கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2024
பார்வையிட்டோர்: 2,370 
 
 

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம்-1

புதன் கிழமை. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதாம். செவந்தி படுக்கையில் உட்கார்ந்த வண்ணம் உள்ளங்கைகளை ஒட்டிக் கண்களில் வைத்துக் கொண்டு எழுந்திருக்கிறாள். சாதாரணமாகவே காலையில் ஐந்து மணிக்கு அவள் விழித்து எழுந்து விடுவாள். இன்று இன்னமும் ஐந்தாயிருக்காது என்று தோன்றியது.

அவள் படுத்திருந்த உள்வாயில் நடையில் ஒரு குட்டித் திண்ணை இருக்கிறது. வாசலில் ஒரு பக்கம் நீண்டும், ஒரு பக்கம் ஒருவர் மட்டுமே உட்காரும் அகலத்திலும் திண்ணைகள் இருக்கின்றன. நீண்ட திண்ணை உள்ள பக்கத்துக் கோடியில் ஒரு அறையும் உண்டு. அதில் அநேகமாக, நெல் மூட்டைகள் இருக்கும். மழைக்குப் பாதுகாக்க வேண்டிய கட்டாயமாக விறகு எரிமுட்டை கூடச் சேர்ந்திருக்கும்! வைக்கோல் தூசு எப்போதும் உண்டு.

நடை கடந்தால் முற்றம், சார்புக் கூடம் தவிர இரு புறங்களிலும் தாழ்வரை. ஒரு பக்கத்தில் அம்மி கல்லுரல் சாமான்கள். பின்பக்க நடையை ஒட்டிப் பெரிய சார்புத் தாழ்வரை. அதில் குந்தாணி, உலக்கை, ஏர், உழவு சாதனங்கள் இடம் பெற்றிருக்கின்றன. கிணறு, துவைக்கல், மாட்டுக் கொட்டில்… உழவு மாடுகள்… ஒரு சின்னப் பசு, அதன் முதற் கன்று…

மாட்டுக் கொட்டில் மண் சுவரும் கூரையும் புதுப்பிக்க வேண்டும் என்று சொல்லுகின்றன. வீட்டுக் கூடம் முன்புறம் எல்லாம் நாட்டு ஓடு வேய்ந்த கட்டிடங்கள். சமையலறை, பின் நடைச் சார்பு தென்னங் கீற்றுக் கூரை.

புருசன் ரங்கசாமியும் பன்னிரண்டு வயசுச் சரவணனும் திண்ணையில் படுத்திருக்கிறார்கள். மூத்த பெண் சரோசா ‘பத்தி’ல் படிக்கிறாள். வெகு நேரம் கூடத்து அறையில் படித்து விட்டுத் தூங்குவாள்.

அப்பா, கயிற்றுக் கட்டிலில் கருணையாகிப் போன ஒரு மெத்தையில் கிடக்கிறார். ஒரு சிறு முட்டை பல்ப், பச்சையாகச் சுவரில் வீற்றிருந்து அப்பாவின் எழும்புக் கூட்டு மார்பு விம்மித் தணிவதைக் காட்டுகிறது. அண்ணன்… இந்த வீட்டு மகன் மண்ணைத் தட்டிக் கொண்டு மதுரைப் பட்டணம் போய்விட்டான். இந்தக் கரும்பாக்கத்துக் கிராம மண் அவனுக்கு ஒட்டவில்லை. மருமகனும் மகளும் வீட்டோடு இருக்க வேண்டிய நிலை.

மண்… மண்ணில் ஒரு புதுமை காணப் போகிறோம் என்று சுறுசுறுப்பு செவந்தியின் கைகளில் ஏறுகிறது.

கிணற்றில் இருந்து நீரிறைத்து விடுகிறாள். கொட்டிலில் இருந்து சாணம் வாரிக் கழுத்து உடைந்த சட்டி ஒன்றில் கரைக்கிறாள். வாசல் முற்றத்தில் சட சட சட் சட்டென்று ஏதோ சலங்கை ஜதியின் லயம் போல் சாண நீர் விழுகிறது.

குட்டித் திண்ணை, வாயில் நடை, உள் நடை எல்லாம் மெழுகுகிறாள். வாயிலைப் பெருக்கி முடிப்பதற்குள் வெளிச்சம் மெல்லப் பரவி, இருள் கரைகிறது. ஆனி பிறந்தாயிற்று. பள்ளிக்கூடம் திறந்து, புதிய புத்தகங்கள் தேடிப் பிள்ளைகள் போகிறார்கள். இவளும் புதிய பாடம் – புதிய பாடம் தொடங்குகிறாள் மண்ணில்…

முதலில் மண் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்றார்கள். அதைச் செய்வதற்கில்லை. இப்போது பரிசோதனைப் பட்டமாக விதைக்கப் போகிறாள். அவள்… அவளே.

ஒரு ஏக்கருக்கு எட்டு சென்டு நாற்றங்கால்.

இவளோ கால் ஏக்கர் தான் புதிய பாடம் படிக்கப் போகிறாள்.

சமையலறையில் அடுப்புச் சாம்பலை வாரி, மெழுகுகிறாள். சாமான்கள் கிணற்றடி ஓரம் துலக்கச் சேருகின்றன.

அம்மா நலிந்த குரலில் தன்னைக் காட்டுகிறாள்.

“இன்னும் பொழுது விடியல. அப்பா ராமுச்சூடும் தூங்கல கறட்டுக் கறட்டுன்னு இழுப்பு; இருமல். இப்பத்தா செத்தக் கண்ண மூடுனாரு. நீ அதுக்குள்ளாற எந்திரிச்சி லொடபுடங்கற…”

செவந்திக்குக் குற்ற உணர்வு குத்துகிறது.

“இன்னக்கி, நடவுன்னு நேத்தே சொன்னதுதான். அப்பாவுக்கு ஒண்ணில்ல. டாக்டர் குடுத்த மாத்திரய ஒழுங்கா சாப்புடறதில்லை. எத்த சாப்புடக் கூடாதோ, அத்த ஊத்திக்கிறாரு…” என்று முணுமுணுத்தவளாய் அப்பனுக்கு அருகில் வந்து நிற்கிறாள். அவர் கட்டிலில் எழுந்து உட்கார்ந்திருக்கிறார்.

முகம் தான் எப்படி வெளுத்துப் போயிற்று? கழுத்து, மார்புச் சதை பைபையாகத் தொங்குகிறது. முன் முடி வழுக்கையாகிப் பனங்காய் வாடினாற் போல் இருக்கிறது. கண்கள் செருகி, விழி பிதுங்க ஓர் இருமல் தொடர் உலுக்குகிறது.

கட்டிலுக்கடியில் வட்டையில் சாம்பல் போட்டு வைத்திருக்கிறார்கள். செவந்தி அதை எடுத்து அவர் முன் நீட்டுகிறாள். கோழை என்று நிறைய வரவில்லை. அவஸ்தைதான் பெரிதாக இருக்கிறது.

முதல் நாளைக்கு முதல் நாள் தான், பெரிய சாலையில் நிலவள வங்கியின் வாசலில்
அப்பன் உற்சாகமாக உட்கார்ந்திருந்தார். நிலத்தின் உரிமையாளர் அவர். அவர் மண்ணில் தான் அவள் கால் காணியை, புதிய முறையில் பயிர் வைக்கப் போகிறாள்.

ஏறக்குறைய ஐந்து ஏக்கரா நிலமிருந்தும், அடமானத்திலும், கடனிலும் பயிர் வைக்க ஆள் கட்டில்லாமலும், சோர்ந்து போன விவசாயக் குடும்பமாகியிருக்கிறது. இதை நிமிர்த்த வேண்டும்.

“அப்பா, நேத்து சாயங்காலம் சாராயம் குடிச்சிட்டு வந்திருக்கிறீங்க. அத்த நிறுத்துங்க. உங்களுக்கு அதுக்கு மட்டும் காசு எப்படிக் கிடைக்குதோ? எருவடிக்கப் போவ, அது இதுன்னு வண்டியோட்டிட்டுக் காசு தேடிக்கிறீங்க…”

“இல்….ல… இல்…ல செவுந்தி… கொஞ்சுண்டு சுடுதண்ணி வச்சிக் கொண்டா…” என்று இரைஞ்சுகிறார்.

செவந்தி உள்ளே சென்று அடுப்பை எரிய விடுகிறாள். அவருக்கு ஒரு வட்டையில் வெந்நீரை ஊற்றி ஆற்றிக் கொண்டு வருகிறாள்.

“அம்மா, நீ எந்திரிச்சிக் கொஞ்சம் வேலயப் பாரு. உக்காந்துட்டே இருக்காதே…” என்று எழுப்புகிறாள்.

வாசலில் கணவன் அதற்குள் எழுந்து போயிருக்கிறான்.

“த, சரவணா… எந்திரிச்சி முகம் கழுவிட்டுப் படி. எந்நேரமும் ஆட்டம் ஓட்டம். பத்தும் பத்தாம மார்க் வாங்கிப் பாஸ் பண்ணிருக்க. எந்திரு?”

நடவாளுகள் ஐந்தாறு பேர், கன்னியப்பன் எல்லோருக்கும் சோறு பொங்க வேண்டும்.

தவலையை அடுப்பில் வைத்து உலை போடுகிறாள். அரிசியை முறத்தில் எடுத்து வைக்கிறாள். இன்னோர் அடுப்பில், ஒரு சட்டியில் பருப்பை வேக வைக்கிறாள். வெங்காயம், கத்திரி, உருளை என்று காயை அரிந்து ஒரு புறம் நகர்த்துகிறாள். புளியைக் கரைத்துக் குழம்பையும் கூட்டி வைக்கிறாள்.

“சரோ? எந்திரி, எந்திரியம்மா? இன்னைக்கி நடவு. கிளாசெடுத்த மாதிரி பயிர் வைக்கிறோம். எல்லாம் ஒம்பது மணிக்கு வந்திருவாங்க. நீயும் செத்த வந்திட்டு, அப்படியே ஸ்கூலுக்குப் போகலாம்?” என்று எழுப்புதலுடன் தன் ஆசையையும்
வெளியிடுகிறாள். இத்தனை நேரமும் பேசாமல் இருந்த அம்மா சட்டென்று சீறுகிறாள்.

“ந்தா, அத்த ஏனிப்ப கழனிக்கு இழுக்கற? அது படிக்கிற பொண்ணு… ராவெல்லாம் படிச்சிட்டுத் தூங்கிருக்கு…”

“ஆமா, உம்புள்ள படிச்சிட்டு இப்ப பவுன் பவுனா கொட்டுறா. இவ படிச்சிட்டுக் கொட்டப் போறா! இதப்பாரு! மண்ணுதா சோறு போடும், கடைசி வரை…!”

இவளும் பதிலுக்குக் கொட்டி விட்டு மேற்கொண்டு காரியங்களைக் கவனிக்கப் போகிறாள்.

“தா கன்னீப்பா…”

“ரா, தண்ணி பாச்சிருக்கில்ல? நாஞ் சொன்ன மாதிரி, ஒரு குளம் போல பண்ணிட்டு, அதில இந்த பாக்கெட் அஸோஸ்பைரில்லம்… இது தான் உயிர் எரு… இத்தக் கரைச்சிடு… நாத்தக் களைப்புடுங்கி அதில வைச்சிடு… நடவு வயல்ல ரெடி பண்ணிடு… நா வாரேன்…” அவன் கருப்பாக இருக்கும் அந்த உயிர் உரப் பாக்கெட்டை மாற்றி மாற்றிப் பார்க்கிறான்… “நான் வந்திடறே. நா வந்தப்புறம் எல்லாம் செய்யலாம். சாந்தி கூட வரேன்னிச்சி. நீலவேணி, அம்சு, உன் ஆயா வருதா?”

“ஆறாளு வரும்கா, அஞ்சாளு போதும் காக்காணிக்கு. ஆனா நீங்க நடவுல புது மாதிரின்னீங்க… ஆறாளு வரும்” என்று சொல்லிவிட்டு அவன் மாட்டை அவிழ்த்துக் கொண்டு, எவள் எடுத்து வைத்த சாமான்களுடன் போகிறான்.

மணல், இரண்டு பெரிய முனைகள், நீளமான கயிறு… பிறகு சைக்கிள் டயர் ஒன்று…

நோட்டுப் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு செவந்தி சரி பார்க்கிறாள்.

பல் விளக்கிவிட்டு புருசன் வந்தாயிற்று. அம்மாதான் மாடு கறந்து வர வேண்டும்.

“சரோ… உலையில அரிசி போட்டிருக்கு. பாத்துச் சரிச்சி வையி. பாட்டி பால் கறந்ததும் டீ போட்டுக் குடியுங்க…”

“நா ஒரெட்டுப் போயிட்டு பார்த்து ஓடியாரேன்!” என்று கிளம்புகிறாள்.

“என்னம்மா நீ! என்னால முடியாது! நீ சோறு வடிச்சிட்டுப் போ! பெரிய பாயைத் தூக்க முடியாது!”

“என்னது? பொம்புளையாப் பிறந்துட்டுப் பாயைத் தூக்க முடியாதுங்கற? சம்சாரி வீட்டுப் பொண்ணு! இந்த சல்லியம் எல்லாம் இங்க நடக்காது. காலம எந்திரிச்சி அந்த ரேடியோவத் திருகிவுடறே. அது என்ன பாட்டுடீ! சட்புட்ன்னு வேலையைப் பாரு! இன்னக்கிப் புதுசா உங்கையில நடவு செய்யி, கத்துக்க! உம் போல படிச்ச பொண்ணுகதா வரணும். சாந்தி பத்துப் படிச்சிருக்கா. அவ ஒண்டியாளா, கொல்ல மேட்டுல பயிரு வைப்பேன்றா! படிச்சிப்புட்டா மண்ணு அந்நியமில்ல. வந்தாங்களே பெரிய மேடம். அவங்க பெரிய பெரிய படிப்புப் படிச்சவங்க! இதைச் சொல்லிக் கொடுத்தவங்க எல்லாரும் பெரிய… படிப்புப் படிச்ச பொம்புளங்க. நாப்பது வருஷமா ஆம்புளங்களுக்குப் புதுத் தொழில் நுணுக்கம் சொல்லிக் கொடுத்தோம். பொம்புளங்க கையில் பலமும் வரல, சக்தியும் வரல. இப்ப நேரடியா பொம்புளங்களுக்கே சொல்லித் தரோம்னு அரசே சொல்லி வந்திருக்கு… வாம்மா, கண்ணு, உங்கையாலே நாலு குத்து வச்சிட்டுப் போயிடு!” என்று மெல்ல ஊசி குத்தினாள். ரங்கனுக்கு இது மறைமுகத் தாக்குதல்.

அவன் மண்ணில் உழைப்பவனாக இருந்தால், கொல்லை மேட்டுப் பூமி தரிசாகக் கிடக்காது. ஏதோ ஒரு போகம் போடலாம். அண்ணன் படிப்பென்றும், வேலை என்றும் பந்தகம் வைத்த பூமி மீட்கப்படாமலே போக வேண்டாம். எஞ்சியிருக்கும் ஒரு ஏக்கரிலும் கூலிக்கு ஆள் பிடித்து மல்லுக்கட்ட வேண்டியதில்லை. சொந்த அத்தை மகன் தான். பத்து படித்ததும் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு மண் ஒட்டக் கூடாது என்று கௌரவம் பாராட்டினான். அத்தையும், மாமாவும் போன பிறகு, இரண்டு பெண்களைக் கல்யாணம் கட்டிக் கொடுத்து, இரண்டு பையன்களுக்கும் பிரிவினை என்று வந்தது. இவன் தன் பங்கை தன் தம்பிக்கு விட்டுக் கொடுத்து, பணம் வாங்கினான். பெரிய சாலையில் சைக்கிள் கடையாக, சைக்கிள் மராமத்துக் கடையாக இருக்கிறது. அவன் எப்போதேனும் அதில் இருந்து உபரி வரும்படி என்று இவள் கையில் நோட்டோ, பொன்னோ, துணியோ கொடுத்ததாக நினைவில்லை.

உழைக்கும் ஒரே ஆள் அப்பன் தான். அம்மாவும் வீட்டுப் படி இறங்க மாட்டாள். கழனி வேலை என்று செல்பவள் அவள் மட்டுமே.

ஆனால் பெண்சாதியின் ‘மேட்டிமைத்தனம்’ ரங்கனால் பொறுக்க முடியுமா?

“என்னமோ ரெண்டு பொம்பளைங்க ஜீப்புல வந்து எறங்கி பயிரு வைக்கற பாடம் நடத்துனாங்களாம். இவங்களுக்குத் தலகால் புரியல! நாலு புஸ்தகத்த, அதுவும் இங்கிலீஷ் புஸ்தகத்தப் படிச்சிட்டுப் பயிர் வைக்கிறதாம். உர மருந்து பூச்சி மருந்து அது இதுன்னு கெடங்கில் வெலயில்லாம கிடந்திச்சின்னா, தலையில கட்ட இப்பிடி ஒரு சூட்சுமம் போல. இவளுவ புத்தகத்தில எழுதிட்டு வந்து, அது போல பயிரு வைக்கிறதாம். தொரசானி முருங்கக்கா சாப்புட்ட கத தா. அப்படியே முழுங்கணுமின்னு தொண்டக் குழில சக்கய எறக்கிட்டுத் தவிச்சாளாம்.

“அவவ, ஏரிப் பக்கத்துப் பூமியெல்லாம் பயிரு வச்சிக் கட்டுப்படி ஆவலன்னு பிளாட்டு போட வித்துட்டு டவுன் பக்கம் போயி எதானும் தொழில் பண்ணலான்னு போறா.

“பாரு, நாகு பெரியம்மா மகனுக போடு போடுன்னா போடுறானுக. ஒருத்தன் பைனான்ஸ் கம்பனி வச்சிருக்கான். ஒருத்தன் ரியல் எஸ்டேட் பிஸினஸாம். காரிலதா வாரான். மோதிரம் என்ன, தங்கப்பட்டை வாட்ச் என்ன, அடயாளமே தெரியல… ஆளுங்கட்சில கூட பலான ஆளெல்லாம் தெரியும். அத்தினி செல்வாக்கு. இவ என்னமோ, ஏக்கருக்கு முப்பது மூட்டை எடுக்கப் போறாளாம்… அத்தே, காபியக் கொண்டாந்து குடுங்க. எனக்கு வேலை இருக்கு; போற…!”

செவந்திக்கு உள்ளூர ஆத்திரம் பொங்குகிறது.

“நான் இத்தச் சவாலா எடுத்துக்கறேன்… பண்ணிக் காட்டுறேன். அதுவரைக்கும் பேசாதீங்க!”

இதற்குள் சுந்தரி வாசல் வழியே வருகிறாள். “ஏக்கா? நடவாமே? அம்சு சொல்லிச்சு…”

“ஆமா, வா சுந்தரி, அடுப்புல அரிசி கொதிக்குது. குழம்பக் கூட்டி வச்சிருக்கே. பழஞ்சோறு இருக்கு. சரோ, சரவணன் சாப்பிட்டுட்டு ஸ்கூலுக்குப் போகட்டும். சைக்கிள்ள ரெண்டு பேரும் வந்து பகலுக்கு சாப்புடுவாங்க… நா வாரேன்…”

நோட்டுப் புத்தகம் அலுமினியம் கூடையில் இடம் பெறுகிறது.

நடவு வயலுக்கு கால் காணிக்கு… என்று மனசுக்குள் பாடம் படித்தவளாய், ஜிப்சம், யூரியா, பொட்டாஷ் என்று வைக்கிறாள். நாற்று நனைக்க அசோஸ்பைரில்லம். உயிர் உரம் கொடுத்தாயிற்று. பிறகு…

அம்மாவுக்கும் மகள் சரோவுக்கும் இவள் கேலிக்குரியவளாகிறாள்.

முகம் கை கால் கழுவிக் கொண்டு உள்ளே வருகிறாள். பழைய சோற்றை உப்பைப் போட்டுக் கரைக்கிறாள். ஒரு வெங்காயத் துண்டைக் கடித்துக் கொண்டு குடிக்கிறாள். சுந்தரி அடுப்பைப் பார்த்து எல்லாம் செய்வாள். இந்த நிலம், வீட்டுக் கொல்லையில், கூப்பிடு தூரத்தில் தான் இருக்கிறது. தலையிலும், இடுப்பிலும் சுமை – டயர் வளையம் கையில்… நடக்கிறாள் செவந்தி. வெயில் சுள்ளென்று விழுகிறது.

ஓரத்தில் ஊர்ப் பொதுவிடம். நடு ரூமில் பஞ்சாயத்து நூலகம். சுற்றி உள்ள இடத்தில் குந்தியிருப்பார்கள் ஆண்கள். தண்ணீர் முறைக்காரர்களும் இருப்பார்கள். ஆற்றிலே பாதி நாள் தண்ணீர் இருக்காது. மழை பெய்தால் மட்டுமே கால்வாயில் தண்ணீர் வரும். பக்கத்தில் வெற்றிலைக் கொடிக்காலின் கார மணம் வருகிறது. மடையில் நீர் பாய்ந்திருக்கிறது. இது கிணற்று நீர். அந்தப் பூமியும் இவர்களுடையது. இப்போது, சிங்கப்பூர்க்காரர் குடும்பத்துக்குப் போய் இருக்கிறது. அவர்கள் வெற்றிலைக் கொடிக்கால் வைத்திருக்கிறார்கள்.

பழனிச்சாமி வெற்றிலை கிள்ளுகிறான்.

“நடவா…” என்று கேட்கிறான்.

ஆமாம் பொல்லாத நடவு… கால் காணி… முழுசையும் போட ஆசைதான். நாற்று முழுசுக்குமாக விட்டிருக்கிறார்கள். ஆனால் அப்பன் கை எழுத்துப் போட்டுக் கடன் வாங்கி இவளுக்குத் தருகிறான். அகலக் கால் வைத்து நட்டமானால்…?

ஆம், கால்காணி… ஆயிரம் ரூபாய்க்குள் செலவு செய்து போடப் போகிறாள்… எருவாகவும் நுண்ணூட்டச் சத்தாகவும், நோய்களைத் தாக்காத மருந்தாகவும், கூலியும் கூடத்தான் கட்டுப்படியாகும்படி கடன் கொடுத்திருக்கிறார்கள். ‘பொம்புள என்ன கிழிப்பா?’ என்ற அலட்சியத்துக்கு நேர் நின்று காட்டுவோம்!

விடுவிடென்று வரப்பில் நடக்கிறாள்.

அத்தியாயம்-2

வயல் வரப்பு, நீர் ததும்பிய கோலம், பசுமை…

என்றுமில்லாத உற்சாகம் பொங்கி வழிகிறது. நீலவேணி, கன்னியப்பனின் ஆயா, அம்சு எல்லோரும் வந்திருக்கிறார்கள். ‘செவந்தியக்கோ!’ என்ற கூவல் ஒலி கேட்கிறது. வரப்பின் ஓரத்தில் சுமையை இறக்க நீலவேணி வருகிறாள். இவளும் ஒரு உறவு முறைக்காரி. ரங்கனுக்குச் சின்னம்மாள் மகளாக வேண்டும். இருந்த பூமியை விற்று, பட்டணத்துக்குக் கொண்டு போய் பிஸினஸ் பண்ணித் தொலைத்து விட்டான். இவள் கூலி வேலை செய்கிறாள்.

“யக்கோ…!”

“ஓ… சாந்தி…! வாங்க வாங்க…! கன்னிப்பன் வந்து சொன்னாரா?”

“இல்ல… உங்களத்தான் வங்கி முன்ன பார்த்தனே? எல்லாம் வாங்கிட்டுப் போனீங்க. இன்னைக்குப் புதன்கிழமை – பயிர் வைப்பீங்கன்னு, புள்ளங்கள ஸ்கூலுக்கு அனுப்பிச்சிட்டு ஓடு வந்தேன்.” கையில் மூங்கில் பிளாச்சில் பட்டையும் எழுத்துக்களுமாகத் தாங்கி நிற்கும் அறிவிப்பை சேற்றில் குத்தி வைக்கிறாள்.

“ஏய் என்ன இது?”

“தான்வா மகளிர் பண்ணை…”

‘ஹோ’ என்ற சிரிப்பு! “காக்காணி பண்ணையாயிடிச்சா?”

“காக்காணியோ அரைக்காணியோ, இது தான்வா மகளிர் பண்ணைதான்…”

“அது என்னக்கா, தான்வா…”

அம்சு அதைப் படித்துவிட்டுக் கேட்கிறாள்.

“இங்கிலீசில், தமிழ்நாடு விமன் இன் அக்ரிகல்ச்சர் என்று இந்தத் திட்டத்துக்குப் பெயர். இப்ப நாமளும் காலம் காலமா உழுவதும், நாத்துப் போடுவதும், நடவும், கள பறிக்கிறதும், அறுப்பறுக்கிறதும் பாத்திட்டு வாரோம். முன்னக் காலத்துல தொழு உரம், சாம்பல் இதுங்கதா தெரியும். அப்புறம் யூரியா பொட்டாஷ்னு போட்டாங்க. பூச்சி புகையான் மருந்தடிச்சாங்க… இப்ப, இதுங்களிலே சின்னச் சின்ன நுணுக்கங்கள் கையாண்டா, பயிர் நல்லா வருது, களை பூச்சியெல்லாம் கட்டுப்படுத்துதுன்னு கண்டிருக்காங்க” என்று சாந்தி விளக்குகிறாள். கன்னியப்பனின் பாட்டி வரப்பில் குந்தி வெற்றிலை போடுகிறாள்.

“நீங்க வேற நோட்டு எடுத்திட்டு வந்திருக்கிறீங்களா…?”

“ஆமாம்…”

“என்ன கன்னிப்பா…?”

செவந்தியும் சாந்தியும் வந்து பார்க்கிறார்கள். குளம் போல் மண்ணை வெட்டி வரைகட்டி, அதில் நுண்ணுயிர் உரத்தைக் கலக்கியிருக்கிறான். பாக்கெட் வெற்று உரையாகக் கிடக்கிறது தடத்தில்.

நாற்று முடிகள், அதில் உரம் பெறுகின்றன. எட்டு முடிகள்.

“அக்கா நேத்து ரெண்டு கிலோ ஜிப்சம் மணலில் கலந்து நாத்தங்காலுக்குப் போட்டீங்க…”

“பின்ன? விதை செய் நேர்த்தி செய்து நாற்றங்கால் போடலே. இது சும்மா அப்படியே போட்டது. ஆனா, மத்ததெல்லாம் கரெக்டா பாத்துட்டு வாரேன். நடவு வயலில் இரவு நீர் பாய்ந்திருக்கிறது. காலையில் உழவோட்டி இருக்கிறான்.”

சாந்தி தொழு உரம், சாணி உரம், மணல், பொட்டாஷ், யூரியா, ஜிப்சம், அஸோஸ்பைரில்லம் எஞ்சிய பாக்கெட் எல்லாம் கலந்து சேலையைத் தூக்கிச் செருகிக் கொண்டு விசிறுகிறாள். செவந்தி பாதியும், இவள் பாதியுமாக இதை முடித்து விடுகிறார்கள்.

பிறகு, முளைகளை எட்டடிக்கு ஒன்றாக நடுகிறார்கள். அதில் கயிறைக் கட்டுகிறார்கள்.

கயிறோரமாகக் கோடு போட்டாற் போல் சாந்தியும் செவந்தியும் நாற்றுக்களை வைத்துக் காட்டுகிறார்கள்.

“அஞ்சாறு எடுத்துக் குத்துக் குத்தா வைக்க வேணாம் ஆயா? ரெண்டோ மூணோ போதும்…”

இடையில் ஓரடி விட்டு மீண்டும் எட்டடிப் பாத்தி. முளை அடித்துக் கயிறு கட்டுவதில் கன்னியப்பனும் பங்கு கொள்கிறான்.

“இது எதுக்கு இப்படி? வருசா புடிச்சி குத்துக் குத்தா வச்சிட்டு வந்தா பத்தாதா?” என்று பாட்டி முணுமுணுக்கிறாள்.

“இல்ல ஆயா, இப்ப ஓரடி உடறதால, இடையில நிக்க, பாக்க எடம் இருக்கும். நாத்த, பயிர முதிக்க வேணாம்.”

கிடுகிடென்று எட்டடிக்குள் நாற்றுக்களை விரைவாக அம்சு வைக்கிறாள். “இருங்க, இருங்க!” என்று செவந்தி சைகில் டயரைக் கொண்டு வந்து நட்ட பயிர்களிடையே போடுகிறாள். உள்ளே எண்ணுகிறாள். இருபது குத்துகள் இருக்கின்றன.

“பரவாயில்லை. இப்படியே இருக்கட்டும்.”

“இது எதுக்கு அக்கா?”

“நெருக்கமாயிருந்தா, காத்துப் போக, நல்லா வளர இடம் இருக்காது. மனுஷங்களைப் போல பயிருக்குக் காத்து வேணுமில்ல?”

விருவிரென்று வேலை நடக்கிறது. வெயில் விழுவது தெரியாமல் குளிர் சுமந்த சூழல். உற்சாகம்…

சாந்தி… பத்துப் படித்த பெண். தோற்றம் பார்த்தால் கழனி வேலை செய்பவள் என்று சொல்ல மாட்டார்கள். புருசன் ஏதோ போட்டோக் கடையில் உதவியாளனாக இருக்கிறானாம். கொல்லை மேடு என்று சொல்லும் மானாவாரி பூமிதான் அரை ஏகரா இருக்கிறதாம்.

“தண்ணி இருந்திச்சின்னா, நாங் கூட உடனே செஞ்சி பாதுடுவ. எங்க நாத்துனாருக்கு அரைக் காணி இருக்கு. அது வேப்பேரில டீச்சரா, இருக்கு. அவ மச்சான் பாக்குறாரு, அவங்ககிட்டக் கேட்டு பயிரு வைக்கணுமின்னு ஆசை…” என்று சொல்கிறாள்.

“ஆயாதா முத நாத்த வச்சிருக்கு. அது வளரட்டும்… பாப்பம்… கன்னிப்பனில்லாம போனா இந்தப் பயிர் கூட வைக்கிறதுக்கில்ல…”

“அவுரு உங்க சொந்தக்காரரா அக்கா?”

“சொந்தத்துக்கு மேல. பாட்டிக்கு மக வயித்துப் பேரன். அம்மா அப்பா ரெண்டு பேரும் செத்துட்டாங்க. ஏழெட்டு வயசுப் பையனா, இங்க ஆயி வந்தாக. கூலி வேலை செஞ்சே காப்பாத்தியிருக்காங்க. எங்கூட்டுக்காரருக்குத் தா பயிரு வேலையில் நாட்டமில்ல. பன்னண்டு வயசிலேந்து உழவோட்டுவான், சேடை போடுவா, மாட்ட அவுத்திட்டுப் போயி, கட்டி, எல்லாம் அவந்தா.”

“படிக்கலியா?”

“படிச்சா, அஞ்சோ, ஆறோ… அப்பவே சம்பாதன வந்திட்டது. இப்ப உழவாளுங்க எம்பது ரூபால்ல வாங்கறாங்க? ஆளு கிடைக்கல?”

“உழவு மட்டும்தான அவுங்க செய்யிறாங்க? அண்டை வெட்டுறதிலேந்து, நாத்து நடவு, களை பறிப்பு, அறுவடை வரை பொம்பிளங்க செய்யலியா?”

ஒரு பத்தி முழுவதும் நட்டு விட்டார்கள். வரப்பில் இருந்து பார்க்க, அழகாகப் பாய் விரித்தாற் போல் இருக்கிறது.

“இதுக்குள்ள காவாசி ஆயிருக்கும். இதென்னாடி! கோடு போட்டாப் போல நடுறதும்?” என்று ஆயா சலித்துக் கொள்கிறாள்.

“பயிறு என்ன கிச்சிலிச் சம்பாதான?” என்று கேட்கிறாள் சாந்தி.

“ஆமா. வெள்ளக் கிச்சிலின்னு போட்டாங்க. நாத்து வேர் அறுகாக வந்திருக்கில்ல? நேத்து 2 கிலோ ஜிப்சம் மணலில் கலந்து தூவினேன். நாத்து நல்லா வந்திருக்கு…”

சுந்தரி போசியில் காபியுடன் வருகிறாள். சுந்தரி…

பாவம் அவள் தான் கைக்கு உதவி.

இவளுக்குச் சின்ன அத்தானை அவள் கட்டினாள். செயலான இடம். இருபது சவரன் போட்டு, பண்ட பாத்திரங்கள் கொடுத்துக் கட்டினார்கள். அந்த அத்தானும் மண்ணில் வேலை செய்யவில்லை. லாரி ஓட்டப் போனான். அவ்வப் போது வரும் போதும், பூவும் பழமும் அல்வாவும், துணிகளும் அமர்க்களப்படும். அத்துடன் சகவாசம் கெட்டது தெரியவில்லை. குடித்தான். குடித்துவிட்டு லாரியை ஓட்டிப் படுவெட்டாகப் போய் சேர்ந்தான். ஐந்து வருசம் ஆகிறது. லாரி முதலாளிகள் நட்ட ஈடென்று ஒரு சல்லிக்காசு தரவில்லை. வீடு சொந்தம். இவர்கள் பிரிவினையில் வந்த ஒரு ஏக்கரா பூமி இருக்கிறது. அதையும் போக்கியத்துக்கு விட்டு, இரண்டு பிள்ளைகளுடன் வாழ்கிறாள். இவள் கணவனிடம் சரளமாகப் பேசுவாள். சொந்தம் கொண்டாடுவாள்… ஓர் ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள். ஒன்றுக்கு ஏழு வயசு. அவன் போகும் போது ஆறு மாசமாக இருந்தான். அதற்கு அப்பன் முகமே தெரியாது…

“காப்பி வந்திடிச்சி. வாங்கடீ…!” சுந்தரி வந்து பார்க்கிறாள்.

“யா… அழவா இருக்கு, இது ஒரு சைசா…” என்று நடுவில் ஓரடி விட்ட ஓடையில் நின்று கொண்டு, சாந்தி டயர் போட்டு குத்துகளை எண்ணுவதைப் பார்க்கிறாள்.

“செவந்தி அக்கா, இந்தவாட்டி நல்லா வெளஞ்சா, நானும் பயிர் வைக்கிறேன். ஏன் போக்கியத்துக்கு வுடணும்?”

“உன் அத்தான் சவால் வுட்டுருக்காரு. பார்ப்பம்… காபித் தூளு இல்லியே? வாங்கி வரச் சொன்னியா?”

“இல்லக்கா, டீத்தூளுதா இருந்திச்சி, போட்டேன். சரோசா ஸ்கூல் போயிட்டது அப்பமே. சரவணன் செத்த மின்னாடி அத்தான் கூட சைக்கிள்ல உக்காந்திட்டுப் போனான்.”

“மாமாவுக்குக் கஞ்சித் தண்ணில உப்புப் போட்டுக் குடுத்தே. வெந்நீர் வச்சித்துடச்சிட்டு, வேற துணி மாத்திட்டு உட்கார்ந்திருக்காரு…”

எல்லாரும் கரையேறி, தேநீர் குடிக்கிறார்கள்.

ஆயா தனக்குத் தேநீர் வேண்டாம் என்று சொல்கிறாள்.

“எனக்கு வெத்திலக் காசு மட்டும் குடுத்திடு!”

“வேணி, இன்னிக்கி டிபன் போடலியா?”

“கொஞ்சம் அரை லிட்டர்தான் போட்டே நேத்து. அம்மா தட்டி வச்சிடும். கிரைண்டர் எதுனாலும் வாங்கினா சல்லிசா இருக்கும். முடியலம்மா!” என்று உட்காருகிறாள்
நீலவேணி. பூமியைத் தோற்றுவிட்டு, டிபன் கடை வைத்துப் பிழைப்பு நடக்கிறது.

“உங்கூட்டுக்காரர் என்னதா செய்யிறாரு?”

“அதெல்லாம் கேட்காதீங்க; ரகசியம்…” என்று அம்சு கிண்டுகிறாள்.

“எல்லாருக்கும் பட்டணம் போனால் காசை வாரிக் கொட்டலாம்னு கனா. பட்டாலும் புத்தி வரல… இப்பவும் மைக்கு செட்டு வாங்கினா நல்ல கிராக்கின்னு அம்மாகிட்டச் சொல்லிட்டுருக்காரு. வூட்டுக்குக் கூரை மாத்தனும். இவுரு மண்ணத் தொட வாணாம். இதே டிபன் போடுற பிசினஸ்ல கூடக் கொஞ்சம் ஒத்தாசை செய்யலாம்…”

“அதுல என்ன ஒத்தாசை செய்வாரு? மாவாட்டுவாரா?”

“ஒரு கிரைண்டர் வாங்கிப் போடலாமில்ல? ஒரு கணக்கெழுதி வைக்கலாமில்ல? அட கடவீதிப் பக்கம் ஒரு எடம் புடிச்சி, கடை போடலாமில்ல? வங்கில லோன் வாங்கித் தரலாமில்ல? ஆம்புள இருந்திட்டு பொம்புளயே எல்லாம் செய்யிறதுன்னா?”

“வேணி, நீ சும்மா இரு. பொம்புளங்க நிச்சியமா எதானும் பண்ணுவம். அப்ப புத்தி வரும்” என்று முடிக்கும் செவந்தி எழுந்திருக்கிறாள்.

சுந்தரி வீட்டுக்குப் போகிறாள். இவர்கள் களத்தில் இறங்குகிறார்கள். இந்த நடவு பழக்கமில்லாததால் கொஞ்சம் நேரம் தானாகிறது.

“நட்ட மூணாம் நாள்… வெள்ளிக்கிழமை… களைக் கொல்லி போடணும். நினைப்பிருக்கா? பூடாக்ளோர் வாங்கி வச்சிருக்கீங்களா?” என்று சாந்தி நினைப்பூட்டுகிறாள்.

“எல்லாம் செட்டா வாங்கிட்டேன். கால் லிட்டர், மணலில் கலந்து, கையில் உரை போட்டுக் கிட்டுத் தெளிக்கணும். உரை கூட இருக்கு. மூணாம் நாளா, அஞ்சாம் நாளான்னு சந்தேகமாயிருக்கு.”

“நீ என்ன எழுதியிருக்கிறே சாந்தி?”

“பாத்துக்கலாம்…”

செவந்திக்கு இப்போது ஒரு புதிய பிரச்னை தலை நீட்டுகிறது. இவர்கள் எல்லோருக்கும் சோறு போட்டு தலைக்குப் பதினைந்து ரூபாய் கொடுப்பாள். கன்னியப்பனுக்கு அறுபது ரூபாய். அவனிடத்தில் அவளுக்குத் தனியான பரிவு எப்போதுமே இருக்கிறது. மண் என்றால் துச்சமாகக் கருதும் ஆண்களைப் பார்த்த அவளுக்கு அவன் வித்தியாசமாக இருக்கிறான். அப்பன் பெயருக்கு உழவோட்டி, பயிர் வைத்தாலும் கன்னியப்பனைப் போல் பொறுப்பாக யார் பார்ப்பார்கள்? உழவு மாடுகள், ஏர் எல்லாம் அவன் உடமைகள் போல் கையாளப்படுகின்றன. அவன் பெரிய இங்கிலீஷ் படிப்புப் படிக்காவிட்டால் என்ன? இந்த வீட்டுக்கு, விவசாயக் குடும்பத்துக்கு ஒட்டுபவனாக ஒரு வாரிசு வேண்டும். இந்த சரோசாவின் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். கன்னியப்பனைக் கட்டி வைத்து விடலாம். வீட்டோடு உரிமையாகக் கைக்கு உதவும் பிள்ளையாக… இதுதான் பெரிய சொத்து…

கன்னியப்பன் தான் போய்ச் சோறு கொண்டு வருகிறான். சுந்தரியும் வருகிறாள். பணப்பையும் வருகிறது. நடுவில் யாரும் சாப்பிட ஏறவில்லை. மூன்றரை மணியோடு முடித்து விடுகிறார்கள். பிறகு தான் கலந்து வந்த குழம்புச் சோற்றை உண்டு பசியாறுகிறார்கள்.

சாந்திக்குப் பதினைந்து ரூபாய் கூலியை எப்படிக் கொடுக்க? மற்றவர்கள் கூலிக்கு வேலை செய்பவர்கள். சாந்தி…

ஆனால் எதுவும் கொடுக்காமல் இருக்க முடியுமா? ஒரு ஐந்து ரூபாயும் ஒரு பத்து ரூபாயும் வைத்து நீட்டுகிறாள்.

அவள் முகத்தில் உணர்வுகள் மின்னுகின்றன. கையால் தள்ளுகிறாள்.

“இருக்கட்டும் அக்கா… நான் இப்படித் தொடங்குறப்ப நீங்க முதல்ல வந்து ஒத்தாசை செய்யணும். இப்ப வச்சிக்குங்க! பணம்னு அத்தோட உறவு போகக் கூடாது. நம்ம சிநேகம் பெரிசா வளரணும்…”

“ஐயோ… என்ன இது சாந்தி…?”

“வையுங்க சொல்றேன்… பிள்ளைங்க ஸ்கூல்லேந்து வந்திடுவாங்க. நான் வாரேன்…” தான்வா மகளிர் பண்ணை அறிவிப்பை எடுத்துக் கொள்கிறாள். அவள் விடுவிடென்று வரப்பில் நடக்கிறாள். எட்டி முள் முருங்கை மரத்தின் பக்கம் வைத்திருக்கும் சைக்கிளை எடுத்துக் கொண்டு அவள் போவதையே பார்க்கிறாள் செவந்தி.

“ஏ, செவந்தி? யாரு அந்தம்மா? கழனிக்குச் சைக்கிள்ல வார பொம்புளய இப்பதா பாக்கிறே!” என்று வியந்து பேசினாள் வேணி.

“ரொம்பக் கெட்டிக்காரி. நல்ல குணம். நான் முந்தா நா வங்கில பார்த்துச் சொன்னே. வந்து ஒரு நாள் வேலை செஞ்சிட்டுப் போயிட்டது…”

“நா இதுக்கு மின்ன பாத்த நினைப்பில்ல… எந்தப் பக்கம்?”

“ஆவனியாபுரம் காலனின்னு சொல்லிச்சி…” என்று அலட்சியமாக ஆயா பாக்கைக் கடிக்கிறாள்.

“ஓ…?”

குரல் ஓங்கித் துவண்டு விழுகிறது.

“அதான பாத்தேன்! காலனிப் பொம்புள…! ஓ… அவளுவ நடை உடயப் பாரு. பேச்சப் பாரு! எங்கியோ ஆடுமாடக் கடிச்சிட்டுக் கிடந்து…”

“ஆயா!” என்று செவந்தி சுள்ளென்று விழுகிறாள்.

“இப்படி எல்லாம் பேசாதீங்க! அவங்களும் நம்மப் போல மனுசங்க… இனிமே யார்ன்னாலும் இப்படிப் பேசுனா, எனக்குக் கெட்ட கோபம் வரும்.”

“என்ன கோபம் வரும்? ஆயிரம் பேசுனாலும், அவ சாதி சாதிதானே?”

“இல்ல, எல்லாம் மனிச சாதி!”

“அவள உன் வீட்ல கூட்டிப்ப. நீ அவ வீட்ல போயிச் சோறு எடுப்ப?”

“ஆமாம், எடுப்பே! இந்தச் சேத்தில் நின்னு பச்சையத் தொடுற நாமெல்லாந்தா ஒரே சாதி. ஒசந்த சாதி! இனிமே இப்படிப் பிரிச்சிப் பேசாதீங்க! நாங்க டிரெயினிங் எடுத்தம். யார் என்ன சாதின்னு தெரியாது. யாரு இந்து, யாரு கிறிஸ்ட்தியன், யாரு அல்லான்னு தெரியாது. எங்களுக்குச் சொல்லிக் குடுத்த மேடம் என்ன சாதின்னு தெரியாது. எல்லாரும் பொம்புளங்க. எல்லாரும் நோவும் நோம்பலமும் மாசந்தோறும் அனுபவிக்கிறவங்க… வாங்க போவலாம்.”

இந்த ஓர் எழுச்சியில் பத்தி நடவுப் புதுமையைப் பார்த்து அறிவிக்கும் அழகுணர்வு சிதைந்து போகிறது.

அலுமினியக் கூடை, சாமான்கள் டயர் எல்லாவற்றுடனும் செவந்தி வீடு திரும்புகையில் சூரியன் மலை வாயில் விழுந்தாயிற்று.

அத்தியாயம்-3

செவந்தி வீடு மெழுகித் துடைத்து, வாயிற்படி நிலைகளில் மஞ்சட் குங்குமம் வைக்கிறாள். கோலம் போடுகிறாள். கூடத்துச் சுவரில் மஞ்சளால் வட்டமிட்டு, புள்ளி வைக்கிறாள். நடவு நட்டுப் பதினேழு நாட்களாகி விட்டன. பதினைந்தாம் நாள் இரவே வேப்பம் புண்ணாக்கும் யூரியாவும் கலந்து வைத்து மறுநாள் பொட்டாஷூம் சேர்த்து உரமிட்டிருக்கிறாள். பயிர் அழகாக வளர்ந்து தனியாகத் தெரிகிறது.

மனசுக்கு நிறைவாக இருக்கிறது. இத்துடன் இன்னொன்றும் சேர்ந்திருக்கிறது. கோயில் சாமி ஊருக்கு வந்திருக்கிறாராம்.

இந்த ஊர் கரும்பாயி அம்மன் கோயில் தானாக வளர்ந்த ஒரு கரும்பு சோலையில் இருந்ததாம். இப்போது கரும்பு இல்லை. ஏன், அவளுக்கு நினைவு தெரிந்தே அங்கு கரும்பு பயிரிட்டிருக்கவில்லை. சுற்றிலும் முள் மரங்கள் இருந்தன. சடாமுடியுடன் இந்தச் சாமி அங்கு வந்தார். அவர் அந்த இடத்தில் அரளியும், நந்தியாவட்டையும் பயிர் பண்ணி நந்தவனம் அமைத்தார். கிணறும் அப்போது தோண்டியதுதான். கிணற்று நீர் கரும்பாக இனிக்கும். அவர் அங்கேயே பல நாட்கள் யோகத்தில் அமர்ந்திருப்பார். என்றேனும் ஊருக்குள் வந்து பிச்சை கேட்பார். உள்ளே அழைத்தால் பெரும்பாலும் வரமாட்டார். நோய் நொடிக்குப் பச்சிலை மருந்து தருவார். பச்சிலைகள் அவருக்குத் தெரியும். ஏதேதோ செடிகள் அந்த நந்தவனத்தில் வளர்ந்திருந்தன. மக்கள் குறை கேட்பார். ஆறுதல் சொல்வார்.

அவர் இருக்கிறார் என்றால் கோயில் வளைவில் மக்கள் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருப்பார்கள். பாம்புக் கடி, தேள் கடி என்றால் வேறு ஊர்களில் இருந்தும் கூட இரவோ, பகலோ, சிகிச்சைக்கு ஆட்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். ஆனால், அவர் காசைக் கையால் தொட்டதில்லை. அதிகம் பேசவும் மாட்டார். அவர் ஊரில் இருக்கிறார் என்றால் ஊருக்கே பொலிவு இருப்பது போல் நம்பிக்கை இருந்தது. ரங்கனுக்கு இந்தக் கோயில் சாமியிடம் மிகுந்த ஈடுபாடு. அவர் அப்போது ஊரில் இருக்கக் கூடாதா என்று நினைப்பான். அந்த ஈடுபாட்டினால் அவன் கவிச்சி, இறைச்சி எதுவும் தொட மாட்டான். கள், சாராயம் எந்தப் பழக்கமும் கிடையாது. அவர் திடீரென்று ஊரை விட்டுப் போய் விடுவார். திடும்மென்று ஒரு நாள் வந்திருப்பார். அவர் யோகசாதனையினாலேயே அப்படி மறைந்து போகிறார். பிறகு வருகிறார் என்று ரங்கன் சொல்வான். அந்தச் சாமி, ஊரை விட்டுப் போய் வெகு நாட்களாகி விட்டன. சரவணன் ஐந்து வயசாகவும், சரோ எட்டு வயசாகவும் இருந்த போது அவர் வந்திருந்தார். ஏறக்குறைய பத்து வருசம் இருக்கும். அவ்வளவு இடைவெளி இதற்கு முன் இருந்ததில்லை. அவர் இமயமலையில் சமாதி ஆகிவிட்டார் என்று பேசிக் கொண்டார்கள். அம்மா ஏதேனும் ஒன்றென்றால் அவரிடம் சென்று திருநீறு வாங்கிக் கொள்வாள்.

சின்னம்மாள் வீட்டை விட்டுச் சென்ற பின்னர், ஒரு நாள் அம்மா சாமியிடம் திருநீறு வாங்கச்சென்றாள். அவர் அவளை உறுத்துப் பார்த்தார். திருநீறு கொடுக்கவில்லை.

“இந்தச் சாமி பாக்கற பார்வை சரியில்லை. ஏன் திருநீறு குடுக்கல?” என்று வீட்டுக்கு வந்து பொருமினாள்.

அப்பா மெதுவாகச் சொன்னார். “நீ அபாண்டமா ராசாத்திய அடிச்சி வெரட்டிட்டே… எந்த சாமியும் மன்னிக்காது.”

“ஆமா, மன்னிக்காது! நீரு இத்தச் சொல்றீரு! அவ ரோக்கியமானவளா இருந்தா, அவள ஏன் வெரட்டனும்? சோத்துல பங்கு கொடுக்கலாம். எங்குடியில் பங்கு கொடுக்க மாட்டேன்!”

“செங்கோலு! அநாவசியமாப் பேசாத நாக்குப்புழுக்கும்!” என்று அப்பன் கத்துவார்.

“பாவி இன்னோவோ செய்திட்டுப் போயிட்டா…” என்று கையை நெறிப்பாள். புருசனுக்கு இளைப்போ இருமலோ வந்தால், உடனே யாரேனும் மந்திர தந்திரக்காரனிடம் போக வேண்டும் என்று தான் அவள் நினைப்பாள். அம்சு மாமியார், இவளுக்கு எப்போதும் உடன்பாடானவள். இரண்டு பேருமாக, மந்திரக்காரர்களைத் தேடிப் போவதுமுண்டு. நூறு இரு நூறு செலவழித்துக் கழிப்பும் செய்திருக்கிறாள். அந்தப் பணத்துக்கு வீட்டில் சண்டை வரும்.

உறவுகள் விடுவதுமில்லை. இழைவதுமில்லை. இது இந்த வீட்டுக்குள், தெருவுக்குள் முண்டி முரண்டி சேர்ந்து இழையும். ஆனால் சின்னம்மாளைப் பொறுத்த வரையிலும் இந்த மண் அவளுக்குக் கசந்து விட்டது. உறவு அறுந்து போன மாதிரியே இருக்கிறது. அறுத்து விட்டார்கள். குற்றவாளி யார்?

“சாமி வந்திருக்கிறார். வீட்டுக்குக் கூட்டி வாரேன். வருவாரு…” என்று கூறிவிட்டு ரங்கன் சென்றிருக்கிறான்.

சாமி அப்படிக் கூப்பிட்டு வருபவர் இல்லை…

என்றாலும் தலைமுழுகி, சோறாக்கி, ஒரு காய் குழம்பு, பொரியல் செய்திருக்கிறாள். அரிசியும் வெல்லமும் பாலும் சேர்த்துப் பாயாசம் செய்திருக்கிறாள். பழம், வெற்றிலை, பூ, தேங்காய் எல்லாம் தயார்.

முற்றத்தில் இறங்கி வெயில் சுவருக்குப் போயாயிற்று.

இந்த சாமி ஒரு டாக்சியில் வந்து இறங்குகிறார்.

“வாங்க… வாங்க…” இவரா சாமி நம்ம கோயிலுக்கா வந்திருக்கிறார்.

கருகருவென்று தாடி இழைகிறது. மினுமினுக்கும் பட்டுச் சட்டையில் ருத்திராட்சங்கள், துளசி மணிமாலைகள்… கையில் பெரிய ரிஸ்ட் வாட்ச்… கருப்புத்தான். மூக்குக் கண்ணாடி போட்டிருக்கிறார்.

“தாயே.. ஜகதாம்பா” என்று சொல்லிக் கொண்டு குனிந்து வருகிறார்.

பலகையில் உட்காருகிறார். அவர் மட்டுமே தான் வந்திருக்கிறார். இவள் புருசன், மாட்டாசுபத்திரி கம்பவுண்டரின் மச்சான் ஒரு பையன், சிவலிங்கம், வேலு…

“சாமி”… என்று பணிவுடன் பலகையைப் போட்டு உபசரிக்கிறான்.

“பூசைக்கு எல்லாம் வச்சிருக்கிறல்ல… இன்னைக்கி காலலேர்ந்து மூணு எடத்துல பூசை… நா நம்ம வீட்டுக்கு வந்தாகணும்னு கூட்டியாந்தேன்…” என்று செவந்தியிடம் ஒரமாக வந்து கணவன் தெரிவிக்கிறான். அவளோ, அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே, “நா, நம்ம கோயில் சாமின்னு நினைச்சே… இவரு வேற யாரோ போலல்லே இருக்கு” என்று தன் ஒவ்வாமையைக் கோடி காட்டுகிறாள்.

“அவுரு ஜலசமாதியாயிட்டாராம். இமாலயக் குகையில் இவரு சிஷ்யரா இருந்தாராம். இவரும் ரொம்பப் பேசுறதில்ல. அவுரு சொல்லித்தா நம்ம கோயிலுக்கே வரணும்னு வந்திருக்காரு…” அவள் பேசவில்லை.

பலகையில் உட்கார்ந்து மஞ்சளைப் பிடித்து வைத்துப் பூஜை செய்கிறார். அப்பனை எதிரே உட்கார்த்தி வைக்கிறார். திருநூறு தடவுகிறார்.

“இவருக்கு… மனசில ஒரு கறுப்பு, கவலை உறுத்துது. இது உடம்பு சீக்கில்ல. என்ன மருந்து சாப்பிட்டாலும் போகாது. அது சிரமப்படுத்திட்டே இருக்கும்…”

கொல்லென்று அமைதி படிகிறது.

அப்பாவின் இழுப்பு ஒலி மட்டுமே துருப்பிடித்த கதவுக் கீல் மாதிரி, இருட்டில் ஒலிக்கும் சில்வண்டு போல் வலிமையாகக் கேட்கிறது.

“சாமி, அதுக்கு என்ன பரிகாரம் செய்யலாம்னு சொல்லுங்க. எதுன்னாலும் செய்யலாம்” என்று அம்மா முன்வந்து கும்பிடுகிறாள்.

அப்பனுக்குப் பொறுக்கவில்லை.

“சாமி, என் மச்சினிச்சிதா. இவப்ப, என் மாமனுக்குப் புள்ளக் கெடயாது. ரெண்டு பொம்புளப் புள்ள. அதும் சின்னதிலியே பெத்தவ போயி, ரெண்டையும் மறுகலியாணம் கட்டாம வளர்த்தாரு. அவ தோசம், கடன் ஆறு மாசத்துல புருசன் போயிட்டா. பெறகு அவ இங்கிருக்கக் கூடாதுன்னு ஒரு கலமசம் வந்துட்டது. உடம் பெறந்தவளே விசமாயி வெரட்டிட்டா. இருவது வருசமாயிடிச்சி… இப்ப கொஞ்ச காலமா எதும் சரியில்ல. பெரிய பைய… அவனுக்கு முத மூணு புள்ள தங்கல. அவனும் எங்கள வுட்டுப்போயிட்டா. நிலம் நீரு சுகமில்ல. ஒண்ணும் விருத்திக்கு வர இல்ல. போன வருசம் திடீர்னு ஒழவு மாடு சீக்கு வந்து செத்துப் போச்சி… இவளுக்கும் எப்பவும் சீக்குதா…”

சாமி அவரையே உற்றுப் பார்க்கிறார். பிறகு தாடியை உருவுகிறார்.

“உங்க மனசில் குற்றம் இருக்குதோ இல்லையோ, குற்றம் பண்ண உணர்வு இருக்குது. அதுதான் உங்களை சிரமப்படுத்துது…” என்று சொல்லி விட்டு எல்லோரையும் பார்க்கிறார்.

“அந்தப் பொம்புள ஏதேனும் வச்சிருக்கிறாளா, சாமி?” என்று அம்மா கேட்கிறாள். “ம்… ம்…” என்று தாடியை உருவிக் கொள்ளும் சாமி தலை நிமிராமல் யோசிக்கிறார்.

“அத்த எடுக்க முடியாதா சாமி ராத்திரி முழுக்க இப்படி சாயங்காலமானா ரொம்ப சாஸ்தியாவுது. ஆசுபத்திரி டாக்டர்ட்ட மாத்திரை வாங்கிக் குடுக்கிறோம். சம்சாரி வூடு… இத்த எப்படீன்னாலும் எடுத்திடுங்க சாமி…”

“இதுக்கு ஒரு தாயத்து மந்திரிச்சித் தாரேன்… ஒரு நூத்தம்பது ஆகும். அதைக் கையிலோ கழுத்திலேயோ கோத்துக் கட்டிக்குங்க. வீரியமில்லாம போயிடும்.”

சாமி வந்திருக்கிறார் என்ற செய்தியில், அந்த வீட்டில் தெருவே கூடி விட்டது.

நீலவேனியின் புருசன், “சாமி, புதுசா தொழில் செய்யிறது பத்திச் சொல்லணும்…” என்று ஐம்பது ரூபாய் நோட்டை வைத்துவிட்டுக் கேட்கிறான்.

“தாராளமாகச் செய்யலாம். முயற்சி செய், முன்னுக்கு வருவாய்…”

“சாமி முன்னே துணி – எக்ஸ்போர்ட் பிஸினஸ் பண்ணி நஷ்டமாயிட்டது. இப்பவும் அதுபோல் செய்ய முதல் தேறல…”

சாமி சிரிக்கிறார். “முயற்சி செய்! முதல் வரும்…”

கன்னியப்பனின் ஆயாவும் கூட வருகிறார்.

“சாமி கன்னியப்ப கலியாணம் கட்டுன்னா வாணாங்கிறான். ஒரே பேரப் பய. அவனுக்கு ஒண்ணு கட்டி வச்சி, அது வயித்தில ஒரு குஞ்சப் பாத்துட்டுக் கண்ண மூடணும்…”

“ஆகும்… ஆகும்… அவனுக்கு நல்ல இடத்தில் பெண் வரும்…”

பாட்டி பதினைந்து ரூபாய் காணிக்கை வைக்கிறாள். காலனியில் இருந்து சாந்தியும், புருசனும் கூட எட்டிப் பார்க்கிறார்கள். ஆனால் எதுவும் கேட்கவில்லை.

சாமி சாப்பிடவில்லை.

“என்னைச் சுற்றி ஏழைப் பிள்ளைகள் இருக்கிறார்கள்… நீங்கள் ஆக்கி வைத்தது வீணாக வேண்டாம் தாயே… இந்தப் பாத்திரத்தில் போட்டுக் கொடுங்கள்…”

கையோடு கொண்டு வந்த தூக்குகளில் சோறு, குழம்பு, எல்லாம் போட்டுக் கொண்டு போகிறார்.

ரங்கனும், சாமியுடன் வண்டியில் ஏறிக் கொண்டு போகிறான்.

சரோவும், சரவணனும் பள்ளிக் கூடத்தில் இருந்து வந்து விட்டார்கள்.

“ஹை! பூசையாம்மா வடை பாயசமா போடும்மா… பசிக்கிது.”

“வா சாந்தி, உங்கூட்டுக்காரரா? வாங்க உக்காருங்க! சுந்தரி, இவங்களுக்குச் சோறு வையி…” என்று அனுப்புகிறாள். சாந்தியும், புருசனும் வாசல் திண்ணையில் உட்காருகிறார்கள்.

“நீங்க இந்தச்சாமியெல்லாம் நம்புவீங்களாக்கா?”

“அதென்னமோ. எங்கம்மா அப்பாக்கெல்லாம் இதுல நம்பிக்கை இருக்கு. எங்க வீட்டுக்காரர் கோயிலுக்குப் போவாங்க. இத, காஞ்சிபுரம் புரட்டாசி சனிக்கிழமைன்னாப் போவாங்க. ஆடிக் கிருத்திகை திருத்தணி போயிடுவாங்க. மச்சமாமிசம் ஏதும் ஊட்ல சமைக்கிறதில்ல. எங்க ஓப்படியா சுந்தரி இல்ல, அவ செய்வா. கவிச்சி கறி எதுனாலும் கொண்டிட்டு வருவா. அதும் எம் பொண்ணு சரோசா தொடாது…”

“அதுக்குச் சொல்லல. நாம சாமி கும்பிடணும். ஆனா, இப்படி தாடி வச்சிட்டுக் காருல வந்து அம்பது நூறுன்னு சனங்க மூடநம்பிக்கைய வளர்க்கிறவங்ககிட்ட சாக்கிரதையா இருக்கணும்க்கா. ஒருத்தர், எங்க நாத்தனார் வூட்டுப் பக்கம் இப்படித்தான் பூசை போடுறேன் தங்க நகை எதுனாலும் வையுங்கன்னு சொன்னாரு. கண்ணு முன்ன பூசை போட்டாங்க. அப்படியே எந்திரிச்சி போயிட்டாரு. ஆனா அடுத்த நா பூசை போட்ட எடத்துல வெறும் சின்ன சின்னக் கல்லுதா இருந்திச்சி. வளையலும் இல்ல, மோதரமும் இல்ல?”

“ஐயையோ!”

“அதா. வூட்டுக்கு வந்து நம்ம உள்மாந்தரம் எல்லாம் தெரிஞ்சிக்கிடுவாங்க ரொம்ப சாக்கிரதையா இருக்கணும்…”

செவந்திக்கு அநியாயமாகப் புருசன் இன்று ஐநூறு ரூபாய் போல் பணம் செலவழித்திருப்பதை நினைத்து எரிச்சல் வருகிறது. அடக்கிக் கொள்கிறாள்.

“இப்ப எதுக்கு நா வந்தேன் சொல்லட்டுமாக்கா? எங்க நாத்தானா நிலம் இருக்குன்னு சொன்னேன்ல்ல? அதுல பயிர் வைக்கிறன். அரைகாணி முறையா நாத்தங்கால் வுட்டு, அதும் திரம் மருந்து போட்டு விதை செய் நேர்த்தி பண்ணி, எல்லாம் போட்டு பயிர் வைக்கலான்னிருக்கே. வர புதங்கிழமை யன்னிக்கு காலம வந்தீங்கன்னா, வூட்ல வெத செய் நேர்த்தி பண்ணுறப்ப சேந்து செய்யலான்னு… அப்படியே இவங்களும் உங்கூட்டுக்காரரப் பாத்திட்டு போகாலான்னு வந்தாம்.”

“வாரேன். நமுக்குள்ள ஒருத்தருக்கொருத்தர் உதவிக்கணுந்தான? இருங்க முதமுதல்ல வந்திருக்கிறீங்க. உள்ள வாங்க. கொஞ்சம் பாயசம் சாப்பிடலாம்.”

உள்ளே வருகிறார்கள். பூசை இடத்தில் விளக்கு எரிகிறது. சாந்தி பார்க்க டீச்சர் போல் இருக்கிறாள். புருசன்சராய் சட்டை போட்டு கடிகாரம் கட்டிக் கொண்டிருக்கிறான்.

யாரோ ஆபிசர் என்றுதான் அம்மா நினைத்திருக்க வேண்டும்.

அந்தக்கயிற்றுக் கட்டிலைக்காட்டி “உக்காருங்க” என்று உபசரிக்கிறாள்.

சிறு தம்ளர்களில் அவள் கொடுத்த பாயாசத்தைச் சாப்பிட்டு விட்டு அவர்கள் விடை பெறுகிறார்கள்.

– தொடரும்…

– கோடுகளும் கோலங்களும் (சமூக நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1998, தாகம், சென்னை.

நன்றி: https://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

ஆசிரியை திருமதி.ராஜம் கிருஷ்ணன் 1952-ல் நடந்த அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது 'ஊசியும் உணர்வும்' என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத் தொகுப் பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.  1953, கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசைப் பெற்றது இவரது 'பெண்குரல்' நாவல். 1958-ல் ஆனந்தவிகடன் நடத்திய நாவல் போட்டியில் இவரது 'மலர்கள்' நாவல் முதல் பரிசைப் பெற்றது. …மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *