கூத்தனின் நரகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 3,793 
 
 

தென் நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்கும் இறைவா போற்றி போற்றி என்பது எப்படியோ சிவலிங்கத்தின் மனதில் சுயம்பு லிங்கமாகத் தோன்றிவிட்டது. நம்பிக்கை அற்ற சிவலிங்கத்தின் மனதில் நம்பிக்கை விதையாக விழுந்து சட்டென்று ஒரு கணத்தில் ஆழமாகப் புதைந்து கொண்டது. இத்தினை நாளும் விளங்காதது அன்று விளங்கியதான பிரமிப்பு அவனை ஆட்கொண்டது. அவன் அதைக் கேட்கவில்லை. அதுவாக அவனிடம் அது வந்து இறங்கியது. இதுவரை வாழ்ந்ததிற்கு இருந்திராத அர்த்தம் இப்போது வாழ்வதற்கு இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. இருந்தும் அவனிடம் நம்பிக்கை விதை மட்டும் தான் இருந்தது. அதை மரமாக்க வேண்டும் என்கின்ற அவா மனதில் காய்ந்த மரத்தில் பற்றிய தீயாக இடைவிடாது கனன்றது.

பிரபஞ்சத்தைக் கூத்தனுக்குள் வைத்து ஆலயத்தை அறிவியலோடு இணைத்த தலம் என்கிறார்கள். என்றோ தோன்றி… இன்றும்… என்றும்… என்று மனிதக் காலத்தை வென்ற மகத்தான தலம். பிறப்பின் பலனே கூத்தனின் தரிசனம் அல்லவா என்று சிவலிங்கத்திற்குத் தோன்றியது. சிவலிங்கம் முடிவு செய்தான்.

கிழக்கு வீதியில் ஒரு விடுதி. இராமன் சீதையை தீக்குழிக்க வைத்து அதனால் புனிதம் நிரூபித்தது அந்தக் காலம். எல்லோரையும் தீக்குளிக்க வைக்கும் மனித பாவத்திற்கான இறைவன் தீர்ப்பு இந்தக் காலம். அது எங்கும்… எதிலும்… என்பதான சைவத் திருநாடு. மதியம் ஒரு மணி இருக்கும். இன்று பிற்பகல் அண்டத்தையே ஆடுகளமாக்கிய அவன் ஆலயத்திற்குள் பிரவேசிக்க வேண்டும் என்கின்ற பேரவா. இப்போதே செல்ல வேண்டும் என்பதுதான் அவன் ஆசை. ஒன்று கோயிலில் பூசை இப்போது நடக்காது. அடுத்தது அக்கினிச் சுவாலை உச்சத்தின் உச்சியில். சாப்பிட்டுச் சிறிது நேரம் இளைப்பாற எண்ணிச் செயற்பட்டான். இன்று சைவம்தான். சிதம்பரத்தில் சைவம் தான் மட்டும் விற்கிறார்கள் என்று இல்லை. அசைவமும் பல கடைகளில் விருந்திற்குத் தயாராகத்தான் இருக்கிறது. சரி… கண்ணப்பனால் சுவைத்து சுவை என்று அறிந்த பண்டி இறைச்சியைத் திருவமுதாய் ஏற்று மகிழ்ந்தவர் தானே அந்தக் கூத்தன்? எளியவர்க்கும் எளியவரான அவர் உண்மையில் எதற்கும் கோபிக்க மாட்டார். என்றாலும் இடைத் தரகர்கள் நிறையவே கோவிப்பார்கள். அன்பு என்கின்ற உண்மைப் பொருளை விட்டு, மனித அழுக்கு மூட்டைகளைப் பெருமையாகத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அலையும் மனிதக் கூட்டம். அவர்களின் ஆச்சாரச் சண்டித்தனச் சாம்பிராச்சியங்கள். உண்மைப் பக்கதிக்கு மதில் போட்டு காசை எதிர்பார்க்கும் அவர்கள் கோட்டைகள்.

ஏதோ ஒரு கடையில் காரக் குழம்போடு மதியச் சாப்பாடு சாப்பிட்டு முடிந்தது. காய் கறி இல்லாத போது அம்மா வைத்துத் தரும் வெந்தயக் குழம்பு சிவலிங்கத்திற்கு ஞாபகம் வந்தது. அதைத்தான் இவர்கள் காரக் குழம்பு என்கிறார். என்ன பெயர் சொன்னால் என்ன வெந்தயக் குழம்பிற்கே ஆன சுவை தனி. மற்றவை அதன் பின்பே.

சிவலிங்கம் குளித்து வேட்டி அணிந்து புறப்பட்டான். போகும் இடம் எல்லாம் திருநீறு கொண்டு போக முடியாது. கோவில் வாசலில் பூசிக் கொண்டு போகலாம் என்கின்ற நம்பிக்கையோடு கோயிலை நோக்கி மிகவும் வாஞ்சையோடு சென்றான். முதலில் காலில் இருக்கும் பாதணிகளைக் காவலுக்குக் கொடுத்து கடவுளிடம் செல்ல வேண்டிய இன்றைய தமிழகத்தின் யதார்த்தத்தை அனுசரித்து, சிவலிங்கம் உள்ளே சென்றான். உள்ளே சென்றவன் பாலை வனத்தில் தாகம் எடுத்தவன் தண்ணீரைத் தேடுவது போலத் திருநீறு தேடிக் களைத்து, அதைத் தவிர்த்து, அந்நியமான வெறும் நெற்றியோடும், கூத்தனைத் தரிசிக்கும் அகம் நிறை ஆவலோடும் மேலும் மூலஸ்தானம் நோக்கிச் சென்றான்.

சிவலிங்கத்தின் மேனியின் பளபளப்பு பெண்களைக் கவர்ந்ததோ இல்லையோ தீட்சிகரைக் கவர்ந்து இருக்க வேண்டும். வாகனத்திற்குத் தடை நிறுவி நிறுத்த நிற்பது போல ஒரு மேசையைப் போட்டு தில்லை நடராசரின் அருளைப் பணத்திற்கு இனாமாக்கும் அருமையான காட்சி அது. இது எந்த மார்க்கம் என்பது சிவலிங்கத்திற்கு விளங்கவில்லை. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற மார்க்கத்தோடு லஞ்சம் ஒரு மார்க்க ஆகிறதா? கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் தரகனாகக் கட்சி பிரிந்த சில மனிதர்கள். மனதை விட்டுப் பிறப்பால் வரும் என்று நம்பும் மானிட அதர்மம். உடலை விற்பவள் வேசி என்றால் இறைவா உன்னை விற்பவர் என்று சிவலிங்கத்திற்கு ஒரு கணம் எண்ணத் தோன்றியது. பொருளுக்காக இறைவன் அருள் தருவார் என்றால் அவரை விற்பதில் தப்பு இல்லைப் போலும்? அதுவே உண்மையானால் உண்மைப் பக்தனுக்கு அங்கு என்ன வேலை? சிவலிங்கத்திற்குத் தில்லை நடராசரைத் தரிசிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் மனதில் இருக்கவில்லை. ஆனால் தீட்சிகர் வழிமறித்து கையைப் பிடித்து இழுக்கும் நந்தியானதால் ஆலய தரிசனத்திற்கு எந்தவித தொடர்பும் அற்ற அவரது பொருளாதார அர்த்தம் நிறைந்த கேள்விகளுக்குப் பதில் அழித்து, தீட்சிகரின் அடங்கா மோகமான காசைக் கொடுத்து, தரகரானன அவர் கூறிய தாரக மந்திரமான பெயர்களும் நட்சத்திரமும் எழுதிக் கொடுத்து முடிந்த போது சிவலிங்கத்திற்கு வியர்த்து ஒழுகத் தொடங்கிவிட்டது. இத்தோடு தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டும் என்று சிவலிங்கத்திற்கு அப்போது அவன் எண்ணி வந்ததிற்கு எதிராக எண்ணத் தோன்றியது.

அங்கிருந்து தப்பித்து வந்த சிவலிங்கத்தை வேறு ஒரு தீட்சிகர் மறிக்க இது என்ன கோயிலா அல்லது சந்தையா என்கின்ற கடுப்போடு ஆலயத்தைச் சுற்றி வந்து தில்லைக் கூத்தனுக்கு நடக்கும் ஆராதனைகளைத் தரிசித்தான். தில்லைக் கூத்தனைப் பணம் அற்றவர்கள் கீழே நின்று தரிசிக்க வேண்டும் என்றும் பணம் கட்டி அனுமதிச்சீட்டுப் பெற்றவர்கள் மட்டும் அவன் அருகே சென்று தரிசிக்கலாம் என்றும் மனிதர்களுக்கும் கடவுளுக்கும் இடையே ஆன தரகர்களின் சட்டம் பல ஏழைகளைத் தூரே வைத்துக் கொள்ளப் பலர் கீழே நின்று தரிசனம் பெற்றனர். அவர்களோடு சிவலிங்கம் நின்று கொண்டான். கடவுளின் அருகே லஞ்சம் கொடுத்துச் செல்ல வேண்டியது இல்லை. அன்பிருந்தால் கடவுள் எமது இதயத்தில் குடியிருப்பான் என்பது அந்த ஏழைகளின் பிரார்த்தனையாகச் சிவலிங்கத்திற்குத் தெரிந்தது.

அவன் கண்களில் கூத்தனைப் பார்க்க நீர் கோர்த்துக் கொண்டது. கடவுள் வியாபாரம் ஆகிய பின்பு, அவன் சிலை சொல்லும் அர்த்தமும் மனதில் இல்லை. கலை சொல்லும் அர்த்தமும் மனதில் இல்லை. பிரபஞ்சத்தையே ஆடுகளமாக்கிய பிரமிப்பும் அங்கே சற்றும் இல்லை. கடவுளை மனிதன் ஆண்டால் அவனின் ஈன வேற்றுமைக்கு உட்பட்டவனே கடவுளும் ஆகிறான். தரகர்கள்… அவர்களின் சத்தங்கள்… தரகர்களின் பழம் பொக்கிசமாக எங்கோ எதையோ தொலைத்து விட்டோம் என்பது விளங்கியது. கூத்தன் பக்தர்களைப் பார்த்து கூத்தாடவில்லை. காசிற்காக… தீட்சிதர்களின் தெருப் பிச்சைக்காரனாக… ஐயோ என்றது சிவலிங்கத்தின் வாய் அவனையும் மீறி. அது கூத்தனின் குரலா? அவனுக்குள் அமைதி இல்லை. ஆனந்தம் இல்லை. கூத்தனைப் பார்த்து அழக்கூட முடியவில்லை. உள்ளே மூச்சு முட்டுவது போல இருந்தது. நெஞ்சு வலிப்பதாக உணர்ந்தான்.

இருந்தும் நீ உண்மைக் கூத்தனாக வேண்டும் என்று பிரார்த்தித்த வண்ணம் சிவலிங்கம் வீதி சுற்றி வந்தான். கிழக்குப் பக்கமாக உள் வீதியில் ஏதோ பறவை அவன் மீத எச்சம் செய்தது. நீ வெளியே போ என்றது. உன்னைக் கழுவிக் கொள் என்றது. மேலும் உள்ளே நிற்காதே என்றது. பக்கத்தில் பிரசாதம் விற்றுக் கொண்டு இருந்தார்கள். சீ என்று சிவலிங்கம் விலகிக் கொண்டான். கூத்தன் நெஞ்சிற்குள் இருக்கிறான். அசுத்தப்பட்ட அருங்காட்சியகத்தில் அல்ல என்பது விளங்கியது.

சிவலிங்கத்திற்கு அதற்கு மேல் அங்கு நிற்கப் பிடிக்கவில்லை.

சில கணங்களில் சிவலிங்கத்திற்கு இந்த அனுபவம் என்றால்? நிரந்தரமாக… என்றும்… எப்போதும்… தப்ப முடியாது தரகர்களிடம் அகப்பட்ட கூத்தனுக்கு? அண்டமும் பால்வெளியும் அவன் வசப்பட்டாலும் மனித சிறையையும்… அங்கு நடக்கும் அற்புத லீலா வினோத வியாபாரத்தை மீற முடியாத அவன் இருப்பும்? தனக்குக் கிடைத்ததே போதும் என்கின்ற திருப்தியோடும், எப்போது அடுத்த பேருந்து சிதம்பரத்தில் இருந்து என்கின்ற நினைவோடும், கோயிலில் இருந்து வெளியே சென்றான் சிவலிங்கம். ஆயுளுக்குமான அவன் தரிசனம் முடிந்தது.

– ஜூலை 25, 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *