கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 2, 2014
பார்வையிட்டோர்: 24,274 
 
 

தன் நண்பனின் மெக்கானிக் ஷாப்பினுள் நுழைந்தான் சங்கர். நிறைய கார்கள் வேலைக்காக நின்று கொண்டிருந்தன. பானெட்டை திறந்தும், காருக்கு அடியில் படுத்தும் வேலையாட்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்க, அவர்களை தாண்டி உள்ளிருந்த அறைக்குள் நுழைந்தான்.

“”வா சங்கர், என்ன இந்தப் பக்கம் அபூர்வமாக இருக்கு.”

“”இங்கே ஆதம்பாக்கத்தில் என் மாமா வீட்டு விசேஷத்திற்கு வந்தேன். அப்படியே உன் ஞாபகம் வந்தது. பார்த்துட்டு போகலாம்னு வந்தேன். எப்படி இருக்கே. பிஸினஸ் நல்லபடியா போய்ட்டு இருக்கு போலிருக்கு.”

“”ஆமாம்பா. வேலை பார்த்து நேரத்துக்கு சொன்னபடி டெலிவரி கொடுக்க முடியலை. புதுசா நிறைய பேரை வேலைக்கு சேர்ந்திருக்கேன். அப்புறம் சொல்லு.”
சங்கருடன் பேசியபடி வெளியே கவனித்தவன், “”ஏய் சுந்தர் இங்கே வா.”
அவன் அழைப்புக்கு பதினெட்டு வயது நிரம்பிய இளைஞன் அழுக்கு டிராயரும், பனியனுமாக அவன் முன் வந்து நின்றான்.

“”என்னடா வேலை பார்க்கிறே.”

“”சவுரி அண்ணே, அந்த டூவீலரில் நட்டையெல்லாம் டைட் வைக்கச் சொன்னாரு. அதை செய்திட்டிருக்கேன்.”

அவன் பிடரியில் ஓங்கி ஒரு அறை வைத்தவன், “”அறிவு கெட்டவனே, உன்னை அந்த அம்பாசிடர் காரில் இஞ்சின் வேலை பார்க்கிறாங்க. அங்கே போய் உதவி பண்ணு. வேலை கத்துக்கன்னு சொன்னேன். ஸ்குருடிரைவரை கையில் வச்சுக்கிட்டு பொழுதை ஓட்டறியா. போடா… போய் ஒழுங்கா சொன்னதைச் செய்.”

பதில் பேசாமல் தலைகுனிந்து செல்லும் அவனைப் பாவமாகப் பார்த்தான் சங்கர்.

“”என்ன மூர்த்தி, பாவம் அந்தப் பையன். எதுக்கு அடிக்கிறே. நல்லதனமாக சொல்ல வேண்டியதுதானே.”

“”அட போப்பா. புதுசா ஆட்களை சேர்த்துக்கிட்டு வேலை வாங்கறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது. இந்தப் பையன் அம்மா இல்லாதவன், சம்பாரிச்சுக்கிட்டிருந்த அப்பாவும் போன மாசம் ஆக்ஸிடெண்டில் இறந்துட்டாரு. ஒரு அக்கா, சாப்பாட்டுக்கே கஷ்டம். வேலை கத்துக்கிட்டு, நல்லதனமாக வேலை பார்க்கிறேன்னு கெஞ்சினான். பரிதாபப்பட்டு சேர்த்துக்கிட்டேன். மாசம் சுளையாக மூவாயிரம் ரூபா தரேன். அதுக்கு தகுந்த வேலை செய்ய வேண்டாமா. இவங்ககிட்டயெல்லாம் பாவம் பார்க்கக்கூடாது. இப்படி அதட்டி, உருட்டி சொன்னாதான் வேலை நடக்கும்.”

என்னதான் மூர்த்தி சொன்னாலும் சங்கருக்கு கஷ்டமாக இருந்தது. பதினெட்டு வயது இளைஞன், பார்த்தாலே அப்பாவியாக தெரிகிறான். வறுமையில் இருப்பவன், அவனிடம் போய் கோபத்தை காட்டுகிறானே. அதுவும் அறிமுகமில்லாத நபர் முன் ஒரு இளைஞனை அடித்தால் அவன் மனம் என்ன பாடுபடும்.

“”சங்கர் என்ன சாப்பிடறே. கூல்டிரிங்ஸ் வாங்கிட்டு வரச் சொல்லவா?”

“”வேண்டாம்பா. டீ சொல்லு. சூடா குடிக்கலாம். ஏற்கனவே தொண்டை வலி.”

“”டேய் அந்த சுந்தரை வரச்சொல்லு”

அவன் அழைக்க, சற்று முன் அவளிடம் அடி வாங்கியவன் பவ்யமாக கையைக் கட்டி வந்து நிற்கிறான்.

“”நாயர் கடையில் போய், இரண்டு டீ ஸ்ட்ராங்கா போடச் சொல்லி வாங்கிட்டு வா” அவன் வெளியேற,

“”என்ன மூர்த்தி, அந்தப் பையனை இந்த மாதிரியெல்லாம் வேலை வாங்கறே. ஏதாச்சும் தப்பா எடுத்துக்கப் போறான்.”

“”அட நீ ஒண்ணு. வேலைக்கு வந்துட்டா எல்லாத்தையும்தான் செய்யணும். எடுபிடி ஆள் இரண்டு நாளா வரலை. இவனைத்தான் கடைக்கு அனுப்பிட்டிருக்கேன். அதெல்லாம் ஒண்ணும் நினைச்சுக்க மாட்டான். உன் ஒய்ப், பிள்ளைகள் எல்லாம் எப்படி இருக்காங்க.”

நீண்ட நாட்கள் கழித்து சந்தித்த நண்பனிடம் பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்துவிட்டு, விடைபெற்று கிளம்பினான் சங்கர்.

இரண்டு நாள் கழித்து பஜாரில் வீட்டுக்கு சாமான்கள் வாங்கிக் கொண்டு, பக்கத்திலிருந்த தெருவில் நுழைந்த சங்கர், அந்த தெரு முனையில் கூட்டமாக இருப்பதைப் பார்த்து, ஆவல் மிகுதியில் அவனும் எட்டிப் பார்த்தான்.

கூட்டத்தின் நடுவில் கோபமாகப் பேசும் அந்தப் பையனின் முகம் எங்கோ பார்த்த முகமாக… அவனுக்கு ஞாபகம் வந்தது. அன்று மூர்த்தியின் மெக்கானிக் ஷாப்பில் பார்த்த இளைஞன் சுந்தர்.

என்ன நடக்கிறது. அவனருகில் கிழிந்த தாவணியை ஒட்டு போட்டு தைத்து, கட்டிக்கொண்டு ஒரு பெண் நின்றிருந்தாள்.

“”இரண்டு நாளா எங்கக்கா இந்தப் பக்கம் போகும் போது, ஜாடை பேசி, கிண்டல் பண்றீங்களாம். இல்லாதவங்கன்னா, என்ன செஞ்சாலும் பேசாம இருப்போம்னு நினைச்சீங்களா. நீங்களெல்லாம் அக்கா, தங்கச்சி கூட பிறந்தவங்க தானே. ஏதோ தெருமுனையில் நின்று உங்களுக்குள் பேசிக்கிறீங்க. அதோடு போக வேண்டியது தானே. போற, வர பொண்ணுங்களை கிண்டல் பண்ற வேலை வச்சுக்கிட்டா, அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன். நாளைக்கும் இதே தெருவில் தான் எங்கக்கா வரும். யாராவது தைரியம் இருந்தா கிண்டல் பண்ணிப் பாருங்க. அப்புறம் என்ன நடக்குதுன்னு, நேரா போலிஸுக்குப் போயிடுவேன். ஒருத்தர் இந்தப் பக்கம் நடமாட முடியாது.”

கண்கள் சிவக்க, கோபமாகப் பேச,

“”சரி தம்பி. கோபப்படாதே விடு. அந்தக் காலிப் பசங்களை சட்டையைப் புடிச்சு நல்லா நாலு கேள்வி கேட்டே. இனி இந்தப் பக்கம் வரமாட்டாங்க.”

கூட்டத்தில் ஒருவர் சொல்ல, “”அப்புறம் என்ன சார், இல்லாத கொடுமைக்கு எங்கக்காவை பஞ்சு மில்லுக்கு வேலைக்கு அனுப்பறேன். இப்படி பொறுப்பில்லாம ரோடிலே போறவங்களை கிண்டல் பண்ணினா பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா.”

அந்த ரௌடி கும்பல் தலைகுனிந்து அந்த இடத்தைக் காலி செய்ய, கூட்டம் கலைய,
“”அக்கா நீ வீட்டுக்குப் போ. நான் காய்கறி மளிகைச் சாமான் வாங்கிட்டு வரேன். இனி அந்தப் பசங்களால உனக்கு தொந்தரவு இருக்காது.”

“”சரி தம்பி… சீக்கிரம் வா.”

அந்தப் பெண் வீடு நோக்கி செல்ல, “”தம்பி, நீ மூர்த்தி மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்யற பையன்தானே.”

“”ஆமாம் சார். உங்களை இரண்டு நாளைக்கு முன்னால, முதலாளியோட பார்த்தேன். அவர் நண்பர் தானே.”

“”ஆமாம்பா நடந்ததை நானும் பார்த்தேன். நல்ல காரியம் பண்ணினே. வாயை மூடிட்டு இருந்தா, இந்த ரௌடி அட்டகாசம் எல்லை மீறும். நீ கோபப்பட்டு கண்டிச்சது ரொம்ப சரி. போலிஸுக்கு போவேன்னு பயமுறுத்தினே. இனி வாலாட்ட மாட்டாங்க. சரி, நான் உன்னை ஒண்ணு கேட்கலாமா?”

“”என்ன சார் கேளுங்க.”

“”இல்லே. அன்னைக்கு ஒர்க்ஷாப்பில் உன் முதலாளி உன்னை சரியா வேலை செய்யலைன்னு திட்டி அடிச்சான். அதுவுமில்லாம, உன்னைக் கடைக்கு அனுப்பி டீ வாங்க முதற்கொண்டு பயன்படுத்தினான். அந்த சமயம் நீ எந்த எதிர்ப்போ, கோபமோ காட்டாம கைகட்டி, பவ்யமாக நடந்துக்கிட்டே. அவன் சொன்ன வேலைகளையும் தட்டாமல் செய்தே. எனக்குக்கூட அந்த சமயம் உன்னைப் பார்க்க பாவமாக இருந்துச்சு. ஒண்ணும் தெரியாத அப்பாவின்னு நினைச்சேன். ஆனா உன்கிட்டேயும், வேகமும், கோபமும் இருக்கிறதை இப்ப நேரில் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.”

“”அது நான் கோபத்தைக் காட்ட வேண்டிய இடம் இல்லை சார். நான் தொழில் கத்துக்க அங்கே நுழைஞ்சிருக்கேன். அது நான் வேலை செய்யற இடம். முதலாளி என்னை திட்டறாரு. அடிக்கிறாருன்னு நான் கோபப்பட்டா. நான் எப்படி சார் முன்னேற முடியும். இதையெல்லாம் சகிச்சுக்கிட்டு, பொறுமையோடு தொழில் பழகினா தான். நாளைக்கு நான் நல்ல நிலைக்கு வர முடியும். அதை விட்டுட்டு முதலாளிகிட்டே, முறைச்சா, நாளைக்கே என்னை வேலையை விட்டு அனுப்பிடுவாரு. பணிஞ்சு போற இடத்தில் பணிஞ்சுதான் போகணும். கோபத்தைக் காட்ட வேண்டிய இடத்தில் கோபத்தைக் காட்டணும். அப்பதான் இந்த உலகில் காலம் தள்ளமுடியும். நான் வரட்டுமா சார். அக்கா வீட்டில் தனியா இருக்கும். சாமான்கள் வாங்கிட்டு நான் வீட்டுக்குப் போகணும்.”

அவன் சொல்வதின் உண்மை புரிய, நிச்சயம் இந்த இளைஞன் வாழ்க்கையில் நெளிவு, சுளிவுகளை அறிந்து முன்னுக்கு வருவான் என்ற எண்ணம் தோன்ற சங்கரும் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *