குல்மார்கில் ஒரு தில்மார்க்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 22, 2021
பார்வையிட்டோர்: 4,602 
 
 

ஒன்று:தலை நகர் தில்லி!

தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூரைத் தொடர்ந்து காஷ்மீருக்குப்பயணம். அத்தனை நாட்கள் ஒரு குழுவாகச் சுற்றிக் களித்தபின் சென்னை வழியாக இந்தியாவில் கால் பதித்தோம். குழு பிரிந்தது. பரபரப்பான வெளி நாட்டு சூழலிலிருந்து ஓய்ந்து வந்தபின் மீண்டும் தாய் மடியில் தலை வைத்தது போல ஒரு நிம்மதி ஏற்பட்டது! மகிழ்ச்சியாக இருந்தது. மீண்டும் ஒரு மணி நேரத்தில் டில்லி பிளைட். 2014 ஆம் ஆண்டின் வசந்த காலம்! டில்லிக் குளிர் இன்னும் அரைக்கை ஸ்வெட்டர் வரையில் குறையவில்லை! கரோல்பாக்கில் அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒருஓட்டல்.மறு நாள் அதிகாலையில் ஸ்ரீ நகர் பிளைட்

மொத்தக் குழுவில் நாங்கள் 6 பேர் மட்டும்தான் இந்த காஷ்மீர் பயணத்தில்! நானும் என் மனைவி நிர்குணாவும்; ஆசார்யா, அவர் மனைவி ஷாலினி, மகன் கார்த்திக் மற்றும் மகள் ஷில்பா. அவர்கள் உடுப்பியிலிருந்து வந்திருந்தார்கள். கோவையிலிருந்து நாங்கள் இந்தக் குழுவில் இணைந்தோம்.

அமைப்பாளர்கள் தங்களிடம் இருந்த சின்னச் சின்ன விஷயங்களையும் கூட எங்களுடன் பகிர்ந்து கொண்டு விட்டதால் மனதில் ஒரு பீதி தோன்றியது! திரும்பிச் சென்று விடலாமா? நாம் உல்லாசப் பயணம் செல்கிறோமா அல்லது வேட்டைக்காக காட்டுக்குள் நுழைகிறோமா என்றெல்லாம் ஒரு பிரமை. ஓகே. நடப்பது நடந்தே தீரும்! எல்லாம் இறைவன் செயல். என்று சமாதானப் படுத்திக் கொண்டு அடுத்த விடியலை எதிர் நோக்கினோம்.

இரண்டு: இயற்கையின் சுவடுகள்!

மனதுக்குள் மத்தளம்! வெளியில், கைகள் குளிரில் தனி ஆவர்த்தனம். ஏர்போர்ட் கெடுபிடிகளைத் தாண்டி அதிகப் படியான செக்கிங் கைக் கடந்து பிளைட்டில் அமர்ந்தோம். அனைவர் முகங்களும் மரத்துப் போனது போல் பிரமை! ஸ்ரீ நகரில் விமானம் இறங்கியதும் நாம் அழைக்க வேண்டிய உதவியாளர்கள் குறித்து ஏற்கெனவே குழுவில் பதிவு இருந்தது. விமான நிலையயத்தில் இறங்கியதுமே ஒரு வேற்று மண்ணில் கால் பதித்த உணர்வு ஏற்பட்டது. காரணம் புரியவில்லை. என் ஹைக்கூ கவிதை நினைவில் வந்தது:

அமைதிக்கு அழகிய ஒரு ஆலயம்

அதன் பின்னணியில் , ஆன்றோரின் சுவடுகள்!

சுற்றிலும் – அமைதி காக்க ஆயுத போலீசு!”

ஆசார்யாதான் எங்கள் குழுத் தலைவர்.

“நாம் நேராக ஷிகாரா வுக்குப் போய் விடலாம். பின்னர் நமது ப்ளானை முடிவு செய்யலாம். வேறு இடங்கள், வாகனங்கள் குறித்தும் நமக்கு அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். முதலில் நாம் ஜம்மு சென்று திரும்பி விட்டால், காஷ்மீரில் பார்க்க வேண்டிய இடங்களை வெகு சுலபமாகப் பார்த்துவிடலாம். மொத்தம் மூன்று நாட்கள். குளிர்காலமானதால், ரோஸ் கார்டன் அத்தனை ரம்மியமாக இராது. சில இடங்களுக்கு நாம் செல்ல முடியாது. பொருட்கள் வாங்க முயற்சி செய்யலாம். நாம் தங்குமிடத்திலும் பொருட்களை வந்து விற்பனை செய்வார்கள். அப்போது நாம் விலையில் கறாராக இருக்க வேண்டும்.

ஷிகாரா என்பது house boat . அருமையான, தெளிவான ‘தால் லேக்’ சூழலில் உள்ளே ரம்மியமாக ஆடிக் கொண்டிருக்கும் பல ஷிகாராக் களில் ஒன்றில்தான் நாங்கள் தங்குவதற்கான ஏற்பாடு. உணவு, தேனீர் எல்லாம் உள்ளேயே தயாரித்துக் கொடுத்து விடுவார்கள்.

இரண்டு முறை சோதனைக்குப் பின்னர் சாமான்களுடன் காஷ்மீரில் கால் பதித்தோம். டாக்ஸியில் ஏறினோம்!

மூன்று: நம் மண்; அந்நிய வாசம்

எம்ஜியார் திடீரென்று தோன்றி, “காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்” என்று பழைய பாடலை நினைவில் கொண்டு வந்தார். ‘புதிய வானம் புதிய பூமி’ என்ற சிந்தனையைத் தோற்றுவித்தார். சிவாஜியும் .” நான் தன்னந்தனிக் காட்டு ராஜா! என் தோட்டத்தில் எந்த்தனை ரோஜா… நான் தீராத விளையாட்டுப் பிள்ளை…” என்று ஆலோலம் பாடி வரவேற்றார். ‘பனிபடர்ந்த மலையின் மேலே!’ என்றும் பாடிக் கொண்டிருந்தார்.

ரோஜாக்களை மட்டும் பார்க்க முடியவில்லை. தால் லேக் மிகவும் சீராக, சுத்தமாக இருந்தது தெரிந்தது.

“இங்கேதான் மார்க்கெட்” அதிகம் கூட்டம் கூட முடியாது. சில நேரங்களில் ராணுவம் இதை அடைத்து வைத்துப் பாதுகாக்கும். போன தடவை இங்கே தான் துப்பாக்கி சூடு நடந்தது” டாக்ஸி ஓட்டுனர், தெரிந்த ஆங்கிலம் அல்லது இந்தி யில் அவருக்குத் தெரிந்த எச்சரிக்கை மணியை அடித்து வதைத்தார்.

டாக்ஸி இறங்க முற்படும்போதிலிருந்தே நீங்கள் ஒரு வியாபாரப் பொருளாக மாறிவிடுவதை உணர்வீர்கள். அது, உங்களை லேக் கின் நடுவில் நின்று ஆடி அசைந்து நின்று கொண்டிருக்கும் ஷிகாராவிற்குக் கொண்டு செல்ல, சிறிய படகுகளில் நாம் ஏறிச் செல்ல வேண்டிய ஒரு கால் மணி நேரப் பயணம். இதற்கான வணிக பேரம் தான் அந்தக் கூட்டம்.

இறுதியாக ஆச்சார்யா அவரின் பேரம் பேசி முடித்தபின் இரண்டு படகுகளை அமர்த்தினார். நமது லக்கேஜ் உட்பட அனைத்தும் படகு வீட்டிற்கு விரைந்து கொண்டிருந்தது. ” உம்மோடு நாம் ஐவரானோம்” என்று இராமன் குகனிடம் சொன்ன அளவில் அங்கே நட்போ, சகோதர பாசமோ தென்படவில்லை-படகோட்டிகளிடம். இது கங்கைக் கரை இல்லையோ? காஷ்மீரோ?

நான்கு: ஷிகாரா என்னும் படகு வீடு

தால் லேக்கின் நடுவில் ,படகு வீடுகளின் பவனி, அந்த மாலைச் சூரிய வெய்யிலில் கூட மிகவும் அழகாகக் காட்சியளித்தது. வரிசை வரிசையாக பயணிகளின் வரவிற்காகக் காத்திருந்த பலரில் இந்த படகு வீடு காப்பாளர்களும் சேர்ந்துவிட்டனர். கரையிலிருந்து தொடங்கிய வியாபார தந்திரங்கள் படகு வீடு வரை மட்டுமல்லாமல், அதனுள்ளிலும் விரவி, உலவி, உறைந்து வியாபித்து விட்டது நமக்கு விளங்கும்!

அந்நிய நினைப்பு, அதனால் ஏற்பட்ட ஒரு பய உணர்வு; இது நம் சொந்த மண்ணல்ல என்னும் உண்மை இவையெல்லாம் சேர்ந்து அந்த உல்லாசத்தைக் கொஞ்சம் குறைத்ததுதான் மிகப் பெரிய நிஜம்.

பாதிப் பயணத்திலேயே இரு பக்கங்களிலும் விசைப் படகுகளில் வியாபாரிகள். அவர்களிடம் தான் பொருட்கள் தரமானதாகக் கிடைக்கும்-அவர்கள்தாம் நியாய விலையில் விற்பவர்கள் என்ற முகமன் கூறும் நட்பு வியாபாரிகள். உங்களுக்குப் புரிந்த மொழியில் பேச முயற்சி செய்யும் அவர்கள் உங்கள் படகு வீட்டிற்குள் வந்து வியாபாரம் பேசவும் ஆயத்தமானவர்கள். விலை, தரம் இவற்றைக் குறித்து நமக்கு அனுபவம் குறைவு என்பது அவர்களுக்கு நிதர்சனம்.

அவசர கதியில், படகு வீட்டிற்குள் நுழைவது வரை எதுவும் வாங்க வேண்டாம் என்று குழுவினர் முடிவு! படகு வீடு அருமையோ அருமை. அதனுள் பல அறைகள். நடுவே ஒரு வரவேற்பு அறை. உண்ணுமிடம் தனியாக! இரண்டு மூன்று குடும்பங்கள் வந்தாலும் தனியே அறைகள் இருப்பதனால், ஒரே படகில் தங்க இயலும் என்பது மனசில் பிரமிப்பு.

நமக்குத் தேவையான உணவு முறையில் அவர்களுக்குத் தெரிந்த உணவு வகைகள் தயாரித்து வழங்குவர். காசு போனாலும் பசிக்கு ஒரு அமுத உணவு. வெளியில் எங்கே சென்று வேறு உணவைத் தேடுவது? அகழியைத் தாண்டுவது எப்படி?

படகு வீடு குறித்த கதைகள் பல உலா வந்தாலும், குடும்பமாகப் போகும் போது கதைகளின் சாரம் விளங்காது எனலாம்!

மொத்தத்தில், படகு வீட்டில், குளிர் காலத்தின் இடையில் , வசிப்பது ஒரு நல்ல சுகானுபவம்.

ஐந்து: குல்மார்க்கை நோக்கி!

ஜம்மு புறப்படுவது என்பது ஒரு பெரிய பிரயாணம்தான். கடினமான மலைப் பாதை! கல்லும், மண்ணும் கலந்த முகக் கவசம் இல்லாத பயணம். ஜீப்பில் தான் செல்லவேண்டும். பல மலைப் பிரதேசங்களைக் கடந்து சென்று குல்மார்க்கை அடைவது தான் பயணத்தின் முடிவு! குல் மார்கின் எல்லைக்கு மேல் உள்ள பனிச் சிகரங்களுக்குச் செல்ல அவர்களுடைய ஒரு ‘வழிகாட்டி” அவசியம். குல் மார்க்கில் ஒரு பனிப் பிரதேச ஸ்கேட்டிங்க், பனியில் நடந்து உலா, ஒரு சின்ன சிவன் கோவிலில் நின்று கன்னத்தில் போட்டுக் கொள்வது போன்ற பல சுவாரசியமான விஷயங்கள் உண்டு. குல்மார்க்கை அடைவதற்கு முன்னர் கால் நடையாக மலைமுகட்டுக்கு ஏறி, ஆதி சங்கரர் சம்பந்தப் பட்ட சில புராதன நினைவுகளையும் கடவுளையும் பார்ப்பது ஒரு வினோத அனுபவம். இதைத் தவிர, சுடு நீர் சுனையில் கால் நனைக்க ஒரு சான்ஸ். இந்த ஏற்பாடுகள் அனைத்தும் இராணுவத்தின் கட்டுப் பாட்டுக்குள் என்பதுதான் விந்தை.

மேல் கோவிலில் வலம் வரும்போது எனக்கு பெண்கள் காதில் அணியும் ஸ்டட் ஒன்று தரையில் தென்பட்டது. அதைக் கையில் எடுத்துக் கொண்டு நிர்குணாவிடமும், ஷாலினியிடமும் கேட்டேன். மலை இறங்கி போலீசிடம் கொடுக்கலாம் என்று அவர்கள் கருதினார்கள்.

நாங்கள் மேலே செல்லும்போது பல குடும்பங்கள் எங்களை ஒட்டியே வந்து கொண்டிருந்தனர். வேறு குழுக்களில் வந்தவர்கள் உச்சிக் கோவிலைப் பார்த்துவிட்டு மீண்டும் கீழே இறங்கத் தொடங்கினர். அவர்களையும் கேட்டுவிட்டு தீர்மானிக்கலாம் என்று முடிவு செய்தோம்.

கீழே நாங்கள் வரும் சமயத்தில் ஒரு இளம் ஜோடி கொஞ்சம் பரபரப்பாக எதையோ தேடின மாதிரி இருந்தது. அந்தப் பெண்ணின் கையில் ஒரு காதணி. அவர்களிடம் சென்று இந்தக் காதணியைக் காட்டி மேட்ச் செய்தோம் . அவர்கள் முகத்தில் அத்தனை வியப்பு. கிடைக்காதது என்று கைவிட்ட ஒரு பொருள் மீண்டும் கைகளில் ! அதுவும் கோவில் பிரகாரத்தில்!

பேசினதில் அவர்கள் பெங்களூரிலிருந்து பயணம் வந்தவர்கள் என்றும் , காதணியில் ஒன்று திரும்பக் கிடைக்காததால், இந்தக் காதணியையும் கீழே போட்டுவிட ஆயத்தமாக இருந்ததாகவும் அறிந்துகொண்டோம். இறையருளால் மேலே தொலைந்தது, அவர்களைத் தேடிக் கீழே வந்து அடைந்தது வியப்பான வியப்பு.

இதை முடித்துக் கொண்டு நாங்கள் சுடு நீர் சுனையைப் பார்த்துவிட்டு குல்மார்க்கின் எல்லையை அடைந்தோம். அங்கே யிருந்து தொடங்கியதுதான் எங்கள் குழுவில் ஒரு சோக கீதம்.

ஆறு: பனிபடர்ந்த மலையின் மேலே

சொல்லொணாத் துயரம் வந்து சேரும் என்று கட்டியம் கூறிப் பறைசாற்றியதோ குல்மார்க் எல்லை? மனதுக்குப் பிடிக்காத இடத்திற்கு வந்தது போல, அங்கே சந்தித்த மனிதர்களின் நடவடிக்கைகளைக் கண்டு. மனசில் சோகம் கப்பிக் கொண்டது. முதலாவதாக, மேலே செல்ல வேண்டுமானால், உடைகள், காலணிகள் தொப்பிகள், அவர்களின் வாடகைக்குத் தக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். குல் மார்கின் எல்லைக்கு மேல் உள்ள பனிச் சிகரங்களுக்குச் செல்ல அவர்களுடைய ஒரு ‘வழிகாட்டி” அவசியம்-இவர் அவர்களுடைய மலைஜாதி இனத்தவரான பட்டாணிக்காரர்தான். இதைத் தவிர, தனியாக யாரும் மேலே செல்ல அனுமதி கிடையாது என்கிறார்கள். கூட வருபவர் துணையாக வருவார். அவராக வேறு வியாபாரிகளிடம் அவர்களுடைய வியாபாரங்களிலோ தலையிட மாட்டார்— அவருக்கு பெருந்தொகையும் நாள் வாடகையாக க் கொடுக்க வேண்டும். இவை பேசப் படும்போது அவர்கள் காஷ்மீரிகள் என்றும் நாம் இந்தியர்கள் என்றுமே தரம் பிரிக்கப் படுகிறது. இதுவே வேதனைக்குக் காரணம். நாம் அவர்களுக்கு ஒட்டும் அல்ல உறவும் அல்ல. நாம் அவர்களுக்கு அன்று கிடைத்த ஒரு வியாபாரப் பொருள். சுற்றுலாக் கைதி!

பழக்கமற்ற வாடகை மேலாடைகள், காலணிகள் எல்லாவற்றையும் அணிந்து நின்ற போது ஏரு பூட்டி நிற்கும் காளைகளைப் போல உணர்ந்தேன். வழிகாட்டியின் உத்தரவை எதிர் நோக்கி.

முதலில் அந்தக் குன்றின் நடுவே உள்ள கோவிலுக்குப் போங்கள். ஏதாவது வேண்டுமானால் வாங்கிச் செல்லுங்கள்.அங்கே கடைகள் உள்ளன.

பனிப்பாதை வருவதை உணரவில்லை. வழிகாட்டியும் நம்மை வழி நடத்துவதில் கவனம் செலுத்த வில்லை. அப்போதுதான் அது நடந்தது!

முன்னே சென்ற ஆசார்யாவின் மனைவி ஷாலினியைத் தொடர்ந்து சென்று கொண்டிருந்த என் மனைவி நிர்குணா, திடீரென, நிலை தடுமாறி, பனிக் கட்டியில் வைத்த கால் வழுக்கி சரிந்து விழுந்தாள். சற்றே அருகில் சென்று கொண்டிருந்த நானும் இதைக் கவனிக்கத்தான் நேர்ந்தது. கை கொடுக்க இயலவில்லை.

விழுந்ததில் முதுகில் பலத்த அடி பட்டது அவள் முதத்தின் இறுக்கத்தில் காணப் பட்டது. நிற்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல் அவள் மிகவும் பாதிக்கப் பட்டுவிட்டாள். அவளைத் தொடர்ந்து சென்ற நானும் அவளைப் பிடித்துத்தடுக்க இயலவில்லை. உடனே நம் வழிகாட்டி வேறு எதுவும் பேசாமல், உதவிக் கரம் கூட நீட்டாமல் , ” அவர்கள் சென்று வரட்டும். நீங்கள் இங்கேயே இருங்கள். எனக்கு நேரம் ஆகி விட்டது.” என்ற தன் மனிதத்தைப் பறைசாற்றினான். நான் இறைவனை அங்கிருந்தே கைதொழுதுவிட்டு ஒரு மூலையில் நிர்குணாவை அமர்த்தினேன். சுற்றியிருந்த அத்தனையும் மனிதர்கள். எங்கள் குழு மனிதர்களைத் தவிர, வழிகாட்டி உட்பட, யாரும் எதுவும் கேட்க வில்லை. உதவிக்கும் வரவில்லை. நான் அருகில் இருந்த ஒரு பார்மஸியில் டாக்டர் கிடைப்பாரா என்ற விவரம் கேட்டேன். ஒரு ஸ்ப்ரே வாங்கச் செய்து டாக்டர் ஸ்ரீ நகரில்தான் கிடைக்க வாய்ப்பு உண்டு என்றனர். அதற்கும் மேலே நம்மிடம் பேச அவர்களுக்கு விஷயம் ஏதுமில்லை. பண்டைய கால தமிழகத்தில், அரசர்கள் அவ்வப்போது இமயத்தை வென்று, தோற்றவர் தம் தலை மேல் கற்களைச் சுமந்து கொண்டு செல்ல வைத்த தமிழர்கள்- இதோ அவர்களின் பிற்காலப் பிரதி நிதிகள் என்று இப்போது கோபத்தைக் கட்டவிழ்த்துவிடுகிறார்களோ என்று என்னைச் சமாதானம் செய்து கொண்டேன்.

ஆசார்யா குடும்பத்தினர் குல்மார்கிலிருந்து அப்படியே திரும்பலாம் என்று முடிவு செய்தனர். இந்த நிலையில் குல்மார்க் பயணம் பாதிவழியில் முடிவடைந்து, நாங்கள் எப்படி படகு வீட்டிற்குள் சேர்ந்தோம் என்பதே பெரிய கதை. கோவை வரும் வரையில் மிகவும் சோகமயமானதாக த் தொடர்ந்த இந்தக் கதையில் ஆச்சார்யா குடும்பத்தினரின் உதவி சொல்லில் அடங்காது. அவர்கள் தங்களின் பயணங்களைக் குறைத்துக் கொண்டு நிர்குணாவின் உடல் நிலையில் மிக்க அனுதாபம் கொண்டு அவளுக்குப் பல உதவிகளைச் செய்தனர். படகு வீட்டில் மேலும் தங்கி இருந்த நாட்களில் , வெளியில் செல்லாமல் அங்கேயே இருந்து நிர்குணாவிற்கு உதவி புரிந்தனர். இதன் பின்னர்தான் தெரிந்தது, நிர்குணாவிற்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டுவிட்டது என்று. குல்மார்க் பயணம் நிர்குணாவின் அடி மனசில் அழிக்க முடியாத ஒரு துன்பத்தை விதைத்து விட்டது. இதன் காரணமாக, ஆச்சார்யா குடும்பத்தினர் தங்கள் சுற்றுலாவைத் தியாகம் செய்தனர். இன்று நிர்குணா சுகமாக இருக்கிறார். அதன் பின்னால் நல்ல உள்ளங்களின் தியாக மனப்பான்மையும் சினேகமும்தான்.

இந்தப் பயணத்தினால் எனக்கு சில விஷயங்கள் மட்டும் புரிபட்டன. பல இடங்களைப் பார்க்க வேண்டும். பல்வேறு மனிதர்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது உண்மையானாலும் கூட, விரோத பாவம் உள்ள நாடுகள், இடங்கள் இவற்றிற்கு சுற்றுலா செல்வது அதிபுத்திசாலித்தனம் அல்ல. அதே போல, நாம் எத்தனை அருகாமையில் இருந்தாலும் ஒருவரை ஆபத்திலிருந்து காப்பாற்றுவது என்பது நம் கையில் நம் முயற்சியில் இல்லை. இம்மாதிரியான சுற்றுலாக்கள் நமக்கு சிறந்த படிப்பினைகளுடன் சிறந்த நண்பர்களையும் கொடுக்க வல்லவை என்பது நிச்சயம். ஓரு வேளை மற்றவருக்கு உதவி புரிய ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தால், நாம் நமது மனம் மகிழ்ந்து, அவர்கள் மனம் பேதலிக்காமல் செய்யும் உதவி நிச்சயம் வள்ளுவரின் “இடுக்கண் களையும்” நட்பின் உரமாக அமையும்.

*இது கதையல்ல. ஒரு உண்மை நிகழ்வு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *