‘ஒருவரை நம் மனதுக்கு பிடித்து விட்டால் அவர் நல்லவரா? கெட்டவரா? என ஆராயத்தோன்றாது. நம்மோடு பழகியவர் கெட்டவரென பின்னாளில் அறிய நேரும் போது அதுவரை அவரது செயல்பாடுகளில் நாமும் பங்கெடுத்திருப்பதால் நம்மையும் கெட்டவரென உலகம் சொல்லக்கூடும். ஆகவே எவரோடும் ஆராய்ந்து பழக வேண்டும்’ எனத்தோன்றியதால் தினமும் தான் போகும் பேருந்துலேயே பயணம் செய்து, தான் வேலை செய்யும் வங்கியிலேயே வேலை செய்யும் கேசவனுடன் அலுவலகத்தில் பேசுவதைத்தவிர்த்தாள், வேறு பேருந்தில் பயணம் செய்தாள் காஞ்சனா.
“என்னடி காஞ்சனா ஒரே நிறுத்தத்துல எறங்கற, அதுவும் நேர் ரூட்ல போற பஸ்ல கேசவன் போறதால நீ ஏறாம சுத்திப்போற அடுத்த பஸ்ல ஏறிப்போறியாமே….? கேசவன் தான் என் கிட்ட சொல்லி வருத்தப்பட்டான். அவன் நீ நெனைக்கிற மாதிரி கெட்டவன் இல்லடி. பொண்ணுங்களையே நிமிந்து பார்க்காத உத்தமன். நீ வேணும்னா கேசியர் ராதா கிட்ட கேட்டுப்பாரு. நாலு வருசம் ஒரே ஆபீஸ்ல வேலை பார்த்திருக்கறாங்க” என வருத்தத்துடன் பேசினாள் சுமதி.
“கேசவனோட நீ பேசலீன்னும், ஒரே பஸ்ல போகலீன்னும் சுமதி எதுக்காக வருத்தப்படோணும்? கேசவனுக்கு சுமதி ஒன்னு விட்ட மாமா பொண்ணு தான். அவனுக்கு இவளைப்பொண்ணுக்கேட்ட போது வசதி குறைவுன்னு சம்மதிக்காம வேற வசதியான எடத்துல சுமதிய கல்யாணம் பண்ணிக்கொடுத்ததுனால கேசவனுக்கு அவ மேல உள்ள கோபம் போறதுக்கு அவளாகவே ஒரு பொண்ணைப்பார்த்து அவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சு கோபத்தப்போக்கிறோணும்னு பாக்கறா. அவ இப்படி நெனைச்சிருக்கிறது எனக்கு மட்டும் தான் தெரியும்”
என ராதா கூறியதைக்கேட்ட காஞ்சனா சுமதியுடன் பேசுவதையும் குறைத்துக்கொண்டாள்.
“அவன் உன்னைக்கல்யாணம் பண்ணிக்கனம்னு நெனைச்சு ஒரே பஸ்ல வந்தாலும், ஆபீஸ்ல அடிக்கடி பேச்சுக்கொடுத்தாலும் அதுல என்ன குற்றம் இருக்கு? நாம ஒத்துகிட்டாத்தானே… இப்ப என்ன கையைப்பிடிச்சா இழுத்திடப்போறான். அப்படிப்பார்த்த ஒவ்வொரு பொண்ணுங்களும் ஊட்டுக்குள்ளதான் உட்க்காந்துக்கோணும். பஸ்ல போனா பத்துப்பேர் பார்க்கத்தான் செய்வாங்க. ஆபீஸ்லயும் பல பேருக்கு பதில் சொல்லித்தான் ஆகோணும். அதுல யாரு நல்லவன்? யாரு கெட்டவன்னு டிடெக்டிவ் ஏஜன்ஸி கிட்டச்சொல்லி விசாரிக்க முடியாது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைங்கிற பழமொழி இருக்குது. அதுக்காக, கூட வேலை பார்க்கிற எல்லாரையுமே குற்றவாளிகளா, அவங்க பண்ணற தப்ப மட்டுமே பார்த்தீன்னா நீ தனியாளாத்தான் நிக்கோணும். போற பஸ்ல இருந்து, படிக்கிற ஸ்கூல்ல இருந்து, பார்க்கிற வேலைல இருந்து நாம மத்தவங்களோடதான் பயணம் பண்ணியாகனம். தனி ஒருத்தியா வாழவே முடியாது. அதுல அர்த்தமும் இல்லை. மனசுக்கு ஒருத்தரப்புடிக்கும், புடிக்காம இருக்கும். புடிச்சவங்களோட பழகற அதே சமயம் புடிக்காதவங்கள உதாசீனப்படுத்தறதும் கூடாது.
நட்பு இல்லேன்னாலும் பகையா நெனைக்கக்கூடாது. நடிச்சுப்போகவும் பழகனம். கல்யாணம் பண்ணிக்கலாமான்னு ஒரு வேளை அவன் கேட்டாலும், அவனுக்காக மத்தவங்க கேட்டாலும் விருப்பமில்லைன்னு கோபப்படாம சொல்லிப்போட்டா வேலை முடிஞ்சது. அது தானே கிளைமாக்ஸ் . அதுக்கு மேல கட்டாயப்படுத்தவா முடியும்?” என தனது தாய் விசாலாட்சி கூறிய அனுபவம் மிக்க வார்த்தையைக்கேட்ட காஞ்சனா அடுத்த நாள் முதல் கேசவன் செல்லும் பேருந்திலேயே பயணம் செய்யத்தொடங்கினாள்.