கேள்விகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 4, 2013
பார்வையிட்டோர்: 9,590 
 

ஆனையிறவுப் பெருவெளியைக் கடக்கின்ற போதெல்லாம் மேனி சிலிர்த்துப் போவதென்னவோ உண்மைதான். ‘ஆனையிறவுக்கு சேலைகள் கட்டி ஆனந்தம் பாடுங்கடி..” மோட்டார் சைக்கிளை ஓட்டிய நகுலன் சத்தம் போட்டு பாடினான். அற்புதமான குரல் அவனுக்கு.. நேற்று இரவு முழுதும் அவனது பாட்டுக்கச்சேரியுடன் தான் கழிந்தது.

‘கவனமடா.. பாத்துப்போ..” பின்னாலிருந்து சொன்ன எனக்கு லேசான பயமிருந்தது. கரை முழுவதும் மிதிவெடி கவனம் அறிவிப்புக்கள்.

‘ஒல்லாந்தர், வெள்ளைக்காரன், சிங்களவன்,இந்தியன் எண்டு ஒரு முன்னு}று வருஷம் அந்நிய ஆதிக்கத்தில கிடந்த நிலம் இது.. இதுக்காக நாங்கள் கொடுத்த உயிர் விலை முவாயிரத்துக்கும் மேலை..”

பக்கவாட்டாக வீசிய காற்று என் காதுகளில் ‘இர்…” என்று இரைந்து கொண்டிருந்ததால் அவன் குரலை உயர்த்தியே சொல்ல வேண்டியிருந்தது.நான் அமைதியானேன். கிட்டத்தட்ட மூன்று வருசத்துக்கு முதல் இதே வீதிகளில் இரவுகளில் அவர்கள் உலவியிருப்பார்கள். காயம் வழி குருதி வழிந்தோட கிடந்திருப்பார்கள். உயிர் பிரிந்திருப்பார்கள். அவர்களின் சுவாசப்பையை தொட்டு வந்த காற்று இந்தப்பெரு வெளியில் உலவக்கூடும்.

நகுலன் மோட்டர்சைக்கிளை மெதுவாக்கி ஓரமாக்கினான். டொல்பின் வாகனமொன்றில் ‘காய் கூய்” என்று கத்தி கை தட்டிப்பாடி, இளைஞர் கோஷ்டியொன்று எங்களைக் கடந்து எதிர்த்திசையில் சென்றது. சற்று முன்னர் நாங்கள் கடந்த ஆனையிறவு வரவேற்புப் பலகை முன்பாகவோ அல்லது தகர்க்கப்பட்டுக் கிடந்த இராணுவ டாங்கி முன்பாகவோ இறங்கி நின்று அவர்கள் படமெடுத்துக்கொள்ளக் கூடும்.

‘டேய்.. அந்தப் பள்ளிக்குடத்தின்ரை பேர் என்ன..? ” வரும் வழியில் இயக்கச்சிக்கு பிரியும் வழியில் இருந்த அந்த பள்ளிக்கூடத்தைப் பற்றி நான் கேட்டேன். ஒன்றிரண்டு மரநிழல்கள் தான். அவற்றின் கீழ் பிள்ளைகள் அமர்ந்திருந்தார்கள். பெயர்ப்பலகை கூட இல்லை எப்பிடியும் ஒரு பத்து பன்னிரண்டு வயசுக்குள்ளை தான் எல்லோருக்கும் இருக்கும். மோட்டர் சைக்கிளை நிறுத்தச் சொல்லி விட்டு நான் இறங்கிக்கொண்டேன். மர நிழல் இடம் பெயர்ந்து கொண்டேயிருக்கும். அவர்களும் இடம் பெயர வேண்டியிருக்கும். எப்பிடியும் உச்சி வெயில் தலையைப் பிளக்கும்.

‘என்ன.. இங்கை நிறைய பள்ளிக்குடங்கள் இப்படித்தான்.. கட்டடிடங்களெல்லாம் சிதைஞ்சு போச்சு.. கட்டித்தருவாரும் இல்லை. கணக்கெடுப்பாரும் இல்லை..அதுக்காக.. விடமுடியுமே..? ” நகுலனின் வார்த்தைகளில் நம்பிக்கை இருந்தது.

‘நகுலா.. அந்தப் பள்ளிக்குடத்தின்ரை பெயர் என்னண்டு கேட்டன்.”

‘ஓ.. அந்த இயக்கச்சிப் பள்ளிக்குடமோ.. தெரியேல்லையடா.. வேணுமெண்டால் வரேக்கை கேட்பம்” என்றவன் ‘இல்லை கேட்க முடியாது” என்றான்.

‘ஏன்..”

‘பின்னேரம் அந்தப் பள்ளிக்குடம் இருக்காது. நாளைக்கு காலமை தான் இருக்கும்..”.
உண்மைதான். மாலையில் அங்கு ஒரு பள்ளிக்கூடம் இருந்ததென்று அடையாளமே தெரியாமலிருக்கும். பரந்தன் சந்திக்கு வந்தோம். எனக்கு கால் விறைத்திருந்தது. ‘நகுலன்.. கொஞ்ச நேரம் நிப்பாட்டு.. கால் விறைச்சுப் போச்சு.. ” நகுலன் நிறுத்தினான்.

‘சங்கீதா எங்கை நிற்பாள்..? வீட்டிலயா.. அல்லது..?”

‘ரண்டிடத்திலயும் போய்ப்பாப்பம். சரி ஏறு..” நான் ஏறி உட்கார்ந்து கொண்டேன்.

‘சங்கீதாவை எப்பிடித்தெரியும்..?” நான் அவனுக்கு பதில் சொல்ல வில்லை. அவனும் திருப்பிக் கேட்கவில்லை.

சங்கீதாவிற்கு முழங்காலுக்கு கீழே ஒரு கால் துண்டிக்கப்பட்டு செயற்கைக்கால் பொருத்தப்பட்டிருந்ததை முதல் சந்திப்பிலேயே நான் புரிந்து கொண்டேன். ஆனாலும் படு இயல்பாக ஊன்று கோலுடன் அவள் நடப்பதும், சில சமயங்களில் ஓடுவதும், கால் மேல் கால் போட்டுக்கொள்வதும்.. எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஒரு வேளை மனசுக்குள்ளே வலியிருக்குமோ..? ஆறேழு மாதங்களுக்கு முதல் ஏதோவொரு நிகழ்வில் எங்கேயிருந்து வாறியள் என்று அவள் கேட்டபோது தான் அவள் அறிமுகமானாள். பதில் சொன்னபோதே அவள் முகத்தில் ஏதோ ஒரு ஏளனம் தோன்றியது உடனடியாகத் தெரிந்தது. அதனை நேரடியாகச்சொல்லும் வரை காரணம் கேட்க முடியவில்லை. அன்று மாலை வந்து அழைத்த போது கேட்க முடிந்தது.

“தமிழ் வளக்கிறவரே.. ரீ குடிக்க வாங்கோ..” எழுந்து போகும் போதே கேட்டேன். “அதென்ன தமிழ் வளர்க்கிறவர் எண்டு நக்கலாய்….?”

“தமிழைச்சாகவிடாமல் வளக்கிறது நாங்கள் தான் எண்டு மூச்சுக்கு முன்னூறு தடைவ சொல்லுறது நீங்கள் தானே…..நீங்கள் எண்டால் நீங்கள் இல்லை..உங்களைச் சார்ந்த பிரதேசம், சூழல்..இதெல்லாம் தான்..”

உண்மைதான் என்று தோன்றியது எனக்கு. ஆனாலும்… அதெப்படி ஒரு பெண்ணிடம் தர்க்க ரீதியாய் நான் தோற்கக்கூடும் என்கின்ற எனக்குள்ளிருந்த ஆண் வர்க்க சிந்தனை அடுத்த கேள்வியைக்கேட்டது.

“அப்படி வளர்க்கிறதிலை என்ன பிழை.”

“ஒண்டு சொன்னா பிழையா நினைக்கக்கூடாது. தமிழை வளக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு..? என்ன உரிமை இருக்கு..?தமிழ் எண்டுறது வெறும் மொழி மட்டுமில்லை. அது சார்ந்த இனம் பண்பாடு பொருளாதாரம் அரசியல் எல்லாம் தான்.. நீங்கள் என்னத்தை வளர்த்திருக்கிறியள்..? ”

இதுநாள் வரை எனக்குள்ளேயே பொங்கி எழுந்த கேள்விகள் தான் அவை. இப்போது இன்னொருவரிடமிருந்து வந்தது. வெளியே சொல்லாது உள்ளுக்குள்ளேயே எண்ணிக்கொண்டேன். ‘சரியான வாய்க்காரி..’ அதற்கடுத்த அடுத்த நாட்களில் அவள் எழுதிய சில கவிதைகளைப் படிக்க நேர்ந்தது. ஒரு கொப்பி முழுதும் எழுதப்பட்ட கவிதைகளை அவளே கொடுத்தாள். ஒரு காலையில் ஓரமாயிருந்து புரட்டிக்கொண்டிருந்தபோது நடந்து வந்து முன்னால் அமர்ந்து கொண்டாள்.

தெருப்புழுதியில்
கந்தகம் மட்டுமே
கரைந்திருந்தது..
குழந்தைகளின் கூக்குரல்களே
காற்றலைகளை
நிறைத்திருந்திருந்தன

“என்ன கவிதைக்குள்ளை எதுகை மோனையை தேடுறியள் போலை கிடக்கு.. அதெல்லாம் கிடைக்காது…. எங்கடை கவிஞர் சொன்னது போல உள்ளே கொதிப்புறும் உலைமுகத்தின் வாய்மொழியில் புனைவுகள் இருக்காது. பொய்யான வேஷங்கள் இருக்காது. அது மாதிரித்தான் இதுவும்.. அதைவிட்டிட்டு சும்மா விழ விழ எழு எழு எண்டு வழ வழாவெண்டு எழுத எனக்கு தெரியாது. அப்படி எழுதுறாக்களுக்கு ஒரு பெயர் சொல்லட்டே.. சொல்லடுக்குக் கொத்தனார்கள். கவிதைக்கான வார்த்தைகளை தேடுவதிலேயே சொல்ல வந்த பொருளை மறந்து போகின்றவர்கள்..” அவள் சொன்ன எதுவுமே எனக்கு புதிய விடயமாகத்தெரியவில்லை. ஆனாலும் கேட்டுக்கொண்டிருந்தேன்.

‘எங்கடை மண்ணிலை இருந்து எழுதுற எத்தனை பேரை உங்களுக்கு தெரியும்..” அது வரை பேசிக்கொண்டிருந்த விடயத்திற்கு தொடர்பில்லாமல் கேட்டவள் மீண்டும் தொடர்ந்தாள்.

‘எங்கை தெரியப்போது..? உங்களுக்கு சாண்டில்யனையும் ராஜேஸ்குமாரையும் உங்கடை பொம்பிளைப்பிள்ளையளுக்கு ரமணிச்சந்திரனையும் விட்டால் ஆரைத்தெரியும்..?”

‘இல்லை எனக்குத் தெரியும்..” என்றேன் நான்

‘உங்களுக்கு என்றால் நீங்கள் இல்லை..நீங்கள் சார்ந்த பிரதேசம்,சூழல் இவையெல்லாம் தான்..” மீண்டுமொரு முறை அவள் நினைவூட்டினாள். எனக்கு கோபம் எதுவும் வரவில்லை. ஆனாலும் குரலை கடுமையாக்கி வார்த்தைகளில் செயற்கையாய் சூடேற்றிச்சொன்னேன்.

‘இஞ்சை பாருங்கோ.. எல்லாருக்கும் எல்லாம் தெரியவேண்டுமென்றில்லை.. அது அவையின்ரை தேடலைப்பொறுத்தது. எல்லாத்தையும் எல்லாரும் தெரிஞ்சு வைச்சிருக்க வேணும் எண்டு எந்த கொம்பனும் கட்டளையிட முடியாது..” கடுமையான எனது தொனி அவளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியதாய் தெரியவில்லை. ‘கொம்பன் இல்லை கொம்பி..” என்று அவள் சொல்ல அவளுடன் சேர்ந்து நான் தான் சிரிக்க வேண்டியதாய்ப்போனது.

‘உங்களை, உங்கடை எழுத்துக்களை ஏன் எங்களுக்கு தெரியாமல் போனதெண்டால் அதுக்கு காரணம் இஞ்சை நடந்த சண்டைதான். இவ்வளவு காலமும் நீங்கள் எங்களை வந்து சேரேல்லை. இனி வருவியள்..சரியான ஊடகங்கள் அந்த வேலையைச் செய்யும். சரி.. நீங்கள் எழுதின கவிதையளைத் தாங்கோ.. நான் கொண்டு போய்க்குடுக்கிறன்.. “

அவள் அப்போது கோபப்பட்டிருக்கக்கூடும். ‘என்ன..? நான் என்ன பப்ளிசிட்டிக்கு அலையிற ஆளெண்டு நினைச்சியளே..?” அவளது கேள்வியில் வேறு யாரோ அலைகிறார்கள் என்கிற தொனி அப்பட்டமாய்த் தெரிந்தது. அதனைக்கேட்டு பெரிசுபடுத்த நான் விரும்பவில்லை. ஆனாலும் பப்ளிசிட்டியை விரும்பாதவர்கள் என்று யாராவது இருக்கிறார்களா என்ற கேள்வி எனக்குள் தொக்கி நின்றது.

அன்று மதியம் வரை அவள் நிறையப்பேசினாள். . ‘செம்மணியில் புதைக்கப்பட்ட சனங்களுக்காக அந்த இடத்தில ஒரு நினைவுச்சின்னம்..அல்லது ஒரு ஞாபகச்செய்தி எண்டு ஒண்டும் இல்லை. ஆனா எங்கையிருந்தோ வந்த ரேடியோக்காரன் அதிலை கட்அவுட் வைச்சு வரவேற்கிறான்.” என்று சினந்தாள். ‘யாழ்ப்பாண லைபெறறி எண்டுறது சுண்ணாம்பு அடிச்ச அந்தக்கொங்கிறீட் கட்டிடமில்லை. அது எங்கடை ஆத்மா..” என்று விளங்கப்படுத்தினாள். ‘எந்தவொரு ஆக்கிரமிப்பாளனுக்கும் மண்டியிடாமல் கடைசி வரை நின்று போராடிய பெருமை முல்லைத்தீவைத்தான் சேரும்..” என்று பெருமைப்பட்டாள். உறுதியாக, மாற்றுக்கருத்துக்களே கிடையாது என்ற ரீதியில் அவள் பேசிய விடயங்கள் பரவலாயிருந்தது

ஆண்கள் நிறைந்த சபைகளிலே அவர்கள் என்ன சொன்னாலும் வாய்மூடி மௌனிகளாகக் கேட்டுவிட்டு ஆட்டு மந்தைகள் போல் தலையசைத்துச்செல்கின்ற சில பெண்களை எனக்குத் தெரியும். ஆண்களுக்கு சமானமாக நின்று பேசத்தெரியாமல் அவர்கள் பகிடி என்ற பெயரில் செய்கின்ற சில்மிஷங்களுக்கெல்லாம் வெட்கம் பொத்துக்கொண்டு வர ப்ளீஸ் சரியில்லாத வேலை பாக்கிறியள் என்று கெஞ்சுகின்ற சில பெண்களை எனக்குத் தெரியும். அப்போதெல்லாம் எரிச்சல் எரிச்சலாக வரும். ‘அவையும் அவையின்ரை வெட்கமும்..”
சில வருடங்களுக்கு முன்னர் வீதியொன்றின் முகப்பில் வைத்து ‘தேவையில்லாத வேலை பார்த்தாயெண்டா உதை வாங்குவாய்” என்று ஒருத்தி சொன்ன போது அவமானத்திற்குமப்பால் மகிழ்ச்சியும் எட்டிப்பார்த்தது நினைவுக்கு வந்தது. அந்த மகிழ்ச்சி சங்கீதாவைச் சந்திக்கும் போதும் வந்தது.

மோட்டார் சைக்கிள் சடார் சடார் எண்டு வீதியின் குழிகளுக்குள் துள்ளித்துள்ளி விழுந்தது.

‘எங்கடை சர்வதேசத் தர வீதியிலை பயணம் செய்ய குடுத்து வைச்சிருக்கவேணும் நீ..” எனக்குச் சிரிப்பு வந்தது. பிரதான வீதியிலிருந்து விலகி மோட்டர் சைக்கிள் உள் வீதியொன்றில் நுழைந்து சங்கீதா வீட்டின் முன் நின்றது. நான் கேற்றைத் திறந்து கொண்டு உள் நுழைந்தேன். நகுலன் மோட்டார் சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்தான். கேற் திறந்த சத்தம் கேட்டிருக்க வேண்டும் போல.. சங்கீதா தான் வந்து பார்த்தாள்.

‘அட.. வாங்கோ.. வாங்கோ..” அழைத்துக்கொண்டு போய் என்னை அங்கிருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தினாள். நகுலனை அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. கிடுகுகளால் வேயப்பட்டிருந்த அந்த வீடு அழகாக பராமரிக்கப்பட்டிருந்தது. முன்றலில் பூங்கன்றுகள் வரிசையாய் பூத்திருந்தன.

சங்கீதா இப்போதெல்லாம் அவள் ஊன்று கோல் இல்லாமலே நடக்கிறாள்
மதியம் அங்கேயே சாப்பிட்டோம். சங்கீதா சாப்பிட்டுச் சாப்பிட்டுப் பேசினாள். ‘எங்களில கன பிள்ளையள் கொம்பியூட்டரை கண்ணாலையே பார்த்ததில்லை. எனக்கு ஒரு பயம் இருந்தது. நாங்கள் அப்பிடியே இருக்கப்போறோமோ எண்டு. ஆனா இப்ப இல்லை. இந்த யுத்தம் உங்களையெல்லாம் வேறை வேறை தேசங்களுக்கு தூக்கியயெறிஞ்சதிலை உள்ள ஒரே நன்மை உங்களிட்டை இப்ப அனைத்துலக கல்வியறிவும் இருக்கிறது தான். அதை எங்களுக்கும் தரவேண்டியது உங்கடை கடமை. தா எண்டு கேட்கிறது எங்கடை உரிமை..”

‘சரி சங்கீதா.. நாங்கள் வரப்போறம்.. நகுலனுக்கு வேறை இடத்திலை அலுவல் ஏதோ இருக்காம்..” நான் புறப்பட்டேன்.

‘சரி..சந்திப்பம்..” மோட்டர் சைக்கிளில் ஏறி உட்கார நகுலன் ஸ்ரார்ட் செய்தான்.

‘என்ன நகுலன்.. போச்சிப்போத்திலை எறிஞ்சிட்டீர் போலை..” பெற்றோலுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த காலத்தில் மோட்டர் சைக்கிளை ஸ்ரார்ட் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஸ்பிறிற் அல்லது ரின்னர் அடைக்கப்பட்ட சிறு குப்பியைத்தான் சங்கீதா போச்சிப்போத்தல் என்றாள். இப்போது அது தேவைப்படவில்லை.

‘இல்லை. எறியேல்லை.. பத்திரமா வைச்சிருக்கிறன். திரும்பத் தேவைப்படுமோ தெரியாது..”

வரும் வழியில் நகுலன் பேசிக்கொண்டே வந்தான். இங்கையிருக்கிற ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பிரச்சனையை சுமந்து கொண்டு தான் வாழுகினம். பாத்தாய் தானே படிக்கப்பள்ளிக்குடம் இல்லை.. சரியான வேலையில்லை. யுத்தம் எத்தனை பேரை அங்கவீனமாக்கியிருக்கு..? கையை இழந்து காலை இழந்து எத்தனை ஆண்கள்…பெண்கள்… “
நான் அமைதியாகவே வந்தேன். ‘இப்பிடி அங்கவீனமான ஆண்களைப்பற்றி பெண்களைப்பற்றி நான் அடிக்கடி நினைப்பதுண்டு. நாளைக்கு கலியாணம் எண்டொரு நிலை இவைக்கு வரேக்கை கலியாணத்தின்ரை தேவையை வேறை விதமா விளங்கிக்கொள்கிற ஆக்களே நிறைய இருக்கிற எங்கடை சமூகத்திலை இருந்து அங்கவீனமானவர்களை கலியாணம் கட்ட எத்தனை பேர் முன்னுக்குனு வருவினம்..?”

‘நகுலன் நிப்பாட்டு நான் ஓடுறன்..” நகுலன் மோட்டார் சைக்கிளை நிறுத்திப் பின்னால் ஏறி உட்கார்ந்து கொண்டான். நான் மோட்டர் சைக்கிளை ஓட்டத்தொடங்கினேன். ஆரம்பித்து விட்ட ஆனையிறவுப் பெருவெளியின் காற்று முகத்திலடித்தது. சந்தோச மேகங்கள் வந்தாடும் நேரத்தில் செந்தூரப் பூமழை தூவியது..இப்போது நான் தான் பாடினேன். என்னாலும் பாட இயலும்.

– நவம்பர் 3, 2004

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *