(1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10
அத்தியாயம் ஒன்று
பனிமூட்டத்திற்குள் அமிழ்ந்துகிடந்த அந்த மலைப் பிரதேசத்தில், காலைக்கதிரவனின் ஒளிக்கீறல்கள் தூரத்தே தெரிந்த மலையுச்சியின் பின்னாலிருந்து பரவத்தொடங்கின. பஞ்சுக் கூட்டங்கள் போல் எங்கும் பரவியிருந்த பனிப் புகார்கள் சிறிது சிறிதாக விலகத் தொடங்கின.
கொழுந்து மடுவத்தை நோக்கி வீரய்யா நடந்து கொண்டிருந்தான். முதன்நாள் இரவு அவனும் அவனது நண்பர்களுமாகச் சேர்ந்து மடுவத்தின் முன்னால் அமைத்த அலங்காரப் பந்தல் இப்போது அழகாகக் காட்சியளித் துக்கொண்டிருந்தது. பந்தலின் முகப்பில் கட்டியிருந்த வாழை மரங்களும், வண்ணக் கடதாசிகளும், கரத்தை றோட்டுவரை தொங்கவிடப்பட்டிருந்த தோரணங்களும், அந்த அதிகாலைப் பொழுதின் இளங்காற்றில் அசைந் தாடிக்கொண்டிருந்தன.
மடுவத்தை வந்தடைந்த வீரய்யா கையிலே கட்டியிருந்த கடிகாரத்தை ஒரு தடவை திரும்பிப் பார்த்தான்
ரொம்ப நேரமாச்சு, இன்னும் ஒருத்தனையும் காணோம்’- முணுமுணுத்துக்கொண்டே தான் கொண்டு வந்த பூக்களை மடுவத்தின் அரைச் சுவரின்மேல் வைத்து விட்டு தூரத்தே தெரிந்த லயங்களின் பக்கம் பார்வையைச் செலுத்தினான்.
சில இளைஞர்களும், சிறுவர்களும் மடுவத்தை நோக்கி ஒற்றையடிப் பாதையில் வருவது பனிமூட்டத்தினூடே மங்கலாகத் தெரிந்தது.
இன்னும் சிறிது நேரத்தில் செய்துமுடிக்கவேண்டிய வேலைகள் யாவும் அவன் மனக்கண்முன் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றின.
இளைஞர்கள் இப்போது மடுவத்தை வந்தடைந்தனர்
“என்ன வீரய்யா, மொதல்லயே வந்திட்டியா? நான் போயி ஆளுங்கெல்லாத்தையும் கூட்டிக்கிட்டு வர நேரமாயிருச்சு” என முன்னால் வந்த இளைஞன் அசட்டுச் சிரிப்புடன் கூறினான்.
“என்னடா ராமு, நீயே இப்புடிச் சொணங்கி வந்தா எத்தினை மணிக்குத்தாண்டா இந்த வேலையெல்லாஞ் செஞ்சு முடிக்கிறது?…ரொம்ப வேலை கெடக்கு… கண்டக்கையா பங்களாவிலையிருந்து நாக்காலி எடுத்துவரணும், கடைக் குப்போய் சோடாப் போத்தல் கொண்டுவரணும்… இந்த எடமெல்லாங் கூட்டித் துப்புரவாக்கணும்.” என்றான் வீரய்யா.
“அவசரப்படாதே வீரய்யா. ஐஞ்சு நிமிசத்தில எல்லா வேலையும் செஞ்சு முடிச்சுப்புடலாம். நான் இப்பவே போயி நாக்காலி கொண்டு வர்ரேன்” எனக் கூறிய ராமு தனது நண்பர்களில் இருவரை அழைத்துக் கொண்டு கண்டக்டரின் பங்களாவை நோக்கிப் புறப்பட்டான்.
பந்தலின் நடுவே போடப்பட்டிருந்த மேசையின்மேல் வெள்ளைத் துணியொன்றை விரித்து அதன் மத்தியில் பூக்கள் நிரம்பி செம்பொன்றை எடுத்துவைத்தான் அங்கு நின்ற ஓர் இளைஞன்.
சிறிது நேரத்தில் ஆண்களும்,பெண்களும்,சிறுவர்களு மாக அநேகர் அந்த மண்டபத்தில் வந்து கூடினர். சிறுவர்கள் ஓடியாடுவதும், கூச்சல் போடுவதுமாக இருந்த னர். ஆண்களும் பெண்களும் கூட்டங் கூட்டமாக நின்று எதைப்பற்றியெல்லாமோ வாயோயாமல் கதைத்தனர். அவர்கள் எல்லோரது முகங்களிலும் மகிழ்ச்சிநிறைந்திருந்தது.
வீரய்யாவின் தங்கை செந்தாமரை அப்போது ஆரத் தித் தட்டுடன் மேசையருகே வந்தாள். செந்தாமரைக்குப் பதினேழு அல்லது பதினெட்டு வயதுதானிருக்கும். தோட்டத்திலிருக்கும் பெண்களில் அவள்தான் அதிக அழகுள்ளவள் என்ற காரணத்தினால், விழாவுக்கு வரும் பிரமுகர்களுக்கு ஆரத்தி எடுப்பதற்கு அவளை ஒழுங்கு செய்திருந் தனர். கொழுந்து நிறைந்த தேயிலைச் செடியைப்போன்று தளதளப்புடன் காணப்பட்ட அவளது வாளிப்பான உட லில் ஒருவகை பூரிப்பு நிறைந்திருந்தது. அவள் தன்னை அலங்கரித்த விதம் அவளது அழகுக்கு மேலும் அழகைக் கொடுத்தது. அங்கு நின்ற இளைஞர்கள் பலரின் கண்கள் அவளது அழகை அடிக்கடி இரசித்துக்கொண்டிருந்தன.
“என்ன வீரய்யா! எல்லா வேலையளும் செஞ்சு முடிச்சிட்டீங்களா?” எனக் கேட்டபடி அங்கு வந்த மாரிமுத் பார்த்துத் தலைவர் பந்தலை ஒரு தடவை சுற்றுமுற்றும் பார்த்தார்.
“என்னங்க தலைவரே, நீங்கதானே மொதல்ல இங்கை வந்து நின்னு எல்லாத்தையும் கவனிக்கணும். நீங்களே பிந்தி வந்தா எப்புடி?” எனக் கேட்கவேண்டும் போல் வீரய்யாவுக்குத் தோன்றியது. ஆனாலும் அவன் எதுவுமே கூறாது தலைவரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்தான்.
நடுவிலே போடப்பட்டிருந்தமேசையைக் கவனித்த தலைவர், “என்ன வீரய்யா இன்னும் மாலையெல்லாம் கொண்டு வரல்லியா?” என யோசனையுடன் கேட்டார்.
“இப்பத்தாங்க பண்டாரம் மாலையைக் கட்டிமுடிச் சாரு. கட்டிமுடிச்சவுடனையே நேரா எடுத்துக்கிட்டு வர்ரேன்” எனக் கூறியபடி கையிலே கொண்டுவந்த மாலைகளை மேசையின்மேல் இருந்த தட்டில் வைத்தான் அப்போதுதான் அங்கு வந்த செபமாலை.
“எத்தினை மாலை கொண்டு வந்திருக்கே?’ எனக்கேட்ட படி மாலைகளைக் கையிலே எடுத்துப்பார்த்தார் தலைவர்.
“மூணு மாலைங்க… ஒரு மாலை தேயிலைக் கொழுந்திலேயே கட்டியிருக்குங்க…” என்றான் செபமாலை.
அப்போது தலைவரின் அருகே வந்த கருப்பண்ணன் கங்காணி, “என்னங்க தலைவரண்ணே, மூணு மாலை போதுங்களா?… தொரைக்கு ஒரு மாலை போடணும்… அப்புறம் கண்டக்கையா வருவாரு… அவருக்கு ஒண்ணு- இனி வர்றவங்களுக்கு வேறு மாலை வேணும்” எனக் கூறியபடி மாலைகளை உற்றுப் பார்த்தார்.
கருப்பண்ணன் கங்காணிக்குத் தலைவரையொத்த வயதுதான் மதிக்கலாம். ஆனாலும் தலையில் வழுக்கை விழாததால் அவர் தலைவரை விட சற்று இளமையானவர் போலத் தோற்றமளித்தார்.
“நீங்க கொஞ்சம் சும்மா இருங்க கங்காணி. இன்னிக்கு தொரை, கண்டாக்கையாவுக்கெல்லாம் யில்ல; மாலை கூட்டத்துக்கு வர்றது நம்ப மந்திரி தானே- அவ ருக்குப் போடத்தான் மாலைகட்டியிருக்கு” எனச் சற்றுக் கண்டிப்பான குரலில் கூறினான் வீரய்யா.
“அப்புடியா வெசயம்! இது என்ன கொழுந்திலை கட்டியிருக்கிற மாலை. ஆள் ஒசரத்துக்கு இருக்கும்போல தெரியுது. இந்த மாலையை யாரு மந்திரிக்குப்போடுவாரு?” எனக் கேட்டபடி பெரிதாக இருந்த மாலையைக் கையில் எடுத்து உயர்த்திப் பிடித்தவாறு ஆச்சரியம் ததும்பக் கண்களை அகல விரித்தபடி கேட்டார் கங்காணி.
“அந்த மாலையை நம்ப தலைவர்தான் மந்திரிக்குப் போடணும். தொழிலாளர்கள் சார்பா தலைவரு போடுற தாலைதான் அந்த மாலையைக் கொழுந்தாலையே கட்டியிருக்கோம்” எனக் கூறிவிட்டு புன்னகை செய்தான் வீரய்யா.
பக்கத்தில் நின்றிருந்த தலைவர் அதைக் கேட்டுத் தலையை ஆட்டியபடி அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தார். அவரது பற்கள் வெற்றிலைக் காவி படிந்து கருமை யாகத் தெரிந்தன.
வீரய்யா ஒலிபெருக்கி சம்பந்தப்பட்ட வேலைகள் மடுவத்தின் யாவும் முடிந்துவிட்டதா எனக் கவனிக்க உள்ளே சென்றான். அவனைத் தொடர்ந்து ராமுவும் செப மாலையும் சென்றனர்.
தோட்டத்து கண்டக்டர் அப்போது மேடையை வந் தடைந்தார்.
“சலாங்கையா” எனப் பணிவுடன் வணக்கம் தெரிவித்த கறுப்பண்ணன் கங்காணி, கண்டக்டர் அமருவதற் க கதிரை ஒன்றை எடுத்துவந்து போட்டார்.
மூக்குக் கண்ணாடியைக் கழற்றி சேட் பொக்கட்டுக்குள் திணித்துக்கொண்டே கதிரையில் அமர்ந்தார் கண்டக்டர். பின்னர் தானணிந்திருந்த தொப்பியை எடுத்து மேசையில் வைத்துவிட்டு, தனது நரைத்த தலைமயிரைத் தடவியவாறு அங்கு குழுமியிருந்தவர்களைக் கண்ணோட்டம் விட்டார்.
“என்னாங்கையா தொரையை இன்னும் காணோங் களே?” தலையைச் சொறிந்தவண்ணம் கண்டக்டரைப் பார்த்துக் கேட்டார் தலைவர்.
‘இப்பதான் தொரை எனக்கு டெலிபோன் பண்ணி னாரு. இன்னும் கொஞ்சநேரத்திலை வந்திடுவாரு” என்றார் கண்டக்டர்.
“நல்லதுங்க! எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிருக்கோமுங்க… மந்திரிமாருங்க தோட்டத்துக்கு வர்ரது இது தாங்க மொதல் தடவை. தோட்டங்களையெல்லாம் இண்ணையிலையிருந்து அரசாங்கம் எடுத்திருச்சு. இனிமே நம்மளுக் கெல்லாம்விடுதலை கெடச்சமாதிரித்தாங்க” எனக்குழைந்து கொண்டார் தலைவர்.
வெளியே நின்றிருந்த ஒரு சிறுவன் அங்கு ஓடி வந்து, “ஐயா ஐயா நாட்டிலருந்து கூட்டமா ஆளுங்க வர்றாங்க” எனத் தலைவரைப் பார்த்துக் கூறினான்.
எல்லோரும் வெளியே எட்டிப் பார்த்தனர்.
மேடையருகே நின்ற செந்தாமரையும் ஆவலுடன் வெளியே பார்த்தாள்.
கிராமத்திலிருந்து தோட்டத்துக்குவரும் ஒற்றையடிப் பாதையில் ஒருவர்பின் ஒருவராக பலர் வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
”ரெம்பப்பேர் வர்றாங்க… இங்கதான் வாறாங்க போலையிருக்கு” என ஆச்சரியத்துடன் கூறினார் தலைவர்.
செந்தாமரையின் உள்ளம் ஒரு கணம் குதூகலத்தில் நிறைந்தது.
“இப்பவே மடுவத்திலை ஆள் நெறைஞ்சுபோச்சு… அவங்களும் வந்துட்டாங்கன்னா நிக்கிறதுக்கே எடம் கெடையாது” என்றார் கறுப்பண்ணன் கங்காணி வியப்புடன்.
சிறிது நேரத்தில் கிராமத்திலிருந்து வந்தவர்கள் மடுவத்தை வந்தடைந்தனர். அநேகர் மடுவத்தினுள்ளே நுழைய முடியாமல் வெளியிலேயே நின்றனர். பார்த்த இடமெல்லாம் தலைகள்தான் தெரிந்தன.
செந்தாமரையின் கண்கள் சனக்கூட்டத்தைத் துழாவின. ஆவலுடன் அவளது கண்கள் சுழன்று வந்தன.
கிராமத்திலிருந்து சற்றுப் பருமனான தோற்றமுடைய ஒருவர் முண்டியடித்துக்கொண்டு மேடையருகே வந்தார். அவரைப் பார்த்ததும், “அட, நம்ப பண்டா மாத்தியா கூட கூட்டத்துக்கு வந்திருக்காரு. மந்திரி வாறாருன்னு நாங்க ஒங்களுக்கு சொல்லக்கூட இல்லியே..” என வியப் புடன் கூறினார் தலைவர்.
“ஏங் தலைவர், நீங்க எங்களுக்கு சொல்லாட்டி நாங்க கூட்டத்துக்கு வரக்கூடாதா?” என அசட்டுச் சிரிப்புடன் கேட்டார் வந்தவர்.
“அப்பிடியில்லீங்க மாத்தியா, மந்திரி நம்ப தோட் டத்துக்குத் தானே வாறாரு; நாங்க தானே கூட்டத்துக்கு ஒழுங்கு செஞ்சிருக்கோம்… அதனால் தாங்க கேட்டேன்.”
“அப்புடி சொல்லவேணாங் தலைவர். இப்ப தோட்ட மெல்லாம் அரசாங்கம் எடுத்திருக்குத்தானே… இப்ப நீங்க நாங்க எல்லாங் அரசாங்கத்து ஆள்தானே. நம்ப எல்லாத்துக்கும் ஒரே மந்திரிதாங்… நம்ப மந்திரி வந்தா நாங்க எல்லாங் வரத்தானே வேணுங்.”
பண்டா முதலாளியைத் தொடர்ந்து அந்த இடத் துக்கு வந்து சேர்ந்த கிராமசேவகர் தனக்குத் தெரிந்த தமிழில் கூறிவிட்டுச் சிரித்தார்.
அப்போது தோட்டத்துரையின் கார் விரைந்து வந்து மடுவத்தின் முன்னால் நின்றது. கூட்டத்தில் போது சற்று அமைதி நிலவியது.
கண்டக்டர் எழுந்து காரின் அருகே சென்று “குட் மோனிங்’ எனத் துரைக்கு வந்தனம் தெரிவித்தார்.
“மந்திரி இன்னும் வரவில்லையா?” என ஆங்கிலத்தில் கேட்டபடி காரிலிருந்து இறங்கினார் துரை.
“இன்னும் வரவில்லை சார். அடுத்த தோட்டத்தில் நடைபெறும் கூட்டத்திலே பங்கு பற்றிக்கொண்டிருக்கி ரென இங்கு வந்தவர்கள் கூறினார்கள். இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவாரென நினைக்கிறேன்” எனக் கூறிய கண்டக்டர் துரையைப் பந்தலுக்கு அழைத்துச் சென்றார்.
துரை அங்கு குழுமியிருந்த சனக் கூட்டத்தைப் பார்வையிட்டவாறு நடந்து சென்று கதிரையில் அமர்ந்தார்.
சிறிது நேரத்தின் பின்னர் ஒரு காரும், அதனைத் தொடர்ந்து ‘ஜீப்’ வண்டியொன்றும் ஒன்றன்பின் ஒன்றாக மடுவத்தின் அருகே வந்து சேர்ந்தன.
மாரிமுத்துத் தலைவர் அவசர அவசரமாக பந்தலின் நடுவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மைக்கின் முன்னால் சென்று, ”அமைதி அமைதி, மந்திரி வந்துவிட்டார்… எல் லோரும் அமைதியாக இருங்கள்” எனப் பதட்டத்துடன் கூறினார்.
பட்டாசு வெடிகள் பலத்த சத்தத்துடன் முழங்கின. துரையும் கண்டக்டரும் அங்கு குழுமியிருந்தவர்களும் மந் திரியை எதிர்கொண்டு அழைப்பதற்காக காரின் அருகே சென்றனர்.
கறுப்பண்ணன் கங்காணி பெருமிதத்துடன் மாலைத் தட்டை ஏந்தியவாறு முன்னே சென்றார்.
துரை முதலில் மந்திரியின் கையைப் பிடித்துக் குலுக்கி அவரை வரவேற்றுவிட்டு, தட்டில் தயாராக வைக்கப்பட்டிருந்த மாலை ஒன்றை எடுத்து மந்திரிக்குச் சூட்டினார். அப்போது பலத்த கைதட்டலும் ‘மந்திரி வாழ்க’ என்ற வாழ்த்தொலியும் வானைப் பிளந்தன.
அடுத்து கண்டக்டர் சென்று மாலை அணிவித்து விட்டு கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். மீண்டும் கர கோஷமும் ‘மந்திரி வாழ்க’ என்ற ஒலியும் பலமாக ஒலித்தன்.
மக்கள் ஒருவரோடொருவர் முண்டியடித்துக் கொண்டுஎப்படியாவது மந்திரியைப் பார்த்துவிடவேண்டு மென்ற ஆர்வத்துடன் முன்னே சென்றனர். மந்திரி எல்லோரையும் பார்த்துக் கரங்கூப்பி வணக்கம் தெரிவித்தார். பண்டா முதலாளி அவரது கண்ணில் பட்டபோது மந்திரி அவரைப் பார்த்து அறிமுகச் சிரிப்பொன்றை உதிர்த்தார்.
ஒலிபெருக்கியில் பேசிவிட்டு மேடையிலிருந்து இறங்கி வந்த மாரிமுத்துத் தலைவர், மந்திரிக்கு மாலை அணிவிப்பதற்காக முன்னே வருவதற்கு எத்தனித்து. சனக்கூட்டத்தின் மத்தியில் அகப்பட்டு முண்டியடித்துக் கொண்டிருந்தார்.
தலைவரைக் காணாத கறுப்பண்ணன் கங்காணி கையில் இருந்த மாலைத் தட்டுடன் அங்குமிங்குமாக அலை மோதிய வண்ணம் இருந்தார்.
அதனைப் பார்த்த செந்தாமரை தன்னை மறந்து களுக்கென்று சிரித்தாள்.
தட்டுடன் மாலையை வைத்துக்கொண்டு அதனை மந்திரிக்கு அணியாது தடுமாறிக்கொண்டிருந்த கறுப் பண்ணனைப் பார்த்ததும் பண்டா முதலாளிக்கு ஒரு யோசனை தோன்றியது. திடீரெனத் தட்டிலிருந்த மாலையை எடுத்து மந்திரியின் கழுத்தில் அணிந்து விட்டு பலத்த குரலில், “அபே மந்திரி துமாட்ட ஜயவேவா” எனத் தன்னிரு கைகளையும் உயரத் தூக்கிக் கோஷமிட்டார்.
அவரைத் தொடர்ந்து அவருடன் வந்த கிராம மக் களும் பலத்த குரலில் ஜயவேவா’ என ஒலியெழுப்பினர்.
மாரிமுத்துத் தலைவர் திகைத்துப்போய் நின்றார்.
தான் மந்திரிக்கு அணிவிக்கவிருந்த மாலையை பண்டா முதலாளி மந்திரிக்குச் சூடிவிட்டு வெற்றிக் களிப்புக் கொண்டாடுவதைப் பார்த்ததும் அவருக்கு ஆத்திரமும் அவமானமும் பொங்கி வந்தன.
மிகப்பெரிய கொழுந்து மாலையைத் தனக்குச் சூடிய பண்டா முதலாளியின் முதுகில் நன்றி தெரிவிக்கும் முகமாக அன்புடன் தட்டிய மந்திரி மடையை நோக்கி மெதுவாக நடந்தார்.
மேடையருகே தயரராக இருந்த செந்தாமரை மந்திரிக்கு ஆரத்தி எடுத்தாள்.
வீரய்யா அவரது நெற்றியில் சந்தனத் திலகமிட்டு அவரை வரவேற்றான்.
மந்திரியின் பேச்சைக் கேட்பதற்காக மக்கள் ஆவ லுடன் மேடையருகே நெருங்கினர்.வேறு தோட்டங்களுக் கும் செல்ல வேண்டி இருந்ததால் மந்திரி காலந்தாழ்த் தாது உரை நிகழ்நதத் தொடங்கினார். சிங்கள மொழியில் அவரது உரை நிகழ்ந்தது.
“இங்கு குழுமியிருக்கும் தோட்ட உத்தியோகத்தர் களுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிராமத்தில் இருந்து வந்த ஆதரவாளர்களுக்கும் எனது பணிவான வணக்கத்தை முதற்கண் தெரிவிக்கிறேன். இன்று முதல் எமது நாட்டில் இருக்கும் தேயிலைத் தோட்டங்கள் யாவும் அரசுடமை ஆக்கப்பட்டுவிட்டன. நூறு வருடங்களுக்கு மேல் அந்நியர்களின் கையில் இருந்த எமது செல்வங்கள் இன்று எமது கைகளுக்குக் கிடைத்திருக்கின்றன. இதனால் எமது நாட்டின் பொருளாதாரம் அதிகரிக்க வாய்ப்பு ஏற் பட்டிருக்கிறது. முக்கியமாக தோட்டங்கள் அரசுடமை யானதினால் தோட்டத் தொழிலாளர்கள் தான் முதலில் விமோசனம் அடையப் போகின்றார்கள். அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும். தொழிலாளர்களுக்குச் சம்பளம் அதிகரித்துக் கொடுக்கப்படுவதோடு அவர்களது தொழி லுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும். இங்கிருக்கும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வசதி செய் வோம். தோட்டத்தில் பெறப்படும் இலாபத்தின் ஒரு பகுதி தொழிலாளர்களிடையே பகிர்ந்து அளிக்கப்படுவ தோடு நிலமற்றவர்களுக்கும் காணி வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.”
மந்திரியின் பேச்சின் சுருக்கத்தைத் தமிழில் மொழி பெயர்த்துக் கூறினார் மந்திரியுடன் கூட வந்த அரசியல் அமைப்பாளர். கரகோஷம் வானை முட்டியது.
”மந்திரி வாழ்க’ எனத் தொழிலாளர்கள் வாழ்த்தினர்.
அதனை அடுத்து வீரய்யா மேடைக்குச் சென்று மந்திரிக்கும் அவருடன் கூட வந்தவர்களுக்கும் தொழிலாளர்கள் சார்பில் நன்றியுரை கூறினான்.
வேறு தோட்டங்களில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட் டங்களில் மந்திரி பங்குபற்ற வேண்டியிருந்ததால் அவர் அவசர அவசரமாகப் புறப்பட்டார். முக்கியமாக துரை, கண்டக்டர், வீரய்யா முதலியோரது கைகளை அன்புடன் பற்றி தனது நன்றியைத் தெரிவித்தார். பின்னர் பண்டா முதலாளியின் முதுகில் அன்புடன் தட்டிப் புன்னகை செய்த படி காரிலே சென்று ஏறினார் மந்திரி.
“ஜயவேவா” என்ற கோஷம் இப்போது வானை முட்டி மோதியது.
மந்திரியின் கார் புறப்பட்டுச் சென்றதும் துரையும் தனது காரில் ஏறிப் புறப்பட்டார்.
மந்திரி எப்போது அங்கிருந்து புறப்படுவார், கூட்டம் எப்போது முடிவடையுமென எதிர்பார்த்துக் கொண் டிருந்த மாரிமுத்துத் தலைவர் சினத்துடன் பண்டா முதலாளியின் அருகே சென்றார்.
“என்னாங்க மாத்தயா, நீங்க என்னா நினைச்சுக்கிட்டு அந்த மாலையை எடுத்து மந்திரிக்குப் போட்டீங்க? இந்தத் தோட்டத்தில் நான் பத்து வருஷமா தலைவரு வேலை செஞ்சிக்கிட்டு வாரேன்; என்னை யாரும் இந்த மாதிரி அவமானப்படுத்தல்ல. நான் தலைவரா… இல்ல நீங்க தலைவரா?”
மாரிமுத்துத் தலைவரின் குரல் ஆத்திரத்தில் தடுமாறியது.
பண்டா முதலாளி தலைவரின் அருகே நெருங்கி, அவரது தோளில் தனது கையால் மெதுவாகத் தட்டிச் சிரித்துவிட்டு,
“என்னாங் தலைவர் மிச்சங் கோபப்படுறீங்க… நம்ப மந்திரிக்கு மாலை போடுற நேரத்திலை நீங்க அங்கினைக்கில்லைதானே… அதுதாங் நாங் போட்டது.. நாங் மாலை போட்டாலும், தோட்டத்து ஆளுங்க தான் கூட்டம் வச்சது சொல்லி மந்திரிக்குத் தெரியுங் தானே. தோட்டத்து ஆளுங்களுக்குத் தானே இனிமே மந்திரி ஒதவி செய்யப் போறது… நம்மளுக்கு இல்லைத்தானே. இதுக்கிபோய் பெரிசா கோபப்படாதீங்க” எனச் சமாதானப்படுத்த முயன்றார்.
அப்போது அவர்களது சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த ராமு, “அப்புடிச் சொல்லாதீங்க, மாத்தியா, எங்க தலைவரு போட இருந்த மாலைய நீங்க போட்டது சரியில்லை’ எனப் படபடத்தான்.
“எங்க தோட்டத்து ஆளுங்களையே அவமதிக்கிற மாதிரி செஞ்சுப்புட்டீங்க” எனக் குமுறினான் பக்கத்தில் நின்ற செபமாலை.
இப்போது பண்டா முதலாளியையும் தலைவரையும் பலர் சூழ்ந்துகொண்டனர். வாக்குவாதம் முற்றி ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடவுங் கூடுமென நினைத்த வீரய்யா நிதானமாக,
”முடிஞ்சுபோன வெசயத்தைப் பற்றி இனிக் கதைச்சு என்னா பெரயோசனம். நடந்தது நடந்து முடிஞ்சிச்சு… சும்மா பேசிகிட்டு இருக்காம நடக்க வேண்டிய தைக் கவனியுங்க…” எனக் கூறிவிட்டு ராமுவின் கைகளைப் பற்றி, “இங்கபாரு ராமு அந்த ஸ்பீக்கர்காறங்களை அனுப்பணும். செபமாலையைக் கூட்டிக்கிட்டுப் போயி ஸ்பீக்கர் எல்லாம் அவுத்து அவுங்களை அனுப்புறதுக்கு வேண்டியதைக் கவனி” எனக் கூறினான்.
பண்டா முதலாளியுடன் கூட வந்திருந்த கிராம சேவகர் அவரை அவசரமாக அழைத்தார்.
பண்டா முதலாளி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மெதுவாக அவ்விடத்தை விட்டு நழுவினார்.
கூட்டம் சிறிது சிறிதாகக் கலையத் தொடங்கியது.
நாட்டிலிருந்து வந்திருந்த ஓர் இளைஞனின் கண்கள் மேசையருகே நின்றிருந்த செந்தாமரையையே ஏக்கத் துடன் பார்த்த வண்ணம் இருந்தன. அப்போது செந்தா மரையின் பார்வை அவனது பக்கம் திரும்பியது. அவன் அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான். செந்தாமரை நாணத்துடன் குனிந்துகொண்டாள். அவளது இதழ்களி லிருந்தும் மெல்லிதாக ஒரு புன்னகை மலர்ந்தது. புறப் படவேண்டிய நேரம் நெருங்கியதும் அவன் அவனிடம் கண்களால் விடைபெற்றுக் கொண்டான். அவள் ஏக்கத் துடன் அவனையே பார்த்த வண்ணம் இருந்தாள்.
அத்தியாயம் இரண்டு
அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் தோட்டத்தில் வேலை கொடுக்கப்படவில்லை. தொழிலாளர்கள் தத்தமது சொந்த வேலைகளைக் கவனிப்பதில் ஈடுபட்டிருந்தனர். பெண்களில் சிலர் தமது வீட்டைப் பெருக்குவதில் முனைந்தி ருந்தனர். சிலர் பீலிக்குச் சென்று வீட்டுப் பாத்திரங்களைத் துலக்குவதிலும் ஆடைகளைத் துவைத்துக் குளிப்பதுமாக இருந்தனர். வீட்டில் வேலையில்லாதவர்கள் ‘மிலார்’ பொறுக்குவதற்காக மலைக்குச் சென்றிருந்தனர். ஆண்களில் பலர் தமது மரக்கறித் தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
வழுக்கற் பாறை லயத்தின் தொங்கல் காம்பராவின் முன்புறத்திலுள்ள இஸ்தோப்பில் அன்றைய தினசரியை வாசித்துக்கொண்டிருந்தான் வீரய்யா. அவனது தாய் மீனாச்சி காம்பராவின் உள்ளே சாணியால் நிலத்தை மெழு கிக்கொண்டிருந்தாள்.
“என்ன வீரய்யா இன்னைய பேப்பரா?இன்னிக்குப் பேப்பரிலை நம்ப தோட்டத்து வெசயமா ஏதும் போட்டி ருக்காங்களா?” எனக் கேட்டபடி உள்ளே நுழைந்தான் ராமு.
பத்திரிகை வாசிப்பதில் மூழ்கியிருந்த வீரய்யா ராமுவின் குரல் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தான். அப்போது தான் செபமாலையும் ராமுவின் பின்னால் வருவது தெரிந்தது.
இருவரும் இஸ்தோப்பில் இருந்த வாங்கிலில் அமர்ந்து கொண்டனர்.
“தோட்டத் தொரைமாருக்கெல்லாம் நேற்று மாவட் டக் காரியாலயத்தில மீட்டிங் இருந்திச்சில்லையா… அதில நம்ப மந்திரி பேசியிருந்ததை விசேசமா போட்டிருக்காங்க’ எனக் கூறிக்கொண்டே பத்திரிகையை செபமாலையிடம் கொடுத்தான் வீரய்யா.
“தொரமாருக்கெல்லாம் என்னதான் மந்திரிசொல்லி யிருக்காரு?” என ஆவலுடன் கேட்டான் ராமு.
“மொதலாவதா தோட்டத்திலை இருந்து இனிமே உத்தியோகத்தர்களையோ தோட்டத் தொழிலாளர் களையோ தொரைமார் வெளியே போடமுடியாது.”
“அப்புடியா ரொம்ப நல்லது;இனிமே இந்த தொரை மாருங்க ஆட்டமெல்லாம் நின்னுபோயிடும். அவுங்க நெனைச்சபடி தோட்டத்திலை எதுவுமே செய்யமுடியாது” என்றான் ராமு.
“அதுமட்டுமில்ல, தொரமாருங்க இஷ்டத்துக்கு தோட் டத்திலை யாரையும் வேலைக்கும் சேர்க்கமுடியாதாம்; அர சாங்கத்திலை இருந்து அனுப்புற ஆளுங்களை மட்டுந்தான் வேலைக்கு சேத்துக்கிறணுமாம்’ எனத் தொடர்ந்து கூறி னான் வீரய்யா.
“ஆமா ஆமா, இவ்வளவு நாளா தொரைமாருங்க வூட்டு ஆளுங்களையும் ஸ்டாப்புமாருங்கவுட்டு ஆளுங்களை யுந்தானே தோட்டத்திலை உத்தியோகங்களுக்கு சேத்துக் கிட்டு வந்தாங்க; யாரைப் பாத்தாலும் அவுங்க அவுங்க அண்ணன் – தம்பி, மச்சான் – மாமனாகவே இருக்காங்க. இனிமே அதெல்லாம் நடக்காது.”
இதுவரை நேரமும் மரக்கறித் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த வீரய்யாவின் தந்தை மாயாண்டி அப்போது இஸ்தோப்பின் உள்ளே நுழைந்தார். தோட் டத்திலிருந்து கொண்டுவந்த மரக்கறிகளை சுவர் ஓரமாக இருக்கும் செலவுப் பெட்டியின் மேல் வைத்துவிட்டு, நெற்றியிலே படிந்திருந்த வியர்வையை ஒரு துண்டினால் துடைத்துக்கொண்டார்.
”இனிமே தொரைமாருங்க நெனைச்சபடி தோட் டத்தை நடத்தமுடியாது. ஒவ்வொரு தோட்டத்திலையும் தோட்ட நிர்வாகக் கமிட்டின்னு ஒண்ணு அமைக்கப் போறாங்களாம்.அதிலை தோட்டத் தொழிலாளர்கள் சார் பிலும் உத்தியோகத்தர் சார்பிலும் பிரதிநிதிங்க இருப் பாங்க; அவங்களோட கலந்து ஆலோசிச்சுத்தான் தொரை தோட்டத்திலை எதையும் செய்யமுடியும்” எனப் பத்திரி கையை வாசித்துக்கொண்டிருந்த செபமாலை கூறினான்.
”என்னதான் இருந்தாலுந் தம்பி தோட்டங்களைக் கொம்பனிக் காலத்திலை நடத்தினமாதிரி அரசாங்கத்திலை நடத்துவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை’ என அலட் சியமாகக் கூறிக்கொண்டே, காதிலே செருகிவைத்திருந்த குறைச் சுருட்டை எடுத்து வாயில் பொருத்தி அதனைப் பற்றவைத்தார் மாயாண்டி.
அவர் அப்படிக் கூறியது அங்கிருந்த எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
“என்னங்க மாமேன், அப்புடிச் சொல்லிப்புட்டீங்க! இப்ப தோட்டத்தை அரசாங்கம் எடுத்ததினால் ஆளுங் கெல்லாம் எவ்வளவு சந்தோஷப்படுறாங்கன்னு தெரியுமா? நீங்க மட்டும் ஏன் இப்புடிச் சொல்லுங்க?” என வியப்பு டன் கேட்டான் ராமு.
“தோட்டத்தை அரசாங்கம் எடுத்ததை நீங்க என்னமோ சாதாரணமாக நெனைச்சுப்புட்டீங்க போலையிருக்கு; இனிமேதான் நம்மளுக்கு எவ்வளவோ ஒதவி கெடைக்கப் போவுது. இவ்வளவு காலமும் கொம்பனிக் காரங்களுக்கும் தோட்டச் சொந்தக்காரங்களுக்கும் நாம் அடிமையா இருந்தோம்; அவங்க நெனைச்சமாதிரி நம்மளை ஆட்டிப் படைச்சுக்கிட்டு இருந்தாங்க… இனிமே இந்த நாட்டிலை இருக்கிற மத்தவங்கமாதிரி நாமளும் தலை நிமிர்ந்து நடக்கலாம்” என விபரமாகக் கூறினான் செபமாலை.
“என்னங்க தம்பி எனக்குத் தெரியாத வெசயமா…… இந்தத் தேயிலையை இங்க கொண்டாந்து உண்டாக்கி னதே அந்த வெள்ளைக்காரங்கதானே.அவுங்க தோட் டத்தை நடத்தினதை விடவா அரசாங்கத்திலை பெரிசா நடத்திப்புடப் போறாங்க?” எனக் கேட்ட மாயாண்டி அலட்சியமாகப் புகையை வெளியே ஊதினார்.
“அப்புடி இல்லீங்க மாமேன். நீங்க கொம்பனிக் காலத்து நெனைப்புலேயே இப்பவும் இருக்கிறீங்க… இப்ப காலம் மாறிக்கிட்டே போவுது. நிச்சயமா தோட்டத்து ஆளுங்களுக்கு இனிமேதான் நல்லது கெடைக்கப்போவுது”
இதுவரை நேரமும் வீட்டை மெழுகிக்கொண்டு இவர் களது சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டிருந்த மீனாச்சி வெளியே எழுந்து வந்தாள்.
“இவரு எப்பவும் இப்புடித்தான் செபமாலை, ஏடக் குறுக்க ஏதாச்சும் வெளங்காம பேசிக்கிட்டு இருப்பாரு; அதை வுட்டுட்டு வேற என்ன தம்பி போட்டிருக்கு, அதைச் சொல்லுங்க” எனக் கூறியபடி அவள் வாசலுக்குச் சென்று சாணிக் கையைக் கழுவினாள்.
“மந்திரி வேற ஒரு வெசயத்தையும் தொரைமாருக்கு சொல்லியிருக்காரு; இனிமே தொரைமாருங்க எல்லாரும் கட்டாயமா தோட்டத்து ஆளுங்களோட நல்ல மொறை யில் நடந்துக்கணுமாம். முந்தி மாதிரி தொரைத்தனமா நடந்துக்காம ஆளுங்களோட அன்பாப் பழகணுமாம்” என்றான் செபமாலை.
அப்போது செந்தாமரை தண்ணீர்க் குடத்துடன் வீட் டினுள் நுழைந்தாள்.
“இவ்வளவு நேரமா பீலியிலை என்னா செஞ்சுகிட்டு இருந்தே? அங்க போய் என்னதான் செய்வியோ தெரி யாது… இவுங்கெல்லாம் வந்து எவ்வளவு நேரமாச்சு? இன் னும் தேத்தண்ணிகூட கொடுக்கல… வெரசா தண்ணி சுடா வச்சி தேத்தண்ணி ஊத்து’ எனச் செந்தாமரையிடம் கூறிய மீனாச்சி செலவுப் பெட்டியின் மேல் வைக்கப்பட்டி ருந்த மரக்கறிகளை எடுத்து நறுக்கத் தொடங்கினாள்.
செந்தாமரை எதுவுமே பேசாது புன்னகை செய்தவண் ணம் அடுப்படிப் பக்கஞ் சென்றாள்.
“ஏங்க தம்பி, நான் ஒண்ணு கேக்கிறேன், தோட்டத்து ஆளுங்களோட தொரைமாருங்க கூட்டாளித்தனமா நடந்துகிட்டா தோட்ட வேலைங்கெல்லாம் எப்புடி ஒழுங்கா நடக்கும்? தொரை, ஆளுங்களோட கண்டிப்பா நடந்துகிட்டாதானே ஆளுங்க பயந்து ஒழுங்கா வேலை யைச் செய்வாங்க… அரசாங்கம் சொல்லுறபடி பாத்தா தோட்டத்தைச் சுறுக்கா மூடிடுவாங்க போலையிருக்கே” என்றார் மாயாண்டி சிந்தனையுடன்
“அப்படியில்லேப்பா, தோட்டத்து ஆளுங்களை அடி மையா நடத்த வேணாமுனுதான் அரசாங்கம் சொல்லுது அதோட தொழிலாளர்களும் தோட்ட நிர்வாகத்தில அக் கறை காட்டுறதால், தோட்டம் ஒரு நாளும் நஷ்டத்தில் போகாது” என்றான் வீரய்யா விபரமாக.
அதெல்லாஞ்சரி, தொரைமாருங்களுக்கு அரசாங்கம் சொல்லியிருக்கிற மாதிரி அவுங்க கேட்டு நடப்பாங்கனு எப்புடி சொல்லமுடியும்?” எனக் கேட்டார் மாயாண்டி சிந்தனையுடன்.
”அரசாங்கம் சொல்லுபடிதான் தொரைமாருங்க தோட்டத்தை நடத்தணும். இல்லேன்னா அவுங்க வேலைய பறிகொடுக்க வேண்டியதுதான்…… இல்லாட்டி வேறை தோட்டத்தைவுட்டு மாத்திப்போடு வாங்க” என்றான் ராமு.
“ஏங்க தம்பி, இப்ப நாம வேலைக்குப் போனாத்தான் பேரு போடுவாங்க… இனிமேலாவது மத்தவங்களுக்கு மாதிரி நம்மளுக்கும் மாதச் சம்பளம் கொடுப்பாங்களா?” மீனாச்சி ஆவலுடன் கேட்டாள்.
“மாதச் சம்பளத்தைப் பற்றி இனிமேதான் பேசப் போறாங்க. மத்தவங்களுக்கு மாதச் சம்பளம் கொடுக்கிற மாதிரி நம்மளுக்கும் கொடுக்கத்தான் செய்வாங்க; அதோட நம்ப தோட்டத்து புள்ளைகளுக்கு படிக்கிறதுக்கு வேண்டிய வசதியும் செஞ்சு கொடுப்பாங்க. ஸ்கூலையும் அரசாங்கத்துக்கு எடுத்து தோட்டப் புள்ளைங்களுக்கு பாடம் சொல்லிக் குடுக்க புதுசா மாஸ்டர்மாரையும் அனுப்பிவைப்பாங்க.”
“அப்புடின்னா இனிமே நம்மளுக்கெல்லாம் நல்ல காலமுன்னு சொல்லுங்க தம்பி” என மகிழ்வுடன் கூறி னாள் மீனாச்சி.
“நீங்க சொல்லுறது எல்லாஞ் சரிதான்.நம்ப பாட் டன் பூட்டன் காலத்திலை இருந்தே நாம் கஷ்டப்பட்டுக் கிட்டு இருக்கிறோமே. இவ்வளவு காலமும் இல்லாம இப்ப ஏன் இந்த அரசாங்கத்துக்கு நம்ப மேலை அக்கறை வந்தி ருக்கு? அதைக் கொஞ்சமாவது யோசிச்சுப் பாத்தீங்களா?” எனக் கேட்டுவிட்டு வாயிலே ஊறிய சுருட்டுச் சாரத்தை வெளியே துப்பினார் மாயாண்டி.
“இவ்வளவு காலமும் தேயிலைத் தோட்டங்களெல் லாம் வெள்ளைக்காரங்களுக்குச் சொந்தமா இருந்திச்சி. ஆதாயமெல்லாம் அவுங்க நாட்டுக்குப் போய்க்கிட்டு இருந் திச்சி/ஆனா, இப்ப தோட்டங்களை அரசாங்கம் எடுத்ததினால் ஆதாயமெல்லாம் நம்ப நாட்டுக்கு கெடைக்கப்போவுது. அது நம்மளுக்கும் நல்லது. நம்ப நாட்டுக்கும் நல்லது.’ வீரய்யா விளக்கம் கொடுத்தான்.
“நீங்கதான் என்னென்னமோ பெரிசா பேசிக்கிறீங்க. இனிமே போகப் போகத்தான் எல்லாந் தெரியப்போவுது” என்றார் மாயாண்டி வெளியே பார்த்தபடி.
செந்தாமரை எல்லோருக்கும் தேநீர் கொண்டுவந்து கொடுத்தாள்.
எல்லோரும் தேநீர் அருந்தத் தொடங்கினர். சிறிது நேரம் நண்பர்களது சம்பாஷணை தோட்ட விஷ யங்களைப் பற்றியே சுற்றிச் சுற்றி வந்தது.
“சரி வீரய்யா, நான் வரட்டுமா?வூட்டுல கொஞ்சம் வேலையிருக்கு” எனக் கூறியபடி எழுந்திருந்தான் ராமு. அவனைத் தொடர்ந்து செபமாலையும் எழுந்தான்.
இருவரும் புறப்பட்டுச் சென்றதும் வீரய்யா மீண்டும் பத்திரிகையை எடுத்து வாசிக்கத் தொடங்கினான். அவனது உள்ளத்தில் தொழிலாளர்களின் எதிர்காலம் ஒளிமய மாகப் பிரகாசித்துக்கொண்டிருந்தது.
அத்தியாயம் மூன்று
கடந்த நான்கு நாட்களாக பண்டா முதலாளியின் உள்ளம் குதூகலத்தில் ஆழ்ந்திருந்தது.பக்கத்துத் தோட் டத்தில் நடந்த கூட்டத்தின் போது மந்திரி அவரைப் பார்த்து அறிமுகச் சிரிப்பை உதிர்த்ததும் எதிர்பாராத விதமாக அவர் மந்திரிக்கு மாலை அணிந்து தன் ஆதர வைக் காட்டிய நிகழ்ச்சியும், அவரது மனதில் அடிக்கடி வந்துகொண்டிருந்தன.
வீட்டின் பின்புறமாக இருந்த சிறிய கொட்டிலில் போடப்பட்டிருந்த கதிரையொன்றில் சாய்ந்தவாறு அவர் சுருட்டு ஒன்றைப் புகைத்துக் கொண்டிருந்தார்.
சற்று நேரத்திற்கு முன்னர் பக்கத்துத் தோட்டத் திலிருந்து வந்த ஒரு தொழிலாளியிடம் இரண்டு போத் தல் கள்ளுக்குரிய பணத்தைக் குறைத்து வாங்கிவிட்டது அப்போதுதான் அவரது நினைவில் வந்தது.
நிலத்திலே சிந்தியிருந்த கள்ளின் நெடி ஒரு கணம் அவ்விடத்தில் வீசியது.
தோட்டங்களில் சம்பளம் போடுவதற்கு இன்னும் ஒரு கிழமையிருந்ததினால் அவருக்கு வியாபாரம் இப்போது கம்மியாகவே இருந்தது. இதுவரை ஐந்தாறு பேர்தான் கள்ளுக் குடித்துவிட்டுத் திரும்பியிருந்தனர். மூலையிலிருந்த முட்டியில் அரைவாசிக்கு மேல் கள்ளு அப்படியே கிடந்தது.
முற்றத்தில் படுத்திருந்த அவரது நாய் ஒரு கணம் தலையை நிமிர்த்திக் குரைத்துவிட்டு, வருபவர் வாடிக்கையாளர் என்பதைப் புரிந்து கொண்டதினாலோ என்னவோ மீண்டும் சுருண்டு படுத்துக்கொண்டது.
பண்டா முதலாளி வெளியே எட்டிப் பார்த்தார்; அங்கு கறுப்பண்ணன் கங்காணி வந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்தபோது மந்திரி வந்தன்று மாலைத் தட்டுடன் கறுப்பண்ணன் கங்காணி ‘அங்குமிங்கும் ஓடித்திரிந்த காட்சி அவரது நினைவில் வந்தது. தன்னையும் மீறிக் கொண்டு அவர் வாய்விட்டுச் சிரித்தார்.
பண்டா முதலாளி எட்டிப் பார்த்துச் சிரிப்பதைக் கண்டதும் வாயிலே நிரம்பியிருந்த வெற்றிலைத் துப்பலை வேலியோரமாக நின்ற கித்துள் மரத்தடியில் எட்டி உமிழ்ந்துவிட்டு சிரிப்பை வரவழைத்துக் கொண்டார் கறுப்பண்ணன் கங்காணி.
“ஏங் கங்காணி, இந்த நாலு நாளா இங்க வரேல்லைத் தானே” எனக் கேட்டுக்கொண்டே கறுப்பண்ணனை வரவேற்றார் பண்டா முதலாளி.
”நம்ப வயல்லை கொஞ்சம் வேலையிருந்திச்சுங்க, அது னாலே வரமுடியாம போயிருச்சுங்க… இன்னிக்குத்தாங்க கொஞ்ச நேரங் கெடச்சிச்சு” எனக் கூறியபடி கொட்டி லினுள்ளே நுழைந்து அங்கே கிடந்த வாங்கில் அமர்ந் தார் கறுப்பண்ணன் கங்காணி.
“அப்புடியா… நம்ப தலைவரையும் இந்தப் பக்கம் காங்கேல்ல… நம்பமேலை கோபப்பட்டது சொல்லி நான் நெனைச்சது.”
“அப்படி நெனைக்க வேணாங்க மாத்தியா, ஒங்க மேல எங்களுக்கு அப்படியேதுங் கோபமில்லீங்க. நம்ப தலை வருக்கு ரெண்டு நாளா சொகமில்லீங்க… அதுதாங்க…” என இழுத்தார் கங்காணி.
பண்டா முதலாளி சிரட்டையில் கள்ளை வார்த்துக் கொண்டு வந்து கங்காணியிடம் கொடுத்தார். இரு கைகளினாலும் அதனை வாங்கித் தனது வாயில் வைத்து ஓர் உறிஞ்சு உறிஞ்சிவிட்டு வாயைச் சப்புக் கொட்டிக்கொண்டார் கங்காணி.
“என்னங்க மாத்தியா இன்னிக்கு கள்ளு ரெம்பப் புளிப்பா இருக்கே; பழைய கள்ளை ஏதும் கலந்துப்புட்டீங்களா?”
”ச்சா, என்னாங் கங்காணி அப்புடிச் சொல்லுறது… ஒங்களுக்கு நாங் அப்படி செய்யிறதா? இன்னிக்குத்தான் மரத்திலை இருந்து எறக்கினது” எனக் கூறிவிட்டு வீட்டின் முன் பக்கத்தில் இருந்த தனது மனைவிக்குக் கேட்கும்படியாக, “மெனிக்கே… மே கங்காணிட்ட சுட்டக் அள கெயின்ட” எனக் கூறினார்.
வீட்டின் முன்புறமாகவுள்ள விறாந்தையில் பலசரக் குக் கடையொன்றையும் பண்டா முதலாளி வைத்திருக் கின்றார். அந்தப் பகுதியில் வேறு கடைகள் ஏதும் இல்லாத தால் அவருக்குப் பலசரக்குக் கடையிலிருந்தும் கணிச மான வருமானம் கிடைத்தது. அந்தக் கடையை அவரது மனைவி மெனிக்காதான் கவனித்துக் கொள்வாள்.
பக்கத்துத் தோட்டங்களிலிருந்து அவரிடம் கள்ளுக் குடிக்க வருபவர்களும், அந்தக் கிராம மக்களும் அவரது கடையிலே தான் அன்றாட தேவைகளுக்கு வேண்டிய சாமான்களை வாங்கிச் செல்வார்கள்.
கள்ளுக் குடிப்பவர்கள் சுவைப்பதற்கென்றே தயாரித்து வைத்திருந்த மரவள்ளிக் கிழங்குக் கூட்டை சேம்பு இலையொன்றில் எடுத்துவந்து கங்காணியின் முன் னால் வைத்தாள் மெனிக்கே.
கருப்பண்ணன் கங்காணி அதில் ஒரு துண்டை எடுத் துக் கடித்துவிட்டு மீண்டும் கள்ளை உறிஞ்சினார்.
பலசரக்குக் கடையில் சாமான் வாங்குவதற்காக யாரோ வந்தார்கள். மெனிக்கே வியாபாரத்தைக் கவனிப்பதற்காக முன்னே சென்றாள்.
“மே மாயாண்டி எனவா” முன் பக்கத்தில் வியாபாரத்தைக் கவனித்தவாறே பண்டா முதலாளிக்குக் கேட்கும்படியாகக் கூறினாள் மெனிக்கே.
வழுவியிருந்த சாரத்தை ஒரு தடவை தனது பருத்த தொந்தியில் வரிந்து கட்டிவிட்டு ‘ஆ! என்ட மாயாண்டி… எப்புடி? ஏங் இன்னிக்கி மிச்சங் சொணங்கி வந்தாச்சு…’ எனக் கேட்டபடி அவரை வரவேற்றார் பண்டா முதலாளி.
“நம்ப கண்டக்கையா ஒரு வெசயமா வங்களாவுக்கு வரச் சொல்லியிருந்தாரு. அதுதாங்க போயிட்டு வரக் கொஞ்சம் சொணங்கிப் போச்சு” எனக் கூறியபடி கறுப்பண்ணன் கங்காணியருகே அமர்ந்து கொண்டார் மாயாண்டி.
கறுப்பண்ணன் கங்காணி மாயாண்டியைப் பார்த் துச் சிரித்துவிட்டு, மீண்டும் சிரட்டையுடன் கள்ளை உறிஞ் சத் தொடங்கினார்.
பண்டா முதலாளி வேறொரு சிரட்டையில் கள்ளை வார்த்து வந்து மாயாண்டியிடம் கொடுத்தார். பின்பு வெளியே சென்று வாயில் நிறைந்திருந்த வெற்றிலைத் துப்பலை உமிழ்ந்துவிட்டுவந்து,
”அதிங்சரி மாயாண்டி, வீரய்யா சொல்லி சொல்றது ஒங்க மவன்தானே… அன்னிக்கி நம்ப மந்திரி கூட்டத்துக்கு வாறப்போ அந்தப் பெடியன்தாங் எல்லா வேலையும் செஞ் சது… நமக்கு மிச்சங் சந்தோஷம்” எனக் கூறிவிட்டுச் சிரித்தார்.
“ஆமாங்க மாத்தியா, தோட்டத்திலே எந்த ஒரு வெசயத்துக்கும் அவன்தாங்க முன்னுக்கு நிப்பான். நம்ப தோட்டத்து ஆளுங்ககூட அவன்மேல ரெம்பப் பிரிய முங்க” எனத் தட்டுத் தடுமாறியபடி கூறினார் கறுப்பண்ணன் கங்காணி.
பண்டா முதலாளியும் கறுப்பண்ணன் கங்காணியும் கூறிய வார்த்தைகள் மாயாண்டிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன.
“என்னமோ, நீங்கதான் அவனைப்பற்றிப் பெரிசா பேசிக்கிறீங்க… எந்த நேரம் பார்த்தாலும் தோட்ட வெசயமுன்னு சொல்லிக்கிட்டு பயலுங்களோட சேந்து சுத்திக்கிட்டு திரியிறான். அவனுக்கு வூட்டு வெசயத்தில் கொஞ்சங்கூட அக்கறையிருக்கிறதாத் தெரியல்ல” எனப் பொய்யாகக் குறைப்பட்டுக் கொண்டே தனது கற்றை மீசையில் படிந்திருந்த கள்ளைப் புறங்கையால் துடைத்துக் கொண்டார் மாயாண்டி.
“மாத்தியா எனக்கு இன்னொரு போத்தல் கள்ளுத் தாங்க, அப்புடியே நம்ப மாயாண்டிக்கும் ஒரு போத்தல் என் கணக்கில குடுங்க” எனத் தடுமாறியபடி கூறினார் கறுப்பண்ணன் கங்காணி.
பண்டா முதலாளி மேலும் இரண்டு போத்தல் கள்ளை வார்த்துவந்து அவர்களது சிரட்டைகளில் நிரப்பினார்.
வெளியே இருள் சூழத் தொடங்கியது.
முற்றத்தில் காய்வதற்காகப் பரவியிருந்த கராம்பு களைப் பாயுடன் சுருட்டி எடுத்துக்கொண்டு வந்தாள் மெனிக்கே.
பண்டா முதலாளியின் தோட்டத்தில் நிறைய கராம் புச் செடிகளும், ஏலச் செடிகளும் இருக்கின்றன. அவற்றி லிருந்தும் பண்டா முதலாளிக்குக் கணிசமான வருமானம் கிடைக்கிறது.
மெனிக்கே கராம்பை உள்ளே கொண்டு வருவதைப் பார்த்ததும், நேரமாகிவிட்டதை உணர்ந்து கொண்டார் முதலாளி.
“சரிங் கங்காணி நேரமாச்சு… நாங்களும் கடையைப் பூட்டவேணுந்தானே. நீங்களும் ரொம்பத் தூரங் போக வேணுங்” எனக் கூறியபடி மெனிக்கே கொண்டுவந்த கராம்பை வாங்கி உள்ளே வைத்தார் பண்டா முதலாளி.
கருப்பண்ணன் கங்காணியும், மாயாண்டியும் புறப்படுவதற்கு ஆயத்தமானார்கள்.
“அப்ப நாங்க வர்ரோமுங்க மாத்தியா” எனக் கூறிய படி எழுந்த கறுப்பண்ணன் கங்காணி சுருட்டொன்றை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு மாயாண்டியிடமும் ஒரு சுருட்டைக் கொடுத்தார்.
இருவரும் புறப்பட்டுத் தோட்டத்தை நோக்கி ஒற்றை யடிப் பாதையில் நடக்கத் தொடங்கினர்.
“கங்காணி, இந்த எடங் கொஞ்சம் வரக்கட்டா இருக்கு… விழுந்திடாம பாத்து நடந்து வாங்க” எனக் கூறியபடி முன்னால் நடந்தான் மாயாண்டி.
“என்ன மாயாண்டி அப்புடிச் சொல்லிப்புட்டே, து நம்மளுக்கு பழக்கப்பட்ட பாதைதானே. இந்தக் குறுக்கில எந்த எடத்தில் வரக்கட்டு இருக்கு, எந்த எடத் ல மொடக்கிருக்குன்னு எனக்கு நல்லா நெதானம் இருக்கு” எனக் கூறிய கறுப்பண்ணன் கங்காணி கால் தடு மாறிக் கீழே விழப்போனார். உடனே மாயாண்டி அவரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டார்.
“பாரு மாயாண்டி, அன்னிக்கி நாம மந்திரிக்குப் போட வச்சிருந்த மாலையை இந்த வண்டாப் பயல் எடுத் துப் போட்டிட்டான்; அவன் ராங்கியை பாத்தியா?… முந் தின காலத்தில் அவன் லயத்துக்கு லயம் பாக்குத் தூக்கி வித்துக்கிட்டு திரிஞ்சது நமக்குத் தெரியாதா…? இப்ப என் னடான்னா பெரிய மனுசன் மாதிரி மந்திரிக்கு மாலை போட வந்திட்டான்” எனக் கறுவிக் கொண்டார் கறுப் பண்ணன் கங்காணி.
“ஆமாங்க கங்காணி, கையில கொஞ்சம் பணம் சேர்ந்திட்டா இன்னிக்கி எல்லாரும் பெரிய மனுசன் தான்… தோட்டத்து ஆளுங்க எல்லாம் இன்னிக்கி இவன் கிட்டத்தானே கள்ளுக் குடிக்கப் போறாங்க. அப்ப இவங் கிட்ட சல்லி சேராம வேற எங்க போகும்?”
“அதிலையும் பாரு மாயாண்டி இந்த வண்டாப்பய ஒரு நாளைக்கு நல்ல கள்ளு வைச்சிருக்கான்; ஒரு நாளைக்கு மொட்டப் பச்சத்தண்ணியா ஊத்திறான்’” என்றார் கறுப் பண்ணன் கங்காணி
ஆற்றிலே தண்ணீர் ஓடும் சல சலப்புக் கேட்டது. தோட்டத்து எல்லையைத் தாண்டிவிட்டதை இருவரும் ஊகித்துக் கொண்டனர். ஏற்றத்திலே ஏறிவந்ததால் இரு வருக்கும் மூச்சு வாங்கியது. களைப்புத்தீர இருவரும் சிறிது நேரம் அந்த இடத்தில் தரித்து நின்றனர். அவர்கள் நின்ற இடத்திலிருந்து பார்க்கும்போது தூரத்தே ஆங்காங்கே சிறிய வெளிச்சங்கள் நட்சத்திரங்களைப்போல மின்னின. எங்கோ தொலைவில் நாய் குரைக்கும் சத்தங் கேட்டுக் கொண்டிருந்தது.
“இந்தா பாருங்க கங்காணி, நம்ப தோட்டத்தை அரசாங்கம் எடுத்ததைப்பத்தி பயலுக பெரிசா பீத்திக்கிறானுக. எனக்கு என்னவோ இதெல்லாம் நல்லதா தெரி யல்லே” என்றார் மாயாண்டி.
“என்ன மாயாண்டி திடுதிப்புன்னு இப்புடிச் சொல் லுறே; அரசாங்கம் எடுத்ததினால நமக்கு என்னா குறைஞ்சிடப் போவுது.
“அண்ணைக்கு மந்திரி வந்தப்போ, இந்த நாட்டாளுக எல்லாம் தோட்டத்துக்குள்ள நொழைஞ்சி அவுங்களும் கூட்டத்தில பங்குபத்தினாங்க, கொம்பனிக் காலமென்னா அப்படிச் செய்ய முடியுமா?”
”நீ சொல்றதிலும் ஞாயம் இருக்குத்தான் மாயாண்டி; ஆனாலும் அரசாங்கத்தில நல்லது செய்யப் போறதா தானே மந்திரி சொன்னாரு
“மந்திரி சொன்ன மாதிரியே எல்லாம் நடந்திச்சின்னா நல்லதுதான்… இவ்வளவு காலமும் தோட்டத்தில் நாமெல்லாம் ஒரு குடும்பம்போல ஒண்ணா இருந்துக்கிட்டிருந் தோம். வெளி ஆளுங்க ஊடையில பூந்து யாரும் நம்ப வெசயத்தில தலையிடல்… இப்ப அப்படியில்ல கங்காணி, எல்லாமே மாறிப்போச்சு.”
எதிரே யாரோ சிலர் தீப்பந்தத்துடன் வந்துகொண் டிருந்தனர். நாட்டில் வாழும் யாரோ டவுணுக்குச் சென்றுவிட்டு இப்போதுதான் திரும்பிச் செல்கிறார்கள் என்பதை அறிந்த இருவரும், தமது பேச்சை நிறுத்திக் கொண்டனர்.
தீப்பந்தத்துடன் வந்தவர்கள் அவர்களைத் தாண் டிச் சென்றதும் மீண்டும் இருவரும் தோட்டத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
“மாயாண்டி… ஒங்கிட்ட ஒரு முக்கியமான வெசயம் சொல்லணும்; சொன்னா கோவிச்சுக்கிடுவியோன்னு பயமா இருக்கு…’
“அப்பிடி என்னாங்க கங்காணி வெசயம்… ஏங்கிட்ட சொல்றதுக்கு ஏன்பயப்படணும்?”
“தப்பா ஏதும் நெனைச்சுக்கிடாத மாயாண்டி ஒம் மக இருக்காளே செந்தாமரை… அவளைப்பத்தி தோட்டத் தில ஒரு மாதிரியா கதைச்சிக்கிறாங்க…”
கறுப்பண்ணன் கங்காணி இப்படிக் கூறியபோது மாயாண்டியின் நெஞ்சு பகீர் என்றது. செந்தாமரை யைப் பற்றி கங்காணி தவறாக ஏதும் கூறிவிடக் கூடாது என அவரது உள்ளம் வேண்டியது. அந்தக் கடும் குளிரிலும் அவரது உடல் குப்பென்று வியர்த்துவிட்டது. ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாதவராய்த் தடுமாறினார்.
“என்ன கங்காணி சொல்றீங்க. எனக்கு ஒண்ணுமே வெளங்க மாட்டேங்குது. கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்க.”
“இல்லை மாயாண்டி… இந்த நாட்டிலயிருந்து நம்ப தோட்டத்துக்கு வேலைக்கு வாறானே பியசேனா…”
“என்னாங்க கங்காணி, தயக்கித் தயங்கி சொல்றீங்க. சொல்லுறதக் கொஞ்சம் வெரசா சொல்லுங்க” என்றார் மாயாண்டி படபடப்புடன்.
“அதுதான் நம்ப பண்டா முதலாளியோட அண்ணன் மகன் இருக்கானே பியசேனா. அவனும் ஒம் மகள் செந் தாமரையும் கூட்டா இருக்காங்கனு தோட்டத்தில் எல் லாரும் பேசிக்கிறாங்க…”
மாயாண்டிக்கு தலை சுற்றுவதுபோல் இருந்தது. கறுப் பண்ணன் கங்காணி கூறியதை அவரால் நம்பவே முடிய வில்லை. அவரது உடல் இலேசாக நடுங்கியது.
இந்தா பாருங்க கங்காணி… என் குடும்பத்த பத்தி நீங்க இவ்வளவு காலமா யாரும் கேவலமாப் பேசல்ல. சொல்லுற இந்த விஷயம் மட்டும் பொய்யா இருந்தா, அப் புறம் என்ன நடக்குமுனு தெரியாது” மாயாண்டியின் குரல் கடுமையாக ஒலித்தது.
“நானென்ன ஒங்க கிட்ட பொய்யா சொல்லப் போறேன். நான் கேள்விப்பட்டதைத்தானே சொன் னேன்” என்றார் கறுப்பண்ணன் கங்காணி.
மாயாண்டி பதில் ஏதும் சொல்லாது விருட்டென நடக்கத் தொடங்கினார்.
கருப்பண்ணன் கங்காணி குழப்பமடைந்தவராக அவ ரைப் பின் தொடர்ந்தார்.
இருவரும் பிரிந்து செல்லவேண்டிய இடம் சமீபித்த தும், இங்க பாரு மாயாண்டி. வூட்ல போய் செந்தாமரைகிட்ட ஏதும் சண்டைக்குப் போகாத, நான் சொன்னதை மனசில வச்சு கவனிச்சுப்பாரு” என்றார் கறுப்பண்ணன் கங்காணி.
மாயாண்டி பதில் ஏதும் கூறமல், தனது லயத்துக்குச் செல்லும் பாதையில் இறங்கி நடக்கத் தொடங்கினார்.
கறுப்பண்ணன் கங்காணியின் குழப்பம் மேலும் அதிகமாகியது.
தான் ஏதும் தவறாக மாயாண்டியிடம் கூறிவிட் டோமோ என எண்ணிய படி தனது லயத்தை நோக்கி நடந்தார்.
மூலையில் இருந்த குப்பி விளக்கு ஒளி உமிழ்ந்துகொண்டிருந்தது.
இரவுச் சாப்பாட்டைத் தயாரிப்பதில் மீனாச்சியும் செந்தாமரையும் முனைந்திருந்தனர். அடுப்பிலிருந்து கிளம்பிய புகை காம்பராவில் நிறைந்தது.
“இந்தா பாரு செந்தாமர… இந்த அடுப்பு எரிஞ்சி தொலையமாட்டேங்குது. ஒரே பச்சை வெறகாக் கொண்டு வந்து போட்டுக்கிட்டு அக்கப்போர் அடிக்க வேண்டியதா இருக்கு: நாளைக்கி நீ வூட்ல இருந்து கொஞ்சம் வெறகு பார்த்துக் கொண்டுவந்து போடு” எனக் கூறிவிட்டு, குனிந்து அடுப்பைப் பலமாக ஊதினாள் மீனாச்சி.
ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தபடி அம்மியில் மிளகாயை அரைத்துக் கொண்டிருந்த செந்தாமரை தாயின் குரல் கேட்டு நிமிர்ந்தாள்.
“எனக்கு முடியாதம்மா. நாளைக்கி பத்தாம் நம்பர் மலையில கொழுந்து எடுக்கப் போறோம்… நல்ல கொழுந்து இருக்கு; அதுவும் மட்டக் கொழுந்து மலை. ஒரு நாளைக்கி வேலைக்கி போகாட்டி அப்புறம் என் நெரைய மாத்திப் போடுவாங்க” எனக் கூறிவிட்டு மீண்டும் அம்மியில் இருந்த மிளகாயை அரைக்கத் தொடங்கினாள் செந்தாமரை.
“மாடசாமி கோவிலுக்குக்கிட்ட கவ்வாத்து வெட்டி நல்ல மெலாரு கிடக்குதானே, வேலை முடிஞ்சி வாறப்போ ஒரு கட்டு கொண்டுவாப்பான்னு வீரய்யாகிட்ட சொன் னேன்; அவன் கேட்டாத்தானே. கொஞ்சமாவது வூட்டு வெசயத்தில அக்கறையே இல்ல” எனக் கூறிவிட்டு அடுப் பில் இருந்த சோற்றுப் பானையைக் கிளறி விட்டாள் மீனாச்சி.
திடீரென ஸ்தோப்பின் கதவு திறந்து கொண்டது.
குப்பென்று வீசிய குளிர்காற்று மூலையிலிருந்த குப்பி விளக்கின் சுடரைத் துடிக்க வைத்தது.
உள்ளே வந்த மாயாண்டி கதவைப் பலமாக அடித் துச் சாத்தினார். பின்னர் வீட்டினுள்ளே ஒரு தடவை நோட்டம்விட்டார்.
“எங்கே அவன் வீரய்யா?” மாயாண்டியின் குரல் கடுமையாக ஒலித்தது.
“என்னமோ அந்த ராமுவோட வெளியில் போனான்… ஏதாச்சும் தோட்ட வெசயமாப் போயிருப் பாங்க. அவன் எங்க போனானென்னு நானா பாத்துக்கிட்டு இருக்கேன்?”
“ஓம் மகன் இந்தத் தோட்டத்து ரவுடிப் பயங்க ளோட சேர்ந்துகிட்டு லயம் சுத்திறதுக்கு மட்டும் நல்லாப் படிச்சிருக்கான். இங்க வூட்ல நடக்கிற வெசயம் ஒன்னும் அவனுக்குத் தெரியாது; என்னால வெளியில் தலை காட்ட முடியல.”
“அப்புடி என்னா வெசயம் நம்மவூட்ல நடந்துபோச்சு? ஏன் வந்ததும் வராததுமா ஒரே ஆட்டம் போடுறீங்க? குடிச்சுப்புட்டுவந்தா பேசாம தின்னுப்புட்டு படுங்க. ‘சூர்ல’ வந்து சும்மா உளறாதீங்க” என அலட்சியமாகக் கூறினாள் மீனாச்சி.
“நான் ஒண்ணும் ஒளறல்லையடி… அந்தப் பியசேனா பயலோட இவளுக்கு என்னா கதை வேண்டிக்கெடக்கு. தோட்டமே சிரிப்பா சிரிக்குதடி’ எனப் பலமாகக் கத்திய மாயாண்டி. செந்தாமரையை முறைத்துப் பார்த்தார்.
திடீரெனத் தந்தை இப்படிக் கூறியதைக் கேட்ட செந்தாமரை திகைத்துப்போய், பயத்துடன் அவரை நோக்கினாள்.
மீனாச்சிக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
“என்னா சொல்லுறீங்க. சொல்லுறதைக் கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்க.”
“நான் என்னடி சொல்லவேண்டியிருக்கு… ஒம் மகளையே கேளு. இவள் அந்தப் பியசேனா பயலோட சேர்ந்துகிட்டு ஆட்டம் போடுறாளா இல்லையான்னு!”
செந்தாமரை நடுங்கியவண்ணம் நின்றுகொண்டிருந்தாள்.
மாயாண்டி கூறியவை யாவும் மீனாச்சியின் நெஞ்சைக் கலக்கின.
அப்போது வீரய்யா ஸ்தோப்பின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான்.
அவனது முகத்தில் கலக்கம் குடிகொண்டிருந்தது. மாயாண்டி அவனை முறைத்துப் பார்த்தார்.
“ஏன் அப்பா இப்புடி பெரிசா சத்தம் போடுறீங்க? நீங்க போடுற சத்தம் இந்த லயமே கேட்கும் போல இருக்கு.”
“ஆமா ஆமா, இப்போதான் தொர ஞாயம் பேச வந் திருக்காரு… நீ ஒழுங்கா இருந்தா ஏண்டா இப்புடியெல் லாம் வரப்போகுது?” எனக் கோபத்துடன் கத்தினார் மாயாண்டி.
“அப்புடியில்லப்பா! இப்புடி நீங்க பெரிசா சத்தம் போட்டா, இந்த வெசயம் லயத்தில் உள்ள எல்லாருக்கும் தான் கேக்கும். நமக்குத்தானே வெக்கம்… கொஞ்சம் மெதுவா பேசுங்கப்பா” எனக் கெஞ்சும் குரலில் கூறி னான் வீரய்யா.
வீரய்யா இதுவரை நேரமும் வெளியே நின்று எல்லா வற்றையும் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறான் என்பதை மாயாண்டி உணர்ந்துகொண்டார்.
”ஆமா. நான் சத்தம் போடுறதாலதான் மத்தவங் களுக்குத் தெரியப் போகுதா? இந்த வெசயந்தான் தோட் டமே தெரிஞ்சு கிடக்குதே” என முணுமுணுத்தபடி அந்த இடத்தில் நிற்க விரும்பாதவராய் காம்பராவின் உள்ளே கிடந்த கட்டிலில் போய்ச் சரிந்தார் மாயாண்டி.
மீனாச்சி பெரிதாக விம்மத் தொடங்கினாள்.
“இங்கே பாரம்மா…… இனிமே செந்தாமரைய வெளியே எங்கேயும் தனியா அனுப்பாதீங்க; வேலைக்கு போறப்போ ஒங்ககூடவே கூட்டிப் போங்க. தனியா அனுப்புறதாலதான் இதெல்லாம் வருது’ எனத் தேற்றும் குரலில் கூறினான் வீரய்யா.
அன்று இரவு அவர்களது வீட்டில் யாருமே உணவு அருந்தவில்லை.
செந்தாமரை வெகு நேரம்வரை தூக்கம் வராது படுக் கையில் புரண்டுகொண்டிருந்தாள்.
அத்தியாயம் நான்கு
மாலை நேரம். கொழுந்து மடுவம் கலகலப்பாக இருந் தது. மூலையில் போடப்பட்டிருந்த மேசையின் மேல் ‘செக் றோல்’ புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டு அன்று வேலைக்கு வந்த தொழிலாளர்களுக்குப் ‘பேர்’ போட்டுக் கொண்டிருந்தார் கண்டக்டர். கங்காணிமார்கள் சிலர் அன்று வேலை செய்தவர்களின் பெயர்களை அவரிடங் கூறிக் கொண்டிருந்தனர். அன்றைய தபாலில் தமக்கு ஏதாவது கடிதங்கள் வந்திருக்கிறதா என அறிவதற்காகவும் சிலர் அங்கு வந்திருந்தனர்.
ஆபீஸிலிருந்து பெட்டிக்காரன் அப்போதுதான் மடு வத்தை வந்தடைந்தான். எல்லோரும் கூட்டமாகக் கண் டக்டரைச் சூழ்ந்து கொண்டனர். கண்டக்டர் செக்றோலை முடித்துவிட்டு, பெட்டியைத் திறந்து அன்றைய தபாலில் வந்திருந்த கடிதங்களை ஒவ்வொன்றாக எடுத்து முகவரிகளை வாசித்து உரியவர்களிடம் கொடுத்தார். பின்பு டயரி யைப் புரட்டி துரையிடமிருந்து ஏதாவது நிருபங்கள் வந்திருக்கிறதா எனக் கவனித்தார்.
கொழுந்தெடுக்கும் பெண்களைக் கூட்டிக்கொண்டு கறுப் பண்ணன் கங்காணி அப்போதுதான் அங்கு வந்து சேர்ந் தார். அவரைத் தொடர்ந்து வீரய்யாவும் கொழுந்தெடுப் பவர்களுடன் மடுவத்தை வந்தடைந்தான். கணக்கப் பிள்ளை அவர்கள் கொண்டுவந்த கொழுந்துகளை நிறுக்கத் தொடங்கினார்.
கையிலிருந்த நிருபத்தை வாசித்துவிட்டு, மூக்குக் கண் ணாடியைக் கழற்றினார் கண்டக்டர்.
“என்னங்கையா ‘சேக்குலர்’ ஏதோ வந்திருக்குப் போலயிருக்கே… தொரை என்னங்க எழுதியிருக்காரு எனக் கேட்டுக்கொண்டே கண்டக்டரின் அருகில் சென்றார் மாரிமுத்துத் தலைவர்.
“நம்ப தோட்டத்துக்கு புதிசா ‘சுப்பவைசர்’ வேலைக்கு ஆளுங்களை எடுக்கப் போறாங்களாம். அதுனால விரும்பின வங்களை மனுப் போடச் சொல்லி மாவட்டக் காரியால யத்திலிருந்து தொரைக்குக் கடிதம் வந்திருக்கு… அதைத் தொரை நமக்கு அனுப்பியிருக்காரு” எனக் கூறிய கண்டக் டர் மீண்டும் மூக்குக் கண்ணாடியை அணிந்துகொண்டார்.
“அப்புடீங்களா, நம்ப தோட்டத்துக்கு வேலை பாக்க இனிமே ரொம்பப் பேரு வருவாங்க போலையிருக்கே” என மகிழ்ச்சியுடன் கூறிவிட்டுத் தலையாட்டினார் தலைவர்.
அப்போது வீரய்யா, கண்டக்டரின் அருகே வந்தான்.
“ஐயா நம்ப தோட்டத்திலயும் படிச்ச பொடியங்கள் இருக்கிறாங்க… அவுங்களும் சுப்பவைசர் வேலைக்கு ‘அப்பி ளிக்கேசன்’ போடலாமுங்களா?” எனக் கேட்டுவிட்டு கண்டக்டரின் முகத்தைப் பார்த்தான்.
ஆமா வீரய்யா, அரசாங்க வேலையினா படிச்சவங்க எல்லாருந்தான் ‘அப்ளிக்கேசன்’ போடலாம்” என்றார் கண்டக்டர் சிந்தனையுடன்.
“என்ன வீரய்யா, அப்படிக் கேக்கிறே… நம்ப தோட் டத்தில் உள்ள பொடியன்கள் மனுப் போட்டா அரசாங் கத்தில வேலை கொடுப்பாங்களா?” எனக் கேட்டுவிட்டு ஏளனமாகச் சிரித்தார் தலைவர்.
“தோட்டத்து ஆளுங்களுக்கு சலுகை செஞ்சு கொடுக்கணுமென்னுதானே அரசாங்கத்தில சொல்லி யிருக்கிறாங்க… அதுனால கட்டாயம் தோட்டத்தில் இருக் கிற படிச்ச பொடியங்களுக்கு வேலை கொடுப்பாங்க… எல்லாரையும் அப்பிளிக்கேசன் போடச் சொல்லுங்க’ என உறுதியான குரலில் கூறிய கண்டக்டர் தனது வேலை யில் கவனஞ் செலுத்தத் தொடங்கினார்.
கொழுந்து நிறுத்து முடித்த பெண்கள் ஒவ்வொருவராக வந்து பேர் போடத் தொடங்கினர்.
“அப்புடீனா ரெம்ப நல்லதுங்கையா. நம்ப பொடி யங்களே நம்ப தோட்டத்தில வேலை பாக்கிறதுன்னா நாமெல்லாம் சந்தோஷப்படவேண்டிய வெசயம் தானுங்க” எனக் கூறிவிட்டுத் தனது காவிபடிந்த பற்களைக் காட்டிச் சிரித்தார் கருப்பண்ணன் கங்காணி.
“ஆமா கறுப்பண்ணன், நம்ப பொடியங்களுக்குத் தான் நம்பவுட்டு கஷ்ட நஷ்டமெல்லாம் வெளங்கும். அவுங்க வேலை பாத்தா நமக்கு எப்படியும் கொஞ்சம் சலுகை கொடுப்பாங்க” பக்கத்தில் நின்றிருந்த வய தான தொழிலாளி ஒருவர் கூறினார்.
“ஆமா ஆமா, நம்ப தோட்டத்திலேயே ஏழெட்டு படிச்ச பொடியங்க இருக்காங்க. அவுங்கள எல்லாம் இந்த வேலைக்கு மனுப் போடச் சொல்லி சொல்லணும் ” என்றார் வேறொரு தொழிலாளி.
“நம்ப வீரய்யாதான் இந்த மாதிரி வேலைங்களுக்கு முன்னுக்கு நிண்டு செய்வானே… இந்தா பாரு வீரய்யா! நீதான் படிச்ச பொடியங்ககிட்ட சொல்லி மனுப்போடச் செய்யணும்” என வீரய்யாவின் பக்கம் திரும்பிக் கூறினார் கறுப்பண்ணன் கங்காணி.
வீரய்யா புன்னகையுடன் தலையாட்டினான்.
அங்கு குடியிருந்த ஒரு சிலரது உள்ளங்களில் தங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தோட்டத்தில் ஏதாவது சிறிய உத்தி யோகமாவது கிடைக்காதா என்ற ஆவல் இப்போது தோன்றியிருந்தது. சிலர் தங்களைச் சேர்ந்த, படித்த இளை ஞர்களை ஒரு தடவை எண்ணிப் பார்த்தார்கள். அவ்விளை ஞர்களுக்குத் தோட்டத்திலே உத்தியோகம் கிடைப்பதற்கு ஏற்ற சந்தர்ப்பம் தோன்றியிருப்பதை நினைத்தபோது அவர்களது உள்ளத்தில் ஆர்வம் பொங்கியது.
துரையின் கார் அப்போது மடுவத்திற்கு முன்னால் வந்து நின்றது. இதுவரை நேரமும் இரைச்சல் நிறைந் திருந்த அந்த இடத்தில் இப்போது அமைதி நிலவியது. துரை காரிலிருந்து இறங்கி மடுவத்துள் நுழைந்தார்.
“குட் ஈவினிங் சேர்”-கண்டக்டர், துரைக்கு வந்தனம் தெரிவித்தார்.
“குட் ஈவினிங் மிஸ்டர் இராமசாமி” என பதில் வந்தனம் கூறிய துரை அங்கிருந்த கதிரையில் போய் அமர்ந்தார்.
தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் துரைக்கு சலாம் வைத்து வந்தனம் செய்தனர்.
துரை மேசையில் விரித்திருந்த செக்றோலை ஒரு தடவை புரட்டிப் பார்த்தார். பின்னர் கண்டக்டரைப் பார்த்து, “உம்மிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும். அதைப்பற்றிக் கூறுவதற்குத்தான் நான் இப்போது வந்தேன். ஐம்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட வர்கள் இனிமேல் தோட்டத்தில் உத்தியோகம் பார்க்க முடியாதென எனக்கு அரசாங்கத்திலிருந்து அறிவித்தல் வந்திருக்கிறது. அதனால் நீங்களும் கட்டாயம் ஓய்வுபெற வேண்டித்தான் வரும். இதன் விபரம் உங்களுக்கு நான் உத்தியோக ரீதியாக நாளை கடிதமூலம் தெரிவிப்பேன்.”
இதனை ஆங்கிலத்தில் கூறினார் துரை.
கண்டக்டருக்குப் பெரும் திகைப்பாக இருந்தது.
“என்ன துரை திடீரென இப்படிக் கூறுகிறீர்கள்? நான் எனது உத்தியோகத்திலிருந்து இப்போது ஓய்வு பெற்றால் எனது குடும்ப நிலை மிகவும் மோசமாகிவிடும்” தன்னைச் சுதாகரித்துக்கொண்டு கூறினார் கண்டக்டர்.
இது அரசாங்க உத்தரவு. என்னால் ஒன்றுமே செய்ய முடியாது. நீங்கள் ஓய்வுபெற்றுத்தான் ஆகவேண்டி வரும்.
“எனது மகன் படித்துவிட்டு வீட்டில் இருக்கிறான். அவனுக்கு வேலை கிடைக்கும் வரையாவது நான் வேலை செய்துதான் ஆகவேண்டும். இல்லாவிடில் எனது குடும் பம் கஷ்டத்திற்குள்ளாகிவிடும்.”
”உமது நிலை எனக்கு நன்றாகப் புரிகிறது. கொம்பனிக் காலமாக இருந்தால் நானே உமது மகனுக்கு ஒரு வேலை கொடுத்து உதவியிருப்பேன். இப்போது என்னால் எது வுமே செய்ய முடியாது” எனக் கூறி கையை விரித்தார் துரை.
கண்டக்டரின் கண்கள் கலங்கிவிட்டன.
“இப்போதுதான் தோட்டத்திற்கு உத்தியோகத்தர் களை எடுக்கப் போகின்றார்களே. உமது மகனையும் மனுப் போடச் சொல்லுங்கள். அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்க லாமல்லவா?” எனக் கூறிய துரை காரை நோக்கிச் சென் றார். துரையின் கார் புறப்பட்டுச் சென்று வெகு நேரமா கிய பின்னரும் கண்டக்டர் சிலையாக நின்றார்.
அத்தியாயம் ஐந்து
பியசேனா தனது ‘கொந்தரப்பு’ மலையில் புல்வெட்டிக் கொண்டிருந்தான். வழக்கமாகப் பத்தாந் திகதிக்கு முன்பே கொந்தரப்பை முடித்துக் கணக்கப்பிள்ளையிடம் பாரம் கொடுத்துவிடும் அவனுக்கு இம்முறை ஏனோ துரித மாக வேலை செய்ய முடியவில்லை. பதினைந்தாம் திகதியா கியபோதிலும் அரைவாசி மலைகூட புல்லுவெட்டி முடிந்தி ருக்கவில்லை. அவனது உடலும் உள்ளமும் மிகவும் சோர்ந்து போய் இருந்தன. செந்தாமரையின் நினைவுகள் அடிக்கடி வந்து அவனை அலைக்கழித்தவண்ணம் இருந்தன.கிழமையில் எப்படியும் இரண்டு மூன்று தடவையாவது அவனைத் தேடி வரும் செந்தாமரை கடந்த சில வாரங்களாக அவனிடம் வராதது அவனுக்குப் பெரிதும் வேதனையைக் கொடுத்தது.
அவளை எப்படியாவது தனியாகச் சந்தித்துவிட வேண்டு மென்ற எண்ணத்துடன் அவன் பல தடவை முயற்சித்த போதும் அவனால் அது முடியவில்லை. அவள் வேலைக்குப் போகும்போதும் திரும்பி வரும்போதும் அவளது தாய் மீனாச்சி அவளுடன் கூடவே செல்வாள். அதைப் பார்த்து விட்டு அவன் ஏக்கத்துடன் வீட்டுக்குத் திரும்புவான்.
வெயில் சுரீரென முதுகில் உறைத்தது. தலையில் கட்டியி ருந்த துண்டை அவிழ்த்து வியர்வையைத் துடைத்துவிட்டு அவன் சற்று ஓய்வெடுத்தான். காலையிலிருந்து இதுவரை நேரமும் செய்துமுடித்த வேலை அவனுக்குத் திருப்தி அளிக்கவில்லை.எப்படியும் இன்னும் சில நாட்களில் கொந்தரப்பை முடித்துக் கொடுத்துவிடவேண்டும் என்ற எண் ணத்துடன் மீண்டும் புல்வெட்டத் தொடங்கினான்.
அப்போது அவனது முதுகில் கல்லொன்று பட்டென்று வந்து விழுந்தது. அவன் நிமிர்ந்து சுற்றுமுற்றும் பார்த் தான். எவருமே அங்கு தென்படவில்லை.
மீண்டும் அவன் குனிந்து புல்வெட்டத் தொடங்கினான். திரும்பவும் ஒரு சிறிய கல் அவனது முதுகில் பட்டுத் தெறித்தது. திடீரென அவன் நிமிர்ந்தான்.
ஒற்றையடிப் பாதையின் வளைவில் செந்தாமரை குறும்பாகச் சிரித்தவண்ணம் நின்றுகொண்டிருந்தாள்.
கையில் இருந்த சுரண்டியை வீசிவிட்டு ஓடிச்சென்று அவளை அப்படியே கட்டியணைக்க வேண்டும்போல் அவனது உள்ளம் துருதுருத்தது. ஒருகணம் தன்னை மறந்து நின்ற பியசேனா தன்னைச் சுதாகரித்துக்கொண்டு முகத்தில் பொய்க் கோபத்தை வரவழைத்த வண்ணம் மீண்டும் குனிந்து புல்வெட்டத் தொடங்கினான்.
செந்தாமரை அவன் அருகில் துள்ளிக் குதித்து ஓடிவந் தாள். வெடுக்கென அவனது கையிலிருந்த சுரண்டியைப் பறித்துத் தூர வீசிவிட்டு அவனது கைகள் இரண்டையும் பற்றிக்கொண்டாள்.
“என்னங்க என்மேல கோபமா?”-அவளது கண்கள் அவனிடம் கேட்டன.
பொங்கி வந்த உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத வனாய் பியசேனா அவளைத் தன் இரு கைகளாலும் நெஞ் சோடு அணைத்துக்கொண்டான்.
அவள் அவனது கழுத்தில் தன் இரு கைகளையும் கோர்த்தபடி “ஐயையோ… என்னை விட்டிடுங்க… மேல் ரோட்டுல யாரும் வந்தாங்கன்னா கண்டுக்கிடுவாங்க” எனக் கெஞ்சினாள்.
“இன்னிக்கு நாங் ஒன்னை விடமாட்டேன்” எனக்கூறியபடி அவளை அருகிலிருந்த நெற்றிக் கானுக்கு இழுத் துச் சென்றான் பியசேனா.
அது ஒரு மறைவான இடம். யாருமே அவர்கள் அங்கிருப்பதைப் பார்த்துவிடமுடியாது.
“ஏன் செந்தாமர இவ்வளவு நாளா என்னைச் சந்திக்க வரேல்ல?” அவனது முகம் அவளது வதனத்தை நோக்கிக் குனிந்தது.
“நம்ம வெசயம் எங்க வீட்டுக்கு தெரிஞ்சு போச்சுங்க. யாரோ எங்கப்பாக்கிட்ட சொல்லி வீட்டுல பெரிய கரச்ச லாப் போச்சு. நா எங்கேயும் தனியா வெளிய போகக் கூடாதுன்னு கண்டிப்பு பண்ணிப்புட்டாங்க.” செந்தாமரை கவலையுடன் கூறினாள்.
”அப்போ இன்னிக்கு மட்டும் எப்புடி வந்தே?”
“வேலக்காட்டுல எனக்கு வயித்துவலின்னு கங்காணி கிட்ட பொய் சொல்லிப்புட்டு வந்திட்டேன்” எனக் கூறியபடி செந்தாமரை அவனது நெஞ்சிலே விரல்களால் ஏதோ கோலம் கீறினாள்.
“சரியான தந்திரசாலிதான்” எனக் கூறிய பியசேனா அவளது கன்னத்தில் செல்லமாகக் கிள்ளினான்.
“நான் சுறுக்கா போகவேணுங்க.’
”என்ன செந்தாமர வந்தவொடனயே போகணுமுனு சொல்லுறியே. நா ஒன்னை இவ்வளவு நாளா காணாம எவ்வளவு துடிச்சுப் பொனேன் தெரியுமா?”
“நா மட்டும் என்னா சந்தோஷமாவா இருந்தேன் எந்த நேரமும் ஒங்க நெனைவுதான். சாப்பிடக்கூட மனசு வரல்ல.இரவுக்குப் படுத்தேன்னா தூக்கங்கூட வராது எனக் கூறிய செந்தாமரை அவனது நெஞ்சுக்குள் தனது முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.
“இனிமே ஒன்னை ஒரு நாள்கூட பாக்காம என்னால இருக்கமுடியாது செந்தாமரை.’ அவனது குரல் கம்மியது.
“எனக்கு என்னமோ பயமா இருக்குங்க. இனிமே நாங்க இப்புடி தனியாச் சந்திக்கமுடியாது. எப்புடியாச் சும் ஒங்ககூட என்னைக் கூட்டிக்கிட்டு போயிடுங்க.” செந்தாமரையின் கண்கள் கலங்கின.
“இந்தா பாரு செந்தாமரை… இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்க; நான் எப்புடியும் ஒன்னை நிச்சயமா கூட்டிக்கிட்டு போவேன்.”
“நா ஒங்ககூட வந்தா என்னைய ஒங்க வூட்டுல ஏத்துக் கிடுவாங்களா?” ஏக்கத்துடன் அவனது கண்களை உற்று நோக்கியபடி கேட்டாள் செந்தாமரை.
“ஏன் செந்தாமர இதுக்குப் போய் கவலைப்படுற. எங்க வூட்டுல அம்மா மட்டுந்தான் இருக்காங்க. ஒன்னைப் பாத் தாங்கண்ணா அவுங்க ஒண்ணுமே சொல்லமாட்டாங்க” எனக் கூறிய பியசேனா அவளது வதனத்தைத் தன் இரு கைகளாலும் வருடினான்.
அவள் அவனது கைகளை மெதுவாக விலக்கியபடி, “நா வந்து ரொம்ப நேரமாச்சுங்க; ஆளுங்க பகல் சாப்பாட்டுக்கு வந்திடுவாங்க. எங்கம்மா வாறதுக்குள்ள நான் வூட்டுக்கு போயிடணும்” எனக் கூறியபடி எழுந்திருந்தாள்.
“இனி எப்ப செந்தாமர என்னைச் சந்திக்க வருவே?’ அவன் ஆவலுடன் அவளது கண்களை உற்று நோக்கியபடி கேட்டான்.
”வசதி கிடைக்கிற நேரமெல்லாம் ஒங்ககிட்ட நான் கட்டாயம் வருவேன்” எனக் கூறிய செந்தாமரை அவனைப், பிரிந்துசெல்ல மனமின்றி மெதுவாக நடந்தாள்.
அவளது உருவம் மறையும்வரை அவளையே பார்த்துக் கொண்டு நின்ற பியசேனா மீண்டும் தனது வேலையைக் கவனிக்கத் தொடங்கினான்.
இப்போது அவனது உள்ளம் ஓரளவு நிறைவுபெற்றிருந்தது.
– தொடரும்…
– குருதிமலை (நாவல்), முதற் பதிப்பு: ஜூலை 1979, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.