அங்கம் 1 | அங்கம் 2 | அங்கம் 3
சாரு! என்று கனவுப்பிரக்ஞையாய் முன்னால் ஒரு குரல் கேட்டது. அவளைச் சுருக்கமாக எல்லோரும் அப்படித்தான் அழைக்கிறார்கள். இரவு பச்சரிசிப் பால் புக்கை சாப்பிட்டுவிட்டுப் படுத்தவள்தான் எப்படித் தன்னை மறந்து இவ்வளவு நேரம் தூங்கினாளோ தெரியாது. கண்ணை விழித்த போது வெய்யில் சுள்ளென்று முகத்தில் அறைந்தது.
முன்னால் செந்தூரன் மெய்மறந்து அவளையே பார்த்தபடி சிரித்துக் கொண்டு நிற்பது தெரிந்தது. அவனுடைய கண்களில் அமானுஷ்ய களை தெரிந்தது. கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் படித்துக் கொண்டிருக்கிறான். அவன் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்பதால் ஒரு
விரிவுரையாளனாகவும் வரச் சந்தர்ப்பமுண்டு. அப்பாவினுடைய கனவு அது. அதன் பிறகு என்ன. அவர்கள் வீட்டில் தேர் ஓடும்.
அவன் குரல் கேட்டுத் திடுக்கிட்டு விழித்துச் சாரதா புல்லரித்துப் போய் எழுந்து அமர்ந்தவாறே கேட்டாள்.
‘என்னண்ணை…..?’
‘இப்ப உனக்குச் சந்தோஷம் தானே’ அவன் கண்கள் ஒளிரக் கேட்டான்.
‘யார் சொன்னது? இதில் சந்தோசப்பட என்ன இருக்கிறது? நான் இதுவரை காலமும் துள்ளித் திரிந்த சுதந்திரத்தையே இழந்து விட்டதாய் உண்கிறேன். லஷ்மி கதை வாசிப்பதற்காக நான் அம்பலவாணன் வீட்டிற்கு ஆனந்தவிகடன் வாசிக்க எவ்வளவு மகிழ்ச்சியோடு போய் வருவேன் தெரியுமா? இப்ப இந்த மகிழ்ச்சியில்லாமல் என்ரை சிறகை விதி வெட்டிவிட்டதாய் நான் உண்கிறன்’
‘இல்லை சாரு.இனித்தான் உனக்காக ஒரு பொற்காலம் காத்திருக்கு’ என்றான் அவன். மனவருத்தம் மாறாமல் கவலையோடு கேட்டாள்.அவள்
‘எதண்ணை எனக்குப் பொற்காலம்…..?’
‘நான் உனது கல்யாணத்தைப் பற்றிச் சொல்ல வந்தேன் ஒரு பெண்ணுக்குக் கல்யாணமென்றாலே வாழ்க்கை களைகட்டும். நீ பார்த்ததில்லை….?’
அவள் இதயம் கனத்து மௌனமாக இருந்தான். என்ன சொல்கிறான் இவன்? பெண்களுக்கு வாழ்க்கை களை கட்டியிருப்பதாய் நான் உணர்கிறேனா? இல்லையே. அவர்களின் உயிரின் ஒளி, வாழ்க்கை என்ற சமுத்திரத்தில் அகப்பட்டு,ச் சூழ்ந்து பெருகி வழியும் அலைகளினால் அடிபட்டுக் கரை ஒதுங்கி அணைந்து போவதையே நான் சாட்சி பூர்வமாகக் கண்டு மனம் வெறுத்துப் போன,எனக்கா இப்படி ஒரு வேதபாடம்.?!
அவள் திடுக்கிட்டு விழித்துப் பிரக்ஞை வந்தவளாய் கூறினாள்.
‘என்னால் அப்படி நினைக்க முடியேலை. வாழ்க்கை என்னை விட்டுத் தூரப்போய்க்கொண்டிருக்கு’
‘இல்லை சாரு, எதற்காகவும் வாழ்க்கையை வெறுக்கக் கூடாது .உனக்காக வருங்காலத்தில் ஒரு தேவபுருஷன் வந்தால். உன்னைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் போது நீ எப்படியெல்லாம் உச்சி குளிர்ந்து போவாய்’.
திடுமென்று அவள் கேட்டாள்
‘இந்த கணக்குப் பிழைக்காது என்று என்ன நிச்சயம்?;’
‘நீ ஏன்’அப்படி யோசிக்கிறாய்,?’
‘போங்களண்ணா, என்ரை கதை இப்ப எதுக்கு?’ இரண்டு பேர் எனக்கு முன்னாலை காத்துக்கொண்டிருக்கினம். முதலில் அவர்களுக்கான கதவு திறக்கட்டும். இப்ப எனக்குப் பசிக்குது. விசுக்கோத்து தாங்கோ என்றாள். அவள் குழந்தைத்தனம் மறாமல்
இதை கேட்டுக் கொண்டு உள்ளே வந்த அம்மா சொன்னாள்
‘குழந்தையின் ஆசையைப் பார் .அதெல்லாம் இப்ப உனக்குக் கூடாது, இந்தா இதைக் குடி’
‘என்னம்மா….?’
‘நல்லெண்ணை விட்டுக் கத்தரிக்காய் சாறு கொண்டு வந்திருக்கிறன். முட்டை இதை விடத் திறம், ஆனால் நாங்கள் சைவமல்லே’.
செந்தூரன் மௌனமாய் அதைக் கேட்டுக்கொண்டிருந்தான். சாரதா மௌனமாய் அந்தக் கசப்பை மென்று விழுங்குவது தெரிந்தது .அவன் கைகளால் ஸ்பரிசித்து அவள் தலையைத் தடவினான். அவள் புல்லரித்துப் போய் மெய்மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அன்பின் ஆழம்,கறைகள் விட்டுப் போன ஓர் உயிhக்; கோடாய் அவன் கண்களில் பிரகாசிப்பதாய் அவளுக்கு உணர்வு தட்டிற்று. வெளிப்படையாக அந்த அன்பின் பிரகாசமே தங்கள் குடும்ப ஊற்றாய் ஓடிக்கொண்டிருப்பது போல் அவள் உணர்ந்தாள். கடைசி வரை இது மாறது என்று தோன்றியது.
அம்மா போய் வெகுநேரமாகி விட்டது. இரண்டாவது அக்கா கல்லூpக்குப் போவதற்காகத் தலைசீவிக் கொண்டிருந்தாள். அவள் பேர் சுபாசினி. சுபா என்று கூப்பிடுகிறார்கள். அவளுடன் பவானி அக்காவும் அம்மாவுக்கு உதவிசெய்த கையோடு கல்லூரிக்குப் போவதற்குத் தயாராகி விட்டிருந்தாள். இருவரும் இராமநாதன் கல்லூரிக்கே போகிறார்கள். அவர்களை அழைத்துச் செல்ல. நேசையாவின் கார் வரும். சுபாவுக்குப் படிப்பில் நாட்டமில்லை. அழகுதான் அவளின் முக்கிய இலக்கு. முகம் பளபளக்கத் தயிர் பூசுவது முதுற்கொண்டு எவ்வளவோ செய்வாள். தான் பெரிய அழகி என்ற நினைப்பு அவளுக்கு. கொஞ்சம் அழகுதான். பளீரென்ற வெள்ளை நிறம். சுருண்ட கேசம். எவ்வளவு இழுத்தாலும் ;படியாமல் முன்நெற்றியில் சுருள்களாக விழுந்துகிடக்கும். கார் வந்து வாசலில் நிலை கொண்ட பின்னர் தான், அவள் ஒப்பனை அலங்காரம் முடிந்து, அவசரமாகப் புறப்பட்டுப் போவது ஜன்னலின் ஊடாகத் தெரிந்தது. சாரதா அதையே கனவுப் பிரக்ஞையாய் பார்த்துக் கொண்டிருந்தாள். இனி அவள் கதையும் இதுதான். அப்பா கிராமத்துப் பள்ளிக்கூடத்துக்கு அவளைப் போக விடமாட்டார்.அக்காமார் மாதிரிப் பெரிய
கல்லூரிப்பிரவேசம் தான். நேசையாவின் காரில்,அவள் ஊர்வலம் பேக வேண்டும். அந்தக்காலமென்ற படியால் சொற்ப வாடகைதான். ஜம்பது ரூபா வாடகைதான் ஓர் ஆளுக்கு.
செந்தூரன் அறையைவிட்டுப் போன பின் மீண்டும் அம்மாவின் நிழல் தெரிந்தது. கையில் பத்தியச்சாப்பாடோடு வந்திருந்தாள்.அதைவிடச் சீரக உருண்டை வேறு. வேப்பிலைக் கொழுந்து சேர்த்து அரைத்தது. அதை விழுங்கின பிறகுதான் சாப்பாடெல்லாம். அவள் ஜன்னல் வழியாகக் கண்கள் ஒளிமங்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.அடுக்களை வாசலில் அப்பாவின் நிழல் தெரிந்தது. அவர் சாப்பிட்டுவிட்டுக் கை கழுவிக் கொண்டிருந்தார். மல்லாகம் பள்ளிக்கூடத்தில் பயிற்றப்பட்ட கணித ஆசிரியராக இருந்து இளைப்பாறியவர் அவர். குட்டையான உடல் வாகு.மாநிறத்தை விடச் சற்று நிறம் கூட.சுமாரான வெள்ளை நிறம். அறிவுக்களை பரந்த விசாலித்த முகம்.அவர் வாழ்க்கை பற்றிய பூரணஅறிவோடு வியாக்கியானம் செய்வதைக் கேட்டுக் கொண்டிருக்கலாம்.அம்மா அதைக் கேட்டு உம் கொட்டுவது அவளது வாழ்வின் இருண்ட சுவடுகளையே பிரதிபலிப்பது போல் ஓர் அவலக்குறியீடாகக் கனதியற்றுக் கேட்கும். இதெல்லாம் ஒன்றுசேரமுடியாத வாழ்வின் எதிர்மறையான நிழல்கள். அம்மாவும் அப்பாவும் இரு துருவங்கள் மாதிரி. அதுவும் அம்மாவுக்கு அப்பா சொந்ந மச்சான்
முறை. அவர்களாலேயே நிரப்ப முடியாமல் போன வாழ்க்கையின் வெற்றிடம் ஓர் அந்நியமனிதன் உறவினால் குறைகளின்றிச் சரிப்பட்டு வருமா? புரியவில்லை. வாழ்வு புரியாத புதிர் போலப்பட்டது.
– தொடரும்…