‘ஷார்ட்ஸுடன்’ தான் செய்யும் உடற்பயிற்சியை, மொட்டை மாடியில் நின்று கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் எதிர் வீட்டு வில்லனைக் கண்டு ஹரிணி அதிர்ச்சி அடைந்தாள்.
‘ச்சீ ! பொறுக்கிப் பயலே, என் புருஷனிடம் சொல்லி உனக்கு வைக்கிறேண்டா ஆப்பு..!’ கருவிக் கொண்டே ஹரிணி கீழே இறங்கி வந்தபோது காலிங்பெல் ஒலித்தது .
‘யாராக இருக்கம்’ யோசித்தபடியே திறந்தவளுக்கு மீண்டும் அதிர்ச்சி.
மொட்டை மாடியில் பார்த்த அதே முகம், இப்போது எதிரில், மிக அருகில்.
“மேடம்.. என் பெயர் ஹரன். எதிர் வீட்டுக்குக் குடி வந்து ஒரு வாரம் ஆகுது.”
” …..” பதில் பேசாமல் ‘சுள்’ என முகத்தை வைத்துக்கொண்டு, மௌனம் காத்தாள் ஹரிணி.
“மேடம்…! ஒரு வாரமா உங்க உடற்பயிற்சியை பார்த்துப் பார்த்து , தானும் செய்யணும்னு ஆசை படுறா என் மனைவி. அவளுக்கு நீங்க முறையா உடற்பயிற்சி நுணுக்கங்களைக் கற்றுத் தர முடியுமா ?..” ஹரன் இயல்பாகக் கேட்க, பின்னாலிருந்த ஹரிணி முன்னே வந்து கைகூப்பிளாள்.
‘உடற்பயிற்சிக் கோச்’சாகத் தன்னைக் கற்பனை செய்து கொண்ட ஹரிணி, அவர்களை “உள்ளே வாங்க!!” என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றாள்.
– கதிர்ஸ் 1-15 மே 2022