(1990 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இருந்தாற் போலக்கேட்ட குண்டுச் சத்தத்தில் திடுக்கிட்டான். அந்தப் புள்ளிக் குயிலும் திடுக்குற்றுச் சிலிர்த்துக் கொண்டது. தலையை உயர்த்தி, செம்மணிக் கண்களை உருட்டிப் பார்த்துவிட்டு, குழை அடர்த்திக்குள் ஊர்ந்து மறைந்தது……..
இந்த மரம் பலமாடிக் கட்டிடம் போல அவனுக்குப் படுகிறது. பறவைகளின் பலமாடி வீடு. அடிமரம் ஒரே நேராய் நெடுத்திருக்க. ஆளுயரத்திலிருந்து கொப்புகள். ஒவ்வொரு கணுவிலும் எல்லாப் பாட்டிலும் கிளைகள். கிடையாக வளர்ந்து பரவி….இதற்கு ஆளுக்கொரு பெயர் சொல்கிறார்கள். பக்கத்து வளவில் மதிலோடு நிற்கிறது. பயன் என்னவோ இந்தப் பக்கம். சித்தப்பா வீட்டுக்குத் தான் அதிகம் என்று படுகிறது. காலை வெயிலில் ஒரு பொட்டுக் கூட இந்தப் போர்ட்டிகோவில் விடுவதில்லை.
சத்தம் மீண்டும் கேட்டது. குண்டல்ல – ஷெல். அடுத்தடுத்து இரண்டு. இன்று வேளைக்கே தொடங்கியாயிற்று. வீட்டைப் பார்க்க வெளிக்கிடவே முடியாது போலப் பட்டது.
படியில் உட்கார்ந்தான் இன்னும் கேட்கிறதா?
…..இல்லை: பிறகு காணவில்லை. நின்று விட்டதாகத்தான் படுகிறது. பெரிய பிரச்சினை இல்லைப் போலும். இன்றும் கொஞ்சம் பார்த்துவிட்டுப் புறப்படலாம்..
இந்த மரத்தில் குயில்களைத்தான் அவன் கண்டிருக்கிறான். இரண்டு கருங்குயில்களும். இரண்டு புள்ளிக் குயில்களும் என்றொரு கணிப்பு. அது எவ்வளவு சரியென்று தெரியாது. எங்கோ அவை போகும். வரும். ஆனால் வாசம் இங்குதான். பாம்புகள் போல வளைந்து – ஊர்ந்து பழந்தேடி உண்டுவிட்டு, ஒதுங்கிச் சிறகடிக்கும் வீடு இதுதான் அவற்றிற்கு குயில்களின் இந்த வீடு எவ்வளவு அழகு! எவ்வளவு நிம்மதி! இரவிலுங்கூட சில சமயம் சிறகடியும் குரலொலியும் கேட்கும்….இந்த மூன்று வாரப் பழக்கமாகி விட்டது.
சத்தங்கள் கேட்ட திக்கில்தான் அவன் வீடு இப்படிச் சத்தங்கள் கேட்கத் தொடங்கிய இந்த ஒரு மாதத்தில், அவன் அயலில் ஐந்தாறு வீடுகள் அநியாயமாய்ப் போயின. கிடைத்ததை எடுத்துக்கொண்டு அவனும் குடும்பமும் இங்கே வந்தார்கள். விமானங்கள் ஒரு தடவை வட்டமிட்டுப் போய் அடுத்தாட்டம் திரும்பி வருவதற்குள் அவசர அவசரமாக ஓடி வந்தார்கள்.
வீடு என்ன கதியோ, இப்போது? இடையில் ஒரு தரம் மட்டும் போய்ப் பார்த்துவிட்டு வரமுடிந்தது. ஒவ்வொரு நாளும் காலையில். ஒருக்கால் பாத்திட்டு வாறன்……” என்று புறப்படுவான். மனைவி மக்கள் மறிக்க ஏதோ சொல்லிச் சமாதானம் செய்துவிட்டுப் புறப்பட முடியும். ஆனால் வீட்டடிக்குப் போய்.
“சந்திக்கு அங்காலை போறது புத்தியில்லை. போகாதையுங்கோ……’ என்பதைக் கேட்கிற போது, நெஞ்சில் கனக்கிற வேதனையும் சைக்கிள் உழக்கிய களைப்புமாகத் திரும்ப நேரிடும்…
செய்யக் கூடியதைச் செய்துவிட்டு ஓய்ந்து-அல்லது ஓடிந்து உட்கார்கிற நேரங்களிலெல்லாம் இந்த மரந்தான் ஒரு உலகாய் அவன் முன் விரிகிறது…
இருந்தாற் போல அந்தச் சத்தம் மீண்டும். இது வலுகிட்ட இல்லை; இது குண்டுமல்ல. ஷெல்லுமல்ல. மதிலுக்கு அந்தப் பக்கத்தில்.
ஒவ்வொரு ஒலியுடனும் மரம் ஒரு தடவை நடுங்கிக் குலுங்கியது. பழுத்த இலைகள் சொரிந்தன. இந்த மரத்தின் அடியில் விழுகிற கோடரியின் சத்தம்! அவன் திகைத்ததான். என்ன இது? தறிக்கிறார்கள்?……ஏன்? பதுங்கு குழி மூடக்கூட இது உதவாதே?
குயில்கள் எங்கே போயிருக்கும்? இனி எங்கே போகும்?…..தாங்க முடியாதிருந்தது.
மதிலால் எட்டி, ‘தறியாதையுங்கோ’ என்று கூவ வேண்டும் போல அவதி.. எழுந்தான்.
திடீரென மீண்டும் படியில் குந்தி விம்மலானான்.
– ஈழநாதம் – 1990
– யாழ்இனிது – 1998
– எழுதப்பட்ட அத்தியாயங்கள், முதற் பதிப்பு: மே 2001, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.