கோவில் பூனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 127 
 
 

சித்திரை மாதத்துச் சூரியன் கொளுத்து கொளுத்தென்று கொளுத்தினான். கண்களைத் திறக்கவே முடியாதபடி அவ்வளவு வெப்பம் அனல் காற்று வீசியது. வீதியிலுள்ள தார் வெப்பத்தைக் கண்டு குமுறுவதைப்போல் உருகிப் பொங்கியது.

இந்தப் பதைபதைக்கும் வெய்யிலையும் பொருட்படுத்தாது அந்த இரண்டு உருவங்களும் அங்கே நின்று மோனத் தவம் செய்தன. முதலாவதாக அந்த இடத்தை வந்து சேர்ந்தவன் மயிலன். உடம்பெல்லாம் திருநீற்றுக் குறிகள்; நெற்றியிலிட்ட சந்தனப் பொட்டிற்குள் பளிச்சென்று மின்னிக் கொண்டிருந்தது குங்குமம். இரண்டு காதுகளிலும் செவ்வரத்தைப் பூக்கள். கையிலே ஒரு சிறு சாக்குப் பை, அதற்குள்ளே வைக்கப்பட்ட போத்தலில் நிறையத் தண்ணிர் இருந்தது. ஏற்படக்கூடிய கஷ்டங்கள் எல்லாவற்றையும் எதிர்பார்த்தே தன் ஆயத்தங்களைச் செய்திருந்தான். அந்த அகோர வெய்யிலிலும் அவன் தோற்றம் குளிர்மையை வருவித்தது.

சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார் வைத்திலிங்கம்பிள்ளை. சரிந்த தொந்தியிலிருந்து சரிகை வேட்டி வழுவாமலிருக்க அவரது அரை ஞாண் பயன்பட்டது. தலையைச் சூரியன் தாக்க, கால்களைத் தார் வீதி கவ்விப் பிடிக்கத் தள்ளாடிய படியே வந்த அவர் பஸ் நிறுத்துமிடத்திற்கு வந்ததும் நீண்டதொரு பெருமூச்சு விட்டார். அவ்வளவு களைப்பு அவருக்கு. காரிலேயே பிரயாணம் செய்து பழக்கப்பட்ட அவருக்கு, சூரிய வெப்பம் எவ்வளவு கொடூரமானது என்பது அப்போது தான் தெரிந்தது. ஒரு கணம், ஒரேயொரு கணம் வெய்யிலையும் மழையையும் பாராது, குளிரென்றும் கூதலென்றும் பாராது, அவர் போன்ற ஒரு சிலரின் சொகுசான வாழ்க்கைக்காகத் தமது உயிரையே பணயம் வைத்து, இயற்கைச் சக்திகளுடன் இணைந்தும், எதிர்த்தும் ஒருவித சூதாட்டம் ஆடுகின்ற ஏழைப் பாட்டாளி மக்களின் சகிப்புத் தன்மையை நினைத்து அவர் உள்ளம் குளிர்ந்தது!

“அப்பப்பா! என்ன வெய்யில் இன்றைக்கென்று தான் இப்படி எறிக்க வேண்டுமா?” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டார்.இவரைக் கண்டதும் மயிலன் சிறிது விலகி நின்றன். அவனைக் கண்ட பிள்ளையவர்கள் தன் முகத்தில் புன்னகையை வருவித்துக் கொண்டார். அவனை அவருக்குத் தெரியும்!

மயிலனுக்கும் அவரை முன்பு எங்கோ பார்த்த ஞாபகம் வந்தது. எங்கே என்றுதான் உடனே நினைவிற்கு வரவில்லை. மூளையைக் குடைந்தான். கடைசியில் நினைவு வந்ததும் முகத்தில் அருவருப்பு ரேகைகள் படர்ந்தன. ஆனால் மரியாதைக் காகப் பதில் புன்முறுவல் பூத்தான்.

இருவர் கண்களும் பஸ் வரும் திசையிலேயே பதிந்திருந்தன. ஏதாவதொரு சிறிய சத்தம் கேட்டாலும் இருவரும் சுறுசுறுப்படைவர். அங்கிருந்து எட்டு மைல் தொலைவிலுள்ள முருகன் ஆலயத்தில் அன்று தேர்த் திருவிழா. அங்கு போகத்தான் இருவரும் பஸ்ஸை எதிர்பார்த்து நின்றர்கள். அதிகப்படியான பஸ்கள் விடப்படுமென்று விளம்பரஞ் செய்யப்பட்டிருந்தும் சென்ற இரண்டு மணித்தியாலங்களாக அந்தப் பாதையால் ஒரு பஸ்ஸும் செல்லவில்லை.

பிள்ளை போனாற்தான் தேர் இருப்பிடத்திலிருந்து இழுக்கப்படும். அவர்தான் கோவில் முதலாளி. அவர் துடியாய்த் துடித்தார். வெய்யில் ஒரு பக்கம் வாட்டியது. நேர காலத்திற்கு, கோவிலுக்குச் சென்றுவிட வேண்டுமே என்ற கவலை. நிற்க முடியாமல் நின்றர். உடல் இங்கே; உள்ளம் அங்கே.

அன்று காலையில் கோவிலுக்குச் சென்றிருந்தார் பிள்ளை. அன்றைய பொறுப்புகளை அவரவர்களிடம் ஒப்படைத்து விட்டுச் சிறுது கண்ணயரலாமெனச் சென்றார். `அவள்’ நினைவு வந்தது. ஓடோடியும் வந்தார் தன் காரில், அவளைப் பார்த்து விட்டுப் போக. அவரை ஏற்றிக்கொண்டு வந்த கார் திரும்பிச் செல்ல மறுத்து விட்டது. அதன் பலன்தான் அவர் வெய்யிலிலே வெந்தது!

நா வரண்டது. சுற்று முற்றும் பார்த்தார்! கிட்டிய தூரத்தில் வீடுகள் ஒன்றும் இல்லை. கடைகளும் இல்லை. அந்த வெய்யிலில் அவரையும் மயிலனையும் தவிர வேறெவரும் அங்கே இல்லை. அவளுடைய வீட்டிற்குச் சென்று திரும்புவதற்கிடையில் பஸ் வந்து விட்டால்….

மயிலனுடைய பையினுள் இருந்த தண்ணிர்ப் போத்தல் அவர் கண்ணில் பட்டது. வாய் விட்டுக் கேட்டும் விட்டார்.

மயிலன் தயங்கினான். தான் உண்மையில் யாரென்பதைச் சொல்ல விரும்பினான். ஆனால் அவருடைய நடத்தையைப் பற்றிய நினைவு வந்து அது தேவையில்லை என்பதை உணர்த்தியது.

முதன் முதலாக `அவளு’டன் சேர்த்துத்தான் அவரை அவன் கண்டான். அவள் வேறு யாருமல்ல. இந்த உலகத்திலே ‘வாழத்தெரிந்த’ ஒரு சில பெண்களில் அவளும் ஒருத்தி. பெயர் லீலாமணி. பார்ப்பதற்கு நல்ல அழகாயிருப்பாள். பால்ய விதவை என்றால் ஒருவரும் நம்பவேமாட்டார்கள். வீதியிலே அவளைக் காண்பதரிது. வீட்டிலேயே வியாபாரம் நன்றாக நடக்கும்போது, வெளியில் சென்று ஏன் உடம்பை வருத்த வேண்டும்? பிள்ளையைப் போன்ற பல பிள்ளைகளுக்கும், துரைகளுக்கும் அவள் வீடு ஒரு புண்ணிய ஸ்தலம்; அந்த அம்மாளைத் தரிசிக்க அவர்கள் தவறுவதேயில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், அவள் தனக்குத்தான் சொந்தமானவள் என்று ஒவ்வொருவருமே நினைத்ததாகும்!

இவ்வளவு உத்தமோத்தமரான பிள்ளையவர்களுக்குத் தான் தண்ணீர் கொடுப்பதால் அவருடைய `தூய்மை’ கெட்டுவிடுமா?

மயிலன் கொடுத்த தண்ணிரைப் பிள்ளை `மட மட’வென்று குடித்து முடித்தார்.

கடைசியில் வந்தது பஸ். அதிலே இருக்க இடமில்லை; நிற்க இடமில்லை; தொங்கிக் கொண்டு செல்லவும் இடமில்லை; அந்த இருவரையும் அங்கேயே விட்டுவிட்டுப் போவதற்குச் சாரதிக்கு மனமும் இல்லை. அப்படியான நாட்களில் தங்கள் மடியையும் நிரப்பாவிட்டால், பஸ்ஸில் வேலை செய்துதான் என்ன பலன்!

பஸ் நின்றது. இருவரும் உள்ளே தள்ளப்பட்டனர்.

அரசாங்கம் மறந்துவிட்ட விஷயங்களுள் அந்த நெடுந்தெருவும் ஒன்றாகும். அது ஒரு பிரதான வீதி என்பதும், தினமும் ஆயிரக் கணக்கானோர் அதை உபயோகிக்கின்றனர் என்பதும் அரசாங்கத்திற்கு மறந்து விட்டது. பழமையை விரும்பியோ என்னவோ, முன்னொரு காலத்தில் இருந்த நிலையிலேயே இருக்கும்படி அந்த வீதியை விட்டு வைத்தது அரசாங்கம். வறுமை அரக்கனின் முரட்டுப் பிடியில் சிக்கித் தவிக்கும் ஏழையின் உடல் போன்று ஒரே கோரமாகக் காட்சியளித்தது அவ்வீதி.

இன்னுமொரு விசேஷம், அந்த வீதியால் ஓடிய பஸ்கள் இலங்கையில் முதன் முதலாக இறக்குமதி செய்யப்பட்ட பஸ்கள் இன்னமும் அந்த வீதியிலே தான் ஓடிக் கொண்டிருந்தன!

சரித்திரப் பிரசித்தி பெற்ற இப்படியான பஸ் ஒன்றுதான் பிள்ளையவர்களுக்கும் மயிலனுக்கும் தஞ்சமளித்தது. மூச்சுவிடவே முடியாதபடி அவ்வளவு சன நெருக்கம். பிள்ளை அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. அன்றைக்கென்று புதிதாக எடுத்து உடுத்த சரிகை வேட்டி கசங்குகின்றதே! அவர் கவலையெல்லாம் இதைப் பற்றித்தான்!

அவர் அணிந்திருந்த மஸ்லின் சட்டை வியர்வையில் தோய்ந்து உடம்புடன் ஒட்டிக் கொண்டது. மற்றவர்களெல்லோரும் வெற்றுடம்புடன்தான் இருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து நிற்க என்னவோ போலிருந்தது பிள்ளையவர்களுக்கு. வெளியே எரிந்த வெய்யிலும், பஸ் கொடுத்த குலுக்கம், ஆட்டம் ஆகியவையும் ஒவ்வொருவர் மேனியிலிருந்தும் வியர்வையை ஆறாகப் பெருகச் செய்தது. வெளவாலைப் போல் தொங்கிக்கொண்டு நின்ற மயிலனின் கையில் உற்பத்தியான வியர்வையூற்று சிறிது குள்ளமான பிள்ளையவர்களின் தோள்களில் விழுந்து பக்கத்தில் நின்ற வேறொருவரின் வண்டியில் வழிந்து மற்றுமொருவரின் கால் வழியாக வடிந்து கொண்டிருந்தது!

இந்த வியர்வை நாற்றத்தைப் பிள்ளையவர்களால் சகிக்க முடியவில்லை. இப்படிச் சங்கடமான வேளைகளில் அவருக்குதவி புரியும் புகையிலைத் துண்டுகள் அன்று அவரிடம் இல்லை. வெறும் புகையிலையை வாய்க்குள் போட்டுச் சப்புவதில் அவருக்கொரு தனி இன்பம்! அவருடைய கஷ்டங்களைப் போக்கும் சக்தி அதற்கிருந்தது. அது வாய்க்குள் சென்றவுடனே அவர் கற்பனை சிறகு கட்டிப் பறந்து விடும். பின்பு அவருக்கு இந்த உலக நினேவேது!

அவசரத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டபடியால் புகையிலையை எடுத்து வர மறந்து விட்டார். பக்கத்தில் நின்ற ஓரிருவரின் காதுகளில் வாயை வைத்துத் தன் விருப்பத்தை வெளியிட்டார். அவர்கள் கையை விரித்து விட்டனர்.

கடைசியில் மயிலனைக் கேட்டார். அவனிடம் இருக்காது என்பது அவர் எண்ணம். ஆனால் அவன் புகையிலை வைத்திருந்தான். மறுக்க மனமின்றி அதைப் பிள்ளையவர்களுக்கும் கொடுத்தான்.

இனிமேல் அவருக்குக் கவலையில்லை. பஸ் ஓடிக்கொண்டிருந்த வேகத்தில் கோவிலை அடையுமா என்பது சந்தேகந்தான், என்றாலும் முருகன் அவரைக் கைவிடுவானா?

திடீரென்று பிரேக்கை அழுத்தினான் சாரதி. ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். மயிலனுக்கு மேல் அவர்; அவருக்கு மேல் வேறொருவர்; வியர்வையும் அதுவுமாக மிகவும் கஷ்டப்பட்டனர்.

மயிலனால் அதைப் பொறுக்கவே முடியவில்லை. அவருடைய வாய் பரப்பிய மணம் அவனுக்கு வேதனையைக் கொடுக்கவில்லை. ஆனால் அவர் அணிந்திருந்த ‘சென்ட்’தான் அவன் மூக்கைப் பிடுங்கியது. இந்தப் புனித நாளிலும் அந்தத் `துர்நாற்றத்தை’ அனுபவிக்க வேண்டுமா?

அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்ட பிரயாணிகள் வெளியே தலையை நீட்டிப் பார்த்தனர். அவர்களெல்லோருக்கும் ஒரே பயம், ஏதும் சிவப்புக் கட்டடம் தெரிகின்றதாவென்று! ஏனெனில் பெற்றோல் குதங்களைக் கண்டால் குறுக்கே இழுக்கும் குணம் அந்த பஸ்ஸுடன் கூடப் பிறந்தது! அவர்களில் ஒருவர் கண்களிலாவது அந்த நிலையம் தென்படவில்லை. அத்தனைக்கும் ஆறுதல்தான்!

சாரதி இறங்கினான். ஒரு சிறு குடிசையை நோக்கிப் போனான். அனைவரும் தலைகளை உள்ளுக்கு இழுத்துக் கொண்டனர். பஸ்ஸிற்கு பெற்றோல் தேவைப்படவில்லை. சாரதிக்குத்தான் தேவைப்பட்டது! அப்போதுதான் அனைவர் நெஞ்சிலும் தண்ணிர் வந்தது. இனிமேல் பஸ் விரைவில் சென்று விடும் என்பதில் அனைவருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டது.

பிள்ளையவர்களுக்கு வாயூறியது. சாரதிக்குப் பக்கத்தில் இருந்திருந்தால் இத்தனை நேரம் அவர் `விடாயும்’ தீர்ந்திருக்கும் ஆனால் இப்போதோ அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. என்றாலும் ஆசை அவ்வளவு இலகுவில் தீர்ந்து விடுமா? நாவைக் கட்டுப்படுத்த முடியாது தவித்தார். வெளியே வர முயன்றர். வருவதற்குள் பஸ் மறுபடியும் புறப்பட்டுவிட்டது.

எல்லோரும் எதிர்பார்த்ததைப் போலவே மிக விரைவாகச் சென்றது பஸ்.

கோவிலை அடைந்தபோது தேரில் சுவாமியை ஏற்றிவிட்டார்கள். சனக்கூட்டம் நிரம்பி வழிந்தது. குடி மனைகள் அதிகம் இல்லாத அந்தக் காட்டுப் பிரதேசத்திலும் திருவிழாக் காலங்களில் கூட்டம் சொல்ல முடியாது.

`அரோகரா’ என்ற ஒலியுடன் பஸ்ஸிலிருந்து இறங்கினர் அனைவரும். சட்டை கழற்றிய பாம்பைப் போன்று நகர்ந்து கொண்டிருந்தது பஸ்.

மயிலன் தன்னேயே மறந்தான். விழாக் கோலத்தில் சுவாமியைக் காண உடம்பு சிலிர்த்தது. அருகேயிருந்த கிணற்றுக்குச் சென்று கை, கால், உடம்பு எல்லாவற்றையும் நன்கு கழுவிக் கொண்டான். தொண்டு செய்வதில் பற்றுக் கொண்டிருந்த அன்பரொருவர் அவனுக்கு உதவி செய்தார். அல்லாவிடில் வெகு தூரத்திலிருந்த கடலுக்குச் சென்றுதான் தன் உடம்பைத் தூய்மைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

பிள்ளையவர்களுக்கு வீட்டிற்குச் செல்லவே நேரம் இல்லை. கோவிலில் இவர் வருகையைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர் அனைவரும். தேர் இழுப்பதற்கு முன்னர் பிள்ளையவர்கள் கையால் தேங்காய் உடைக்கப்பட வேண்டும்.

வேலையாள் ஒருவன் மூலம் தனது சட்டையைக் கொடுத்தனுப்பினார். வாய்க்குள் போட்டு உமிழ்ந்த புகையிலையைத் துப்ப மனமின்றித் துப்பினார். மடிப்புக் கலையாத சரிகைச் சால்வையை அரையில் வரிந்து கட்டினார். நேரே தேரில் ஏறினார்.

கழுவித் துப்புரவாக வைக்கப்பட்ட தேங்காய் ஒன்று பிள்ளையவர்களிடம் கொடுக்கப்பட்டது. `முருகா’ என்று சொல்லிக் கொண்டே தேங்காயை உடைத்தார்.

தேர் வடத்தைப் பிடித்து இழுத்தனர் சிலர். அத்தனை பெரிய சனக் கூட்டத்தினுள் தேரை இழுப்பதற்குத் தயாராயிருந்தவர்கள் ஏதோ இருபது முப்பது பேர்தான். தங்கள் அருமையான பட்டு வேட்டிகளைப் பழுதாக்கிக் கொள்ள விரும்பவில்லை மற்றவர்கள்.

தேர் அசையவில்லை.

`அரோகரா’ `அப்பனே முருகா’ என்று தொண்டர்கள் தொண்டை கிழியக் கத்தியது வானத்தைத் தொட்டது.

ஆனாலும் தேர் அசையவில்லை.

ஆள் சேர்க்கும் வேலை ஆரம்பமானது. எங்கோ எல்லாம் திரிந்து பலரைக் கூட்டி வந்தார்,ஒருவர். எவ்வளவோ மறுத்த மயிலனையும் அவர் விடவில்லை. அவனுடைய தோற்றம் என்ன சந்தேகப்படும்படியாகவா இருந்தது!

மறுபடியும் ’அரோகரா’ என்ற சத்தம்.

தேர் அசைந்தது. பிள்ளையின் முகத்தில் இப்போதுதான் மகிழ்ச்சியின் சாயல் தோன்றியது.

கீழே பார்த்து அங்கு நின்றவர்கள் மேல் தன் புன்னகையை உதிர்த்தார். வியர்த்து விறுவிறுத்துத் தேர் வடத்தைக் கையில் பிடித்துக் கொண்டு கந்தப் பெருமானுக்குச் சேவை செய்யும் எல்லோர்மேலும் அவர் பார்வை விழுந்தது. அதற்குள் ஒருவன் பிள்ளையவர்களின் காதுகளில் முணு முணுத்தான்.

தேர் வடத்தின் நுனியில் நின்ற ஒருவன்மேல் அவர் கண்கள் குத்திட்டு நின்றன. அவன் யார்? கண்களை அகலத் திறந்தார் பிள்ளை. திருப்புகழ் ஒன்றை வாய்க்குள் முணுமுணுத்தபடி நின்றான் மயிலன்!

அந்தக் காட்சியைக் காணப் பொறுக்க முடியவில்லை பிள்ளையவர்களால். அவருடைய கண்கள் சிவந்தன. ‘அவனை யார் தேர்வடத்தைத் தொடச் சொன்னது? அந்தச் சனியனைத் துரத்துங்கள்….’ ஆத்திரத்துடன் உத்தரவிட்டார் ஆண்டவனுக்கு அருகில் நின்ற தருமகர்த்தா.

மறுகணம்.

வெறி கொண்ட மக்கள், அது கோவில் என்பதையும் மறந்து மயிலனை நையப் புடைத்தனர்.அவனுடைய அவலக் குரலை, அவனுடைய முதுகு, தோள் முதலியவற்றில் விழுந்த அடி, உதைகளின் சத்தம் அமுக்கியது. அவன் மயங்கி விழும் வரைக்கும் பக்த கோடிகள் தம் கைவரிசையைக் காட்டினர்.

மயிலன் என்ற மயில்வாகனத்திடமிருந்து முருகப்பெருமானின் ரதத்தை இழுத்துச் செல்லும் உரிமையைப் பறித்த உற்சாகத்தில் தன் சரிகைச் சால்வையை ஒருதரம் அவிழ்த்துக் கட்டினர் பிள்ளையவர்கள்.

உள்ளத்தால் கள்ளமில்லாதவன் உதைத்தொதுக்கப்பட்டான்; உருத்திராட்சப் பூனையொன்று உல்லாச பவனி வந்துகொண்டிருந்தது.

– 1956

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *