சங்கிலிப் பூதத்தான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 6, 2024
பார்வையிட்டோர்: 703 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பெயர் சங்கிலிப் பூதத்தான் என்றாலும் அழைப்பது சங்கிலிப் பூவத்தான் எனும் மருவிய வழியில்தான். நீங்கள் எண்ணுவதுபோல, பூதத்தாழ்வானுக்கும் பூதத்தானுக்கும் எத்தொடர்பும் இல்லை. பூதத்தாழ்வான் வைணவ அடியான், காலத்தால் பிற்பட்டவன்.கடல் மல்லையில் அவதரித்து நூறு பாசுரங்கள் அருளிச் செய்தவன். பூதம் என்பது பேய் பிசாசு அல்ல; இறை தூதன் அல்ல; கந்தர்வன் அல்ல. பூதம் என்பது ஈண்டு நிலம், நீர், காற்று, ஆகாயம் , தீ எனும் பஞ்ச பூதமும் அல்ல. பூதம் என்பது சிவ கணம்.சிவ கணங்கள் கோபத்தினாலோ சாபத்தினாலோ பூமிக்கு அனுப்பப்படும்போது அவை பூதங்களாகிவிடுகின்றன.

தீயவர்களைத் தூக்கி அப்படியே விழுங்கும் பூதம் ஒன்றுண்டு. அது நாற்சந்தியில் நிற்கும் சதுக்கப்பூதம்.அதற்கு இலக்கியச் சான்று உள்ளது. அது நமது சங்கிலிப் பூத்தானுக்கு பெரியப்பா மகன் என்பார்கள். இதைச் சொல்லும் என் வசம் ஆதாரம் ஏதும் கிடையாது.

அன்று லட்சம் பேருக்கு ஒன்று எனும் விகிதத்தில் சதுக்கப்பூதம் என்றொரு ஏற்பாடு இருந்திருக்கும் போல. தீயவர் எனில் கயவர், நயவஞ்சகர், ஏமாற்றுபவர், பித்தலாட்டம் செய்பவர், கொள்ளையர், திருடர், கொலைகாரர், காமக்கொடூரர், எத்தர் என நீண்டதொரு பட்டியல். அன்று லட்சம் பேருக்கு இருபது தீயவர் எனும் வீதம் இருந்திருக்கலாம். தீயவரை விழுங்கியே சதுக்கப்பூதம் பசியாற்றிக் கொள்ளவேண்டும். அன்றெல்லாம் அது ஆறாத பசியுடன் இருந்திருக்க வேண்டும்.

அந்த வீதம் நூற்றுக்கு இருபது எனும் வீதத்தில் அதிகரித்துவிட்டதாலும் நகரங்கள் தொகை பெருகிவிட்டதாலும், நகரங்களில் மக்கட்தொகை பெருகிவிட்டதாலும், சதுக்கப் பூதங்கள் பணியில் புதியதாக நியமிக்கப்படாததாலும், ஊழியத்தில் இருந்த சதுக்கப் பூதங்கள் சில ஓய்வு பெற்றூவிட்டதாலும் சில சாப விமோசனம் பெற்று கைலாயத்தில் தாய் இலாகாவுக்குத் திரும்பிவிட்டதாலும், இன்று தீயவரைக் கேள்வி கேட்பாரில்லை.

அரசாணை ஒன்றின் மூலம் மாநிலங்கள் புதிய சதுக்கப் பூதங்கள், நடமாடும் சதுக்கப் பூதங்கள், மகளிர் மட்டும் சதுக்கப் பூதங்கள் பெருவழிப் பாதையில் விரையும் சதுக்கப் பூதங்கள் என நியமிக்கப் பட்டால் தீயவர் தொகை சற்றுக் குறையக்கூடும். ஆனால் அரசாணை கள் கைலாயத்தில் எடுபடுவதில்லை. உண்மையில் சனநாயக சோசலிச மதச் சார்பற்ற குடியரசில், பக்கத்து மாநிலத்திலேயே எடுபடுவ தில்லை. மேலும் கையூட்டு வாங்காத சதுக்கப் பூதங்கள் பணியில் இருந்தால் அரசாணைகளை ஏவும் ஆளும் இனமே அழிந்து போகும் வாய்ப்பு அதிகம். ஆளும் இனம் என்பது, ஆள்கிற கட்சி, ஆண்ட கட்சி, ஆளப்போகிற கட்சி, ஆளவே போகாத கட்சி, அண்டிப் பிழைக்கும் கட்சி, அண்டிக் கெடுக்கும் கட்சி, தலைவரைத் தவிர ஆளே இல்லாத கட்சி, தலைவரே இல்லாத கட்சி, ஆழியில் எழும்பும் அலைபோல் உருவாகக் காத்திருக்கும் கட்சி என சகல பிரிவினரையும் உள்ளடக்கிய இனம்.

நாம் சங்கிலிப் பூதத்தான் கதையை விட்டு சதுக்கப் பூதத்தின் கதைக்கு நழுவி வந்துவிட்டோம். தவிர்த்து விட்டுத் தடத்துக்குத் திரும்பலாம்.

இருபத்தேழு தெய்வங்கள் என்பன நாட்டார் தெய்வங்களின் சிறு குறுந்தொகை. இந்த இருபத்தேழு உறுப்பினர்கள் இடத்துக்கு இடம் வேறு படுவதும் உண்டு, எனினும் சிலர் மட்டும் நிரந்தர உறுப் பினர்கள். செக்யுரிட்டி கவுன்சில் போல. பெரும்பாலும் எல்லாச் சிற்றூர்களிலும் தென் மாவட்டங்களில் இந்த இருபத்தேழு தேவதை களின் பீடங்கள் உண்டு. அஃதெப்படி ஒரே தேவதை ஒரே சமயத்தில் பல இடங்களில் குடியிருத்தல் இயலும் எனக் கேட்பது புரிகிறது. நீங்கள் வழிநடத்தப்பட்டு வருகிற விதத்தில் அந்தக் கேள்வி இயல் பானதுதான். இதில் எதிர்க்கேள்வி ஒன்றுண்டு. எவ்விதம் நீரும், நிலனும், காலும், தீநாக்கும், நீள்விசும்பும் ஒரே நேரத்தில் எங்கும் நின்று அருள் செய்கின்றன?

இருபத்தேழு தேவதைகளின் நிரந்தர உறுப்பினர்களில் ஒருத்தன் சங்கிலிப் பூதத்தான். அவனை சமஸ்தன் சங்கிலிப் பூதத்தான் என கதைப் பாடல்களும் வில்லுப் பாட்டின் வெவ்வேறு வடிவங்களும் பாடும். சங்கிலிப் பூதத்தான் பூமிக்கு வந்தது பற்றி ஆறேழு பாடல் வடிவங்கள் உள்ளன என்பார்கள். அவை இப்போது அத்தியாவசியமானவை அல்ல. ஆனால் அவர் வாங்கி வந்த வரம் எனது கதைப் பிரதேசம்.

சிறு தெய்வங்கள் ஏதாவது காரணம் பற்றி, கோரிக்கை சார்ந்து, பூமியில் தோன்றும்போது அவர்களுக்கு பரமசிவனோ பார்வதி யாளோ கை நிறைய, மடி நிறைய ஏகப்பட்ட வரங்கள் வழங்கி அனுப்புவார்கள். கொல்ல வரம், வெல்ல வரம் என்று.

சங்கிலிப் பூதத்தானின் வரம் பெரு நிதியம். கருப்பட்டி கருப் பட்டியாகத் தங்கக் கட்டிகள். அதிலும் உடங்குடி கருப்பட்டி என்றால் சின்ன வட்டுக்களாக பனந்தூர் நிறத்தில், சின்னத் தேங்காய் முறி அளவில் இருக்கும். சூரங்குடி கருப்பட்டி எனிலோ தேன் நிறத்தில் பரு வட்டாக தொலிக்காத விம்மிப் புடைத்த பருந்தேங்காயைப் பாதியாக வெட்டி வைத்ததுபோல இருக்கும்.

பெரியதோர் கடாரம் நிறைய தங்கக் கருப்பட்டிகளாக பூதத் தானுக்கு வரம் அருளினார் முக்கண் முதல்வன். அதைப் பூதத்தான் தொலைத்துவிடாமல் இருக்க, கடாரத்தின் பக்கவாட்டில் இரு வளையங்கள் அமைத்து அந்த வளையங்களை அரையங்குல தங்கச் சங்கிலிகள் மூலம் இரு கால்களிலும் கிடந்த தங்கத் தண்டைகளோடு பிணைத்திருந்தார். ஆகப் பூதத்தானின் கழல்கள் தங்கம், சங்கிலி தங்கம், சங்கிலி முடிவின் வளையம் தங்கம், கடாரம் தங்கம், கடாரம் நிறைந்த கருப்பட்டித் தங்கம்.

அவற்றை கிராம் கணக்கிலோ, பவுன் கணக்கிலோ, கிலோ கணக்கிலோ சொல்வதென்பது எனக்கு சாத்தியம் இல்லை. சொக்கத் தங்கத்தின் சந்தை விலை மாத்திரம் இன்று கிராமுக்கு எண்ணூற்றுத் தொண்ணூறு என்பது நினைவுக்கு வருகிறது.

கண்ணப்பப் பணிக்கரின் அறுத்தடிப்புக் களத்தில் இருபத்தேழு தேவதைகளுக்கும் பீடங்கள் இருந்தன. களம், வான் பெரிய களம். ஒரு பக்கம் மாட்டுத் தொழுவம். மறுபக்கம் இருபெரும் வைக்கோற் படப்புகள் கூட்டும் இடம். எதிரே உழவுச் சாமான்கள் போட்டு வைக்கும் புரை. உழவுச் சாமான்கள் எனில் பொடிக் கலப்பை, தொழிக் கலப்பை, கோடிக் கலப்பை, நுகம், வள்ளைக்கை, பொடி மரம், தொழிமரம், பொழித்தட்டுப் பலகை, கோடி மண்வெட்டி, கட்டை மண்வெட்டி, ஊடு மண்வெட்டி, களை பறண்டி, கோடரி, வெட்டுக் கத்தி, பன்னரிவாள், பொலியளவு மரக்கால், கொத்து மரக்கால், தொடைக்கயிறு, கொச்சக்கயிறு, எலிக்கலயங்கள், கடவம், பெட்டி, இறைவட்டி, குட்டை, தட்டுக் குட்டை, தவிட்டுச் சாக்கு, உப்புச்சாக்கு, பித்தளைப் போணி, செம்புக்குடம், காலிச்சாக்குகள், சாட்டைக் கம்பு, உழவு கம்பு, கலப்பைக் குத்திகள், காளைகளின் கழுத்து மணிகள், கொட்டம், வேப்பெண்ணெய்க் கிண்ணம்

களத்தின் கன்னிமூலையில் வேப்பமரத்து மூட்டில் இடுப்பளவு உயரத்தில் மேடை அமைத்து பகரவடிவில் இருபத்தேழு சாமி களுக்கும் பீடங்கள்.

சுடலை மாடன், சுடலைப் பேய்ச்சி, புலை மாடன், புலை மாடத்தி, கழுமாடன், முண்டன், இசக்கியம்மன், காளியம்மன், முத்துப் பட்டன், முத்துப் பேய்ச்சி, வியர்வை புத்திரன், மாடன் தம்புரான், பூதத்தான், சங்கிலி பூதத்தான் என மேலும் நீளுமோர் பட்டியல் அது.

உண்மையில் இருபத்தேழு பீடாதிபதிகளுக்கும் கண்ணப்பப் பணிக்கருக்கும் யாதொரு பந்தமும் இல்லை. அவர் அந்தக் களத்தை கும்பப் பூவில் வாங்கியது, பூமுகத்து வீட்டு மூத்தபிள்ளை குடும்பத் தாரிடம் இருந்து. அந்தக் குடும்பத்தில் இருபத்தேழு பீடங்களுக்கும் இருபத்தேழு சாமி கொண்டாடிகள் அவகாசிகள். சாமிகளுக்கான உடைகள், சல்லடம், கச்சை, பட்டம், பாய்ச்சல் கயிறு, தொப்பி முதலியனவும் முழு அங்கி, முகமலர், கண்மலர், கடயம், மாலை, திருநீற்றுக் கொப்பரை என்பனவும் ஆயுதங்களாக வெட்டரிவாள், வீச்சரிவாள், கத்தி, சூலம், தண்டம், குந்தம், ஈட்டி, கதை, சலாகை, சுருட்டு வாள் ஆகியனவும் அந்தந்த பீடம் கொண்டாடிகளான ஆராசனைக்காரர் வீடுகளின் அரங்குகளில் கன்னி மூலைகளில் சாத்திவைக்கப் பட்டும் சாமிப் பெட்டிகளினுள்ளும் கிடந்தன.

மூத்தபிள்ளை வகையறாக்கள் கால மாற்றங்களினால் விலை யாதாரம், மறு ஆதாரம், ஈட்டாதாரம், ஒழிமுறி என எழுதி எழுதிச் சோர்ந்து போயினர். இந்தக் களம் கடைசிப் பொதுக் கையிருப்பு. இனி குடியிருக்கும் வீடுகளும் சோற்றுப் பாட்டுக்கான வயல்களும் பாக்கி. எல்லாச் சாமிகளும் தமது கொண்டாடிகளை தலையைப் பிடித்துத் தண்ணீரில் அமிழ்த்தி மூச்சு முட்டச் செய்துகொண்டிருந்தனர். அடிக்கடி ஒலிக்கும் அசரீரி ஒன்று, ‘சிவன் சொத்து குல நாசம்’ என்று கூவிச் சென்றது.

மூத்தபிள்ளை வகையறாக்கள் அறுத்தடிப்புக் களத்தை விலை ஆதாரம் எழுதும்போது, கண்ணப்பப் பணிக்கரிடம் போட்டதோர் நிபந்தனை, சாமிகள் குடியிருக்கும் பீடங்களை இடித்து மாற்றக்கூடாது என்பதும் வழிபாட்டுக்கான தமது குடும்பத்தார் நடமாட்டத்தை கட்டுப் படுத்தலாகாது என்பதும்.

பீடம் என்பது சாமிக்கான உருவ அடையாளம். பெரும்பாலும் சுடுசெங்கல் நட்டு, வெவ்வேறு உருவ வடிவங்களில் மண் சாந்து பூசி, மஞ்சணை அப்பியது. கூரை இல்லை, சுற்று அளி இல்லை, கதவு இல்லை, பூட்டும் இல்லை, திறப்பும் இல்லை. கால் சென்று மனையை அடைத்துக்கொண்டு கிடக்கிறது என்பதைத் தவிர சாமி பீடங்களினால் பணிக்கருக்கு வேறு தொந்தரவு ஏதும் இல்லை.

ஊர் அம்மன் கோயிலில் கொடை வந்தால் பீடங்களின் திருமேனி பூசி, புது மஞ்சணை சாத்தி, அரளிமாலை போட்டு, கமுகம் பூக்குலை சாய்த்து வைத்து, வாழை இலையில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, அவசியப்பட்டவருக்கு சுருட்டு, வாற்றுச் சாராயம் எனப் படைப்பார்கள். வீட்டில் பிறந்த நாள், நிச்சயதார்த்தம், ஆடி அமாவாசை, தை அமாவாசை என்றால் அரிசிப் பாயசம் வைத்து சகல பீடங்களுக்கும் இலைத்துண்டுகளில் அரை அகப்பை படைப்பதுண்டு. எப்போதாவது பொங்கலிட்டு சேவல் அறுப்பதுண்டு. பாயசம் ஆறிய பிறகு, ஆள் நடமாட்டம் ஓய்ந்ததும் காக்கை, குருவி, மைனா கொத்திக் கொண்டு போகும்.

விருப்பம் போல் வழிபாடு செய்துகொள்ளும் உரிமையை கண்ணப்பப் பணிக்கர் அந்தக் குடும்பத்தினருக்கு வழங்கி இருந்தார். மேலப் பத்தில் சுடலைமாடன் தோப்பு கைமாறியபோது, மேலும் ஒரு தென்னங்கன்று வைக்கலாம் என்ற ஆசையில், தோப்பின் நடு நாயகமாக நின்ற சுடலைமாடன் கற்சிலையைப் பெயர்த்து வேலி யோரம் போட்ட எட்டாவது நாள், தோப்பை வாங்கியவருக்கு நாக்கு இழுத்துக்கொண்டது என்ற கிலி கண்ணப்பப் பணிக்கர் மனதில் வேரூன்றி கப்பும் கவருமாக வளர்ந்திருந்தது.

பீடங்களுக்கு நிழலாக நின்ற வேம்பில் கும்பப் பூவில் குழையும் அரக்குவதில்லை. ஆடிமாதம் பழுத்து உதிரும் வேப்பம் பழங்கள் தின்ன கிளிகள் பறந்து வரும் கூட்டம் கூட்டமாக. பெரிய திருமொழி கூறுகிறது, ‘வேம்பின் புழுவேம்பன்றி உண்ணாது’ என.

அறுத்தடிப்புக் காலங்களில் பீடங்களின் மேடை அடிவாரத்தில், வேப்பமர நிழலில் துண்டு விரித்து காற்றாட அமரவும் அலுப்பாக இருந்தால் சற்றே கைமடித்துத் தலைக்கு வைத்துச் சாயவும் கண்ண யரவும் பணிக்கருக்குக் கொடுத்து வைத்திருந்தது.

சிலசமயம் அவிழ்த்துவிட்ட பசுங்கன்றுகள் பீட மேடையில் குதித்து ஏறி மஞ்சணையை முகர்ந்து பார்த்து, வாலுயர்த்தி மீண்டும் கீழே குதிக்கும். தீண்டக்காரிகள் பீடங்களின் முன்னால் நடமாடுவ தில்லை, மூவந்திக் கருக்கலில் குளித்துத் தலை முழுகி, பூவைத்து வெள்ளி செவ்வாய்களில் பெண்கள் குறுக்கே நடமாடுவதில்லை.

சுடலை மாடன், கழு மாடன், புலை மாடன் போல சங்கிலிப் பூதத்தான் உயிர்ப்பலி கேட்கும் தேவதை அல்ல. அரிசிப் பாயசம் படைத்தாலே சந்தோசம் எதுக்களிக்கும் சைவச்சாமி. நிதியமே அவர் பேராயுதம், போராயுதம்.

மற்ற தேவதைகள் போலன்றி சங்கிலிப் பூதத்தான் உலா வருவதற் கான கால நிர்ணயம் இருந்தது. பால் போல் நிலாவடிக்க பார்வதியாள் பந்தடிக்கும் பின்னிரவுகளில் சந்தனமும் சீதளமும் குழைந்து மணமடிக்கும், தென்றல் பூப்பூவாய் உதிரும் நேரத்தில், நிலவன்றி மற் றெல்லாம் நீண்ட நித்திரை கொள்ளும் மூன்றாம் யாமத்தின் தொடக்க காலத்தில்…

கனத்த கடாரத்தை இழுத்துக்கொண்டு, கடாரமும் சங்கிலியும் மோதி, கடாரம் தரையில் உராய்ந்து ‘சலங் சலங்’ கென ஒலி எழுப்பி, பூதத்தான் வீதி உலா வருவான். தமிழில் ஏகப்பட்ட உலாக்கள் உண்டு. மூவருலா, திருக்கயிலாய ஞான உலா, குலோத்துங்க சோழன் உலா என. இன்று வரை யாரும் சங்கிலிப் பூதத்தான் உலாப் பாடவில்லை.

வரம் கோரிப் பெற்ற பெரு நிதியத்தை தொல்லாயிரம் ஆண்டு கள் இழுத்துத் திரிவதில் சலிப்புற்று தலை முழுகினால் போதும் என்ற விரக்தி கொப்பளிக்க சில போதுகளில் உலா வருவான். இந்தச் சிறிய தொரு கடாரத்துக்கே இந்தப் பாடு என்றால் சங்க நிதி பதும நிதி என உலகத்து நிதிகளைக் கையாளும் குபேரன் கதி என்ன என்று தோன்றும்.

சங்கிலிப் பூதத்தானைப் பார்த்தால் மற்ற இருபத்தாறு பீடத்துத் தேவதைகளுக்கும் சற்று அனுதாபம், சற்று எரிச்சல்,சற்று இளக்காரம். அவன் உலாப் போகையில் எண்ணிரண்டு பதினாறு திக்குக்களிலும் திசை காவல் கொள்ளும் தெய்வங்களுக்கு கூடுதல் இளக்காரம். மற்றும் தேரடி மாடன், சூலைக்கரை மாடன், பாலத்தடி மாடன், கல்லுக்குழி மாடன், செக்கடி மாடன், மாட்டுத் தொழு மாடன், வண்டிப் புரை மாடன், படித்துறை மாடன், பன்றி மாடன், மாடாக்குழி மாடன் என எல்லா மாடன்களுக்கும் ‘கிளுகிளு’ வென அடக்கமான நகையொலி.

உலா முடிந்து திரும்பியதும் அனுசரணையாகக் கேட்பவள் வண்டிமலைச்சி ஒருத்திதான்.

”என்னப்போ, இண்ணைக்கும் பாரம் தொலையல்லியா?” என்பாள்.

மற்ற பீடாதிபதிகள் எவருக்கும் கடாரம் வேண்டாம். அவரவர் சுமைகள் அவரவர்க்கு. முண்டன் ஏழாண்டுகளாக கரகரத்த முக்காரம் மட்டும் செய்துகொண்டு கிடக்கிறான். பேய்ப்பாறை மந்திரவாதி, மலையாளத்தான், முண்டன் வாயைக் கட்டிப்போட்டு விட்டான். இன்னும் ஐந்தாண்டுகள் இருக்கின்றன, கெடு முடிந்து அவன் வாய் திறக்க. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு காட்டாக் கடையில் இருந்து வந்தான் வேறொரு மந்திரவாதி. சங்கிலிப் பூதத்தான் அன்றே வீழ்ந் திருக்க வேண்டும் கண்ணியில். நல்லூழ், முத்துப் பட்டன் குரலில் வந்து விலக்கியது. இன்று நினைத்தாலும் சங்கிலிப் பூதத்தானுக்கு சங்கிலி உதறுகிறது.

பொதுவாகவே பூதத்தான் வகையறாக்களைப் பொதுமக்கள் அஞ்சுவதில்லை. நாச்சியார் புதுக்குளத்துக் கரையில் காவல் செய்யும் பூதத்தான், தாடகை மலைப் பத்தின் நடுவில் திரட்டில் இருக்கும் பூதத்தான், அம்மன் கோயில் பூதத்தான் என ஆங்கு ஒரு குடும்பக் காரர்கள் இருந்தனர். என்றாலும் ஒரு ஏளனம், வெறும் பச்சரிசிப் பாயசக்காரர்கள் என. கொடுமையை அஞ்சுகிறவன் குணத்தைக் கொண்டாடுவதில்லை.

‘கழலாடப் பேயாடு கானில் பிறங்க அனலேந்தித் தீயாடும்’ சிவனோ எனில் துன்பம் தெரிந்தவனாகக் காணோம். இல்லை, தெரிந்தும் உள்நகை கொண்டு திரிந்தவாறும் ஆகும்.

எப்போது வேண்டுமானாலும் கைமாறலாம் கடாரத்தை. ஆனால் பெறுபவர் நல்லவராக இருத்தல் வேண்டும். அது ஆணானாலும் பெண்ணானாலும் கடாரம் இழுபடும் ஓசையில் துயில் நீத்து கண் விழியாமல் முன்னகர்ந்து வந்து, கூர்ங்கத்தி கொண்டு இடது கைச் சுண்டு விரல் கிழித்து சில சொட்டுக்கள் குருதி பலி செய்ய வேண்டும். நல்லவர் என்பதற்கு என்ன அடையாளம் என வினவ, அழலாட அங்கை சிவந்தவன் சொன்னான், தென் திசையில் தெய்வமாப்புலவன் எனவோர் சமண முனிவனுண்டு. ஆயிரம் ஆண்டு முந்திப் பிறந்தத னால் கழுவேறாமல் தப்பியவன், அவனிடம் போய்க் கேள் என்று.

சமணமுனி உரைத்தான் – நல்லவர் என்பார் கள்ளுண்ணாதவர், பிறன் மனை நோக்காதவர், புலால் மறுத்தவர், பொய்யுரையாதவர், எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுபவர், இடுக்கண் களைபவர், முகத்திரண்டு கண்ணுடையவர்…

நீண்டதொரு பட்டியல் இருந்தது வள்ளுவனிடம். இரண்டாயிரம் ஆண்டுகள் பிந்திப் பிறந்திருந்தால் குண்டெறிந்தாவது கொன்றிருப்பர். புலால் மறுத்தலில், கள்ளுண்ணாமையில் சக பீடாதிபதிகளே அடிபட்டுப் போய் விடுவார்கள்.

நல்லவர் சிலர் இல்லாமல் இல்லை. ஆனால் அவர்கள் ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கினர். எவ்வகையிலும் பொருளாசை இல்லை அவர் வசம். ஆழ்ந்த துயிலில் இருந்த வேறு சில நல்லவருக்கு கடாரம் இழுபடும் ‘சலங் சலங்’ ஓசையில் அறிதுயில் ஆயிற்று. சற்று ஆசையும் வந்தது. ஆனால் எந்த நல்லவன் உறங்கும்போது பக்கத்தில் கூர்ங்கத்தி வைத்துக்கொள்வான்? மேலும் இருட்டில் தப்பித் தடவி கத்தி எடுத்து, சங்கிலிப் பூதத்தான் முன்னால் போய் நின்று கத்தியை நிமிர்த்து விரலைக் கிழிக்கும்போது அயத்து மறந்து கண்ணைத் திறந்து விட்டால் நூறு மின்னல் ஜோதியின் முன்னால் கண்ணும் அவிந்து கருகியும் போய்விட மாட்டோமா?

சோம்பேறியான மற்றும் சிலர், ‘எல்லாம் கட்டுக் கதைங்கேன்… சங்கிலியாம், பூவத்தானாம், கிடாரமாம்… சுத்தப் பைத்தாரப் பயக்கோ…அப்படியே இருந்தாலும் நமக்கெல்லாமா கிடைக்கப் போகு? நம்ம யோக லெச்சணந்தான் தெரிஞ்சிருக்கே!” என்றார்கள்.

உறங்குபவரை எழுப்பி, வலியக் கொண்டு கொடுத்தாலும், தங்கக் கருப்பட்டியையும் பித்தளை என்று உரைத்துப் பார்ப்பார்கள்.

தாம் நல்லவர், நல்லவர் அன்றி வேறில்லை என்று சாதிக்கும் இனம் ஒன்றிருந்தது நாட்டில். ஆனால் அவர்களிடம் தலைக்குப்

பத்துக் கடாரங்கள் அளவுக்கு முறைகேடாய்ச் சேர்த்த செல்வங்கள் இருந்தன. குட்டிக் குபேரர்கள்… பூதத்தானுக்கு இழுத்துத் திரிந்து அலுத்துவிட்டது. தப்பாகப் போய்விட்டது வரம் கேட்டது. வரம் கேட்பதிலும் நுணங்கிய தெரிவு வேண்டும். செல்வம் என்பது சிந்தையின் நிறைவே என்றிருக்க வேண்டும். முழுத் தேங்காயை குக்கல் கொண்டு நடந்ததைப் போல அடுத்தவனுக்கும் தராமல், தானும் தின்னாமல் –

‘சே! என்ன நேரத்தில் வாயில் வந்ததோ, பெரு நிதியம் என்று? வேறேதோ மூல ஆதார சுருதி நாவில் நின்று இடறியதோ!’

‘மாமலை அணைத்த கொண்மூப் போலவும் தாய் முலை தழுவிய குழவி போலவும்’ நிலவொளியைத் தழுவிக் கிடக்கலாம் என்று தோன்றியது சங்கிலிப் பூதத்தானுக்கு.

பூழியான் ஊமைச் சிரிப்பாணி சிரித்துக்கொண்டுதான் வரம் அருளி இருப்பான். வரத்துக்கு விமோசன மாற்றுக் கேட்கவும் மறந்து போய்விட்டது. அந்த நேரத்தில் காலக்கெடுவும் கேட்க இயலவில்லை. இனியும் எத்தனை நூற்றாண்டுகள் இப்படித் தொடர்ந்து இழுத்துக் கொண்டு கிடப்பது!

நிலவொளியை நீங்க மனமில்லை. கைகளையும் கால்களையும் நாணமின்றி வீசி நடப்பது எக்காலம்? புன்னை கொல்லென்று வெண் முத்துக்களாய்ப் பூத்து மணத்தது. புன்னம் பூவை மாலை கட்டித் தலையில் இளையார் சூடுவதுமில்லை, வளையார் கொய்து மாலை கட்டி அணிவதும் இல்லை. என்றாலும் பருவந் தவறாது பூக்கிறது புன்னை. இரண்டாம் சாமங்களின்கதை முடிந்து பிச்சிப்பூவின் கசங்கிய வாசம் காற்றில் கலந்து கிடந்தது. பெருச்சாளிகள் இரண்டு எதிர்வந்து, மறுகி, ஓடிப் பொந்துக்குள் மறைந்தன.

திருவோட்டைத் தலைக்கு வைத்து, வீட்டுப் படிப்புரை ஒன்றில் பண்டாரம் ஒருத்தன் படுத்திருந்தான். குறட்டை ஒலி இரண்டாம் கட்டையில் பேசியது. காலம் அடித்துத் துவைத்த கருங்காலிக் கட்டை போலத் தெரியவில்லை. ஊன் தடித்து வளர்ந்திருந்தது. ஞானக் கண் ணால் சற்று உற்றுப் பார்த்தான் சங்கிலிப் பூதத்தான். அயலூரில் அவன் குடும்பமும் கல்யாணத்துக்கு நிற்கும் மூன்று பெருங் குமருகளும் தெரிந்தனர். துறவை ஒரு தொழில் போலச் செய்கிறான் போல. சேவையைப் பலரும் ஒரு தொழிலாகச் செய்வதைப்போல.

‘எப்படியும் தொலைந்து போகட்டும்! திருவள்ளுவர் அகராதிப் படி நல்லவனாக எந்த மானுடன் கிடைப்பான்? அயல் தேசத்தில் ஞானியொருவன் பகலில் விளக்கு கொண்டு மனிதனைத் தேடினா னாம். பண்டாரத்தின் தரித்திரமாவது நீங்கட்டும். உத்தேசமாக நல்லவ னாகவே தெரிகிறான், வேடம் புனைந்ததையும் யாசகம்

பெறுவதையும் தவிர. குறைந்தபட்ச அயோக்கியத் தனங்கள் செய்யா மல் இன்று வாழ்தல் இயலுமா? இன்னும் எத்தனை காலம் கடாரம் இழுப்பது’ என்றெல்லாம் எண்ணி பண்டாரத்தின் பக்கம் போய் நின்றான் சங்கிலிப் பூதத்தான்.

இலேசான அதட்டல் குரலில் சொன்னான், “வே! எந்திரியும்… கண்ணைத் தொறக்கப் படாது. சொல்லுகது படி செய்யும். நான் சங் கிலிப் பூதத்தானாக்கும்… கடாரம் நெறைய கருப்பட்டி கருப்பட்டியா தங்கம் வச்சிருக்கேன்… பிச்சாத்தி வச்சிருக்கேரா? எடுத்து கண்ணைத் தொறக்காம, இடது கைச் சுண்டு விரலைக் கீறி அஞ்சாறு சொட்டு ரெத்தம் விடும்…”

அரை உறக்கத்தில் பண்டாரம் சொன்னான் “தங்கக் கருப் பட்டியை விக்க முடியுமா வே… பண்டாரம் கொண்டு குடுத்தா எவம் வாங்குவான்? புடிச்சு உள்ள போட்டுருவான்… ஆயிரம் ரூவா நோட்டுக் கெட்டா இருந்தாச் சொல்லும்… உறக்கத்திலே செறைப் படுத்தாதையும்…”

சங்கிலிப் பூதத்தான் சற்று நேரம் பொறுத்துப் பார்த்தான். புரண்டு படுத்த பண்டாரம் ஒன்றரைக் கட்டையில் குறட்டைக்கு சுதி சேர்த்தான்.

மிகவும் சோர்வாக இருந்தது. மறு படிப்புரையில் சற்று நேரம் உட்கார்ந்தான். வயதான காலத்தில் ஓதம் பெருத்ததைப் போல, கால்களை அகட்டி நடந்த களைப்பு. ‘நிதியம்’ என்பதை ‘நீதி’ என்றோ ‘காதி’ என்றோ கேட்டுப் பெற்றிருக்கலாம். அப்படித்தான் அமைச்சு களை செல்வாக்குப்படி கேட்டுப் பெறுகிறார்கள். அல்லது இராவண னைப் போல, முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்னாள் ‘எக்கோடி யாராலும் வெலப்படாய்’ என்றொரு வரம் கேட்டிருக்கலாம். எல்லாம் புத்திமோசம். என்றாலும் சொல் கிறார்கள், அரிசிப் பாயசம் குடிப்பவர்கள் சூது மிகக் கொண்டவர்கள் என.

செத்தாலும் ‘புரந்தார் கண் நீர் மல்கச்’ சாக வேண்டும். என்று செத்தொழிவான் இவன் என சொல்வாக்கு கேட்கக்கூடாது.

எப்போதும் சிவந்தவாறிருக்கும் சங்கிலிப் பூதத்தானின் கண்கள் மேலும் சிவந்தன. அது போதைச் சிவப்பல்ல, காமச் சிவப்பல்ல. நெடுநேரம் துழைந்து நீராடிய சிவப்பல்ல. நோவின் சிவப்பு. தொண் டைக் குழியிலிருந்து சிறியதொரு கேவல் பறிந்தது. பூதம் குலுங்கி அழுதது. காற்றொன்று கிளம்பி மரங்களைக் குலுக்கியது. புட்கள் அகாலத்தில் சப்தித்தன. குழந்தைகள் பாலுக்கு அழுதன. குமருகள் காமத் துடிப்பில் திடுக்கிட விழித்துத் திரும்பவும் துயின்றனர்.

மிகவும் சோர்ந்து துவண்ட முன்னொரு நாளில், சிவக்கட்டளை யையும் மீறி, தீயாய் வெயில் கனலும் உச்சிப் பகற் பொழுதில் கடாரத்தை இழுத்துக்கொண்டு நடந்தான். நல்லவர் எனில் ஆணானால் என்ன, பெண்ணானால் என்ன? கடாரம் கை மாறினால் போதும். நல்லவர் வாழும் வீடுபோல் தோன்றிய வாசல் முன் சென்று, “அம்மா, தாயே! நான் சங்கிலிப் பூதத்தான் வந்திருக்கேன்” என்றான். உள்ளே ‘நூலா, தாலியா’ என்றொரு மெகா சீரியலின் 10, 497-வது எப்பி சோடு ஓடிக்கொண்டிருந்தது.

“கை சோலியாட்டு இருக்கேன், பொறவாட்டு வா” என்றொரு தாய்க்குரல் கேட்டது.

முளை அறைந்து கட்டப்பட்டது போலாகிவிட்டது. படிப்புரை யில் சற்று கால் நீட்டிப் படுக்கவும் நீதமில்லை. அட்டினக்கால் போட்டு அமரவும் தோதில்லை. வட்டச் சம்மணம் போட்டு இருக்கவும் ஒக்காது. எப்போதும் சபரிமலை ஐயப்பன் போல யோக அமர்வு. அல்லது கால்களைத் தொங்கவிட்டு, படிப்புரையில் அமர்வதுபோல.

‘நாய் பெற்ற தெங்கம் பழம்’ என்றோர் வரி ஓடியது புந்தியில். நிலவு நீர்க்க ஆரம்பித்தது. இனி இவ்விதம் படிப்புரையில் அமர்ந்து களைப்பாற இயலாது. மேலும் உலாப் போவதும் உசிதமல்ல. கள வொழுக்கத்தார் தமது கூடடையும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

கால் சோர்ந்து, மெய் சோர்ந்து, மனம் சோர்ந்து, பீடங்கள் இருந்த கண்ணப்பப் பணிக்கர் களத்துக்குத் திரும்பினான் சங்கிலிப் பூதத்தான். மற்ற பீடாதிபதிகள் – உலா முடிந்து வந்தவர், உலாப் போகாதவர், உலாப் போகத் தேவை அற்றவர் என யாவரும் விழித்திருந்தனர். வேட்டை முடித்து, வெற்றிலைக் கொலுப் பூண்டு, உல்லாச மானதோர் மனநிலையில் இருந்தாள் வண்டி மலைச்சி. காற்று கனிந்து எறிந்தது.

வண்டி மலைச்சி, மிகுந்த கரிசனத்துடன் கேட்டாள் ”என்ன மக்கா, இண்ணைக்கும் யாவாரம் ஆகல்லியா?”

”இல்ல சித்தி. வள்ளலார் சொன்னது போல, கடை விரித்தேன் கொள்வாரில்லை. வெட்டி அலைச்சலு. நான் எங்கிண போயி முட்டட் டும். சொல்லு… கெட்டவனுக்குக் குடுக்கப் பிடாது, நல்லவனுக்கு இது வேண்டாம். தில்லை மாநகர் சிற்றம்பலவன் நம்மளை இப்படி கண்ணியிலே கொருத்து விட்டுட்டாம் பாரு…’

”மக்கா, ஒண்ணு சொன்னா கேப்பியா? பேசாம கைலாயத்துக்கே திரும்பக் கொண்டுக்கிட்டுப் போயிரு… அப்பந்தான் ஒனக்கு துன்பம் தீரும் பாத்துக்கோ… இது ஈணவும் கழியாது நக்கவும் கழியாதுங்க கதையாட்டுல்லா இருக்கு…”

“என்னுண்ணு கொண்டுக்கிட்டுப் போக சித்தி? எத்தன ஆயிரம் வருசமாச்சு? வழி கூட மறந்து போச்சு… இப்படியாப்பட்ட பாவி ஆகீட்டேனே!”

“அதொண்ணும் பெரிய காரியமில்லே… அப்பர் போன பாதை ஒண்ணு உண்டும். காரைக்கால் அம்மை போன பாதையும் ஒண்ணு உண்டும். யாரும் கேட்டா சொல்லுவா… மதுரைக்கு வழி வாயிலே இண்ணைக்கு வேண்டாம். ரெம்ப சடைவாட்டுல்லா இருக்கும். நாளை பகல் பூரா ஒரு கண்ணுக்கு ஒறங்கு. ராத்திரி முதல் சாமம் முடிஞ்சதும் பொறப்பிடு…”

‘விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண்டு இருந்து அருள்’

செய்யும் கைலாயத்தான் மட்டுமே தனது சுமையை இறக்க இயலும் என்று தோன்றியது சங்கிலிப் பூதத்தானுக்கு. எல்லோர் சுமையையும் அவன்தானே ஏற்றுகிறான், அல்லது இறக்குகிறான்.

கூடவே வேறொன்றும் தோன்றியது அவனுக்கு. கைலாயம் போய்விட்டால் திரும்பி வருவோமோ, மாட்டோமோ! இங்கு கண்ணப்பப் பணிக்கரின் களத்துப் பீடத்தை வேறு எவரும் ஆக்ரமிப்பு செய்துகொள்ள மாட்டார்களா?

மேலும் தை அமாவாசைக்கு இன்னும் ஆறேழு நாட்களே இருந்தன. கடைசியாக ஓரகப்பை அரிசிப் பாயசம் குடித்துவிட்டுத் தீர்மானிக்கலாம் என்றும் தோன்றியது.

– நவம்பர் 2007.

நன்றி: https://nanjilnadan.com/2011/06/20/சங்கிலிப்-பூதத்தான்/

நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *