(1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20
அத்தியாயம் பதினொன்று
கிராமத்து மக்கள் அன்று மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். மந்திரி உட்பட அரசியல் பிரமுகர்கள் சிலர் அன்று கிராமத்துக்கு வந்திருந்தார்கள். கிராமசேவகர் தலைமை யில் மந்திரிக்கும், அவருடன் கூடவந்த பிரமுகர்களுக்கும் ஒரு வரவேற்பு உபசாரக் கூட்டம், அங்குள்ள புத்தவிகாரையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
கிராமசேவகரும், பண்டா முதலாளியும் நாட்டிலுள்ள ஒருசில முக்கியஸ்தர்களுமாக மந்திரிக்கும் பிரமுகர்களுக்கும் மாலையணிவித்து அவர்களை அந்த ஒற்றையடிப் பாதையில் ஊர்வலமாக அழைத்துவந்தனர்.
மந்திரி வருவதற்காகக் கிராமத்து மக்கள் அனைவருமாகச் சிரமதானமூலம் அந்தப் பாதையைத் துப்புரவு செய்திருந்தார்கள்.
மந்திரியும் பிரமுகர்களும் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர், கிராமத்திலுள்ள சில வீடுகளுக்கு விஜயம்செய்து அவர்களுடைய வாழ்க்கை முறையை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினர். பண்டா முதலாளிதான் ஒவ்வொருவ ரையும் மந்திரிக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவர்கள் தங்களது தாய்மொழியில் உரையாடினார்கள்.
முதலில் அவர்கள் ஒரு விவசாயியைச் சந்தித்தார்கள்.
“எப்படி உங்களது விவசாயம் நடக்கிறது? உங்களது சீவியத்திற்குப் போதுமானதாக இருக்கிறதா?” என மந்திரி அந்த விவசாயியிடம் கேட்டார்.
“எங்களது பாட்டனார் காலத்திலிருந்தே நாங்கள் விவசாயந்தான் செய்துவருகிறோம். எனது பாட்டனாருக்குச் சொந்தமாக இருந்த இரண்டு ஏக்கர் காணிக்கு இப்போது நாங்கள் பதின்மூன்று பேர் வாரிசாக இருக்கிறோம். அதனால் எங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் வருமானம் மிகவும் சொற்பமாகவே இருக்கிறது” என்றார் அந்த விவசாயி.
”அப்படியா, இது இந்த நாட்டிலுள்ள ஒரு சிக்கலான பிரச்சினை. சிலரிடம் அதிகமாகக் காணி இருக்கிறது. ஆனால், பாடுபட்டு உழைக்கும் பலரிடம் போதியளவு காணிகள் இருப்பதில்லை…உங்களது குடும்பத்தில் உள்ள அனைவரது பெயர்களையும் குறித்துத் தாருங்கள். உங்களுக்கு ஏற்ற உதவிகளை நாங்கள் செய்து தருகிறோம்” என்றார் மந்திரி.
அப்போது பக்கத்தில் நின்ற பண்டா முதலாளி கூறினார்: “இந்தக் கிராமத்தில் பொதுவாக் எல்லோரது நிலை மையும் இப்படியாகத்தான் இருக்கிறது. பலருக்கு வசிப்பதற்குக்கூட இடமில்லாமல் இருக்கிறது. சிறிய வீடுகளில் நெருக்கமாகக் குடியிருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடுகின்றது.”
“அப்படியா… இது மிகவும் வருந்தக்கூடிய விசயம்” என்றார் மந்திரி.
பக்கத்தில் நின்ற செண்பக மரமொன்றில் ஏதோ சல சலப்புச் சத்தம் கேட்டது. அவர்களைக் கண்ட குரங்கொன்று வெருட்சியுற்று வேறொரு மரத்துக்குத் தாவி ஓடியது.
அனைவரும் அடுத்து வேறொரு விவசாயியின் வீட்டுக்குச் சென்றனர். அந்த விவசாயி தனது கஷ்டங்களை விளக்கினார்.
“எனது குடும்பத்துக்குச் சொந்தமாக ஒரு சிறிய வயல் இருக்கிறது. ஆனால், இந்த வயலில் இருந்து எந்தக் காலத்திலும் நாங்கள் பூரணமான பலனைப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. விலங்குகளின் தொல்லை அதிகமாக இருக்கின்றது.”
பக்கத்தில் அவர்களுடன் வந்துகொண்டிருந்த பொடி சிங்கோ என்ற இளைஞன் கூறினான்: “காட்டுப் பன்றிகள் இங்கு வந்து வயலில் இருக்கும் வரம்புகளை அழித்துச் சேதப்படுத்திவிடுகின்றன. குரங்குகள் கதிர்களை உருவி நாசப்படுத்திவிடுகின்றன.”
“அப்படியானால் வேறு ஏதாவது உணவுப் பயிர்களைச் செய்துபார்த்திருக்கலாமே?” எனக் கேட்டார் மந்திரி.
“எந்தப் பயிர்களைச் செய்வதற்கும் இந்தக் குரங்குகளும் பன்றிகளும் விடுவதில்லை” என்றான் பொடிசிங்கோ.
“சென்ற வருடம் நான் எனது தோட்டத்தில் பெருவாரியாகக் கிழங்குகளை நாட்டியிருந்தேன். ஆனால், பன்றிகள் இரவிரவாக எல்லாவற்றையுமே நாசமாக்கிவிட்டன”
“இந்த விலங்குகள் உங்கள் பயிர்களை அழிக்கமுடியாமல் எந்த முறையிலும் தடை செய்யமுடியாதா?” எனக் கேட்டார் மந்திரி.
“நாங்கள் வயல்களிலே இரவிரவாக விழித்திருந்து காவல் காப்போம். ஆனாலும் அவை கூட்டங் கூட்டமாக வரும்போது எம்மால் ஒன்றும் செய்யமுடிவதில்லை. எப்படியும் எங்களது காவலை மீறிக்கொண்டு அவை பயிர்களைச் சேதமாக்கிவிடுகின்றன” என்றார் அந்த விவசாயி.
அப்போது பக்கத்தில் வந்துகொண்டிருந்த கிராம சேவகர் கூறினார்; “முந்தின காலத்தில் ‘நாட்டை அடுத்துள்ள பகுதிகள் பெருங் காடாக இருந்தன. அவற்றையெல் லாம் தோட்டத் துரைமார்கள் அழித்து ‘ஸ்டோர்’ அடுப்பு களுக்கு விறகாக எரித்துவிட்டனர். அதனால் இப்போது அந்தக் காட்டுக்குள் இருந்த விலங்குகள் அங்கு வசிக்கமுடியாமல் நாட்டுக்குள் புகுந்துவிட்டன.
இது நாடு இல்லை. எங்களது நாடு இப்போது காடாக மாறிவிட்டது. நாங்கள் காட்டிலேதான் வசிக்கிறோம்” என்றான் பக்கத்தில் நின்ற பொடிசிங்கோ.
அந்த இளைஞனின் உணர்ச்சிகளை மந்திரியால் நன்றாக உணரமுடிந்தது.
பின்பு எல்லோரும் அடுத்துள்ள குடிசைக்குச் சென்ற னர். அந்தக் குடிசையைச் சுற்றி எங்கு பார்த்தாலும் கமுக மரங்கள் சோலையாகக் காட்சியளித்தன. அந்தக் கமுக மரங்களில் குலக்குக் குலக்காகப் பாக்குகள் காய்த்துக் குலுங்கின.
”ஓ…இவருக்கு இந்தக் கமுக மரங்களில் இருந்து நல்ல வருமானம் கிடைக்குமல்லவா?’ எனக் கூறி அந்தக் கமுக மரங்களைப் பார்த்து வியந்தார் மந்திரி.
“ஐயா, இந்தப் பாக்குகளை நாங்கள் அறுவடை செய்யும் காலத்தில் இங்கு தண்ணீருக்குப் பெரும் பஞ்சம் ஏற் பட்டுவிடுகின்றது.சென்ற வருஷம் நான் சுமார் ஐம்பதினாயிரம் பாக்குகளை அறுவடை செய்து, நிலத்திலே குழி வெட்டி அதற்குள் போட்டு நீர் ஊற்றி ஊறவிட்டிருந் தேன்.அந்தப் பாக்குகள் சரியான பதத்தை அடையுமுன் னர் இந்தப் பகுதியில் தண்ணீர் இல்லாமல் போய்விட்டது. அதனால் ஊறப்போட்ட பாக்குகள் அனைத்தும் முளை கொண்டுவிட்டன. என்னால் அதனை ஒன்றும் செய்யமுடிய வில்லை. செம்பால் அடித்த காசுகூட எனக்குக் கிடைக்க வில்லை” என வருத்தத்தோடு கூறினார் அந்த விவசாயி. அப்படியானால் வரட்சியான காலத்தில் நீங்கள் வேறெங்காவது இருந்து தண்ணீர் பெற்று, பலனை எடுக்க லாந்தானே?” என யோசனையுடன் கேட்டார் மந்திரி.
“அது எங்களால் முடியாத காரியம்.மேலே அருவிகளிலிருந்து ஓடிவரும் நீரை வரட்சியான காலங்களில் அணை கட்டி மறித்து, தேயிலைத் தோட்டத்தில் இருக்கும் தேயி லைத் தொழிற்சாலைகளுக்கு எடுத்துக் கொள்கிறார்கள்.”
“இங்கு நாங்கள் குடிப்பதற்குத் தண்ணீர் இல்லாமல் இருக்கும்போது, அங்கே அந்தப் பெரிய இயந்திரங்கள் எமக்குக் கிடைக்கும் நீரைக் குடித்துவிடுகின்றன” என இடைமறித்துக் கூறினான் பொடிசிங்கோ.
“இது பெரும் அநியாயமான செயல்” என மந்திரி பதறினார்.
“அப்படியானால் இந்தப் பாக்குகளையெல்லாம் பதனி டாமல் பச்சையாகவே விற்றுவிடலாமே” எனக் கேட் டார் மந்திரியுடன் கூடவந்த பிரமுகர்.
“அப்படித்தான் நாங்கள் இப்போது செய்துவருகி றோம்.அதனால் நாங்கள் பெறக்கூடிய உண்மையான வரு மானத்தில் பத்தில் ஒன்றுகூட எங்களால் பெறமுடிய வில்லை. பச்சைப் பாக்கு ஒன்றின் விலை ஒரு சதந்தான்.”
அதன் பின்பு எல்லோரும் பண்டா முதலாளியின் கடைக்கு வந்தனர். மந்திரி வருவதனால் பண்டா முதலாளி தற்காலிகமாகக் கள்ளுக் கடையை மூடியிருந்தார். மந்திரி முன்புறத்தில் உள்ள பலசரக்குக் கடையைப் பார்வையிட்டார்.
“இந்தப் பகுதியில் எனது கடையொன்று மட்டுந்தான் இருக்கின்றது.ஆனாலும் போக்குவரத்து வசதி குறைவாக இருப்பதால் இங்குள்ள மக்களுக்குத் தேவையான பொருட்களை என்னால் கொண்டுவந்து கொடுக்க முடிவ தில்லை. இந்தக் கடையில் கிடைக்கும் வருமானம் எனக்குச் சீலியம் நடத்தவே போதாமல் இருக்கின்றது. இங்குள்ள மக்களுக்கு இந்தக் கடையாவது பயன்படட்டுமே என்று தான் நான் இந்தக் கடையை நடத்தி வருகின்றேன்” என்றார் பண்டா முதலாளி.
வெளியே உள்ள கித்துள் மரங்களைக் கவனித்தார் மந்திரி.
“ஹோ…உங்களுக்குத்தான் இந்தக் கித்துள் மரங்களி லிருந்து நிறைய வருமானம் கிடைக்குமே.கள்ளும் உற்பத்தி செய்யலாமல்லவா” எனக் கூறிவிட்டுச் சிரித்தார் மந்திரி.
“இல்லை இல்லை. நாங்கள் மரத்தில் பாளை சீவி,மருந்து கட்டி, முட்டி கட்டிவைத்தால் குரங்குகள் பதனீரைக் குடித்துவிட்டு முட்டிகளை உடைத்துச் சேதம் விளைவிக்கின்றன.”
“அப்படியானால் நீங்கள் இந்த மரங்களிலிருந்து சிறிதளவாவது பலன் பெறுவதில்லையா?’ எனக் கேட்டார் மந்திரி.
“ஏதோ சிறிது பதனீர் கிடைக்கின்றது. அதிலிருந்து நாங்கள் கருப்பட்டி காய்ச்சுகிறோம். அது எமது வீட்டுத் தேவைக்குத்தான் போதுமானதாக இருக்கின்றது” என்றார் பண்டா முதலாளி.
தோட்டத்தைச் சுற்றிப் பார்த்த மந்திரி, “ஹோ… இங்கு ஏலம், கராம்பு முதலிய செடிகளும் இருக்கின்றனவே’ எனக் கூறினார்.
“குறிப்பிட்ட ஒருசில காலங்களில் மட்டுமே இதில் பலன் கிடைக்கிறது.ஆனாலும் இந்தக் கிராமத்தில் இருந்து கொண்டு நல்ல முறையில் இவற்றைச் சந்தைப்படுத்த எம்மால் முடிவதில்லை” எனக் கூறினார் பண்டா முதலாளி.
ஆனாலும் பண்டா முதலாளி சிறிது வசதியுள்ளவர் என்பதை மந்திரியால் ஊகித்துக்கொள்ளமுடிந்தது. அவர் தன்னிடம் கூறிய யாவும் உண்மையானதல்ல என்பதை மந்திரி உணர்ந்துகொண்டார்.
பொதுவாக இந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் ஓரிருவரைத் தவிர பலர் பெரிதும் கஷ்டப்படுகிறார்கள் என் பதை அவரால் நன்கு அறிந்துகொள்ளமுடிந்தது.
பின்னர் பண்டா முதலாளியின் வீட்டை அடுத்துள்ள குடிசைகள் நிறைந்த பகுதிக்குச் சென்று அங்குள்ளவர்களுடன் அளவளாவினார் மந்திரி.
முதலில் அவர்கள் பியசேனாவின் குடிசைக்குச் சென்றனர்.
மந்திரியும் அவரது குழுவினரும் தனது வீட்டுக்கு வருவதைப் பார்த்த பியசேனா, அவர்களுக்கு வணக்கம் தெரி வித்து உள்ளே அழைத்துச் சென்றான். வீட்டினுள்ளே இருந்த அவனது தாய் மேரி நோனா மேதுவாக எழுந்து, “ஆயுபோங் மாத்தயா” என மந்திரிக்கு வணக்கம் தெரிவித்தாள்.
“நீங்கள் குடியிருக்கும் இந்தக் காணி உங்களுக்குச் சொந்தமானதா?’ எனக் கேட்டவாறு மந்திரி அவ்விடத்தின் சுற்றுப்புறங்களை நோட்டம்விட்டார்.
“இல்லை ஐயா, இது எங்களது சிறிய தகப்பனாருக்குச் சொந்தமான காணி.அவரது உதவியாலேதான் நாங்கள் இந்தக் குடிசையை அமைத்துக்கொண்டு இங்கு இருக்கிறோம்” எனப் பணிவாகக் கூறினான் பியசேனா.
“ஆமாம் இவர்களுக்குச் சொந்தமாகக் காணியேதும் இல்லை…இவன் இங்குள்ள இளைஞர்களில் ஓரளவு படித்தவன்.பக்கத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கொந்தரப்பு வேலை செய்துவருகிறான்” என்றார் அருகே நின்ற பண்டா முதலாளி.
“ஏன் தோட்டத்தில் உங்களுக்கு நிரந்தரமாக வேலை கிடைக்காதா? கொந்தரப்பு மட்டுந்தான் கிடைக்குமா?” எனப் பியசேனாவைப் பார்த்துக் கேட்டார் மந்திரி.
“எனது தாயாரின் பெயரில் முன்பு கொடுக்கப்பட்டிருந்த கொந்தரப்பை, இப்போது தொடர்ந்து நான் பொறுத்த செய்து வருகிறேன். சில்லறை வேலைகளைப் வரையில் தோட்டங்களில் பதிவானவர்களுக்குத்தான் போதிய வேலைகள் கொடுக்கப்படுகின்றன. தோட்டத்தில் கூடுதலான வேலைகள் இருக்கும்போதுதான் கிராமத்தில் உள்ளவர்களுக்கு வேலை கொடுப்பார்கள்” என்றான் பியசேனா.
“ஏன் நாட்டில் இருந்து செல்லும் தொழிலாளர்களைத் தோட்டத்தில் நிரந்தரமான தொழிலாளர்களாக ஏற்றுக் கொள்ளமாட்டார்களா?” என யோசனையுடன் கேட்டார் மந்திரி.
“மிகக் குறைந்த பகுதியினரே தோட்டத்தில் பெயர் பதிந்து வேலை செய்கின்றனர். மற்றவர்கள் தற்காலிகத் தொழிலாளிகளாகத்தான் அவ்வப்போது வேலை செய்கின்றனர்” என்றான் பியசேனா.
மந்திரி யோசனையுடன் தலையாட்டியபடி அடுத்துள்ள குடிசைக்குள் சென்றார்.
அக்குடிசையின் முன்புறத்தில் நடுத்தர வயதுடைய ஒருவர் அமர்ந்திருந்தார். மந்திரியும் ஏனையோரும் அங்கு வருவதைக் கண்டதும் அவர் எழுந்து வணக்கம் தெரிவித் தார்.
“இவர் பெயர் முதியான் சே; பக்கத்திலுள்ள தேயிலைத் தோட்டத்தில் முன்பு கங்காணி வேலை பார்த்தவர்.இப் பொழுது ஓய்வுபெற்று வீட்டில் இருக்கிறார்.எங்கள் கிரா மத்தில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளை இவரோடு கலந்தா லோசித்துத்தான் செய்வது வழக்கம்” என பண்டா முத லாளி அவரை அறிமுகப்படுத்தினார்.
“அப்படியா, தோட்டத்து வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின்பு எப்படி உங்களது சீவியம் நடக்கிறது?” என மந்திரி அவரிடம் வினவினார்.
“எனது மகன் ஒருவன் கொழும்பில் வேலை செய்கி றான். அவன் அனுப்பும் பணத்தைக் கொண்டு நானும் எனது மனைவியும் சீவியம் நடத்துகிறோம்” என்றார் முதியான்சே.
“சரி… மிகவும் நல்லது; நான் உங்கள் கிராமத்து மக்க ளின் வாழ்க்கை முறையைப் பற்றி அறிய விரும்புகிறேன். இதைப் பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?” என மந்திரி அவரிடம் கேட்டார்.
“நமது கிராமம் நாலு புறமும் தோட்டங்களினால் சூழப்பட்டு இருப்பதால் விரிவுபடமுடியாத நிலையில் இருக் கின்றது.ஆனால், மக்கள் தொகையோ நாளுக்குநாள் பெரு கிக்கொண்டே வருகின்றது. இதனால் இங்குள்ள எல்லோ ருக்கும் விவசாயம் செய்வதற்கு இப்போது போதிய நிலம் இல்லாமல் போய்விட்டது. இங்குள்ளவர் களுக்குப் போதிய வேலைவாய்ப்பும், இருப்பிட வசதியும் ஏற்படுத்திக் கொடுத்தால்தான் இந்தக் கிராமம் முன்னேற்றமடைய வாய்ப்புஏற்படும்” என யோசனையுடன் கூறினார் முதி யான்சே.”
“இவர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாமென நீங்கள் கருதுகின்றீர்கள்?”
“இப்போதுதான் தேயிலைத் தோட்டங்கள் யாவும் அரசாங்கத்திற்குச் சொந்தமாகிவிட்டதே. கிராமத்து மக்களுக்கு அங்கு போதியளவு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாமல்லவா?”
“நீங்கள் கூறுவதும் சரிதான். இது விஷயமாக வேறு என்ன கூற விரும்புகின்றீர்கள்?” என மந்திரி ஆவலுடன் கேட்டார்.
“தோட்டத் தொழிலாளர்கள் பலர் இப்போது இந்தி யாவிற்குத் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களது டத்தைக் கிராமத்து மக்களைக் கொண்டு நிரவலாம். இத னால் தோட்டத் தொழிலாளர்களோடு சேர்ந்து கிராமத்து மக்களும் தேயிலைத் தோட்டங்களை அபிவிருத்தியடையச் செய்ய வாய்ப்பு ஏற்படும்” என்றார் முதியான்சே.
முதியான்சே கூறிய கருத்துக்கள் மந்திரியைச் சிந்திக்க வைத்தன.
மந்திரி அடுத்துள்ள குடிசைகளுக்கும் சென்று அங்குள்ளவர்களுடன் அளவளாவினார். அவர்களது நிலைமையை அறிந்துகொண்ட பின்னர், கூட்டம் நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்ட புத்த விகாரைக்கு எல்லோரும் சென்றனர்.
அவர்கள் அங்கு செல்வதற்கு முன்பாகவே கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக சில தொழிலாளர்களையும் அழைத் துக்கொண்டு கண்டக்டர் அங்கு வந்து காத்திருந்தார்.
மந்திரி மேடையில் ஏறியதும், தயாராகக் கொண்டு வந்திருந்த மாலையை மந்திரியின் கழுத்தில் அணிவித்தார் கண்டக்டர். அப்போது அங்கிருந்த அனைவரும் கரகோஷம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து பலர் மந்திரிக்கும் அங்கு வந்த ஏனைய பிரமுகர்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
சிறிது நேரத்தில் கூட்டம் ஆரம்பமாகியது. தனது பேச்சில் முக்கியமாகப் பின்வரும் கருத்தினை மந்திரி வலியுறுத்திப் பேசினார்:
“இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் மிகவும் வறுமையான நிலையிலேயே இருக்கின்றனர். அதற்கு அடிப் படையான காரணம் இங்குள்ளவர்களுக்குக் குடியிருப்பதற்கோ விவசாயம் செய்வதற்கோ ஏற்ற நிலம் இல்லை என்பதை நான் உணருகிறேன். ஒரு சிலருக்கு நிலம் இருந்த போதிலும் அதில் இருந்து பலன் பெறமுடியாமல் பல பிரச்சினைகள் அவர்களைப் பாதிப்பதை நான் அறிகிறேன்.
எங்களது மூதாதையர்களின் நிலங்களையெல்லாம் வெள்ளையர்கள் வந்து கைப்பற்றி, அவற்றைத் தேயிலைத் தோட்டங்களாக மாற்றி, அதிலிருந்து பெரும் வருமானத்தைத் தங்களது நாட்டிற்கு எடுத்துச் சென்றார்கள். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. வெள்ளையர்கள் வசமிருந்த தேயிலைத் தோட்டங்கள் யாவும் இப்போது அரசாங்க உடைமையாகிவிட்டன. உண்மையில் இவை யாவும் உங்களது மூதாதையர்களின் சொத்துத்தான்.
இன்று நிலமற்றவர்களாகவோ,அல்லது வசதி குறைந்தவர்களாகவோ இருக்கும் உங்களுக்கு, உங்களுடைய மூதாதையர்களுடைய சொத்தைத் தருவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை நாம் செய்துகொண்டு இருக்கின்றோம். நீங்கள் எல்லோரும் இந்த நாட்டின் மதிப்புக்குரிய பிரஜைகள்; நீங்கள் கஷ்டப்படுவதைப் பார்த்துக்கொண்டு எவருமே சும்மா இருக்கமுடியாது.
இந்தக் கணத்திலிருந்தே நீங்கள் எல்லோரும் சுபீட்ச மான ஓர் எதிர்காலத்தை நோக்கி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறீர்களென்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். உங்கள் எல்லோருக்கும் நிச்சயமாகப் போதியளவு காணி கிடைப்பதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்.”
“ஜயவேவா…”
“அப்பே மந்திரி துமாட்ட ஜயவேவா…”
கூட்டத்திலிருந்து பல குரல்கள் வானத்தைப் பிளந்து ஒலித்தன.
அன்று கூட்டம் முடிந்து வீட்டிற்குத் திரும்பிய மக்களின் உள்ளங்களில் மகிழ்ச்சி பிரவாகித்துக்கொண்டிருந்தது.
கூட்டம் முடிந்தபின்னர் மந்திரிக்கும், அவருடன் கூட வந்தவர்களுக்கும் கிராமசேவகரின் இல்லத்தில் ஒரு தேநீர் விருந்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தோட்டத்தில் இருந்து வந்த கண்டக்டர் உட்பட பண்டா முதலாளியும், வேறு சிலரும் அந்த விருந்தில் கலந்துகொண்டனர்.
மந்திரி கண்டக்டரின் அருகே நெருங்கி, “எப்படி உங்களது புதிய வேலை… தோட்டத்தில் எல்லா வசதியும் உங்களுக்கு இருக்கிறதா?” என வினவினார்.
“உங்களது தயவால் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்” எனப் பணிவுடன் கூறினார் கண்டக்டர்.
“மிகவும் சந்தோஷம்… உங்களது தோட்டத்தில் விரைவில் ஒரு கூட்டுறவுச்சங்கக் கடை அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறேன்” எனக் கூறினார்.
“மிகவும் நல்லது. இப்போது தொழிலாளர்கள் தமக்கு வேண்டிய பொருட்களைப் பெறுவதில் பெருங் கஷ்டப்படுகிறார்கள். கூட்டுறவுச் சங்கக்கடை வந்தால் அவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்” எனக் கூறிவிட்டுச் சிரித்தார் கண்டக்டர்.
அப்போது அங்கிருந்த கிராமசேவகர் மந்திரியின் அருகே வந்து, அவருக்கு மூன்று இளைஞர்களை அறிமுகப் படுத்தினார்.
“இவர்கள் இந்தக் கிராமத்தில் உள்ள படித்த இளைஞர்கள்; வேலைவாய்ப்பின்றி இருக்கிறார்கள். அது விஷயமாகத் தங்களுடன் கதைக்க விரும்புகிறார்கள்.”
“ஆமாம். எங்களது கிராமத்தில் பள்ளிக்கூடம் இல் லாததால் இவர்கள் எல்லோரும் வெகுதூரம் நடந்து சென்று சிரமப்பட்டு ‘டவுனில்’ உள்ள பாடசாலையில் படித்தவர்கள். கடந்த பொதுத் தேர்தலின்போது இவர்கள் தங்களது வெற்றிக்காகப் பெரிதும் உழைத்தவர்கள்” எனப் பக்கத்தில் நின்ற பண்டா முதலாளி கூறினார்.
“அப்படியா, நீங்கள் இதுவரை காலமும் ஏதாவது தொழில் பெறுவதற்கு முயற்சி செய்யவில்லையா?” என அந்த இளைஞர்களைப் பார்த்துக் கேட்டார் மந்திரி.
“நாங்கள் பல இடங்களில் வேலை தேடி அலைந்த போதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை” என அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
“தற்பொழுது படித்த இளைஞர்களுக்கும், யுவதிகளுக் கும் நாங்கள் தேயிலைத் தோட்டங்களில் வேலைகொடுக்க எண்ணியுள்ளோம். வேலையில்லாத இளைஞர்களை மனுப் போடச் சொல்லியும் அறிவித்திருந்தோம். நீங்கள் ஏதா வது வேலைகளுக்கு மனுப் போடவில்லையா?’ என மந்திரி அவர்களிடம் வினவினார்.
“ஆம், நாங்கள் ஆரம்பத்திலேயே விண்ணப்பம் போட்டோம். இதுவரையிலும் எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. உங்களது சிபார்சு இருந்தால் ஏதாவது வேலையைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது” என்றான் அந்த இளைஞர்களில் ஒருவன்.
“ஆம், உங்களைப் போல பிரச்சினையுள்ள இளைஞர்கள் எமது பகுதியில் நிறையப் பேர் இருக்கிறார்கள். நீங்கள், உங் களது மனுவின் பிரதியொன்றை எடுத்துக்கொண்டு என்னை வந்து சந்தியுங்கள்; என்னால் முடிந்த உதவியைக் கட்டாயம் செய்வேன்” என்றார் மந்திரி யோசனையுடன்.
அவரது பேச்சில் தொனித்த உறுதி அந்த இளைஞர் களுக்கு நம்பிக்கையை அளித்தது.
அன்று மந்திரி விருந்து முடிந்து தமது இல்லத்துக்குத் திரும்பியபோது, அவரது உள்ளம் பூரித்திருந்தது.கிராமத்து மக்களிடம் தமக்கு இருக்கும் ஆதரவை எண்ணி அவர் பெரிதும் மகிழ்வடைந்தார்.
அத்தியாயம் பன்னிரண்டு
பெரிய கிளாக்கர் சுப்பிரமணியத்தினால் அவரது இடமாற்றத்தை எவ்வகையிலும் தடுத்துநிறுத்த முடிய வில்லை.அவர் இப்போது றப்பர் தோட்டத்துக்கு வேலை ஏற்றுச் சென்றுவிட்டார். கடந்த ஒரு கிழமையாக புதிய பெரிய கிளாக்கர் தோட்டத்து ஆபீஸில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.
அன்று வந்த கடிதங்களைப் பார்வையிட்டுக்கொண் டிருந்த துரை ‘கோலிங் பெல்லை’ அமுக்கினார். தனது அறையில் இருந்த பெரிய கிளாக்கர் எழுந்து துரையின் அறையின் உள்ளே நுழைந்தபோது, மேசையிலிருந்த டெலிபோன் அலறியது. அதை எடுத்துக் கதைத்துவிட்டு போனை கீழே வைத்தார் துரை. பின்னர் பெரிய கிளாக் கரைப் பார்த்துக் கூறினார்:
“மிஸ்டர் பெரேரா, நமது தோட்டத்துக்கு புதிதாக ஆறு ‘சுப்பவைசர்கள்’ வர இருக்கின்றார்கள். எனக்கு மாவட்டக் காரியாலயத்திலிருந்து அறிவித்தல் வந்திருக்கிறது.”
“எப்போது வருகிறார்கள் சார்?” என்றார் பெரிய கிளாக்கர் ஆவலுடன்.
“எதிர் வரும் முதலாம் திகதியே அவர்கள் வேலைக்கு வரவிருக்கின்றார்கள். தோட்டங்களில் அவர்களுக்கு வேலை செய்து எவ்வித அனுபவமும் இல்லை. இங்கு வந்தபின்பு தான் அவர்கள் வேலை பழகவேண்டும்.”
”சரி சார், இது சம்பந்தமாக நான் ஏதாவது செய்ய வேண்டுமா?”
சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்த துரை பெரிய கிளாக்கரின் பக்கம் திரும்பி, ”உண்மையில் இந்தத்தோட் டத்தில் சுப்பவைசர் வேலை எதுவும் காலியாக இல்லை.ஆனா லும் அரசாங்கம் அனுப்பும்போது நாம் ஏற்கத்தான் வேண்டும். அவர்கள் வந்தவுடன் அவர்களுக்குரிய இருப் பிட வசதிகளை நீர்தான் செய்யவேண்டும்” என்றார்.
”மிகவும் நல்லது சார், அதைப்பற்றி நான் கவனித் துக்கொள்கிறேன்.”
துரை அது சம்பந்தமான கடிதத்தை பெரிய கிளாக் கரிடம் கொடுத்தார்.
கடிதத்தைப் பெற்ற கிளாக்கர் சற்றுத் தயங்கியபடி சார், உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைப்பற்றிக் கூறவேண்டும்; இப்போது அநேகமான கடிதங்கள் சிங்கள மொழியில்தான் எமக்கு வருகின்றன. இங்கு எனக்குக் கீழே கடமைபுரியும் ஒருவருக்கும் அந்த மொழி தெரியாது. அதனால் இந்த ஆபீஸில் பலவேலைகள் தாமதமாகிக் கொண்டிருக்கின்றன” எனக் கூறினார்.
“நாங்கள் இந்த ஆபீஸில் ஆங்கில மொழியிலேதான் கடிதத் தொடர்பு வைத்திருப்பது வழக்கம். அதையே நாம் தொடர்ந்து செய்வோம்” என்றார் துரை.
“நீங்கள் சொல்வது சரி சார். ஆனால், நமக்கு வரும் கடிதங்கள் யாவும் சிங்கள மொழியிலேயே வருகின்றன. அந்த மொழியிலே தேர்ச்சியுள்ள ஒருவர் இங்கிருந்தால் நல்லதென நினைக்கின்றேன்.”
“ஏன் உமக்கு நன்றாகச் சிங்களம் தெரியும்தானே. நீரே அந்தக் கடிதங்களை மொழி பெயர்த்துக்கொடுக்கலாமல்லவா?”
“ஆமாம் சார், ஆனாலும் எனக்கு வேலைகள் அதிக மாக இருக்கும்போதோ, அல்லது நான் எப்போதாவது லீவில் செல்லும்போதோ, சிங்கள மொழி தெரிந்தவர் ஒருவர் இருந்தால் உதவியாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.”
துரை பதில் ஏதும் கூறாமல் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.
“இங்கே பாருங்கள் சார்,சுப்பவைசர்களாக வரப் போகும் ஆறு பேரும் சிங்கள இளைஞர்கள்தான் என இந் தப் பெயர்களிலிருந்து நாம் ஊகிக்கமுடிகிறதல்லவா? வருகின்ற எல்லோருக்குமே ஆங்கிலம் தெரியுமென நாம் எதிர் பார்க்கமுடியாது. இவர்கள் சிங்கள மொழியிலேதான் தங் களது கடமையைச் செய்யப்போகின்றார்கள். இனி வருங் காலத்திலும் சிங்கள மொழி மட்டும் தெரிந்தவர்களே இங்கு வேலைக்கு வரவும் கூடும். அதனாலேதான் நாங்கள் சிங்கள மொழி தெரிந்த ஒருவரை டைப்பிஸ்டாக வைத்துக்கொள்வது நல்லது என எண்ணுகிறேன்.”
”நீர் சொல்வது சரிதான். நமக்கு சிங்கள் மொழி தெரிந்த ‘டைப்பிஸ்ட்’ தேவையென நமது மாவட்டக் காரியாலயத்திற்கு தெரிவிப்போம்” என்றார் துரை சிகரட் ஒன்றைப் பற்றவைத்தபடி.
“எனது அபிப்பிராயமும் இதுதான் சார், இது சம்பந்தமான கடிதத்தை டைப் பண்ணிக்கொண்டுவந்து தருகிறேன்” எனக் கூறிவிட்டு பெரிய கிளாக்கர் தனது அறைக்குச் சென்றார்.
துரை சிங்களவராக இருந்தபோதிலும் அவருக்கு அம்மொழி நன்றாகத் தெரியாது. அவர் ஆங்கிலத்திலே தான் கல்வி பயின்றவர், அதனால் பெரிய கிளாக்கர் கூறி விட்டுப்போன செய்தி அவருக்கு குழப்பத்தை உண்டு பண்ணி இருந்தது.தனது ஆசனத்தில் அமர்ந்தவாறு ஏதோ சிந்தித்தவண்ணம் அவர் சிகரட் புகையை ஊதிக் கொண்டிருந்தார்.
பெரிய கிளாக்கர் பெரேரா தனது அறையில் இருந்த படியே கடிதம் ஒன்றை எழுதித் தயாரித்துக்கொண்டிருந்தார்.
அவரது மருமகள் முறையிலான பெண்ணொருத்தி சிங் களத்தில் தட்டச்சுப் படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தாள். புதிதாக தோற்றுவிக்கப்படும் வேலையில் அவளை எப்படியாவது நுழைத்துவிடலாம் என்ற நம்பிக்கை பெரிய கிளாக்கருக்கு இப்போது ஏற்பட்டிருந்தது.
எப்படியாவது கட்சி அமைப்பாளரைச் சந்தித்து ஏற்ற ஒழுங்குகளைச் செய்துவிடவேண்டும் என்ற சிந்தனையுடன் அவர் கடிதத்தை டைப் அடிக்கத் தொடங்கினார்.
அத்தியாயம் பதின்மூன்று
தொழிலாளர்களின் நன்மை கருதி தோட்டத்தில் புதிதாகச்சங்கக்கடை திறந்திருந்தார்கள். கடையில் அன்று மாலை ஒரே கூட்டமாக இருந்தது. சிறுவர்கள் கூச்சலிட்டுக் கொண்டு அங்குமிங்குமாக ஓடித்திரிந்தனர். பொருட்கள் வாங்குவதற்கு அதிகமானோர் வந்திருந்தபடியால் எல்லோ ரும் ஒருவருக்குப் பின் ஒருவராக “கியூவில்” நின்றிருந்த னர். கரத்தை றோட்டு வரைக்கும் கியூவரிசை நீண்டிருந்தது.
மனேஜர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு கைப் பணத்திற்கு சாமான் வாங்குபவர்களுக்கு ரசீதை எழுதிக் கொடுத்து, பணத்தை வாங்கி லாச்சியில் போட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக இருக்கும் ‘பில்கிளாக்கர்’ கடனுக்குச் சாமான் வாங்குபவர்களுக்கு வேகமாக பில்களை எழுதிக் தள்ளினார்.
சாமான்களை நிறுத்துக் கொடுப்பதற்காக ஒருவர் தராசின் அருகிலும் வேறொருவர் அவருக்கு உதவியாக சாமான்கள் எடுத்து கொடுத்துக் கொண்டும் இருந்தார். சாமான் களை நிறுப்பவரது கை துரிதமாக இயங்கிக் கெண்டிருந்தது.
“அட யாருடா அங்க சத்தம் போட்டுக்கிட்டிருக்கிறது. ஒழுங்கா நின்று சாமானத்த வாங்கி கிட்டு போங்களேன். மாடு மாதிரி அடிச்சிக்கிட்டு கெடக்குறானுக” கறுப்பண்ணன் கங்காணி உரத்த குரலில் கூறினார்.
அவரது கையில் பெரிய உறை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.
“ஏய் யாருடா அங்க ஊடையில் பூர்றது. கங்காணி கங்காணி, அங்க பாருங்க ஊடையில பூர்றானுங்க.அப்ப நாங்க எப்புடீங்க சாமான் வாங்கிறது?” வரிசையில் நின்றிருந்த ஒருவன் கத்தினான்.
“இப்ப யாராச்சும் போலிங்கிலை பூந்திங்கனா கொழப் பந்தான் வரும், இன்னிக்கு சாமான் வாங்காட்டியும் பரவாயில்ல” வரிசையில் பின்னால் நின்றிருந்த வேறொருவன் கத்தினான்.
“அட ஏம்பா இந்த ஆம்புளை ஆளுங்க எல்லாம் இப் புடி சத்தம் போடுறாங்களோ தெரியாது; பொம்புளை ஆளுங்க நிக்கிறோமுனு கொஞ்சமாவுது எடங் கொடுக்கிறாங் களா? மிச்சமோசம்'” என முணுமுணுத்தாள் அங்கே நின்ற பெண்களில் ஒருத்தி.
“இந்தா பாருங்க, இந்த பொம்பளை ஆளுங்களுக்கு கொஞ்சம் எடங் கொடுங்க அவுங்க சாமான் வாங்கிட்டு போனாப்புறம் நாம வாங்கலாம். ஏன்தான் இப்புடி அடிச்சிக்கிறாங்களோ தெரியாது. கோப்புரெட்டி கடை என்னா ஓடியா போவப் போவது? சத்தம் போடாம் நின்னு சாமான் வாங்குங்களேன்” என்றார் கறுப்பண்ணன் கங்காணி பலமாக.
அப்போது அங்கே வந்த வீரய்யா, “என்னாங்க கங்காணி சத்தம் போட்டுகிட்டு இருக்கீங்க” எனக் கேட்ட படி கறுப்பண்ணன் அருகிலே சென்றான்.
“இந்தப் பயலுகளோட இன்னிக்கு சாமான் வாங்க முடியாது. கோச்சிக்கி போறமாதிரி அடிச்சிக்கிறாங்க. கட னுக்குனு சொன்னா போதும் ஆடிக்கிட்டு சாமானுங்களை அள்ளுவாங்க, அப்புறம் செக்குறோலுல கடன் வந்த வொடன ஆட்ட மெல்லாம் அடங்கிப் போயிடும்” கறுப்பண்ணன் கங்காணி வீரய்யாவிடம் கூறிவிட்டு ஒரு வாய்க்கு வெற்றிலை போட்டுக் கொண்டார்.
வாசல் வழியாக கடைக்குள் எட்டிப் பார்த்த வீரய்யா. “இன்னிக்கு கோப்புறட்டில ரெம்ப சாமான் வந்திருக்குப் போல இருக்கே. துணியெல்லாம் வந்திருக்கே. அப்புறம் என்ன? தோட்ட ஆளுங்கள இனி கையில புடிக்க ஏலாது” எனக் கூறிவிட்டுச் சிரித்தான்.
“ஆமா வீரய்யா. காலையிலை யூனியனில இருந்து நெறைய சாமான் வந்திச்சாம். நல்ல கருவாடெல்லாம் வந்திருக்கு. ஒரு ஆளுக்கு அரை றாத்தல்படி கொடுக்குறாங்களாம்” என்றார் கறுப்பண்ணன், வாயின் ஒரு பக்கமாக வெற்றிலையை அதக்கிக் கொண்டு.
“அப்ப நல்லதுதான்… டவுனுல ஒரு றாத்தல் கருவாடு ஆறு ரூபா; அதும், அந்த வெலை கொடுத்து வாங்கிறதுக்கு சமான் தட்டுப்பாடா இருக்கு, இங்க என்ன வெலை போடுறாங்களாம்?” அருகே நின்ற ராமு காதிலே செருகிவைத் திருந்த பீடியை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டு கேட்டான்.
அப்போது கடைவாசலில்; வாங்கிய பொருட்களை உறையிலே போட்டுக்கொண்டிருந்த ராக்கு ஏதோ சிந்தித்துவிட்டு கடையிலே கொடுத்த பில்லை எடுத்துப் பார்த்தாள்.
“வீரய்யா, கொஞ்சம் இங்க வாப்பா, எந்தெந்த சாமானுக்கு என்ன வெலை போட்டிருக்காங்கன்னு கொஞ்சம் வாசிச்சு சொல்லிப்புடு”
ராக்கு வீரய்யாவை அழைத்தாள்.
“என்னக்கா நீங்க ஒன்னு… எல்லாம் சரியாத்தான் போட்டிருப்பாங்க… டவுண் கடையிலமாதிரி நெனைச்சுக்கிட்டீங்களா.. இது கோப்புரட்டிகடை” எனக் கூறிக் கொண்டே பில்லை வாங்கினான் வீரய்யா. பின் அதனை உற்றுப் பார்த்துவிட்டு, “என்னக்கா ஒன்னும் வௌங்கல. சிங்களத்தில இல்லியா எல்லாம் எழுதியிருக்கு” என முணு முணுத்தான்.
”என்னாதம்பி வௌங்கலியா. இது என்னா சாமான்னு பாத்துச் சொல்லிப்புடு. அதுக்கு என்னா அவ்வளவு வெலை போட்டிருக்கு?” ராக்கு மீண்டும் வீரய்யாவை துரிதப் படுத்தினாள்.
“அதுக்கு ரெண்டு ரூபா தொண்ணூறு சதமுனு போட்டிருக்காங்க. என்ன சாமான்னுதான் வெளங்கல.எல்லாம் சிங்கள ஆளுங்களை கொண்டு வந்து போட்டுக்கிட்டு வேலை செஞ்சா, யாருக்குத்தான் வௌங்கப்போவுது. ஒரு தமுழ் ஆளுங்ககூட கோப்புரட்டி கடையில வேலை இல்லை” எனக் கூறினான் வீரய்யா.
அப்போது பக்கத்தில் நின்ற ராமு, ஏதோ ஞாபகம் வந்தவனாக, ”ஆமா, பார் சோப் ஏதும் வாங்கியிருக்கீங்களா?” என ராக்குவைப் பார்த்துக் கேட்டான்.
“ஆமாம் தம்பி, பார் சோப்பு சவுக்காரம் ஒன்னு வாங்கியிருக்கேன்” என்றாள் ராக்கு.
“அப்ப அதுக்குத்தான் அந்த வெலை. பார் சோப்புக்குத்தான் இரண்டு ரூபா தொண்ணூறு சதமுனு சொல்லிக்கிட்டாங்க” என்றான் ராமு பெரிய விஷயத்தைக் கண்டு பிடித்தவன் போல.
நேரம் செல்லச்செல்லக் கடையிற் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஒரே சத்தமும் கூச்சலுமாக இருந்தது.
அப்போது, மனேஜர் உள்ளே இருந்தபடியே, “இந்தா சத்தம் போட வேனாங், யாருங் சத்தம் போட்டுக்கிட்டு இருந்தா நாங் சாமாங் கொடுக்கிறத நிப்பாட்டி போடு றது. எல்லாங் ‘போலிங்கில’ வந்து சாமான் எழுதி வாங்கு. இனி யாருங் சத்தம் போட்டா கடையை மூடிப் போடுறது. இப்படி சத்தம் போட்டா எப்புடி நாங்க சாமாங் கொடுக்க முடியும்” எனக் கோபமாக அங்கிருப்பவர்களைப் பார்த்துக் கூறினார். ஒருகணம் அங்கு அமைதி நிலவியது.
“இந்தா இங்க பாருங்க. டவுனில் உள்ள கோப்பு ரெட்டி கடையில எல்லாம் இப்புடியா சத்தம் போட்டு அடிச்சிக்கிட்டு கெடக்குறாங்க. இந்த தோட்டத்து ஆளுங்க மிச்சம் மோசம். இன்னிக்கு வாங்க முடியாட்டி நாளைக்கி வாங்கிறது” வீரய்யா கண்டிப்புடன் கூறினான்.
“இந்தா வீரய்யா, நான் எவ்வளவோ, சொல்லிப்பாத்துட்டேன். கேட்கமாட்டேங்கிறாங்க. இப்புடி நடந்துகிறது னாலதாண்டா நம்பள தோட்டக்காட்டானு சொல்லுறானுங்க” என்றார் கறுப்பண்ணன் கங்காணி.
“ராமு அங்கபாரு பில்லுக் கிளாக்கரை சிகரட்டை குடிச்சிகிட்டு. சாதுசாப்பா எழுதிக்கிட்டு இருக்காரு. வெரசா எழுதுனாதானே நாங்க வாங்கிட்டுப் போகலாம்” என்றான் குப்பன், வரிசையில் சிரமப்பட்டு நின்று கொண்டு.
“அதுசரி, அந்த மனேஜர பாக்குறப்போ சரியா பாரு மாதிரி இருக்கு? நம்ப ரெண்டாவது கிளாக்கரையர் மாதிரி இல்லியா இருக்கு” குப்பனுக்கு பின்னால் நின்றவன் கூறினான்.
“மொக சாடைய பாத்தா அப்புடித்தான் தெரியுது. மனேஜரும் நம்ப மந்திரியோட ஊர்தானாம். கண்டக்கை யாவுக்கு நல்ல பழக்கமாம்”
“இப்ப கோப்புறட்டிக்கட போட்டதில இருந்து ஆளுங்களுக்கு. ரெம்ப வசதி. வேலைவுட்டு வந்தவாக்குல இப்படியே சாமானத்த வாங்கிக்கிட்டு போகலாம். டவுனு பக்கமே போகத் தேவையில்லை.சேட்டு, துணி எல்லாங் கூட வந்திருக்கு”
அது மட்டுமில்ல ராமு, எல்லா சாமானத்தையும் ‘கொன்றோல்’ வெலைக்கி கொடுக்கிறாங்க. கடனுக்கும் தாறாங்க. டவுன் கடையிலயா இருந்தா கடனுக்கு ஒன்னுக்கு ரெண்டா வெலை போடுவாங்க தோட்டத்த அரசாங்கம் எடுத்தாப் பொறகு, இப்ப ஆளுங்களுக்கு ரெம்ப வசதி செஞ்சி கொடுக்கிறாப்போலதான் தெரியுது” என்றான் வீரய்யா?
“என்னாங்க கங்காணி,சாமான் வாங்கிட்டீங்கபோலை தெரியுது. மாசியெல்லாம் வாங்கியிருப்பீங்க. கொஞ்சம் தாங்க?’ என கறுப்பண்ணன் கங்காணியின் பக்கம் திரும்பிக் கேட்டான் ராமு.
“என்னா ராமு, ஒரு ஆளுக்கு ரெண்டு அவுன்சுதான் ரேசனுக்கு கொடுக்குறாங்க. நல்ல மாசிக்கருவாடு இருக்கு. நீ இன்னும் வாங்கல்லியா?”
“இல்லீங்க கங்காணி, இந்த கூட்டத்துல எப்படி எழுதுறது. அப்புறமேல மெல்ல எழுதி வாங்குவோம்” என்றான் ராமு சாவதானமாக.
“அந்த பில் கெளாக்கரையாவுக்கு என்னத்தம்பி ஒன்னும் வெளங்கல. நாம ஒன்னு சொன்னோமுனா அவரு ஒன்னு எழுதுறாரு. தமிழே தெரியாது போல இருக்கு. நான் உப்பு ஐஞ்சிறாத்தல் எழுதச் சொன் னேன். அவரு என்னாடான்னா வெங்காயத்த புடிச்சி ஐஞ்சி றாத்தல் எழுதி வச்சிருக் காரு. உப்பு இல்லாம இதைக்கொண்டே என்ன செய்யுறது” என்றார் கறுப்பண்ணன் கங்காணி வெறுப்பாக.
“அது சரிங்க கங்காணி அவருமேல ஒன்றும் குத்த மில்ல. உப்புக்கும், வெங்காயத்துக்கும் லுனு ‘லூணு’ என்னுதாங் சிங்களத்துல சொல்லுறது. நீங்க உப்பு எழுத சொன்னதுக்கு அவரு வெங்காயத்தை எழுதிப்புட்டாரு” என்றான் அவர்களது சம்பாஷணையை கேட்டுக் கொண்டி ருந்த செபமாலை.
“என்னாமோ தம்பி நீங்கதான் எல்லாம் படிச்சிருக்கீங்க. எங்க வூட்டில இருக்கிறதே ரெண்டு பேருதான். ரெண்டு பேத்துக்கு ஐஞ்சிறத்த வெங்காயம் என்னாத்துக்கு”
“சரிங்க கங்காணி கொண்டு போயிட்டு நல்லா சாப் ரெண்டு மாசத்துக்கு வெங்காயச் சட்டினி வச்சி புடுங்க. நல்லாயிருக்கும்” என்றான் ராமு சிரிப்பை அடக் கியபடி.
“எல்லாரும் இந்த மாசம் கடனுக்கு சாமான்களை வாங்குறாங்க. சம்பளத்து வாசல்லதான் தெரியப் போவுது. அப்புறம் தலையில் கைவச்சிக்கிட்டு போக வேண்டியது தான்” என்றான் ராமு அங்கே கிடந்த மண்ணெண்ணெய் பரல்மேல் அமர்ந்து கொண்டு.
“இனிமே ரேசன் அரிசியெல்லாம் ஒவ்வொரு செவ் வாக் கெழம அன்னிக்குத்தான் கொடுப்பாங்களாம். முந்தி மாதிரி அரிசி புடிக்க மடுவத்துல போய் காத்துக்கிட்டு இருக்கத் தேவயில்ல. வேண்டிய நேரத்துல இங்கயே வாங் கிக்கிறலாம்” என்றான் செபமாலை ராமுவின் பக்கம் போய் அமர்ந்து கொண்டு.
“பொதுவா இந்தத் தோட்டத்து ஆளுங்களுக்கு அடிக்கடி சாப்பாட்டு சாமான் தான் தட்டுப்பாடா இருக்கும். அந்த மொறையில் இப்புடி ஒரு கோப்புறேட்டு கடை போட்டு ஆளுங்களுக்கு சாமானுகளை இங்கேயே கொண்டு வந்து கொடுக்கிறதுபத்தி சந்தோஷப்படவேண்டிய விசயந்தான்” என்றான் வீரைய்யா.
அவனது முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.
அத்தியாயம் பதின்னான்கு
நாட்கள் சில கழிந்தன.
கண்டக்டரின் பங்களாவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார் மாரிமுத்துத் தலைவர்.
“என்னாங்க இந்த நேரத்தில் எங்க பொறப்படுறீங்க?” இஸ்தோப்பில், அடுப்புக்கு முன்னால் இருந்து ராட்டி சுட்டுக்கொண்டிருந்த பூங்கா அவரிடம் வினவினாள்.
“நம்ப கண்டக்கையா வூடுவரைக்கும் போயிட்டு வர ணும்” என்றார் தலைவர் கோர்ட்டை அணிந்துகொண்டு.
“கண்டக்கையாகிட்ட கதைக்கணும்னா நாளைக்கு காலையில் கதைக்கலாமே; நேத்து ராவெல்லாம் இருமிக் கிட்டுக் கெடந்தீங்க; சொகமில்லாததோட ஏன்தான் இந்த பனியில போகணும்?”
”இவ ஒருத்தி,பெரிய மனுஷங்கிட்ட கதைக்கிறதுக்கு பொறப்படுற நேரத்திலயே ஏதாச்சும் தடுத்துத்தான் பேசிக்கிட்டு இருப்பா… எனக்கும் அவருக்கும் எத்தனையோ ரகசியங்க இருக்கும். மலையில வைச்சு அத்தனை ஆளுங்களுக்கு முன்னுக்கு எப்புடிடி கதைப்பாரு” எனக் கூறிக்கொண்டே சுருட்டொன்றை எடுத்துப் பற்றவைத்தார் தலைவர்.
“நானு ஒண்ணும் தடுத்துப் பேசலீங்க.. இந்தாங்க சரியான பனி கொட்டுது. இந்த லேஞ்சிய தலையில சுத்திக்கிட்டு போங்க” எனக் கூறிய பூங்கா, லேஞ்சித் துண்டை எடுத்துத் தலைவரிடங் கொடுத்தாள்.
அதனை வாங்கித் தலையிலே கட்டிக்கொண்ட தலைவர். கண்டக்டர் வீட்டை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினார்.
கண்டக்டர் பங்களாவை நெருங்கியதும் புகைத்துக் கொண்டுவந்த சுருட்டை அணைத்துத் தனது கோர்ட்டுப் பைக்குள் திணித்துக்கொண்டே, பின்புறமாகச் சென்று சமையலறைக்குள் நுழைந்தார் தலைவர்.
அங்கு சமையல் செய்துகொண்டிருந்த பெடியன், அவரைக் கண்டதும், “ஐயா டவுணுக்குப் போயிருக்காரு; ஒங்களை வந்தா இருக்கச் சொன்னாரு” எனக் கூறினான்.
“ஐயாவர நேரமாகுமாடா? மொதல்லேயே போயிட்டாரா?”
“மடுவத்திலயிருந்து வந்தவொடனேயே உடுப்ப மாத் திக்கிட்டு போயிட்டாரு. இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவாரு.”
தலைவர் கோர்ட்டுப் பைக்குள் வைத்திருந்த குறைச் சுருட்டை மீண்டும் எடுத்து வாயில் பொருத்தி, அடுப்புக்குள் இருந்த கொள்ளிக் கட்டை ஒன்றை எடுத்துச் சுருட்டைப் பற்ற வைத்துக்கொண்டார்.
சுருட்டுப் புகை தொண்டையை அருவியபோது அவருக்கு இருமல் பற்றிக்கொண்டது. பலமாக இருமித் தொண்டைக்குள் புரண்டுவந்த சளியைக் காறி, பின் பக்கக் கதவு வழியாக வெளியே எட்டித் துப்பினார்.
கண்டக்டர் கையில் ஏதோ பார்சலுடன் முன்புறக் கதவால் உள்ளே நுழைந்தார்.
கண்டக்டர் வருவதைக் கண்ட தலைவர் கையிலே இருந்த சுருட்டை வீசிவிட்டு மெதுவாக நடுக் காம்பராவுக்கு வந்தார்.
‘சலாமுங்க!’
பதிலுக்கு அவரைப் பார்த்து வணக்கம் தெரிவித்த கண்டக்டர், பார்சலை மேசையின் மேல் வைத்துவிட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து சோம்பல் முறித்துக் கொண்டார்.
பின்னர் தலைவரைப் பார்த்து, “ஒங்ககிட்ட ஒரு முக்கியமான வெசயங் கதைக்கத்தாங் நாங் வரச் சொன்னது. அந்த ஒரம் போடுறதுக்கு ஒங்களுக்கு ‘கொன்றாக்’ தாரது சொல்லி சொன்னது தானே?”
“ஆமாங்க! அதைப்பத்திதான் அன்னிக்கி சொன்னீங்க. அப்புறம் ஒரு வார்த்தை கூட கதைக்கவே இல்லீங்களே” எனக் கூறிய தலைவர், பலமாக இருமினார்.
“என்னாங் தலைவர் ஒடம்புக்கு சரியில்லையா? ரொம்ப இருமுறதுதானே. அதை நீங்க கவனிக்க வேணுங்.”
“ஆமாங்கையா இந்த ரெண்டு நாளா ஒரே தடிமல். இருமலுங்க; ஒண்ணுமே செய்ய முடியலீங்க.”
“அப்புடியா, அப்போ கொஞ்சங் சாராயங் அடிச்சா எல்லாங் சரியாப் போறதுதானே” எனக் கூறிய கண்டக் டர், குசினிப் பக்கம் திரும்பி பொடியனிடம், “இந்தா பொடியன் நம்ப தலைவருக்கு கொஞ்சங் சாராயங் ஊத்திக்குடு” எனக் கட்டளையிட்டார்,
தலைவர் தயங்கியபடி, “அதெல்லாம் என்னாத்துங்க… ஐயா முன்னுக்கு அதெல்லாம் குடிக்கலாமுங்களா? எனக்கு வேணாமுக்க” எனக் கூறினார்.
“சும்மா வெட்கப்பட வேணாங் தலைவர். குசினிக்குப் போய் குடிங்க. நாங் உடுப்பு மாத்திக்கிட்டு வாறது” எனக் கூறிவிட்டு அறைக்குள் எழுந்து சென்றார் கண்டக்டர்.
குசினிப் பக்கம் தலைவரை அழைத்துச் சென்ற பெடியன், ஒரு கிளாஸில் சாராயத்தை ஊற்றி அவரிடம் கொடுத்தான்.
அதனை வாங்கி ஒரே மிடறில் குடித்து முடித்த தலைவர், “இன்னும் கொஞ்சம் ஊத்துடா” எனக் கூறியபடி பெடி யனிடம் இருந்த போத்தலைப் பிடுங்கி கிளாஸில் மீண்டும் சாராயத்தை நிரப்பி அதனையும் குடித்து முடித்தார்.
“என்னாங் தலைவர் அடிச்சதா? இப்போ எப்படிருக்கு…? தடிமல் எல்லாங் சரியாப்போங்” எனக்கூறிக் கொண்டே அறையிலே இருந்து வெளியே வந்த கண்டக்டர், சாரத்தை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு நாற்காலியில் அமர்ந்தார்.
“கொஞ்சந்தாங்க குடிச்சேன். நான் இதெல்லாம் ரொம்ப பாவிக்கிறது இல்லேங்க” எனக் குழைந்தபடி, குசினியிலிருந்த தலைவர், கண்டக்டரின் முன்னால் வந்தார்.
நாற்காலியில் உட்கார்ந்தபடி சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்ட கண்டக்டர் ஏதோ சிந்தித்தவாறு, “தலைவர், நான் ஒரு முக்கியமான விசயம் சொல்றது; யாருக்குங் தெரியக் கூடாது” எனக் கூறி விட்டு தலைவரை உற்றுப் பார்த்தார்.
“என்னங்க ஐயா அப்புடி சொல்லுறீங்க; நம்ப ரெண்டு பேத்துக்குமுள்ள ரகசியம் எப்புடீங்க மத்தவங்களுக்கு தெரியப்போவுது?” என்றார் தலைவர் அசட்டுச் சிரிப்புடன்
“நம்ப ஓரக் காம்பராவில ஒரங் கொஞ்சங் குறையுது. யாருங் களவெடுத்ததா சொல்லத் தெரியாது. நான் இன்னிக்குத்தாங் கவனிச்சது.”
“அப்புடீங்களா! இது தொரைக்கு தெரிஞ்சா ரொம்ப கரச்சலுங்களே” எனப் பதட்டத்துடன் கூறினார் தலைவர்.
“ஆமா தலைவர்; அதிங்தான் நான் ரொம்ப யோசிக் கிறது. தொரை இப்போ லீவுலை போயிருக்குத்தானே. அவரு வந்தா. என்னாங் சொல்லுறது சொல்லித்தாங் நான் பயப்புடுறது… யாருங் களவெடுத்ததோ, இல்லாட்டி அன்னிக்கி ஒரங் கொண்டுவந்த லொறிக்காரன் ஏதுங் குறைச்சு இறக்கிப் போட்டதோ தெரியாது; இந்தத் தோட்டத்தில யாருங் களவாணி இருக்கிறதா?”
கண்டக்டரின் முகத்தில் கலக்கம் தெரிந்தது.
“தோட்டத்தில அப்புடி யாரும் களவாணி இல்லீங்க; இதுவரைக்கும் நம்ம தோட்டத்தில இப்புடி ஒரு சங்கதி நடக்கலீங்க” என யோசனையுடன் கூறிய தலைவர், “ஐயா ஒரக் காம்பராவை ஒடச்சா எடுத்திருக்காங்க?” எனக் கண்டக்டரைப் பார்த்துக் கேட்டார்.
“அதிங்தாங் இல்லே தலைவர்… காம்பராவிலே ஒரு எடத் திலேகூட ஓடச்சிருக்கிறதா தெரியல்ல. அதுதான் எனக்கு மிச்சங் குழப்பமாயிருக்கு.”
“ஐயா,அப்புடீன்னா சந்தேகமே இல்லீங்க, அந்தலொறிக்காறன்தாங்க கொறைச்சு இறக்கிப் போட்டு கணக்குக் காட்டிட்டுப் போயிட்டான்” என்றார் தலைவர் முடிவாக.
“ஆமாங், ஆமாங் தலைவர். அதிங்தான் நானும் நெனைச்சது. அன்னிக்கி லொறியில் இருந்து ஓரம் இறக்கினப்போ நாங் தேத்தண்ணி குடிக்க பங்களாவுக்கு வந்தது. அப்புறங் போய் நாங் ‘செக்’ பண்ணி பாக்க இல்லே. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு… அந்த நேரத்திலதாங் து நடந்திருக்கு” எனக் கூறிவிட்டுத் தலையாட்டினார் கண்டக்டர்.
“காம்பரா ஓடைக்காம இருக்கிறப்போ வேறு யாரும் களவெடுத்திருக்க முடியாதுங்க. அந்த லொறிக்காரன் தாங்க ஒங்களை ஏச்சுப்பிட்டான்’ என்றார் தலைவர் தலையை ஆட்டியபடி.
“ஆமாங் தலைவர்; நம்ப தொர லீவு முடிஞ்சு வாறதுக்கு முந்தி நாம தொரைக்கு தெரியாம எப்புடியாச் சுங் சமாளிக்க வேணுங்… அதுக்கு நீங்கதாங் ஒதவி செய்ய வேணுங்.”
“நானுங்களா? நான் எப்புடீங்க இந்த வெசயத்தில் ஒதவி செய்யிறது…? தொரை ஏதுங் கண்டுக்கிட்டாருன்னா அப்புறம் என்னை தோட்டத்தைவுட்டே வெரட்டிப்புடு வாருங்களே” எனக் கூறினார் தலைவர் கலக்கத்துடன்.
“அதப்பத்தி பயப்புட வேணாங் தலைவர்; அதுக்குத் தாங் நாங் ஒரு ஐடியா நெனைச்சு வச்சிருக்கிறது. நாளைக்கு நாங் கொஞ்சங் ஓரங் தாறது. நீங்க ஆளுங்களை வச்சி ரோட்டு பக்கமா இருக்கிற மலைக்கு அந்த ஒரத்தை போடுங்க; தொர வந்து கேட்டா நாங் எல்லா மலைக்கும் ஒரம் போட்டு முடிஞ்சது சொல்லி சொல்லுறேங்… ஒங்க கிட்ட கேட்டாலுங் அப்டிபுயே சொல்லவேணுங்”
“ஐயோ எப்புடீங்க நான் திடீருனு அபாண்டமா பொய் சொல்லுறது? என் வாயில பொய்யே வராதுங்களே” என்றார் தலைவர் குழப்பத்துடன்.
“சும்மா பயப்புடாம, நாங் சொல்லுறத கொஞ்சங் கேளுங்க தலைவர், ஒங்க பேருக்கு ஒரம் போடுறதிக்கு ‘கொன்றாக்’ கொடுத்திருக்கு சொல்லி நாங் தொரை கிட்ட சொல்லியிருக்குத்தானே. நீங்க ஆபீசுக்குப் போய். ஒரங் போட்டதுக்கு சம்பளங் வாங்கி வாறது மட்டுந் தாங்.. ஒப்பம் வச்சு சல்லி வாங்கிட்டு வாங்க. அந்த சல்லிய நாங் ஒங்களுக்குத் தாறது.”
“தொர வந்து ஓரம் போட்டிருக்கானு மலையில் எறங்கி பாத்தாருனா என்னாங்க செய்யிறது?”
“ஓரம் போட்டது சொல்லி நாங் சொன்னா தொர அதெல்லாம் பார்க்கிறதில்லே. இந்த ரெண்டு மூண்டு நாளா மழை பெஞ்சிருக்குத்தானே; அவரு பாத்தாலுங் ஒண்ணும் தெரியாது. ஒங்ககிட்ட கேட்டா எல்லா மலைக்கும் போட்டது சொல்லி சொல்லுங்க.”
“எனக்கு என்னமோ பயமாயிருக்குங்க.”
“ஒண்ணும் பயப்புடவேணாங் தலைவர், புல்லு வெட்டுறது, மீனா எடுக்கிற வேலையெல்லாங் இன்னும் இருக்குத் தானே; அது எல்லாம் ஒங்களுக்குத்தான் நான் ‘கொன்றாக்’ தாறது.”
“ஆபீசிலே பெரிய கிளாக்கரையா ஏதுங் கேட்டுப்புட்டாருன்னா என்னாங்க செய்யிறது?”
“பெரிய கிளாக்கர் நமக்கு தெரிஞ்ச ஆள்தானே தலை வர். அவருகிட்ட நாங் எல்லாங் கதைச்சிருக்கு. பேசாம நீங்க ஒப்பங் வச்சவொடன அவரு சல்லி தாறது, ஒண்ணுக்கும் பயப்புட வேணாங்” என்றார் கண்டக்டர், தலைவரைப் பார்த்துச் சிரித்தபடி.
“அப்புடீங்களா வெசயம்; அப்ப பயப்புட தேவையில்லீங்க…” என அசட்டுச் சிரிப்புடன் கூறிய தலைவர், ஏதோ யோசித்துவிட்டு, “இன்னும் தோட்டத்துக்கு மருந்து அடிக்கலீங்க; வழக்கமா மருந்தடிக்கிறது நம்ப பொடியங்கதாங்க. அவுங்களையே இந்தப் பயணமும் மருந்தடிக்கப் போட்டிடுங்க” என்றார் பிடரியைச் சொறிந்து கொண்டே.
“அதிங் எல்லாங் மருந்து அடிக்கத் தேவயில்லை தலை வர். தொர லீவில் போற நேரங் பாத்து மருந்து அடிச்சது சொல்லி நம்ப சொல்லிப்புடுவம்” என்றார் கண்டக்டர் அலட்சியமாக.
“அப்புடியெல்லாம் செஞ்சிங்கன்னா, தேயிலை ரொம்ப மோசமா போயிடுமுங்க; பூச்சி வச்சு, கொழுந்தே வரா துங்க. அப்புறம் தோட்டம் மோசமா போயிருச்சினா ஐயாவுக்குத்தானுங்களே கெட்ட பேருவரும்” என்றார் தலைவர் பதட்டத்துடன்.
“அதி நம்மட சொத்து இல்லைத்தானே தலைவர்…இன்னிக்கி தேயிலை எல்லாங் அரசாங்கத்துக்குத்தாங் சொந் தம். அரசாங்கத்தில இன்னிக்கி பெரிய பெரிய ஆள் எல்லாங் என்னென்னமோ செய்யறது. நம்ப என்னாங் அப்புடியா செய்யறது…? இல்லைதானே. ஒங்களுக்குங் ஒதவி செய்யறது. நாங்களும் அதில் இருந்து ஒதவி எடுக்கிறது.”
தலைவர் குழப்பத்துடன் மெளனமாக நின்றார்.
“இந்தப் பயணங் கவ்வாத்து வெட்டிறதுக்குங் நான் ஒங்களுக்குத்தாங் ‘கொன்றாக்’ தாறது தலைவர். அதிலையும் உங்களுக்கு மிச்சங் சல்லி வாறதுதானே; அதுங்குங் நான் ஒதவி செய்யிறது” எனக் கூறிவிட்டு தலைவரை உற்று நோக்கினார் கண்டக்டர்.
“அப்ப ஐயா சொல்லுறபடியே செய்யுறேங்க; என்னைய ஏதும் தொரகிட்ட காட்டிக் கொடுத்திடாதீங்க” என்றார் தலைவர் தயக்கத்துடன்.
”ச்சா அப்புடி பயப்புட வேணாங், நான் ஒங்களுக்கு வேண்டிய ஒதவி செய்யுறது. நாளைக்கு தொர லீவு முடிஞ்சு வாறதுதானே… நான் டயறியில எல்லாங் எழுதியனுப்புறது” எனக் கூறிக்கொண்டே எழுந்திருந்தார் கண்டக்டர்.
“சரிங்க ஐயா. அப்ப நான் போயிட்டு வாறேங்க; நாளைக்கு அந்திக்கு வந்து ஒங்களை சந்திக்கிறேங்க” எனக் கூறிய தலைவர், கண்டக்டரிடம் விடை பெற்றுக்கொண்டு லயத்துக்குப் புறப்பட்டார்.
அவரது மனதில் இப்போது பலவிதமான கற்பனைகள் விரியத் தொடங்கின.
அத்தியாயம் பதினைந்து
பண்டா முதலாளி, கண்டக்டரைச் சந்திப்பதற்காக அவரது பங்களாவை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்.
மடுவத்தைச் சமீபித்த போது அங்கே சில தொழிலா ளர்களும், கண்டக்டரும் இருப்பதை அவர் கவனித்தார். மடுவத்தின் வாசலில் நின்றபடியே கண்டக்டருக்குக் கேட்கும்படியாக, “ஆயூபோங் மாத்தியா” என அவருக்கு வணக்கம் தெரிவித்தார் முதலாளி.
நிமிர்ந்து பார்த்த கண்டக்டர் பண்டா முதலாளியைக் கண்டதும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, “எனது பங்களாவில் போய் இருங்கள். இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன்” எனக் கூறினார்.
பண்டா முதலா கண்டக்டரின் பங்களாவிற்குச் சென்று சிறிது நேரம் அமர்ந்திருந்தார். சில நிமிட நேரத்தில் கண்டக்டர் !பங்களாவை வந்தடைந்தார். அவரைப் பின்தொடர்ந்து கறுப்பண்ணன் கங்காணியும் ‘செக்றோல்’ புத்தகத்தைத் தூக்கிக்கொண்டு உள்ளே வந்தார்.
தனது தொப்பியைக் கழட்டி ஸ்டாண்டில் மாட்டிய கண்டக்டர், “முதலாளி, நீங்கள் கொஞ்சம் தாமதித்துப் போகலாம்தானே. அவசர வேலையொன்றும் இல்லையே?’ எனக் கேட்டுவிட்டுச் சிரித்தார்.
“இல்லை மாத்தியா, அப்படி ஒன்றும் இல்லை. உங்களுக்கு ஏதும் வேலை இருக்குமல்லவா. என்னால் உங்களுக்கு ரமம் இல்லாமல் இருந்தால் சரிதான்.”
“நாளைக்கு போயா தினமாக இருப்பதால் தோட்டத் தில் வேலையில்லை. அதனால் இன்று இரவு நான் செக்றோல் செய்ய வேண்டிய அவசியமில்லை. நீங்கள் என்னுடன் இரவுச் சாப்பாடு சாப்பிட்டுவிட்டுப் போகலாம்” என மகிழ்வுடன் கூறிவிட்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டார் கண்டக்டர்.
“ஏன் உங்களுக்கு வீண் சிரமம். ன்னொரு முறை அறிவித்துவிட்டு வந்து ஆறுதலாக இருந்து விட்டுப் போகிறேன்” என்றார் பண்டா முதலாளி அசட்டுச் சிரிப்பை உதிர்த்தபடி.
“அப்படி எனக்கு எவ்வித சிரமமும் இல்லை,கட்டாயம் இன்று என்னோடு இருந்து சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும்’ எனக் கண்டிப்பாக கூறிய கண்டக்டர், பின்பு ஏதோ சிந்தித்துவிட்டு, கறுப்பண்ணன் கங்காணியின் பக் கந்திருப்பி, “இந்தா கறுப்பண்ணன் டவுணுக்குப் போய் போத்தல் ஒன்னு கொண்டுவரனுங், சுறுக்கா வரவேனுங்” எனக் கூறிக் கொண்டே தனது அறைக்குச் சென்று இரண்டு பத்து ரூபா நோட்டுக்களை எடுத்துவந்து, கறுப்பண்ணன் கங்காணியிடம் கொடுத்தார்.
“வேற ஏதும் வாங்கிட்டு வரனுமுங்களா? சிகரட்டு, முட்டை ஏதும் வாங்கனுமுனா… ” என மெதுவாகக் கேட்டார் கறுப்பண்ணன் கங்காணி.
“ஆங், கங்காணி சிகரட் ஒரு பக்கெட் வாங்கிவர வேணுங். அந்த சமையல் பொடியங்கிட்ட முட்டை இருக் கான்னு கேளுங்க. இல்லாட்டி முட்டையும் வாங்கி வரோனுங்” எனக் கூறிவிட்டு பண்டா முதலாளியின் எதிரே போய் அமர்ந்தார் கண்டக்டர்.
பண்டா முதலாளி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, தான் அணிந்திருந்த கோட்டின் உள்ளே கையை நுழைத்து நோட்டுக்கள் அடங்கிய ஒரு கட்டுப்பணத்தை எடுத்து கண்டக்டரிடம் கொடுத்தார்.
“இந்தாருங்கள்; இதில் எழுநூறு ரூபா இருக்கின்றது. வைத்துக்கொள்ளுங்கள். ஏதும் குறையாக இருந்தால் சொல்லுங்கள் அதை நான் தந்துவிடுகிறேன்.”
“இல்லையில்லை, இது போதுமானது” எனக் கூறிவிட்டுச் சிரித்தார் கண்டக்டர்.
“உங்களது மனத்திருப்திதான் எனக்கு முக்கியம். இனி மேலும் நமக்குள்ள தொடர்பு நீடிக்க வேண்டுமல்லவா’ எனக் கூறிவிட்டுப் பலமாகச் சிரித்தார் பண்டா முதலாளி. “இதில் என்ன கணக்குப் பார்க்க இருக்கின்றது.கூடக் குறைவாக இருந்துவிட்டால் மறுமுறை உரம் தரும்போது அதை ஈடு செய்யலாம் அல்லவா”
“அதெல்லாம் சரி. உங்களது தொழிலுக்கு ஏதும் பங்கம் ஏற்படாத வகையில் நீங்கள் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். அதுதான் முக்கியம்” என்றார் பண்டா முதலாளி.
“தோட்டத்து தலைவரையே என்வசமாக்கியுள்ளேன். அதனால் எதையும் சமாளித்து விடலாம்” இப்படிக் கூறி விட்டு கண்டக்டர் பலமாகச் சிரித்தார்.
“பிறகென்ன… நீங்கள் மிகவும் சாமர்த்தியசாலி தான்” எனக் கூறிச் சிரித்தார் பண்டா முதலாளி.
“அது சரி முதலாளி! இன்னும் சிறிது நேரத்தில் கோப் பரேட்டிவ் மனேஜர் இங்கு வந்து விடுவார். அதற்குமுன்பு நாம் கதைக்க வேண்டியதை கதைத்துவிட வேண்டும்.”
”அவர் ஏன் இந்த வேளையில் இங்கு வருகிறார்?” என யோசனையுடன் கேட்ட பண்டா முதலாளி, தான் அப்படிக் கேட்டதை கண்டக்டர் தவறாகப் புரிந்து கொள் வாரோ என நினைத்து ஒரு கணம் மௌனமானார்.
“தற்காலிகமாக அவர் எனது பங்களாவிலேதான் உணவருந்தி வருகிறார். நல்ல வசதியான வீடு கிடைத்த பிறகுதான் குடும்பத்தோடு வருவதாகத் தீர்மானித்துள்ளார். அது வரைக்கும் கடையின் பின் காம்பராவில் தங்கிக்கொண்டு இங்கு வந்து உணவருந்திச் செல்கிறார்.”
“ஹா அப்படியா…” எனக் கூறிய பண்டா முதலாளி சற்றுத் தயங்கி விட்டு “மற்றுமொரு விஷயம் உங்களிடம் கதைக்க வேண்டும்… இது எனது குடும்ப விஷயம். இதில் உங்கள் உதவி எனக்குப் பெரிதும் தேவைப்படுகிறது” எனக் கூறினார்.
“அப்படி என்ன பிரச்சினை உங்களுக்கு? ஏன் என்னிடம் சொல்லத் தயங்குகின்றீர்கள்?தாராளமாகச்சொல்லுங்கள். என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்” என்றார் கண்டக்டர்.
“எனது அண்ணன் மகன் ஒருவன் இங்கு வேலைக்கு வருகிறான்.உங்களுக்கு அவனை இப்போது நன்றாகத் தெரிந்திருக்குமென நினைக்கிறேன்.”
“ஆமாம். பியசேனாவைத்தானே சொல்கிறீர்கள்…?”
“அவனேதான். அவன் இங்குள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பாக இருக்கிறானாம்.”
“இதை நானும் கேள்விப்பட்டேன். இங்கு தோட்டத்திலும் ஒரே பரபரப்பாகத்தான் எல்லோரும் கதைத்துக் கொள்கிறார்கள்” என்றார் கண்டக்டர்.
“விஷயம் முத்திப்போயிருக்கிறது. இதற்கு நீங்கள் தான் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்ப மானமே இதிலேதான் தங்கியிருக்கிறது. அவன் வேறொரு இனத்தைச் சேர்ந்த பெண்ணைக் கலியாணம் செய்வதால் எம்மைத் தாழ்வாகத்தானே எல்லோரும் நினைப்பார்கள். கிராமத்திலேயே நான் சிறிது அந்தஸ் தோடு இருக்கிறேன். அதனை இவன் கெடுத்துவிடுவான் போலத் தெரிகிறது.”
“நீங்கள் சொல்வது எனக்கு நன்றாகப் புரிகிறது. இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு எப்படித்தான் உதவிசெய்ய முடியும்?” எனக் கேட்டார் கண்டக்டர்.
“பியசேனா இந்தத் தோட்டத்துக்கு வேலைக்கு வரு வதை நீங்கள் எப்படியாவது நிறுத்திவிட வேண்டும்.”
கண்டக்டர் சிறிது நேரம் யோசித்தார்.
“நீங்கள் சொல்வது போல் இலேசில் செய்துவிடமுடியாது. பியசேனாவும் விஷயம் தெரிந்தவன் போலத் தெரிகிறது. திடீரென அவனது வேலையை நிற்பாட்டினால் அவன் வேறு வழிகளில் எனக்குத் தொந்தரவு கொடுக்கவும் கூடுமல்லவா.”
“அப்படியென்றால் இதற்கு என்னதான் செய்யலாம்?” என பண்டா முதலாளி கேட்டார்.
“ஏன் அந்தப் பெண்ணின் தந்தை மாயாண்டியிடமே இதைப்பற்றிக் கதைத்து ஏதாவது நடவடிக்கை எடுக்கலாமல்லவா” என்றார் கண்டக்டர்.
“எப்படி ஒரு சாதாரண தொழிலாளியிடம் இதைப் பற்றிக் கதைப்பது? எனக்கு அவமானமாக இருக்கிறது.
நீங்கள் தோட்டத்துக் கண்டக்டர் என்ற முறையில் மாயாண்டியைக் கூப்பிட்டு அவரிடம் விஷயத்தைக் கூறி தொடர்ந்தும் அவரது மகள் பண்பு குறைவாக நடந்தால் குடும்பத்துக்கே வேலை நிற்பாட்டப் போவதாகப் பய முறுத்தலாமல்லவா? இந்த உதவியை நீங்கள் கட்டாயம் எனக்காகச் செய்துதான் ஆகவேண்டும்” என வேண்டினார் பண்டா முதலாளி.
கண்டக்டர் மீண்டும் சிறிது நேரம் யோசித்தார்.
“நீங்கள் கேட்கும் போது நான் எப்படி மறுப்பது? விரைவில் மாயாண்டியை அழைத்து இது விடயமாக எச் சரிக்கை செய்கிறேன். எப்படியும் அவர்களது தொடர்பை துண்டித்து விட வேண்டும்… அவ்வளவுதானே. உங்களுக்காக அதனை நான் கட்டாயம் செய்கிறேன்” எனக் கூறிவிட்டுச் சிரித்தார்.
அப்போது முன் வாசற் கதவு தட்டப்படும் சத்தங் கேட்டது. கண்டக்டர் எழுந்து சென்று கதவைத் திறந்தார்.
“ஆயூபோங்” கண்டக்டரைப் பார்த்து வணக்கம் தெரிவித்த வண்ணம் கோப்பறேட்டிவ் மனேஜர் உள்ளே வந்தார்.
கண்டக்டர் பதிலுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு “இவர்தான் கோப்பரேட்டிவ் மனேஜர்” என பண்டாமுதலாளிக்கு அவரை அறிமுகப்படுத்தினார்.
“ஆயூபோங்” என அவரைப் பார்த்துக் கைகூப்பி வணக்கம் தெரிவித்தார் பண்டா முதலாளி.
பதிலுக்கு வணக்கம் தெரிவித்த மனேஜர், “உங்களைப் பற்றிக் கண்டக்டர் என்னிடம் கூறியிருக்கிறார். நான் உங் களை எங்கேயோ பார்த்த ஞாபகமும் இருக்கின்றது” எனக் கூறினார்.
பண்டா முதலாளி சிரித்துவிட்டு, “ஏதாவது அரசியல் கூட்டங்களில் என்னை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்” என்றார்.
அப்போது பக்கத்திலிருந்த கண்டக்டர், சென்ற மாதங்கூட இவர் நமது மந்திரியை கிராமத்துக்கு அழைத் திருந்தார்.கிராமத்தில் இவர் ஒரு பெரும்புள்ளி” என மனேஜரிடம் கூறினார்.
“அப்படியா மிகவும் சந்தோசம்” எனக்கூறி சிகரட் பக்கெட்டை எடுத்து பண்டா முதலாளியிடம் நீட்டினார் மனேஜர்.
“நன்றி, நான் சுருட்டுத்தான் பாவிப்பது வழக்கம்” எனக் கூறிப் பண்டா முதலாளி குழைந்து கொண்டார்.
கண்டக்டரும் மனேஜரும் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டனர்.
அப்போது கறுப்பண்ணன் கங்காணி சாராயப் போத் தலுடன் அங்கு வந்து சேர்ந்தார்.
கண்டக்டர் போத்தலைத் திறந்து மேசையிலிருந்த கிளாஸ்களில் சாராயத்தை நிரப்பினார். பின் பண்டாமுத லாளியைப் பார்த்து, “முதலாளி பொண்ட” எனக் கூறி விட்டு மனேஜரைப் பார்த்து கண்களைச் சிமிட்டினார்.
மூவரும் சாராயத்தை அருந்தத் தொடங்கினர்.
ஒரு தடவை சாராயத்தை அருந்திவிட்டு மேசையில் வைத்த மனேஜர், “உங்களது. கிராமத்திலிருந்துதானே நமது கோப்புரட்டிவ் கடையில் ‘சேல்ஸ்மென்’ ஆக வேலை செய்யும் ரஞ்சித்தும் சோமபாலாவும் வருகிறார்கள். அவர் களை உங்களுக்குத் தெரியுமா?” எனக் கேட்டார்.
“ஆமாம். அவர்களை எனக்கு நன்குதெரியும்.உங்களைப் பற்றிக்கூட அவர்கள் என்னுடன் அடிக்கடி கதைப்பார்கள். அது சரி எப்படி உங்களது கோப்புரட்டிவ் கடை நடக்கிறது? எல்லாப் பொருட்களுமே கிடைக்கிறதா?” எனக் கேட்டார் பண்டா முதலாளி.
“ஆமாம். எல்லாப் பொருட்களுமே கிடைக்கின்றன. நல்ல வியாபாரமும் நடக்கிறது” எனக் கூறிய மனேஜர் கிளாஸை மேசையில் வைத்தார். பின்னர் எதையோ நினைத்துக்கொண்டவர் போல், “நீங்கள் கூட கிராமத்தில் கடை வைத்திருப்பதாக அறிந்தேன், உங்களது வியாபா ரம் எப்படி? எங்கே பொருட்களை கொள்வனவு செய்கிறீர்கள்?” எனக் கேட்டார்.
“அந்தப் பகுதியில் என்னுடைய கடை மாத்திரம் தான் இருக்கிறபடியால் வியாபாரம் பரவாயில்லை. முக்கிய மாகப் பங்கீட்டுப் பொருட்களைப் பெறுவதுதான் சிரமமாக இருக்கிறது.’
“ஏன் பங்கீட்டுப் பொருட்களைப் பெறுவதில் என்ன கஷ்டம் இருக்கிறது?’ எனக் கேட்டார் மனேஜர்.
“அப்படியான பொருட்களைக் கறுப்புச் சந்தையில் அதிக பணம் கொடுத்து வாங்கித்தான் வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் எனக்கு சொற்ப இலாபமே கிடைக்கிறது.”
“ஏன் மிஸ்டர் ரணசிங்க, நீங்கள் ஏதாவது வகையில் முதலாளிக்கு உதவ முடியுமா?’ எனக் கேட்ட கண்டக்டர் மனேஜரை பார்த்துச் சிரித்தார்.
”என்ன சொல்லுகிறீர்கள்? எனக்கொன்றும் விளங்க வில்லையே” என நெற்றியை சுருக்கிக் கொண்டு கேட்டார் மனேஜர் ரணசிங்க.
“அதாவது நமது கோப்பரேட்டிவ் கடைக்கு வேண் டிய பொருட்களை நீங்கள் மாவட்ட யூனியனில்தானே வாங்குகின்றீர்கள்? அதனால் அங்கிருப்பவர்களை உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அவர்கள் மூலமாக நமது முதலாளிக்கும் சாமான்கள் கொஞ்சம் எடுத்துக் கொடுக்க முடியுந்தானே?”
மனேஜர் சிறிது யோசனையில் ஆழ்ந்தார்.
“என்ன யோசிக்கிறீர்கள் முதலாளியும் எங்களுடைய ஆள்தானே. அவருக்கு நாங்கள் உதவி செய்யத்தான் வேண்டும்” என்றார் கண்டக்டர்
“அதற்கில்லை, யூனியனில் இருப்பவர்களுக்கு ஏதாவது ‘சம்திங்’ கொடுத்தால்தானே அவர்களிடமிருந்து பொருட்களை வாங்கலாம். இந்தக் காலத்தில் யாரிடமிருந் தும் ஏதும் பெறவேண்டுமென்றால் அதைத்தானே எதிர் பார்க்கிறார்கள்” எனக் கூறிவிட்டு பெடியன் கொண்டு வந்து வைத்த முட்டைப்பொரியலில் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டார் மனேஜர்.
“அது எனக்குத் தெரியாதா மாத்தியா. அதற்கு வேண்டியதை நான் கொடுத்து விடுகிறேன்” என்றார் பண்டா முதலாளி அசட்டுச் சிரிப்புடன்.
“மிஸ்டர் ரணசிங்கா, அடுத்த முறை நீங்கள் யூனிய னுக்குச் செல்லும் பொழுது முதலாளியையும் அழைத்துச் செல்லுங்கள். அவருக்கு நாங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்” எனக் கூறிய கண்டக்டர் மெதுவாக குசினிப் பக்கம் எழுந்து சென்று சாப்பாடெல்லாம் தயாராக இருக் கின்றதா எனக் கவனித்தார்.
அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பண்டா முத லாளி தான் இருந்த கதிரையை நகர்த்தி மனேஜரின் அரு கில் போட்டுவிட்டு இரகசியமான குரலில் “றேசன் அரிசி ஏதும் மீதிப்பட்டால் கூறுங்கள். நான் அதற்குரிய பணத்தைத் தந்துவிட்டு பெற்றுக்கொள்ளுகிறேன்” எனக் கூறிக் கொண்டே மனேஜரின் வெற்றுக் கிளாசில் சாராயத்தை ஊற்றினார்.
மனேஜருக்கு போதை ஏறியிருந்தது.
“இம்மாதக் கடைசியில் இதைப்பற்றி நான் தெரிவிக் கின்றேன்” என அவர் பண்டா முதலாளியின் காதில் கிசு கிசுத்தார்.
“வாருங்கள் உணவருந்தலாம்” என அவர்கள் இருவரையும் குசினியில் இருந்தபடியே அழைத்தார் கண்டக் டர்!
இருவரும் தள்ளாடியபடியே எழுந்து சாப்பாட்டு மேஜையருகே சென்றனர்.
கண்டக்டர் கறுப்பண்ணனை அழைத்து, ‘கங்காணி அந்த பொத்தல் எல்லாங் எடுத்து வைச்சிட்டு, அதில் கொஞ்சங் சாராயங் இருக்கி… அத எடுத்து அடிச்சிடுங்க’ எனக் கூறிவிட்டு சாப்பாட்டு மேசையருகே சென்றார்.
அன்று இரவு வெகுநேரம் வரை அவர்களது விருந்து நடந்து கொண்டிருந்தது.
– தொடரும்…
– குருதிமலை (நாவல்), முதற் பதிப்பு: ஜூலை 1979, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.