கேர்ணல் கிட்டுவில் குரங்கு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 15, 2024
பார்வையிட்டோர்: 2,216 
 
 

என்னுடைய பெயர் சிவபாக்கியலட்சுமி. வயது 82. எனக்கு மறதி வரவரக் கூடிக்கொண்டே போகுது. காலையிலே மருந்துக் குளிசையை போட்டேனா என்பதுகூட மறந்துபோகுது. என் மூளையில இருந்து சில ஞாபகங்கள் மறையுமுன்னர் அதை உங்களுக்கு சொல்லவேணும் என்பதுதான் என் ஆசை.

என்னுடைய புருசன் அரசாங்க உத்தியோகஸ்த்தர். அவர் ஓய்வு பெற்றபிறகு யாழ்ப்பாணத்தில் எங்கட சொந்த ஊரான கொக்குவிலுக்கு வந்து சேர்ந்தோம். ஒரே மகளைக் கட்டிக் கொடுத்து வெளிதேசம் அனுப்பிவிட்டோம். வாழ்நாள் முழுக்க சேமித்த காசில் ஒரு சின்ன வீட்டை சொந்தமாக கட்டி அதில் தங்கியிருந்தோம்.

என்னுடைய புருசன் சும்மா இருக்கமாட்டார். தோட்டத்தில் கத்தரி, வெண்டி, தக்காளி என்று போடுவார். வாழை மரத்தில் குலைகுலையாக தள்ளும். மரவள்ளியில் கிழங்கு விழும். என்னுடைய தம்பியின் மகள்மார் இரண்டுபேரும் எங்களோட தங்கியிருந்தார்கள். வீட்டில் இருந்து பள்ளிக்கூடம் போய்வருவார்கள். மூத்தவளுக்கு வயது 14, மற்றவளுக்கு 13. மாதாமாதம் வரும் பென்சன் காசில் மட்டுமட்டாக சீவித்துக்கொண்டு வந்தோம். வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும். அது 1986ஆம் ஆண்டு. என்னுடைய 82 வருட வாழ்க்கையில் இது மிகவும் சந்தோசமான ஒரு பகுதி.

யாழ்ப்பாணத்தில் சங்கிலியின் காலம், பரநிருபசிங்கன் காலம் என்று இருக்கிறதல்லவா? அதுபோல கேர்ணல் கிட்டுவின் காலம் என்று ஒன்று இருந்தது. சனங்கள் அவரில் அளவில்லாத மதிப்பு வைத்திருந்தார்கள். யாழ்ப்பாணம் கோட்டையில் அப்போது கேப்டன் கொத்தலாவலை இருந்தார். கிட்டுவும் அவரும் எதிரிகள் என்றாலும் நட்பாக இருந்தார்கள். கோட்டைக்குவிறகு, மாம்பழம் என்று கிட்டு அவ்வப்போது அனுப்பி வைப்பார். இப்ப ஜனாதிபதியாக இருக்கும் சந்திரிகாவின் கணவர் விஜயகுமாரதுங்கா யாழ்ப்பாணம் வந்தபோது சுமுகமான வரவேற்பு கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தியவர் இவர்தான்.

கிட்டுவுக்கு ஒரு காதலி இருந்தது யாழ்ப்பாணம் முழுவதுக்கும் தெரியும். அவர் பெயர் சிந்தியா. மருத்துவக் கல்லூரி மாணவி. ஒரே ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். இவரைப் பார்த்துவிட்டு மிற்சுபிசி லான்சரில் திரும்பும்போதுதான், யாரோ இனம் தெரியாதவர்கள் வீசிய கைக்குண்டில் கிட்டு தனது வலதுகாலை இழந்தார். பின்னாளில் எங்கள் வீட்டில் கிட்டு தங்கியிருந்தபோது செயற்கை காலுடன்தான் இருந்தார்.

இயக்கக்காரர்கள் அவ்வப்போது வந்து எங்கள் வீட்டு விறாந்தையில் தங்கிவிட்டு அதிகாலையிலேயே போய்விடுவார்கள். வாய் திறந்து ஒரு கோப்பை தேத்தண்ணி என்று கேட்கமாட்டார்கள். நாங்களாக கேட்டுக் கொடுத்தால் உண்டு. விதம்விதமான ஆயுதங்களை
எல்லாம் காவி வருவார்கள். கைக்குண்டுகள், துப்பாக்கிகளை கழட்டி கழட்டி பூட்டுவதும் துடைப்பதுவுமாக இருப்பார்கள். திடீரென்று ஒரு செய்தி வரும், உடனேயே மறைந்துவிடுவார்கள்.

கிட்டு எப்பொழுதாவது அபூர்வமாகத்தான் வருவார். வந்தால் தன் சகாக்களுடன் சில நாட்கள் தங்குவார். சட்டு புட்டென்று ஓடர்கள் போடுவார். வீடு ஒரு புதுப்பொலிவு அடைந்து அமளிதுமளியாக இருக்கும். அந்தச் சமயங்களில் எல்லாம் இந்த இரண்டு பெட்டையளும் என் காலைச் சுற்றியபடி நிற்பாளவை. என்னைவிட்டு ஒரு இன்ச் அகலமாட்டினம்.

ஒரு முறை கிட்டு வெளி விறாந்தையில் அமர்ந்திருந்தார். ஒரு கையை கதிரையின் கைப்பிடியில் வைத்திருந்தார். மற்றக் கையின் ஒரு விரலால் தேத்தண்ணி கோப்பையின் கைப்பிடியை சுற்றி வளைத்துப் பிடித்திருந்தார். சேர்ட்டைக் கழற்றியிருந்தபடியால் கையில்லாத பனியனில் அவருடைய கைகள் உருண்டை உருண்டையாகத் தெரிந்தன. என்னை இடித்தபடி பின்னால் இவள்கள். என்ன அம்மா என்றார் கிட்டு. உங்கள் கையெழுத்து வேணுமாம். அதற்கென்ன என்று சிரித்தபடி இரண்டு பேருக்கும் போட்டுக்கொடுத்தார்.

அப்பொழுதுதான் முதன்முதல் பார்த்தேன். அவருடைய வலது பக்கத்தில் ஒரு குரங்கு. பார்த்த உடனேயே அது கண்ணுக்கு தெரியாது. அவருடைய ஆர்மி உடுப்புக் கலரிலேயே இருப்பதால் மறைந்துபோய் இருந்தது. கிட்டுவின் எந்த முக்கியமான கூட்டம் என்றாலும் அங்கே குரங்கு இருக்கும். அடிக்கடி அதை திரும்பி பார்த்தபடிதான் கிட்டு பேசுவார். ஏதோ ஆலோசனை கேட்பதுபோல அது இருக்கும்.

கிட்டு துப்பாக்கி சுடுவதில் வல்லவர். இரண்டு கைகளிலும் துப்பாக்கி வைத்துக்கொண்டு இலக்குகளை மாறி மாறி சுடுவார். புதிதாக இயக்கத்தில் சேர்ந்த பையன்கள் வாய் பிளந்து
பார்த்துக்கொண்டிருப்பார்கள். இவர்களோடு ஒரு இளம் பையன் இருந்தான். ஊதிவிட்டால் விழுந்துவிடுவான். அடிக்கடி சிரிப்பான். அவனுடைய முன் பல்லில் ஒரு துண்டு உடைந்து போனதால் சிரிக்கும்போது மிக அழகாக தென்படுவான்.

ஒரு நாள் இவன் என்னிடம் அவசரமாக வந்து, அம்மா அந்தப் பிலாப்பழம் பழுத்துப் போச்சு போல கிடக்கு என்று மேலே சுட்டிக்காட்டினான். அது அருமை அருமையாய் காய்க்கிற மரம்.
பழம் தேன்போல இனிப்பு. தம்பியவை நீங்கள் புடுங்கி சாப்பிடுங்கோ என்றேன்.

நான் இந்தப் பக்கம் திரும்பியதும் ஒரு பெடியன் அணில் ஏறுவதுபோல ஏறி நிமிடத்தில் பழத்தை இறக்கிவிட்டான். கீழே வந்தபிறகு மரத்தில் இருந்ததிலும் பார்க்கப் பழம் பெண்ணம்பெரிய சைஸாக இருந்தது. நான் வீட்டுக்குள்ளே போய் கத்தியையும், நல்லெண்ணெய் போத்தலையும் எடுத்து வந்தேன். அதற்கிடையில் பழத்தை கல்லிலே போட்டு பிளந்து கைகளால் சுளைகளைப் பிடுங்கிப் பிடுங்கி சாப்பிட்டு முடித்துவிட்டார்கள். கொட்டைகளை எல்லாம் குவித்து தென்னோலை போட்டு எரித்து அதையும் சாப்பிட்டார்கள். தடல்கள்தான் மிச்சம். நான் அதை மாட்டுக்குப் போட்டேன். சில நிமிடங்களுக்கு முன் மரத்திலே பழமாகத் தொங்கியதற்கு அத்தாட்சியாக ஒன்றுமே மிஞ்சவில்லை.

இந்தக் காலங்களில் எனக்கிருந்த ஒரே கஷ்டம் இந்த இரண்டு குமரகளையும் கட்டிக்காப்பதுதான். அதுவும் இளையவளோடு மாரடிக்க ஏலாது. ஒருநாள் இந்தப் பையன் அம்மா, எல்லோரும் கனடாவுக்கு ஓடினம். இது எங்கையிருக்கு? என்று அப்பாவியாகக் கேட்டான். நான் வாய் திறக்கும்முன் இளையவள் வந்து, அஞ்சாம் குறுக்குத் தெரு என்று சொல்லிவிட்டு வாயைப் பொத்திக்கொண்டு ஓடிவிட்டாள். உள்ளே இரண்டுபேரும் கெக்கே கெக்கே என்று வயித்தைப் பிடிச்சுக்கொண்டு சிரிக்கிறாளவை.

சனிக்கிழமை காலை வேளை என்றால் இவளவையின் அரியண்டம் தாங்காது. அன்றைக்கு கடுமையான வெக்கை. நான் கை வேலையாய் இருந்தேன். ஒருத்தரை ஒருத்தர் இடிச்சுக்கொண்டு சிரித்தபடியே ஓடி வந்தாளவை. ஏதோ வில்லங்கம்தான். மாமி உங்கடை மூளைக்கு ஒரு வேலை என்றாள் மூத்தவள். மற்றவள் சாடையாக சிரிச்சுக்கொண்டு கால்களை விரிச்சபடி நின்றாள். ஒரு அறையின் சுவரில் இருந்து ஒரு நத்தை எதிர்ச் சுவருக்கு வெளிக்கிட்டது. அது பாதித் தூரத்தை இரண்டு நிமிடத்தில் கடந்தது. மீதித் தூரத்தில் பாதியை ஒரு நிமிடத்தில் கடந்தது. மீதி தூரத்தில் பாதியை இன்னும் பாதி நேரத்தில் கடந்தது. இன்னும் மீதி தூரத்தில் பாதியை இன்னும் பாதி நேரத்தில் கடந்தது. இப்படியே போனது. நத்தை எப்போது மற்றச் சுவரை அடையும்? போங்கடி, எனக்கு வேலை கிடக்கு. நான் உளுந்து நனையப் போடவேணும் என்று எழும்பினேன்.

அப்ப பாத்ரூம் கதவு கொஞ்சம் திறந்திருந்தது. உள்ளே யாரோ சோ சோ வென்று குளிக்கும் சத்தம் கேட்டது. என்னுடைய புருசன் வெளியே போனவர் இன்னும் வரவில்லை. இது யார் என்று
எனக்கு பயமாயிருந்தது. மெதுவாய் எட்டிப் பார்த்தேன். இவளவை எனக்குப் பின்னால். நான் கண்ட காட்சி மறக்கக்கூடியதல்ல.

கிட்டுவின் குரங்கு ஒரு மனிதரைப்போல நின்று தண்ணியை அள்ளி அள்ளி தலையிலே ஊத்தியது. பைப் திறந்து தண்ணி ட்ரம்மை நிறைத்துக்கொண்டிருந்தது. சற்று திரும்பி குரங்கு என்னைப் பார்த்தது. எதையுமே சட்டை செய்யாமல் மீண்டும் தண்ணீரை அள்ளி அள்ளி தலையிலே ஊத்தியது. திடீரென்று ஒரு எட்டு பாய்ந்து சோப் பெட்டியை தட்டியது. மூடி கழன்று சோப் உருள அதை எடுத்து கை, வயிறு, கழுத்து என்று முறையாக தேய்த்து, பிறகும் அள்ளிக் குளித்தது. எல்லாம் முடிந்தபிறகு பைப்பை மூடியது. இனி டவலை எடுக்கும் என்று எதிர்பார்த்தேன். எடுக்கவில்லை. இன்னொருமுறை என்னை திரும்பி பார்த்துவிட்டு அப்படியே துள்ளிப் பாய்ந்து யன்னல் வழியாகப் போய்விட்டது.

கிட்டு எங்கள் வீட்டில் தங்கிய சமயங்களில் எல்லாம் சரியாக 11 மணிக்கு குரங்கு வந்து குளித்துவிட்டுப் போகும். பெட்டையள் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும் கேட்கும் முதல் கேள்வி மாமி, இன்றைக்கும் குரங்கு குளித்ததா? என்பதுதான்.

ஒரு நாள் இரவு நாங்கள் மூன்றுபேரும் உட்கார்ந்து கல், கத்திரிக்கோல், பேப்பர் விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தோம். இவளவை இரண்டு பேரையும் என்னால் ஏய்க்க முடியாது. நான் பேப்பரைக் காட்டினால் ஒருத்தி கத்தரிக்கோலை காட்டுவாள்; நான் கல்லைக் காட்டினால் மற்றவள் பேப்பரைக் காட்டுவாள். இப்படி அளாப்பி அளாப்பி இரண்டுபேரும் மாறிமாறி வென்று கொண்டிருந்தார்கள். என்னுடைய இவர் அடிக்கடி சரி, போய்ப் படுங்கோ என்று சொல்லி அலுத்துப் போனார். நேரம் போய்க்கொண்டே இருந்தது.

அப்ப பார்த்து வெளியிலே தடதடவென்று சத்தம் கேட்டது. நான் இவளவையை பேசவேண்டாம் என்று சைகை காட்டிவிட்டேன். எங்கள் வீட்டில் வழக்கமாகத் தங்கும் பையன்களுடன் சேர்த்து இன்னும் புதிதாக மூன்றுபேர் வந்திருந்தார்கள். அவர்கள் எல்லாம் சீரியஸ் முகத் தோற்றமுள்ளவர்களாக காணப்பட்டார்கள். இதற்குமுன் நாங்கள் பார்த்திராத கனமான ஆயுதங்களை எல்லாம் காவிக்கொண்டிருந்தார்கள். இதிலே ஒன்று தோளிலே வைத்து விமானத்தை சுட்டு விழுத்தும் ஆயுதம்.

நான் மரியாதைக்காக, தம்பியவை, சாப்பிட்டீங்களா? என்று கேட்டு வைத்தேன். எங்களுக்கு பழக்கமான இளம் பையன் இங்கையுமில்லாமல், அங்கையுமில்லாமல் எல்லாம் பழகிப் போச்சு அம்மா என்றான். எனக்கு என்ன தோன்றியதோ தெரியாது. வதவதவென்று வீட்டிலே கிடந்த மா அவ்வளவையும் எடுத்து அரித்து புட்டு அவிக்கத் தொடங்கினேன்.

இதற்கிடையில் என் மருமகள்மார் இரண்டுபேரும் உற்சாகமாக தேங்காய் துருவி சம்பலும் போட்டுவிட்டார்கள். மூன்று நீத்துப்பெட்டி நிறைய புட்டையும், சம்பலையும் எடுத்துக்கொண்டு போனேன். அவர்கள் வெளி லைட்டை நூர்த்துவிட்டு மெழுகுத்திரி வெளிச்சத்தில் ஒரு வரைபடத்தை சுற்றியிருந்து விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.

சாப்பாட்டைக் கண்டதும் அவர்கள் முகத்தில் பொங்கிய சந்தோசத்தை சொல்லமுடியாது. ஆர் பெற்ற பிள்ளைகளோ. மௌனமாக அவ்வளவு புட்டையும் ஒரு சொட்டு மிச்சம் விடாமல் சாப்பிட்டு
முடித்தார்கள். அம்மா உங்களை மறக்க மாட்டோம் என்றார் அவர்களில் மூத்தவர்போல தோற்றமளித்த ஒருவர். அன்று இரவு வெகுநேரம் வரை அவர்கள் சத்தம் கேட்டபடியே இருந்தது.

அடுத்தநாள் அதிகாலை நான் எழும்பி வந்து பார்த்தபோது அவர்கள் போய்விட்டார்கள். அதுவே கடைசி. அவர்கள் இருந்ததற்கான தடயம் ஒன்றுகூட இல்லை. அதற்கு பிறகு போர் உச்ச நிலையை
அடைந்தது. கூட்டைவிட்டு வெளியேறின தேனீக்கள் போல அவர்கள் பிறகு வீடு திரும்பவே இல்லை.

அன்று காலை பேப்பரை படித்தபோதுதான் பெரிய ஒரு ஒப்பரேசன் நடந்தது தெரியவந்தது. நான் அவித்துக் கொடுத்த புட்டை நடுச்சாமத்துக்கு மேல் சாப்பிட்டுவிட்டு போன அத்தனை
போராளிகளில் எத்தனைபேர் திரும்பினார்களோ தெரியாது. அல்லது எல்லோருமே இறந்துபோனார்களோ, அதுவும் தெரியாது.

என் புருசன் மாரடைப்பில் திடீரென்று காலமானபிறகு நான் வெளிநாட்டுக்கு வந்து மகளுடன் தங்கியிருந்தேன். இங்கே வந்த ஒரேயரு தமிழ் பேப்பரில் கிட்டு இறந்துபோன செய்தியை
பிரசுரித்திருந்தார்கள். 33 வயது என்ன பெரிய வயதா? 33 வயதுக்கு இன்னும் 14 நாட்கள் இருக்கும்போது அவருக்கு மரணம் வந்தது. தானாக வரவழைத்த மரணம். 16 ஜனவரி 1993 என்பது
எனக்கு நல்ல ஞாபகம். கிட்டுவும் அவருடைய சகாக்கள் எட்டுப் பேரும் வந்த கப்பலை இந்திய ராணுவம் சுற்றி வளைத்துப் பிடித்தது. கிட்டுவும் போராளிகளும் தற்கொலை செய்துகொண்டார்கள். நடுக்கடலில் கப்பல் தீப்பற்றி எரிந்துபோனது. இப்படி படித்தேன்.

இப்பொழுது இங்கே தமிழ் பேப்பர்கள் கூடிவிட்டன. அவற்றினுடைய மறதியும் கூடிவிட்டது. சமீபத்தில் கிட்டுவினுடைய 12ஆவது நினைவுதினம் வந்தது. ஒரு பேப்பர் பத்தாவது தினம்
என்று எழுதியது. இன்னொரு பேப்பர் அவருடைய சகபோராளிகளின் எண்ணிக்கையை தவறாக எழுதியது. ஒவ்வொரு முறையும் நினைவுதின பேப்பர்களை நான் துழாவிப் படிப்பேன். ஒரு
இணைத் தளபதிபோல அவருக்கு பக்கத்திலேயே காணப்பட்ட குரங்கு பற்றி ஏதாவது சேதி வந்திருக்குமா என்று பார்ப்பேன். சரியாக காலை 11 மணிக்கு பைப் தண்ணீரில் குளிக்கப் பழக்கப்படுத்திய ஒரு வளர்ப்பு பிராணிக்கு நஞ்சுக் குப்பி கடிக்க பழக்கப்படுத்தியிருக்க மாட்டார்களா, என்ன? ஒரு வேளை அது கடல் தண்ணீரில் மூழ்கியும் இறந்துபோயிருக்கலாம். அதுபற்றி ஒரு பேப்பரும் இன்றுவரை எழுதவில்லை.

– 05-15-2005

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *