எனக்கு ஒரு விசித்திர நோய் இருக்கு. அது என்னன்னா ரொம்ப பரிச்சயமற்ற ஆனால் எங்கோ பார்த்த நினைவு இருக்குற சில மனிதர்களை சந்திக்கும்போது அவர்கள் ஏற்கனவே இறந்தவர்களாக தோன்றுவது. அது ஏனோ சமீபத்தில் அந்த எண்ணம் அதிகமாகி கொண்டே போகிறது. இதை முதலில் வெளிப்படையாக அருகிருப்பரிடம் நேரடியாக கேட்டு தெரிந்துகொள்வேன். ஆனால் போக போக அது ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. அதனால் இப்போதெல்லாம் நான் கேட்பதில்லை. ஒரு வித சந்தேக உணர்வுடன்தான் பயணிக்கிறேன்.
இதற்கு முக்கிய காரணமாக கொரானா நோயால் நிறைய மரணங்களை தொடர்ந்து நாம் சோசியல் மீடியாவில் இறப்பு செய்தியையும், தெருவுக்கு தெருவு பிளேக்சில் ஆழ்ந்த இரங்கலையும் பார்த்தது. போதாத குறைக்கு வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ் வேற. பிறந்த நாள் வாழ்த்துக்களையே அதிகம் பார்த்து பழக்கபட்ட எனக்கு எதை பார்த்தாலும் இறப்பு செய்தியாக தென்பட்டது மிகுந்த வருத்ததையும் எதிர்மறை எண்ணங்களை தூண்டியது . நான் இதனால் சரியாக எதையும் கவனிக்க கூடாதென முடிவெடுத்தேன். இதற்காக மருத்துவரை அணுக எனக்கு மனம் வரவில்லை அதுவும் இந்த சூழ்நிலையில். மெல்ல மெல்ல சராசரி வாழ்க்கையை துறந்தேன். மேலும் ஊரடங்கு வேற செயல் படுத்தியதால் வீட்டிலேயே முடங்கி விட்டேன்.
ஆனால் இந்த முடக்கம் இந்த நோயை முடிக்கிவிடும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அத்தியாவசிய தேவைக்கு வெளிவரும்போதுகூட யாரை பார்த்தாலும் அச்ச உணர்வு மேலிட்டது. இதை மனதில் வைத்து இயங்குவதால் எனக்கு வீட்டிலேயே யாருடனும் பேச பழக பிடிக்கவில்லை. அவர்களுக்கும் அது பழகி விட்டது. நான் முழுதும் தனிமைபடித்திகொண்டேன். கொரானா வராமலே தனிமைபடித்தி கொண்டே முதல் ஆள் நானாதான் இருப்பேன். ஆனாலும் அவ்வப்போது தெருவில் போகும் செய்திகூட “அந்த ஊர்ல அவர் செத்துட்டார், இந்த ஊர்ல இவங்க செத்துட்டாங்கனே” கேட்டிச்சு.
சாதாரணமாகவே என் குணாதிசயதிற்கு, நண்பர்கள் சொற்பம். காதல்களும் கைகூடவில்லை.அதற்கே பல முறை செத்திருக்கணும். உறவுகள் அழைக்கும் அளவுக்கு நான் உதவவில்லை. அதனால் இருக்க இருக்க மனநோய் வீரியம் அதிகமாச்சு. மன அழுத்தம் சுருக்கியது. ஒரு வாரத்திற்குள் என் உடல் மனம் குன்றியது. தீவில் வாழ்வதுபோல் தோன்றியது. படுத்து தூங்கி தூங்கி தூக்கம் தூங்கிப்போனது.
எனக்கு என்னமோ தவறாக தோன்றியது. உடல் மரணிப்பதை விட மனம் மரணிப்பது மிக கொடுமையானது. என்னை பொறுத்தவரை கொரானா நோயும் பரவாயில்லை, மீறினால் பேயுடன் உறவுகூட பரவாயில்லை, என் தற்போதைய நிலைக்கு. மனிதமனத்தை விட கொடிய நோயோ பேயோ இருக்கபோவதில்லை. ஒரு மாதம் ஆகிவிட்டது. தற்கொலை உணர்வை முதன்முதலில் மனம் பரிசீலிக்கின்றது. இனி முடியாது முடியவே முடியாது வீட்டை வெடித்து வெளியேறியே ஆக வேண்டும் என முடிவெடுத்து ஊர் சுற்ற முடிவெடுத்தேன்.
பகலில் வெளியே போனால் அரசாங்கம் அடிக்கிறது, அதில் தவறொன்றும் இல்லை. நம் நிலை நமக்கு, அவரவர் நிலை அவர்களுக்கு. சரியென்று ஒரே வழி நள்ளிரவில் தினமும் பைக்கில் ஒரு ரவுண்டு வருவோம்னு முடிவெடுத்தேன். அதற்கேற்ப வீட்டில் யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் கிளம்பிவிட்டேன். இதுவரை பயம் காட்டிய இரவு இவ்வளவு சுகமானதா, அருமையானதா என அப்போதுதான் தோன்றியது. உண்மையில் இரவின் அமைதியும் எந்தன் சத்தமும் இணைத்து இன்பமூட்டியது.
இரவிலும் சில போலீசாரிடம் மாட்டி தப்பிப்பதுண்டு. சில பேய்களுக்கு லிப்ட் கொடுத்துண்டு.பல விபத்துகளை வெற்றிகரமாக கடந்ததுண்டு இன்னும் சில கிரைம்களுக்கு யாருக்கும் தெரியாமல் சாட்சியானேன். போலீசுடன் இணைத்து திருடன் பிடித்தேன். நிறைய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இப்போதும் கடக்கிறது. ஆனால் நான் எதையும் முழுசா கவனிப்பதில்லை. இப்போதும் அந்த பழைய நோய் குணமாகவில்லை, பழகிவிட்டது. பேயோ மனிதனோ சராசரியாக பேசி விடுவது. நள்ளிரவு நேரத்தில் ஆபத்பாந்தவனாக சிலருக்கு இருப்பது. இதுவும் நல்லாதான் இருக்கு. முந்தைக்கு எவ்வவளவோ பரவாயில்லை. நெறைய அனுபவங்கள் கிடைக்குது. தொடர்ந்து இவ்வாறு பயணித்தேன். இன்னும் சில இரவு அனுபவங்கள் இன்றியமையாதது. ஆனால் ஒரு நள்ளிரவில் அதிர்ச்சி அறிக்கை அரசாங்கம் வெளியிட்டது. கொரானா கொள்ளை நோய் முற்றிலும் அழிக்கப்பட்டது. பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என மகிழ்வுடன் வெளியிட்டது.
ஆனால் நான் மகிழவில்லை. அதே வேலை அதே சுழற்ச்சி முறை இன்பதுன்பங்கள் வெருப்பளிக்கும் வியாபாரங்கள், அழற்சியூட்டும் அனுபவங்கள் . சரியென்று வீட்டுக்கு பயணிக்கும்போது ஒரு கண்ணீர் அஞ்சலியை முதன்முதலில் உற்று கவனித்தேன். எனக்கு ஒரு சந்தேகம் காதல் கசப்பிலா? மனஅழுத்த தற்கொலையா ? விபத்திலா? இல்ல போலீசில் சிக்கியா? அல்லது திருடனிடம் மாட்டியா? அல்லது பேயிடம் பேசியா? அல்லது கொரானாவாலா? இல்லை எப்படி இறந்தேன்? ஒருவேளை ஆரம்பத்திலிருந்தே பேய்தானா?. அந்த ப்லேக்சில் இருப்பது, ஆமா அது வேற யாருமில்லை நான்தான். அதிர்ச்சியில் மீண்டும் மீண்டும் இறந்தேன், சரி ஓகே, என்ன செய்வது எல்லாம் முடிந்துவிட்டது, ஆனாலும் ஒரு குற்றவுணர்வு, நான் எப்படி இறந்தேன் என்பதை கண்டுபிடித்தே ஆக வேண்டும். இல்லையேல் என் ஆத்மா சாந்தி அடையாது. நண்பர்களே இதோ உங்களிடம் வருகிறேன் சற்று உதவுங்கள்.
“அதிகமா ஆடவும் கூடாது, அதிகமா மூடவும் கூடாது, அதிகமா ஓடவும் கூடாது”
“மனிதனை பார்த்தால் பேயுக்கும், பேயை பார்த்தால் மனிதக்கும் பயம், மனிதனா? பேயா? என தெரியாதவனுக்கு எதை பார்த்தும் பயமில்லை”