கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 8, 2019
பார்வையிட்டோர்: 6,334 
 
 

எங்க போயிட்டான் நம்ம பையன், ‘குரா’ நம்ம கூட தான வந்தான். இப்போ எப்படி தேடரது.”

இப்படி தன்னை 99 மில்லியன் வருடங்களுக்கு முன் ஸ்பியல்பர்கின் முலமாக காட்சியளிக்கப்பட்ட டைனாசர்கள் காலத்தில் தன்னை அறிமுகப்படுத்தி, ஒற்றுமை எனும் அச்சாரம் பூசிக் கொண்டு, ‘உழைத்து உண்’ என்ற உவமையை உடுத்திக் கொண்டு, உலகம் சிறியதென்று ஊர்ந்தே உடல் இளைத்து, விலங்கின் ராஜ்ஜியம் கொண்ட , எறும்புகள் இரண்டும் கோவை இரயில் நிலையத்தில் , இரவு 10.00 மணிக்கு திடிரென காணாமல் போன ‘குரா’ என்ற எறும்பைத் தேடிக் கொண்டிருந்தன.

அடுத்த நாள் காலை 8.00 மணிக்கு , அம்பாசமுத்திரத்தில் “விடு ‘குரா’ நம்ம வாழ்க்கையில இது மாதிரி நடக்குறது சகஜம் தானே, இதுக்கு போயி…………

நீ அழுதிட்டு இருக்கறத பார்த்துட்டு என் சக பயணிகளிடம் இருந்து விலகி ஒடி வந்தேன் “ என்றது டாட்ரீ என்ற பெண் எறும்பு.

“இல்ல டாட்ரீ எங்க அம்மா, அப்பாவுக்கு பிடிக்குமேனு தான் அந்த கிழவர் செருப்புல இருந்த வித்தியாசமான சர்க்கரை கட்டிகளை எடுக்க போயி செருப்பின் இடுக்குல மாட்டிட்டேன் எடுக்க எவ்வளவோ முயற்சி பண்ணியும் அவுரு கால் கட்டை விரலால் சிறை பிடிக்கபட்டேன்” என்று அந்த அழகிய வீட்டின் முகப்பில் காலணிகள் இடும் இடத்தில், இரு எறும்புகள் உரையாடிக் கொண்டன. ஆனால் அந்த வீட்டின் முன் அதிகமான செருப்புகள் காணப்பட்டன.

“அம்மா நீங்க தான் இறந்த கருப்புசாமியின் மனைவி லக்ஷ்மியா, அவுரு சாவுல சந்தேகம் இருக்கறதா தகவல் கிடைச்சுது அது தான் விசாரிக்க வந்திருக்கோம்.” என்றார் ஏ 2 இன்ஸ்பெக்டெர்.

“அடுத்த மாசம் பொறந்தா…….. மகளுக்கு கல்யாணம், அதுக்கு தான் பித்துரு தோசம் கழிக்க செல்வம். ஜோசியர் சொன்னாருனு கோயம்பத்துரில இருக்கிற பேருர் கோவிலுக்கு நேத்து போனாரூ…….போயிட்டு வந்தவரு வயித்து வலினு படுத்தாரு… படுத்தவரு எந்திரிக்கவே இல்ல…” என்று அழுது தீர்ந்த கண்ணிரோடு, மூச்சை கடன் வாங்கி பேச முற்பட்டாள் லக்ஷ்மி. கருப்புசாமி இறந்ததை அறியாமலே இருந்தான் குரா.

‘குரா’ ஏன் அந்த செருப்ப விட்டு கீழ இறங்காம செருப்பு மேலயே காவலுக்கு இருக்க… ‘’ என்றாள் டாட்ரீ.

‘இல்ல. டாட்ரீ இங்க இப்போ நிறைய செருப்பு வந்திருக்கு, கிழே இறங்கின திரும்பவும் தேடி கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம். அது மட்டும் இல்லாம அந்த மனுசன் திரும்பவும் வந்து செருப்ப போட்டுட்டு, நான் வந்த இடத்துக்கு போவாரூனு ஒரு நம்பிக்கை தான்” என்றான் ‘குரா’ சற்று ஆக்ரோசமாக.

“சரி” என்று சொல்லிக் கொண்டு தன் வேலையை பார்க்கக் கிளம்பினாள் டாட்ரீ மாலை 6.00 மணி , “வஈக்கீலுக்கு படிச்சிண்டு இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே அப்பநாயிக்கன்பட்டில சுத்தீண்டு இருக்கறதா நோக்கு உத்தேசம். நாளபின்ன கல்யாணம் ஆகண்டமொ….சேலத்துல என் நண்பர் பாலசுப்பிரமணியனு ஒருத்தர் சீனியர் லாயரா இருக்கா, அவா கிட்ட போயி ஜுனியரா சேரூனு பல முறை சொல்லியாச்சு” என்று தன் ஒரே பிள்ளை ராகு ஒரு பெரிய வழக்கறிஞராக்க வேண்டும் என்கிற வைராக்கியம் கொண்ட கிருஷ்ணசாமி அவ்வப்போது தன் மனகுமறலால் தன் கொள்கைக்குப் பட்டைதீட்டிக் கொள்வார்.

“ சும்மா திட்டாதேள் …. அங்க போறதுக்கு தான் அவன் கிளம்பீண்டு இருக்கான்……..” என்றால், எப்போதுமே திடிர் சூறாவளியும், திடுக்கிடும் சுனாமியும் வரும் போதெல்லாம், தன் வார்த்தைகளை கேடயமாக்கும் ராகுவின் அம்மா சாரதா.

‘புயலுக்கு பின் அமைதி” என்பது போல மெதுவாக கடந்தான் ராகு.

இரவு 10.00 மணி , “ இங்க பாருப்பா கிருஷ்ணசாமி எனக்கு பள்ளிக்கூடம் படிக்கும் போது ஜுனியர், அதே மாதிரி அவரு பையன் நீயும் எனக்கு ஜுனியர வரது.. எனக்கு மகிழ்ச்சி தான் “ என்று ராகுவை பார்த்து சொன்னார் வக்கீல் பாலசுப்பிரமணியன்.

“ ஐயா நீங்க எந்த வேலை கொடுத்தாலும் செய்யறேன்.” என்றான் ராகு சற்று பவ்வியமாக.

“ சொல்லர வேலையை அப்படியே செய்யறதுக்கு ஏன் வக்கீலுக்கு படிக்கணும், கொஞ்சம் அறிவ கீறீ , கொஞ்சம் மிளகா பொடி போடணும், அப்போ தான் நம்ம கார சாரமா வேலை செய்வோம் சரியா..” என்றார் பாலசுப்பிரமணியன் சற்று அதட்டும் குரலில்.

சற்று பணிவு கலந்த குரலில் “ சரிங்க ஐயா” என்றான் ராகு.

காலை 9.00 மணி ,

“ என்னோட தூரத்து உறவு கருப்புசாமி அம்பாசமுத்திரத்தில், திடிர்னு நேத்து இறந்திட்டதா தகவல் வந்ததால போயிட்டு நேத்து நைட்டு தான் வந்தேன்.
அவன் கொலையில எனக்கு சந்தேகமாயிருக்கு, அதுனால நான் அந்த கேச எடுத்துகிறதா வாக்கு கொடுத்திருக்கிறேன். என்னால இன்னைக்கு முடியல நீ போய் எதாவது விஷயம் சேகரிக்க முடியுமானு பாரு…” என்றார் பாலசுப்பிரமணியன் ராகுவிடம்.

மிகவும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்ட அம்பாசமுத்திரத்தில் ,ஒரு தேனீர் கடையில் ஆவி பறக்கும் தேனீரை வெறிக்க, வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தான் ராகு. கருப்புசாமி பற்றிய துப்பு எதும் கிடைக்காமல், தன் முதல் வேலையில் தன்னை நிருபிக்க முடியவிலையே என்ற தடுமாற்றத்துடன் காணப்பட்டான்.

“ஹைய் ராகு….அவ்வார் யூ….” என்றது ஒரு அழகிய பெண் குரல்.

“ஆய் ரீட்டா …….” .

“கோயம்பத்துர் லா காலெஜுல பார்த்தது, அப்பறம் எப்படி இருக்க…” என்றான் பதிலுக்கு ராகு.

“நான் நல்லவே இருக்கேன், இங்க தான் ஜுனியர பராக்டீஸ் பண்ணறேன்.. அப்பறம் நீ எங்க இங்க…” என்று ஆரம்பித்தாள் ரீட்டா தேனீர் கோப்பை காலியாயின…

“இங்க பாரு உன்னோட கேசு எனக்கு புரியுது ‘ராகு’ மனசு விடாத, நான் ஆர்த்தர் கெனான் டொயில் எழுதிய ‘ஷெர்லாக்ஹொம்ஸ்’ என்ற துப்பறியும் நாவல்ல , சம்பந்தமே இல்லாத ஒரு பொருள் பெரிய தடையமா அமையுறத படிச்சிருக்கேன், அதனால திரும்பவும் முயற்சி செய் பெஸ்ட் ஆஃப் லக்.” என்று விடைபெற்றுக்கொண்டாள் ரீட்டா.

“கொஞ்சம் அறிவ கீறீ , கொஞ்சம் மிளகா போடி போடணும்,” என்ற பாலசுப்பிரமணியன் வார்த்தைகள் தன்னை திரும்ப திரும்ப துளைத்துக்கொண்டிருந்தது.
கருப்புசாமி இவனுக்கு திடிரென குல சாமியாக தெரிந்தார், பார்ப்பவர்கள் எல்லாம் கருப்புசாமியாய் தெரிந்தார்கள், மூலைக்குள் இரும்புக் குதிரைகள் ஓடுவதை உனர்ந்தான், அதில் அவனுடைய தகுதியையும், அடையாளத்தையும் தக்கவைத்துக் கொண்டே இருந்தான்.

அப்போது லக்ஷ்மி தன் கணவர் புது செருப்பொன்றை கோவையிலிருந்து வந்த போது அணிந்ததாக கூறியது புலனுக்கு எட்டியது…

ராகு திரும்பவும் கருப்புசாமி வீட்டிற்கு சென்று அந்த செருப்பை பத்திரமாக ஒரு பையில் சுற்றிக்கொண்டு வந்து ,ஒரு பூத கண்ணாடியின் மூலமாக ஆராய்ச்சி செய்தான். அப்போது செருப்பை தலைகீழாக திருப்பும் போது சில சர்க்கரை துகில்களை கவனித்தான்.

“என்ன இது நம்ம சர்க்கரை இப்படி கீழ கொட்டிருச்சு” என்று செருப்புக்குள் இருந்து தலைகீழாக தொங்கியபடி குரா கத்தினான்.

மறுநாள் காலை 10.30 “ யுவர் ஆனர் , இந்த செருப்பில் இருக்கும் சர்க்கரை சாதாரணமாக வீட்டில் உபயோகிக்கும் சர்க்கரை அல்ல. இது பெரும்பாலும் சாதாரணமான கடைகளில் கிடைக்கக்கூடிய பொருள் அல்ல. இது தரம் உயர்ந்த கடைகளில் கிடைக்கக்கூடிய பொருள். இது சாதாரணமான சர்க்கரையை விட அளவில் பெரியது, இதற்கு பெயர் “சாண்டிங் சுகர்” இதை அடுமனையில் செய்யப்படும் மாவடை போன்ற பதார்த்தங்களை செய்வதற்க்கு உதவும் பொருள். இந்த சர்க்கரை எப்படி கருப்புசாமியின் புதிய செருப்புக்குள் வந்தது என்பது தான் இந்த வழக்கின் திருப்பு முனை.

கருப்புசாமி, கோவிலில் தனது பழைய செருப்பை தொலைத்துவிட்டதால், அதே கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு செருப்புக் கடையில் செருப்பு வாங்கி இருக்கிறார், அதற்கான பில் ஆதாரம் அதை உறுதி செய்கிறது. புது செருப்பில் சர்க்கரை ஒட்டுவதற்கான சாத்தியம் இல்லை. அப்போது எப்படி சர்க்கரை ஒட்டியது என்பதற்கு , இந்த திரைக்கதையில் நுழைகிறார் ,இதோ இந்த குற்றவாளி கூண்டில் நிற்கும் ஜாகிர். பேரூர் கோவிலுக்கு பக்கத்தில் இருக்கும் போஸ்டல் காலனியை சேர்ந்தவர், இவர் அடுமனை பொருட்கள் செய்யும் வியாபாரி. இவர் வீட்டிற்கு செல்லும் வழியில் கருப்புசாமியை கண்டதோடு, அவரை வீட்டிற்கும் அழைத்து சென்றிருக்கிறான். அப்போது சென்னையில் உள்ள தன் 10 சென்ட் இடத்தை கோவிலுக்கு நன்கொடையாக கொடுக்கப் போவதாக கூறிய கருப்புசாமியிடம், கோவிலுக்கு இடத்தை தருவதற்கு பதில் தனக்கு தருமாறு கேட்டிருக்கறார்.

அதற்கு மறுத்த கருப்புசாமியை கொலை செய்ய முடிவு செய்த ஜாகிர். ‘பாட்டிலினம்’ என்ற ஸ்லோ பாய்சனை தன் வீட்டு சோற்றில் கலந்து கொடுத்திருக்கிறான். இந்த பாய்சன் கெட்டுப்போன உணவு உட்கொள்வதாலும் எற்படுவதால் இதை வைத்து எளிதில் கண்டு பிடித்துவிட முடியாது என்பதை அறிந்த ஜாகிர் இதை செய்து இருக்கிறார். அப்படி சென்ற கருப்புசாமியின் காலில் எதேச்சையாக ஒட்டிக் கொண்ட ஜாகிர் வீட்டு சர்க்கரை தான் இந்த சர்க்கரை. இந்த சர்க்கரை ஏதோ ஒரு காரணத்திற்காக செருப்பிலேயே தங்கியதால் இந்த வழக்கு சுலபமாக முடிந்தது……..” என்றார் பாலசுப்பிரமணியன். அவரது வாதத்தை பார்த்து “எனக்கு இப்படி ஒரு கேசு அமையக்கூடாதா என்று புலம்பிய ‘வெங்கிடேசன்’ என்ற இன்னொரு வழக்கறிஞரின் உடையில் தொங்கிக் கொண்டிருந்தான் குரா ….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *