“பாப்புக்குட்டி,… பாப்புக்குட்டி…” என்கிற அழைப்பு, வாசலிலிருந்து கேட்டதுமே இவளுக்கு ஆச்சரியம். அது இவளது செல்லப் பெயர். பெற்றோர் மற்றும் உறவினர்கள் பாப்புக்குட்டி என்றும், ஊர்க்காரர்கள் பாப்பு என்றும் அழைப்பார்கள். பள்ளி மற்றும் கல்லூரியில்தான் சான்றிதழ் பெயரான சந்தியா தேவி என்பதிலிருந்து சந்தியா மட்டும். இங்கே யாருக்கும் அவளது வீட்டுப் பெயர் தெரியாது. அப்படியிருக்க, யார் அப் பெயர் சொல்லித் தன்னை அழைக்கிறார்கள்? அல்லது அக்கம் பக்கத்தில் வேறு எவருக்கேனும் பாப்புக்குட்டி என்கிற செல்லப் பெயர் இருந்து, அவர்களைத்தான் அழைக்கிறார்களோ?
அப்படித்தான் இருக்கும் என்று தோன்றியது. இங்கே இவளது உறவினர்களோ, ஊர்க்கார்ர்களோ வர வாய்ப்பில்லையே!
“பாப்புக்குட்டி,… பாப்புக்குட்டி…!” மறுபடியும் அக் குரல் அழைத்தது. அது இவளது ஒன்றுவிட்ட தாய்மாமாவான கோவில்பாளையத்து மாமா குரல் மாதிரியும் பட்டது. தன்னுடைய வீட்டுப் பெயரின் ஞாபகத் தூண்டல், கேட்கும் குரலுக்கு உறவுச் சாயலையும் பூசுகிறதோ?
அது யாரோ, அழைப்பது எவரையோ எனினும், பார்க்க வேண்டும் என்ற ஆவல் உந்த, தொலைக்காட்சி பார்த்தலிலிருந்து எழுந்து சென்றாள். வாசலிலிலும், அப்பாலும் கண்ட காட்சி அவளைத் திகைக்கச் செய்துவிட்டது. வாசலில் நின்றிருந்தது கோவில்பாளையம் மாமாவேதான்! அதைவிடத் திகைப்பளித்த காரியம், தெருவோரம் நிறுத்தப்பட்டிருந்த அவரது பைக்கிற்கு அருகில் அம்மாவும் நின்றிருந்தது.
மனம் அந் நொடியே அம்மாவிடம் ஓடிச் செல்ல, பாதங்கள் கதவருகிலேயே துவண்டு வேர்கொண்டுவிட்டன. எதற்காக வந்திருக்கிறார்கள் என்பது தெரியாததால், அவர்களை எப்படி எதிர்கொள்வது என்றும் புரியவில்லை. சமாதானத்துக்கு வந்திருக்கிறார்களா, சண்டைக்கா? இந்த நேரம் பார்த்து பூங்குன்றனும் வெளியே சென்றுவிட்டானே….! ஆனால், அவன் வளவுக்குள் இரண்டு தெரு தள்ளி இருக்கிற நண்பனின் வீட்டுக்குத்தான் சென்றிருந்தான். அலைபேசியில் தகவல் தெரிவித்தால் நிமிடத்தில் வந்துவிடுவான்.
அவள் அதை எண்ணிக்கொண்டிருப்பதற்குள் மாமா இவளைப் பார்த்து விசனத்தோடு சிரித்தபடி இரண்டு எட்டு முன்னே வந்தார். “பாப்புக்குட்டி,… என்னடா தங்கம் இது…?” என்பதற்குள் அவரது குரல் தழுதழுத்தது. இவளுக்கும் அதற்கு மேல் தாங்கவில்லை. அங்கிருந்தபடியே, “மாமா….” என அரற்றினாள். அம்மாவின் பெரியப்பா மகன் என்றாலும் அம்மா மீது உடன் பிறந்தாற் போன்ற பாசம் வைத்திருப்பவர், இவள் மீதும் தாய் மாமப் பாசம் மிகுந்தவர் அவர். தாயாதி சொந்தங்களில் மிக நெருக்கமான குடும்பம் அவர்களுடையது.
எப்படியோ தகவல் தெரிந்து ஊரிலிருந்து அம்மா கோவில்பாளையம் வந்து, அவரையும் அழைத்துக்கொண்டு இங்கே வந்திருக்கிறாள் என்பதை யூகிக்க முடிந்தது. அம்மா நின்ற நிலை மாறாமல் அங்கிருந்தபடியே இவளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். முகம் படிக்கிற தூரம்தான் என்பதால் அவளது உணர்ச்சியற்ற நோட்டத்தை கவனிக்க முடிந்தது. இருப்பினும் மாமாவின் பாச வெளிப்பாடுகள் இவளுக்கு நம்பிக்கையளித்தன. உள்ளே திரும்பி, தரையில் அமர்ந்து வாழைத் தண்டு நறுக்கியவாறே தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த மாமியாரிடம், “எங்க அம்மாவும் மாமாவும் வந்திருக்கறாங்த்தே…” என்று தெரிவித்துவிட்டு வாசலுக்கு இறங்கினாள்.
“வாங்க மாமா…! உள்ள வாங்க…!” என்று அழைத்ததும் முன்வந்த இரண்டு எட்டுகளைப் பின்வாங்கிக்கொண்டவர், “வரப் பாங்கில்லாத எடத்துக்கெல்லாம் வர வெச்சுட்டயே நீயி….! ஏஞ்சாமீ,… இது உனக்கே நல்லா இருக்குதா?” என்றார்.
சந்தியா எதுவும் சொல்லவில்லை. சொல்ல பதில் இல்லாமல் அல்ல; மாமாவிடம், அதுவும் வீடு தேடி வந்தவரிடம் முகத்தில் அடித்தாற் போலப் பேச வேண்டாமே என்பதால் அவரிடம் மௌனம் காட்டிவிட்டு அம்மாவிடம் சென்றாள்.
“இப்ப உனக்குத் திருப்தியா?” முறைத்துக்கொண்டே அடிக் குரலில் கேட்டாள் அம்மா. “சாதி சனம், சொந்த பந்தம், ஊர்க்காரங்க, எல்லார்த்து முன்னாடியும் நாங்க தலை குமியறாப்புடி, ஈன சாதிக்காரன் கூட ஓடிப் போனதுமில்லாம, இப்ப இந்த வளவுலயே வந்து, அவீக கூடயே குடியிருக்கறயே,… நீ என் வகுத்துல பொறந்தவதானா? உன்னயப் பெத்து, வளத்து, பாடுபட்டுப் படிக்க வெச்சது, சாதி மானத்த வாங்கத்தானா?”
சந்தியா எதுவும் சொல்லாமல், எந்த உணர்ச்சியும் காட்டாமல் அவளையே வெறித்தாள்.
அம்மா இப்படித்தான் பேசுவாள், இதையெல்லாம்தான் கேட்பாள் என்பது தெரிந்ததுதான். இருந்தாலும், ஒன்றரை வருடத்துக்குப் பிறகு மகளைப் பார்க்கையில், எப்புடி இருக்கற என்றோ, இப்புடி எளைச்சுப் போயிட்டயே என்றோ குசலம் விசாரித்துவிட்டு, அதன் பிறகே தனது கோபத்தைக் காட்டி ஜாதிப் பேச்செடுப்பாள் என்று நினைத்திருந்தாள். ஆனால், இவள் நலத்தைப் பற்றி மெப்புதலைக்கேனும் ஒரு வார்த்தை கூட பேசாதது சற்று ஏமாற்றத்தையே அளித்தது. அது பெத்த மனம் அல்ல; வெறும் ஜாதி மனம் மட்டும்தான். அவளுக்கு மட்டுமா? இவர்களின் ஜாதியில், இது போன்ற நிலைமைகளில் எல்லாத் தாய்மார்களுக்குமே அப்படித்தான் இருக்கும். ரத்தத்தில் ஊறிய ஜாதிக் குணம் அது.
அம்மா கேட்டதும் தன் காதில் விழாதது போல, “எப்புடிம்மா இருக்கற? அய்யன் எப்புடி இருக்கறாரு?” என்று கேட்டாள்.
“ம்ம்ம்…? ரெண்டு பேரும் நாண்டுகிட்டு சாகாம உசுரோடதான் இருக்கறம்.”
அதே போல் காட்டமாக ஏதேனும் சொல்ல நா துடித்தது. அடக்கிக்கொண்டாள். இதற்குள் மாமியார் வந்து பணிவாக நின்று, அம்மாவைக் கைகூப்பி, “வாங்க…” என இன்முகத்தோடு வரவேற்றாள். அம்மாவோ ஜமீன் தோரணையோடு அவளை அலட்சியப் பார்வை பார்க்க மட்டுமே செய்தாள்.
“சின்னஞ் சிறுசுக,…. வயிசுக் கோளாறுல ஏதோ பண்ணீருச்சுக. வருசம்மு ஒன்றை ஆயிருச்சு. இப்பத் திரும்பி வந்திருக்குதுக. இன்னி மேலு வேற என்னுங் பண்ணாடிச்சி பண்றது?” என இவர்களின் தவறுக்கு மன்னிப்பு வேண்டும் தொனியில் சொன்னாள் மாமியார்.
“சின்னஞ் சிறுசுகல்லாம் இல்ல; ரொம்பப் பெரியவீக. பதனெட்டு தாண்டீட்டாலே மேஜராச்சே! இவீகளுக்கு அப்பவே இரவத்தி ரெண்டு. படிப்பும் வேற ஊருல இல்லாத பெரும் படிப்பு. பத்தாங்க்ளாஸ் படிக்கீலயே அந்தப் பேச்சுப் பேசுவா. எங்க பண்ணாடி அப்பவே, ‘காலேஜு கீலேஜெல்லாம் வாண்டாம்,… அங்க போனாலே, படிக்கறாங்களோ இல்லியோ, லவ்வு கிவ்வுன்னு சாதி கெட்ட காரியத்தச் செய்யறக்கு ஈஸியா தகிரியம் வந்துரும்’னு சொன்னாரு. நாந்தான் இவ படிப்புக்கு சப்போட் பண்ணித் தாட்டியுட்டேன். காலேஜ்ல படிக்க வேண்டீத படிச்சாளோ இல்லியோ, பெரியாரு, அம்பேத்காருன்னு கண்ட கண்ட புஸ்தகத்தையெல்லாம் படிச்சு புத்தி கெட்டுப் போயிட்டா. அவீகய்யன் சொன்னாப்புடியே ஆயிப்போச்சு. பெத்து வளத்துன பாவத்துக்கு சாதி சனம், சொந்த பந்தம், ஊருலகமெல்லாம் எங்களக் காறித் துப்பறாப்புல கெவுருதியான காரியத்தப் பண்ணிப் போட்டா எங்க புள்ள.”
அதற்கும் மேல் சந்தியாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. “அப்புடித்தான்னே வெச்சுக்க. அதுக்கு இப்ப என்னங்கற? என்னையப் பெறச் சொல்லி நானா உங்ககிட்டக் கேட்டன்? நீங்களாத்தான பெத்தீங்க? பெத்தா வளத்தித்தான் ஆகோணும். என்னுமோ ஊரு உலகத்துல எந்தப் பெத்தவங்களும் செய்யாத காரியத்த நீங்க செஞ்சுட்ட மாற பெத்தேன், வளத்துனேன்னு பீத்தீட்டிருக்கறயே…! செரி, அத உடு. உங்க ஜாதி எனக்கு வேண்டாம்னுதான் உங்களையும் ஜாதியையும் விட்டு, என் இஷ்டப்படி, எனக்குப் புடிச்சவரக் கல்யாணம் பண்ணிட்டேன். உங்க ஜாதி வெறிக்கு பயந்துதான் இத்தனை நாளா தூரமா, தலைமறைவா இருந்தோம். இப்ப தைரியமா இங்கயே வந்து இருக்கறம். இப்பவும் உங்க ஜாதி முன்னாடியோ, உங்க வீட்டு முன்னாடியோ வந்து நாங்க நிக்குல; எனக்கு சொத்து குடு, பாகம் குடுன்னு இனிமேலும் நான் வந்து நிக்கவும் போறதில்ல” என ஆவேசப்பட்டாள்.
“நீ பேசுவடீ,… பேசுவ. இதையும் பேசுவ,… இதுக்கு மேலயும் பேசுவ. எங்குளுக்கு அத்தன மானக்கேடு உண்டாக்கீட்டுப் போனாலும், இப்ப உன்னையப் பாக்கோணும்னு தேடி வந்ததுக்கு, எனக்கு இதுவும் வேணும்,… இன்னியும் வேணும். ஒத்தப் புள்ளை பெத்து, உசுரக் குடுத்து வளத்தி, அதுவும் இப்புடிப் பண்ணீட்டுப் போயிருச்சேன்னு உங்காம ஒறங்காம, ங்கொய்யனும் நானும் பட்ட வேதனை, எங்குளுக்கும் கும்படற சாமீகளுக்கும்தான் தெரியும். இத்தனை காலம் எங்க இருக்கறயோ, எப்புடி இருக்கறயோன்னு தெரியாம,
தவியாத் தவிச்சுட்டிருந்தம். நீங்க ஓடிப் போன அப்பவே நம்ம சொந்தக்காரங்க, சாதிக்காரங்கல்லாம் தொளாவிக் கண்டு புடிக்கலாம், வெட்டலாம் குத்தலாம்னு நின்னாங்க. நாங்கதான் அவீக கால்ல உளுகாத கொறையாக் கெஞ்சிக் கூத்தாடி, அது எங்களுக்கு ஒத்தப் புள்ள, அவள எதுவும் பண்ணீறாதீங்கன்னு தடுத்து நிறுத்துனோம். கண் காணாம எங்கயோ போன நீயும் வேய்க்கானமா சிம் கார்ட கள்ட்டி வீசீட்டயாட்டிருக்குது. உன்ற நம்பர கான்டாக்ட் பண்ணவும் முடியில,… நீயும் எங்குளுக்கு ஃபோன் பண்ணவும் இல்ல. எப்புடியோ, இப்ப நீயி இங்க வந்துட்ட விசியம் இந்த ஊருல இருக்கற நம்ம ஜாதிக்காரங்களுக்குத் தெரிஞ்சு, அவிக அங்க இங்கீன்னு பேச, அது கோவில்பாளையம் வரைக்கும் போயிருக்குது. மாமன் காதுக்குப் படவும், புள்ளையோட ஊரு, பேரெல்லாம் விசாரிச்சு, நீதான்னு தெரிஞ்சு, எங்குளுக்கு ஃபோன் பண்ணுனாரு. அப்பவும் உங்கைய்யன் வேண்டாம்னுதான் தடுத்தாரு. நாந்தான் மனசு கேக்காம வந்தேன். வந்ததுக்கு வகுறு நெம்பக் குடுத்துட்ட. செருப்புல போடாம உட்டயே,… அந்த அளவுக்கு சந்தோசம்” என்றாள்.
“அட, ஏனம்முணி ஆத்தாளும் மகளும் இப்புடி டெங்சனாயிக்கறீங்கொ! இதுக்கா இத்தத் தொலை வந்தம்?” மாமா அம்மாவைச் சமாதானப்படுத்த, “ஏங்க் கண்ணு,… அம்மா கோவத்துல, வெசனத்துல அப்புடித்தான் பேசுவாங்க. நீதான் பொறுத்துப் போகோணும். இருந்தாலும் மத்தவீகளாட்ட இல்லாம, இவீக எவ்வளவு நல்லவீகளா இருக்கறாங்க. ஊடு தேடி வந்திருக்கறாங்களே” என மாமியார் இவளை சமாதானப்படுத்தினாள்.
பூங்குன்றனுக்கு அலைபேசியில் அழைத்துத் தகவல் தெரிவிக்க, நண்பனோடு விரைந்து வந்தான். அம்மாவுக்கும் மாமாவுக்கும் வணக்கம் தெரிவித்த அவன், “ஏன் நின்னுட்டே இருக்கறீங்க? வாங்க” என்று வீட்டுக்கு அழைக்க, “இல்ல,… பரவால்ல; இங்கயே அப்புடி மரத்தடீல காத்தாட்டமா நின்னுக்கலாம்” என நாசூக்காக மாமா தெருவோர வேப்ப நிழலுக்கு நகர்ந்தார். அம்மாவும் மற்றவர்களும் சந்தியாவும் அவரைத் தொடர்ந்தனர்.
சந்தியாவின் சொந்த ஊர், ஆழியார் அருகே உள்ள உழவுக்காடு என்னும் குக்கிராமம். விவசாயத்தைக் குலத் தொழிலாகக் கொண்ட ஜாதிக் குடும்பம் எனினும் இவர்கள் அத் தொழில் செய்யவுமில்லை, வேறு சொத்துகளும் கிடையாது. சராசரியான ஏழைக் குடும்பம்தான். அப்பா உள்ளூர் பால் சொஸைட்டியில் எடுபிடிப் பணியாளர். அம்மா இரண்டு மூன்று மாடுகள் வளர்த்து அதே பால் சொஸைட்டிக்கு ஊற்றிக்கொண்டிருந்தாள். அரசுப் பள்ளிகள், அரசு கலைக் கல்லூரி என்றே இவளது படிப்பும் போனதால் பெரிய செலவுகளோ சிரமங்களோ இல்லாமல்தான் இவர்களது வாழ்க்கை கழிந்தது.
இவர்களது ஜாதியில் இவர்களை விட வறுமை கொண்டவர்களாயினும் எப்படிப்பட்ட நிலையிலும் ஜாதிப் பெருமை, ஜாதி கௌரவம், ஜாதி ஆதிக்க குணம் ஆகியவற்றை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அதைப் பற்றி நினைக்கையிலெல்லாம் சந்தியாவுக்கு ஒரு விஷயம் உடனடியாக
நினைவுக்கு வரும். கொம்மாண்டம்பாறைக்காரம்மா என்கிற ஒரு மூதாட்டி இவர்களின் ஊரில் இருக்கிறாள். சற்று புத்தி பேதலித்த அவள், வழியில் யாரிடமாவது கையேந்தி, “டீக் குடிக்கறக்கு அஞ்சுருவா குடு ராசு” என்று கேட்பாள். ஒரு முறை கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த ஒரு விடலைக் கும்பலிடம் அவ்வாறு கேட்க, அதில் ஒருவன், “டீதான வேணும்,… இதையக் குடி” என தான் அருந்திக்கொண்டிருந்த டம்ளரை நீட்டியிருக்கிறான். அந்த புத்தி பேதலிப்புக்காரி, “யாருகிட்டறா எச்சை டம்ளரை நீட்டற? பிச்சை எடுத்தாலும் நான் ………….ச்சி!” என்று சொல்லியிருக்கிறாள்.
இவர்களின் வீட்டிலும் ஜாதியப் பெருமை, ஜாதி பார்த்துப் பழகுவது, தீண்டாமை முதலான நடைமுறைகள் இருக்கும். ஆனால், சந்தியாவுக்கு அது பிடிக்காது. அவள் எல்லோரோடும் ஒரே மாதிரிதான் பழகுவாள். குறிப்பாக, தீண்டாமை காட்டப்படும் தலித்துகள் மீது அவளுக்குப் பரிவும் இரக்கமும் இருந்தது. அதனாலேயே அவள் அம் மக்களிடம் அன்போடும் மரியாதையோடும் நடந்துகொள்வாள். உயர்த்தப்பட்ட ஜாதியினர் மட்டுமன்றி, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரில் கூட இளம் வயது ஆண்களாயினும் பெண்களாயினும், மற்ற ஜாதியைச் சேர்ந்த மூத்தவர்களை அண்ணா, அக்கா, அம்மா, அய்யா என்று மரியாதையாக அழைப்பது போல தலித் பெரியவர்களை அழைக்க மாட்டார்கள். பேர் சொல்லித்தான் அழைப்பார்கள். ஐந்து வயதுச் சிறுவனும் அறுபது – எழுபது வயது தலித் முதியவர்களையும் பேர் சொல்லி, நீ, வா, போ என மரியாதையின்றிப் பேசுவதும், அவர்கள் பதிலுக்கு உயர்த்தப்பட்ட ஜாதிச் சிறார்களையும் ‘ங்க’ விகுதி கொடுத்துப் பேசுவதும் அவளுக்கு வருத்தமாக இருக்கும். அதனால் இவள் மற்ற ஜாதியினரிடம் பேசுவது போலவே தலித்துகளில் மூத்தவர்களை அண்ணா, அக்கா, அம்மா, தாத்தா, பாட்டி என அழைத்துப் பேசுவாள். இது பற்றி மற்ற ஜாதியினர் கேலி செய்வார்கள். பெற்றோர், உறவினர்கள், மற்றும் சுய ஜாதியினர் இது பற்றிக் கண்டித்ததோடு அவர்களைப் போலவே மரியாதையற்றுப் பேச வற்புறுத்தினார்கள். சிறு வயதில் அவர்களுக்கு அஞ்சி, அவர்கள் முன்னிலையிலேனும் அதைச் செய்தாக வேண்டி இருந்தது. ஆனால், ஒன்பதாவது படிக்கும்போதிலிருந்து தைரியமுற்று அனைவர் முன்னிலையிலும் மூத்த தலித்துகளை மரியாதையோடு அழைத்துப் பேசலானாள்.
அதைக் கண்டித்தவர்களிடம், “அவங்களும் நம்மள மாதிரி மனுசங்கதான! நீங்க அதை ஏத்துக்கலன்னா அது உங்க விருப்பம். ஆனா, நான் இப்படித்தான் இருப்பேன்” என சொல்லிவிட்டாள். இதனால் அவளுக்குத் திமிர் பிடித்தவள், ஜாதியில் சேராதவள் என்கிற இழிப் பேர் இவர்களின் ஜாதியினரிடத்திலும் சொந்த பந்தங்களிடமும் நிலவியது. ஆனால், உள்ளூர் தலித் மக்கள் அதன் காரணமாகவே அவள் மீது உண்மையான மரியாதையும், மிகுந்த அன்பும் கொண்டிருந்தனர்.
இந்தக் காலத்திலும் சட்டத்தை மீறி இரட்டைக் குவளை முறை கடை பிடிக்கப்படுகிற கிராமங்களில் ஒன்று இவர்களின் ஊர். தலித்துகள் தேநீரகத்துக்குள்ளோ, ஊர்க் கோவிலுக்குள்ளோ, உயர்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் வீடுகளுக்குள்ளோ பிரவேசிக்க இயலாது.
அவர்களின் வீட்டுத் திண்ணையில் அமரக் கூட தலித்துகளுக்கு அனுமதி கிடையாது. ஏதேனும் காரியமாக வருகிறபோது வாசலிலேயே நிற்கவோ, குத்த வைத்து அமரவோதான் வேண்டும். இதன் காரணமாகவே இவளது தலித் தோழிகளை வீட்டுக்கு அழைக்க இயலாத நிலைமை. இந்தத் தீட்டு நடைமுறை பற்றி அவர்களிடம் பேசும்போது, “நான் படிப்பு முடிச்சு வேலைக்குப் போயி சம்பாரிச்சு இதே ஊர்ல சொந்தமா ஒரு வீடு கட்டணும். அதுல கதவுக்குப் பக்கத்துல, ‘ஜாதிகளையும் செருப்புகளையும் வெளியே கழற்றி வைத்துவிட்டு உள்ளே வரவும்!’னு ஒரு போர்டு மாட்டணும். அந்த வீட்டுக்கு வளவுக்காரங்க எல்லாரும் வந்து போகணும்” என்று சொல்வாள்.
இது தலித் பெரியவர்களுக்குத் தெரிய வர, “தங்கம்,… வயிசில சிறுசா இருந்தாலும் உன்னையக் கையெடுத்து கும்படணுமாட்ட இருக்குது தாயி. எப்பேர்ப்பட்ட மனசு உனக்கு – அதுவும் அந்த ஜாதில பொறந்துட்டு. இந்த நல்ல மனசுக்கு உனக்கு ஒரு கொறையும் வராம, எல்லா சாமீகளும் உன்னயக் காப்பாத்தும் தாயீ…” என்று மனங் குளிர்ந்து வாழ்த்தினார்கள்.
இவள் சொன்னது வளவோடு நிற்குமா? யாரோ பேச்சுவாக்கில் ஊராரிடம் சொல்ல, அது ஊர் முழுதும் பரவி பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. இவர்களது ஜாதியினர் பலரும் வந்து இவளின் பெற்றோரிடம் தெரிவித்து சலசலப்பை உண்டாக்கினர். இவர்களது ஜாதியைச் சேர்ந்த ஊர்த் தலைவரும் கூட இவளது அப்பாவை அவர் வீட்டுக்கு வரவழைத்து விசாரித்து, மகளுக்கு புத்திமதி சொல்லிக் கண்டித்து வளர்க்கச் சொன்னார்.
“அப்புடியே வளவுலயே ஒரு மாப்பளையும் பாத்துக் கலியாணமும் மூச்சுட்டீன்னா இன்னும் பிரமாதமா இருக்கும்” எனப் பலரும் இவளை அவமதிக்கவும் செய்தனர்.
கல்லூரிக்குச் சென்றபோது அது மாநகரம், எனவே அங்கு மாணாக்கர்களிடையே ஜாதியம் இருக்காது எனக் கருதியிருந்தாள். வெளிப்படையாகவும், கிராமங்கள் போலவும் இல்லாவிட்டாலும், அங்கேயும் உயர்த்தப்பட்ட ஜாதி மாணவர்கள் சிலரிடம் ஜாதிப் போக்குகள் இருந்தன. மாணவர்களிடையே ஜாதி, மத, இனச் சார்புக் கட்சிகள், அமைப்புகள் ஆகியவை சார்ந்த அரசியலும், பிற செயல்பாடுகளும் நிலவின. குறிப்பாக தலித்துகள் மீதான ஆதிக்கக் கண்ணோட்டங்கள், அவர்களைத் தாழ்வாகப் பார்க்கும் போக்கு ஆகியவை மேலோங்கியிருந்தன. இந்த நிலைமையில் தலித் மாணவ மாணவிகள் சிலரும் தங்களின் ஜாதிக் கட்சிகள், அமைப்புகள் ஆகியவை சார்ந்த செயல்பாடுகள் கொண்டிருந்ததும் இயல்பு, அவசியமும் கூட என்றே இவளுக்குப் பட்டது. வழக்கம் போலவே அவர்களிடம் இவள் நாட்டமும் அக்கறையும் கொண்டு பழகினாள். அப்போதுதான் பூங்குன்றன் மற்றும் தோழர் – தோழியர்கள் மூலமாக ஜாதியம் குறித்து கூடுதலான விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்ததும்.
வாஸ்த்தவத்தில் கல்லூரிக்குச் செல்கிற வரை ஜாதியம் பற்றி அவள் அறிந்தது ஒன்றுமே இல்லை என்று சொல்லலாம். ஒரு குக்கிராமத்தின் பதினேழு வயது உயர்த்தப்பட்ட ஜாதி மாணவிக்குத் தெரியக் கூடிய சிற்சிறு அறிதல்கள் மட்டுமே அவளுக்கும் இருந்தன. ஜாதியை யார், எதற்காக, எப்படி உருவாக்கினார்கள் என்பது கூட அவளுக்குத் தெரியாது. பூங்குன்றன் மூலம்தான் ஜாதியம் தொடர்பான தமிழக மற்றும் இந்திய சமூக – அரசியல் வரலாறுகளின் முக்கிய விஷயங்கள், கைபர் – போலன் கணவாய் முதல் கௌசல்யா – சங்கர் கொலை வழக்கு வரை சொல்லப்பட்டு, அறிந்துகொண்டிருந்தாள். வர்ணாசிரமம் எனும் ஜாதிய முறைமையால் உருவாக்கப்பட்ட நான்கு ஜாதிப் பகுப்புதான் பல்கிப் பெருகி ஆயிரக்கணக்கான ஜாதிகளாகவும், அதன் உட்பிரிவுகள் மற்றும் குலம் கோத்திரங்களாகவும் வளர்ச்சியுற்றிருக்கிறது என்பது அவளுக்கு வியப்பூடியது என்றால், ஆயிரத்தாண்டுகளாக உயர் அடுக்கு ஆதிக்க ஜாதி வெறியர்கள் தலித்துகள் மீது நிகழ்த்திய கொடுங்கோன்மைகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தின. பூங்குன்றன் கொடுத்த பெரியார், அம்பேத்கர் நூல்கள் மூலம் அவள் அறிந்தும் உணர்ந்தும் கொண்டது அவளுக்குள் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.
அதன் விளைவாக அவள் நாத்திகவாதியாக ஆனதோடு, பெண்ணியவாத சிந்தனைகளையும் கொண்டுவிட்டாள். கோவிலுக்குப் போகாதது, கடவுள்களை வழிபடாதது, பொட்டு வைத்துக்கொள்ளாதது ஆகியவற்றைப் பார்த்துவிட்டு, அவள் ஏதாவது கிறிஸ்துவப் பையனையோ, இஸ்லாமியப் பையனையோ காதலிக்கிறாள் போலும் என்று கூட ஊருக்குள்ளும் உற்றார் – உறவுகளுக்குள்ளும் சந்தேகப் பேச்சு அடிபட்டது. அதை அவளிடமே கேட்டவர்கள், அவள் சிரித்தபடி பேசிய பெரியாரிய நாத்திகம் மற்றும் பெரியாரியப் பெண்ணியவாதப் பேச்சுகளைக் கேட்டு அரண்டனர். இது போன்ற பேச்சுகளையோ சிந்தனைகளையோ இவர்களின் சுற்று வட்டாரத்தில் எங்கும் கேட்க இயலாது. பொதுவாக சிந்தனை என்பதையே பார்க்க முடியாத பகுதி அது.
இந்த சமயத்தில் இவள் திசை மாறிப் போவதின் ஆபத்தை உணர்ந்து, படிப்பை இள நிலையோடு நிறுத்தி, திருமணம் செய்துவிட அப்பாவுடன் அம்மாவும் முயன்றாள். இவள் பிடிவாதமாக மறுத்து முதுகலையைத் தொடர்ந்தாள்.
அந்த இரு வருடங்களில் பூங்குன்றன் தலித் விடுதலைச் செயல்பாடுகளில் தீவிரமாக இருந்தான்.
வரலாற்றுக் கால ஜாதிய ஆதிக்கம், ஜாதி வெறி ஆகியவை ப்ரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு படிப்படியாகக் குறைந்து, இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு பொதுப் புழக்கத்தில் ஜாதி பார்ப்பதோ, ஜாதி என்ன என்று கேட்பதோ இழி செயல் என்கிற நிலை இருந்தது. கல்வி அறிவும், உலக நாகரிக அறிதலும் பெருகி, சமூகங்கள் மேம்பட்டுவந்த அந்தக் காலகட்டத்தில், இனி ஜாதி உணர்வுகள் படிப்படியாகக் குறைந்துவிடும் என்றிருந்த நிலையில், அரசியல் துணையோடு ஆதிக்க ஜாதிகள் ஒவ்வொன்றாக ஜாதி சங்கங்கள் அமைத்தன.
பெரும் படிப்புப் படித்தவர்களே ஜாதிக் கட்சிகள் தொடங்கி அரசியல் பிழைத்தார்கள். இதன் மூலம் தொண்ணூறுகளில் மீட்டுருவாக்கம் பெற்ற ஜாதியம், சமகாலக் கணிணி – இணைய இளைஞர்களையும் ஜாதிப் பெருமை, ஜாதி ஆணவம் கொள்ள வைத்திருந்த நிலையில், அதற்கு எதிரான போராளிகளாக பூங்குன்றன் போன்றவர்கள் இருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக சந்தியா போன்றவர்கள் துணை நின்றனர்.
இவள் சிறு வயது முதலே தலித்துகள் மீது கரிசனம் கொண்டிருந்தவள் என்பதை அறிந்ததிலிருந்தே இவள் மீது பூங்குன்றனுக்குத் தனி மதிப்பு. தற்போது அவள் மென்மேலும் தங்களுக்கு ஆதரவாக இருப்பது பற்றி இன்னும் மரியாதை கொண்டிருந்தான். இளம் வயதுகளில் உயர்த்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த ஓரிரு ஆசிரியர்கள், மாணவி ஒருத்தி உட்பட ஆதிக்க ஜாதியினர் பலராலும் ஜாதிய ஆதிக்கம், அடக்குமுறை, அவமானம் ஆகியவற்றுக்கு உள்ளாகியிருந்த துயர அனுபவங்கள் அவன் மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியிருந்தன. அந்த நிலையில் அவனுக்கு சந்தியா நம்பவியலாத அதிசயமாகவே தோன்றினாள். தோழர் – தோழிகள் எல்லோரிடமும் அவள் காட்டுகிற அன்பு, அக்கறை, அதைவிட தலித்துகள் மீது அவள் கொண்டிருக்கிற சமூக அக்கறை ஆகியவற்றின் மீதான அவனது மரியாதை, மெல்ல மெல்லக் காதலாகியது. அவளுக்கும் அப்படித்தான், அவன் மீது கொண்ட மரியாதை, பரிவு ஆகியவை அவனுக்கு என்றும் துணை நிற்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, காதலாக மாறியது.
படிப்பு முடிந்த உடனே சந்தியாவுக்கு வீட்டில் திருமண நெருக்கடி. வேறென்ன செய்வது? பூங்குன்றனுடன் ஓடிப் போய், கர்நாடகா, கேரளா, ஆந்திரா என்று அண்டை மாநிலங்களில் தலித் இயக்க நண்பர்கள் துணையுடன், கிடைத்த கூலி வேலைகளையோ சம்பள வேலைகளையோ செய்து சிற்சில காலமாகக் கழித்துவிட்டு, தலைமறைவு வாழ்க்கை போதும் என்று சென்ற வாரம்தான் திரும்பி வந்திருந்தனர். என்றைக்காவது இது தன் வீட்டாருக்குத் தெரியத்தான் போகிறது என்று எதிர்பார்த்தே இருந்தாள். அலைபேசிக் காலமானதால் சேதி விரைந்து பரவி, இதோ, அம்மாவும் மாமாவும் வந்திருக்கிறார்கள்.
வந்தவுடனே அம்மா கோபமாகப் பேசியிருந்தாலும் சமாதானமாகத்தான் வந்திருக்கிறாள் என்பது பின்னர் தெரிந்தது.
“எப்படியோ அவ விருப்பப்படி கல்யாணம் பண்ணீட்டா. எங்களுக்கு இருக்கறது இவ ஒரே மகதான். எங்கனால முடிஞ்சத இவளோட கல்யாணத்துக்குன்னு சேத்து வெச்சிருந்தோம். அந்த நகை, பணம் எல்லாம் சீதனமாக் குடுக்கோணும். அதுக்கு உங்க ரெண்டு பேர்த்தையும் வீட்டுக்கு வரச் சொல்லலாம்னு கூப்படறதுக்கோசரம்தான் வந்தேன்” என்றாள்.
அதற்கு இவள் பதில் சொல்வதற்குள், “நீங்க இந்த அளவுக்கு எங்கள மன்னிச்சு ஏத்துகிட்டதே போதுங்மா. மத்தபடி வரதட்சணை, சீதனம்
இதெல்லாம் எதுவும் எங்களுக்கு வேண்டாம்” என பூங்குன்றனே சொல்லிவிட்டான்.
அம்மா அதன் பிறகுதான் சன்னமாக முறுவலித்து, “உங்களுக்கு வேண்டாம்னா நீங்க அதை யூஸ் பண்ண வேண்டாம்; நாளைக்கு உங்களுக்குப் பொறக்கப் போற கொழந்தைகளுக்காக பேங்க்ல போட்டு வெச்சுக்கங்க. இல்லாட்டி அதைய வெச்சுட்டு நாங்க என்ன பண்ணப் போறம்” என்றவள் தற்போது சந்தியா வைத்திருக்கும் அலைபேசி எண்ணையும் வாங்கிகொண்டு, “உங்குளுக்கு எப்ப சௌரியப்படுமோ அப்ப வாங்க. வர்றக்கு மொத நாள் ஒரு ஃபோன் பண்ணி சொல்லீட்டா எங்குளுக்கும் சௌரியமா இருக்கும். நாளைக்கே வந்தாலும் செரி” என்றாள்.
“எதுக்கு நாள் தள்ளிப் போட்டுட்டு? வேற சோலி எதும்மில்லீன்னா நாளைக்கே போயிட்டு வந்துருங்களே” என்றார் மாமாவும்.
பூங்குன்றனிடம் அவனது அப்பா எங்கே என்று விசாரித்து அறிந்து கொண்ட அம்மா, பிறகு அவனது அம்மாவிடம், “செரி,…. உம் புருசன் வந்ததும் அவுருகிட்டயும் நாங்க வந்து அளச்சுட்டுப் போன விவரத்த சொல்லி, இவிக ரெண்டு பேர்த்தையும் தாட்டியுடுங்க” என்று கேட்டுக்கொண்டாள்.
அவளும், “நெம்ப சந்தோசமுங் பண்ணாடிச்சி. அப்புடியே பண்ணீர்றோம்” எனக் கை கூப்பி விடைகொடுத்தாள்.
வந்தவர்கள் சென்ற பிறகு பூங்குன்றனின் நண்பன் அவனிடம் கன்னடத்தில் எதுவோ சொல்ல, அவன் தமிழிலேயே பதிலளித்தபோதுதான், நண்பன் இவளது அம்மா வந்து அழைத்துச் சென்றது பற்றி சந்தேகப்படுவது புரிந்தது.
இப்படி சமாதானமாகப் பேசி அழைத்து நயவஞ்சகமாக ஆணவக் கொலை செய்வது, அல்லது தம்பதியரைப் பிரித்து, பெண்ணுக்கு வேறு கட்டாயத் திருமணம் செய்விப்பது ஆகியவை ஆங்காங்கே நடப்பது தெரிந்ததுதான். ஆணவக் கொலைக்கு அஞ்சித்தானே இவர்கள் இவ்வளவு காலம் தலைமறைவாக இருந்ததும். ஆனால், எவ்வளவு காலத்துக்குத்தான் அப்படி பயந்து வாழ்வது? ஜாதி ஆதிக்கத்துக்கும், ஜாதி வெறிக்கும் எதிராக செயல்படுபவர்கள், ஜாதியை ஒழிக்கப் பாடுபடுபவர்கள் இப்படி ஓடி ஒளிந்துகொண்டிருந்தால் முடியுமா? வாழ்வோ, சாவோ – எதையும் எதிர்கொள்வது என்கிற முடிவோடே வந்திருந்தனர்.
“அப்புடியெல்லாம் செய்யறதா இருந்தா சாதிக்காரங்க அதுக்கு நின்னபோதே இவிக ஐயனும் அம்மாளும் செரின்னு சொல்லியிருப்பாங்களே. அது வேண்டாம்னு கெஞ்சிக் கூத்தாடித் தடுத்தம்னு சொல்றவீகளா அப்புடிப் பாதகம் பண்ணப் போறாங்க? எல்லார்த்தையும் அப்புடி சந்தேகப்பட முடியாது. சாதி விட்டுக் கல்யாணம் பண்ற எல்லாத்தையுமா கொலை பண்றாங்க?” என்றான் பூங்குன்றன்.
“ஆமா…! அக்கம் பக்கத்து ஊருகள்லயே எனக்குத் தெரிஞ்சு இதே மாற சோடீக கல்யாணமாயி, கொளந்த பெத்து, பல வருசமா எந்த எடைஞ்சலும்
இல்லாம வாழ்ந்துட்டுத்தான் இருக்கறாங்க. என்ன,… சாதிக்காரப் பொண்ணு ஊட்டுல இருந்து செத்தாலும்மில்ல, பொளச்சாலுமில்லேன்னு ஒதுக்கி வெச்சிருவாங்க. அவிக ஊட்டுக்கோ, அவிக சொந்த பந்தங்ககிட்டயோ இவிக போக வர முடியாது. ஆனா இவுங்கம்மா இங்க நம்மூடு தேடி வந்து, மொறையா அவுங்கூட்டுக்கு வரச் சொல்லி அளப்புக் குடுத்துட்டுப் போறாங்களே…! அது எப்பேர்ப்பட்ட மனசு. எப்பேர்ப்பட்ட காரியம். நீங்க தைரியமாப் போயிட்டு வாங்க” என்றாள் மாமியாரும்.
ஜங்க்ஷன் எனப்படும் ஊர் மைய முச்சந்தியில் பேருந்திலிருந்து இறங்கி நடக்கத் தொடங்கியதுமே ஆங்காங்கிருந்து பார்வைகள் இவர்கள் மீது படியலாயின. கவனித்தவர்கள் கவனிக்காதவர்களை அழைத்து கவனப்படுத்தினர். அவர்களில் சிலர் ஒருவருக்கொருவர் ஏதோ கிசுகிசுத்துக்கொண்டனர். சிலர் இவளை அழைத்து நிறுத்தி விசாரிக்கவும் செய்தனர். அம்மா வந்து அழைத்ததின் பேரில்தான் வந்தோம் என்று சொன்னபோது அவர்களுக்கு அது பேராச்சரியமாக இருந்தது. இவர்களின் வீதியில் இவள் மீது அன்பு கொண்ட சில பெண்கள், சின்னஞ்சிறார்கள் கூடி இவர்களோடே சேர்ந்து ஆரவாரித்தபடி வந்தனர். இவர்களின் வீட்டை அடைந்தபோது அக்கம் பக்க்த்து வீடுகளில் அப்போது இருந்த ஆண்களும், வயோதிகர்களும் கூட வந்து சேர்ந்துவிட்டனர். சந்தியாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
“ஆரெல்லாமோ சொன்ன மாறயே பண்ணீட்டயே…”, “நெனைச்ச காரியத்த சாதிச்சே போட்டயே…”, “எங்குளுக்குக் கல்யாணச் சாப்பாடு இல்லாமப் பண்ணீட்டயே…” என ஆளாளுக்கு ஒவ்வொன்றைச் சொல்லிக்கொண்டிருக்க, அவளுக்கு வெட்கமாகவும் இருந்தது.
அரவம் கேட்டு கதவோரத்திலிருந்து எட்டிப் பார்த்த அம்மா, இவர்கள் வாசலை அடைந்ததும், “சித்தெ நில்லுங்க” என்றுவிட்டு மறைந்தாள்.
ஆரத்தி எடுக்கத்தான் என எல்லோரும் எதிர்பார்த்திருக்க, கையில் தாம்பாளத் தட்டோடும், உடன் அப்பாவோடும் அம்மா வெளிப்பட்டாள். தாம்பாளத்தில் ஆரத்திக்கு பதிலாக நகைகளும் பணக் கட்டுகளும் இருந்தன. “இதுல முப்பது பவுன் நகை, அஞ்சு லச்சம் ரொக்கம் இருக்குது. உன் கல்யாணத்துக்காக நாங்க சேத்தி வெச்ச சீதனம் இது. வாங்கிக்க” என்றபடி அம்மா நீட்ட, சட்டென காரியம் பிடிபடாத குழப்பத்தோடே சந்தியா அதைப் பெற்றுக்கொண்டாள்.
அருகில் இருந்த அயலக முதியவர், “என்னம்முணி இது,… வாசல்ல வெச்சு சீதனம் குடுக்கற…? ஊட்டுக்குள்ள கூப்புட்டு வெச்சுக் குடுக்காம…?” என்று கேட்டார்.
“பெத்த கடமைக்கு அதையக் குடுக்க வேண்டீது எங்க கடமை. அதையக் குடுத்தாச்சு. ஆனா, அதுக்காக சாதி கெட்டுப்போனவள ஊட்டுக்குள்ள உட முடியுமா?” என்றாள் அம்மா.
அப்பா இவளிடம் ஒரு வார்த்தையும் பேசாமல், சாட்சி நின்ற எல்லோரையும் ஒரு பூடகப் பார்வை பார்த்துவிட்டு அம்மாவிடம் திரும்பி, “செரி,… எனக்கு சொசைட்டிக்குப் போறக்கு நேரமாச்சு,… சோத்தப் போடு. அவிகளும் சாப்படறதா இருந்தா, ரெண்டு பேருக்கும் திண்ணைலயே எலையப் போட்டு, அவீக உண்டுட்டுப் போனவிட்டு மறக்காமத் திண்ணைய சாணி போட்டு வளிச்சு, கோமியம் தெளிச்சு சுத்தப்படுத்தீரு!” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
சந்தியாவின் கைகள் நடுங்கி தாம்பாளத் தட்டு பாதங்களிலேயே விழுந்து, சீதனங்கள் சிதறின.
– நடுகல், ஆகஸ்ட் 2021.