கொங்குதேர் வாழ்க்கை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 11,037 
 
 

லைன் வீடுகள் என்று சொல்வார்கள் இங்கு. ஒருவேளை சென்னையின் ஸ்டோர் வீடுகள் இப்படித்தான் இருக்குமோ தெரியவில்லை. முதலில் நீங்கள் நாற்பது அடி அகலமும் அறுபதடி நீளமும் கொண்ட காலிப் புரை இடம் ஒன்றை நினைவில் கொண்டுவரலாம். அதாவது, ஒரு கிரவுண்ட் அல்லது ஐந்தேகால் சென்ட். தெருவில் இருந்து மனையின் அகலப் பக்கத்தின் நடுவில் முன் வாசல். தொடர்ந்து ஐந்து அடி அகலத்தில் பொதுவான நடைபாதை. அதுவே புழங்குமிடம் மொத்த லைனுக்கும். நடக்க, தண்ணீர் கோர, சைக்கிள் அல்லது டி.வி.எஸ். 50 நிறுத்த, ஓடை தள்ளும் கம்பு சாத்த, சீமாறு வைக்க… நடைபாதையின் இருபுற மும் லைன் வீடுகள். பக்கத்துக்கு ஐந்து அல்லது ஆறு. வீட்டுக்காரனின் மனோ தர்மத்துக்கும் மன விசாலத்துக்கும் தகுந்த படி. நடைபாதையில் இருந்து ஒரேயரு படி ஏறினால், நீங்கள் ஒரு லைன் வீட்டுக்குள் ஏறிவிடலாம்.

எடுத்துக்காட்டாக, பக்கத்துக்கு ஐந்து என மொத்தம் லைனுக்குள் பத்து வீடுகள் என வைத்துக்கொண்டால், முன் வாசல் கடந்து நுழைந்தவுடன், நல்ல தண்ணீர்த் தொட்டி ஒன்றும் உப்புத் தண்ணீர் தொட்டி ஒன்றும் சம தளத்துக்குக் கீழே இருக்கும். அதை சம்ப் என்றும் சொல்வார்கள். தெற்குப் பார்த்த வாசல் என்று கொண்டால், நுழைந்தவுடன் இடது கைப்பக்கம் தண்ணீர்த் தொட்டி என்றால், தொடர்ந்து பொதுச் சுவர் வைத்து ஐந்து வீடுகள். நடைபாதையைப் பார்த்து ஒரு கதவும் சன்னலும். வேறு சன்னல்கள் கிடை யாது. வலது கைப் பக்கம் கோடியில் இரண்டு கக்கூஸ், இரண்டு *குளிமுறி. மொத்த லைனுக்கும் மோட்டுக் கூரை போலக் கிடையாது. அடுத்த மனையில் வாரி வெள்ளம் விழக் கூடாது, சன்னல் திறக்கக் கூடாது என்ப தால், நடை பாதையை நோக்கிச் சாய்ந்த கூரைகள். வானத்தை நோக்கியபடி மூடிய நாற்பதுக்கு அறுபது கதவு பாதிக்குப் பாதி யாக உள்நோக்கித் திறந்தது போல். கிட்டத்தட்ட பொரு ளாகிறதா? இங்கொரு வரைபடம் போட்டுக் காட்ட எனக்கு ஆசை தான். பொம்மை போடுவதைவிட அது உகந்ததுதான். எனினும் சாத்தியமில்லை என் பார்கள். பொம்மைக்கு மாற்றுச் சொல்ல இயலுமா?

லைன் வீடு எனில் முதலில் பத்துக்குப் பத்தில் ஓர் முறி. பத்துக்குப் பத்து எனும்போது இடைச் சுவர்களின் கனம் முக்காலடி வீதம் நீள வாக்கிலும் அகலவாக்கிலும் கழித்துக்கொள்ள வேண்டும். அதுவே வரவேற்பறை, ஹால், டைனிங், படுக்கை, பூஜை, விருந்தினர், ஓய்வு அறைகள். எப்பெயரிலும் அழைக்கலாம். எந்தப் பெயரிட்டு அழைத்தாலும், இறைவன் ஏகன்தானே!

அடுத்தது பத்துக்கு ஏழில். வீட்டின் ஒரு மூலையில் சமையலறை யும் அதில் இன்னொரு மூலையில் *மோரி, அல்லது அங்ஙணம்! ஙப்போல் வளை. அதில் பாத்திரங் களைப் போட்டு கழுவலாம். சுவரில் தொங்கிய கண்ணாடி பார்த்து முகம் வழிக்கலாம். பல் தேய்த்து, வாய் கொப்பளித்து முகம் கழுவலாம். சாப்பிட்டுக் கை கழுவலாம். மீன் முள் தொண்டையில் நின்றால், காறிக்காறித் துப்பலாம். இரவு நேரங்களில் ஒன்றுக்குப் போகலாம். உட்கார்ந்து துணி அலசலாம்.

சமையல் மேடைக்கும் அங்ஙணத் துக்கும் நடுவில் ஒரு சிமென்ட் தொட்டி, மூடியுடன். அல்லது செல்வாக்குடைய குடித்தனக்காரர் எனில் டிரம். பக்கத்தில் குடிதண்ணீர் நிறைந்த பித்தளை அல்லது செம்பு அல்லது கறுக்காத இரும்பு அண்டாக்கள். பிளாஸ்டிக் குடங்கள், பிளாஸ்டிக் பக்கெட், அலுமினிய வாளி, கக்கூஸ§க்குத் தண்ணீர் கொண்டு போகும் சின்ன வாளி. வெந்நீர் போட அலுமினியக் குண்டான். அடுப்புக்குப் பக்கவாட்டில் சற்று உயரமாக ஒரு ஸ்டாண்ட். அதில் தட்டுகள், கரண்டிகள், டம்ளர்கள், கிண்ணங் கள், சின்ன டப்பாக்கள், பாட்டில்கள். சுவரோடு சேர்ந்து ஒரு ஷெல்ஃப். அதில் மல்லி, மிளகாய், மஞ்சள் பொடி, சீரகம், கடுகு, உப்பு, குருமிளகு, உளுந்தப் பருப்பு, துவரம் பருப்பு, அரிசி, சீனி, தேத்தூள், கோதுமை மாவு…

அடுப்பு மேடைக்குக் கீழே வெங்காயம், உருளைக் கிழங்கு, பூண்டு கிடக்கும் கூடை, காய்கறிக் கூடை, அரிவாள்மணை, *திருவலைக்குத்தி, முறம் எனும் சுளவு. பிரம்புக் கூடை, குக்கர், மிக்ஸி, சமையல் பாத்திரங்கள், இட்லிக் குட்டுவம், உட்காரும் மணை.

முன்னறையில் ஒற்றைக் கட்டில், சிறிய மேசை, அதன் மேல் டி.வி. அல்லது டேப் அல்லது டிரான்சிஸ்டர். கட்டிலின் கீழே சுருட்டிய படுக்கை, இடுப்பளவு அல்லது முக்கால் சைஸ் பீரோ…

கணவன், மனைவி, இரண்டு குழந்தை கள் எனும் எண்ணத்துக்கு உள்ளே இருந்தால் மட்டுமே வாடகைக்குக் கிடைக்கும். இரண்டு குழந்தைகளுக்கு மேலே இருந்தால் வீடு கொடுப்பதில்லை என்பதில் அரசாங்கத்தைவிடக் கெடு பிடியாக இருந்தனர் வீட்டுக் காரர்கள். வாடகைக்கு வரும் போது குடிவருவோரின் மொத்த எண்ணிக்கை நாலுக்குள்தான் என்றாலும், உத்தேசமாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் இறந்துபோகலாம் என்று எண்ணத்தக்க வயதான பெற்றோர் இருந்தாலும் லைன் வீடுகள் வாடகைக்குத் தரப்பட மாட்டா.

இதற்குள் எப்படி ஐயா நான்கு பேர் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாழ முடியும் என்ற வினா கிளைத்துப் பெருகுகிற வாசக அன்பர்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். மும்பை தாராவியில், கோவன்டியில், சுன்னா பட்டியில், மான்கூர்டில், கோலிவாடா வில் இந்த லைன் வீட்டை மூன்றாகப் பிரித்து வீட்டுக்கு எட்டுப் பேர் ஆணும் பெண்ணுமாய், குழந்தையும் முதிய வருமாய், தாயும் பிள்ளையுமாய் பிழைத்து வாழ்வார்கள். மனசிருந்தால் புளியிலையில்கூட மூன்று பேர் புரண்டு படுக்கலாம்.

பெரிய பூட்ஸ் ஒன்றினுள் குடித் தனம் நடத்திய கதை ஒன்று நம்மிடம் ஏற்கெனவே உண்டு. உடம்பாடு இலாதார் வாழ்க்கைதான் குடங்களுள் பாம்பொடு உறைந்தற்று!

லைன் வீட்டுக்காரர்கள் என்னதான் முன்னூற்று அறுபத்தாறு பிரிவுகளும் உபபிரிவுகளும் துணைப் பிரிவுகளும் பிற்சேர்க்கைகளும் கொண்ட வாடகைக் குடியுரிமைச் சட்டங்கள் செய்தாலும், உச்சநீதி மன்றத்தின் துணைகொண்டு தம்பதியர் புணர்ந் தனர், கர்ப்பமுற்றாள், குழந்தை ஈன்றாள், பிறந்த நாள் கொண்டாடினர், நோயுற்றனர், நோய் நீங்கினர், மரண முற்றனர், விருந்தினர் வந்தனர், பெண் குழந்தைகள் சமைந்தன, லைனுக்குள் சண்டை இட்டனர், சமாதானம் ஆயினர், தக்காளியும் தோசை மாவும் கடன் கொடுத்தனர், கிண்ணத்தில் மீன் குழம்பு விநியோகம் ஆனது, பிள்ளைத் தாய்ச்சிக்கு கஷாயம் செய்து கிண்ணத்தின் மேல் கிண்ணம் வைத்து மூடிக் கொடுத்தனர். எல்லாம் இன்ப மயம்.

நான் குடியிருக்கும் வீட்டின் எதிர் முகத் திலும் பக்கவாடுகளிலும் ஏழெட்டு லைன்கள் இருந்தன. நான் இருப்பதும் ஏகதேச உருவக மாக லைன் வீடுதான். எனினும் முதல் மாடியில் தனிப் பங்கு. எழுத, படிக்க, பாட்டுக் கேட்க, உறங்க, உரையாட மன மில்லாதபோது வெளி வராந்தாவில் போய் நிற்பேன். சட்டைகூடப் போடாமல், மன்னர்கள் உப்பரிகையில் நின்று குடிபடைகளைப் பார்வை இடும் தோரணையில். எழுத்தாளன் என்பதால் அக்கம்பக்கத்தில் யாரோடும் உரையாடும் வழக்கம் இல்லை. இந்த பதினான்கு ஆண்டு லைன் வாசத்தில் சிலர் மட்டும் அபூர்வமாக எனது மோனோலிசா புன்னகை பெற்ற பாக்கியவான்கள்.

முதல் மாடி வராந்தாவில் நின்று வேடிக்கை பார்ப்பவனை எந்தக் கதாபாத்திரமும் பொருட்படுத்துவது மில்லை. வேடிக்கை பார்ப்பேன் என்று நான் சொல்வதை எனது மனைசாட்சி வாய் பார்ப்பேன் என்று சொல்வாள். வேடிக்கை பார்ப்பதற்கு குறிப்பாக எந்த சுவாரசியமும் இன்றி பொழுது போகாமல் நின்று பொதுவாகப் பார்ப்பது என்று அகராதிகள் கூறும். வாய் பார்ப்பது என்பது ‘வாய் நோக்கி’ எனும் மலையாள வேர்ச்சொல்லில் இருந்து கிளைப்பது. இச்சையுடன் *அலவலாதித்தனத்துடன், குறிப்பாகப் பெண்களை மட்டும் பார்ப்பது என்று பொருள். இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.

ஏழைக்கேத்த எள்ளுருண்டையாக பக்கத்தில் கல்யாண மண்டபம் ஒன்றுண்டு. நான் குடியிருக்கும் வீட்டின் மொட்டை மாடியில் நின்றால் கெட்டிமேளம் சத்தம் கேட்கும். காற்று தென்கிழக்கிலிருந்து வீசினால் ஆக்குப் புரையிலிருந்து வரும் குருமா வாசனை யும், சமயங்களில் மலிந்த நாட்களில் மல்லிகைப் பூ வாசனையும்.

நேரங்கெட்ட நேரங்களில் பிண ஊர்வலங்கள் போகும். கிருஷ்ணா புரம் மேட்டுச் சுடுகாடும் இடுகாடும், கால் நடக்கும் தூரம்தான். இரவு பதினோரு மணி முதல் காலை மூன்று மணி வரை இங்கெல்லாம் காடு அடைப்பு… அடைப்பு என்பது கேட் சாத்துவதல்ல. எங்களூரில் சூரிய அஸ்தமனம் ஆகிவிட்டால், மறுநாள் சூரியோதயம் வரை பிணம் எடுப்பதில்லை.

பிணந் தூக்கிப் போம்போது உதிரிப் பூக்களும், பொரியும், சில்லறைக் காசுகளும் வீசிக்கொண்டு போவார்கள். சனிக் கிழமைகள் எனில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டு உயிருள்ள ‘சிக்கன் அறுபத்தைந்து’ ஒன்று போகும்… என்ன நடக்கிறதென்று தெரியாமல், பாடையில் கட்டப்பட்டு தெய்வத்தா லும் ஆகாது, முயற்சியும் மெய்வருத்தக் கூலி தராது எனும் அறிவில்லாமல்.

அவ்விதம் பிணம் போனதொரு நாளில், ஆரம்பப் பள்ளியில் இருந்து திரும்பிய என் மகன் கை நிறையச் சில்லறை களோடு வந்தான். ‘ரோட்ல நெறய சில்லறை களைஞ்சு கெடச்சு’ என்று உற்சாகமாகக் கூவியபடி.

தெருமுனையில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் இருந்து கல்யாண மண்டபத் துக்கு அதிகாலை களிலும் முன் மாலை களிலும் மாப்பிள்ளை அழைத்துப் போகும்; மண்டபத்தில் பூப்புப் புனித நீராட்டு விழாக் கள் எனில், சீர் எடுத்துப்போவார்கள். சுவிசேஷ எழுப்புதல் கூட்டங்கள் நடக்கும். சில சமயம் தொடர்ந்து ஐந்தாறு நாட்கள். ஆங்கிலத்திலும், மொழி பெயர்த்த தமிழிலும் இறை வனைக் கர்ஜித்து எழுப்பிக் கொண்டிருப்பார்கள். அல்லது, பெருங்குரலில் இந்து சமய சொற்பொழி வாற்றிக்கொண்டு இருப்பார்கள். அவனை எழுப்பீரோ? அவன்தான் ஊமையோ, அன்றிச் செவிடோ? அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டானோ?

அரவான் பண்டிகைக் காலங்களில் அம்மனுக்கு நோன்பு சாட்டப்பட்டி ருக்கும்போது குழுவாய் நின்றும் சுவடு வைத்தும், பறை அடிக்கும்போது லயமுண்ட கால்கள் தன்னுணர்வின்றித் தாளமிட, கை கட்டி நின்று பார்க்கலாம்.

நம் வாழ்வில் காணா சமத்துவம் உலாவும் இடங்கள் லைன் வீடுகள். லைனில் மலையாளி கள், தெலுங்கர்கள், கன்னடர்கள், அவர் களுக்குள் கிறித்துவர், இஸ்லாமியர், சர்வ சாதி இந்துக்கள் இருப்பார்கள். வீட்டு உரிமையாளர்கள் கொங்கு வேளாளக் கவுண்டர்கள், நாயக் கர்கள், தேவர்கள், தென்னாட்டு நாடார் கள். ஆனாலும், மத இனப் பாகுபாடுகள் அறியப்படுவதில்லை. வாடகைகூட அவரவர் தோதுப் போல, முதல் தேதி முதல் இருபத்தொன்பதாம் தேதி வரை தரலாம். இரண்டு மாதங்களுக்கு மேல் பாக்கி என்றால்தான் பனிப்போர், பயங்கரவாதம்& கரன்ட், தண்ணீர் நிறுத்தம், எரியும் அடுப்பில் தண்ணீர் ஊற்றுதல், உறங்கி விழிக்கு முன் ஆட்களை உள்ளே வைத்து வெளிக் கதவைப் பூட்டுதல், கேளவொண்ணா சொற்பிரயோகம், பிற குடியினர் பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொள்ள நிர்ப்பந்திப்பது என எத்தனை ஆயுதங்கள் இல்லை? வீட்டு உரிமை யாளரும் லைன் வீடுகளில் ஒன்றில் குடியிருக்க நேர்வதுண்டு. சில சமயம் அது தவப் பயன். பல சமயங்களில் அது இடர்.

நிரந்தரமான வீடு தேடலில் இருப் பார்கள் போலும் நகரத்து மக்கள். முன் இரவுகளில் ஏகதேசமாய் ஒரு கைவண்டியில் அல்லது காங்கேயம் காளை கட்டிய ஒற்றைக் காளை வண்டியில் வந்திறங்கும் சமான்கள். ஏகதேசமாய் ஒரு கைவண்டியில் ஏற்றியும் போவார்கள், வீட்டுச் சாமான் களை. பிரிதொரு நாள் பக்கத்துத் தெருவில் பகல் பத்து மணிக்குப் பல் தேய்த்தவாறு, பேஸ்ட் சாறு வழிய, ‘‘நல்லாருக்கீங்களா?’’ என்பார்கள். மாற்றி மாற்றி ஐந்தாறு தெருக்களுக்குள் இருபத்தைந்து ஆண்டுகளைச் செலுத்தியவர்களும் உண்டு.

எல்லாம் அக்கரைக்கு இக்கரை பச்சை. அலகிலா விளையாட்டுடைய வாழ்க்கை.

மழலை பேசிக்கொண்டு ஐஸ் கட்டி கேட்க வரும் ரோஸி, சமைந்த குமரியாகி விட்டாள். உறைக்குத் தயிர் கேட்டு வந்த சிறுமி சஃபீனாவின் மகளுக்கு இன்று ஒன்றரை வயதாகிறது. எதிர் லைனில் இருந்து கை காட்டுகிறது. நான் குடிவந்த பிறகு பக்கத்து லைனில் நான்கு வயசாளிகளின் மரணமும் ஒரு அகால மரணமும் நடந்து விட்டன. பிரைமரியில் வாசித்துக் கொண்டிருந்தவள் பெங்களூருக்கு வேலைக்குப் போய்விட்டாள். அடுத்தவன் பெண் டாட்டியைக் கூட்டிக் கொண்டு ஓடிப் போதல், பருவத்தின் உடன்போக்கு பற்றிய தகவல்கள் தவிர்க்கப் படுகின்றன.

சில சமயம், குடி வந்து பன்னாட்கள் சென்ற பிறகுதான் புதிதாகக் குடிவந்தவர் போலும் என்று சில முகங்கள் அறிவிக்கும். பால்காரர், தச்சு வேலை செய்பவர், எலெக்ட்ரீஷியன், போட்டோ ஃபிரேம் செய்பவர், பாய் விற்பவர், கைவண்டி யில் செருப்பு வைத்து விற்பவர், வசந்தா மில் பிரிவில் பீஃப் பிரியாணி வண்டி நிறுத்துபவர், தேங்காய்ப் பால், பருத்திப் பால், சுக்குக் காபி, பழ வண்டி, வாழைப்பூ& வாழைத் தண்டு, மரவள்ளி வியாபாரிகள், நகரத்துக் கனவான்களுக்குக் காரோட்டுபவர், பாத்திரம் தேய்க்கும், துணி துவைக்கும், சமைக்கும், குழந்தைகளைப் பராமரிக்கும், நோயாளிகளுக்குப் பணிவிடை செய்யும் ஆயாக்கள்…

ஒரு நாள் முன்னிரவு கடந்து, சாப்பாட்டுக் கடை ஒதுங்கி, அன்றைய சீரியல்களின் நாயக& நாயகிகள் தம் கடைசிச் சொட்டு கண்ணீர்த் துளிகளை எம்வீட்டு முன்னறையில் சிந்திச் சீரழித்துவிட்டு அரிதாரம் கலைத்தபோது& கம்பீர மாக எழுந்தது மிகச் சமீபத்தில் இருந்து அந்த நாதசுர ஓசை. ஏதும் மாப்பிள்ளை அழைப்பு சமாசார மாக இருக்கும் என்றெண்ணிப் பொருட்படுத்தத் தலைப்படவில்லை.

சற்று இடைவெளி விட்டு மறுபடியும் நாதசுர ஓசை. தவில் தட்டும் ஓசை இல்லை. வேறு தோல் வாத்தி யங்களோ, ஜால்ராவோ இல்லை. ஒற்றை நாதசுரம் மட்டும் எடுப்பான முழக்கமாக…

‘சக்கனி ராஜ மார்கமு துண்டக

ஸந்துல தூரநேவ ஓ மனஸா’

ஓ மனமே! ராமனின் பக்தி எனும் ராஜவீதியை விட்டு வெறுக்கத்தக்க சந்துகளில் நுழைவானேன்.

தியாகய்யரின் கரகரப்ரியா ராக கீர்த்தனை. துல்லியமான ஸ்வர சஞ்சாரங்களுடன். இரண்டு வரி மட்டும். சற்று இடைவெளி… மீண்டும் சக்கனி ராஜமார்கமு. சாதாரணமாக பெண் அல்லது மாப்பிள்ளை அழைப்புக்கு எமது தெருவில் வாசித்துப் போவோர் நாதசுரத்தை வைத்துக்கொண்டு நூதனமாகக் காதைச் சொறிந்துவிட்டுப் போவார்கள். தவிலின் இரண்டு தட்டுக்கள் கேட்கும். சாயம் போய்க் கிழிந்து நைந்த துணி போல் ஏதோ ஒரு கீர்த்தனையின் முதலடி தெருவில் அநாதையாகக் கிடக்கும். பிணத்துக்கு இறைக்கப்பட்ட உதிரிப் பூக்கள் போலக் கேட்பாரற்று.

இது அதுவல்ல. சங்கதி சுத்தமானதாக…

ஆனால், தொடர்ந்து மூச்சுப்பிடிக்க சிரமப்படுவதைப் போலத் தெரிந்தது. எழுந்து போய்த் தெருவை எட்டிப் பார்த்தேன். எதிர் வரிசையில் வாசற்படித் திண்டில் உட்கார்ந்து கொண்டு வயசாளி ஒருவர், காலையில் உதிக்க இருக்கும் சூரியனின் திசை நோக்கி நாதசுரக் குழலை உயர்த்தி, முறையிடுவதைப் போல வாசித்துக் கொண்டிருந்தார். நல்ல நிலவொளியும், தேர்தல் எதிர்பார்ப்பால் மாநகராட்சி மஞ்சள் விளக்கொளியும்.

*கரண்டைக்கு மேல் உயர்ந்திருந்த வேட்டி அரைக்கை பனியன் போல, வயிற்றுப் பக்கம் பை வைத்துத் தைக்கப்பட்ட காடாத்துணி சட்டை. கழுத்தில் சிறு உருத்திராக்கங்கள் கோத்த மாலை. ஸ்படிக மணிமாலை, பக்கத்தில் வெள்ளி போல மினுங்கிய வெற்றிலைச் செல்லம்.

உறக்கம் பிடிக்காதவர்கள், உறக்கம் கலைந்தவர்கள், பக்கத்து கடைக்கார அண்ணாச்சிகள் (அவர்கள் இரவு பதினொன்றரைக்கு கடை அடைத்து காலை நாலரைக்குக் கடை திறப்பவர் கள்) எல்லோரும் அவரவர் லைன் வாசல்களில் இருந்து எட்டிப் பார்த் தார்கள். பத்துப் பதினைந்து பேர். மறுபடியும் மூச்சு வாங்கிக்கொண்டு ‘சக்கனி ராஜ மார்கமு’ முதல் இரண்டு வரிகள். சற்று இளைப்பாறல், மீண்டும் நாதசுரம்…

எதிர்த்த லைனில் சமீபத்தில் கணவனும் மனைவியுமாகக் குடிவந்த வயசாளிகள். பக்கத்துத் தெருவில் வேறேதும் லைனில் மகனோ மகளோ இருப்பார்கள் போலும். கூட வைத்துக் கொள்ள வசதிப்படாத காரணங்கள் இருக்கும். உறுப்பினர் எண்ணிக்கை நான்கைக் கடந்த காரணமாகவும் இருக்கலாம். முதுமையின் சுமை கூனலாகவும் வாதமாகவும் செவியின் சேதமாகவும் கனத்துக்கொண்டு இருந்தது. பல சமயம் மகள்தான் வந்து, வீடு தூத்து வாரி, துவைத்துக் கொடுத்து, சமைத்தும் வைத்துவிட்டுப் போவாள். சில சமயம் தெரு முனையில் இருந்த கொங்கு மெஸ்ஸில் நான்கு இட்லிகள் தின்றுவிட்டு வீட்டுக்காரிக்கும் நான்கு இட்லிகள் பொட்டலம் வாங்கிப் போவார். சில சமயம் கையில் இரண்டு பொட்டலம் லெமன் ரைஸ் இருக்கும். எலுமிச்சைச் சோறு என்று சொன்னால், நாக்கு அழுகிப்போகும் நமக்கு.

நான் அலுவலகம் போய்க்கொண்டி ருந்த நாட்களில், லைன் வீட்டு வெளி முகப்பில், இரு பக்கத் திண்டுகளிலும் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். முன்னிரவில் திரும்பி வரும்போதும் நான் பார்த்துக்கொண்டு வேக மாகப் போய்விடுவேன்.

முதுமை எப்போதுமே அச்சுறுத்துவது. ஆசைப் பட்டு அவனவன் கட்டிய மூட்டை. அவனவன்தான் சுமந்து திரிய வேண்டும்.

நான் சிந்துபாத் எனில், முதுமை முதுகில் ஏறி உட்கார்ந்து அடம் பிடிக்கும் கிழவன் இறங்கவே மாட்டான். சுமந்துதான் நடக்க வேண்டும்.

வீட்டுக்குள் கால் சறுக்கி விழுந்த கிழவி மருத்துவமனை போய்த் திரும்பி இரண்டு நாட்களே உயிர் வாழ்ந்தாள். பாலும் முடிந்து, நேற்று கருப்பும் முடிந்திருந்தது. பிரிவெனும் கொடுங் காற்று அலைக்கழித்துக்கொண்டு இருந்தது பெரியவரை. தனிமை புகையேற்றப்பட்டு அரவப் புடைபோல மூச்சு முட்டச் செய்திருக்கலாம்.

ஆனகாலத்தில் மங்கல வீடுகளிலும் பட்டீஸ்வரர், புற்றிடங்கொண்ட ஈசன், ஈச்சனாரி விநாயகன், மருதமலை முருகன், அனுபாவி சுப்ரமணியன், குருந்தமலைக் குமரன், உலகளந்த பெருமான், காரமடை ரங்கநாதன், வெள்ளியங்கிரி அடிவாரத்துப் பூண்டி பிரான், திருமுருகன் பூண்டி, செஞ்சேரிமலை சந்நிதிகளிலும் ஊதிஊதி ஓய்ந்து போயிருக்கலாம்.

அடுத்த தெருவிலிருந்து அவசரமாக ஓடிவந்த மகள் நாதசுரத்தைப் பிடுங்கிக்கொண்டு போய் உள்ளே வைத்தாள். பார்த்துக்கொண்டு நின்ற வர்களிடம் சிரிப்பாணி பெருவெள்ளமாய் பொங்கியது. பெரியவர் வீட்டுக்குள் லம்பி லம்பி நடந்து போய் மீண்டும் நாத சுரத்தை எடுத்து வந்தார். மிகுந்த லயத் துடன், ‘சக்கனி ராஜ மார்கமு…’ இரண்டு வரிகள்.

‘‘காலம்பற வாசிக்க லாம் வா… எல்லாரும் ஒறங்காண்டாமா…’’ மகளுடன் ஒரு இழுபறி. நாதசுரத்தைத் தராதபோது சீவாளியைப் பிடுங்கி வைத்துக்கொண்டாள்.

பெரியவர் கரகரத்த குரலில் ஏதோ இரைந்தார், அதட்டினார், சத்தம் போட்டார். ‘‘ஒருக்க வாசிச்சுட்டுத் தந்திரணும்’’ என்று சொல்லி, சீவாளியை எறியாத குறையாக வீசினாள்.

பெரியவர் சீவாளியைப் பொருத்தி, ‘‘பீ…பீ…’’ என்று ஓசையும் சுரமும் பார்த்து, மறுபடியும் இரண்டு வரிகள், ‘‘சக்கனி ராஜ மார்கமு…’’

ஒற்றை நாயனத்தின் குரல் லயம் பிசகாமல் ஓங்கி ஒலிப்பதும், மூச்சு வாங்குவதும், மீண்டும் வாசிப்பதும்…

அக்கம்பக்கத்தில் விழித்து வேடிக்கை பார்த்தவர்கள் தமக்குள் சிரிப்பாகவும் இளக்காரமாகவும் குதூகலமாகவும் உரையாடிக்கொண்டு இருந்தார்கள்.

எனக்கு அவமானமாக இருந்தது.அழுகையழுகையாக வந்தது.

‘தெலிய லேரு ராம பக்தி மார்கமுனு’ எனும் தேநுக ராக தியாகய்யர் கீர்த்தனை சம்பந்தமில்லாமல் ஞாபகம் வந்தது.

‘காலையிலெழுந்து நீராடி, விபூதியணிந்து, ஜபம் செய்வது போல் விரல்களை எண்ணி, நல்லவர்களைப் போல் நடித்து, பணம் சேர்ப்பதில் ஆசை கொண்டு, இங்குமங்கும் திரிந்து, கனவு காண்கிறார்களே தவிர, இந்த ஜனங்கள்…தியாகராஜனால் வணங்கப் பட்ட ஸ்ரீராமனே, உன்னிடத்தில் பக்தி என்ற சன்மார்க்கத்தைத் தெரிந்து கொள்ளவில்லையே!’

பிடுங்காத குறையாக நாதசுரம் பறிபோயிற்று. வாசற்படி திண்டில் லயத்தை, தாளத்தைத் தொலைத்தவர் போல், இசை ஞான ரூபத்தைக் களைந்தவர் போல், சுரத்தை பணயம் வைத்துத் திருப்ப முடியாதவர் போல, நெடு நேரம் தலைகுனிந்து உட்கார்ந்து கொண்டு இருந்தார். இனிமேல் பழமோ, சிகரெட்டோ, பாக்குத்தூளோ விற்காது என சுவாரசியம் குன்றிப்போன அண்ணாச்சிகள் கடை அடைக்க முற்பட்டனர். லைன் வீட்டுக்காரர்கள் படுக்கப் போனார்கள். அவர்களுக்கு இருக்கிறது காலையில் பாடுகள்.

நிலவுக்குத் துணையாக சற்று நேரம் மாடி வராந்தாவில் நின்றுகொண்டு இருந்தேன்.

பிறகென்ன? இன்று வரை மறுபடியும் அந்தக் கிழவரின் நாதசுர ஓசை கேட்கவே இல்லை.

கடைக்கே வைத்துவிட்டார்களோ! காணாமற் போக்கிவிட்டார்களோ? விறகாகத்தான் போயிற்றோ?

பெரியவர் இன்னும் பகற்பொழுது களில் ஒரு காலைக் கிந்திக் கிந்தி நடந்துகொண்டு இருக்கிறார். நாதசுரத் தைப் போல அவருக்கும் க்ஷீண தசைதான் போலிருக்கிறது.

ஓவியம்: ஆதிமூலம்

– ஏப்ரல் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *