனைகிறான் என்பது தெளிவாகத் தெரிந்தது. அதாவது அவன் ஒரு கல்லில் இரண்டு மாங்காயக்களை அடிக்க விரும்பு கிறான். அந்த இளைஞன் மீது அவனுக்குக் கோபம் ஏற்பட்டது. 

தனது வீட்டில் திருட்டுப் போனது வீட்டுச் சொந்தக்காரருக்கு ஒரு மனக்குறையை உண்டுபண்ணியிருந்தது. திருட்டு விபரம் வெளியில் வந்தால் அவரது வீட்டுக்கு யாரும் வாடகைக்கு வர மாட்டார்கள் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அந்த இளைஞனிடம் தகவல் பெற்ற அவர் அன்றிரவே பொலிஸ் நிலையத்துக்குச் சென்று விட்டிருந்தார். தகவலைச் சொல்ல சைக்கிளை வாங்கியவரை உடனேயே பொலீஸ் அள்ளிக் கொண்டு சென்றது. 

இரவு ஒன்பது மணியளவில் வீட்டுரிமையாளர் பொலீஸுக்கு வருமாறு அவனுக்கு அழைப்பு விடுத்தார். பொலிஸ் நிலையத்தை அடைந்த போது அங்கே ஒரு பெரும்படை நின்றிருந்தது. சைக்கிளை வாங்கிய ஒரு தம்பதி ஒரு சிறு பையனுடன் வந்திருந்தது. அவர்களது அயல் வீட்டைச் சேர்ந்த இருவர் அவர்களுடன் வந்திருந்தார்கள். சைக்கிளை அவர்களிடம் விற்றதாகத் தெரிவித்த அதாவது களவெடுத்த நபரின் தாயையும் தந்தையயும் சேர்த்து பொலிஸ் கொண்டு வந்திருந்தது. நல்ல வேளை இவர்களைக் கொண்டு வர பொலிஸார் ஜீப்பைக் கொண்டு போயிருந்தார்கள். பொலிஸ் ட்ரக் வாகனத்தைக் கொண்டு போயிருந்தால் அந்த ஏரியாவில் இன்னும் பலரும் தானும் மனைவி மற்றும் மகனும் கூட ஏற்றி வரப்பட்டிருக்கலாம் என்று நினைத்தான். 

களவெடுத்த இரண்டு நபர்களும் உரிய இடத்தில் இல்லை. பொலிஸ் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. சைக்கிளை வாங்கிய நபர் தாழ்மையுடன் தான் ஆயிரம் ரூபாய் கொடுத்து அந்தச் சைக்கிளை வாங்கியதாகப் பதிலிறுத்துக் கொண்டிருந்தார். ஓர் அப்பாவி போல் அவரது தோற்றம் இருந்தது. அவரது மனைவி ‘அது திருட்டுச் சைக்கிள் என்பது தெரியாது’ என்று பொலீஸூக்குச் சற்று உரத்த குரலில் சேரிப் பாஷையில் சொல்லிக் கொண்டிருந்தாள். 

பொலீஸ்காரர் அவளை வாயை மூடும் படி பலமுறை உரத்த தொனியில் சத்தமிட்டார். ஒரு முறை கதிரையைத் தள்ளி அவளுக்கு அடிக்கவும் எழுந்தார். எந்தப் பையனுக்காகச் சைக்கிளை வாங்கி னார்களோ அந்தப் பையன் அழுக்குச் சட்டையுடன் அம்மாவின் ஆடை யைப் பிடித்துக் கொண்டு எதுவும் புரியாமல் பரிதாபமாக முழித்துக் கொண்டிருந்தான். 

ஆனால் அவள் மசியவில்லை. விசாரித்த பொலீஸ்காரர் அவளைவதற்காக அவளது கணவ கூண்டுக்குள் போடும்படி ஒரு கான்ஸ்டபிளிடம் உத்தரவிட்டார். ஆனால் கான்ஸ்டபிள் தன்பாட்டில் ஏதோ ஒரு பெரிய லெட்ஜரைப் புரட்டி சாவகாசமாக அவசியமற்ற எதையோ தேடிக் கொண்டிருந்தார். 

சைக்கிளை விற்றவன் – அதாவது திருடியவன் எங்கோ ஓரிடத்தில் இருப்பதாக அவனது பெற்றோர் கூற இரண்டு பொலிஸ்கார்கள் சகிதம் அவனது பெற்றோரை ஏற்றிக் கொண்டு ஒரு பொலிஸ் ஜீப் போனது. சைக்கிளை வாங்கியவரைக் கூண்டுக்குள் போடுமாறு விசாரித்த பொலீஸ்காரர் மீண்டும் உத்தரவிட்டார். அதன் பிறகுதான் அந்தக் கான்ஸ்டபிள் எழுந்தார். 

அந்தப் பெண்ணோ, ‘நான் எதை விற்றாவது வழக்குப் பேசுவேன்’ என்று அங்கு சபதமிட்டாள். ஆனால் அவளதும் அவளது கணவனதும் அவர்களின் பையனதும் ஆடைகளைப் பார்த்தால் விற்ப தற்கு மட்டுமல்ல உண்பதற்கே எதுவுமற்றவர்கள் என்பது அவனுக்குப் புரிந்தது. 

அதுவரை அவன் அங்கு ஒருவனாக நிற்பதை கண்டும் காணாதவாறு விசாரணை நடத்திய பொலிஸ்காரரிடம் நெருங்கினான். வீட்டுச் சொந்தக்காரர் அவனை அவரிடம் அறிமுகப்படுத்தினார். அவன் ‘இந்த சைக்கிள் தனக்கு எப்போது கிடைக்கும்’ என்று கேட்டான். உண்மையில் அது பிழையான கேள்வி என்பது உடனே அவனுக்குப் புரிந்தது. 

திருடன் பிடிக்கப்பட வேண்டும். இந்தச் சிக்கல் நீதிமன்றத்துக்கு வழக்காக எடுத்துச் செல்லப்படுமா அல்லது பொலீஸ் நிலையத்திலேயே தீர்க்கப்படுமா என்ற முடிவு வரவேண்டும். நீதிமன்றத்துக்குப் போகுமா னால் இந்த ஜென்மத்தில் மகனது அந்தச் சைக்கிள் கிடைக்காது. ஏனெனில் விசாரணை முடிய நீண்ட காலம் செல்லும். அதற்குள் அது வெய்யிலிலும் மழையிலும் கிடந்து துருப்பிடித்துப் போகும். பொலிஸ் நிலையத்திலேயே தீர்க்கப்பட்டால் மாத்திரமே அந்தச் சைக்கிள் கிடைக்க வாய்ப்பிருக்கும். அவனை நிமிர்ந்து பார்த்த அவர் மரியாதை கலந்த குரலில் சொன்னார்:- 

“நாளைக்குக் காலையில் வந்து பெரியவரைப் பாருங்கள்! அவர்தான் என்ன செய்வது என்று தீர்மானிப்பார்!” 

அவனும் வீட்டுச் சொந்தக்காரரும் பொலிஸ் நிலையப்படி இறங்கினர். அந்தச் சைக்கிள் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. 

களவுச் சிக்கல் அவிழ்த்து உரியவரைக் கண்டு பிடித்து என்ன செய்வது என்று தீர்மானிப்பதற்குத் தான் அவசியமில்லை என்று அவன் உணர்ந்ததான். அடுத்த அடுத்த தினங்களில் கையாளப்படும் விசாரணைகளுக்குரிய பிரச்சினைகளில் இதுவும் ஒன்றாக இருக்குமென்பது அவனுக் குத் தெரியும். எனவே பொலிஸ் நிலையத் தலைமை அதிகாரியை அவன் அடுத்த தினமே சென்று பார்ப்பதை ஒத்திப் போட்டான். 

ஒரு வாரம் கழிந்தும் இது பற்றிய தகவல் எதுவும் பொலீஸிலி ருந்து கிடைக்காததால் இந்தப் பிரச்சினை நீதிமன்றுக்குச் செல்லவில்லை என்று உணர்ந்தான். நீதி மன்றுக்குச் சென்றால் சாட்சிக்காக பொலிஸார் அழைத்திருப்பார்கள். எனவே ஒரு வாரம் கழிந்து ஒரு நாள் பிற்பகலில் பொலிஸ் நிலையம் சென்றான். அங்கிருந்த ஒவ்வொரு பொலிஸ் உத்தியோகத்தரும் ‘ஏன் வந்தாய்?’ என்று கூடக் கேட்காமல் தன் பாட்டில் தத்தமது வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு உத்தி யோகத்தரிடம் விடயத்தைச் சொன்ன போது, 

“பொறுப்பதிகாரி இப்போது இல்லை. சனிக்கிழமை காலையில் வந்தீர்களானால் கண்டு கதைக்கலாம்” என்று விட்டுத் தனது வேலையைக் கவனிக்கத் தொடங்கினார். 

இருபது சைக்கிள்களுக்கு மேல் பொலிஸ்நிலைய மண்டபத் துக்குள் ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அந்தக் குவியலில் இருந்த இரண்டு சிறிய சைக்கிள்களில் ஒன்று அவனுடைய சின்ன மகனுடையது. 

மீண்டும் சனிக்கிழமை சரியாக ஒன்பது மணிக்கு அடையாளம் காட்டுவதற்காக மகனையும் அழைத்துக் கொண்டு பொலிஸ் நிலையத் துக்குச் சென்றான். உள்ளே சென்றதும் அந்தச் சைக்கிள் கும்பத்தைச் சுட்டிக் காட்டி மகனிடம், 

“உனது சைக்கிள் இருக்கிறதா பார்!” என்றான். 

“…ந்தா இருக்கு!” என்று அதற்குப் பக்கத்தில் ஓடிப் போய் தனது சைக்கிளைத் தொட்டுக் காட்டினான். 

பொலிஸ் நிலையத்துக்கு வருபவர்கள் அமர்ந்திருக்கும் சீமெந்துக் கட்டில் பதினைந்து நிமிடங்கள் அமர்ந்திருந்தான். பொறுமை இழந்து ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தரிடம் விடயத்தைச் சொன்ன போது, 

“ஐயா இன்னும் வரவில்லை…” என்று சொன்னவள் மற்றொரு கான்ஸ்டபிளைப் பார்த்து, 

“ஆ… சுமண பால, பெரிய ஐயா இன்று வருவாரா?” 

என்று கேட்டாள். அவனோ தனக்குத் தெரியாது என்று உதட்டைப் பிதுக்கிக் காட்டிவிட்டுச் சென்றான். அவள் என்னைப் பார்த்துத் தொடர்ந்தாள்:- 

“ஐயா ட்ரபிக் சுப்பர்வைஸ் பண்ணப் போயிருக்கிறா…வருவாரா இல்லையா என்று என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை” என்று உண்மையான ஆதங்கத்துடன் சொன்னாள். 

மனச் சோர்வுடன் மகனை அழைத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்தான். முன்னால் அமைந்திருந்த விசாலமான நிலப் பரப்புள் கம்பீரமாக நின்றிருந்த மரமொன்றின் நிழலில் அரை மணிநேரம் பொலிஸ் நிலைய அதிகாரிக்காகக் காத்திருந்தான். அதிகாரி வரவில்லை. 

உண்மையில் அந்தப் பொலிஸ் நிலையம் அமைந்திருக்கும் பிரதேசம் பல்வேறு சிக்கல்களைக் கொண்டது. கசிப்பு, ஹெரோயின் பாவனை, திருட்டு, அவ்வப்போது கொலை என்று பல்வேறு குற்றச் செயல்கள் நடக்கும் பிரதேசம். உண்மையில் பொலிஸ் நிலைய அதிகாரிக் கும் அதிக வேலைப் பழு இருக்கலாம் என்று சமாதானம் சொல்லிக் கொண்டான். தோல்வியுடன் வீடு திரும்பினான். 

இரண்டு வாரங்களில் வரவிருக்கும் தனது பிறந்த நாளை சின்ன மகன் அடிக்கடி ஞாபகமூட்டினான். அந்த ஞாபகமூட்டலை ஒரு புதிய சைக்கிளாக மனைவி வியாக்கியானப்படுத்தினாள். பிறந்த நாளுக்கு முன்னர் கடைசியாக ஒரு முறை பொலிஸுக்குச் சென்று பார்த்து விடலாம் என்று அவன் நினைத்தான். 

ஒரு வாரம் கழிந்த நிலையில் பொலிஸ் நிலையத்தினுள் நுழையும் போது திருட்டுப் போன சைக்கிள்களின் விசாரணை நடந்த இரவுக் காட்சி ஞாபகத்தில் வந்தது… குறிப்பாக அழுக்குடையில் அந்த ஏழைச் சிறுவனின் குழந்தை முகம்! நடப்பது ஏதுமறியாமல் பொலிஸ்காரருக்கு எதிரே தனது கிழிந்த வாயால் பதில் சொல்லிக் கொண்டிருந்த அம்மாவின் ஆடையை அவன் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்த காட்சி! 

அவன் உள்ளே நுழைந்ததும் ஒரு ரிசர்வ் பொலிஸ் இளைஞன்,

“என்ன மஹத்தயா?” என்று கேட்டான். 

‘அட! இன்றைக்காவது ஏன் வந்திருக்கிறேன் என்று கேட்கிறார்களே…’ மகிழ்ச்சியாக இருந்தது அவனுக்கு. 

சைக்கிள் கிடைத்து விடும் என்று நம்பிக்கை மீண்டும் துளிர் உசைக்கிள் கிடைத்து விட்டது. அந்த மகிழ்ச்சியோடு புன்முறுவலுடன் விடயத்தைச் சொன்னான். “பெரிய ஐயா லீவில் இருக்கிறார். அவர் சொன்னால்தான் எதுவும் செய்யலாம்” என்றான். 

அவன் முகவாட்டத்தையோ ஏமாற்றத்தை காட்டிக் கொள்ளவில்லை. இந்தச் சைக்கிளை எடுப்பதற்கு இனிமேல் வருவதில்லை என்று தீர்மானித்த படி வெளியேறினான். 

அன்றே மகனுக்கு ஒரு புதிய சைக்கிளை வாங்கிக் கொடுத்தான். களவு போன சைக்கிளை அத்துடன் மறந்தாக வேண்டியிருந்தது. மறந்தும் விட்டான். 


“ஆட்களைப் பதியும் விண்ணப்பம் சனிக்கிழமை மட்டும்தான் விநியோகிக்கப்படும்.” 

“அது காலைல 9.00 மணி வரைக்கும்தான் கொடுப்போம்.” “விண்ணப்பம் வழங்கும் உத்தியோகத்தர் இன்றைக்கு லீவு. நாளைக்கு வாருங்கள்” 

போன்ற பதில்கள் பொலிஸ் நிலையத்தில் கிடைக்கக் கூடாது என்ற பிரார்த்தனையோடு பொலிஸ் நிலையப்படிகளில் கால் வைத்தான். ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றொரு பெண்ணின் வாக்குமூலம் எழுதிக் கொண்டிருந்தாள். 

இன்னொரு மேசையில் அமர்ந்திருந்த ஓர் இளவயதுக் பொலிஸ் உத்தியோகத்தன் அவனை ‘என்ன?’ என்ற கேள்விப் பார்வையால் நோக்கினான். விடயத்தைச் சொன்ன போது அமரச் சொல்லி விட்டு விண்ணப்பப் படிவம் தேட ஆரம்பித்தான். 

இரண்டு முறை முன்னாலிருந்த கோப்புக்களைக் கிளறிவிட்டு இரண்டு லாச்சிகளையும் இழுத்துத் தேடினான். பின்னர் மீண்டும் அதே கோப்புக்களைப் புரட்ட ஆரம்பித்தான். இதைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்த அவனுக்கு இன்று விண்ணப்பம் கிடைக்கப் போவதில்லை என்று தோன்றியது. 

பிறகு எழுந்து உள்ளே சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்து யோசனையுடன் அதே கோப்புக்களைக் கிளறினான். அப்பாடா… ஒரு விண்ணப்பத் தாள் அவன் கரங்களுக்குச் சிக்கியது. அதை அவனிடம் தந்து விபரம் சொன்னான். விண்ணப்பம் கிடைத்த மகிழ்ச்சியோடு திரும்பிய அவனுக்கு சைக்கிள் ஞாபகம் வந்தது. அது இருந்த இடத்தைத் திரும்பிப் பார்த்தான். திக் கென்றது. அந்த இடம் காலியாக இருந்தது. இருபதுக்கும் மேற்பட்ட சைக்கிள்கள் இருந்த அந்த இடம் துடைத்து விட்டாற் போல் சுத்தமாக இருந்தது. 

விண்ணப்பத்துடன் நிலையத்திலிருந்து வெளியேறி பொலிஸ் நிலையப் பகுதி முழுவதையும் பார்வையால் அலசினான். இல்லை! ஒரு சைக்கிள் கூட பார்வைக்குப் படவில்லை! 

வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது அந்த ஏழைப் பையனின் முகம் ஞாபகம் வந்தது. அழுக்கு நிறைந்த அலங்கோல ஆடை யுடன் அம்மாவின் ஆடையைப் பிடித்தபடி மலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்த அந்தச் சிறுவனின் அப்பாவி முகம். 

அந்தச் சைக்கிள் எங்கோ ஓரிடத்தில் கொண்டு சென்று போடப் பட்டிருக்கலாம். இப்போது வெய்யிலிலும் மழையிலும் கிடந்து துருப் பிடிக்கத் தொடங்கியிருக்கும். அல்லது யாராவது ஒரு பொலிஸ் அதிகாரியின் பையனோ உறவினர் பையனோ ஓடி மகிழவும் கூடும். 

இந்த விடயம் பொலிஸுக்குச் செல்லாமலிருந்தால் ஆயிரம் ரூபாவுக்குத் தந்தையார் வாங்கித் தந்த சைக்கிளை அந்த ஏழைச் சிறுவன் ஓடி மகிழ்ந்திருப்பான் என்பதை நினைக்க மனசு வலித்தது! 

– 01.09.09

– விரல்களற்றவனின் பிரார்த்தனை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜனவரி 2013, யாத்ரா வெளியீட்டகம், வத்தளை.

நூலாசிரியரின் பிற நூல்கள் கவிதை காணாமல் போனவர்கள் - 1999 உன்னை வாசிக்கும் எழுத்து - 2007 (மொழிபெயர்ப்பு) என்னைத் தீயில் எறிந்தவள் - 2008 (அரச சாஹித்திய தேசிய விருது பெற்றது) சிறுவர் இலக்கியம் புள்ளி - 2007 கறுக்கு மொறுக்கு - முறுக்கு - 2009 புல்லுக்கு அலைந்த மில்லா - 2009 ஏனையவை தீர்க்க வர்ணம் - 2009 (பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *