கேட்பாரில்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2024
பார்வையிட்டோர்: 986 
 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பசி…பட்டினி…உணவில்லை.

உணவில்லை…பணமில்லை – ஆகவே, மகிழ்வில்லை.

வாழ்வில்லை. வாழ வழியில்லை. உயர்வில்லை.

கவலை வளர்கிறது. சோகம் மிக ஓங்குகிறது. நோய்களைப் போலவே, கொலை களவு முதலிய குற்றங்களும் வளர்கின்றன.

தேனும், பாலும் பெருகி ஓடுகிறதாகப் படித்திருக்கிறோம். நீர் வளம், நிலவளம், முதலியவை யெல்லாம் நிறைந்த வளநாடு நாம் வாழும் நிலமெனக் கேட்டிருக்கிறோம். அர்த்தம் புரிந்தோ புரியாமலோ திரும்பத் திரும்பப் பாடியிருக்கிறோம். பாட்டுக்காரர்களும், ஏட்டுக்காரர்களும், பிரசங்கிகளும் இன்னும் எவ்வளவோ அற்புதங்களைப் பற்றியெல்லாம் அளந்திருக்கிறார்கள்.

‘பசித்தவன் பழங் கணக்கைப் பார்த்தான்’ என்ற கதையிலே, வேண்டுமானால் நாம் கூட இஷ்டப்பட்ட போதெல்லாம் புரட்டிப் படித்து நீட்டி முழக்கி மகிழ்ந்து போகலாம்.

ஆனால், என்ன பிரயோசனம்?

முந்திய கவிகளுக்குப் பாட வாய்ப்புக் கிடைக்காமல் போன பொன்னான ‘பாக்கியம்’ இன்றுள்ளவர்களுக்குக் இட்டியிருக்கிறது. எல்லோரும் ‘கண்ணீர் விட்டுக் கத்தி’ வளர்த்த உரிமை உணர்வினால் நாட்டு மக்களுக்கு சதந்திரம் கிடைத்து விட்டது. நாடாள்வோர் நம்மவர்கள்.

மகிழ வேண்டியது தான்.

ஆனால், மக்களின் முகத்திலே மலர்ச்சியில்லை, உள்ளத்தில் மகிழ்வு அரும்பவில்லை யாதலால்.

மனிதக்கு இன்றியமையாத உணவு தாராளமாகக் கிடைக்கவில்லை. உடுக்க உடைகள் மலிவாகக் கிட்ட வழியில்லை. தங்க வசதியான இடம் இல்லை.

சத்து இல்லாத ஆகாரத்தைத் தின்று எப்படியோ உடலில் உயிர் உறையும்படி செய்து வருகிற மக்களுக்கு உபவாச மகிமையும் குறைத்துச் சாப்பிடுவதனால் உண்டாகக் கூடிய நன்மைகளும் போதிக்கப்படுகின்றன நாட்டிலே.

உடையில்லை, கிழித்த கந்தல்களையும் அழுக்குத் துணிகளையும் சுமந்து திரிகிறார்கள் எத்தனையோ பேர். அவைகூட இல்லாமல் கால், அரை, முக்கால் நிர்வாணக் கட்டைகளாக அலைவோர் எவ்வளவோ பேர். அதே வேளையிலே, ஜவுளிகள் ‘பேல் பேலாக’ தேங்கிவிட்டன். அமெரிக்காவில் முதலாளிகள் செய்வது போல் இவற்றை யெல்லாம் அழித்து விடவா? அதற்கு முன் ஆலைகளை இழுத்து மூடுவோம். ஆயிரமாயிரம் உழைப்பாளிகளையும் அவர்கள் குடும்பங்களையும் தெருத்திகம்பரர்களாக மாற்றுவோம் என்று தீர்மானங்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன – இந்த நாட்டிலே.

‘பணமில்லை, பணமில்லை!’ ஏழையும் பஞ்சப்பாட்டு பாடுகிறான். பத்து, பன்னிரண்டு மணி நேரம் – அதற்கு அதிகமாகவும் கூட – உழைத்து உடல் ஓய்கிற மத்தியத் வகுப்பினரும் இதே பாட்டுத்தான் பாடுகிறார்கள். சர்க்காரும் இதையே தான் சொல்கிறது.

சர்க்காரின் ‘பணமில்லை’ என்கிற பேச்சு நாட்டு மக்கள் மீது வரி, மேலும் புதிய வரி என்று வரி வரிகளாகப் படிகிறது.

படிப்பு இல்லை. படிக்க நேரமில்லை. நாட்டினே படித்து அறிவு பெற்றவர்கள் மிக மிகக் குறைவு. மக்களுக்கு கல்வியறிவு புகட்டவேண்டும். இந்தப் பேச்சு ஆர்வமாகப் பிரசாரம் செய்யப்படுகிற காலத்திலேயே படித்துப் பள்ளிக்கூடம் விட்டு வந்தவர்களுக்கு வேலையில்லை — பொதுவாக, நாட்டில் எவ்வளவோ பேருக்கு வேலையில்லை – என்ற நிலையை எதிர்ப்படுகிறது.

படித்தவர்கள் என்ன செய்வது என்று புரியாமல் திண்டாடுகிறார்கள். குமாஸ்தா வேலை – என்ன எங்கள் வேலையாவது – தேவை என்று தேடி அலைகிறார்கள் மனுச் செய்கிறார்கள். வாழ்விலே விரக்தி கொள்கிறார்கள் அவர்களுக்கு வாழ வழி காட்டுவாரில்லை.

பிரசங்கிகள் இருக்கிறார்கள், தலைவர்கள் இருக்கிறார்கள் . ஆசிரியர்கள், அறிஞர்கள் , ஆள்வோர்கள், உயர்ந்தவர்கள், உத்தமர்கள், தியாகிகள் , பூஜ்யர்கள், சாமிகள், ஆனந்தர்கள் – எத்தனை எத்தனையோ பெயர்கள் சொல் ஜிப் பெருமையாகப் பேசி, ‘ஊருக்கு உழைப்பதே யோகம்’ தேச சேவையே எங்கள் லட்சியம் – பொது நலப் பணியே எமது நோக்கம் என்றெல்லாம் கூறி பெருமை பெற முயல்கிறவர்கள் இருக்கிறார்கள் – ஏராளமாக.

ஆனாலும், மனிதர் மனிதராக வாழவழியில்லை. வாழ்க்கைத்தரம் உயர யாரும் வழிகாட்டவில்லை.

ஏன் இந்நிலை? மக்களின் வாழ்வு வரவர வாண்டு போவதேன்? வாழ்வு உயர வழியே இல்லையா? அன்றாட வாழ்க்கைச் செலவுக்கே ‘லோல் போடுகிற’ சாதாரண மனிதனின் உள்ளம் ‘வாழ்வது எப்போ? வாழ்வது எப்போ? ?’ என்று ஏக்கப் பெரு மூச்சு எறிகிறதே, அவனுக்கு விமோசனமே கிடையாதா? மண்ணோடு மண்ணாய்க் கிடந்து உழலும் மனிதரில் பெரும்பாலோர் உயர்வதற்கு வழி தெரியாதா என்று விண்நோக்கிக் கனவு கண்டு பெருமூச்சு எறிகிறார்களே. இவர்களுக்கு உயர் கிடையாதா?

தினசரிப் பத்திரிகைகளைப் பார்த்தால், தினம் தோறும் தற்கொலைகளும், கொலை. களவு கொள்ளைகளும்
அதிகரித்து வருவதை உணரலாம். பத்திரிகைச் செய்திகளாக வருபவை இவ்வளவு. பத்திரிகைகளை எட்டிப் பாராமலே கிடக்கும் நாட்டில் நடக்கும் – குற்றங்கள் எத்தனை மடங்கோ ! மனிதர்க்கத்தின் கறைகளாக, சமுதாயத்தின் ஊழல்களாக, மனிதனின் வெறித்தன வியாதிகளின் சின்னங்களாக இப்படி இவை பெருகுவது ஏன்? அமைதியையும் சமூக நலனையும் நாட்டு மதிப்பையும் கெடுக்கும் களங்கங்கள் இவை. மக்களின் மனோ வியாதியாய் பிறந்த பலர் வாழ்வின் நலம் கெடுக்கும் கொடுமைகளாகப் பரிணமிக்கிற இவை வரவர வளர்வதன் காரணம் என்ன?

வாழ்விலே இனிமை இல்லை. சூழ்நிலையில் பசுமை இல்லை. சரியாக வாழ வசதிகள் இல்லை. நன்றாக வாழ வழி தெரியவுமில்லை.

பொருளாதார மாந்தம், வாழ்க்கைக் கொடுமைகள் சற்றுச் சார்பினரின் பழிப்பு, கண்டனம் , பரிகாசம் போன்ற எத்தனையோ காரணங்களோடு, மனிதப்பண்பு வற்றிப் போனதும் சேர்க்கப்படலாம்.

அறிவு வளர்க்கப்படவில்லை. அறியாமை தான் பலமாகப் பற்றிக் கொண்டு மேலும் மேலும் பரவி வருகிறது. இன்று கற்றுக் கொடுக்கப்படும் கல்வி முறை வாழ்வதற்குரிய பாதை செய்வதில்லை என்பதைப் பலரும் பல வருஷங்களாகத் தான் சொல்லி வருகிறார்கள், எனினும் மாறுதல் பிறக்கவில்லை.

நாட்டிலே அறியாமை கொலுவிருக்கிறது. அறியாமயை பூஜிக்கும் பெரும்பலரின் போக்கு ஒரு சிலருக்கு நல்ல மூலதனமாகப் பயன் படுகிறது.

மக்களில் பெரும்பாலோரது அறியாமை ஒரு சிலரை இபரிய மனிதர்களாக்கி விடுகிறது. பலரை சுரண்டல் வாதிகளாக, கறுப்புச் சந்தைக் கழுகுகளாக, கொள்ளைக் காரர்களாக வளர்த்து விடுகிறது. எத்தர்களை பகட்டாக வாழத் தூண்டுகிறது.

தங்கள் நிலைமையின் உண்மையை உணர முடியாதவர்கள், உணர விரும்பாதவர்கள், உணரத் திறனிருந்தும் தெரிந்து கொள்ள மறுக்கிறவர்கள் வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளுக்கு, குறைகளுக்கு , கஷ்ட நஷ்டங்களுக்கு எல்லாவற்றுக்குமே கடவுள், அதிர்ஷ்டம், பாப புண்ணிய கர்மவினைகளே பொறுப்பு என்று கூறி, நம்பி, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

சிந்திக்கிறவர்கள் சொல்லி வருகிறார்கள் அப்படி யெல்லாம் ஒன்றுமில்லை ; எல்லாம் மனிதர்களில் சிலர் செய்கிற வினை தான் எல்லோர் வாழ்வையும் பாதிக்கிறது என்று. ஆனால் பிறந்ததிலிருந்தே தாய்ப் பாலோடு சேர்த்தே புகட்டப்படுகிற பழைய நம்பிக்கைகள், அர்த்த மற்ற தேவையற்ற சம்பிரதாய எண்ணங்கள் சமூக மக்களின் உள்ளத்திலே பனிமலையாக உறைந்து கிடக் கின்றன. அவர்களை முன்னேற விடாத முட்டுக்கட்டைகளாக , விலங்குகளாகத் திகழ்கின்றன.

சுயநலமிகளின் அக்கிரமங்களையும் அநியாயங்களையும் கண்டாலும் ஏனென்று கேட்பாரில்லை அநேகமாக, அறிகிறவர்களில் பலர் ‘தெய்வம் கேட்கும்’ ‘அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்’ என்று பழமொழிகளைக் கொண்டு வேலிகட்டி ஒதுங்கி விடவே தயாராக இருப்பார்கள்.

கடவுள் – அப்படி ஒருவன் இருந்தால் – யாரையும் எதற்காகவேனும் எப்பொழுதாவது கேட்டு விட்டதாகத் தெரியவில்லை.

சிந்தனையாளன் இங்கர்ஸால் சரியாகச் சொன்னான் –

‘யுகம் யுகமாக வலியார்கள் எளியோரை வதை புரிந்து வருகிறார்கள். மனித இதயமற்றவர்களும் குள்ளநரித்தனத்தினரும் சாதாரணமானவர்களையும் ஒன்று மறியாத அப்பாவி மக்களையும் தாம் விரித்த வலைகளில் சிக்கவைத்து அடிமைகளாக்கி வருகிறார்கள். அவதியுறும் மக்களைப் பாதிகாக்க ஆண்டவன் வந்து உதவினான் என்பதை மனிதகுலச் சரிதையின் எந்தப் பகுதியும் உறுதி கூறவில்லை இதுவரை.

‘உயரே யிருந்து உடலிவந்துவிழும் என எதிர்பார்ப்பதை விட்டுபடவேண்டும் மனிதன் . விண்ணகத்திலே காதில்லை கேட்பதற்கு; கையில்லை உதவி புரிவதற்கு கான்கிற உண்மையை இதற்குள்ளாக அவன் உணர்ந்திருக்க வேண்டும். இறந்தகால அனுபவங்களின் தவிர்க்க முடியாக்குழந்தை தான் நிகழ்காலம். மேலிடம் அருளிய சந்தர்ப்ப சகாயங்கள் இதுவரை எதிர்ப்பட்டது கிடையாது. ஆகவே, இனியும் எவ்விதமான குறுக்கீடுகளும் ஏற்பட முடியாது.

‘கோளாறுகள் தவிர்க்கப்பட்டிருக்குமானால், மனிதன் தான் அவற்றை ஒழித்திருக்கிறான். அடிமைகளுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிற தென்றால், அதைச் சாதித்தவன் மனிதன் தான், புதிய உண்மைகள் உதயமா யிருக்கின்றன வெனில், அவற்றைக் கண்டு பிடித்தவன் மனிதனே. ஆடையற்றவர்களுக்கு உடுக்கத் துணி வேண்டு மானால் – பசித்தவர்கள் புசிக்க வேண்டுமானால், நியாயம் வழங்கப்பட வேண்டுமானால்; உழைப்பு உரிய மதிப்பை பெறவேண்டுமானால், மூடநம்பிக்கை மனமூலையிலிருந்து விரட்டப்பட வேண்டுமானால், அபலைகள் பாதுகாக்கப்பட வேண்டுமானால், நேர்மை முடிவிலே நிச்சயவெற்றி பெறுவதானால் – அனைத்தையும் மனிதன் தான் சாதித்தாக வேண்டும். எதிர்காலத்தின் இணையிலா வெற்றிகள் அத்தனையும் மனிதனால் மனிதனால் மட்டுமே – சாதிக்கப்பட வேண்டியவை தான்.

‘தன்னையே நம்பி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் மனிதன், ‘வேத கீத பாராயணங்கள்’ குளிர்கால கொடுந் தாக்குதல்களிலிருந்து மனிதனைக் காப்பாற்றுவதில்லை. ஆனால் வீடுகள், நெருப்பு, ஆடைகள் முதலிய தான் தகுந்த பாதுகாப்பளிக்கின்றன. பஞ்சத்தை ஆயிரமாயிரம் உபதேசங்களும் பிரார்த்தனைகளும் தடுக்கிற அளவைவிட அதிகமாகவே ஒரு கலப்பை தடுக்க முடியும். உலக ஆரம்பத்திலிருந்து நிகழ்த்தப்பட்ட பிரார்த்தனைகள் சாதித்ததைப் பார்க்கினும், அதிகமான வியாதிகளை ‘புட்டி மருந்து’ சுலபத்தில் குணப்படுத்திவிடும்.’

இவ்வளவு அழுத்தமாக உண்மைகளை எடுத்துச் சொல்லி வருபவர்கள் பலர். என்றாலும் சிந்தனையின் ஆராய்ச்சி மொழிகளைக் கேட்பாரில்லை. கேட்டு ஆராய முன் வருகிறவர்களும் அதிகமில்லை. இதையும் சிந்தனையாளர்கள் உணராமலில்லை. என்றாலும், தங்களுக்குக் சரியென்று தோன்றியதை அவர்கள் சொல்லிக்கொண்டு தானிருப்பார்கள்.

முன்னைவிட அறிவின் ஒளி இப்பொழுது அதிகம் பரவியிருக்கிறது. எனினும் வாழ்வில் இனிமை புகுத்தும் அளவுக்கு எங்கும் வியாபகமாக வில்லை. வாழ வழி காட்டக் கூடிய கல்வி போதிக்கப்படவேண்டும். வாழ்வின் சிக்கலான பிரச்னைகளைத் தீர்க்கும் திறமையை பலப்படுத்துங் கல்வி தேவை. வீண் பட்டப் படிப்புகளால் பயனில்லை என்பது நன்கு தெளிவாகி வந்திருக்கித் விஷயம்.

அறியாமையும் மூடநம்பிக்கைகளும் அகற்றப்பட வேண்டுமெனில் அவை மாய்ந்தொழிந்து போக வேண்டு மெனில் – நாட்டில் உண்மையான கல்வியறிவு வளர் வேண்டும்.

ஏட்டிலே எல்லாவற்றையும் படித்து விட்டு, கிரகணத் தன்று தர்ப்பணம் செய்யத் தூண்டுகிற மனோபாவமும் அமாவாசை யன்று விரதம் இருக்க வேண்டும்; கிரகணம் பிடித்தால் சாப்பிடக்கூடாது – சாப்பிட்டால் விஷம்; இலையில் தண்ணீர் தெளியாமல் சாதம் கறிவகைகளைப் பரிமாறிச் சாப்பிட்டால் ஊமைப் பிள்ளை பிறக்கும் என்பன போன்ற மடத்தனக் கருத்துக்களை வளர்க்கும் பண்பும் தாக்கப்படுமானால் இந்த விதமான தேவை பற்ற, அர்த்தமற்ற முட்டாள்தன நம்பிக்கைகள் அன்று போல் இன்றும் போற்றிவரப்படுமானால் – கல்வி கற்றோம் சான்று இபருமைப்படுவதற்கு என்ன இருக்கிறது?

தம்மை விடத் தாழ்ந்தவர்களைப் பார்த்துப் பார்த்து தம் நின்மை மிகப்பெரிது என்று மகிழத் தூண்டுகிற மனோபாவமும் தம்மைவிட அதிக வசதிகளோடு வாழ் கிறவர்களைக் கண்டால் ‘அவர்கள் அதிர்ஷ்டம் அது. நம்ம அதிர்ஷ்டம் தான் தெரியுதோ!’ என்று மனம் புழுங்குவதும் வாழத் துணை புரிகின்ற பண்புகள் அல்ல.

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைத்து கைகட்டிக் கொண்டு அவதிப்படுவதோ, உழையாமலே ‘கஞ்சி வரதப்பா! எங்கேயப்பா? எப்போப்பா’ என்று ஏங்கிக் காலாட்டிக் கொண்டு சோம்பல் உபாசனை செய்வதோ உயர்வுக்கு வழிகாட்டாது.

சமுதாய அமைப்பு முறையிலேயே கோளாறுகள் உள்ளன; பொருளாதார அடிப்படையிலே சமூக வாழ்வை மாற்றி அமைத்து விட்டால் போதும். மற்ற எல்லா நலன்களும் தாமாகவே வந்துவிடும், அறியாமை, மூட நம்பிக்கைகள் எல்லாம் சொல்லாமற் கொள்ளாமல் ஓடிவிடும். வயிற்றுத் தேவைதான் முக்கியம், அதைப் பூர்த்தி செய்துவிட்டால் பிற தேவைகளை யெல்லாம் நிறைவேற்றும் மார்க்கம் தானாகவே வந்துவிடும் என்று சிலர் பேசுகிறார்கள்.

பொருளாதார தகிடுதத்தங்களைப் போற்றி வளர்க்கிற சமுதாய அமைப்பு மாற்றப்பட வேண்டியதே. மாறத் தான் போகிறது அதற்காக இன்று மனிதர்கள் மனுஷத்தனம் இழந்த நிலையிலேயே வாழவேண்டும் என விரும்புவது சரியல்ல. வரவிருக்கிற விருந்தை எண்ணிக் கொண்டு, இப்பொழுது பட்டினி கிடக்கிற நிலையையே தொடர வேண்டும் என்று யாராவது சொல்வார்களானால் அது பேதமையே யாகும்.

மேலும், மனிதன் சோற்றுத் தேவைகளுடன் திருப்தி யடைந்து விடுகிற பிராணியல்ல. வயிற்றுத் தேவைதான் முதன்மையானது; பசியையும் பொருள் தேவைகளையும் சமாளிக்கும் நிலைமையை ஏற்படுத்தி விட்டால், போதும்; மற்றவை யெல்லாம் தாமாகவே பூர்த்தியாகி விடும் என்கிற ‘மெட்டீரியலிஸம்’ மனித குணங்களைக் காண மறுக்கிறது, தன் பக்தர்களின் பார்வைக்குத் திரைபோட்டே வருகிறது. லோகாயதவாதிகள் தாங்கள் அமைத்துக் கொண்டுள்ள வேலிகளைத் தாண்டி வெளியே வர விரும்பும்தில்லை; குறிப்பிட்ட எல்லைக்கு மேல் சிந்தனை செய்யவும் மறுக்கிறார்கள். மனிதனின் தன்மைகளையும் தவறுகளையும் ஆராய மனமிருப்பதில்லை. மனமிருந்தாலும், தங்கள் கொள்கைகளில் உள்ள கொண்டுள்ள தீவிர பற்றுதலினால் சொன்னதையே திரும்பத் திரும்பக் கூறியும், அதே கோஷங்களை சந்தர்ப்பங்களிலும் அசந்தர்ப்பங்களிலும் ஆரவாரித்தும் வழிகாட்டத் துடிக்கிறார்கள்.

மனிதன் மனிதனாக வாழ வேண்டுமானால், அவனது எல்லாத் தேவைகளும் பூர்த்தியாக வேண்டும். அவனது நல்ல பண்புகள் எல்லாம் கௌரவிக்கப்பட வேண்டும். சோறும் பொருளாதார வசதிகளும் சொர்க்கத்தைக் கொண்டு வந்து விடும் என்று நம்பச் சொல்வது ஏமாற்றும் கலையே யாகும். சிந்தனை சுதந்திரமும், உண்மைகளை ஆராய்ந்து சொல்லும் உரிமையும், தனது கருத்துக்களை எடுத்துச் சொல்ல சந்தர்ப்பங்களும் ஒவ்வொருவனுக்கும் இருக்க வேண்டும். இவற்றை ஒடுக்குகிற, தடைப் படுத்துகிற , வேலி கட்டி தங்கள் வரம்புகளுக்குட்பட்டு நிற்கத் தூண்டுகிற எந்தக் கட்சியும் மனிதகுல நலனுக்கு பரி பூரணமான சேவை செய்வதாகாது. தாங்கள் தான் மனித உயர்வுக்கு உழைக்கிறோம் என்று நாவலிப்பது, எல்லாக் கட்சிகளும் செய்து வருகிற கலை தான் – மக்களை ஏமாற்றி, என்றுமே ஏமாந்தவர்களாக வாழ வழி காட்டுவது தான்.

உலகம் மாறிக் கொண்டே விருக்கிறது. பூர்விக நம்பிக்கைகள், காட்டு மிராண்டித்தனக் கொள்கைகளில் எல்லாம் நமக்கு அலுப்புத் தட்டி விட்டது.

வாழ்வின் தவறுகளிடையே, இருளினூடே உண்மை ஒளியைக் காண்பதை விட உயர்ந்தது எதுவுமில்லை. முக்கியமானது வேறெதுவுமில்லை.

உலகின் அறிவுக் களஞ்சியம் உண்மைதான். எல்லாத் தொழில்களினும் மேன்பட்டது உண்மையைத் தேடி உணர்வதேயாகும்.

மூன்னேற்றத்தின் அடிப்படை, மேல் கட்டுமானங்கள், தங்கமுலாம் தகதகக்கும் உச்சிக் கோபுரம் எல்லாமே உண்மைதான்.

ஆனந்தத்தின் அன்னை உண்மை. நாகரிகப்படுத்துகிறது உண்மை. உயரச் செய்கிறது. புனிதமாக்குகிறது அது. மனித உள்ளத்திலே முளைவிடுகிற ஆர்வங்களில் எல்லாம் பெருமை வாய்ந்தது உண்மையை உணரவேண்டும் என்பதே.

நல்லது செய்ய நயம் மிகுந்த சக்தி தருகிறது உண்மை, அதுவே வாள். அதுவே கேடயம். அதுவே புனிதமான ஆன்ம ஒளி.

ஒரு உண்மையை உணர்ந்து சொல்கிறவன் பேரொளிப் பந்தம் ஒன்றை ‘ஏற்றி வைத்த’ வனாகிறான்.

உண்மை கண்டு பிடிக்கப்படுவது ஆராய்ச்சியினால், பரிசோதனையால், பகுத்தறிவினால்.

தனது ஆர்வமும் திறமையும் இடம் கொடுக்கிற அளவுக்கு ஆராய ஒவ்வொரு மனிதனும் அனுமதிக்கப்பட வேண்டும். உலக இலக்கியம் முழுவதும் அவனுக்குக் கிடைக்க வேண்டும். அவற்றிலே தடைப்படுத்தப் பெற்றவை, அடிக்கப்பட்டவை, பதுக்கப்பட்டவை, என்கிற விவகாரங்களே கூடாது. அறியக் கூடாத அளவுக்குப் பவித்திரமானதாக அல்லது பாபமானதாக உள்ளவை எதுவுமே இல்லை. தானே உணர்ந்து, தன் சொந்த முடிவுகள் கொள்ளவும், தனது நேர்மையான எண்ணங்களைச் சொல்லவும் ஒவ்வொருவருக்கும் உரிமை வேண்டும்.

ஆராய்கிறவர்களுக்கு இங்கு தண்டனை அல்லது வேறுலகிலே தண்டனை என்று பயமுறுத்துகிறவன் யாராயினும் சரியே – அவன் மனித குலத்தின் விரோதிதான். ஆராய்கிறவர்களை நிரந்தரமான இன்பம் கிட்டும் என்று ஆசை காட்டி மயக்கத் துணிகிறவன் சகோதர மனிதர்களுக்கு துரோகம் இழைக்கிறவனே யாவன்.

சுதந்திரம் – மனித பயம், கடவுள் பயங்களிலிருந்து சுதந்திரம் – இல்லையெனில், உண்மையான ஆராய்ச்சியுமில்லை.

ஆகவே, எல்லா ஆராய்ச்சிகளும் – சகல பரிசோதனை களும் – அறிவின் ஒளியோடு தான் நிகழ்த்தப்பட வேணும்.

ஒவ்வொருவரும் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள் ளா தவர்களாக வேண்டும், முதலில், தனது உள்ளொளிக்கு உண்மையுள்ளவனாக வேண்டும். தனது மனம் எனும் ஆராய்ச்சிக் கூடத்திலே, தனக்குத் தானே உலகத்தின் எல்லாவிதமான சித்தாந்தங்களையும்,- உண்மைகள் எனப் பிரமாதப்படுத்தப் படுகிறவைகளை யெல்லாம் – சோதித்து அறியவேண்டும். உண்மை தான், அறிவின் துணையோடு, மனிதனின் வழிகாட்டியாய், தலைவனாய் திகழ வேண்டும்.

இவ்விதம் தேர்ந்த உண்மையைப் போற்றுவது தான் உள்ளத்தின் சிறப்பு – அறிவின் அழகு. இது தான் உண்மையான மனிதம். இதுவே சுதந்திரம்.

மடங்கள், மதகுருக்கள், கட்சிகள், தலைவர்கள்அல்லது, கடவுளர்கள் – ஆக்கிணை இட்டார்கள் என்பதற்காக அறிவை ஒதுக்கி விடுவது உங்களை நீங்களே அடிமைப்படுத்திக் கொள்கிற செயலே யாகும்.

சிந்தித்துப் பார்த்துதானே உண்மையைக்கான வேண்டியது ஒவ்வொரு மனிதனின் உரிமை மாத்திரமல்ல; கடமையும் அதுவே பலம் கொண்டோ, பயம் காட்டியோ, இதைத் தடுக்க முயல்கிறவன் ஒவ்வொருவனும் தன் சக மனிதர்களைத் தாழ்த்தி அடிமைப்படுத்தவே செயலாற்றுகிறான்.

இது இங்கர்ஸால் சொன்னது, உண்மையை இதை விட அழகாக, அழுத்தமாக, யாரும் சொல்லிவிட முடியாது.

வழிகாட்டிகளும் பொதுநலக் கைகாட்டிகளும் – கட்சிகளும் கட்சிக்காரர்களும் – தாங்கள் செய்வதும் சொல்வதும் சரி தானா என்று தங்கள் மனச்சாட்சியிடம் (அப்படி ஒன்று அவர்களுக்கு இருக்குமானால்!) பரிசோதனை செய்து கொள்ளட்டும்.

எல்லோருக்கும் வாழ்வதற்குப் போதிய சந்தர்ப்பங்கள் இல்லை. திறமைக்கும் உழைப்புக்கும் கூடத் தேவையான சந்தர்ப்பங்கள் அளிக்கப்படுவதில்லை, ஆனால், எத்தர்களும் குள்ளநரித்தனக் கள்ள நெஞ்சினரும், வன்னெஞ்சினரும், திறமையற்ற ஆடம்பரக் காரர்களும், வாய்ப்பேச்சு வீரர்களும் – கோளாறான சமுதாய அமைப்பு முறையால் மேற்படியிலும் முன்னிடத்திலும் நிற்க முடிந்திருப்பதால் – ‘தலைகால் தெரியாமல்’ என்பார்களே அப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள், இவர்களது புல்லுருவித்தனம், அட்டைத்தனம், மிருகத்தனம் முதலான இழிதகைமைகளை யெல்லாம், யாரும் கேட்பாரில்லை. சமயத்துக்குத் தக்கபடி ‘குல்லா’ மாற்றியும், சட்டைகள் மாற்றியும் மக்களை ஏமாற்றித் தாம் வாழ விரும்புகிற – வெளிச்சம் போட்டுத் திரிகிற – வீணர்களுக்கும் அவர்களின் வீணத்தனர்களுக்கும் சாவுமணி அடிக்கப்படும்; மக்கள் எல்லோருமே சிந்தித்து, உண்மைகளை உணர்ந்தால், சொல்கிறவர்கள் பேச்சை எல்லாம் உண்மை என நம்பி மதிமயங்காமல், தாங்களும் எண்ணி உணர முடிந்தால். ‘நமக்கென்ன; கேட்கிறவங்க கேட்பாங்க’ என்று தட்டிக்கழிக்க முயலாமலிருந்தால்.

பலரை வதை செய்து, சுரண்டி, மனிதத் தனத்தைக் காவு கொடுத்துத் தாம் வாழமுயன்றவர்களை யாரும் ‘கேட்டதில்லை’ இது வரை, இப்பொழுதும் கேட்பாரில்லை; இனியும் யாரும் கேட்கப் போவதில்லை – மக்கள் அனைவரும் தங்கள் சக்தியை உணராமல் போனால்; தங்கள் திறன் உணர்ந்து தம் உரிமைகளை வலியுறுத்தாமல் போனால்.

பிறப்பு, அந்தஸ்து, பொருள் பலம் என்று போலிக் காரணங்கள் காட்டி மனிதப் பண்பை மதியாதவர்கள் – மானுஷிகத்தை கௌரவிக்க விரும்பாதவர்கள் – உயர் நிலையிலே வாழ முடிகிறவரை, சந்தர்ப்பங்களை யெல்லாம் தாங்களே பயன்படுத்திக்கொண்டு, சுயநலக்கோட்டையை அரண் செய்து வரும்வரை, சுரண்டலும் பஞ்சமும் பசி பட்டினியும் ஏழ்மையும் வறட்சியும் இவற்றின் தாயாதிகளும் தான் வீட்டிலும் நாட்டிலும் கூத்திடும்.

கண் துடைப்புகளாக பெரிய மனிதர்களும் செல்வர்களும் தான தர்மங்கள், பொது ஜனநிதிகள், அது இது என்று விளம்பரப்படுத்தி மேலும் மேலும் தங்களுக்குப் புகழ் தேடிக்கொள்வார்கள். அதை ஆதரிப்பதனால் எவ்விதமான பயனும் கிடையாது. தலைமை பீடங்கள் எல்லாம் பதவிமோகம், அதிகாரம் செய்யும் மோகம், பண மோகம் முதலியவற்றின் அஸ்திவாரத்திலே அமைக்கப் பட்டவை தான் என்பதை காலம் அவ்வப்போது நமக்கு உணர்த்தி வருகிறது.

காலம் உணர்த்திய பிறகு தான் மக்களில் பெரும் பலரால் உணரமுடிகிறதே தவிர, உரிய காலத்தில் உள்ளது உணர்ந்து சரியான சமயத்தில் தட்டிக் கேட்க முடியவில்லை. ஏன்? ஆரம்பம் முதலே மக்களின் ஆட்டு, மந்தைக் குணத்தை வளர்த்து தலைமை பீடத்துக்கு சரியான பூச்சு பூசிபலப்படுத்திக் கொள்வதால். உரை ஏமாற்றி, உலகோரை அறியாதவர்களாக்கி, மனிதப் பண்பை ஒடுக்கி, தாம் வாழ்வோரை யார் கேட்பது? மனிதர்கள் தான் கேட்க வேண்டும். சிந்தித்து உண்மை உணர்ந்து போலித்தனங்கள அம்பலப்படுத்திக் கேட்க வேண்டும்.

ஆனால், மக்களிடையில் தாழ்மை மனோபாவமே விதைத்து வளர்க்கப்படுகிறது. அவர்கள் சூழ்நிலைகளும் வாழ்க்கையின் கதியும் அப்படி ஆக்கிவிடுகிறது. ‘தலை நிமிர்! விழி, எழு, உணர்!’ என்று கோஷிக்கப்பட்டாலும், மனிதரில் அநேகர் மண்ணை நோக்கிக் குனிந்து தாழ்ந்தே விழுகின்றனர்.

‘நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையும்’ அணி செய்ய மக்கள் உலவுவதற்கு, வஞ்சிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு சகல வாழ்க்கை வசதிகளும் கிட்ட வழி பிறக்க வேண்டும். பிரசாரங்கள், பேச்சுகள், போதனைகள், உபதேச மகாத்மியங்களினால் எல்லாம் பயன் கிடையாது. வாழ வழி காட்டும் திட்டங்களிட்டுச் செயலாற்றவேணும். எல்லோரும் வாழவேண்டும். வாழ உரிமைவேண்டும். அது தான் உண்மையான சுதந்திரம்.

– கேட்பாரில்லை, கோரநாதன் (வல்லிக்கண்ணன்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1949, சாந்தி நிலைய வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *