(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மதுரையான் கோவிலுக்குப் பக்கத்தில் அரசமரத்தின் நிழலில் பிள்ளையார் உட்கார்ந்திருக்கிறார். பயங்கர விஷத்திற்கு மனிதர் முடி தாழ்த்தி வணங்குவதைக் குறிப்பிடும் நாகங்கள் ஆலம் விழுதைப் போல் கல்லிலே நெளிகின்றன. பக்கத்தில்தான் ஒரு புதர் இருக்கிறது – இருள சாதிப் பெண்ணின் தலைமயிரைப் போல். நான் மேடையில் மேய்ந்து கொண்டிருந்தேன். நான் மாடென்னவோ அல்ல. இருந்தாலும் சைவ சித்தாந்திகள் சொல்வதுபோல் பசுதானே? அதிலும் ஆரறிவுள்ள பசுவானதால் நுனிப்புல்லை மேய்வதில் என்ன உபயோகம்?
ஒரு குளவி பிள்ளையாரண்டை வந்து உட்கார்ந்தது. என்னை நினைத்துக் கொண்டதோ என்னவோ – பிள்ளையார் பீடத்தை முன் மீசையால் தொட்டுத் தடவிவிட்டு, எப்படி வலம் வருவது – இடமாகவோ, வலமாகவோ – என்று மாறி மாறி சோதித்துக் கொண்டிருந்தது.
நான் குளவியின் பக்தியைவிட அதன் உடலின் மேல் அதிக நாட்டம் கொண்டேன். என்ன அற்புதமான ஆகாய விமான உடல்! எவ்வளவு லேசான இடுப்பு! நூல் போன்ற இடை! அந்தி நேரத்துச் செங்காவி போன்ற என்ன இறகுகள். அமாவாசை போன்ற என்ன பளிங்கிருள் உடல்! நட்சத்திரம் போன்ற என்ன கண்கள்!
என் நாட்டத்தைக் கலைத்தது ஒரு நாதம். ஆகாய விமானம் எட்டத்தில் மிதந்து வருவது போன்ற ஆழ்ந்த குமுறல். கண்ணுக்கருகில் பறக்கும் ஈ வான் முகட்டில் பறக்கும் கருடனோ என்ற பிரமையைச் சில சமயம் உண்டாக்குக்கிறதல்லவா? அதே போன்று ஒரு ஓசை. கிட்டத்திலிருக்கும் குளவியின் ரீங்காரம் எனத் தெரிய ஒரு வினாடி பிடித்தது. ஐந்து நிமிஷம் புதரில் மறைந்திருந்து விட்டுத் திரும்பவும் பிள்ளையாரண்டை வந்தது. பிள்ளையாரண்டை வந்து செய்த காரியம் ஒன்றும் இல்லை. பைத்தியத்தைப் போல் குறிப்பில்லாமல் வருவதும் போவதுமாயிருந்தது.
புதரைப் போய் பார்ப்போம் என்று போய் அங்கே ஊன்றிக் கவனித்தேன். குளவியின் கூடு தென்பட்டது. லக்ஷ்மணர் சீதையின் பர்ணசாலையைச் சுற்றி வந்து, சுற்றி வந்து பாதுகாத்தாராமே, கண்களை இமை காத்து வருகிற மாதிரி. அதைப் போல் குளவி கூட்டின் மேல் உட்காருவதும் பறப்பதும் வருவதுமாய்க் கூட்டைப் பாதுகாத்துக் கொண்டிருந்தது.
எனக்கு விஷம புத்தி வந்து விட்டது. கூட்டைக் காக்கக் கூடிய திறமையை அளவிட்டு விட வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. ஒரு சிறியகல்லை எடுத்தெறிந்தேன். அது கூட்டின் பக்கத்தில் விழுந்தது. ஆகாசவாணத்தைப் போல் உஸ் என்று சீறிக்கொண்டு இரண்டு அடி உயரம் குளவி பறந்து உட்கார்ந்தது. ஒரு காரியத்தை சாதிக்க வேண்டுமானால் போகப் போகக் கடுமையான சோதனையைக் கையாள வேண்டும் என்கிறார்கள். எட்டிக் கொட்டையைத் தின்ன வேண்டுமானால் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று பிறகு அளவை உயர்த்திக் கொண்டே போனால், ஒரு மண்டலத்திற்குப் பிறகு மண்டலமிட்டு வரும் கருநாகம் கடித்தால் கூடப் பாம்புதான் சாகுமாம்.
பிறகு ஒரு குச்சியை எடுத்துக் கூட்டைத் தொட்டிழுத்தேன். வேட்டைக்காரனுடைய துப்பாக்கிப் புகைவழியே வேங்கை பாய்வதுபோல் என் குச்சி திரும்பிய வழியே குளவி சீறியது. ஒரு பக்கத்தில் நகர்ந்தேன். குளவி எதிரியைக் காணாமையால் கூட்டுக்கே திரும்பி விட்டது.
குளவி சீறி வந்ததால் மனிதனை இந்த அற்பப் பொருள் எதிர்ப்பதா என்ற அகங்காரம் எழுந்தது. அப்படியா சேதி என்று கூட்டை ஒரு மூலையில் இடித்தேன், கோபத்துடன் குளவி வந்தடித்தது. நான் மறைந்தேன். கூட்டுக்குக் குளவி திரும்பிவிட்டது. தாய், தற்காப்பு என்ற நினைப்புகளைத் தவிர குளவிக்கு கூடு மூளியாகி இருந்தது தெரியவில்லை.
நான் விளையாட நினைத்தவனாகையால், கூட்டை அப்படியே கீழே தள்ளிவிட்டேன். குளவியின் நிலையைப் பார்க்க வேண்டுமே! கோபங் கொண்ட தாயைக் காணேம். பிள்ளைகளை இழந்தபேதை, பரிதவித்துப் புலம்புவதுபோல் கூடு இருந்த இடத்தில் சுற்றிச் சுற்றி வந்ததே ஒழிய என் பக்கம் பாயவில்லை. கூட்டின் முக்காலே மூணு வீசம் பங்கு எவ்வித சேதமுமாகாமல் கீழே கிடந்தும் அது குளவியின் கண்ணுக்குப் படவில்லை. தான் கூடு கட்டிய இடம் காலியானதே அதற்கு சாவின் குறி. அப்படி இப்படி மயங்கி மயங்கி, துயரத்துடன் புலம்புவது போன்ற ஓசை கொஞ்ச நேரம் கேட்டது. குழந்தை இறந்ததென்று உறுதியானதும் தாயுள்ளம் செத்துவிட்டது போல புது ஓசையுடன் கிளம்பி விட்டது.
அதுதான் நாயகனைத் தேடும் ஓசையா?
– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.