கோடை மழை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 3, 2021
பார்வையிட்டோர்: 6,147 
 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இலங்கை ‘மாப்பை’ விரித்து வைத்து அதன் தலையில் யாழ்ப்பாணத்தைத் தேடிப் பிடித்து, சிகப்பு பென்சிலால் பெரியதொரு புள்ளி போட்டு, ‘இதுதான் கொக்குவில்’ என்று பீற்றிக் கொள்ளும் அளவிற்கு பிரபலமானதல்ல எங்கள் ஊர்.

ஆனால் ‘மாப்பை’ எடுத்துப் பிரிக்காமல், பென்சிலால் கோடு இழுக்காமல், இது கொக்குவில் என்று சொல்லாமல் விடக்கூடிய அளவிற்குப் பிரபலமற்றது என்றும் கூறிவிட முடியாது.

அர்த்தநாரிசுவரர் போன்று, கொக்குவில், ஒரு பக்கத்திலும் சாயாமல், தனித்து, தனக்கென்றொரு நாகரிகம் வைத்துக் கொண்டு இருப்பதாகத்தான் சொல்ல வேண்டும்.

கொக்குவில் என்றவுடன் சிலருக்கு ‘கானா, சேனா’ வின் கோடாபோட்ட நல்ல பளபளப்பான நாட்டுப் புகையிலைச் சுருட்டு ஞாபகத்திற்கு வரலாம்; சிலருக்கு முறைப்படி காய்ச்சிய காரசாரமான கள்ளச் சாராயத்தின் நெடி நினைவுக்கு வரலாம். இது இரண்டிலும் அனுபவமில்லாத துர்ப்பாக்கியசாலிகள் பழைய பிரபல கொலைக் கேஸ்கள் சிலவற்றை ஞாபகத்திற்குக் கொண்டு வந்து அனுபவித்து ரசிக்கலாம்.

ஆனால் கொக்குவில்லுக்கு விஜயம் செய்த யாராவது அது மேற்கூறிய ஒன்றிலேதான் பிரபலமாயிருக்கவேண்டும் என்று கூறினால், அவருக்குக் கண் பார்வை ‘கிராமப்போன் பிளேட்டா, அல்லது கிடாரச் சட்டியா’ என்று வித்தியாசம் கண்டு பிடிக்கும் அளவிற்காவது இருக்குமா என்பது சந்தேகந்தான்.

ஒழுங்கைகளுக்குப் பேர் போனது கொக்குவில். அவற்றில் தான் எத்தனை ரகம்? வண்டிப் பாதை, மணல் பாதை, மக்கி ரோட்டு, கல்லு ரோட்டு, முடுக்குத் தெரு, மூலைத் தெரு, குச்சு ஒழுங்கை, குறுணி ஒழுங்கை, ஒற்றையடிப்பாதை , ஒன்றரையடிப் பாதை இப்படியாக இன்னும் பலப்பல.

இப்படிப்பட்ட ஒழுங்கைகளோ, புழுதிக்குப்பேர் போனவை. அது மாத்திரமா? பிறந்த நாள் தொடங்கி மேற்கூறிய ஒழுங்கைகளோடு பழகியவர்களையே சிற்சில சமயங்களில் இவை ஏய்த்து விடுவதும் உண்டு. கொஞ்சம் அசந்து போனால் சரி, பழையபடி புறப்பட்ட இடத்துக்கே கொண்டு போய்ச் சேர்க்கும் அசாத்தியத் திறமை படைத்தவை.

இந்த ஒழுங்கைகளில் சைக்கிள் சவாரி செய்வதற்கு, அபூர்வப் பழக்கம் வேண்டும். கொக்குவிலைப் பிய்த்துக் கொண்டு போகும் கே.கே.எஸ். ரோட்டி லிருந்து இறங்கிய ஒருவர், புகையிலைக் காம்பு நெட்டி போல் பின்னிப் பின்னிக் கிடக்கும் இந்த ஒழுங்கைகள் வழியாகப் பிரயாணம் செய்து, மறுபடியும் பலாலி ரோட்டில் மிதிப்பாரானால், அவர் புறப்பட்ட முகூர்த்தத்தில் ஒரு சுவீப் டிக்கெட் எடுத்திருக்கலாம் என்று துணிந்து கூறலாம்.

இப்படிப்பட்ட கிராமத்தில் சுரம் வந்தவனுடைய ‘டெம்பரேச்சர் சார்ட்’ போல இடைக்கிடை ஏறி இறங் கும் நாகரிகத்தில், சமீபத்தில் கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாகரிகமானது ஒரு திடீர் வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் பொதுவாகப் பெண்களுடைய நாகரிகமானது, பின்னேரம் நாலு மணியானதும் சேலையைக் களைந்து விட்டு ‘கிமோனா’ அணிந்து படலைக் காலைப் பிடித்துக் கொண்டு நிற்பதும், வெள்ளைக் கால் கந்தையருடைய படலையடியில் யாராவது ‘இளவட்டம்’ சைக்கிளில் திரும்புவது தெரியத் தொடங்கும் போதே, உள்ளே ஓடி ஒளிந்து கொள்வதும் என்ற அளவிற்கு வளர்ந்திருக்கிறது.

அவசரகாலச் சமயத்தில் சட்டத்தை மீறி, மதகுகள் மீது குந்தியபடியே அரட்டை அடிக்கும் ஆண்கள், அரை மைல் தூரத்தில் பட்டாளத்து ‘வான்’ முகப்பு லைட் மின்மினி போலத் தெரியும் போதே அந்தர்த்தியானமாகும் அளவிற்கு வீரமும், தைரியமும் படைத்திருந்தார்கள்.

குழந்தைகளைப் பற்றியோ கூறத் தேவையில்லை.

கர்ப்பத்தடையைப் பற்றிய ஞாபகமே இல்லாமல் தாராளமாகப் பெற்றுப் போட்ட குழந்தைக் கணங்கள் ஒழுங்கைகள் எங்கும் நிறைந்திருக்கும்.

தாய்மார்களுடைய கையில் ஆறு மாதக் குழந்தை ஒன்று இருக்கும் போதே, வயிற்றில் இரண்டு மாதத்தில் ஒன்று விண்ணப்பித்துக் கொண்டு இருக்கும். ரெயில்வே லைன் கரைதான் குழந்தைகளுடைய விளையாட்டு மைதானம்.

தண்டவாளத்தின் மேல் வரிசையாக சோடா மூடியை அடுக்கிவிட்டு ‘யாழ்தேவி’ வரும்போது ஒளித்திருந்து வேடிக்கை பார்ப்பதுடன் அவர்களுடைய ஆரம்ப விளையாட்டு முடிவடைந்து விடும்.

***

கொக்குவிலுக்குப் புதிதாக வரும் வாசகர்களுக்கு, கொக்குவில் எங்கே ஆரம்பமாகிறது என்ற சந்தேகம் எழலாம்.

காலை 6-20 க்கு யாழ்ப்பாணத்தை விட்டுப் புறப் படும் கொழும்புப் புகை வண்டியில் பிரயாணம் செய் திருக்கும் அன்பர்கள், புகை வண்டி, அடுத்து வரும் சுடலை ஒன்றைக் கடக்கும் போது, நெடி துயர்ந்த பனைகளின் பின்னால், சுகாதார இன்ஸ்பெக்டரை நாளது வரை ஏய்த்து வந்த நூற்றுக் கணக்கான தலைப்பாகைகள் மிதப்பதைக் காணத் தவறியிருக்க மாட்டார்கள்.

சந்தேகமின்றி, கொக்குவில் அங்கேதான் ஆரம்பமாகிறது.

கொக்குவிலின் மேலான கைத்தொழில் சுருட்டுத் தொழில்தான் என்றாலும், சுருட்டுத் தொழில் செய்து, பணக்காரரானவர்களை விரல் விட்டு எண்ணுவதானால் கைகளே தேவையில்லை. கல்வியும் இதே நிலை தான்.

‘கிளறிக்கல்’ ஒவ்வொருத்தருடையதும் மகோன்னதமான லட்சியம். தட்டித் தவறி யாராவது ஒருத்தர் எஸ்.எஸ்.சி. பாஸ் செய்து விட்டால் நல்லூர் கந்தசாமியாருக்கு ஒரு சங்கரார்ச்சனை லாபம் என்று அர்த்தம்.

ஆண்களின் கதியே இப்படி என்றால் பெண்களைப் பற்றிக் கூறவே தேவையில்லை.

குறைந்தது நாலு பிழைகளுடன், விலாசதாருக்குக் கிடைக்காத வகையில், ஆங்கிலத்தில் தந்தி எழுதும் அளவிற்கு, அவர்களுக்கு அமோகமான கல்வி அறிவு இருக்கிறது.

இருந்தும் என்ன? நாகரிகக் கண்கொண்டு பார்க்கும் பேர்வழிகள் கொக்குவிலின் பிரபல்யத்தை மாத்திரம் எப்போதும் ஒப்புக் கொண்டதே கிடையாது.

***

சின்னாச்சிக் கிழவி , ஒன்றரை சஷ்டியப்த பூர்த்தி மதிக்கக்கூடிய தோற்றம். எனினும் அந்த நாட்களில் ஆயிரம் புகையிலைக் கன்றுக்குப் பட்டை பிடித்த தேகக்கட்டு இன்னமும் குலைந்துவிடவில்லை. தொழில் ஊர் வம்பு; ‘பார்ட் டைமாக’ பலாவிலை குத்தல். ‘தொண தொணப்பு’ நச்சரிப்பு , கருமித்தனம், பஞ்சம் கொட்டுதல்’ போன்ற கிழவிகளுக்கு இயல்பான லட்சணங்களுக்குக் குறைவில்லை.

‘கோச்சி வரும், கவனம்’ எச்சரிக்கையை லட்சியம் செய்யாமல் எதிரே வரும் ரயில்வே கடவையைக் கடந்து இடது சந்தியில் திரும்பினால், ‘இங்கே ஆர்மோனியத்தை ரிப்பேர் செய்யப்படும்’ என்ற போர்டு பலகை ஒன்று பயங்கரமாகத் தமிழுக்கு ரிப்பேர் பார்த்தபடியே தொங்கும்.

அதற்கு எதிர்ப்புறம் ஒரு குச்சு ஒழுங்கை.

பகல் பன்னிரண்டு மணிக்குக்கூட தனியாகப் போவதாக இருந்தால் நெஞ்சம் ‘படக் படக்’ என்று இடிக்கும். ஜனப்புழக்கம் இல்லாத படியால் பாதை நடுவே அங்கங்கே இக்கிரியும் நாகதாளியும் சுகம் விசாரிக்கும்.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மேலும் போனோமென்றால் பிரமாண்டமான கள்ளி மரம் கொக்குவில் பசுக்களின் அன்றைய சந்ததி விருத்தியை உமல்களாகக் காய்த்து, கணக்குக் காட்டிக் கொண்டிருக்கும்.

கைக்குட்டை வைத்திருப்பவர்கள் ஒரு கையால் மூக்கிற்கு அபயம் அளித்தப்படி, மறு கையால் உயிரைப் பிடித்துக் கொண்டு, இன்னும் பத்தடி போவார்களானால் ‘அட்டாளை முருகேசர்’ கொலை யுண்ட புனித ஸ்தலம் தென்படும். இந்த மேட்டு நிலத்தில் நின்று கிழக்குப் பக்கமாகப் பார்த்தால் தெரிவதுதான் கிழவியின் பொத்தல் குடிசை

ஆனால் இப்போது அங்கே இந்த வழியா போக முடியாது. புளியமர உரிமை வழக்கொன்றில் தாய்க் கும் பிள்ளைக்கும் ஏற்பட்ட தகராறில் ‘கவுண்மேந்து’ தலையிட்டு, குறுக்கு வேலி ஒன்று தற்காலிகமாகப் போட்டிருப்பதால், நேயர்கள் தயவு செய்து சிரமத் தைப் பாராது, வந்த வழியில் திரும்பி, கிழவி வழக்கமாகப் போகும் பிள்ளையார் கோவில் ஒழுங்கையால் வருவார்களாக!

எலக்சன் சீசனில் யாரோ ஒட்டி விட்ட நோட்டிஸ் ஒன்று இன்னமும் கிழவியின் படலையில் விசுவாசத்துடன் ஒட்டிக் கொண்டு இருக்கிறது.

அந்தப் படலையை இழுத்துப் பிடித்தபடி பாறாங் கல் ஒன்று. கையை விட்டவுடன் படலை படாரென்று சத்தத்துடன் மோதிக் கொள்ளும். ஆனால், இதில் ஆச்சரியம் என்னவென்றால் இதைத்தான் ஆங்கிலத்தில் “ஆட்டோமெட்டிக் ஷட்டர்” என்று கூறுவார்கள் என்பது கேவலம், கிழவிக்கோ அல்லது படலைக்கோ தெரியாததுதான்!

சிறிது கடகடத்த அந்தப் படலை மீது நமக்கு இலகுவில் நம்பிக்கை பிறப்பதாகத் தெரியவில்லை. ஆனபடியால், கிழவி, வழக்கமாகப் போகும் பொட்டு வழியாக நாமும் குனிந்து உள்ளே போவோம்.

சுளகு ஒன்றிலே ஒடியற் கிழங்கு காய்ந்து கொண்டிருக்கிறது. பக்கத்திலே ஈர்க்கிலே ஜம்மென்று குந்தியிருந்த பழ மிளகாய் ஒன்று காக்கைகளை எல்லாம் விரட்டியடித்துக் கொண்டிருக்கிறது. வாசலுக்குக் கொஞ்சம் தள்ளி ஆடு கட்டியிருக்கிறது. பக்கத்தில் ஒரு உழவாரப் பிடியும் கொஞ்சம் புல்லுக் கட்டும்.

ஆடோ, உழவாரமோ புல்லைக் கவனிப்பதாகத் தெரியவில்லை.

அரைச் சாக்கு நெல்லு காயப் போடக் கூடிய அளவிற்கு ஒரு குந்து. அதை ஒட்டியபடி கிடக்கும் மண் சுவரில் கரிக் கணக்கு எழுதாத இடமாகப் பார்த்து, ஒரு தேதியில்லாத முருகன் காலண்டர், பரிதாபகரமாகத் தொங்குகிறது. வள்ளியம்மை தெய்வானையருடைய டிரஸைப் பார்த்த அளவில் ‘பொங்கு கை’ பாஷன் பிரபலமாயிருந்த காலத்தில் காலண்டர் அச்சாகி இருக்க வேண்டும் என்று தோன்றியது.

கிழவி, கோடிப் பக்கத்தில் இறால் நோண்டிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் இருபது வயது மதிக் கக்கூடிய இளைஞன் ஒருத்தன் சோகம் ததும்ப நின்று கொண்டிருந்தான்.

“எட பாவி! உன்னைப் பெத்த வயிறு நெருப்பாய் எரியுமேடா? எப்படித்தான் உனக்கு மனசு வந்தது”

“நான் என்னணை ஆச்சி செய்ய? கொழும்பிலை வேலை ஓண்டுக்கு கட்ட வேணும். அந்த மனுஷிக்கு எப்பிடிப் போட்டு விளங்கப்படுத்தியும் ஏறுதில்லை. என்னை வேறை என்ன செய்யச் சொல்லுறாய் ? வேலையானதும் முதல் சம்பளத்திலேயே மீண்டு போடுறன். இப்ப மாத்திரம் என்னைக் கை விட்டிடாதேயணை! வீட்டிலே பொலி செல்லாம் வந்து சோதினை நடக்குது.”

“என்ன….! பொலிசுக்கும் சொல்லிப் போட்டே என்னட்டை வந்தனி! எனக்கு வேண்டாம் ராசா இந்தச் சள்ளை! நாளைக்கு பொலிசுக்காரன்கள் வந்து என்னைப் பிடிச்சு நாலு கேள்வி கேட்க…நான் தற்தற வென்று முழுச…”

இளைஞன் கொஞ்சம் உலக சம்பிரதாயம் தெரிந்தவனாகக் காணப்பட்டான்.

“எணை ஆச்சி! நீ பயந்து சாகிறாய்? இப்ப நான் உதைப் பெரிய கடையிலை கொண்டு போய் வைக்க மாட்டேனே. உன்னட்டை என்டால் அயலுக் கை….ஏதோ… அஞ்சு….பத்து…உனக்கும்.”

‘அஞ்சு, பத்து’ மாத்திரம் உடனே பலித்தது!

கிழவி இறாலைக் கழுவி எடுத்துக் கொண்டு உள்ளே போனாள். இவ்வளவு நேரமும் காத்திருந்த காகத்தின் வாயில் மண்ணைப்போடுவதற்கென்று எங்கிருந்தோ ஓடி வந்த கிழவியினுடைய வாடிக்கை நாய், அரிவாளை நக்கி எடுத்து, கிழவிக்கு ஒத்தாசை செய்தது.

முந்தானையால் கையைத் துடைத்தபடி “எங்கை எடு பாப்பம்” என்று கையை நீட்டினாள் கிழவி.

நல்ல கனம். குறைஞ்சது நானூறு மதிக்கலாம் என்று கிழவியின் அனுபவக் கை கூறியது.

“இது என்ன இரண்டரைப் பவுணும் தேறாது போலைக் கிடக்கு? எவ்வளவு கேட்கிறாய்?”

“ஒரு முன்னூறு…”

“இப்ப உங்கை ஆரிட்டை மாறிறது? செல்லாச்சியும் மூத்த மோலின்ரை பிள்ளைப் பெத்துக்குச் சிலவழிச்சுப் போட்டு நிற்கிறாள். சின்னமோனை படுத்த படுக்கையாய் கிடக்கிறான்…” இன்னும் என்னவோ எல்லாம் கிழவி முணு முணுத்தாள். காதில் விழ வில்லை.

மடியை இறுக்கிக் கட்டிக் கொண்டு, இறப்பிலே சொருகியிருந்த தடுக்கை இழுத்துத் தட்டி, குந்திலே போட்டாள் கிழவி. “உதிலை இரடா மேனை! அஞ்சு நிமிட்டிலை வந்திடுறன்…உந்தக் கட்டயிலை போற வன்ரைமாடு வந்திடும்….ஒருக்கால் பார்த்து கொள்…” என்றபடி பிலாவிலைக் கம்பியையும் தூக்கிக் கொண்டு ‘முணு முணு’ என்று தன் சொந்த பாஷையில் ஏதோ பேசியபடி புறப்பட்டாள் கிழவி.

“பெத்த தாயிட்டைக் களவெடுத்துக் கொண்டு வந்திருக்கு முதேவி! என்னெண்டு தான் உருப்படப் போகுதோ! லோகம் கெட்டுப் போச்சு….கனகத்தின்ரை மூத்தவன் ஒரு போங்கு…அவளுக்கும் வேணும்…கொக்குவில்லை தன்னட்டைத்தான் கல்லட்டியல் கிடக்கு என்ற கெறுக்கு….முத்தாச்சியின்ரை செத்த வீட்டுக்கு வந்த இடத்திலை என்னோடை கட்டிப் பிடிச்சு அழக்கூட இல்லை!”

நாலு வீட்டுக்கும் போய் கிழவி வருவதற்கிடையில் இளைஞனுடைய முக்கால்வாசிப் பிராணனும் போய் விட்டது. தடுக்கில் இருந்த நெட்டியெல்லா வற்றையும் பிய்த்துப் பிய்த்துப் பல்லைக் குத்தியபடியே இருந்தான்.

சமய சந்தர்ப்பம் தெரியாமல், நிரைவிட்டுப்போன கொள்ளி எறும்புகள் வேறு இடைக்கிடை அவன் காலை உருசி பார்த்தன.

புல்லுக்கார மனுஷி ஒன்று, என்ன இழவோ சமுசயப்பட்டு, திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே போனாள்.

அவள் அந்தப் பக்கமும் வருகிறவள்.

கால் சட்டை போட்டபடி குந்தில் இருக்க வெட்கம் பிடுங்கித் தின்றது.

பன்னிரண்டு மணிபோல கிழவி யார் யாரையோ திட்டிக்கொண்டே அவர்கள் ஏழேழு தலைமுறையும் என்னென்ன வியாதி வந்து சாக வேண்டுமென்று ‘லிஸ்டு’ தயாரித்தபடியே, வந்து கொண்டிருந்தாள்.

பிலாவிலை நிரம்பி வழிந்தது.

வந்தவள் வெகு சாவகாசமாகக் குந்தி இருந்து ஒவ்வொரு இலையாகக் கிழித்து ஆட்டுக்குப் போட்டபடியே இருந்தாள்.

இளைஞன் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான். கிழவி பேசுவதாய்க் காணோம்! நெருப்புமேலே இருப்பதுபோல் இருந்தது அவனுக்கு.

“என்னணை ஆச்சி…போன விஷயம்?”

“நான் என்னத்தைச் செய்ய?…எல்லா வேசை யளும் பஞ்சம் கொட்டுறாளவை…உனக்குத் தெரியுமே…மூளிக்கார கந்தையற்றை பேத்தி….இப்ப அவள் தான் புதுப்பணக்காரி…சாதிக் குணத்தை என்னிலே எல்லே காட்டுறாள். கேளடா மோனை….கண்டறியாத பூனை கமுகிலை ஏறி…?”

அவனுக்குப் பொறுமையில்லை. “அப்ப நான் வரப்போறேன்…நீ அதை…எடு!”

“என்னடா அதுக்கிடையிலே கோவிக்கிறாய்! ஆக கொக்குவில்லை அவள் ஒருத்திதானே பணக்காரி. மற்ற எல்லோரும் செத்துப் போனாளவையே? இந்தா. இவ்வளவுதான் தேறிச்சுது…ஒருத்தியிட்டையும் இந்த நேரம் இல்லை!”

“எவ்வளவெணை கிடக்கு?”

“எண்ணிப் பாரேன்! இருபத்தேழு தந்தாள் பாவி. நான் ரெண்டு எடுத்திட்டன். மிச்சம் இருநூற்றம்பது இருக்குது. மாதக் கடைசியிலே மீண்டு போடு.”

‘எம் காதகி’ என்று முணு முணுத்தபடியே கால் சட்டை. பைக்குள் காசை வைத்துக்கொண்டு புறப்பட்டான் இளைஞன்.

***

கச்சான் காற்று அடித்து ஓய்ந்து, மறுபடியும் சோளகம் வீசத் தொடங்கிவிட்டது.

கொழும்புக்குப் போனவன் திரும்பி வந்த ஒரு அசுகை, அசுமாத்தத்தையும் காணவில்லை. கிழவி எதிர்பார்த்தது தான்.

கிழவிக்கு என்ன பைத்தியமா , நல்ல பெறுமதியான நகையைக் கொண்டுபோய் வேறு யாரிடமும் வைப்பதற்கு? நகையை வாங்கி வைத்துக்கொண்டு ‘வாயைக் கட்டி வயித்தைக்காட்டி’ சேர்த்த தன்னுடைய காசைத்தான் கொடுத்திருந்தாள்.

மறுபடியும் வந்து கேட்டால் ‘கண்டது ஆர், கேட்டது ஆர்’ என்று அடிச்சு மூடி விட்டால் போகிறது…

அன்றைக்கென்று கிழவியினுடைய மூத்தமகள் வந்திருந்தாள்.

“எணை ஆச்சி என்ரை மோளின்ரை சாமத்தியச் சடங்கை கொஞ்சம் ‘பப்ளிக் காய் நாலு பேருக்கும் சொல்லிச் செய்யப் போறன். சிலவுக்கு ஒரு நானூறு எங்கையாலும் மாறித்தாவன். சடங்கு முடிஞ்ச கையோட திரும்பித் தந்திடுவன்.”

“இதென்னடி நீ! ‘சுடுகுது மடியைப்பிடி’ எண்டால் ஆர் தருவினம். அதுவும் ஆரெண்டாலும் சும்மா தாறண்டவளவையே…?”

“என்னணை ஆச்சி! ஊரிலை நான் குடுத்த காசெல் லாம் நிக்குது. பொடிச்சியின்ரை சடங்கோட ஒரு ஐந்நூறு அறுநூறாவது சேரும் … உன்ரை காசு எனக்கென்னத்துக்கு, அஞ்சு சத வட்டியோட அப்பிடியே தந்திடுறன்.”

“சரி, நீ வீட்டை போ! நான் உங்கினைக்கை பாத்திட்டு வாறன்” என்று கிழக்குப் பக்கம் கையைக் காட்டினாள் கிழவி.

பாக்கியமும் கிழவியினுடைய மகள் தானே. கிழக்குப் பக்கம் கையைக் காட்டினால் மேற்குப் பக்கத்தில் தான் எங்கோ மாறப்போகிறாள் என்று அர்த்தம்.

“சீனியற்றை செல்லாச்சியாக இருக்குமோ” என்று ஊகித்தபடியே எழுந்து புறப்பட்டாள் பாக்கியம்.

***

வெய்யில் காய்ந்து கொண்டு தானிருந்தது. எனி னும் கிழவியினுடைய தீட்சண்ய புத்தியிலே மழை பெய்யும் போலப்பட்டது.

அப்படியே காயப்போட்ட விறகுகளை அவசர அவசரமாக அள்ளி ‘அசைவிலே’ அடுக்கினாள்.

பிலாவிலைக் கம்பியையும் தூக்கிக்கொண்டு, அடிக்கடி மடியைத் தொட்டுப் பார்த்தபடியே புறப்பட்டாள் கிழவி.

சொந்த மகளிடமே வட்டிக்குக் கொடுக்கும் சுவாரஸ்யத்தை இதற்கு முன்பு அவள் அனுபவித்தது கிடையாது.

செல்லாச்சியிடம் கொடுத்தால் கண்ணை மூடிக் கொண்டு நானூறு தருவாள்.

கிழவிக்கு என்னவோ ஞாபகம். மடியானைப் பிரித்துப் பார்த்தாள். ஏதோ மாதிரி இருந்தது. வெளிச்சத்தில் எடுத்து உற்றுப் பார்த்தாள். வயிறு பகீரென்றது!

கண்ணெல்லாம் சுழட்டிக்கொண்டு வந்தது. நடு வழியில் கிழவி பொத்தென்று குந்திவிட்டாள்.

நடுங்கும் அந்தக் கையிலே கிடந்த நகை அவளைப் பார்த்து இளித்தது.

என்ன இருந்தாலும் பித்தளை பித்தளை தானே!

எங்கோ சேவல் ஒன்று பட படவென்று செட்டையை அடித்துக் கொண்டது.

மின்னவில்லை! முழங்கவில்லை! ‘படீர் படீர்’ என்று தடித்த மழைத்துளிகள் அங்கும் இங்கும் பொட்டுப் பொட்டாக விழுந்து தெறித்தன.

கிழவியின் வரண்ட கண்ணீர் விழுந்த இடம் தெரியவே இல்லை!

இயல்பான கொக்குவில் புழுதியின் வாசனை கம்மென்று வீசியது.

– 1959-61

– அக்கா (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 1964, பாரி நிலையம்,சென்னை.

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

1937 ஜனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாணம் அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அ. முத்துலிங்கம், அப்பாத்துரை ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் சாட்டர்ட் அக்கவுண்டனாகவும், இங்கிலாந்தின் மனேஜ்மெண்ட் அக்கவுண்டனாகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *