கூச்சமில்லாமல் ஒரு பேனா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 10, 2023
பார்வையிட்டோர்: 690 
 
 

ஜீவாவை தற்செயலாகத்தான் மறுபடி சந்திக்க நேர்ந்தது.

எனது மீசை மழித்த முகமும் வாழ்வின் போராட்டங்களில் பின்வாங்கிய தலைமுடியும் மீறி சின்ன வயசு அடையாளமான சோடா பாட்டில் மூக்குக் கண்ணாடி ஜீவாவுக்கு என்னை அடையாளம் காட்டியிருக்க வேண்டும். “என்னடா சங்கர்.. எப்படி இருக்கே”

கல்யாண மண்டபத்தில் முதல் நாள் விழா. பெண்ணின் தகப்பனார் இலக்கிய ஆர்வலர். கவிதைத் தொகுப்பு வெளியிட்டு பிரபலங்களை வரவழைத்து இலக்கியக் கூட்டமாய் நடத்திக் கொண்டிருந்தார். உள்ளூர்க்காரன் என்கிற முறையிலும் குடும்ப பரிச்சயம் உள்ளவன் என்பதாலும் நானும் வந்திருந்தேன்.

உண்மையில் என் அப்பாவுக்குத்தான் பழக்கம். வலது கை, வலது கால் ஒத்துழையாமை இயக்கம் நடத்திக் கொண்டிருப்பதால் அப்பாவால் வரமுடியவில்லை. என்னை வற்புறுத்தி அனுப்பியிருந்தார். சுந்தரேசய்யரின் ஆசிகள் என்று எழுதப்பட்ட பதினொரு ரூபாய் கவர் என் சட்டைப் பையில் இருந்தது.

ஜீவா என்னுடன்தான் படித்தான். கதை கவிதைகளில் அப்போதே நாட்டமுண்டு. அதை விடவும் என்னைக் கேலி செய்வதில். பள்ளி இறுதி வகுப்புடன் என் படிப்பு முடிந்து போக அவன் எல்லை விரிந்து போனது.

ஒரு வார இதழில் அவன் கதை – பாத யாத்திரை – நகைச்சுவையுடன் யதார்த்த அரசியலைப் படம் பிடித்துக் காட்டி எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது. அதன் ஆசிரியருக்கு நான் எழுதிய வாசகர் கடிதத்தைப் பார்த்து விட்டு பதில் போட்டிருந்தான்.

‘சங்கரா.. எப்படி இருக்கே.’

உள்ளூர் பிள்ளையார் கோவில் என்னை வாழ வைத்துக் கொண்டிருந்ததை அவனுக்கு எழுத எனக்கு விருப்பமில்லை. பதில் போடாமல் விட்டு விட்டேன். ஜீவா இப்போது மிகப் பிரபலம். சட்டென்று அவனைச் சுற்றி ஒரு கூட்டம். என்னைப் புறந்தள்ளி விட்டு நகர்த்திப் போனது. முன்வரிசையில் அவனை அமர வைத்தனர்.

விழா ஆரம்பித்து விட்டது.

பெண்ணின் தகப்பனார் மேடையேறினார்.

“வழக்கமான மாப்பிள்ளை அழைப்பை விட இலக்கிய அழைப்பாக வைத்துக் கொள்ள விரும்பினேன். ஒத்துழைத்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.”

ஒவ்வொருவராகப் பேச அழைத்தார்.

ஜீவாவின் அருகில் அமர்வதைப் பெருமையாக நினைத்து ஒரு கூட்டம் சூழ்ந்திருந்தது. புன்னகை மாறாமல் தணிந்த குரலில் அவன் பேசுவதை தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

நல்ல வேளை அப்பா இங்கு வரவில்லை. அப்பாவை அவன் என்னமாய் விரட்டியிருக்கிறான்.

‘அது என்ன.. செத்துப் போனவங்களுக்கு நீங்க செய்யற சடங்கு தெரியப் போவுதா.. இப்ப சொன்னீங்களே.. அந்த மந்திரம்.. அதுக்கு அர்த்தம் என்ன.. நீங்க சொன்னது இதோ இவருக்கே புரியலையே.. இவரோட அப்பா.. அதுவும் ஆவி.. எப்படி புரிஞ்சுகிட்டு வருவாரு’

கூட நின்றவர்கள் கேலியாகச் சிரிக்கவும் அப்பாவால் பதற்றத்தை அடக்க முடியவில்லை. எதிரே வெற்றிலை பாக்கு பழத்துடன் பத்து ரூபாய் நோட்டு காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது.

‘இதுக்குத்தானே.. இந்த பொய்.. இல்லியா’

ஜீவா நிதானமாகக் கேட்டதும் அப்பா சட்டென்று எழுந்து விட்டார். எதுவும் பேசாமல் தமது கைப்பையுடன் வந்து விட்டார். அன்று மாலை அவரை அழைத்திருந்தவன் வந்து மன்னிப்பு கேட்டு தட்சணையை நீட்டினான்.

“வேணாம்பா.. “

பிடிவாதமாய் மறுத்து விட்டார்.

அப்பாவின் வெளிப்படாத சோகம் என்னை ஏதோ ஒரு விதத்தில் பாதித்திருக்க வேண்டும். ஜீவாவுடனான என் நட்பு அதன் பிறகு ஒரு வரையறைக்கு உட்பட்டே இருந்தது. முழுவதுமாய் அவனை என்னால் விலக்கவும் முடியவில்லை. அவனை கருத்து ரீதியாக என்னால் ஏற்க முடியாவிட்டாலும் அவனின் தர்க்க ரீதியான பேச்சு என் ரசனையைக் கவர்ந்திருந்தது.

கூடவே அவனது இலக்கிய முயற்சிகளும். அருமையாக எழுதுவான். நண்பர்கள் மத்தியில் அவன் எழுதியதை ஒருவர் படிக்க பிறர் கேட்டு கைதட்ட என்று அமர்க்களமாய்ப் பொழுது போகும்.

‘ஏண்டா.. அப்பாவை அவா எவ்வளவு அவமானப்படுத்தினா. அப்புறமும் அவாளோட என்ன சகவாசம்?’

அம்மாவிடம் தைரியமாகப் பேச முடியும்.

‘இல்லம்மா. அவன் ரொம்ப புத்திசாலி.

என்னைச் சுற்றி ஆயிரம் மூகமூடிகள்.

நான் மட்டும் முகமற்று.

எப்படி இருக்கு பார்த்தியா..’

‘புரியலைடா’

‘அப்பாவின் பிரியம் கூட
அம்மாவின் மேல்
வன்முறையாய்..
இது புரியறதாம்மா.’

அம்மாவுக்குப் புரிந்தது. இந்தக் கவிதையும், என் சிநேகமும்.

கூட்டம் ஒரு வழியாய் முடிந்து விட்டது.

ஜீவாவைச் சாப்பிட அனுமதிக்காமல் அவனைச் சுற்றி சிலர்.

திடீரென ஒரு உரத்த குரல்.

வந்த திசை நோக்கித் திரும்பினால் அவரும் கவிஞர்தான்.

‘மடக்குதிரை’ என்கிற பெயரில் ஒரு சிற்றிதழும் நடத்துகிறார்.

“சீரியலுக்கு கதை வசனம் நீதானா.. “

வேகப்பட்டவர்களை அடக்கிவிட்டு புன்னகைத்தான்.

“ஆமாம்”

“ஏண்டா இப்படி ஊரை ஏமாத்தறே.. பணம் கிடைக்கிற காரணத்தால.. டிவிக்கு முன்னால முடங்கிப் போகிற ஒரு கூட்டத்தை உருவாக்கி வச்சிருக்கியே.. எந்த லாஜிக்கும் இல்லாம.. எந்த கதாபாத்திரத்தையும் கேவலப் படுத்தி எழுதற உன் பேனாவுக்கு கூச்சமே இல்லியா..”

“ரேட்டிங்ல அவர் எழுதற சீரியல்தான் நெம்பர் ஒன். தெரியுமா”

யாரோ கத்தினார் ஜீவாவுக்கு ஆதரவாக.

“ஆமா.. ஜனங்களை ஏமாத்தறதுல நெம்பர் ஒன். அடப் போடா. உனக்காக.. உன் வீட்டு ஜனங்களுக்காகத்தான் நான் இப்ப கத்தறேன், பாத யாத்திரை எழுதின ஒரு அற்புத பேனா இன்னிக்கு சோரம் போயிட்டிருக்கு. ரெண்டு பொண்டாட்டி.. பணத்துக்காக எதையும் செய்யற கதாபாத்திரங்கள்.. மெகா சீரியலா வளர்க்க.. நம்பவே முடியாத.. வாழ்க்கையின் நம்பிக்கைகளையே தொலைத்துவிடுகிற காட்சிகள்.. ச்சே.”

சட்டைப்பையிலிருந்து சில ரூபாய் நோட்டுகளை எடுத்து காற்றில் வீசினார்.

“இதுக்குத்தானே.. இந்தப் பொய் வாழ்க்கை”

அதே கோபத்தோடு வெளியே போய் விட்டார்.

“குடிச்சுட்டு வந்து இலக்கியக் கூட்டத்துல கலாட்டா பண்றதே பொழப்பாப் போச்சு.. நீங்க விடுங்க”
ஜீவாவைச் சாப்பிட அழைத்துப் போனார்கள்.

சாப்பிடாமல் வெளியே வந்தாலும் மனசு என்னவோ நிறைந்திருந்தது.

– ஜனவரி 2010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *