கோடுகளும் கோலங்களும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2024
பார்வையிட்டோர்: 1,649 
 
 

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம்-4

அவர்களை வாயில் வரை வழியனுப்பிவிட்டு, செவந்தி உள்ளே வருகிறாள். சுந்தரி சும்மாயிருக்கக் கூடாதா?

“ஏக்கா அவருதாம் வூட்டுக்காரரா? போட்டோக் கடையில் பாத்திருக்கிற. எங்க பெரிம்மா பொண்ணு மல்லிகா போன வருசம் பூ முடிச்சிட்டு இவரு கடயிலதா போட்டோ எடுத்தாங்க… பாத்தா காலனி ஆளுங்கன்னு சொல்ல முடியுமா? எல்லாம் ரொம்ப மதிப்பாயிட்டாக! அவுங்களுக்கு சர்க்கார் வூடு பட்டா குடுத்திருக்கு. குழாபோட்டு குடுத்திருக்காங்க…”

இவள் எதோ மனசில் எந்த வேற்றுமையும் இல்லாமல்தான் இதைச் சொல்கிறாள் என்பதைச் செவந்தி அறிவாள். ஆனால் அம்மா, இதை விசுக்கென்று பற்றிக் கொள்கிறாள்.

“ஏண்டி வந்தவங்க காலனி ஆளுங்களா?”

“ஆமா அதனால என்ன? அவங்களும் நம்மப்போலதா. இந்த மாதிரி எல்லாம் பேசுறது தப்பு” என்று செவந்தி கோடு கிழிக்கிறாள்.

“அவதா எவ்வளவு ஒத்தாசை பண்ணுனா! நல்லாபடிச்சவ. ஆனா கொஞ்சம் கூடக் கருவம் இல்ல. ஒராள் வேலை பண்ணுனா அன்னிக்கு. இப்ப நாம் போயி உதவாட்டி அது மனிச சன்மத்துக்கு அழகில்ல!”

“ஏ வாய அடிச்சிருவீங்க இந்துாட்டுல” மூசுமூசென்று அழத்தொடங்குகிறாள்.

ரங்கனும் வரும் போது சந்தோசமாக இல்லை.

“சோறு வையி. எனக்கு ஒரே பசி. சாமி இங்க உக்காந்து சாப்புடும் எல்லாரும் சாப்பிடுவோம்னு பாத்தா, தூக்கெடுத்து வசூல் பண்ணிட்டுப் போவுது! சீ! நம்ம கோயில் சாமி, நிசமாலும் சாமி!” என்று அலுத்துக் கொள்கிறான்.

சுந்தரிதான் அவனுக்கு இலை போடுகிறாள்.

“நீங்கல்லாம் சாப்பிட்டிங்களா?”

“ஆமா, எனக்குப் பசி பிச்சிட்டுப் போச்சி! காலமேந்து நிக்க நேரமில்லாம எல்லாம் செஞ்சி, ஆற அமர உக்காந்து சோறு தின்னக்கூடக் குடுத்து வய்க்கல. இந்தச் சாமி எங்கேந்து வந்திருச்சி இப்ப?”

“அதென்னவோ, உங்கம்மாளக் கேளு! பூங்காவனப் பெரிம்மா சொன்னாங்களா, வேலுவும் தர்ம ராசுவும் குதிச்சாங்க. வரதராசன் வூட்ல பூசை வச்சாங்க. அவரு வந்திட்டுப் போனா, ஒடனே நல்லதெல்லாம் நடக்குதாம். கலியாணம் ஆகாம நின்னவங்களுக்கு மூணே நாளில் கலியாணம், வேல கிடைக்காதவங்களுக்கு வேல, கடன் இருந்தா எப்பிடியோ அடயுது. என்னெல்லாம் சொன்னாங்க. உங்கம்மா இப்பிடிப் போயி இந்தச் சேதியெல்லாம் கொண்டிட்டு வந்து பத்து நாளா குடஞ்சி தள்ளிட்டா. ஆக, நம்ம கைவுட்டு அஞ்சுக்குக் குளோசு. தாயத்து வச்சிருக்கிறே, விளக்குப் பக்கத்தில. கட்டிக்கிறவங்க கட்டிக்குங்க!”

“நம்பிக்கை இல்லேன்னா, எதுவும் வராது. நம்பணும். நாலு பேர் நடந்ததத்தான சொல்வாங்க. இவர முன்னபின்ன தெரியுமா? பொம்பிளைதோசம்னு பார்த்ததும் சொல்லிடல? நீங்க நம்ப மாட்டீங்க. எந்தச்சேரி ஆளுங்களும் உள்ள வந்து சொல்லுறத நம்புவீங்க? வக்கீல் வூட்ல பூசை பண்ணாராம். ஒரு மாசம் அந்தப் பூ வாடவே இல்லையாம்!”

“இப்பதான சாமி இங்க வந்திருக்கு, இமயமலையவுட்டு? எப்படிப் பாட்டி ஒரு மாசம் பூ வாடல? இமயத்திலேந்து கொண்டுட்டு வந்த பூவா?” என்று சந்தடி சாக்கில் சரோ கிண்டி விட்டுப் போகிறாள்.

அப்பாவுக்கு இருமல் தொடங்குகிறது.

சங்கிலித் தொடராக, இழுத்து இழுத்துக் கண்கள் செருகி மீண்டு திணற இருமல்.

செவந்தி பக்கத்தில் உட்கார்ந்து நீவி விடுகிறாள்.

“என்னப்பா… அப்பா?.. .ந்தாம்மா வெந்நீ போட்டு வச்சிருந்தே. கொஞ்சம் கொண்டா…”

வெந்நீரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கச் செய்கிறாள். பக்கத்தில் மின் விசிறியை இழுத்து வைக்கிறாள்.

“வேத்துக் கொட்டுது…”

தன் சோலைத் தலைப்பால் மேனியைத் துடைக்கிறாள். சிறிது ஆசுவாசமடைகிறார்.

“அந்தச் சக்களத்தி நினைச்சிட்டிருப்பா” என்று அம்மா முணுமுணுத்துக் கையை நெறிக்கிறாள்.

“யம்மா, நீ எந்திரிச்சிப் போ, இங்கேந்து! போயி ரெண்டு வேலயப் பாரு! மாடு கத்துது. அதுக்கு ரெண்டு வைக்கோல் அள்ளிப் போட நாதியில்ல. நா இன்னக்கி இந்த லோலுப்பட்டதில கழனிப் பக்கம் போகல…?”

“யக்கோ…” என்று கன்னியப்பன் குரல் கொடுக்கிறான்.

“புல்லறுத்திட்டு வந்தே… சாமி வந்தாராமில்ல? எனக்குப் பாயசம் இல்லையாக்கா?”

“உனக்கு இல்லாமயா? வா, வா! சுந்தரி! பாயசம் இருக்கா?”

“இருக்கு…”

“குடு…. கன்னீப்பன மறந்தே போயிட்டமே? அவ இல்லேன்னா இந்த வூட்டுல சோத்துல கை வைக்கத் தெம்பிருக்காது!”

அம்மா உறுத்துப் பார்த்துவிட்டு வாசலுக்கு எழுந்து போகிறாள்.

“இந்தாளப்பத்தி என்னெல்லாம் சொன்னாங்க தெரியுமா? வெள்ளக்காரங்கல்லாம் வந்து அருள் வாங்கிட்டுப் போறாங்களாம்? ஆஸ்திரேலியாவிலேந்து ரெண்டு பேர் வந்தாங்களாம். ஊருல அந்தப் பொம்புள புள்ளியங்கள வுட்டுப்போட்டு வந்திருக்காம். புள்ளக்கு உடம்புசரில்லன்னு போன் வந்திச்சாம். இங்கே வேல முடியலியாம். சாமிகிட்ட நின்னு, சாமின்னு வேண்டிட்டு நின்னிச்சாம். அடுத்த நிமிசம் அவுங்க இங்க இல்லையாம்! நின்னிட்டிருக்கிற புருசனுக்கு, அவ அவவூட்டல ஆஸ்திரேலியாவுல புள்ள கிட்ட உட்காந்திருப்பது தெரிஞ்சிச்சாம்…”

“எல்லாம் ரீல். யாரோ இமாலயத்திலேந்து சுத்தி வுடுறாங்க. இங்க கரும்பாக்கத்துக் கீழத் தெருவுல, செங்கோலுப் பாட்டி காதுல வந்து வுழுது!” என்று செவந்திக்குக் கேட்கத் தோன்றுகிறது.

அரும்பு மீசையைச் செல்லமாகத் தடவிக் கொண்டு முற்றத்தில் நிற்கும் கன்னியப்பனையும் பார்க்கிறாள். நல்ல உழைப்பினால் உரமேறிய உடல். வெள்ளை உள்ளம். இவனுக்குச்சரோவைக் கட்டினால் ஒத்து இருப்பானே?

“கன்னிப்பா! உனுக்குப் பெரிய எடத்துலந்து பொண்ணு வருதாம். உன் ஆயா, எப்பய்யா கலியாணம் கட்டிப்பா, அவன் கட்டி, ஒரு பேரப்புள்ளயப் பாத்திட்டுச் சாவணும்னு சாமி கிட்டப் புலம்பிச்சி. கவலப்படாதீங்க. கலியாணம் வருது, பெரிய எடத்துப் பொண்ணுன்னாரு…”

“பெரிய எடம்னா மாடி வூடா. உக்காந்தா பெரி…. எடத்த அடச்சிக்கிற எடத்துப் பொண்ணா?” சரோவின் கிண்டலுக்கும் அவன் வாயெல்லாம் பல்லாகச் சிரிக்கிறான்.

“அதென்னமோ தெரியாது, கன்னிப்பா, உன் கல்யாணத்துல எனக்கு பெரீ… எல போட்டுப் பெரீ… சோறு போடணும்” என்று சரோ மேலும் நீட்டவே, கன்னியப்பன் மகிழ்ந்து போகிறான்.

“உனுக்கு இல்லாமயா சரோ? உனுக்குத்தான்முக்கியமாப் போடுவ…”

உள்ளே வரும் பாட்டி பட்டென்று வெட்டுகிறாள். “போதும், ஒரு வரமுற இல்லாத பேச்சி. பாயசம் குடிச்சாச்சில்ல? எடத்தக் காலி பண்ணிட்டுப் போ!”

“அவம் மேல ஏணிப்பக் காயுற? சிறுசுங்க கேலியும் கிண்டலுமா பேசிட்டுப் போவுதுங்க! நீ முதல்ல எந்திரிச்சிப் போ” என்று செவந்தி விரட்டுகிறாள்.

இந்த அம்மா, அப்பனை விட்டு அங்கே இங்கே நகருவதில்லை. அவர் வெளியே போனால், இவளும் சேலைத் தலைப்பை உதறிக் கொண்டு அங்கே இங்கே வம்பு பேச, டி.வி பார்க்க என்று கிளம்பி விடுவாள். வீட்டில் வணங்கி ஒரு வேலை பொறுப்புடன் செய்தாள் என்பதில்லை. அந்தக் காலத்தில், செவந்தி சிறியவளாக இருக்கையில், ஆண் பாடு பெண் பாடு என்று உழைத்தவள் சின்னம்மாதான். அம்மாவுக்கும் அவளுக்கும் ஆறேழு வயசோ மேலேயோ வித்தியாசமிருக்கும். பாட்டி சாகும் போது, சின்னாத்தாளுக்கு ஒரு வயசோ ஒன்றரை வயசோதானாம். அம்மாவுக்கும், சின்னம்மாவுக்கும் இடையில் மூன்றோ, நான்கோ குறைப் பிரசவங்களும் ஒரு முழுப் பிள்ளையும் வந்து நலிந்து போன பிறகு இவள் பிறந்தாளாம்.

பாட்டன் அந்தக் காலத்தில் வேறு கல்யாணம் கட்டாமல் இரண்டையும் தாயுமாக நின்று வளர்த்தாராம். சின்னம்மாவைத் தோளில் சுமந்து கொண்டு கழனிக்கரைக்குப் போவாராம்.

பாட்டனாரைச் செவந்திக்குத் தெரியும். அவளைத் தோள் மீது சுமந்து கொண்டு காஞ்சிபுரம் தேர்திருவிழாவுக்குக் கூட்டிச் சென்றிருக்கிறார். பொரி கடலை மிட்டாய் வாங்கித் தந்திருக்கிறார். யானை காட்டி, அதன் துதிக்கையை தலையில் வைத்து ஆசி வழங்கப் பண்ணுவார். காசு கொடுக்கச் சொல்லுவார். பெருமாள் கோயிலில் பல்லி தொட்டுக் கும்பிடத் தூக்கிப் பிடிப்பார்.

அவளுக்கு நினைவு தெரிந்த வயசில்தான் சின்னம்மா ராசாத்திக்குக் கல்யாணம் நடந்தது. கோயிலில்தான் நடந்தது. பெரிய பெரிய அதிரசம் பணியாரம் சுட்டு நடுக்கூடத்தில் வைத்திருந்தார்கள். சின்னம்மா அம்மாவைப் போல் உயரமில்லை. வெளுப்புமில்லை. ஆனால் குருவி போல் சுறுசுறுப்பாக உட்கார்ந்து செவந்தி பார்த்ததாக நினைவில்லை. ஆடு வளர்த்தாள். கோழி வளர்த்தாள். பாட்டன் சந்தையில் கொண்டு கோழி விற்றோ, ஆடு விற்றோ அவளுக்குக் காலில் முத்துக் கொலுசு வாங்கி வந்தது நினைவிருக்கிறது.

செவந்தியின் மீது சின்னம்மாவுக்கு நிறைய ஆசை. அவள் பள்ளிக்கூடம் போக இரட்டைப்பின்னல் போட்டுக் கட்டி விடுவாள். முருகன் அம்மா பிள்ளை. அவனுக்குச் சின்னம்மாவிடம் ஒட்டுதல் இல்லை. இவள் ஸி.எஸ்.ஐ. பள்ளியில் படிக்கச் செல்கையில் சின்னம்மா அவளை அதுவரையிலும் கொண்டுவிட்டு கொல்லைமேட்டுப் பூமியைப் பார்க்கப் போவாள். ஒரு நாள் மழை வந்து விட்டது. முருகனிடம் குடையைக் கொடுத்துவிட்டு இவளைத் துக்கிக் கொண்டு வந்தாள். செல்லியம்மன் கோயில் பக்கம் வருமுன் மழை கொட்டு கொட்டென்று தீர்த்து விட்டது. கோயிலில் ஏறிக் காத்திருந்தார்கள். அடுத்த நாள் முருகனுக்குக் காய்ச்சல் வந்து விட்டது. அம்மா சின்னம்மாவைத் திட்டித் தீர்த்தாள்.

அப்போது சின்னம்மாவுக்குப் புருசன் இருந்தான். கல்யாணமான ஆறுமாசத்துக்குள் வண்டியில் மூட்டை ஏற்றிக் கொண்டு அவன் இரவில் சென்ற போது, எதிரே வந்த லாரி கண்டு மிரண்டு மாடுகள் சாய, வண்டி குடை கவிழ்ந்து அவனுக்குக் கால் உடைந்து விட்டது. அது சரியாகவே இல்லை. அவனுக்குச் சொந்த பந்தம் என்று மனிதர்கள் இல்லை. நிலம் துண்டுபடக் கூடாது. இரண்டு பெண்களும் மருமகன்களும் ஒன்றாக உழைத்துச் சாப்பிடவேண்டும் என்று பாட்டன் நினைத்திருந்தார். ஆனால் அவனுக்கு விபத்து நேர்ந்து, ஊனமாய், சோற்றுக்குப் பாரமாக உட்கார்ந்தான் என்பதால் சின்னம்மா அம்மாவுக்குத் தரம்தாழ்ந்து போனாள்.

அத்தைமகனான தன் புருசன் உரிமைக்காரன்; உழைக்கிறான். அதுமட்டுமில்லை, தான் முதலில் ஓர் ஆண் பிள்ளையைப் பெற்றிருக்கிறோம் என்ற கருவம் அவளுக்கு உண்டு. இப்போதுதான் செவந்திக்கு இதெல்லாம் நன்றாகப் புரிகிறது. அம்மா வெளி வேலைக்குப் போனதே இல்லை. வீட்டு வேலையும் செய்ய மாட்டாள். அதுவும் சின்னம்மா புருஷனை இழந்த பிறகு, அவள்தான் முழு நேர வேலைகளையும் செய்தாள். அம்மா, இழை சிலும்பாமல், சேலை கசங்காமல், வெற்றிலை வாய் மாறாமல், குந்தி இருந்து வம்பளப்பாள்.

அந்தப் புருசன் மூன்று நாள் காய்ச்சல் வந்து இறந்து போனார். அப்போது சின்னம்மா முழுகாமல் இருந்தாள். சின்னம்மாவைச் சுற்றி வந்து எல்லோரும் மாரடித்து அழுதபோது, விவரம் புரியாமல் அவளும் கோவென்று அழுதாள். பெரியசாமி மாமன் அவளையும் முருகனையும் ஓட்டலுக்குக் கூட்டிச் சென்று இட்டிலியும் காபியும் வாங்கிக் கொடுத்து அவர் வீட்டிலேயே வைத்துக் கொண்டதும் நினைவு இருக்கிறது.

பிறகு, சின்னம்மாவின் இந்த வடிவம்…

இளைத்துத்துரும்பாக… நெற்றிப் பொட்டும் மூக்குத்தித் திருகாணிகளும் இல்லாமல், கன்னம் ஒட்டி.. சாயம் மங்கிய ஒரு சேலையைப் பின் கொசுவம் வைத்துக் கட்டிக் கொண்டு, முந்தியை இடுப்பைச் சுற்றி வரிந்து செருகி இருப்பாள்.

காதில் முன்பிருந்த தோடுகள் இல்லை. தேய்ந்த சிவப்புக்கல் திருகு ஒன்று ஓட்டை தெரியாமல் மறைத்தது. வளையமோ மாலையோ எதுவும் கிடையாது. எப்போதுமே வேலை செய்தவள் அவள்தானே!

வீடு பெருக்கி, மாவாட்டி… மாட்டுக் கொட்டில் சுத்தம் செய்து, தண்ணிர் இறைத்து, சாணி தட்டி, சோறாக்கி… ஓயாமல் வேலை. கழனிக்குப் போவாள்.

கல்யாணத்துக்கு முன் அவள் வளர்த்த ஆடுகளை விற்றுத் தான் பாட்டனார் அந்தக் கொல்லை மேட்டுப் பூமியை வாங்கினாராம். அதை ஓட்டிப் போக ஆள் வந்த போது, “அப்பா எனக்கும் அக்காவைப் போல் நாலு சவரனில் செயின் வாங்க வேணும்” என்றாளாம்.

ஆனால் செயின் வாங்காமல், பூமி வாங்கி, தன் மூத்த மருமகன் செவந்தியின் அப்பா பேரில் எழுதி வைத்தார். பிறகு தான் சின்னம்மாவுக்குக் கல்யாணம் ஆயிற்று; வாழ்வும் போயிற்று.

பாட்டன் இறந்த போது, வயிறும் பிள்ளையுமாக இருந்த சின்னம்மா இதெல்லாம் சொல்லி அழுதாள்.

அவர் போன பிறகு, சின்னம்மாவுக்கு நாதியே இல்லை என்றாயிற்று.

அத்தியாயம்-5

“அக்கா, வேலையெல்லாம் ஆயிட்டது… சோறு ஒரு குண்டானில் வடிச்சது அப்படியே இருக்கு. அடுப்படி எல்லாம் சுத்தமாக்கிட்டே. நா வரட்டா! வூட்ல அரிசி உளுந்து கெடக்கு. ஆட்ட, பிள்ளங்க வூட்டத் திறந்து போட்டுட்டுத் தெருவில ஆடிட்டிருக்கும்!” என்று சுந்தரி இவளை நினைவுலகுக்கு இழுக்கிறாள்.

“சுந்தரி…! போம்மா. காலமேந்து நீயே வேல செய்யிற! நீ சாப்புட்டியான்னு கூடக் கேக்கல… வித்தியாசமா நினைச்சிக்காத சுந்தரி…!” என்று வாஞ்சையுடன் அவள் கையைப் பற்றுகிறாள். நெஞ்சில் ஒரு குற்ற உணர்வு.

ஏறக்குறைய இவளும் சின்னம்மாளைப் போல் புருசனைப் பறி கொடுத்துள்ளவள் தானே!

சுந்தரி நகை நட்டைக் கழற்றவில்லை.

பூப்போட்ட நைலக்ஸ் சீலையை, உள் பாவாடை கட்டிப் பாங்காக உடுத்தி இருக்கிறாள். முடியை இழையப் பின்னித் தூக்கிக் கட்டிக் கொண்டிருக்கிறாள். வளைவாகப் பூ வைத்தால் நன்றாகத்தான் இருக்கும் . ஆனால்? பூ வைக்க முடியாது.

பொட்டும் குங்குமம் வைப்பதில்லை. இப்போதுதான் ஒட்டுப் பொட்டு வந்திருக்கிறதே? ஒரு கறுப்புப் பொட்டு, கடுகளவு ஒட்டியிருக்கிறாள்.

சுந்தரியே நல்ல நிறம் இல்லை. பளிச்சென்று அது தெரியவே இல்லை.

புருசன் வரும் போது பொட்டைக் கொண்டு வந்தானா? அதை ஏன் அழித்துத் தொலைக்கிறார்கள்? அவன் காலம் முடிந்து போனான். அது அவள் குற்றமா?

சுந்தரி ரங்கனுடன் சாதாரணமாகப் பேசுவாள். பழகுவாள். சோறு வைப்பாள். அவனும் தம்பி மனைவியிடம் ஆதரவாகவே இருக்கிறான். கடையில் இருந்து வரும் போது, எது வாங்கி வந்தாலும் முதலில் அந்த வீட்டுக்குக் கொடுத்து விட்டே வருவான். சரோ, சரவணனுக்கும் வித்தியாசம் தெரியாது.

செவந்திக்கு இதெல்லாம் சந்தோசமே. ஆனால் சின்னம்மா விசயத்தில் இப்படி நடந்ததா?

இவள் அம்மா தங்கையை பரம விரோதியாக அல்லவோ பார்த்தாள். இங்கும் அரிசி உளுந்து ஊறுகிறது. செவந்தி கிணற்றில் நீரிறைத்து அரிசியைக் கழுவி உரலில் போடுகிறாள்.

சரசரவென்று மழை விழுகிறது.

கொட கொடவென்று செவந்தி உளுந்து ஆட்டுகிறாள்.

“அம்மா! அம்மா! முத்தத்துக் கொடித் துணிய எடுத்து வையி! எரு மூட்டை நனையும். நான் பார்க்கலன்னா ஆரும் பார்க்கமாட்டாங்க…! அம்மா…! ஏ சரோ?”

இந்தத் தாழ்வரையே அங்கங்கு ஒழுகுகிறது. ஓரத்தில் விறகு அடுக்கி இருக்கிறாள். அதுவே நனையும்.

“சரோ! இந்த வெறகக் கொண்டு சமையல் ரூமுல வையி…”

சரோ வரவில்லை. அவள் வீட்டிலேயே இல்லை. சுந்தரி வீட்டுக்குப் படிக்கப் போயிருப்பாள். சரவணன் படிக்க மாட்டான். தெருவிலோ, எங்கோ நாலு பிள்ளைகளுடன் எதானும் விளையாடிக் கொண்டிருப்பான். அம்மாதான் முணமுணத்துக் கொண்டு வருகிறாள்.

பத்தி நடவுக்கு எடுத்துப் போன டயர் கிடக்கிறது. அதை எடுத்து வீசுகிறாள். எரு முட்டை எல்லாம் நனைந்து விட்டது.

மாட்டுக் கொட்டிலும் கூடச் செப்பனிடவேண்டும். பசு சினையாக இருக்கிறது. மழை வந்தது பயிருக்கு நல்லது…

மாவை வழித்துக் கரைத்துக் கொண்டு வந்து உள்ளே வைக்கிறாள். பட்டென்று மின் விளக்கு அணைந்து போகிறது.

“என்ன எளவு, ரெண்டு தூத்தல் போட்டால் வெளக்கு அணையிது! சீமண்ண விளக்கைக் கொளுத்தி வையி… செவந்தி…”

ரங்கன் குறட்டில் உட்கார்ந்து ஏதோ வரவு செலவுக் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

செவந்தி இருட்டில் முதலில் சாமி விளக்கை ஏற்றி வைக்கிறாள். பிறகு முட்டைச் சிம்னியைத் தேடுகிறாள். அதில் எண்ணெய் கொஞ்சமாக இருக்கிறது. எண்ணெயே போன மாசம் போடவில்லை. இருக்கிற எண்ணெயை, டிஃபன் போடும் வேணி தனக்கு வேண்டும் என்று வாங்கிக் கொண்டு போனாள். கொடுக்க மாட்டேன் என்று சொல்ல முடியவில்லை. எல்லோருக்கும் எல்லாரும் வேண்டித்தானே இருக்கிறது?

“செவந்தி..! ஒரு நூறு ரூபா இருந்தா குடேன்!”

செவந்தி மஞ்சள் ஒளியில் அவன் முகத்தை உற்றுப் பார்க்கிறாள்.

“என்ன வெள்ளாடுறீங்களா? இந்தச்சாமிக்கும் காருக்கும் நானா செலவழிக்கச் சொன்னேன்?”

“அட ஒடனே கத்தாதே. நா நாளக்கி சாயங்காலம் குடுத்திடறேன்.”

“எங்கிட்ட நூறு காசு கூட இல்ல. களயெடுக்கணும். அடுத்த வாட்டி உரம் போடணும். ஊரியாவும் பொட்டாஷும் வாங்கிட்டு வரணும். வண்டிக் கூலி கேப்பா. நானே முழிச்சிகிட்டிருக்கிறேன். வீட்ல மல்லி முளவா சாமானில்ல. மாடு வேற செனயா நிக்கிது. ஒண்ணும் கட்டி வரலப்பா!”

“உங்கிட்டக் கேட்டா இப்படித்தா. ஈசக் கூட்டம் அப்புநாப்ல பொல பொலத்து மனுசன உண்டு இல்லைன்னு பண்ணிடுவ.”

“செவுந்தி, சுந்தரி, அதுகிட்டக் கேட்டு வாங்கின. மனசுக்கு எப்பிடியோ இருக்கு…”

“மாமியாள திருப்தி பண்ண, அவகிட்டக் கேட்டு வாங்கினீங்களா? உங்களுக்கு வெக்கமால்ல?”

“இன்னிக்கிச் செலவுக்கு வாங்கல. செவலிங்கத்த ஒரு சாமான் வாங்கி வர டவுனுக்கு அனுப்பிச்சே, நூறு ரூபா குறைஞ்சிச்சி. ஒரு அவுசரம்தானே. இருக்கு ஆத்தான்னு குடுத்திச்சி. நா இன்னிக்கி எனக்கு வரவேண்டிய பணம் இருக்கு, குடுத்துடலாம்னு இருந்தே. அதுக்கு இப்படிச் செலவு வந்திட்டது. அது சீட்டுக் கட்டுன பணத்திலேந்து குடுத்திருக்கு…”

“சரி, நா குடுத்துக்கறேன். நீங்க கவலைப்பட வாணாம்…”

“இல்ல, நா வாங்கினத நானே குடுக்கிறதுதா முற…”

“இப்ப இந்த நேரத்துல நா பணத்துக்கு எங்க போவ? காலயில, எத்தையானும் ஆண்டாளம்மா வூட்டில வச்சிட்டு வாங்கித் தாறன்…”

“நீ தரவே வேணாம். நான் புரட்டிக் குடுக்கிற…”

மழை விட்டிருக்கிறது.

சரோ வருவது தெரிகிறது.

“ஏய், எங்க போயிட்டு வார? இருட்டினப்புறம், வயிசு வந்த பொண்ணு…”

“எங்கும் போகல. அந்த வூட்டுல செந்தில் கூடப் பேசிட்டிருந்தே…”

“செந்தில் கூட இன்னா பேச்சு? காதோரம் கிருதாவும் மீசையும் சிகரெட்டும் விடலயாத்திரியிறா. பத்துப் படிச்சி முடிக்கல. அவங்கூட இன்னாடி பேச்சி? எதோ பொம்புளப் புள்ள படிக்கப் போற. பத்து படிக்கிற. படிச்சிட்டுப் போகட்டும்னு வுட்டா, சொன்ன பேச்சே கேக்குறதில்ல! இது சம்சாரிக் குடும்பம். அதுக்குத் தகுந்த மாதிரி இருந்துக்க!”

“அட போம்மா! நீ ரொம்ப போராயிட்டே” என்றவள் புத்தகத்தைக் கொண்டு உள்ளே வைக்கிறாள். அடுத்த நிமிஷம், அவள் ரேடியோவில் இருந்து பாட்டு வருகிறது. பார்ட்டின்னா பார்ட்டிதா… ப்யூட்டின்னா ப்யூட்டிதா…

சோடா குப்பி மூடியைத் திறந்தாற் போல் செவந்தி பொங்கிச் சீறுகிறாள். “அந்த எளவ மூடுடி! பாட்டா அது? கரண்ட் இல்லியே? இப்ப அதுக்கு மட்டும் கரண்ட் எப்படி வந்திச்சி?”

“ம் வந்திச்சி.. பன்னண்டு ரூவிக்கி பாட்டரி வாங்கிப் போட்டிருக்கு!” என்று கணவன் தெரிவிக்கிறான்.

“நீங்க குடுக்கிற எடந்தா இவள் துள்ளுறாள். இதுக்கெல்லாம் காசு குடுக்கறிங்க…”

“அட இதெல்லாம் கேக்குற வயசு. இதுக்கெல்லாம் பிள்ளைங்களக் கசக்கப்பண்ணக் கூடாது. நீயும் கேளேன். சமையல் ரூமில கொண்டு வச்சிட்டு!”

மனசைப் போட்டுப் பிராண்டிக் கொள்ளவேண்டும் போல் ஒரு நமைச்சல். செவந்தி மாட்டுக் கொட்டிலின் பக்கம் போகிறாள். இவள் ஓசை கேட்டதுமே பசு குரல் கொடுக்கிறது. முதல் ஈற்றுக் கன்று கிடாரி. பெரிதாக வளர்ந்தது. உழவு மாடுகள்…

கொல்லைப்படலைத் தள்ளி வைக்கிறாள். மழை நின்று வானில் இரண்டொரு நட்சத்திரங்கள் கூடத் தெரிகின்றன.

எங்கிருந்தோ காற்றில் ஓர் வாடை இழைந்து வருகிறது. புரியவில்லை. பின் பக்கம் வயல்களுக்கும் கொல்லைக்கும் இடையே குப்பை மேடுகள். முள் காத்தான் செடிகள் என்று ஒழுங்கற்ற இடம். இவர்கள் வீட்டை அடுத்து நாகு வீட்டுக்காரர் குடியிருந்த வீடு இடிந்து கிடக்கிறது. அவர்கள் ஊரைவிட்டுப் பெயர்ந்து பல வருடங்கள் ஆகின்றன. அந்த வீட்டைச் செப்பனிட்டுக் கொண்டு வாத்தியார் பரமசிவம் வந்தார். நாலே மாசத்தில் மஞ்சட் காமாலை வந்து செத்துப் போனார். அது இடிந்து குட்டிச் சுவராகக் கிடக்கிறது. பிறகு சிறிது தூரம் முட்செடிகள்… பொதுச் சாவடி. மேலத் தெரு அங்கிருந்து தொடங்கும்.

குட்டிச் சுவருக்குப் பின் சாராய வாடை வந்ததாக நீலவேனி சொன்னாள். ஊர்ப் பஞ்சாயத்தில் தண்ணீர் பங்கு, கட்சி அரசியல் வம்புகள் தான் நடக்கும். சாராயக் கடை வெட்ட வெளிச்சமாக இல்லை. ஆனால்…

திடீரென்று அப்பன் நினைவு வருகிறது.

இருட்டில் அவர்தான் படலையைத் தள்ளிக் கொண்டு வருகிறார். உடம்பு தள்ளாடுகிறது.

“அப்பா…? நீங்க செய்யிறது நல்லாருக்கா, உங்களுக்கு?”

“…”

வாயில் வசைகள் பொல பொலக்கின்றன.

அம்மாவுக்குத்தான் அந்த வசைகள். “என் ராசாத்தியத் துரத்தி அடிச்சபாவி… வயிறெறியப் பண்ண பாவி. உன்னியக் கழுத்தப் புடிச்சி வெளிய தள்றனா இல்லியா பாரு! தள்ளிட்டு என் ராசாத்தியக் கொண்டாந்து வைப்ப. அவலட்சுமி. லச்சுமி டீ. நீ மூதேவி. மூதேவின்னா, மூதேவி! இன்னாமா வேல செய்வா! புழுதிச்சால் ஒட்டிட்டுப் போவ, ஒண்ணொண்ணாக் கடல… மல்லாக் கொட்ட விதச்சிட்டே வருவா. மூட்டயா வந்திச்சி. அவ போனப்பறம் ஒண்ணில்ல. ஒன்னக் கொன்னி போட்டு அவளக் கொண்டாருவ…”

“சரோ உங்கப்பாவக் கூப்பிடு! என்னாங்க! ஏ… வேல்ச்சாமி, பழனியப்ப யாரானும் இருந்தாகூப்பிடு…”

“அவங்க எங்கேந்து வருவாங்க! அவங்களுந்தா ஊத்திட்டிருப்பாங்க…” என்று ரங்கன்தான் வருகிறான்.

“என்ன மாமா இது. வகதொக இல்லாம இப்படிப் பேரைக் கெடுத்துக்கிறீங்க” என்று அவரைப் பற்றி நிதானத்துக்குக் கொண்டு வருகிறான்.

அவர் திமிறுகிறார். இந்த உடலில் இவ்வளவு எதிர்ப்புச் சக்தியா?

“இவரு சாயந்திர நேரத்தில எந்திரிச்சிப் போக ஏவுடுறீங்க! எப்பப் போனாரு? இங்க பக்கத்துக் குட்டிச் சுவராண்டயே கொண்டாந்து கவுக்கிறானுவ. ஒரு நா பாத்து செமயா ஒதய்க்கனும்னு பாக்குற. என் கண்ணில தட்டுப்பட மாட்டேங்கிறாங்க. இந்தப் போலீசுக்காரக் கழுதங்களே வேபாரம் செய்யிறவனுக்கு உள் கையி. இந்த வியாபாரத்த நிறுத்திட்டேன்னு கை வண்டில ஏதோ சாமான் வச்சி வித்திட்டிருந்தவன, உள்ள தள்ளி, அடிச்சானுவளாம். செவலிங்கம் சொன்னான்… இந்த அக்கிரமத்தக் கேக்கிறவங்களே இல்ல…”

ரங்கசாமிக்குக் குடி வாடையே ஆகாது. பக்கத்திலேயே வரமாட்டான். சுந்தரி புருசன் குடித்தான். அதற்கு இவன் சொல்லும் காரணம் இதுதான். “எங்கப்பா நா சனனம் ஆகிறப்ப குடிக்காதவரா யோக்கியமா இருந்தாரு செவுந்தி. என் தம்பி பொறக்கிறப்ப அவரு முழு குடியவா ஆயிட்டாரு…”

“சரோ! உங்க பாட்டிய இன்னிக்கி வூட்டுக்கு வரவேண்டாம்னு சொல்லு! அம்சு வூட்டுத் திண்ணையில கெடக்கட்டும்!” என்று செவந்தி கத்துகிறாள்.

அத்தியாயம்-6

செவந்தி வயல் வெளியில் நிற்கிறாள். கார்கால வானம் கனத்திருக்கிறது. . .

கீழே ஒரே பசுமை. அவளுடைய கால்காணி மட்டும் தனியாகத் தெரிகிறது. பதினைந்து, இருபத்தைந்து, முப்பத் தைந்து என்று மூனுரம் இட்டாயிற்று.

வேப்பம் புண்ணாக்கில் யூரியாவைக் கலந்து, முதல் நாளிரவே வைத்துவிட வேண்டும். காலையில் பொட்டினையும் கலந்து தூவினாள். மூன்றாந் தடவை வேப்பம் புண்ணாக்கு இல்லை.

யூரியாவை ஒரேயடியாக அதிகமாப் போடுவார் அப்பா. அது தண்ணிராகி வீணாகப் போய்விடுமாம்.

சிறு குழந்தைக்குச் சிறுகச் சிறுக உணவு கொடுப்பது போல், முதல்-இளம் பருவத்தில் வேப்பம் புண்ணாக்குடன் கலந்த யூரியா கொஞ்சம் கொஞ்சமாக அதன் வேர்களுக்குப் போகுமாம்.

பத்தி நடவு, இடையில் உள்ள வெளி, கால் வைத்துப் பயிர்களைப் பார்க்க, இடையே களை, பூண்டு இருக்கிறதா என்று பார்க்க, கழிக்க வசதியாக இருக்கிறது. ஆனால், களையே மண்டவில்லையே? மேலுரம் இடுமுன் களை யெடுக்க என்று நாலைந்து ஆட்கூலி கொடுக்க வேண்டுமே? ஆச்சரியமாக இருக்கிறது. களையே வரவில்லை. அவ்வப் போது வந்து புல், பூண்டு சும்மாகையில் புடுங்கி விடுகிறாள். கதிர் பூக்கும் பருவம்.

சித்திரைப் பட்டம் – சொர்ணவாளிப்பினால், இப்போது அறுவடையாகும். அதற்கு முப்பத்தைந்துக்கு மேல் உரமிட வேண்டாமாம். இது ஆடிப்பட்டம். சம்பா…. இன்னொரு உரம். யூரியாவும் பொட்டாஷும் மட்டும் போட்டால் போதும்.

தினமும் இந்தப் பயிரைச்சுற்றி வரும்போது மனது எல்லாக் கவலைகளையும் மறந்து விடுகிறது. வான வெளியில் சிறகடித்துப் பறக்கும் ஒர் உற்சாகம் மேலிடுகிறது. கால்காணியோடு ஏன் நிறுத்தினோம், முழுவதும் இப்படிப் பயிரிட்டிருக்கலாமே என்று தோன்றுகிறது. நாற்றங்களில் எஞ்சிய நாற்றுக்களை, வேல்சாமி பயன்படுத்திக் கொண்டான்.

“செவந்தியே! செவுந்தி!”

ரங்கனின் குரல்தான். முள்ளுக்காத்தான் செடிப் பக்கம் வெள்ளையாகத் தெரிகிறது.

வா! என்று கையைசைக்கிறான்.

கருக்கென்று ஒரு திடுக்கிடும் உணர்வுடன் வரப்பில் விரைந்து நடக்கிறாள். சிறு களைக்கொட்டும் கூடையுமாக விரைகிறாள்.

அப்பனுக்கு ஏதேனுமா? மாடு நிறைசெனை… அதற்கு ஏதேனுமா? நெஞ்சு குலுங்க வருகிறாள்.

“என்னாங்க? அப்பா…?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல, வா சொல்றே…”

வெற்றிலைக் கொடிக்காலின் வாசனை வருகிறது. “சென மாடு… காலமயே தீனி எடுக்கல. அதுக்கு நேரம் வந்திடிச்சா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல… வூட்ல ஆள் வந்திருக்காங்க. பட்டணத்துப் பெரீம்மா…”

“பட்டணத்துப் பெரீம்மாவா? பெரீம்மாவா?”

சின்னம்மா என்றால் நடவாதது நடந்து விட்டதாகத் தோன்றும். “பெரிம்மா… ஆரு… எந்தப் பெரீம்மா?”

“என்ன நீ, தெரியாதது போலக் கேக்குற? சுந்தரிக்கும் கூட ஒரு பக்கம் உறமுறை. அவ பெரியப்பன் மக உசாவைக் கட்டிருக்கே அந்தப் பெரிம்மா…”

“ஓ… அவுங்களா?”

“அவுங்க எதுக்காக நம்மூட்டத் தேடி வாராங்க? அவுங்களுக்கும் நமக்கும் எந்த நாளிலும் நெனப்பில்லியே? இப்ப என்ன வந்திச்சி, உறவு, நீங்க அக்கறயா கூப்பிட வரீங்க? அதுக்குத்தா, அம்மா இருக்காங்க, சுந்தரி இருப்பா?”

“நீ என்ன கிராஸ் கேள்வி கேக்குற? செவுந்தி இல்லியான்னு கேட்டாங்க. வூடு தேடி வந்தாங்க. வந்திருக்காங்க. சேவுப் பொட்டலம் ஒண்ணு வாங்கியாந்தே…. நீ வந்து ரெண்டு வார்த்த பேசு…”

அவளுக்குப் பிடிக்கவில்லை. பின் தாழ்வரையில் களைகொட்டையும் கூடையையும் வைக்கிறாள். தலைப்பை உதறிச் சுற்றிக்கொண்டு வருகிறாள். பசு மாடு குரல் கொடுக்கிறது. அதற்கு நேரம் வந்து விட்டது. ஒரு காலை மாற்றி ஒரு காலை வைத்து அவதிப்படுகிறது.

“என்னாங்க பசு அவதிப்படுது. பாத்தீங்கல்ல!”

“இருக்கட்டும். அதுக்குள்ள கன்னு போடாது. நீ உள்ளற வந்து வந்தவங்கள வாங்கன்னு சொல்லு?”

ஓ… பெரியம்மா… உடம்பு முகம் ஒரே செழிப்பில் மிதப்பது தெரிகிறது. கழுத்தில் பட்டையாக இரண்டு வரிச் செயின். காதுகளில் பெரிய தங்கத்தோடு. மூக்குப் பக்கங்களில் அன்னமும் பூவாளியுமாக மூக்குத்திகள். கைகளில் வளையல்கள். வெள்ளை ரவிக்கை. நீலத்தில் பூப்போட்ட பாலியஸ்டர் சேலை. வெள்ளை இழையோடிய முடியை இழைய வாரிக் கொண்டை போட்டிருக்கிறார்.

பலகையில் உட்கார்ந்து அம்மாவுடன் பேசுகிறார்.

“பெரியவன்தான் ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்ணுகிறான். முத்துய்யா, கண்ணன், ஜயகுமார் நற்பணி மன்ற செயலாளன். தமிழ்நாடு மிச்சூடும் இளைஞர் மன்றத்துக்கும் அவந்தா. நிதம் கூட்டம், நிதம் மீட்டிங். வூட்ல தங்க நேரமில்ல. ஆளு காரு வாசல்ல வந்திடும். புதுசா, நாகரகேணில வூடுகட்டிட்டிருக்கு. இது ராசியான எடம், இத்தவுட்டுப் போகக் கூடாதுன்னு குமார் சொல்லுறான். அவன் எக்ஸ்பர்ட் கம்பெனில ஆறாயிரம் சம்பாதிக்கிறான். பொஞ்சாதி முழுவாம இருக்கா. அவப்பன் துபாயில இருக்கிறான். நான் போறேன்னு பயமுறுத்திட்டிருக்கிறான். காலம் எப்படி மாறிப் போச்சுங்கற செங்கோலு! காசு… காசுதா… மாசத்துல ரெண்டு நா ஒட்டல்ல போயி சாப்பிட்டு ரெண்டாயிரம் செலவு பண்ணுறா குமார். குடும்பத்தோட ஆமா, எனக்கென்னத்துக்குடான்னா, கேக்கமாட்டா. போன மாசம் இப்பிடித்தா… ஏஸி ஓட்டல்ல கூட்டிட்டுப் போனா காரு காரா வாறாங்க. எங்கதா பணம் இருக்குதோ? சிக்கன் எழுபதோ? இன்னமோ சொன்னான். சும்மா சொல்லக் கூடாது. நல்லாதான் இருந்திச்சி. என்னமோ அவுங்க இதெல்லாம் அநுபவிக்காம போயிட்டாங்க. அப்படியே ஒரு சினிமாக்குக் கூட்டிப் போனா. ஜெயகுமார் படம்… எல்லாம் ஏசிதா. புதுசா கட்டுற வூடு கூட ஏசி பண்ணப் போறாங்க…”

செவந்திக்கு இந்தப் பெருமைகளைக் கேட்டு எரிச்சல் மண்டுகிறது.

“வாம்மா. செவுந்தி உன் தாத்தா திருவிழாவுக்கு உன்னத் தூக்கிட்டு வாரப்ப பாத்தது. மூக்கொழுகிட்டிருக்கும். மேத்துணில துடச்சி பாசமா வச்சிப்பாரு. இப்ப உனுக்கு மேசரான பொண்ணிருக்காமே…?” என்று விசாரிக்கிறாள்.

“ஏது இவ்ளோதுாரம் வந்திட்டீங்க? உங்களுக்கெல்லாம் நாங்க இருக்கிறது ஞாபகமே இருக்காதே?”

செவந்தி குத்தலாகப் பேசிவிட்டு உள்ளே சென்று தண்ணி எடுத்துக் குடிக்கிறாள். பிற்பகல் மூன்று மணி நேரம். இன்று பொழுதுடன் சாப்பாட்டுக் கடையாகி விட்டது.

“டீ போட்டுட்டு வா செவுந்தி…” என்று காரா சேவை சில்வர் தட்டில் பிரித்துப் போட்டுக் கொண்டு வருகிறான்.

“மாமா உடம்பு ரொம்ப மோசமாயிருக்காரே! ஒரு நட எல்லாம் வாங்க.”

“முத்தப்பனுக்கு அப்பலோ ஆசுபத்திரி டாக்டர்லாம் நல்லாத் தெரியும். வெளிநாட்டிலேந்தெல்லாம் ஹார்ட் ஆபுரேசன் பண்ணிட்டுப் போறாங்க. எம்.ஜி.ஆர். அங்கதான படுத்திருந்தாரு. அவருக்குன்னு ஸ்பெசலா ஒரு மெத்த பண்ணிருந்தாங்க. அது மட்டும் நாலு கோடியாம்….” செவந்திக்கு அவளைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளவேண்டும் போல இருக்கிறது.

அப்பனுக்கு ஒரே தாரக மந்திரம் தான்…

“ஆமா… ராசாத்திய எப்பனாலும் பாப்பியா?”

“ஏம்பாக்காமா? அவ மருமவ சுந்தர் நம்ம கண்ணனுக்குத் தோஸ்து. இவந்தா அவனுக்கு வேல போட்டுக் குடுத்திருக்கிறா. ரெண்டு பொட்டப்புள்ள… ஏரிப்பக்கம் குட்சையில தா இருக்கு… அவ ஆத்தாக்காரி ஹோம்ல வேல செய்யிறா. எப்பனாலும் பாப்பே…”

“நீ பார்த்தா, ஒருக்க வந்து போகச் சொல்லு. நாகு போன தெல்லா போவட்டும். மறந்திடு. மன்னாடிக் கேட்டுக் கிட்டேன்னு சொல்லு…”

அப்பனுக்கு நெஞ்சு தழுதழுத்துக் குரல் நெகிழ்கிறது.

“அதுக்கு என்ன இப்ப? சுவர்ணவல்லிம்மா அவங்க ஹோம்லதான அது? இதுக்கு நல்லா தங்க எடம் சலுகை எல்லாம். ஆளு நல்லாத்தா இருக்கா. இங்கேருந்தா என்ன கிடைக்கும்? முத்தய்யஞ் சொல்றா. இங்கல்லாம் சர்க்கார் தொழிற்சாலை என்னமோ வருதாம். நில மெல்லாம் கட்டாயமா ஆர்ச்சிதம் பண்ணிடுவாங்கன்னு. நெறயப்பேரு, நில நீச்சில வருமான மில்லன்னு வித்துப் போட்டு, பட்டணத்துல ரெண்டு வீட்டக் கட்டிப் போடுறாங்க. மாசம் அஞ்சாயிரம் பத்தாயிரம்னு வூட்டு வாடகைய வசூல் பண்ணிட்டு உக்காந்து சாப்புட்றாங்க. கூலி குடுத்துக் கட்டுப் படியாவலன்னு வித்திட்டாங்க. அத்தோட பயிர்லல்லாம் பூச்சி வுழுகுதாமே?”

“அத்தே, இத்தச் சொல்லவா மூட்டக் கட்டிட்டு வந்திங்க? நா என்னாக்கும்னு பாத்தனே? நாங்க பூமிய விக்கிற உத்தேசம் இல்ல” என்று செவந்தி வெடித்துவிட்டு அடுப்பில் கரி வட்டையில் தண்ணிரைக் கொதிக்க விடுகிறாள்.

காரியமில்லாமல் இவள் ஏன் வந்தாள் என்று பார்த்தது சரியாக இருக்கிறது? புருசன் சொல்றதுக்காக டீத்துளைப் போட்டு, வடிகட்டிக் கொண்டு வருகிறாள். கைச்சூடு, மனச்சூடு இரண்டும் அவள் டம்ளரையும் வட்டையையும் வைத்ததில் புலனாகின்றன.

“இன்னாமோ உம் புருசன் கூப்பிட்டானேன்னு வந்த நா. இங்க கண்ணனோட சிநேகிதப் புள்ளக்கிக் கலியாணம், நெகமத்துல. காருல இங்க பஸ்ஸுக்குக் கொண்டாந்து வுட்டா. உன் புருசன் கடையிலேந்து வந்து வாங்க பெரிம்மா வூட்டுக்குன்னு கூப்பிட்டா; வந்தேன். இந்த ஊரு ஒறவே வானாம்னு எப்பவோ போனவ. முத்தய்யஞ் சொல்லுவ. நம்ம வூடு இருந்த எடம்னாலும் இருக்கும்பா. பாத்தனே. குட்டி சுவரா கெடக்கு. எங்களுக்கு எந்த நெலமும் வானாம். உங்களுக்கு வோணும்னா அதுக்கு ஒரு வெல போட்டு எடுத்துக்குங்க…”

அவள் முகத்தில் பல வண்ணங்கள் – மின்னுவது போல் இருக்கிறது. பக்கத்து மனை அவர்களுடையதுதான்.

“யார் சொந்தமும் யாருக்கும் வாணாம். அவுங்கவுங்க சொத்து தங்கினாப் போதும்…”

முகத்தில் அடித்தாற் போல் கூறிவிட்டு அவள் பின்கட்டுக்குப் போகிறாள்.

மாடு… வேதனைப்படுகிறது.

அவிழ்த்துத் தாழ்வாரத்தில் கொண்டுக் கட்டுகிறாள். ஏர் சட்டி சவரெல்லாம் கிணற்றுப்பக்கம் ஒதுக்குகிறாள்.

கிடாரிக் கன்றாகப் போட வேணும்… முருகா… என்று வேண்டுகிறாள்.

குமுறிய வானில் மழைத் தூற்றல் விழுகிறது. பெரிய மழை இன்னும் விழவில்லை என்றாலும், சமையற்கட்டு ஒழுகுகிறது. பானைகளில், பருப்பு, புளி, மிளகாய் வைத்திருக்கிறாள். மேலே ஏறி இந்த மழைக்குத் தாங்குவது போல பிளாஸ்டிக் ஷீட்டோ, மெழுகு சீலையோ போட்டால் பரவாயில்லை. எப்படியேனும் இந்த மழையைத் தாங்கி விட்டால் தை பிறந்தோ கோடையிலோ வீட்டுக் கூரை மாற்ற வேண்டும். சமையல் அறையும், பின் தாழ்வரையும் கீற்றுக்கூரை… மற்ற இடங்கள் ஓடு. பழைய காலத்து நாட்டு ஓடு. அதுவும் பிரித்துக் கட்டத்தான் வேண்டும்.

கால் காணியில் நல்ல மகசூல் வந்து, எல்லா நிலமும் பயன்தரக் கைக்கு வந்து… வளமை கண்டு வீடு பிரித்துக் கட்ட முடியுமா? கிணற்றுப் பாசனப் பூமியைப் பந்தகத்துக்குக் கொடுத்துவிட்டு, கோடைச் சாகுபடி என்றால் அந்தக் கிணற்றுத் தண்ணிருக்கு விலை கொடுக்க வேண்டும். வீட்டு ஆண் பிள்ளை என்று அப்பாவும் படுத்த பிறகு, இவள் புருசனின் எதிர்ப்பையும் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாள்? சரவணனுக்கு வயசு பன்னிரண்டுதான் முடிகிறது. அவனை உழவில் பூட்டலாமா? சீ!

மழை இறங்குவதையும் மாடு தவிப்பதையும் பார்த்த வண்ணம் உட்கார்ந்திருக்கிறாள்…

கொல்லையில் வைத்த தெங்கு இப்போதுதான் காய்க்கத் தொடங்கி இருக்கிறது. ஐந்து வருசம் என்று கொண்டு வைத்த பிள்ளை பத்தாவது வருசத்தில் தான் காய்க்கத் தொடங்கிற்று. ஆனால் பெரிய காய். ஒரமாக அவரையை ஊன்றி, அது கொடி வீசி படர்ந்திருக்கிறது. வைக்கோல் போர் கரைந்து விட்டது. வேளாண்மை இல்லை என்றால் விலைக்குத்தான் வாங்க வேண்டும்.

சட்டென்று நினைவு வருகிறது. பசுகன்று போடும் போது முகம் உதயமானதும் சூடம் கொளுத்திக் காட்டிக் கும்பிடுவார்களாம். இவர்களுக்கு வழக்கமில்லை. அது தாயேதான். மழையில் நனைந்து கொண்டு சரோசா வருகிறாள். சைக்கிளை உள்ளே கொண்டு வைக்கிறாள். சரவணனுக்கு பிளாஸ்டிக் மழைக் கோட்டு இருக்கிறது.

அத்த எடுத்திட்டுப் போகலாமில்ல? நனஞ்சி ஒரே தெப்பலாயிருக்கு. காய்ந்த சேலைத் துணியைப் போட்டுத் துடைத்து விடுகிறாள் பாட்டி.

செவந்தி கர்ப்பூரம் இருக்கிறதா என்று பார்க்கிறாள். கன்று போட்ட பிறகு, நல்லபடியாகக் கர்ப்பூரம் ஏற்றித் திருஷ்டி கழிக்க வேண்டும்…

டிபன் டப்பியைப் பையில் இருந்து எடுத்து முற்றத்தில் போட்டபடி, “யம்மா, சூடா காபி, டீ எதினாச்சிம் குடும்மா. எனக்கு சார்ட் போடணும் உட்காந்து…” என்று கூறுகிறாள்.

“அம்சுப் பெரிம்மா வூட்டில போயி பாலு கேட்டேன்னு வாங்கிட்டு அப்பிடியே, ஓரத்துக் கடயில நாலணா கர்ப்பூரம் வாங்கிட்டு வா சரோ. மாடு கன்னு போட நிக்கிது. காபி போட்டுத் தரே…”

அவளிடம் ஒரு ரூபாய் நோட்டொன்றைத் தருகிறாள். அடுப்பில் காய்ந்த ஓலையைச் செருகிப் புகைய விடுகிறாள். அந்தச் சமையலறை ஓரமாகவே ஓலை எரு முட்டை, காய்ந்த சுள்ளிகள் எல்லாம் பத்திரப்படுத்தி இருக்கிறாள். தட்டுமுட்டு பானை என்று சமையலறையில் பல்லியும் பாச்சையும் இருக்கத்தான் இருக்கின்றன. சமயத்தில் தேளும் கூட ஓடும். மாசத்தில் ஒரு நாள் அமாவாசைக்கு முதல் நாள் கோமயத்தில் மஞ்சட் தூளைப் போட்டு ஓரமெல்லாம் மெழுகுவாள். விஷப்பூச்சி அண்டாது. சென்ற அமாவாசை விட்டுப் போய்விட்டது. மேலுரம் கலந்து கொண்டு இருந்தாள். சாந்தியின் வயலுக்கு நடவென்று போனாள்.

ஒரு கண் கொட்டாங்கச்சியைப் பார்த்து அடுப்பில் போடுகிறாள். அது பாதி எரிந்ததும் வெளியில் இழுத்து அணைக்கிறாள்.

தேயிலைக் கசாயம் போட்டு விட்டு, அடுப்பில் உலை போடுகிறாள்.

தெருக்கோடிக்குப் போவதற்குக் கூட சைக்கிள்.

“கர்ப்பூரம், தூக்கில் பால்… இதென்னடீ, பொட்டலம்?”

வெங்காயம் பொரிந்த மணம் பகோடா…

“இது ஏது?”

“வேணிப் பெரிம்மா குடுத்தாங்க!”

“குடுத்தாங்களா? அவ பாவம் முதுகொடிய உழைக்கிறா. அடுப்படில வேகுறா… நீ வாங்கிட்டுவர?”

“நாஒண்னும் கேக்கல. குமாரு காலம கணக்கு சொல்லித் தரச் சொன்னா. சொல்லிக் குடுத்தேன். பெரிம்மா என்னப் பாத்ததும் நிறுத்திக் கொண்டுக் குடுத்தாங்க.”

“சீ… ஏ இப்பிடிப் புத்தி போவுது உனக்கு?”

“நாங் கேக்கலம்மா சத்தியமா…”

“சரி சரி… இந்தாங்க பாட்டிக்கு ரெண்டும், தாத்தாக்கு ரெண்டும் குடு…”

“பாட்டி எங்கே?”

பாலைக் கலந்து தேநீரை டம்ளரில் ஊற்றுகிறாள்.

கிணற்றடியில் சலதாரையில் தண்ணிர் ஓடுகிறது.

பாட்டி அங்கேதானிருக்கிறாள். மாடு ஈன்று விட்டது. குளம்பு கிள்ளிக் கன்று கிடாரி என்று பார்த்து இருக்கிறாள்.

நஞ்சுக் கொடி தொங்குகிறது. மாடு கன்றை நக்கி நக்கிக் கொடுக்கிறது. சரசரவென்று அரிசி கழுவிக் கழுநீரில் பொட்டும் சிறிது புண்ணாக்கும் கலந்து கொண்டு வந்து வைக்கிறாள்.

கர்ப்பூரம் ஏற்றி மூன்று முறை சுற்றி திருஷ்டி கழிக்கிறாள். பாதி எரிந்த கண் கொட்டாங்கச்சியில் கறுப்புக் கயிற்றைக் கோர்த்து அதன் கழுத்தில் கட்டுகிறாள்.

நஞ்சுக் கொடியை பழந்துணியில் சுற்றிச் சாக்குத்துண்டில் பதிந்து ஓரமாக வைக்கிறார். காலையில்தான் அம்மன் கோயிலின் பின் உள்ள அத்தி மரத்தில் கொண்டு கட்ட வேண்டும்.

பாட்டி சீம்பாலைக் கறந்து கீழே உற்றுகிறாள். கன்றுக் குட்டியை முட்ட விடுகிறாள்.

“அப்பா… மாடு கிடாரிக் கன்று போட்டிருக்கு! டீ சாப்பிடுங்க இந்தாங்க கடிச்சிக்குங்க!”

அப்பா எதோ கனவில் இருந்து வெளிப்படுபவர் போல், உ.ம்… உம்? என்று கேட்கிறார்.

“செவுந்தி, நாவு வந்ததிலேந்து மனசு சரியில்ல. உன் அம்மா எங்க போனா?”

“பின்னாடி மாடு கன்னு போட்டிருக்கப்பா!”

“அதான பாத்தன். எங்கனாலும் விட்டு ஒரு பத்து நா இருக்கணும் போல இருக்கு. எம் மனசு விட்டு அழுகணும் போல இருக்கு செவுந்தி! அபாண்டமாக அவ பேரில பழி சொல்லி, நடுகாட்டுல வச்சி அடிச்சாங்களே… அந்தப் பாவம் வுடுமா?”

“அதெல்லாம் இப்ப எதுக்கப்பா நினைக்கிறீங்க?” என்று மகள் சமாதானப்படுத்துகிறாள்.

“நெஞ்சுல ஒரு பக்கம் அது குமுறிக்கிட்டிருக்கு செவுந்தி. உன் சின்னாத்தா என்ன தப்புப் பண்ணிச்சி? அவ எப்பிடி வேல செய்வா தெரியுமா? வூட்டுவேல, காட்டுவேல, கழனிவேல சும்மா குருவி பறந்து பாராப்பல வருவா. ஒரு நேரத்துல அவ மூக்கச் சிந்திட்டு மூசுமூசுன்னு அழுதுட்டு உக்காந்ததில்ல. அவ அப்பங்கிட்ட, அவுரு இருக்கிற வரையிலும் தனக்கு அப்பன் அக்காளைப் போல் பாராட்டவில்லை, நகை நட்டு செய்து போடவில்லைன்னு கோபம் இருந்திச்சி. ஆனா, அதை ஒரு நேரம் கூட அக்காகிட்டக் காட்டியதில்லை. எட்டு வருசம் சின்னவ தங்கச்சி சங்கிலி போட்டுக்கட்டும், வளவி போட்டுக்கட்டும்னு குடுத்ததில்ல, இந்த மவராசி. அப்படி இல்ல சீல உடுத்தணும், மேனி அழுக்குப்படாம நிக்கணும்னு எண்ணம் இல்ல. உழப்பாளி. அவுலிடிச்சி, பொரி பொரிச்சி, காஞ்சிபுரம் சந்தையில வித்திட்டு வந்து பணம் காசு சேப்பா. உனுக்குத்தா ஞாபகம் இருக்குமே? இருபது பேருக்கு. நடவாளுகளுக்குப் பொங்கி வச்சிட்டு, இவளும் நடவுன்னு வந்திடுவா. புருசன் நல்லா இருக்கக் கூடாதா? அவ விதி. இருக்கிறதே பாரம்னு செத்துப் போனா…”

“ஏப்பா, அவரு எங்க கட்டிட வேலக்காப் போனாரு?”

“இல்லம்மா. இதா இங்க மில்லு. ரோட்டாண்ட இருக்கில்ல? அது அப்பதா வய்க்கிறாங்க. மேலே இரும்புச் சட்டம் போட்டிருக்கறாங்க. வண்டில கனசாமான். அதெல்லாம் வந்திருக்கு. இவ ரோட்டோரம் வயல்ல களை வெட்டுறா. வண்டி மாடு எதிரே எத்தயோ கண்டு மெரண்டு மீற, வண்டி எப்பிடியே கவுந்திடிச்சி. அந்தச் சட்டம் வந்து இவ இடுப்பைச் சதக்கிட்டு விழுந்திடிச்சி. சேறில்ல. கோர உழவு. கட்டி கரம்பை கிடந்திச்சி. எசகு பிசகா வுழுந்திட்டா… இடுப்பு எலும்பு ஒடஞ்சி போச்சி. கையிலும் முழங்கைக்கு மேல எலும்பு முறிஞ்சிடிச்சி. புத்துாருக்குக் கொண்டிட்டு உடனே போயிருந்தா நல்லாயிருக்கும். இங்கதா நெகமத்துல ஒரு வயித்தியருகிட்டப் பச்சில போட்டுக் கட்டிக் கொண்டாந்து விட்டாங்க. அது சரியாவல. பெறகு புத்துருக்குக் கொண்டு போனாங்க. மூணு மாசமாச்சி. ஆனா கை, காலு சரியாவல. ஆண்பாடு, பெண்பாடு பட்டிச்சி. அவன் செத்தப்ப இது முழுவாம இருக்கு. உங்கம்மா ராட்சசி. இது அவனுக்குத் தரிச்சதில்லன்னு என்ன ரகள பண்ணுனா? செவந்தி! மேல காயுறானே அவனுக்குப் பொதுவாச் சொல்லுறேன், அவ நாக்கு அழுகாம செத்தா, அது சரியில்ல. அத்த அபாண்டமா என்ன வச்சிப் பேசினது தாங்காம, உங்க பாட்டன் நெஞ்சிலியே அடிச்சிட்டாரு… உன்ன மருமகனா நெனக்கல ஏகாம்பரம், எதுனாலும் தப்பு நடந்திருந்திச்சின்னா எங்கிட்டச் சொல்லிடு. பாவம், அதுக்கு ஒரு கெதி இல்லாம பாவி பண்ணிட்டன். அது உம் புள்ளன்னாலும் இருந்திட்டுப் போகட்டும்; உனுக்கே கட்டி வச்சிடறேன்னு சொன்னாரு…”

“அப்டில்லாம் இல்ல… இது அவம் புள்ளதா. அபாண்டமா அதும் பேரில பழி சொல்லாதீங்க…”

“அரச பொரசலா ஊரெல்லாம் பேசுனா அசிங்கமாயிடுமேப்பா…”ன்னாரு.

“பேசுனவங்க நாக்கு அழுவிடும்னே. ஆனா, ஆரு நாக்கும் அழுவல. அவருதா அறுப்பறுத்திட்டிருந்தவரு, நெஞ்சு வலின்னாரு, போயிட்டாரு. உனுக்கு ஞாபகமிருக்குமே செவுந்தி?”

செவந்தி சிலையாக நிற்கிறாள்.

இப்படி ஒரு பொறி அவளுக்குள் தட்டியதில்லை. ஆனால், சின்னம்மாவுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்கலாம் என்று அப்பா அபிப்ராயப்பட்டதை அவரே சொல்லி இருக்கிறார்.

“இதொண்ணும், பழிபாவமில்ல. அந்தப் புள்ளையையும் பாத்துக்கிட்டு, கொல்ல மூட்டுல பயிர் பண்ணுறவ யாரேனும் வந்தா கட்டிட்டா என்ன? அதுக்கு ஒரு நாதி இருக்குமே?” என்று சண்டை போட்ட விசயம் இவள் வளர்ந்த பின் நினைவில் தெறித்திருக்கிறது.

ஆனால், நட்டுவாக்காலி வாயில் கவ்விக் கொண்டு தான் கொடுக்கால் கொட்டும். அம்மா அப்படித்தான் தங்கச்சியைப் பற்றி இருந்தாள் என்று தோன்றுகிறது.

“என்ன, இங்க அப்பனும், மகளும் பேசுறீங்க…? ஏ… என்ன ஒரு வீட்டில் அப்பனும் மகளும் கட்சி கட்டுறீங்க?”

அந்தக் குரல் அம்மாவுக்குரியதா?

இது எங்கிருந்து வருகிறது? பாம்பு செத்து, குப்பைக்குப் போன பின், அது மேடாகிப் புதைந்து பின், இன்னும் பலம் இருக்குமா? எதனால் இப்படிப் பயம்?

“இங்க யாரும் கட்சி கட்டல. இதுக்கு நேரமும் இல்ல” என்று சொல்லிவிட்டு அகலுகிறாள் செவந்தி.

– தொடரும்…

– கோடுகளும் கோலங்களும் (சமூக நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1998, தாகம், சென்னை.

ஆசிரியை திருமதி.ராஜம் கிருஷ்ணன் 1952-ல் நடந்த அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது 'ஊசியும் உணர்வும்' என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத் தொகுப் பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.  1953, கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசைப் பெற்றது இவரது 'பெண்குரல்' நாவல். 1958-ல் ஆனந்தவிகடன் நடத்திய நாவல் போட்டியில் இவரது 'மலர்கள்' நாவல் முதல் பரிசைப் பெற்றது. …மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *