(1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15
அத்தியாயம் ஆறு
மாதங்கள் சில உருண்டோடின. மழைகாலம் ஆரம்பமாகி இருந்தது.
தோட்டத்தை அரசாங்கம் பொறுப்பேற்றதினால் தங்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகளை எதிர்பார்த்த வண்ணம் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் நாட்களைக் கழித்தனர். படித்த இளைஞர்கள் தங்களுக்குக் கிடைக்கப் போகும் வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
கண்டக்டர் ராமசாமி கட்டாய ஓய்வு பெற்றுத் தோட்டத்தைவிட்டுப் போய்விட்டார். மேலும் சில மாதங் கள் தன்னைத் தோட்டத்தில் வேலை செய்வதற்கு அனுமதிக் கும்படி அவர் கோரிய விண்ணப்பம் அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
அவரது இடத்துக்குப் புதிதாக வேலைக்கு வந்த கண்டக் டர் இப்போது தோட்டத்தில் வேலைசெய்து வருகிறார்.
கடந்த இரண்டு நாட்களாகக் காலநிலை மிக மோச மாகி இருந்தது. இடையிடையே பலத்த காற்றுடன் மின்னலும் இடியுமாக மழை பெய்துகொண்டிருந்தது.
புதிய கண்டக்டர் பங்களாவில் இருந்து மடுவத்தை நோக்கிப் படிக்கட்டில் இறங்கி வந்துகொண்டிருந்தார். கையிலிருந்த குடையைப் பிடுங்கி எறிந்துவிடுவதுபோல் காற்றுப் பலமாக வீசியது.மழைச்சாரல் முகத்தில் தெறிக் காமல் இருப்பதற்காக அவர் குடையை முன்பக்கம் சரித் துப் பிடித்தபடி மடுவத்தை நெருங்கினார்.
எதிரே சற்றுத் தூரத்தில் வீரய்யாவும் கொழுந்தெடுக் கும் பெண்களும் வருவது, மலைகளைத் தழுவியிருக்கும் முகிற் கூட்டங்களினூடே மங்கலாகத் தெரிந்தது.
கண்டக்டர் தனது கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தார். அவரது புருவங்கள் நெளிந்தன.மடுவத்தின் உள்ளே சென்று குடையைச் சுருக்கி ஒரு மூலையில் வைத்து விட்டு, தான் அணிந்திருந்த மழைக் கோட்டைக் கழற்றி னார்.
வீரய்யாவும் பெண்களும் மடுவத்தின் உள்ளே நுழைந்தனர்.
“என்ன மனுசன், கொழுந்து நெறுக்க மிச்சங் நேர மிருக்குத்தானே. நீ ஏன் இப்பவே ஆளுங்களைக் கூட்டிக் கிட்டு வந்தது?” கோபத்துடன் வீரய்யாவைப் பார்த்து வினவினார் கண்டக்டர்.
“நீங்களே பாருங்கையா, இப்புடி ஊத்துற மழையில நின்னு கொழுந்தெடுக்க முடியுங்களா? அதுதானுங்க……” வீரய்யா கண்டக்டருக்கு விளக்கம் கூறமுயன்றான்.
“என்னா மனுசன் நீ பேசுறது; ‘றவுண்’ பிந்திப்போச்சு சொல்லி நான் ஒனக்கு பெரட்டுல வச்சு சொன்னது தானே.ஒன்னை யாரு வெள்ளன வரச் சொன்னது?”
“இந்த ஆளுங்களைப் பாருங்க; நனைஞ்சி வெரச்சுப் போயிட்டாங்க; அவுங்களால மழையில நின்னு கொழுந் தெடுக்க முடியல்லீங்க. அதுதாங்க வெள்ளனா கூட்டிக்கிட்டு வந்திட்டேனுங்க” வீரய்யா பணிவான குரலில் கூறினான்.
”மிச்சங் பேசவேணாங் மனுசன், நான் சொல்லுறது ஒண்ணு, நீ செய்யிறது ஒண்ணு. மத்தக் கங்காணியெல்லாம் பாரு… இப்பவும் மலையில நின்னு வேலை செய்யுறது.நீ மட் டுந்தான் குழப்பங் பண்ணுறது” கண்டக்டரின் வார்த்தை கள் கோபத்தினால் தடுமாறின.
“அந்த மலை வழுக்கப்பாறைத் துண்டுங்க. போன வரு ஷமும் இப்புடித்தாங்க சரியான மழையுங்க, ஒரு பொம் புளை ஆளு அந்த மலையில விழுந்து ரொம்ப ஆபத்தாப் போச்சுங்க.”
அங்கு நின்ற பெண்கள் குளிரில் நடுங்கியவாறு, வீரய் யாவைக் கண்டக்டர் கோபித்துப் பேசுவதை பீதியுடன் கவனித்துக்கொண்டிருந்தனர். மூலையில் நின்றிருந்த ராக்கு தனது தலையில் இருந்த கொங்காணியைக் கையில் எடுத்து பிழிந்துகொண்டே,
“என்னாப்பா,இந்த ஐயா கொஞ்சங்கூட எரக்கமில்லா தவரு போலத் தெரியுது.இப்புடி ஊத்திற மழையில யாரு தான் கொழுந்தெடுப்பா” என முணுமுணுத்தாள்.
பக்கத்தில் நின்ற பெண்களும் ராக்கு கூறியதை ஆமோ திப்பதுபோல ஏதோ தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
“என்னா அங்க சத்தங் போடுறது? எல்லாங் வாயை மூடிக்கிட்டு நில்லு. இன்னிக்கு அரைப் பேருதான் எல்லாத் துக்கும் போடுறது” எனப் பலமாகக் கத்தினார் கண்டக்டர்.
எல்லோரும் திகைத்துப்போய் நின்றனர். அரைமணி நேரம் முந்தி வந்ததற்காக அரை நாட் சம்பளத்தையே வெட்டிவிடப் போவதாகக் கண்டக்டர் கூறியது அவர் களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
“ஐயா. அப்புடியெல்லாம் செஞ்சுப்புடாதீங்க. நாளைக்கு வேணுமுன்னா கொஞ்சங் கூடநேரம் மலையில நின்னு, பிந்தின ‘றவுணை’ எடுத்துத் தர்ரோமுங்க” என்றான் வீரய்யா.
“நீ மிச்சங் பேச வேணாங் மனுசன்.நாளைக்கு மழை பெஞ்சா நீ இப்புடித்தான் நாளைக்கும் ஆளுங்களை கூட்டிக் கிட்டு வாறது… நீ நம்மளை என்ன நெனைச்சது?” கோபத் துடன் தனது சப்பாத்துக் காலை நிலத்திலே உதைத்தார் கண்டக்டர்.
வீரய்யா மெளனமாக நின்றான்.
“இந்தா பாரு கங்காணி, ஒனக்கு இன்னிக்கு பத்து ரூபா தெண்டம்; இனிமே இப்புடி ஏதும் செஞ்சா ஒனக்கு கங்காணி வேலை நிப்பாட்டுறது. இதைப் பத்தி நான் தொரைக்கும் சொல்லுறது.”
அப்போது கொழுந்துக் கணக்கப்பிள்ளை செக்றோல் புத்தகத்துடன் மடுவத்திற்கு வந்து சேர்ந்தார். அவரிடம் கொழுந்தை நிறுக்கச் சொல்லிவிட்டு, செக்றோலைப் புரட்டினார் கண்டக்டர்.
கண்டக்டர் ஏதோ கோபமாக இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட கணக்கப்பிள்ளை, மௌனமாகக் கொழுந்தை நிறுக்கத் தொடங்கினார்.
வேறு மலையில் கொழுந்தெடுத்துக்கொண்டிருந்த பெண்களும் கறுப்பண்ணன் கங்காணியும் சிறிதுநேரத்தின் பின்னர் மடுவத்தை வந்தடைந்தனர்.
கணக்கப்பிள்ளை தொடர்ந்தும் கொழுந்தை நிறுத்துக் கொண்டிருந்தார். கொழுந்து நிறுத்துமுடித்த பெண்கள் கண்டக்டரின் அருகே சென்று பேர் போட்டுவிட்டுச் சென்றனர்.
பேர் போட்டு முடிந்ததும் சிகரட் ஒன்றை எடுத்து வாயில் பொருத்திவிட்டுத் தனது காற்சட்டைப் பொக்கட் டுக்குள் கையைவிட்டுத் துளாவினார் கண்டக்டர்.
“என்னாங்கையா, நெருப்பெட்டியேதும் பாக்குறீங் களா?ஏங்கிட்ட இருக்குங்க” எனக் குழைந்தபடி தன்னிடம் இருந்த தீப்பெட்டியை எடுத்து மரியாதையுடன் கொடுத் தார் கறுப்பண்ணன் கங்காணி.
சிகரட்டைப் பற்றவைத்து, ஒருமுறை புகையை ஊதித் தள்ளிய கண்டக்டர், கருப்பண்ணன் பக்கம் திரும்பி, ”கங்காணி,ஓங்க மலை இன்னிக்கு கொழுந்தெடுத்து முடிச்சதா?’ எனக் கேட்டார்.
“ஆமாங்க,ஐயா சொன்னமாதிரியே அந்த மலையை இன்னையோட முடிச்சிட்டேனுங்க. றவுண் பிந்திப்போயி ருக்குத் தானுங்களே… அதுனால ஆளுங்களைக் கொஞ்ச நேரம் கூடவே மலையில நிப்பாட்டி அந்த ‘றவுணை’ முடிச்சுட்டேனுங்க” எனக் கூறிய கருப்பண்ணன் குழைந்தபடி சிரித்தார்.
உண்மையில் அவர் கூறியதுபோல் அந்த மலை வேலை முடிந்திருக்கவில்லை.ஆனாலும், கண்டக்டரிடம் பொய்யைக் கூறியாவது அவரின் நன்மதிப்பைப் பெற்றுவிடவேண்டும் என்பதிலேயே கருத்தாக இருந்தார் கறுப்பண்ணன் கங் காணி.
“ஆங் சரி, மிச்சங் நல்லங். அப்புடித்தாங் நம்பகிட்ட வேலை செய்யவேணுங்” எனக் கூறிய கண்டக்டர், கறுப் பண்ணன் கங்காணியிடம் தீப்பெட்டியைத் திருப்பிக் கொடுத்தார்.
பின்னர் கணக்கப்பிள்ளையை அழைத்து, “நீங்கள் இன்றைய கொழுந்துக் கணக்குகளை முடித்துக்கொண்டு எனது பங்களாவுக்கு வாருங்கள். தோட்டத்து விடயமாக உங்களிடம் கதைக்கவேண்டும்” என ஆங்கிலத்தில் கூறிவிட்டு, மேசையில் இருந்த செக்றோலைக் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.
“ஐயா, செக்றோலை நான் கொண்டுவந்து தர்றேங்க எங்கமாதிரி ஆளுங்க இருக்கிறப்போ, ஐயா புத்தகத்தைத் தூக்கலாமுங்களா?” எனக் கூறிய கருப்பண்ணன் கங் காணி, செக்றோலைக் கையில் வாங்கிக்கொண்டார்.
வெளியே இப்போது மழை ஓய்ந்திருந்தது. மூலையில் சரித்துவைக்கப்பட்டிருந்த குடையை மறு கையில் எடுத் துக்கொண்டு, கண்டக்டரைப் பின் தொடர்ந்தார் கருப் பண்ணன் கங்காணி.
புதிய கண்டக்டரின் பின்னால் அவரது பங்களா படிக்கட்டுகளில், ஏறுவது கறுப்பண்ணன் கங்காணியின் உள்ளத்திலே மகிழ்ச்சியைக் கொடுத்தது. எப்படியாவது கண்டக்டரின் தயவைப் பெற்றுவிடவேண்டும் என்பதிலேயே ப்போது கறுப்பண்ணன் கங்காணியின் சிந்தனை முழுவதும் லயித்திருந்தது.
இதுவரை நேரமும் குழம்பிய மனதுடன் நின்று கொண்டிருந்த வீரய்யா. இப்போது ஏதோ முடிவுக்கு வந்தவனாக மாரிமுத்துத் தலைவரின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
அத்தியாயம் ஏழு
கண்டக்டரின் ஆபீஸ் அறையில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. செக்றோல் செய்வதில் மூழ்கியிருந்தார் கண்டக்டர். அன்று வேலை செய்த ஆட்களின் தொகைக்கும் முடிந்திருந்த வேலைக்கும் சரிப்பட்டு வராததால் எப்படியும் அதனைச் சரிக்கட்டி விடவேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் மூளையைப்போட்டுக் குடைந்துகொண்டிருந்தார்.
முன் வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. சமையல் அறையில் வேலையில் ஈடுபட்டிருந்த வேலைக் காரப் பையன், கதவின் அருகே சென்று திரையை நீக்கி, கண்ணாடியின் ஊடாக வெளியே பார்த்தான். இருட்டில் யாரோ நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.
“ஆங் மல்லி, அபே கொந்தஸ்தர் மாத்தயா இன்ன வாத?” வெளியே நின்றவர் பையன் பார்ப்பதைக் கவனித்துவிட்டு உரத்த குரலில் கேட்டார்.
பெடியன் அவசர அவசரமாக தாழ்ப்பாளை நீக்கி, கதவைத் திறந்துகொண்டே, “ஐயா செக்ரோல் செஞ்சுக்கிட்டு இருக்காங்க… நீங்க யாருங்க?” என வினவினான்.
“நாங் பக்கத்து நாட்டுல இருந்து வந்திருக்கு. ஐயா வைப் பாக்கவேணுங்.”
வந்தவரை ஏற இறங்கக் கவனித்த பெடியன், அவரை உள்ளே வந்து கதிரையில் உட்காரச் சொல்லலாமா, கூடாதா என ஒருகணம் யோசித்தான். பின்பு ஏதோ முடி வுக்கு வந்தவனாக ”கொஞ்சம் நில்லுங்க; நான் ஐயா கிட்ட சொல்லுறேன்’ எனக் கூறிக்கொண்டே ஆபீஸ் அறைப்பக்கம் சென்றான்.
சிறிது நேரங்கழித்து கண்டக்டர் முன் வாசலுக்கு வந்து வெளியே எட்டிப் பார்த்தார்.
“ஆயுபோங் மாத்தியா” எனக் கைகூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு, “மங் கமே இந்தலா ஆவா; மாத்தியா அம்புவேண்ட தமாய் ஆவே’ எனக் கூறியபடி குழைந்து கொண்டு சிரித்தார் வெளியே நின்றவர்.
பதிலுக்கு வணக்கம் தெரிவித்த கண்டக்டர், ”உள்ளே வாருங்கள்” எனச் சிங்களத்தில் கூறி அவரை நடுக் காம் பராவுக்கு அழைத்துச் சென்றார்.
இருவரும் தமது மொழியில் உரையாடத் தொடங்கினர்.
“எனது பெயர் டிங்கிரி பண்டா; பண்டா முதலாளி என்றால் எல்லோருக்கும் தெரியும். நீங்கள் இந்தத் தோட் டத்துக்குப் புதிதாக வேலைக்கு வந்திருப்பதை அறிந்தேன். உங்களைச் சந்தித்து உரையாடலாம்” என்ற எண்ணத்துடன் வந்தேன்” எனக் கூறிக்கொண்டே சோபாவில் அமர்ந்தார் வந்தவர்.
“ஹோ அப்படியா? மிகவும் சந்தோஷம். உங்கள் கிராமத்தில் இருந்துகூட பலர் இங்கே வேலைக்கு வருகிறார்கள்'” எனக் கூறியபடி கண்டக்டரும் எதிரே அமர்ந்து கொண்டார்.
“ஆமாம், எனது அண்ணன் மகன் ஒருவன்கூட இங்கே வேலைக்கு வருகிறான். அவனது பெயர் பியசேனா. அவனை உங்களுக்குத் தெரியுமென நினைக்கின்றேன்.”
கண்டக்டர் சிந்தனையுடன், ”அவனை எனக்கு நன்றா கத் தெரியாது. நான் தோட்டத்துக்கு வந்து சிறிது காலந்தானே ஆகின்றது. ஆனாலும் பியசேனாவின் பெயரில் கொந்தரப்பு இருக்கிறதாக எனக்கு ஞாபகம் இருக்கிறது” எனக் கூறிய கண்டக்டர், தொடர்ந்து பலமாக இரண்டு தடவை இருமினார்.
”உங்களுக்கு உடம்பு சரியில்லைப்போல் தெரிகிறது. அதிகமாக இருமுகிறீர்கள்” என்றார் பண்டா முதலாளி.
“நேற்றிலிருந்து சிறிது சுகமில்லை” எனக் கூறிய கண் டக்டர், தொடர்ந்தும் பலமாக இருமினார்.
“நீங்கள் இந்தப் பகுதிக்குப் புதிதுதானே. அதனாலே தான் சுவாத்திய நிலை உங்களு க் கு ப் பிடிக்கவில்லைப் போலும். போகப் போக எல்லாம் சரியாகிவிடும்” எனக் கூறிய பண்டா முதலாளி சிறிது தயங்கிவிட்டு, “நேற்று நான் மந்திரியிடம் ஒரு விடயமாகச் சென்றிருந்தேன். அப்போது அவர் உங்களைப்பற்றி பெரிதும் விசாரித்தார்’ எனக் கூறிவிட்டு கண்டக்டரை உற்று நோக்கினார்.
“அப்படியா! மந்திரி முக்கியமான விஷயம் ஏதும் கூறினாரா?” என ஆவலுடன் கேட்டார் கண்டக்டர்.
“எமது கிராமத்துக்கு மந்திரியை அழைத்து ஒரு கூட் டம் வைக்க ஒழுங்கு செய்துள்ளோம். அது விஷயமாகத் தான் நான் அவரிடம் சென்றிருந்தேன். அப்போதுதான் அவர் உங்களைப் பற்றிக் கூறினார்”
“ஆமாம், மந்திரி எனக்கு மிகவும் வேண்டியவர். நான் அவரது ஊரைச் சேர்ந்தவன்” என்றார் கண்டக்டர்.
“கடந்த தேர்தலின் போது கூட அவருக்காக நீங்கள் கடுமையாக உழைத்தீர்களென மந்திரி என்னிடம் கூறினார். எமது கிராமத்து மக்களும் மந்திரியின் வெற்றிக்காக பெரிதும் பாடுபட்டவர்கள்தான்” என்றார் பண்டா முதலாளி சிரித்தவண்ணம்.
”அப்படியா! ரெம்பச் சந்தோஷம்” எனக் கூறிய கண்டக்டர், சமையலறைப் பக்கம் திரும்பி “இந்தா பொடியன், மொதலாளிக்கு தேத்தண்ணி கொண்டுவா” என உத்தரவிட்டார்.
“மந்திரி எமது நாட்டுக்கு வரும்போது நீங்களும் கட் டாயம் அங்கு வரவேண்டும். இதை உங்களுக்குக் கூறுவதற் காகவே நான் இங்கு வந்தேன்.”
“ஓ…அது எனது கடமையல்லவா, மந்திரி வருவதாகக் கேள்விப்பட்டால் நானாகவே அங்கு வருவேன்” எனக் கூறிவிட்டுச் சிரித்தார் கண்டக்டர்.
குசினிப்புறக் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. குசினியில் வேலை செய்துகொண்டிருந்த பொடியன் கதவைத் திறந்துவிட்டான்.
கறுப்பண்ணன் கங்காணி மெதுவாக உள்ளே நுழைந் தார். கையில் கொண்டுவந்த பார்சலை அம்மியின்மேல் வைத்துவிட்டு, நடுக்காம்பராவில் யார் இருந்து கதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என ஆவலுடன் எட்டிப்பார்த்தார்.
கருப்பண்ணன் எட்டிப் பார்ப்பதைக் கவனித்த பண்டா முதலாளி, சிரிப்புடன் அவரைப் பார்த்துத் தலையை ஆட்டினார்.
“அட, நம்ப பண்டா மொதலாளியா? நான் யாரோன்னு நெனைச்சேன்” எனத் தனது காவி படிந்த பற்களைக் காட்டிச் சிரித்தபடி பண்டா முதலாளியின் அருகே சென்றார் கறுப்பண்ணன்.
“ஆமாங் கங்காணி நம்ப கண்டக்கையாவை பாத்திட்டுப் போகலாமுனு நாங் வந்தது” மீண்டும் சிரித்தார் பண்டா முதலாளி.
“நானும் ஐயாவுக்கு ஒரு சாமான் வாங்க டவுனுக்குப் போயிட்டு இப்பதாங்க வாரேன்” எனக் கூறிவிட்டு பக்கத்தில் இருந்த சுவரில் சாய்ந்தபடி நின்றார் கறுப்பண்ணன்.
வேலைக்காரப் பெடியன் கொண்டுவந்த தேநீரை கண் டக்டரும் பண்டா முதலாளியும் அருந்தத் தொடங்கினர்.
கருப்பண்ணன் கங்காணி இப்போது கண்டக்டரின் பக்கம் திரும்பி, “நம்ப பண்டா மொதலாளிய எனக்கு ரொம்ப நாளாதெரியுமுங்க. நாட்டுல இருக்காருங்க. இவரு கடைகூட வச்சு நடத்துறாருங்க” என அசட்டுச் சிரிப்பு டன் கூறினார்.
தேநீரை அருந்திவிட்டு கோப்பையைக் கீழே வைத்த பண்டா முதலாளி, “நான் போகவேணும். பின்பு ஆறுதலாக உங்களைச் சந்திக்கிறேன்” எனக் கூறிவிட்டு எழுந்திருந்தார்.
கண்டக்டரும் எழுந்து பண்டா முதலாளியுடன் வாசல் வரை சென்றார்.
வாசலில் சிறிது தரித்து நின்ற பண்டா முதலாளி,கண் டக்டரைப் பார்த்து, “நீங்கள் லீவு இருக்கும்போது ஒரு முறை எங்களது வீட்டுக்கு வாருங்களேன்” என வேண் னார்.
அவர்கள் கதைப்பதைப் புரிந்துகொண்ட கருப்பண் ணன் கங்காணி, கண்டக்டரின் பக்கந் திரும்பி, “நாட்டுக்கு ரொம்ப தூரமில் லீங்க… கிட்டத்தாங்க. பதினைஞ்சாம் நம் பர் மலையில இருக்கிற மாடசாமி கோயிலுகிட்ட இருந்து பாத்தா இவுங்க நாடே தெரியுமுங்க, அங்க இருந்துபோற் குறுக்குப் பாதை வழிய நேராப் போனா அவுங்க நாட்டுக்கே போயிடலாமுங்க” எனக் கூறினார்.
“ஆமாம், எனக்கும் உங்களது கிராமத்தைப் பார்ப் பதற்கு ஆசையாகத்தான் இருக்கிறது. கட்டாயம் வருகிறேன்” என பண்டா முதலாளியிடம் கூறிவிட்டுச் சிரித்தார் கண்டக்டர்.
“ஐயா, என்னிக்கு போறீங்கன்னு ஏங்கிட்ட சொல்லிட்டீங்கனா போதும். நானே ஒங்களைக் கூட்டிக்கிட்டு போறேனுங்க” எனக் கூறினார் கறுப்பண்ணன்.
வாசல்வரை சென்று பண்டா முதலாளியை அனுப்பி விட்டுக் கண்டக்டர் திரும்பியபோது, கோட்டுக்குள் மறைத்துவைத்திருந்த சாராயப் போத்தலை மெதுவாக வெளியே எடுத்து மேசையின்மேல் வைத்தார் கங்காணி.
அத்தியாயம் எட்டு
தோட்டத்து ஆபீஸ் அன்று துரிதமாக இயங்கிக் கொண்டிருந்தது. தோட்டத் தொழிலாளர்களுக்கு பளம் போட இன்னும் நான்கு நாட்களே இருந்தன. அத னால் செக்றோல் செய்யும் கிளாக்கர் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட்டிருந்தார்.
பெரிய கிளாக்கர் அவரது அறையிலிருந்து ஏதோ கணக்குப் புத்தகம் ஒன்றைச் சரிபார்த்துக்கொண்டிருந் தார். இரண்டாவது கிளாக்கரின் அறையிலிருந்து டைப் அடிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. டிவிசனிலி ருந்துவந்த பெட்டிக்காரன் துரையின் அறையைத் துடைத் துத் துப்புரவாக்கிக்கொண்டிருந்தான்.
துரையின் கார் வேகமாக வந்து ஆபீஸ் வாசலில் நின்றது.
காரை விட்டிறங்கிய துரை தனது அறைக்குச் சென்று ஆசனத்தில் அமர்ந்துகொண்டு மேசையிலிருந்த மணியை அழுத்தினார்.
துரையின் கார் வரும் சத்தத்தைக் கேட்டபோதே தான் சரிபார்த்துக்கொண்டிருந்த கணக்குப் புத்தகத்தை மூடிவைத்துவிட்டுத் தயார் நிலையிலிருந்த பெரிய கிளாக்கர் மணிச்சத்தம் கேட்டதும் துரையின் அறைக்குள் புகுந் தார்.
”குட் மோனிங் சார்…”
“எஸ் குட்மோனிங் மிஸ்டர் சுப்பிரமணியம். ஏதா வது முக்கியமான வேலை இருக்கிறதா?”
“ஆமாம் சார் ! நமது எஸ்டேட் சப்பிளையர் வந்திருக் கிறார். சில பில்களுக்குரிய பணத்தைக் கொடுக்கவேண்டும்.”
“எப்படி…இந்த ரசீதுகளைச் சரிபார்த்து விட்டீரா?”
“ஆமாம், எல்லாமே சரியாக இருக்கின்றன. அதற் குரிய செக்கையும் எழுதி வைத்திருக்கின்றேன்.நீங்கள் ஒப்பம் போடவேண்டியது மட்டும்தான்” எனக் கூறிய பெரிய கிளாக்கர் ‘செக்’ புத்தகத்தை துரையின் முன்னால் வைத்தார்.
பெரிய கிளாக்கர் எல்லாவற்றையுமே சரியாகத்தான் செய்வார் என்ற நம்பிக்கை துரைக்கு இருந்தது. ஆதலால் செக்கில் கையொப்பத்தைப் போட்டுவிட்டு அதனை மீண்டும் பெரிய கிளாக்கரிடமே கொடுத்தார்.
“வேறு ஏதாவது வேலை இருக்கின்றதா? நான் அவ சரமாக வெளியே போகவேண்டியிருக்கிறது” துரை நாற் காலியின் பின்னால் சாய்ந்தபடி கேட்டார்.
“வேறொன்றும் இல்லை சார். இன்று தபாலில் வந்த கடிதங்கள் இருக்கின்றன. அவற்றை மட்டும்தான் நீங்கள் பார்வையிட வேண்டும்.”
”அப்படியா!”
மேசையின் ஒரு மூலையில் இருந்த கடிதங்களை எடுத்து துரையின் முன்பாக வைத்தார் பெரிய கிளாக்கர்.
“சரி, உங்களுக்கு வேறு வேலை ஏதாவது இருந்தால் கவனியுங்கள். தேவைப்படும்போது நான் கூப்பிடுகிறேன்” எனக் கூறிய துரை பெரிய கிளாக்கரை அனுப்பிவிட்டு ஒவ்வொரு தபாலாக எடுத்துப் பார்வையிடத் தொடங்கினார். சிறிது நேரத்தின் பின் துரையின் மேசையில் வைக்கப்பட்டிருக்கும் மணி மீண்டும் ஒலித்தது.
பெரியகிளாக்கர் அவசரமாக எழுந்து சென்றார். “மிஸ்டர் சுப்பிரமணியம்… உங்களுக்கு வேறு தோட் டத்திற்கு மாற்றம் வந்திருக்கிறது” எனக் கூறியபடி துரை தனது கையில் வைத்திருந்த ஒரு கடிதத்தை பெரிய கிளாக்கரிடம் கொடுத்தார்.
துரை கூறியதைக் கேட்டுத் திகைப்படைந்த பெரிய கிளாக்கர் கடிதத்தைத் தடுமாற்றத்துடன் வாசித்தார்.
“றப்பர் தோட்டமொன்றுக்கு என்னை மாற்றம் செய் திருக்கிறார்கள். இந்த மாற்றத்தை நான் ஏற்றுக்கொள் ளப்போவதில்லை. எவ்வித காரணமுமின்றி ஏன் என்னை றப்பர் தோட்டத்துக்கு மாற்றவேண்டும்” எனப் பதட்டத்துடன் கூறினார் பெரிய கிளாக்கர்.
“மிஸ்டர் சுப்பிரமணியம், அவசரப்படாதீர்கள். உங் களுக்கு மாற்றம் வந்திருப்பது எனக்கும் அதிர்ச்சியாகத் தான் இருக்கின்றது. ஆனாலும் என்னால்கூட இந்த மாற் றத்தைத் தடை செய்யமுடியாது. நீங்கள் மாற்றலாகிப் போவதைத் தவிர வேறு வழியே இல்லை.”
”ஆரம்பத்திலிருந்தே தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த எனக்கு இப்போது றப்பர் தோட்டத்துக்கு மாற்றம் கொடுத்திருப்பது அநியாயமல்லவா?”
“அப்படியல்ல, அரசாங்க உத்தியோகம் என்றால் மாற்றம் கொடுக்கத்தான் செய்வார்கள். ஆனாலும், உங் களுக்கு இந்த மாற்றம் ஏற்பட்டதற்கான அடிப்படைக் காரணத்தை நீங்கள் இன்னமும் உணரவில்லை என நான் நினைக்கிறேன்” என்றார் துரை.
“என்ன சார் சொல்லுகிறீர்கள்; எனக்கொன்றும் புரியவில்லையே’ எனக் குழப்பத்துடன் கேட்டார் பெரிய கிளாக்கர்.
“இந்த மாற்றத்திற்கு அரசியல் பழிவாங்கல்தான் காரணம் என நான் நினைக்கின்றேன். இப்போதுள்ள சில அரசியல் தலைவர்களுக்கு எதிராக நீங்கள் முன்னர் தேர் தலின்போது பிரசாரம் செய்தீர்களல்லவா! மேடைகளில் கூட ஏறிப் பேசினீர்கள். அதனாலேதான் இப்போது நீங்கள் பழிவாங்கப்படுகின்றீர்கள்” என்றார் துரை யோசனையுடன்.
“ஆமாம் இப்போதுதான் எனக்குப் புரிகின்றது. அர சியல் காரணங்களுக்காக என்னைப் பழிவாங்கி மட்டந்தட் டப் பார்க்கிறார்கள். நான் இதற்கு ஒருபோதும் அடி பணிந்துவிடமாட்டேன். அந்த றப்பர்த் தோட்டத்திற்கு நான் ஏன் போகவேண்டும்? இந்தக் கிளாக்கர் வேலை யொன்றும் எனக்குப் பெரிதில்லை. இந்த வேலையை ராஜி னாமாச் செய்யக்கூட நான் தயாராக இருக்கின்றேன்.”
“மிஸ்டர் சுப்பிரமணியம், உணர்ச்சிவசப்பட்டு எதை யும் செய்துவிடாதீர்கள். நீங்கள் உங்களதுவேலையை ராஜி னாமாச் செய்தால் உங்களது அரசியல் எதிரிகளுக்கு பெரும் மகிழ்ச்சிதான் ஏற்படும். பொறுமையாக இருந்து வேறு வழியில் மாற்றத்தைத் தடைசெய்வதுதான் புத்திசாலித்தனமானது.’
“இந்த மாற்றம் ரத்தாகுமென்பது எனக்கு நம்பிக்கை யில்லை சார். ஏனென்றால் எனது இடமாற்றத்துக்குக் காரணமாக இருப்பவர்கள் தமது ஆதரவாளர்களில் ஒரு வரை இப் பதவிக்கு இதுவரையில் தெரிவுசெய்துவைத் திருப்பார்கள்” என்றார் பெரிய கிளாக்கர்.
சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்த துரை, “ஆமாம், நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரிதான். மனம்திறந்து உண்மையைச் சொல்லப்போனால் நான், கூட அந்த அரசியல்வாதிகள் சொல்வதற்கெல்லாம் தலை யசைக்க வேண்டிய நிலையிலேதான் இருக்கின்றேன். அவர் களைத் திருப்தி பண்ணி நடக்காவிட்டால் எனது வேலைக் குக்கூட ஆபத்து ஏற்படலாம்” என பெரிய கிளாக்கரைப் பார்த்துத் தலையாட்டியபடி கூறினார்.
“ஆமாம் சார், நீங்கள் கூறுவதும் சரிதான். இன் றைய காலகட்டத்தில் அவர்கள் கையிலேதான் அதி காரம் இருக்கின்றது. நாம் எதுவுமே செய்யமுடியாது தான். ஆனாலும் எங்களுக்கும் ஒரு காலம் வரத்தான் போகிறது. அதுவரை நாம் பொறுமையாகத்தான் இருக்கவேண்டும்.”
“இப்போது புதிதாக வந்திருக்கும் கண்டக்டர் கூட அவர்களது சிபார்சில் வந்தவர்தான். முன்பு வேறு ஒரு தோட்டத்தில் திருட்டுக் குற்றத்திற்காக வேலை இழந்த வருக்கு மீண்டும் இங்கே வேலை கிடைத்திருக்கிறது.”
“ஆமாம் சார், நானும் அதைப்பற்றிக் கேள்விப்பட்டேன்” என ஆமோதித்தார் கிளாக்கர்.
“இனிமேல் உமது இடத்திற்கு வேறொருவர் வந்தால், அவர் எப்படிப்பட்டவராக இருப்பாரோ தெரியவில்லை” எனக் கவலையுடன் கூறினார் துரை.
“தோட்ட நிர்வாகத்தில் அரசியல் புகுந்தால் தோட்டம் ஒழுங்காக நடைபெறுமா என்பது சந்தேகந்தான்.”
“மிஸ்டர் சுப்பிரமணியம், இப்படி நான் உங்களு டன் கதைத்த விடயங்களை வேறு எவருக்குமே கூறிவிடா தீர்கள். எனக்கு நீர் எப்போதுமே உண்மையானவராகக் கடமைபுரிந்துவருகிறீர். அதனாலேதான் நான் இந்த விட யங்களை உம்முடன் கதைத்தேன்.”
“நான் ஒருபோதும் உங்களைக் கஷ்டத்திலே மாட்டி விடமாட்டேன் சார்” என்றார் பெரிய கிளாக்கர்.
“சரி மிஸ்டர் சுப்பிரமணியம், நீங்கள் மனதைத் தளரவிடாமல் உங்களது வேலையைக் கவனியுங்கள்.மேலிடத்தில் உங்களுக்குத் தெரிந்த யாராவது இருந்தால் அவர் மூலமாக இந்த மாற்றத்தைத் தடைசெய்யப் பாருங்கள்’ எனக் கூறிய துரை எழுந்திருந்தார்.
“சரி சார், ஏதோ நடப்பது நடக்கட்டும். இந்த மாற் தத்தை ரத்துச் செய்ய முடியுமென நான் நினைக்கவில்லை” எனக் கூறிய பெரிய கிளாக்கர் தடுமாற்றத்துடன் தனது அறையை நோக்கி நடந்தார்.
அத்தியாயம் ஒன்பது
அன்று லீவு நாள். கறுப்பண்ணன் கங்காணியை அழைத்துக் கொண்டு தாட்டிற்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் நடந்து கொண்டிருந்தார் கண்டக்டர்.
பாதையின் இரு மருங்கிலும் ஆள் உயரத்துக்குப் புல் பூண்டுகள் வளர்ந்திருந்தன. எங்கு பார்த்தாலும் பெரு விருட்சங்கள் நிறைந்த அந்தப் பிரதேசம் ஒரே காடாகக் காட்சியளித்தது.
விலங்குகளின் ஓசைகளும், பறவைகளின் கீதங்களும் இடையிடையே ஒலித்துக் கொண்டிருந்தன. இவற்றை யெல்லாம் இரசித்த வண்ணம் கண்டக்டர் நடந்து கொண் டிருந்தார், கறுப்பண்ணன் கங்காணி அப்பிரதேசத்தைப் பற்றி கண்டக்டருக்கு விளக்கம் கொடுத்த வண்ணம் பின் தொடர்ந்து கொண்டிருந்தார்.
“ஐயா, இந்த எடத்தில ரெம்ப சகதியா கெடக் குங்க, சப்பாத்துக்காலை கொஞ்சம் பாத்து வச்சு நடந்து போங்க!”
ஓங்கி வளர்ந்திருந்த செண்பக மரமொன்றில் வாலைக் கிளப்பிக் கொண்டு தாவி ஏறிய குரங்கொன்றைக் கவனித்த வண்ணம் நடந்து கொண்டிருந்த கண்டக்டரிடம் கங்காணி கூறினார்.
கண்டக்டர் கீழே குனிந்து பார்த்தார்.
அந்த ஒற்றையடிப் பாதையின் குழிவான பகுதியில் ஐந்தாறு அடி தூரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றதால் அந்த இடம் சேறும் சகதியுமாகக் காட்சியளித்தது.
“நாட்டு ஆளுங்க இந்த ரோட்டுலதானே நம்ம தோட் டத்துக்கு வேலைக்கு வாரது; அவுங்க இந்த பாதைய கொஞ் சம் வெட்டி சரிப்பண்ணி வச்சா மிச்சங் நல்லதுதானே” எனக் கூறியபடி கண்டக்டர் தயங்கி நின்றார்.
“அங்க பாருங்க ஐயா, மேல புதிசா ஒரு பாதை வச் சிருக்காங்க, அப்புடியே சுத்திப் போங்க” எனக் கூறிய கங் காணி தண்ணீர் தேங்கி நின்ற இடத்திலிருந்து சற்று மேற் புறமாக புதிதாக ஏற்பட்டிருந்த பாதையைக் காண்பித் தார்.
கண்டக்டர் தனது கையில் வைத்திருந்த கைத்தடியால் ஓங்கி வளர்ந்திருந்த புற்களை விலக்கிக் கொண்டு அந்தப் பாதையில் நடக்கத் தொடங்கினார்.
பாதையின் குறுக்காக கீரியொன்று பாய்ந்து சென்று மானாச் செடிக்குள் மறைந்தது.
“இந்தப் பாதை முந்தி ரொம்ப நல்லா இருந்திச்சுங்க. இப்போதாங்க காடுமண்டிப் போச்சி. நானும் நம்ம மாயாண்டியும் அடிக்கடி இந்தப் பாதையாலதாங்க நாட் டுக்குப் போவோம்.”
“யாரு அந்த மாயாண்டி சொல்லி சொல்லுறது, வீரய்யா கங்காணியோட அப்பாதானே, நீங்க சொல்லுற ஆள்” எனக் கேட்டார் கண்டக்டர்.
“ஆமாங்க, அவரேதாங்க” கறுப்பண்ணன் கங்காணி தனது காவிபடிந்த பற்கள் தெரியப் பலமாகச் சிரித்தபடி கூறினார்.
“ஆங் அதுசரி கங்காணி; ஒங்ககிட்ட முக்கியமான சங்கதி ஒண்ணு கேக்கணும்… அந்த வீரய்யா கங்காணிக்கு ஒரு தங்கச்சி இருக்குதானே?”
“அந்த மட்டக் கொழுந்து மலையில கொழுந்தெடுக்கு மில்லீங்களா ஒரு செவத்தப் புள்ளை, அதுதாங்க… பேரு செந்தாமரைங்க” என்றார் கங்காணி.
“அதுபத்தி நாங் ஒரு வெசயங் கேள்விப்பட்டது…அந்தப் புள்ளை எப்புடி கங்காணி?”
“அது ஒரு மாதிரிதாங்க… தோட்டத்து குட்டிங்களிலேயே அவ ரொம்ப அழகுங்க. ஆனா கொஞ்சம் பல்லுக் காட்டுற புத்தியிருக்குங்க” என்றார் கறுப்பண்ணன் கங்காணி.
‘அந்தப்புள்ளை, இந்த நாட்டுல இருக்கிற யார்கூடவோ கூட்டாளி சொல்லி நாங் கேள்விப்பட்டது” என்றார் கண்டக்டர்.
“அப்புடீங்களா வெசயம்… நான் வேற என்னமோ நெனைச்சுப்புட்டேங்க” என அசட்டுச் சிரிப்புடன் சிரித்த கருப்பண்ணன் கங்காணி,’நம்ம பண்டா முதலாளி இருக் காங்களே…அவரோட அண்ணன் மகன் பியசேனா தாங்க அந்தப் புள்ளையோட கூட்டா இருக்கான். இந்த வெசயம் எனக்கு முந்தியே தெரியுமுங்க” எனத் தொடர்ந்து கூறினார்.
“இந்தா பாருங்க கங்காணி…நாங் கேக்குறேனு வேற ஏதுங் நெனைக்க வாணாங்… இந்தப் பியசேனா சிங்கள ஆள் தானே, அந்தப் புள்ளை தமிழ் ஆள்; அந்தப் புள்ளைய அவன் கல்யாணம் கட்டுறதா?” எனக் கேட்டார் கண்டக்டர்.
“அங்கதானுங்களே சங்கதியே இருக்கு, எப்படீங்கையா அவேன் அந்தக் குட்டியை கல்யாணம் கட்ட முடியும். ரெண்டு பக்கத்து வூட்டுக்காரங்களும் சும்மா வுட்டுப்புடு வாங்களா?” என்றார் கறுப்பண்ணன் கங்காணி.
“அதிங்தான் கங்காணி நாங் யோசிச்சுப் பாத்தது. அப்புடீனா…அந்தப் புள்ளைக்கு வயித்துல கொழந்தை ஏதுங் வந்தா ஒன்னுங் செய்ய முடியாதுதானே. அந்த பியசேனாதானே கல்யாணம் செய்யவேனுங்” என யோச னையுடன் கேட்டார் கண்டக்டர்.
“இல்லீங்கையா… அந்தக் குட்டிக்கு கொழந்தையே பொறந்தாலும் ரெண்டு பேரும் ஒன்னா சேரமுடியாதுங்க; வெசயம் பெரிசாப் போனா வேற தோட்டத்துல ஒரு மக் குப் பயலாப்பாத்து அவளுக்கு கல்யாணம் செஞ்சி வச்சிட வேண்டியதுதாங்க” எனக் கூறிச் சிரித்தார் கங்காணி.
“அப்புடிச் செய்ய முடியுமா கங்காணி?” என ஆச்சரியத்துடன் கேட்டார் கண்டக்டர்.
“இப்புடி எத்தினையோ சங்கதிங்களை நான் செஞ்சு வச் சிருக்கேங்க… இந்தப் பியசேனாப் பயலோட மச்சினன் ஒருத்தன் இருக்காங்க…அவன் உப்புடித்தாங்க நம்ம தலைவ ரோட தங்கச்சி மகளை கெடுத்துப்புட்டாங்க. அப்புறம் அவளை நாங்க வேற தோட்டத்தில் ஒருத்தனுக்கு கட்டிக் கொடுத்திட்டோமுங்க” எனக் கூறிய கங்காணி பெருமையுடன் சிரித்தார்.
“ஏங் கங்காணி நம்ம தோட்டத்திலேயும் சில சிங்கள ஆளுங்க தமுழ் பொம்புளைங்களை கல்யாணஞ் செஞ்சிருக் குத்தானே. நீங்க என்ன இப்புடி சொல்லுறீங்க?’ எனக் கேட்டார் கண்டக்டர்.
“ஆமாங்க, சில ஆளுங்க கட்டிக்கிட்டு இருக்காங்க தாங்க…ஆனா இந்தப் பியசேனாப் பயல நம்பவே முடியா துங்க. நீங்க வேணுமுனா இருந்து பாருங்க… அந்தப் பயல் அந்தக் குட்டியை கல்யாணஞ் செய்யவே மாட்டானுங்க” கறுப்பண்ணன் கங்காணியின் குரலில் உறுதி தொனித்தது.
கண்டக்டர் சிந்தனையுடன் நடந்தார்.
இருவரும் இப்போது பண்டா முதலாளியின் வீட்டை அடைந்தனர்.
கடையில் இருந்தவாறே இருவரும் வருவதைக் கண்ட மெனிக்கே முகத்தில் சந்தோஷத்தை வரவழைத்துக் கொண்டு, “எண்ட மாத்தியா எண்ட” என கண்டக்டரை கண்டக்டர் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள். அங்கேயிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டார்.
கருப்பண்ணன் சுவர் ஓரமாக சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தார்.
“கோ முதலாளி? கொஹேத கீயே?” மெனிக்கேயிடம் கேட்டார் கண்டக்டர்.
“தெங் தமாய் மாத்தியா எயா எலியட்ட கீயா” எனக் கூறிக் கொண்டே வெற்றிலைத் தட்டைக் கொண்டு வந்து அவர் முன்னால் வைத்துவிட்டு, “மென்ன மாத்தியா புலத்” என உபசரித்தாள் மெனிக்கே.
பக்கத்தில் நின்றிருந்த கறுப்பண்ணன் கங்காணி தட்டில் இருந்த பாக்கொன்றைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தார். பின்னர் தனது கோட்டுப் பைக்குள் கையைவிட்டு சாவிக்கோர்வையுடன் தொங்கிய மடக்கத்தியை எடுத்துப் பாக்கை நறுக்கத் தொடங்கினார்.
“மே புவாக் மொணவத, ஹரிம லொக்குவா” என மெனிக்கேயிடம் வினாவினார் கண்டக்டர்.
“ஒவ் மாத்தியா, ஏக்க றட்டபுவாக் கியலா கியனவா” எனக் கூறிய மெனிக்கே வெளியே நின்ற சில கமுகு மரங்களை ஜன்னலின் ஊடாகக் காண்பித்தாள். அந்த மரங் களில் குலக்குக் குலக்காக பாக்குகள் காய்த்துக் குலுங்கிக் கொண்டிருந்தன.
அவர்கள் கதைப்பதைப் புரிந்து கொண்ட கறுப்பண்ணன், “இதுங்களா, இதுதாங்க… குமரிப் பாக்குணு சொல்லுறது, ரெம்ப ருசியா இருக்குமுங்க” எனக் கூறிவிட்டு, சீவிய பாக்கை வெற்றிலைத் தட்டில் வைத்தார்.
கண்டக்டர் வெற்றிலை போடுவதில்லை. ஆனாலும் மரி யாதைக்காக ஒரு வாய்க்கு வெற்றிலை போட்டுக்கொண்டு வெற்றிலைத் தட்டை கறுப்பண்ணனிடம் கொடுத்தார்.
முதலாளி எண்ட வெலாவ யனவாத? எனக் கேட்டுக் கொண்டே கைக்கடிகாரத்தைப் பார்த்தார் கண்டக்டர்.
“நே மாத்தியா, தெங் எய்” எனக் கூறிக் கொண்டே தீப்பெட்டியுட்ன் சிகரட் பெட்டியையும் எடுத்து வைத் தாள் மெனிக்கே.
கண்டக்டர் சிகரட்டைப் பற்ற வைத்த சிறிது நேரத் தில் பண்டா முதலாளி அங்கு வந்து சேர்ந்தார்.
“ஆங் எண்ட மாத்தியா எண்ட, தெந்த ஆவே?” எனக் கேட்டுக் கொண்டே கையில் கொண்டு வந்த சில காகிதத் துண்டுகளை சுவர் ஓரமாக இருந்த அலுமாரியில் வைத்து விட்டு திரும்பினார் பண்டா முதலாளி.
“டிங்கக் வெலாவ இஸ்சரதமாய் ஆவா” என்றார் கண்டக்டர் பண்டா முதலாளியைப் பார்த்து.
“ஹோ எத்தத… போமஹொந்தாய்… மட்ட உங்காக் வெட மாத்தியா. லபன மாசேங் அபே மந்திரிதுமாமேங் எனவாநே.ஏநிசா ஹரிம வெட” எனக் கூறிவிட்டு கண்டக்டரின் எதிரே கிடந்த கதிரையில் அமர்ந்து கொண்டார் முதலாளி.
இருவரும் தங்களது மொழியில் உரையாடினர்.
“ஆம், கூட்டம் வைப்பதென்றால் அதிக வேலையிருக் கத்தான் செய்யும்… எப்போது மந்திரி வருவதாக்க கூறியிருக்கின்றார்?”
“இன்னமும் அதுபற்றி தீர்மானிக்கப்படவில்லை. ஆனாலும் மிக விரைவில் கடிதம் மூலமாக மந்திரியின் காரியதரிசி எமக்கு அறிவிப்பார்.’
“மந்திரி வாறாங்களா? எதுக்காக வரவழைக்கிறீங்க மாத்தியா?” என வாய்க்குள் அதக்கி வைத்திருந்த வெற் றிலைத் துப்பலை யன்னலின் ஊடாக வெளியே துப்பிவிட் டுக் கேட்டார் கருப்பண்ணன் கங்காணி.
“நாட்டுல நம்ம ஆளுங்களுக்கு மிச்சங் கஷ்டந்தானே ரெம்ப ஆளுங்களுக்கு சொந்த காணியில்லை தானே கவுண்மெண்டில காணி தாரது சொல்லி சொல்லியிருக்கு. அது பத்தி பேசத்தாங் மந்திரி வாறது” என்றார் பண்டா முதலாளி.
மெனிக்கே கண்டக்டருக்கு தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
“இன்று உங்களுக்கு லீவு நாள்தானே. நம்மோடு இருந்து பகல் போசனத்தை அருந்திவிட்டு ஆறுதலாகச் செல்லலாம்” என பண்டா முதலாளி அன்புடன் வேண்டி னார்.
“இல்லையில்லை, எனக்கு கொஞ்சம் வேலையிருக்கிறது. நான் இன்னொரு நாளைக்கு ஆறுதலாக வருகின்றேன்” என றார் கண்டக்டர்.
”அப்படியானால் கொஞ்சம் இருங்கள்’ எனக் கூறிய பண்டா முதலாளி உள்ளே சென்று சாராயப் போத்தல் ஒன்றை கிளாசுடன் கொண்டு வந்து வைத்தார்.
“இதெல்லாம் எதற்கு, நான் சும்மா உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்றல்லவா வந்தேன்” எனக் கூறியபோது கண்டக்டரின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. “இன்றுதானே எங்களது வீட்டிற்கு முதன்முதலில் வந்திருக்கின்றீர்கள். உங்களுக்கு எதுவுமே கொடுக்கா மல் எப்படி சும்மா அனுப்புவது?” எனக் கூறிச் சிரித் தாள் பக்கத்தில் நின்ற மெனிக்கே.
கண்டக்டரும் பதிலுக்கு சிரித்தார்.
பண்டா முதலாளி கிளாசில் சாராயத்தை ஊற்றி கண்டக்டரின் கையிலே கொடுத்தார்.
பின்பு கறுப்பண்ணன் கங்காணியை நெருங்கி இரகசி யமான குரலில், “இந்தா கங்காணி, உங்களுக்கு இரண்டு போத்தல் கள்ளு நாங் எடுத்தி வைச்சிருக்கிறது. பின்னு குப் போங்க” எனக் கூறினார்.
அதனை எதிர்பார்த்திருந்தவர் போல் கங்காணி அந்த இடத்தை விட்டு நழுவியபோது மீண்டும் ஒருதடவை கிளாசை நிரப்பினார் பண்டா முதலாளி.
கண்டக்டருக்கு சிறிது சிறிதாக போதை ஏறிக் கொண்டு வந்தது.
“முதலாளி உங்களுக்கு எது வேண்டுமானாலும் தயங் காமல் சொல்லுங்கள். நான் மந்திரியிடம் கூறி வேண்டிய உதவிகளைச்செய்து தருகிறேன். நான் சொன்னால் அதற்கு மந்திரி ஒருபோதும் மறுக்கமாட்டார்” சிகரட்டை பற்ற வைத்தபடி கூறினார் கண்டக்டர்.
“ரெம்ப சந்தோஷம் எனக்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்… எனக் கூறிய பண்டா முதலாளி தொடர்ந்தும் ஏதோ கூறும் பாவனையில் தயங்கியபடி தலை யைச் சொறிந்தார்.
“என்ன முதலாளி தயங்குகிறீர்கள் சொல்லுங்கள்” பண்டா முதலாளி மேலும் கிளாஸில் சாராயத்தை ஊற்றியபடி,”எனது வயலுக்கு கொஞ்சம் உரம் தேவைப் படுகிறது. டவுனிலிருந்து எங்கள் கிராமத்திற்கு அதைக் கொண்டுவந்து சேர்ப்பது மிகவும் சிரமமான காரியம். அதுதான்…”
அதற்கு நான் எப்படி உதவி செய்ய முடியுமெனக் கூறுங்கள். கட்டாயம் நான் செய்கிறேன். டவுனிலிருந்து உரம் கொண்டுவருவதற்கு நான் ஏதாவது வகையில் உதவி செய்ய வேண்டுமா?’
“அப்படியில்லை மாத்தியா. உங்களிடம் தோட்டத் திற்குரிய உரம் ஸ்டொக்கில் இருக்குமல்லவா. அதில் கொஞ்சம் தந்தால் உதவியாக இருக்கும். அதனை நான் தோட்டத்திலிருந்து நாட்டிற்கு சுலபமாக கொண்டுவந்து விடுவேன்.”
கண்டக்டர் ஒருதடவை பண்டாமுதலாளியை உற்றுப் பார்த்தார்.
ஒரு கணம் தடுமாறிய பண்டா முதலாளி, “அதற்குரிய பணத்தை நான் உங்களிடமே தந்து விடுகிறேன் நீங்கள் வேண்டுமானால் அந்தப் பணத்தை தோட்டத்திற்கு வரும் லொறிக்காரர்களிடம் கொடுத்து உரத்தை வாங்ங் மீண்டும் ஸ்டொக்கில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லவா?” எனக் கூறினார்.
கண்டக்டர் ஒருகணம் ஆழமாக யோசித்தார். பண்டா முதலாளி கூறுவது அவருக்கு இலேசாகப் புரிந்தது.
“நான் உங்களுக்கு உரம் தருவதை மற்றவர்கள் தவ றாகப் புரிந்து கொண்டால் என்ன செய்வது?” என யோசனையுடன் கேட்டார் கண்டக்டர்.
“அதற்கு நீங்கள் ஒன்றும் பயப்படத்தேவையில்லை. மற்றவர்களுக்கு தெரியாதமுறையில் நான் உரத்தைப் பெற்றுக் கொள்வேன்.”
கருப்பண்ணன் இப்போது பின்புறத்தேயிருந்து உள்ளே வந்தார். அதனைக் கவனித்த பண்டா முதலாளி, ”சரி மாத்தியா நான் உங்களிடம் தனியாக வந்து இதைப் பற்றி பேசிக் கொள்கின்றேன்” எனக்கூறி சம்பாஷணையை முடித்துக் கொண்டார்.
“ஐயா, அப்ப போவோங்களா? இல்லாட்டி என்ன மாதிரிங்க…?” எனத் தயங்கியபடி கேட்டார் கருப்பண்ணன் கங்காணி.
“இல்லை, நான் போக வேண்டும். எனக்கு கொஞ்ச புஸ்தக வேலையிருக்கின்றது” எனக் கூறியவாறு எழுந்திருந் தார் கண்டக்டர்.
அப்போது அங்கே வந்த மெனிக்கே, “மாத்தியா அடிக்கடி இங்கே வந்து போங்கள். அடுத்தமுறை வரும் போது கட்டாயம் உணவருந்திவிட்டு செல்ல வேண்டும்” எனப் புன்னகைத்தபடி கூறினாள்.
”நேரம் இருக்கும்போது கட்டாயம் வருகின்றேன்” எனக் கூறிய கண்டக்டர் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கறுப்பண்ணன் கங்காணியுடன் புறப்பட்டார்.
வழியில் கறுப்பண்ணன் வாயோயாமல் எதையோ கூறிய வண்ணம் வந்தார். ஆனால், அவர் கூறிய எதுவுமே கண்டக்டரின் மனதில் பதியவில்லை. அவரது சிந்தனை முழு வதும் இப்போது வேறு பாதையில் விரிந்து கொண்டு சென்றது.
அத்தியாயம் பத்து
அன்று மாலை மடுவத்திலிருந்து வந்த மாரிமுத்துத் தலைவர், மனைவி பூங்கா கொடுத்த தேநீரை அருந்திய வண்ணம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.
அப்போது ஸ்தோப்பில் யாரோ நுழைவது தெரிந் தது. காம்பராவின் உள்ளேயிருந்த தலைவர் யன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்.
கறுப்பண்ணன் கங்காணி இஸ்தோப்பில் ஒருகணம் தரித்து நின்று, வாயில் நிரம்பியிருந்த வெற்றிலைத் துப் பலைத் தனது இரு விரல்களை வாயிலே பொருத்தி கானுக் குள் எத்தி உமிழ்வது தெரிந்தது. கானுக்குள் தேங்கி நின்ற அழுக்கு நீரில் மொய்த்திருந்த ஈக்கள் ஒருகணம் கலைந்து மீண்டும் அமர்ந்துகொண்டன.
“என்ன கறுப்பண்ணேன், மடுவத்தில இருந்து இப்ப தான் வாறியா?’ என உள்ளேயிருந்தபடி உரத்த குரலில் கேட்டார் தலைவர்.
“ஆமாங்கண்ணே… நேரா மடுவத்தில் இருந்துதான் வாறேன்; நீங்கதான் பேருபோட்டு முடியிறதுக்கு முன் னேயே ஓடியாந்துட்டீங்களே… கண்டாக்கையா ஒங்க கிட்ட என்னவோ கதைக்கிறதுக்கு இருந்தாராம். அதுக் குள்ள வந்துட்டீங்க” என்றார் கறுப்பண்ணன் கங்காணி இஸ்தோப்பில் நின்றபடி.
“அப்புடியா, என்ன வெசயமா ஐயா எங்கிட்ட கதைக்கணுமுன்னு சொன்னாரு?”
“அதென்னமோ எனக்குத் தெரியாது.ஒடனே பங்க ளாவுக்கு வருவீங்களாம், அதைச் சொல்லிட்டுப் போகலா முனுதான் இப்புடியே வந்தேன்” என்றார் கறுப்பண்ணன்.
தலைவர் சிறிது நேரம் எதையோ யோசித்தவண்ணம் இருந்தார்.
“என்னாங்கண்ணே யோசிக்கிறீங்க, ஏதாச்சும் தோட்டத்து வெசயமா கதைக்கவேண்டியிருக்கும். தோட் டத்துக்கு தலைவர் எங்கிற மொறையில் ஒங்களோடை கதைக்க விரும்புறாரு போல தெரியுது; போயி கதைச் சிட்டு வாங்களேன்” எனக் கூறிவிட்டு கறுப்பண்ணன் கங் காணி திரும்பிப் போக முனைந்தார்.
“இருங்க கங்காணி தேத்தண்ணி குடிச்சிட்டுப் போகலாம்.”
தலைவரின் மனைவி பூங்கா காம்பராவின் உள்ளேயிருந்து குரல் கொடுத்தாள்.
“இல்லை… வேணாம் பூங்கா, இன்னும் காலுகையி கூட கழுவல்ல, நேரமாச்சு… நான் போகணும்” எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் கறுப்பண்ணன் கங்காணி.
தலைவரின் உள்ளம் பலமாகச் சிந்திக்கத் தொடங்கியது. பின்னர் ஏதோ முடிவுக்கு வந்தவராக தனது கோட்டை எடுத்து மாட்டிக்கொண்டு அங்குமிங்கும் எதையோ தேடினார்.
“அந்த லேஞ்சித்துண்டை எங்க காணோம்? இந்த வூட்டில ஒரு சாமானத்தை ஒரு எடத்தில வைச்சா திரும்ப அந்த எடத்தில எடுத்துக்கிட முடியாது…” தலைவரின் குரலில் சினம் தொனித்தது.
” என்னா கண்டக்கையா வரச்சொன்னவொடன இப்புடித் தடுமாறுறீங்க? லேஞ்சிய போட்ட எடத்தில் தேடி எடுக்க வேண்டியதுதானே” எனக் கூறிக்கொண்டே இஸ்தோப்புக் கதவின் மேல் கிடந்த லேஞ்சித் துண்டை எடுத்துக் கணவரிடம் கொடுத்தாள் பூங்கா.
“நான் ஒண்ணும் தடுமாறல்லடி, நான் என்னா கண் டக்கையாவுக்கு பயந்துக்கிட்டு இருக்கேனு நெனச்சுக்கிட் டியா? எப்படியாப்பட்ட வெள்ளைக்காரத் தொரைங்ககிட் டேயே எதிர்த்துப் பேசினவனடி நான்… என் வாயைத் தொறந்தேன்னா இவருக்குப் பதில் சொல்ல முடியாம போயிடும். என்னமோ புதிசா வந்தவராச்சேனு பாக்கிறேன்” எனக் கூறியபடி தலைவர் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றார்.
“என்னாங்க கொடைய மறந்திட்டு போறீங்க. வெளியே மழை தூறிறது தெரியல்லியா… நல்லாத்தான் போங்க” எனக் கூறிய பூங்கா குடையை எடுத்து வந்து தலைவரின் கையிலே கொடுத்தாள்.
தலைவர் கண்டக்டரின் பங்களாவை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
கண்டக்டர் பங்களாவின் முன் வராந்தாவில் எரியும் மின் விளக்கின் ஒளி, முன்பகுதி எங்கும் புரவியிருந்தது. பங்களாவை நோக்கிப் போகும் படிக்கட்டில் தட்டுத்தடுமாறி ஏறினார் தலைவர்.
“ஆங் தலைவரா ஒங்களைத்தாங் நான் பார்த்துக்கிட்டு இருந்தது… வாங்க.” ஆபிஸ் அறையில் இருந்த வாறு எட்டிப் பார்த்த கண்டக்டர் தலைவரை வரவேற்றார்.
வாசல் வரை வந்த தலைவர் சற்றுத் தயங்கினார்.
“சும்மா பயப்புடாம வாங்க தலைவர்” எனக் கூறிக்கொண்டே எழுந்திருந்த கண்டக்டர் நடுக் காம்பராவின் பக்கம் சென்றார்.
தலைவர் தன்னைச் சுதாரித்துக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்தார்.
உள்ளே சென்ற கண்டக்டர் அங்கே போடப்பட்டி ருந்த கதிரையொன்றில் அமர்ந்துகொண்டு என்னாங் தலைவர், நாங் பேர் போட்டு முடிஞ்சவொடன ஒங்க கிட்ட பேசறதிக்கி இருந்தது. நீங்க சுறுக்காப் போயாச்சி தானே” எனக் கூறிவிட்டுச் சிரித்தார்.
“வூட்டுல கொஞ்சம் வேலை இருந்துதுங்க. அது தாங்க போனேன்” எனக் குழைந்தபடி கூறினார் தலைவர்.
“ஆங் அதுசரி… நாங் ஏங் வரசொன்னது சொன்னா இந்த தோட்டத்தில் ஆளுங்க எல்லாங் ஒழுங்கா வேலை செய்யிறதில்லே, மிச்சங் மோசங்; காலையில நேரத்திக்கி வராம பிந்திதாங் வாரது. ‘ரவுண்’ எல்லாங் ரெம்ப பிந்தி போயிருக்கு. அதுனால இந்த ஆளுங்களை இனிமே கொஞ்சங் வெள்ளன வேலைக்கு வர சொல்ல வேணுங்.”
“ஆமாங்க, ரவுண் பிந்திப்போய் இருக்கிறது எனக் கும் தெரியுமுங்க. இனிமே ஆளுங்களை பிந்திவராம கொஞ்சம் வெள்ளன வந்து ரவுணை எடுத்துக் கொடுத்துட சொல் லிப்புடுறேங்க” என்றார் தலைவர் கைகளைப் பிசைந்தவாறு.
“அப்புடி இல்லே தலைவர், இனிமே யாராச்சும் பிந்தி வந்தா ஓடனே நாங் வெரட்டிப் போடுறது. அப் புறம் நம்மகிட்ட பிரச்சினை பேச வரக்கூடாது. அது சொல்லதாங் நாங் இப்ப வரச்சொன்னது” என்றார் கண் டக்டர் கண்டிப்புடன்.
“ஐயாவைப்பத்தி இன்னமும் ஆளுங்களுக்குத் தெரி கண்டிப்பானவருனு யாதுதானுங்களே… ஐயா ரெம்ப ஆளுங்களுக்குச் சொல்லிவச்சுப்புடுறேங்க.”
“அன்னிக்கு பாருங்க தலைவர், அந்த வீரய்யாக் கங் கூட்டிக் காணி ஆளுங்களை நாலு மணிக்கே மடுவத்துக்கு கிட்டு வந்தது.”
“ஆமாங்கையா நானுங் கேள்விப்பட்டேனுங்க ஐயா கூட அவனிக்கு பத்து ரூபா தெண்டம் போட்டுட் டீங்களாமே. அன்னிக்கே அவனும் அந்த ராமுப் பயலும் வந்து ஏங்கிட்ட ஒரே கரச்ச பண்ணிட்டானுக. அநியா யமா தெண்டம்போட்டுட்டீங்கன்னு சொல்லிக்கிட்டுஇருந் தானுக” என்றார் தலைவர்.
“ஆமா தலைவர், அப்புடி மோடத்தனமான வேலை செஞ்சா தெண்டம் போடத்தானே வேணுங்” எனக்கூறிய கண்டக்டர் சிகரட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தார்.
“அன்னிக்கு சரியான மழைதானுங்களே…. வருசா மலையில் வருசம் இப்புடித்தாங்க. மழை பெஞ்சா அந்த கொழுந்தே எடுக்க முடியாதுங்க; ஒரே வழுக்கப்பாறை துண்டுங்க… அதுதாங்க அவேன் ஆளுங்களை கூட்டிக்கிட்டு வந்துட்டானுங்க.’
“அப்படி சொல்ல வேணாங் தலைவர். கங்காணி நெனைச்ச மாதிரி மலையில் இருந்து ஆளுங்களை கூட்டிக் கிட்டு வரக்கூடாது தானே. நம்பகிட்ட சொல்லித்தானே செய்யவேணுங்.”
“இவ்வளவு நாளும் தோட்டத்தில செஞ்சுவந்த மாதிரி தாங்க அவேன் செஞ்சுப்புட்டான். இனிமே ஐயா சொல்லாம அந்த மாதிரி நடந்துகிட வேணாமுனு சொல் லிப்புடுறேங்க. இந்தத் தடவை மட்டும் மன்னிச்சிடுங்க… அவனுக்கு அந்தத் தெண்டத்தை மட்டும் போட்டுப்புடா தீங்க” என தலைவர் தலையைச் சொறிந்த வண்ணம் கூறினார்.
“நான் தெண்டம் போட்டா போட்டதுதாங். அப் எனக் கூறிய புறம் மாத்திறதில்லே”
கண்டக்டர் ஒரு கணம் தாமதித்து சிகரட்டைப் உறிஞ்சிவிட்டு பலமாக புகையை வெளியே ஊதினார். பின்னர் ”ஆனாலுங் தலைவர் நீங்க கேக்கிறதினால் அந்த தெண்டத்தை நான் நிப்பாட்டு றது. வேற ஆள் வந்து கேட்டா நான் இது செய்யிறது இல்லே” எனக் கூறினார்.
“ரெம்ப நல்லதுங்க. போன கண்டக்கையாவும் ஒங்க மாதிரிதாங்க. மிச்சம் நல்லவருங்க… நான் எது கேட்டாலும் மறுக்காம செஞ்சிடுவாருங்க” எனக் குழைந்தார் தலைவர்.
“நாங் இங்க வந்தது ஆளுங்களுக்கு கெட்டது செய் யிறதுக்கு இல்லே… நல்லது தாங் செய்யிறது. நாங் சொன்னபடி ஆளுங்க நடந்தா நான் மிச்சங் ஒதவி செய்யிறது” என்றார் கண்டக்டர்.
“ரெம்ப நல்லதுங்க. ஐயா கூடக் கேள்விப்பட்டிருப் பீங்க; நான் இந்தத் தோட்டத்தில் பத்து வருஷமா தலை வரா இருக்கிறேனுங்க. ஒரு காலத்திலையும் நான் ஐயா மாருங்க பேச்சை மீறி நடக்கல்லீங்க… சும்மா சொல்லப் புடாதுங்க. ஐயாமாருங்களும் எனக்கு ரொம்ப ஒதவி செஞ்சிருக்காங்க… போன ஐயா கூட என் சம்சாரம் சொகமில்லாம வூட்டில் இருந்திட்டாளுன்னா அவர் கிட்ட ஒரு வார்த்தைதாங்க சொல்லணும். அவ வேலைக்கு வர்றவரைக் கும் பேரு போட்டு ஒதவி செய்வாருங்க. அவர மறக்கவே முடியாதுங்க” எனக் கூறிய தலைவர், கண்டக்டரைப் பார்த்து அசட்டுத்தனமாகச் சிரித்தார்.
“அதிங் எல்லாங் சரி தலைவர். நாங் வேற ஒரு விசயங் ஒங்ககிட்ட கதைக்க வேணுங். இந்த மாசம் முடியிறதுக்கு முந்தி அந்த ஒன்பதாங் நம்பர் மலைக்கும் பத்தாங் நம்பர் மலைக்கும் ஒரம் போட்டுமுடிய வேணுங், அதுனால அந்த வேலைய நாங் ‘கொன்றேக்’ கொடுக்கிறது… தலைவருக்கு அந்த ‘கொன்றேக்’ எடுத்து செய்ய முடியுமா?’ எனக் கேட்ட கண்டக்டர் தலைவரை உற்றுப் பார்த்தார்.
தலைவர் சற்று யோசித்து விட்டு “ஓரம் போடுறதுக்கு வழக்கமா பெரட்டுல தானே ஆள் போடுவாங்க, இந்தப் பயணம் என்னாங்கையா கொந்தரப்பு குடுக்குறீங்க…” எனக் கேட்டார்.
“ஆமாங் தலைவர், அது நமக்குங் தெரியும். இந்த மாசம் தோட்டத்தில மிச்சங் வேலை இருக்கி. அதனாலதான் ‘கொன்றேக்’ குடுக்கிறது… நீங்க எந்த நாளும் அந்த வேலைய அந்திக்கு ஆள் வச்சி செய்ய முடியுங்தானே’ எனக் கூறினார் கண்டக்டர்.
தலைவரின் மூளை துரிதமாக இயங்கியது. அந்த வேலை யைக் ‘கொன்றேக்’ எடுத்தால் குறைந்த ஆட்களைக் கொண்டு கூடிய வேலையைச் செய்வித்து இலாபம் பெற லாம் போல அவருக்குத் தோன்றியது.
“ஐயா சொன்னீங்கன்னா நான் மறுத்துப் பேசப் போறேனுங்களா? என் பேருலேயே அந்த கொந்தரப்பை போட்டிடுங்க” என்றார் தலைவர் சிரித்தபடி.
“அப்ப சரிங் தலைவர். நாங் ஓங்க பேருக்குத் தான் ‘கொன்றேக்’ கொடுக்கிறது. இதுபத்தி தொரகிட்ட கதைச்சி அப்புறங் நாங் ஒங்களுக்கு சொல்லுறேங்… அது வரைக்கும் நீங்க இதபத்தி யாருகிட்டேயும் சொல்ல வேணாங். அப்புறம் எல்லாங் நம்பகிட்ட வந்து கொன்றேக் தரச்சொல்லி கரச்சல் பண்ணுவாங் தானே” என்றார் கண் டக்டர், சிகரட் துண்டை நிலத்திலே போட்டு சப்பாத்துக் காலால் மிதித்தபடி.
“எனக்குத் தெரியாதுங்களா…இந்தமாதிரி வெசயங் களைப் போய் மத்தவங்ககிட்ட கதைக்கலாமுங்களா? மூச்சு விட மாட்டேனுங்க” என்றார் தலைவர் கையை வாயில் வைத்தபடி.
“சரி தலைவர் நேரமாச்சி, இதைப்பத்தி நாம அப்புறங் கதைப்பங். இப்ப எனக்கு கொஞ்ச வேலையிருக்கு” எனக் கூறியவாறு கதிரையைவிட்டு எழுந்திருந்தார் கண்டக்டர்.
கண்டக்டர் எழுந்ததைப் பார்த்த தலைவர், ‘அப்ப சரிங்க, நான் போயிட்டு வாறேனுங்க” எனக் கூறி கண்டக்டரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்.
“நம்ப கண்டக்கையாவப் பத்தி என்னென்னவோ நெனைச்சுப் பயந்துகிட்டு இருந்தேன். இப்பதான் அவரைப் பத்தி தெரியுது” என முணுமுணுத்தபடி லயத்தை ரேக்நகி நடக்கத் தொடங்கினார் மாரிமுத்துத் தலைவர்.
– தொடரும்…
– குருதிமலை (நாவல்), முதற் பதிப்பு: ஜூலை 1979, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.