கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 16, 2021
பார்வையிட்டோர்: 3,509 
 
 

மே மாதத்து வெய்யிலில் பாதரசம் நூற்றி ஆறை தொட்ட நாட்களில், நானும் அவரும் தியாகராய நகரத்து தெருக்களில் அலைந்து கொண்டிருந் தோம். வாகனங்கள் எழுப்பிவிட்ட செம்புழுதி மூக்கில் ஏறி எரிச்சலை உண்டு பண்ணியது. துடைக்கத் துடைக்க ஊற்றெடுக்கும் வியர்வை கழுத்து வழி ஓடி முதுகுப் பள்ளத் தில் பாய்ந்து இடுப்பு வேஷ்டியை நனைத்துக் கொண்டிருந்தது. அவர் எழுத்தாளர். விமரிசகர். நான், எழுத்தை ஆராதிக்க, பார்க்கும் எழுத் தாளர்களிடம் எல்லாம் உபதேசம் கேட்டுக் கொண்டிருந்த காலம்.

அவர் காலத்துக்கு முன்பு எழுத ஆரம்பித்து இன்றுவரை எழுதிவரும் இன்னொரு எழுத்தாளருக்கு மணி விழா நடத்தி, பணமுடிப்பு அளிக்க வேண்டும் என்ற திட்டம். பண வசூலுக்காக யாரைப் பார்ப்பது என்று காலையில் திட்டம் தீட்டி பகலெல்லாம் நடப்பது பழகிவிட் டது. திட்டம் ஆரம்பித்தது பனிக் காலத்தில்; செயலாற்ற வரும்போது கோடை வந்துவிட்டது.

“நாங்கள் இலக்கியப் பத்திரிகை நடத்திய முப்பதுகளில் ஒரு ஓவியர் படம் போட்டார். அவர் மவுண்ட் ரோடில் ஒரு விளம்பரக் கம்பெனி வைத்திருக்கிறாராம். அவர் விலாசத் தைத் தேடிக் கண்டுபிடித்து அவரிடம் தன் கொடை கேட்கலாம்” என்றார் அவர்.

“மவுண்ட் ரோடு என்பது சைதாப்பேட்டை பாலத்தில் ஆரம் பித்து மன்றோ சிலை வரைக்கும் போகிறது. இதில் எங்கே தேடுவது” என்றேன் நான்.

அவர் சிரித்துக் கொண்டார். “இல்லையில்லை. தினமணி ஆபீஸ் பக்கம்தான் இருப்பதாகச் சொன் னார்கள். அந்த வட்டாரத்தில் தேடினால் போதும்.”

பஸ் ஸ்டாப் அருகே என் கால்கள் நின்ற ன…. |

“ஏன் நின்று விட்டாய்?”

“பஸ்ஸில் போகலாம்….”

“என்னப்பா இது. இதுக்குப் போய் பஸ்ஸா… கொஞ்சம் நடந் தால் ஜெமினி… அதைத் தாண்டி கொஞ்சம் நடந்தால் தினமணி ஆபீஸ்.”

அவர் பதில் எனக்கு கோபத்தை உண்டு பண்ணியது. அதை வெளிக் காட்டாமல், இவரிடம் மாட்டிக் கொண்டோமே என்று பல்லைக் கடிக்கத்தான் என்னால் முடிந்தது.

Koshamattravargal-pic2அவரிடம் வாதாடுவதில் பயனில்லை. அவரிடம் உள்ளது இரண்டு வேஷ்டி இரண்டு சட்டை. முதல் நாள் போட்ட ஜோடியை அடுத்த நாள் தும்பைப் போல துவைத்துக் காயப் போட்டு விடுவார். காலில் செருப்புப் போட மாட்டார். மகரவிளக்குக்குப் போகும் அய்யப்ப பக்தர்களின் விரதமல்ல அது… ஆயுசு பூரா அப்படித்தான். செருப் பும் மூன்றாவது ஜோடி சட்டை வேஷ்டியும் வாங்க முடியாத ஏழை அல்ல அவர், ஊரில் கொஞ்சம் நிலமுண்டு. காலேஜில் படிக்கும் போது காந்திஜி இவர் கண்ணில் பட்டு விட்டார். ‘நாடு அன்னியன் பிடியிலிருந்து விடுபடும் வரை நீங்கள் கல்லூரியை விட்டு வெளி யேறுங்கள்’ என்று மாணவர் கூட் டத்தில் உரையாடினார். எம்.ஏ. வகுப்பில் படித்துக் கொண்டிருந்த இவர், காந்திஜி ஊரை விட்டு வெளியேறுவதற்குள் கல்லூரியை விட்டு வெர் வெளியேறி விட்டார். அப்புறம் என்ன? உப்பு சத்யாக் இரகம், தனிநபர் சத்தியாகிரகம். ஆகஸ்ட் புரட்சி…

பனகல் பார்க்கைத் தாண்டி விட்டோம்…

“காந்திஜியின் அரசியலுக்கு மதமும் ஒரு ஆணிவேராக இருந்தது என்று சொல்லலாமா சார்.”

“உண்மைதான். இந்த தேசத்தில் மதம் மக்களின் உயிர்ப்புச் சக்தியில் கலந்து இருக்கிறது. அந்நியப்பட்ட எந்த கொள்கையும் இங்கே வேரூன்ற முடியாது. காந்திஜி தென்னாப் பிரிக்காவிலிருந்து திரும்பி வந்து ஓராண்டு காலம் சுற்றுப் பயணம் செய்யும் போது அதை உணர்ந்து கொண்டார். மதத்தின் அடிப்படையில்தான் அவர் அரசியலை அணுகினார். ஆனால் எந்தக் காலத்திலும் அவர் மதவாதி ஆகிவிட வில்லை. எல்லா மதங்களுக்கும் அடிப்படையான எளிமையையும், உண் மையையும், அன்பையும் அவர் தன் அரசியலுக்கு அஸ்திவாரமாக்கிக் கொண்டார்.”

ஒரு பெரிய தலைமுறையே உண்மைக்காக, தன்னை அர்ப்பணித்துக் கொண்டு எளிமையாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குப் பின்னால் இந்தச் சொத்தை இவர்கள் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வார்களா, அடுத்த தலைமுறையினர் இந்த உயரிய கொள்கைகளை ஏற்றுக்கொள்ள பக்குவப்பட்டிருப்பார்களா என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. அந்த அறுபதுகளில், வளர்ந்து வரும் தலைமுறை எனக்கு நம்பிக்கையூட்டுவதாக இல்லை. தவறுகள் தலையிலிருந்து ஆரம்பிக்கின்றன. எளிமையும் உண்மையும் போய்விட்டன. சாமர்த்தியமும். கெட்டிக்காரத்தனமும் தக்க வைக்கப் பட்டுள்ளது. காந்திஜியோடு ராஜ்காட்டில் அவர் கொள்கையையும் புதைத்து விட்டவர்கள், ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்கத்தில் இருக்கிறார்கள்.

காலையில் சாப்பிட்டது… மணி மூன்றாகி விட்டது. பசி வயிற்றைக் கிள்ளுகிறது. அவர் காலையில் வந்து கூப்பிட்டவுடன் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டேன். பையில் காசு இருக்கிறதா என்று கூடப் பார்க்கவில்லை. ஜிப்பா பையில் கையை விட்டு காசு களை நெருடினேன். வெளியே எடுத்து எண்ணுவதற்கு வெட்கம். முக்கால் ரூபாய் தேறும் என்று மனதிற் குள் ஒரு அனுமானம்… இரண்டு பேர் டிபன் காபி சாப்பிட அது போதாது. இந்த மனிதரிடம் டிபன் வேண்டும் என்று எப்படி வெட்கத்தை விட்டுக் கேட்பது?

Koshamattravargal-picதினம ஆபீஸ் இருந்த எஸ்டேட்டிற்குள் நுழைவதற்கு முன் ஒரு பீடாக் கடை… பளபளக்கும் தாம் பாளத்தில் பப்பாக்களிலிருந்து எதை எதையோ வெற்றிலையில் தடவி, பீடா தயாரித்துக் கொண்டிருந்தார் ஒரு வடநாட்டுக்காரர். இப்பொழு தெல்லாம் பீடா போடுகிற பழக்கம் சென்னைவாசிகளிடம் வெகுவாகப் பரவி இருக்கிறது. தஞ்சை மாவட்டத் தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் சிலர், சென்னையில் பல இடங்களில் வெற்றிலைப் பாக்கு சீவல் கடை வைத்திருந்தனர். அவர்கள் கடைகள் முன் எப்போதும் ஒரு கூட்டம் நின்று கொண்டிருக்கும். இப்போதெல்லாம் பீடாக் கடையைச் சுற்றி ஒரு கூட்டம் நிற்கிறது. சென்னை வாசிகளை அப்போது புதிதாகக் கவர்ந்த இன் னொரு ஐட்டம் லஸ்ஸி. தயிரில் சர்க் கரையைப் போட்டு சாப்பிடும் பழக் கம் தமிழ்நாட்டுக்குரியதல்ல. பம்பாய் இறக்குமதி பீடாக் கடை முன் அவர் நின்ற வுடன் எனக்கு ஆச்சரியம். அவர் பீடா போடமாட்டார். எனக்கு பீடா வாங்கிக் கொடுக்கப் போகிறாரா…. துெ என்ன வயிற்றெரிச்சல், பசி தின்னுகிறது. இந்த லட்சணத்தில் பீடாவா….

“ஏம்பா இங்க ஒருத்தர் கிருபாகரன்னு பேரு. விளம்பரக் கம்பெனி நடத்துகிறார். தெரியுமா?” என்று பீடாக்காரரை அவர் கேட்டார்.

பீடாக்காரர் கிராக்கிகளை கவனிப்பதில் மும்முரமாக இருந்தார்.

“ஏன் சார். இந்த வடநாட்டுக் காரருக்கு கிருபாகரனை எப்படித் தெரிந்திருக்க முடியும்?”

“தெரிந்திருக்கலாம். அவருக்கு பீடா போடும் வழக்கம் உண்டு. வடநாட்டில் நடக்கும் காங்கிரஸ் மாநாட்டுக்குப் போய் போய், அவருக்கு காந்தியம் படிந்ததோ என்னவோ பீடா காவி படிய ஆரம்பித்து விட்டது.”

“யார் சார் சொன்னீங்க. கிருபாகரனா? அதோ அந்த மாடியில் பாருங்க அதுவா?”

பீடாக்காரர் குறிப்பிட்ட மாடியைப் பார்த்தோம். சுசீல் பப்ளிசிட்டிஸ் என்ற போர்டு தெரிந்தது.

“அதுவாகத்தான் இருக்கும்….. அவர் மனைவி பெயர் சுசிலா. வங்களாத்துப் பெண்” என்றார் அவர்.

சுசீல் பப்ளிசிட்டீஸ் மூன்றாவது மாடியில் இருந்தது. படிக்கட்டுகள் கழுவி விடப்பட்டு பல யுகங்கள் ஆகி இருக்கும். படிக்கட்டு திரும்பும் ஒவ்வொரு மூலையிலும் இரண்டு அடி உயரத்துக்கு வெற்றிலைப் பாக்குத் துப்பித் துப்பி குவிந்து கிடந்தது.

ஆனால் கிருபாகரன் அறை படிக்கட்டுகளைப் போல அசுத்தமாக இல்லை. ரொம்ப ஆடம்பரமாக வைத்திருக்கிறார். சுழலும் நாற்காலியில் பீடாவை மென்று கொண்டு அட்டகாசமாக உட்கார்ந்திருந்தார் கிருபாகரன்.

“கிருபா …” எங்களை ஏறெடுத்துப் பார்த்தார் கிருபாகரன்.

“அடேடே… வாங்க… வாங்க…. ஷௌக்கியமா?” வாயில் பீடாவும் எச்சிலும் இரண்டு கன்னத்தையும் அதை வைத்திருந்தது. ஜன்னலுக்கு வெளியே போய் துப்பிவிட்டு வந்தார்.

“யுகாந்தரமாச்சே உங்களைப் பார்த்து. எப்படி இருக்கீங்க?”

“சௌக்கியமா இருக்கேன்.”

“எங்க இருப்பிடம்.”

“திருவல்லிக்கேணியில்.”

“சொந்த வீடா…”

“சரிதான் போங்க… சொந்த வீடாவது. எண்பது ரூபாய் குடக் கூலி.”

அவர் என்னை கிருபாகரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். “இளம் எழுத்தாளர், இலக்கியத்தில் ஆர்வ முடையவர்…”

எழுந்து கை கொடுத்தார்.

“எங்க வேலை பார்க்கிறார்?”

“வேலைன்னு ஒண்ணும் இல்லை. முழு நேரமும் இலக்கியத்தையே வேலையா வச்சுக்கலாம்னு எண்ணம்” என்றேன் நான்.

“ஏன், இவுங்கள்ளாம் செய்த பைத்திக்காரத்தனத்தை நீங்களும் செய்யுறீங்க. நாம்ப என்ன அமெரிக்காவிலயா இருக்கோம்…. அங்கதான் ஒரு நாவல் வெற்றியடைஞ்சிருச்சுன்னா அதை எழுதினவன் கலிபோர்னியாவில எஸ்டேட் வாங்க முடியுமாம்….”

இதற்கு நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை.

“இவர் ஒரு இலக்கிய ராக்ஷசன் சார்… எனக்கு இலக்கியத்தில் பயிற்சி ஏற்படுத்தினதே இவர்தான்” என்று அவரைப் புகழ்ந்தார்.

“ஞாபகம் இருக்கா சார்.. கண்ணனூர் ஜெயில்ல நாம ஒண்ணா இருந்தமே. அப்பதானே இலக்கியங் களைத் தேடிப் புடிச்சு படிச்சோம்” என்றார்.

“ஆமாமா…”

என்னைப் பார்த்து கிருபாகரன் பேச ஆரம்பித்தார். “சார் எனக்கு ஆங்கில இலக்கியங்கள் படிக்கணும்னு ஆசை…. இவர்கிட்ட கேட்டேன், டிக்கன்ஸ்லயிருந்து ஆரம்பிக்கலாமா, ஜேன் ஆஸ்டின்ல இருந்து ஆரம் பிக்லாமான்னு… இவர் சொன்னார்… ‘அதெலாம் இருக்கட்டும். இதைப் படிங்கோ’ன்னு மெல்வில் எழுதின மோபி டிக்கைக் கொடுத்தார். அடடா… முதல் புஸ்தகமே க்ரேட் நாவல்… அப்புறம் தொடர்ந்து டால்ஸ்டாய்.. துர்கனேவ்.”

“இப்ப ஏதாவது படிச்சுக்கிட்டிருக்கீங்களா….?”

“இப்ப என்னத்தைப் படிக்கிறது. இந்துவுல வர ஷேர் மார்க்கட் கொடேஷன்தான் படிச்சிண்டு இருக்கேன்.”

“கம்பெனி நன்னா நடந்திண்டு இருக்கு போல இருக்கே?”

“அதுக்கென்ன. ஆனா விளம்பரக் கம்பெனியில என்னா சம்பாதிச்சிட முடியும். இதெல்லாம் ஒரு கவர். என் பிசினெஸே வேற…”

“என்னது?”

“உங்கள்ட சொல்றதுக்கென்ன… சிமிண்ட் பத்தாக்குறை வந்தது இல்லியா. அப்ப நம்பளவர்தானே மந்திரியா இருந்தாரு…”

“யாரது?”

“அதான் நம்ப கூட கண்ணனூர் ஜெயில்ல இருந்தாரே…!”

பெயரைச் சொன்னார் கிருபாகரன். அவர் விழிகளை அகல விரித்து சுவாரசியமாகக் கேட்சு ஆரம்பித்தார்.

“அவருகிட்ட போய் எனக்கு ஏதாவது செய்யப்படாதான்னு கேட்டேன். ஐயாயிரம் மூட்டைக்கு சிமின்ட் பர்மிட் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தார். மூட்டைக்கு இருபது ரூபா லாபம் வச்சு ஒரு சேட்கிட்ட தள்ளி விட்டுட்டேன்…. அதிலிருந்து இந்த பர்மிட் சமாச்சாரம்னா எல்லாம் கிருபாகரனை பிடின்னு எங்கிட்ட வர ஆரம்பிச்சுட்டாங்க… வாழ்க்கை சௌக்கியமா ஓடிண்டு இருக்கு”.

அவர் யோசனையில் ஆழ்ந்தார்…

“இதப்பாருங்க… இதெல்லாம் உங்களுக்குப் பிடிக்காம இருக்கலாம். வாழ்க்கைப் போராட்டம் ஒரு சூறாவளிக் காத்து மாதிரி அடிக்கிறபோது, லட்சியம் ஒரு கிழிஞ்ச காத்தாடி மாதிரி ஆலாப் பறக்க வேண்டியதுதான்.”

அவர் வருத்தப்படுகிறார் என்று தெரிந்தது.

‘இந்த கிருபாசரன் எப்படி இருத் தான் எப்படி மாறி விட்டான்?’

“என்ன நானே பேசிக்கிட்டு இருக்கேனே… என்ன விஷயமா வந்தீங்கன்னு சொல்லவேயில்லையே….”

“ஒண்ணுமில்லே. நம்ப ராமசாமிக்கு மணிவிழா வரது. உனக்குத் தெரியும் அவன் இலக்கிய உலகத்துக்கு செய்த சேவை… தமிழ் சிறுகதைக்கு ஒரு பரிமாணம் கொடுத்தவன். இலக்கிய படைப்பாளிகளை தேடித் தேடிப் பிடிச்சு தன் பத்திரிகையில இடம் கொடுத்தவன். அவன் இப்ப நல்ல நிலைமையில் இல்லை… மணிவிழாவை சிறப்பா நடத்தி பணமுடிப்புக் கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். அவனை கேட்டா வேண்டாம்னுதான் சொன்னான். வற்புறுத்தி சம்மதிக்க வச்சிருக்கோம்… உன்கிட்டவும் ஏதாவது நன்கொடை வாங்கிண்டு போகலாம்னு வந்தோம்.”

“அடே… ராமசாமிக்கு அறுபது வயசு ஆயிடுத்தா … இலக்கிய ராசக்ஷன்னா அவன்…”

அது என்ன வார்த்தை இலக்கிய ராக்ஷசன். எனக்குப் புரியவில்லை.

கிருபாகரன் மேலும் தொடர்ந்தார்.

“அவனுக்க எவ்வளவு வேணும்னாலும் செய்யலாமே… எத்தனை சாதனை பண்ணியிருக்கான்!” என்று பையிலிருந்த மணிபர்சை வெளியே எடுத்தார் கிருபாகரன். ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்கள்.”

“போதுமா?”

“போதுமான்னு என்ன கேள்வி… அவரவர்கள் பிரியப்பட்டுக் கொடுப்பதுதான்” – நான் ரசீது போட்டுக் கொடுத்தேன்.

“நிறைய அவனுக்கு நான் செய்திருப்பேன். இப்ப பணம் இல்லே …. நேத்துதான் இருக்கிறதெல்லாம் திரட்டி பதினாறாயிரம் ரூபா கட்டி வான்கரர்ட் வண்டி ஒண்ணு டெலிவரி எடுத்தேன். வாசல்ல நிக்குமே பார்க்கல்ல!”

“கவனிக்கல்லே …”

சுசீல் பப்ளிசிட்டியை விட்டு கீழே இறங்கி வந்தோம். வான்கார்ட் வண்டி நின்று கொண்டிருந்தது. அவர் மௌனமாக நடந்து வந்தார். ஒரு தகாத இடத்திற்குப் போய் ஒரு தகாத பணத்தை வாங்கிக் கொண்டு வந்து விட்டோம் என்று நினைக்கிறாரோ என்னமோ! கிருபாகரனும் காந்திஜி சொற்பொழிவைக் கேட்டு போராட்டத்தில் குதித்தவர்தானாம்… ஆனால் அவர் பணம் பண்ணக் கற்றுக்கொண்டு விட்டார். ராமசாமி போன்ற எழுத்தாளர்களுக்கு பணம் சேர்த்துக் கொடுக்க இவரைப் போன்றவர்கள் வெயிலில் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நடந்து கொண்டிருக்கிறார்கள்.

வயிறு மீண்டும் கெஞ்சியது.

“சார் ஏதாவது டிபன் சாப்பிடலாம் சார்…”

“என்னிடம் இரண்டு ரூபாய் இருக்கிறது. போதுமில்லையா?”

“என்ன சார் இது இப்போது தானே ஐநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு வந்தோம்?”

அவர் சிரித்தார். “அதிலிருந்து நம் செலவுக்காக ஒரு பைசாக் கூடத் தொடக் கூடாது. வசூல் செய்தது எல்லாம் சேர்த்து ராமசாமியிடம் அப்படியே கொடுத்துவிட வேண்டும். இந்தப் பணத்திலேயே பஸ் செலவு – டிபன் செலவு என்று ஆரம்பித்தால் ராமசாமி கைக்கு எதுவும் போய்ச் சேராது. ரெண்டு ரூபாதான் என்னிடம் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு வந்தேன். டிபன் சாப்பிட வேணும் என்பதற்காகத்தான் பஸ் செலவு இல்லாமல் நடந்து வந்தோம். எனக்குக் காபி வேண்டாம். ஏதாவது சாப்பிடுவோம். இரண்டு ரூபா சரியாயிருக்கும்”.

ஹோட்டலுக்குள் நுழைத்தோம்… இருவரும். இட்லியும் தோசையும் சாப்பிட்டோம். நான் மட்டும் காபி சாப்பிட்டேன். அவர் சொன்னார்.

“நல்ல எழுத்தாளர்களிடமிருந்து கூட சோடை போன சரக்குகள் வருவதுண்டு. இது சோடை, எது நல்லது என்று தரம் பிரித்துக் காட்ட வேண்டியது விமரிசகன் கடமை… காந்திஜி ஒரு அவதார புருஷர்தான். ஆனால் அவரிடமிருந்து கூட கிருபாகரன், அவனுக்கு பர்மிட் வாங்கிக் கொடுத்த மந்திரி போன்ற சோடை போன சரக்குகள் வந்து விடுகின்றன. நம்முடைய பரிதாபம் என்னவென்றால் பொதுவாழ்வில் சோடை போன சரக்குகளையே தங்க நாணயங்களாக ஏற்றுக்கொள்ள பழகி விட்டோம். இந்த சோடைகளுக்குக் கிடைக்கும் சமூக அந்தஸ்து நம் கண்களை மறைத்து விடுகிறது.”

ரெண்டு ரூபாய்க்குள்தான் பில் ஆகியிருந்தது. ஒரு நாலணாவை என்னிடம் நீட்டி பஸ்ஸுக்கு வைத்துக் கொள் என்றார் அவர். “இல்லை சார் என்னிடம் காசு இருக்கிறது” என்றேன்.

“சரி, நாளைக்கு காலம்பற வீட்டுக்கு வரேன். நாளைக்கு இன்னும் சில பேரைப் பார்ப்போம்.

திருவல்லிக்கேணியை நோக்கி அவர் நடக்க ஆரம்பித்தார்.

“சார்… காந்திஜியின் படைப்புகளில் சில சோடை போனாலும் கூட உங்களைப் போல பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அடுத்த தலைமுறையிலும் இப்படி சில பேர் இருக்க…. காந்திஜி மறுபடியும் பிறக்க வேண்டும்.”

அவர் வெறுமனே சிரித்து விட்டு புறப்பட்டு விட்டார். அவர் போய்க் கொண்டிருந்தார். பின்னால் தனக்கு ஜே போட யாராவது வருகிறார்களா என்று திரும்பிப் பார்க்க வில்லை. முன்னால் மாலையோடு யாராவது காத்திருக்கிறார்களா என்பதையும் கவனிக்கவில்லை.

அவர் போய்க் கொண்டிருந்தார்.

– பெப்ரவரி 1991

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *