குளியல்

0
கதையாசிரியர்: ,
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 17,914 
 

1

துண்டை இழுத்துக் கட்டும்போது அது தொடைவரை இறங்கி கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறது. என்னுடைய குளியல் நேரம் சரியாக 6 மணிக்குத் தொடங்கும். முன்கதவை அடைத்துவிட்டு அறைக்கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு முதலில் ஆடையைக் களைவேன். சிறிது நேரம் நிர்வாணமாக இருப்பதற்கு ஒரே ஒரு வாய்ப்பு குளியலுக்கு முன்பும் குளியலின் போதும் உருவாகும் இந்தக் கணம் மட்டுமே. 5 நிமிடம் வந்து போகும் என்னுடைய நிர்வாணம் ஒட்டு மொத்த உலகையே கேலி செய்வது போல இருக்கும்.

நான்சுவர் இல்லாமல், கதவு இல்லாமல், மறைப்பேதும் இல்லாமல், ஒரு சவர்க்காரம், தண்ணீரை அள்ள ஒரு கை வாலி, இது மட்டும், பிறகு ஒரு திறந்தவெளி. ஆள் அரவம் அடைக்கும் ஒரு சாலைக்கு நடுவில் இப்படி ஆயாசமாகக் குளித்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? சட்டென என் குளியலை இந்த உலகிடமிருந்து மறைத்துக் காட்டும் அனைத்தும் தகர்ந்து நான் ஒரு பொதுவெளிக்கு வருவது போல தோன்றும். குளிக்கும்போது மட்டும்தான் இப்படியெல்லாம். உச்சந்தலையை நனைக்கும் தண்ணீரின் சிலுசிலுப்பு இறுக்கங்களைக் குறைக்கிறது.

கண்களை இறுக மூடும்போது என் குளியலறை காடாகவும், தலையிலிருந்து வடியும் குழாய் நீரின் பாய்ச்சல் அருவி நீராகவும் மாறுகின்றன. குளியலின்போது கண்களை மூடுவது அத்தனை பாதுகாப்பானது அல்ல. ஒரு சமூத்திரத்தில் தவழ்ந்து கொண்டிருப்பது போன்ற பீதி ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒவ்வொருமுறையும் கண்களை மூடும்போது இடைக்குறுக்கலாக அந்தப் பயம் கடலலைப் போல நுழைந்து விடுகிறது. ஆகையால் பெரும்பாலும் நான் கண்களை மூடி குளியலை இரசிப்பதில்லை. அது ஒரு மரணம் வந்து போகும் கணநொடி மாதிரி. குளிக்கும்போது இறந்தவர்களை எனக்கு நன்கு அறிமுகம் உண்டு. அவர்கள் மூச்சி திணறியிருக்கிறார்கள், தண்ணீர் தொட்டியில் வழுக்கி விழுந்து மயங்கி செத்திருக்கிறார்கள். மாறடைப்பு வந்து குரலெழுப்ப முடியாமல் மயங்கி செத்திருக்கிறார்கள், அல்லது வலிப்பு வந்து நுரை தள்ளி செத்திருக்கிறார்கள். குளியல் என்பது உடலைச் சுத்தப்படுத்தும் ஒரு நடவடிக்கை மட்டுமல்ல உடலை அப்புறப்படுத்தவும் செய்யும் எனத் தோன்றியது.

எப்பொழுதும் ஒரு வெளிச்சத்துக்கு ஏங்கி நிற்பது எனக்கு மிகவும் பழக்கமானது. குளிக்கும்போது சன்னலின் வெளிச்சமோ அல்லது விளக்கின் வெளிச்சமோ பிரகாசமாக இருக்க வேண்டும். அது எனது பாதுகாப்பை மேலும் உறுதிபடுத்துகிறது. உடலைக் கவனித்தவாறு குளிப்பதை ஒரு தியானம் எனக் கருதலாம். அது ஒரு விதமான நெருக்கத்தைக் கொடுக்கிறது. குளியல் உடலோடு நம்மை நெருக்கமாக்குகிறது. இப்படியொரு வெளிச்சத்துக்காகத் தவம் கிடந்து குளித்த காலம் அத்தனை சாதரணமானது அல்ல. அப்பா, அம்மா, பெரிய தாத்தா, நல்லம்மா பாட்டி, என எல்லோரும் குளித்துவிட்டு ஓடி வந்து அறைக்குள் ஈர உடலுடன் நுழைவார்கள். அது ஒரு மரணத்திலிருந்து தப்பி வந்தவர்களுக்கான பாவனையைக் காட்டும் நிகழ்வுகள்.

20 பொத்தல்களிருந்து தண்ணீரை வட்டவட்டமாகப் பிரித்து தலையில் கொட்டும் நவீன குழாயைப் பெரும்பாலும் எக்கிப் பார்க்க முடிவதில்லை. அது முகத்தில் தண்ணீரை அடிக்கும் வேகமும் அளவும் அதிகம். சில சமயங்களில் மூச்சி திணறும். ஒவ்வொருமுறையும் முகத்திலிருக்கும் தண்ணீரை வழித்து கீழே தள்ள வேண்டும். கவனத்தை அதிகமாக எதிர்ப்பார்க்கிறது குளியல். முதுகில் வடியும் தண்ணீர் யாரோ விரலால் சுரண்டுவது போலவோ அல்லது தனது கூர்மையான நகத்தால் கீறுவது போலவோ உணர்வைக் கொடுக்கிறது. பயம் தொற்றிக்கொள்ளும் அந்தத் தருணத்தை எப்படி விவரிப்பது எனத் தெரியவில்லை. ஆனாலும் குளிக்கும்போது உருவாகும் மரணப் பயத்தைத் தடுக்க முடியாமல் தவிக்கிறேன். அது தனி கணம் போல எப்பொழுதும் உடலின் பாரத்தைக் கூட்டுகிறது.

“சீக்கிரம் குளிச்சிட்டு வாடா” அம்மா அவசரப்படுத்துவதில்லை. ஆனால் ஏனோ சத்தமாகக்கூட பேச முடியாது வயது முதிர்ந்த அம்மா எப்பொழுதும் அழைப்பது போலவே தோன்றுகிறது. குளித்து முடித்ததும் அறைக்கதவைத் திறந்து பார்த்தேன். அம்மா நல்ல உறக்கத்தில் இருந்தார். குளியலுக்கு ஆன்மா இருக்கிறது.ஒருமுறை உடலைக் கவனித்தேன். உடல் புதியதாகத் தெரிந்தது.

“என்னாடா இவ்ள நேரம் குளிச்சிக்கிட்டு இருக்கெ?”

2

வீட்டுக்குப் பின்பக்கம் தகற கதவு. இடையில் அதைத் தாங்கிப் பிடிக்க இரண்டு தடித்த கட்டைகள். ஒத்தையடி ஜாமான்கொட்டாய்க்கு அப்படித்தான் போயாக வேண்டும். பின்கதவைத் திறந்து வேடிக்கை பார்க்காமல் நடந்தால் மூன்று நிமிடத்தில் போய்விடலாம். அம்பாங் பாசா கம்பத்தில் அந்த ஒத்தையடி பாதையைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. அக்கம் பக்கம் ஒரு 6 குடும்பங்களுக்கு ஒத்தையடி பாதையும் ஜாமான்கொட்டாயும் புழக்கத்திற்குரியது. 6 குடும்பத்தில் மொத்தம் 22 பேருக்கும் ஒத்தையடி பாதையில் இரண்டு ஜாமான்கொட்டாய்கள்தான் இருந்தன. காலையில் எழுந்ததும் அம்மா ஒத்தையடிக்கு சீக்கிரமே போய்விட்டு வருகிறார்.

“இதுல குளிச்சிட்டு வர்றதுக்கு ஆத்துலெ உழுந்து செத்துருலாம் போல..” பின்கதவைத் திறக்கும்போது அம்மா. கதவைத் திறந்து வெளியே போகும் அம்மா திரும்பவும் அக்கதவைத் தொடும்போது வேறு மாதிரியாக இருக்கிறார். ஒத்தையடி ஜாமான்கொட்டாய்க்குப் போய் வருபவரிடம் வெறும் புலம்பல் மட்டுமே மிச்சமிருந்தது. அதன் பிறகு நான் போயாக வேண்டும். கலர் துண்டு, கையில் சவர்க்கார டப்பா. ஜப்பான் சிலிப்பர். ஒரு கைலாம்பு. சில சமயங்களில் மெழுகுவர்த்தி. ஒத்தையடி ஜாமான்கொட்டாயில் பகலிலும் இருள் புகுந்திருக்கும். இரண்டு நனைந்த சட்டங்கள் இடைக்குறுக்காக ஓட, ஆங்காங்கே நெளிந்திருக்கும் தகறக் கதவு. திறக்கிறேன்.

“கிரேங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்”

காதைக் குடையும் நீண்ட ஒலி. ஒரு பெருங்குகைக்குள் நுழைந்துகொண்டிருப்பதாக உணர்த்தும். காத்திருக்கும் இருள் சட்டென பரவும். மீண்டும் கதவை அடைக்கும்போது மனம் படப்படக்கிறது. மேல்சட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் தகறக் குவளையை எக்கி எடுத்துக்கொண்டிருக்கிறேன். மரச்சட்டத் துகல்கள் அசூசையாக இருக்கிறது. கதவின் இடுக்கிலிருந்து ஒளி. காலுக்கடியில் பாம்பின் உடலாக. தலைக்கு மேல் இதற்கு முன் எப்பொழுதோ அங்குத் தொங்கிக் கொண்டிருந்த பல்ப்பின் பிடி அசைகிறது. கையிலிருந்த தகற குவளையை எடுத்து நீர்தோம்பில் போடுகிறேன். போட்டதும் அது காணாமல் போகிறது. நீரின் சலசலப்பு குளிக்க வேண்டியிருப்பதை நினைவுறுத்துகிறது. கலர் துண்டைத் தோளிலிருந்து அகற்றி கதவின் மேல் போடுகிறேன்.

கைலாம்பை சட்டத்தின் இறுகில் சொருகிவிட்டப் பிறகு நீர்த்தோம்பின் மேல் உராய்கிறது. இங்குக் குளிப்பதற்கு குறிபிட்ட நேரம் இருக்கிறது. அதற்கு மேல் பீதி பற்றிக்கொள்கிறது, பகல் என்ற பிரக்ஞை மறக்கடிக்கப்படுகிறது.

“தண்ணீ தோம்புலேந்து ஒரு கை வரும்.. அப்பெ நீ ஒரு ஆழத்துக்குள்ளெ போய்ருவ. இப்படி நெறைய பேரு ஒத்தையடி ஜாமான்கொட்டாய்லெ காணாம போய்ருக்காங்க, தெரியுமா?”

குளிப்பது அல்லது குளித்துக்கொண்டிருப்பது நம்மை ஆழமாக நினைவிழக்கச் செய்யும். குளித்தல் எதையோ நீக்குகிறது. நீங்காமல் அப்படியே இருப்பது ஒரு சவால். கண்களை இறுக மூடுகிறேன். சூழல் கருக்கிறது. பொருள்கள் இருக்கும் இடங்களைத் தொலைக்கிறேன். விரல் நுனி எட்டும்வரைக்கும் ஒன்றுமில்லை. நீர்த்தோம்பு சில்லிடுகிறது. ஆயிரம் இரகசியங்களின் உறைதல். ஏதோ ஒரு வரலாற்று நிகழ்வின் ஒரு முக்கியமான தருணம் அது. பனி மூடிய ஒரு குளத்தில் இறங்குகிறேன். அதுவரை நிசப்தத்தில் செத்துப்போயிருந்த நீரின் மேற்பரப்பு பிளந்து என்னை உள்ளிழுக்கிறது. நீர் நனைக்கும் உடல். உடலின் ஒவ்வொரு பாகமாக அது வளர்கிறது. இதற்கு முன் இருந்த உடலைக் கழற்றி எறியும் சடங்கு. எல்லாம் தீர்ந்துவிடும் என நம்புகிறேன். உடல் கூட்டை நடுங்க வைக்கும் ஒன்றிற்கும் வெறென்ன பெயர் வைப்பது.

ஜாமான்கொட்டாயின் மேல்கூரையைக் காற்றினால் உரசும் நெல்லி மரத்தின் கிளைகள். இன்னும் 5 நிமிடம். யாரோ நடந்து வருகிறார்கள். அல்லது வெளியே காத்திருக்கிறார்கள். அம்பாங் பாசா நடுத்தெரு. இப்பொழுது ஒத்தையடி ஜாமான்கொட்டாயில் குளித்துக்கொண்டிருந்தது யாராக இருக்கக்கூடும்?

“பெரிய தோம்புலெ உழுந்து செத்துட்டியா என்னா? இவ்ள நேரமா?”

3

பெரிய கங்காணி குளிக்கும்போது பழைய பாடலைக் கேட்டாக வேண்டும். ஆகையால் ஏரியலை உயரமாக இழுத்து, கொட்டாய்க்கு வெளியே சட்டத்திலிருக்கும் ஆணியில் எப்பொழுதும் ரேடியோ தொங்கிக்கொண்டேயிருக்கிறது. மேட்டு வீட்டுப் பக்கத்தில் அரை கால் தெரியும் அளவுக்குக் கொட்டாய். யாரும் குனிந்து பார்த்துவிடுவார்கள் என்ற அச்சத்துடன் குளித்து முடித்தாக வேண்டும். காலையில் முனியாண்டி கோவில் பூசாரி நடுக்கத்துடன் குளித்துவிட்டு ஓடும்போது ஒவ்வொருவராகத் தயாராகிவிடுவார்கள். குண்டு தக்கறில் இரவிலேயே நீர் நிரப்பப்பட்டிருக்கும். கைப்பிடி இல்லாத அலுமினிய பானை.

முதல் பெரட்டில் பெயர் கொடுத்தாக வேண்டும். எம்.ஜி.ஆர் பாடலை மட்டும் கக்கும் ஒரே ரெடியோ தன் வேலையைச் செய்து கொண்டிருந்தது. எனக்குப் பாடிக்கொண்டு குளிக்கப் பிரியம். நீர் இறங்கும் உடலின் நடுக்கம் பாடும்போது தெரியும். வெளியே கம்மியான குரலில் பாடிக்கொண்டிருக்கும் ரேடியோவை யார் காலையிலேயே திறந்துவிடுவார்கள் என்பது எப்பொழுதுமே தெரிந்ததில்லை. ரம்மியமான அமைதியில் வானம் வெறிக்கும் குளியல் அப்படியே காலத்தோடு உறைந்துவிடாமல் இருக்கப் பாடல் தேவைப்பட்டது. குறைந்தபட்சம் ஒலி. ஏதாவது ஓர் ஒலி. அது நிசப்தத்தின் நீட்சியை அறுக்கிறது.

தம்பிராஜா அண்ணன் காலை நடைக்கே புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தார். குண்டு தக்கறில் நீர் சலசலக்கிறது. பானையில் அள்ளிய நீரில் சலனமில்லை. தடதடவென தலையில் அது குதித்து பாதம்வரை பாய்ந்தோடுகிறது. உடலின் எல்லாம் பாகங்களிலிருந்தும் வடியும் நீர். துயரம் கழுவப்படுவதாக ஓர் உணர்ச்சி. உடலிலிருந்து ஒரு கணத்த எடை குறைகிறது. மெலிதாகி போக முடியும் என்ற நினைப்பு. குளித்து முடிக்கும்போது கொஞ்சமாவது சதை பிடுங்கப்பட்டிருக்கலாம். பானையின் அடியிலிருந்த அலுமினிய தோல் நீரில் உடைந்து கரைகிறது.

இடுப்புத் துண்டுடன் கதவைத் திறக்கிறேன். இன்னமும் யாரோ குளிக்கிறார்கள். கால்களில் வடிந்து தேங்கும் நீரை உதறுகிறார்கள். உடல் நெளிந்து வலைந்து கொடுக்கிறது. பெரிய கங்காணி ஆப்பிஸ் மணியை எந்நேரமும் அடிக்கக்கூடும். வெகுதூரம் வந்தும் குளிக்கும் சத்தம் நிற்கவில்லை. உடல் நனைந்தபடியே இருக்கிறது.

“டேய்ய்ய் மணியம்… நேரத்தோட குளி”

4

குளிக்கும்போது கண்களை மூடுவது ஆபத்து. குளிக்கும்போது கொஞ்சம் வெளிச்சம் தேவை. குளிக்கும்போது கால் தெரியாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். குளிக்கும்போது வெளியே யாரும் காத்திருக்கக்கூடாது. குளிக்கும்போது மேல்சட்டத்தில் கை வைத்து எதையும் தேடக்கூடாது. குளிக்கும்போது நீர்த்தோம்பை எக்கிப் பார்க்கக்கூடாது. குளிக்கும்போது பிடியில்லாத அலுமினிய பானையைத் தலைக்கு மேலாக வெகுநேரம் சுமக்கக்கூடாது. குளிக்கும்போது பெரிய கங்காணி ரெடியோவில் பாடலைக் கேட்கக்கூடாது. குளிக்கும்போது அம்மா அழைப்பது போல தோன்றினாலும் தியானத்தைக் களைக்கக்கூடாது.

குளிக்கும்போது தூரத்தில் ஒரு பாடல் கேட்கும். அது குளித்தலுக்கே உரிய பாடல். எத்தனை கூர்மையாக்கினாலும் அதன் திசையைக் கண்டறியமுடியாத ஒலிப்பு. குளிக்கும்போது உலகின் மீது அனுமானங்கள் உருவாகிக்கொண்டே போகும். குளியல் ஒரு நிகழ்வாக இருந்து வெறும் உணர்வாக மாறும்.

“யாருப்பா உள்ளே? நான் குளிக்கனும்..கொஞ்சம் வெளிய வாங்க…”

– டிசம்பர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *