(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தீபாவளிக்கு முதல் நாள் வந்திருந்த ‘தீபாவளி மலர்’களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த தீபா, அவற்றில் வெளியாகியிருந்த ஒரு விளம்பரத்தைக் கண்டதும் ‘களுக்’ கென்று சிரித்து விட்டாள். காரணம் அந்த விளம்பரத்தில் அவளும் அவளுடன் நடித்த அமர்நாத்தும் ஒருவரை யொருவர் அணைத்தபடி நின்று கொண்டிருந்த காட்சி, அவள் நினைக்க நினைக்க இனிக்கும் காட்சியாயிருந்தது தான்!
ஆனால்…
ஆயிரமாயிரம் ரஸிகர்கள் தன்னைக் காதலிக்கும் போது, அவனை மட்டும் தான் காதலிக்க முடியுமா? காதலித்தால் கல்யாணமுமல்லவா செய்து கொள்ள வேண்டியிருக்கிறது? கல்யாணம் செய்து கொண்டால் பைத்தியமுமல்லவா தெளிந்து விடுகிறது? பைத்தியம் தெளிந்தால் நட்சத்திரப் பதவியுமல்லவா போய் விடுகிறது?
என்ன இருந்தாலும் அன்று அவன் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது; டைரக்டருக்குத் தெரிந்திருந்தால்….
தெரிந்திருந்தால் என்ன, அவரையும் காதலித்துத் தொலைக்க வேண்டியிருந்திருக்கும்!
“எத்தனையோஜன்மம் எடுத்தெடுத்தே இளைத்தேன்!” என்பது போல, சினிமா உலகில்தான் காதலும் எத்தனையோ ஜன்மம் எடுத்தெடுத்து இளைக்க வேண்டியிருக்கிறதே!
இத்தனைக்கும் முன்னெரிச்சரிக்கையோடு ‘அண்ணா!’ என்றுகூட அழைத்துப் பார்க்கிறோம்; அவர்கள் எங்கே ‘தங்காய்!’ என்று அழைக்கத் தயாராயிருக்கிறார்கள்?
மோசம், ரொம்ப மோசம்!
சிரிக்க வைத்தது; இவ்வளவு தூரம் அவளைச் சிந்திக்கவும் வைத்துவிட்ட அந்தச் சம்பவம் இது தான்;
கதாநாயகன், கதாநாயகியைக் கட்டிப் பிடித்து, கண்ணே ! கறுப்புச் சந்தை மணமே! இனி யாராலும் நம்மைப் பிரிக்க முடியாது, இனி யாராலும் நம்மைப் பிரிக்க முடியாது! என்று தன்னால் முடிந்தவரை கத்த வேண்டும் – உணர்ச்சியை வெளிப்படுத்தத்தான்.
இந்தக் காட்சி பதிவாக ஒளியும் ஒலியும் தயாரானதும், “கமான், ரிஹர்ஸல்!” என்றார் டைக்ரடர்.
இதை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்த அமர்நாத், அதுதான் சமயமென்று அவளைக் கட்டிப் பிடித்து ‘நறுக்’ கென்று கிள்ளி விட்டான். அத்துடன் அவன் நிற்கவில்லை ; அதன் பலாபலனை வேறு அவள் முகத்திலே நேருக்கு நேராகப் பார்க்க ஆரம்பித்து விட்டான்!
அவளோ வலி தாங்காமல், ‘சூசூ ‘ என்று ‘சூ’கொட்டிக் கொண்டே.. அவன் பிடியிலிருந்து மெள்ள நழுவினாள்.
“என்ன, என்ன?” என்றார் டைரக்டர் பதட்டத்துடன்.
“ஒன்றுமில்லை; எறும்பு, கட்டெறும்பு!” என்று தடுமாறினான் அமர்நாத்.
“என்ன கட்டெறும்புக்கு?”
“ஒன்றுமில்லை – கடித்துவிட்டது!”
“ஓ, தீபாவைக் கட்டெறும்பு கடித்து விட்டது என்கிறீர்களா? கடிக்கும், கடிக்கும் நம் கதாநாயகியைக் கண்டால் யாருக்குத்தான் கடிக்கத்தோன்றாது?” – என்றார் டைரக்டர் அவளையும் அவள் அழகையும் பாராட்டும் நோக்கத்துடன்.
இந்தப் பாராட்டு இத்துடன் நிற்க வேண்டுமே என்ற கவலையில் “நான் ரெடி ஸார்!” என்றாள் தீபா.
“எஸ், ஒன்ஸ் அகெய்ன்!” என்றார் டைரக்டர்.
“காரியம் கைகூடும் போலிருக்கிறதே!” என்ற நம்பிக்கையுடன் இம்முறை இன்னும் கொஞ்சம் தைரியத்துடன் அவளை நெருங்கினான் அமர்நாத். ஒத்திகையும் வெற்றிகரமாக முடிந்தது; படப்பிடிப்பும் திருப்திகரமாக இருந்தது.
அன்றிலிருந்து ஏனோ தெரியவில்லை – அவன் கை இட்ட இடந்தனிலே அவளுக்குத் தண்ணென்றிருந்தது; அதில் ஒரு சாந்தியும் பிறந்தது!
அதற்காக – அவனுக்குத் தன்னை அப்படியே அர்ப்பணித்து விட முடியுமா என்ன? அப்படி அர்ப்பணித்து விட்டால் லட்சக் கணக்கான ரூபாய் வருமானம் ‘குளுகுளு’ பங்களா, ‘ஜிலுஜிலு’ கார் – எல்லாவற்றிற்கும் அவனல்லவா அதிகாரியாகி விடுவான்? – அவனுடைய அதிகாரத்துக்குத் தானாவது, கீழ்ப்படியவாவது!
அன்றொரு நாள் அவனைச் சோதித்துப் பார்த்ததிலிருந்தே இது தெரிந்து விடவில்லை? ‘இந்தக் கூஜாவைக் கொண்டு போய்க் காரில் வைக்கிறீர்களா?’ என்றதற்கு “ஆஹா, அதற்கென்ன?” என்று எதிர்த்தாற் போலிருந்த ‘லைட் பா’யை அல்லவா அவன் கூப்பிட்டான்? – அவனாவது, தன் முகம் கோணாமல் நடப்பதாவது!
வேண்டாம்; காதலும் வேண்டாம்; கல்யாணமும் வேண்டாம். கன்னி; நித்திய கன்னி – ஆம், ஒப்பனைக்காரன் என்று ஒருவன் இந்த உலகத்தில் இருக்கும் வரை!
இந்தத் தீர்மானத்துடன் தீபாவளி மலர்களை மூடி வைத்துவிட்டு அவள் எழுந்த போது “அன்புள்ள தீபாவுக்கு, அன்புடன் அமர்நாத்” என்று எழுதப்பட்ட பெரிய காகிதப் பையொன்றை யாரோ ஒரு சிறுவன் கொண்டு வந்து அவளிடம் கொடுத்து விட்டுச் சென்றான்.
“இதுவும் புடவையாய்த்தான் இருக்கும் போலிருக்கிறது! சரிதான், சரிதான்; இந்தத் தீபாவளிக்கு வரும் புடவைகளைப் பார்த்தால் ‘தீபாவளி எம்போரியம்’ என்று ஓர் எம்போரியம் வைத்து விடலாம் போலிருக்கிறதே!” என்று சொல்லிக் கொண்டே அதிலிருந்த பட்டுப் புடவையை எடுத்துப் பார்த்து விட்டு செலக்ஷன் நன்றாய்த் தான் இருக்கிறது; இருந்தாலும் நாயுடு கொண்டு வந்து கொடுத்த புடவைக்கு இது ஈடாகுமா?’ என்று எண்ணிக் கொண்டே அதைச் சோபாவின் மேல் வீசி எறிந்தாள்.
அதன் மேலிருந்த ‘வாசகம்’ அப்போது தான் அவள் கண்களைக் கவர்ந்தது!
‘அன்புள்ள தீபாவுக்கு, அன்புடன் அமர்நாத்!’
இதைப் படித்ததும் அவள் சிரித்தாள்.
அன்பு -அதைக்கூட ஏதாவது ஒரு காரியத்துக்காகத் தான் செலுத்த முடியும் போலிருக்கிறதே!… ம், இவனைப் போல் எத்தனையோ பைத்தியங்களைப் பார்த்தவள் நான், என்னையா இவனால் பைத்தியமாக்க முடியும்?
அவள் மறுபடியும் சிரித்தாள்.
“வைரக் கற்களை வாரி இறைப்பது போலிருக்கிறதே! எங்கே, இன்னொரு முறை சிரி – பார்க்கலாம்?” என்று இளித்துக் கொண்டே வந்தார் வான மூனா.
“வாருங்கள், வாருங்கள்; இன்றுதான் உங்கள் படத்தைப் பற்றிய விமரிசனத்தைப் பத்திரிகையில் பார்த்தேன்!” என்று சொல்லிக் கொண்டே அவரை வரவேற்றாள் தீபா.
“அதென்ன, உங்கள் படம்? ‘நம்படம்’ என்று தான் சொல்லேன் – என் மனசு கொஞ்சமாவது குளிராதா?” என்று குழைந்து கொண்டே சோபாவில் உட்கார்ந்த வானா, மூனா தேள் கொட்டிய திருடன் போல் திடுக்கிட்டு எழுந்தான்.
“என்ன, என்ன? என்றாள் தீபா பதட்டத்துடன்.
“இந்த அமர்நாத் யார், உனக்குப் புடவை எடுத்துக் கொடுக்க? இவன் எடுத்துக் கொடுத்த புடவையை நீ எப்படி வாங்கலாம்? தூக்கி எறி!” என்று அவள் தூக்கி எறிவதற்கு முன்னால் தானே அதைத் தூக்கி எறிந்துவிட்டு உட்கார்ந்தார் வான மூனா,
சிரிப்பைக் கூட…. கொஞ்சம் சிக்கனமாகவே அவருக்காகச் செலவழித்து விட்டு ‘அவரும் ‘ நம்முடைய படத்தில் நடித்தவர்தானே? என்றாள் தீபா.
அட்சர லட்சம் பெறும் அந்த ‘நம்முடைய’ என்ற வார்த்தையைக் கேட்டதும் உச்சி குளிர்ந்த வான மூனா, “என்னமோ தெரியவில்லை, என்னுடைய படத்தில் நீ இது வரை நடிக்காவிட்டாலும் உன்னை என்னால் மறக்கவே முடியவில்லை!” என்று சொல்லிக் கொண்டே, “வாடா சுப்பையா, வாடா” என்று தன்னை நோக்கித் தட்டும் கையுமாக வந்து கொண்டிருந்த டிரைவரை உற்சாகத்துடன் வரவேற்று அவன் கையிலிருந்த தட்டைத் தானே வாங்கி ‘டீபா’யின் மேல் வைத்துவிட்டு “இதோபார், தீபா! இந்தத் தங்கக்கிண்ணத்திலிருக்கும் எண்ணையைத் தலையில் தேய்த்துக் கொண்டுதான் நாளைக்கு நீ தீபாவளி ஸ்நானம் செய்ய வேண்டும்; ஆமாம்!” என்றார் பெருமிதத்துடன்.
“ஏற்கனவே ஒன்பது பேர் இப்படி என்னை வேண்டிக் கொண்டிருக்கிறார்களே, நான் என்னத்தைச் செய்ய?” என்றாள் தீபா.
“என்ன, என்ன! தங்கக் கிண்ணத்தில் எண்ணையை வைத்தா?” என்றார் வான மூனா ஏமாற்றத்துடன்.
“ஆமாம், அதோ பாருங்கள்!” என்றாள் அவள், அலமாரியைச் சுட்டிக் காட்டி.
“அட, பாவிகளா! தீபாவளிப் பரிசுக்குப் புதுசா ஏதாவது ‘ஐடியா’ சொல்லுங்கள் என்றால், இதைச் சொல்லி என்னிடம் ஐந்நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு போய்விட்டார்களே!” என்று அலறினார் அவர்.
“இந்த ‘ஐடியா’வைக்கூடக் காசு கொடுத்துத்தான் வாங்கினீர்களா?” என்றாள் தீபா.
“ஆமாம், தீபா ஆமாம்; அதற்காகவாவது நாளைக்கு நீ இந்தக் கிண்ணத்திலிருக்கும் எண்ணெயைத் தலையில் தேய்த்துக் கொண்டு ஸ்நானம் செய்தால் எனக்கு எவ்வளவோ திருப்தியாயிருக்கும்!” என்றார் வானா மூனா, பரிதாபமாக.
“பொழுது விடியட்டும்; பார்க்கலாம்!” என்றாள் அவள், அந்தச் சமயம் அவரிடமிருந்து தப்புவதற்காக.
“பார்க்கலாம் என்று சொன்னாயே, அதுவே போதும்; பரம திருப்தி!” என்று அவளைப் பிரிய மனமில்லாமல் பிரிந்தார் அவர்.
மறுநாள் காலை ‘அடியார்களின்’ வேண்டுகோளுக்கு இணங்கி, அத்தனை கிண்ணங்களிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எண்ணெயைத் தொட்டுத் தலையில் வைத்துக் கொண்டு ஸ்நானம் செய்துவிட்டு மாடிக்கு வந்தாள் தீபா. அவள் வீட்டுக்கு எதிர்த்தாற் போலிருந்த பூந்தோட்டத்தில் வழக்கம் போல் வந்து பூப்பறித்துக் கொண்டிருந்தாள் பொன்னாயி. அவளைக் கண்டதும் ‘இன்றுகூட இவள் வேலைக்கு வந்திருக்கிறாளே! இவளுக்குத் தீபாவளி இல்லையா, என்ன?’ என்று தோன்றிற்று அவளுக்கு.
இந்தச் சமயத்தில் தோளில் பூக்குடலையுடனும் கையில் புதுப் புடவையுடனும் யாரோ ஒருவன் அங்கு வந்து, “இந்தாம்மா, ஐயா கொடுக்கச் சொன்னாரு!” என்று சொல்லிக் கொண்டே புடவையை அவளிடம் நீட்டினான்.
“புடவை இருக்கட்டும்; முதலில் நீ பூக்குடலையைப் பிடி” என்றாள் பொன்னாயி.
அவன் பிடித்தான்; பறித்த பூக்களை அதில் கொட்டி விட்டு, “நேற்றையக் கூலி எங்கே?” என்றாள் அவள் கம்பீரத்துடன்.
“அதையும் கொடுத்திருக்கிறார்!” என்று நாலணாவை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு “புடவை?” என்றான் அவன்.
“அவளுக்கென்று ஒருவன் வரும்போது அவன் அவளுக்குப் புடவை எடுத்துக் கொடுப்பானாம்; அதுவரை நீங்கள் அவளுக்கு வேலை மட்டும் கொடுத்தால் போதுமாம்; புடவை எடுத்துக் கொடுக்க வேண்டாமாம் என்று நான் சொன்னதாகப் போய்ச் சொல்!” என்றாள் அவள்.
“உன் இஷ்டம்!” என்று சொல்லிவிட்டு அவன் சென்றதும், “இஷ்டத்தில் தானே இருக்கிறது கஷ்டம்!” என்று சொல்லிக் கொண்டே, அடுத்தாற் போலிருந்த பலசரக்குக் கடைக்குச் சென்ற பொன்னாயி, உள்ளங் கையிலே ஓரணாவுக்கு எண்ணெய் வாங்கித் தலையில் வைத்துக் கொண்டாள். அரையணாவுக்குச் சிகைக்காய்ப் பொடியும் அரையணாவுக்கு வெற்றிலைப்பாக்கும் வாங்கிக்கொண்டு கிணற்றடிக்கு வந்தாள். சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே ‘தீபாவளி ஸ்தான’த்தை முடித்துவிட்டுத் தோய்ந்த புடவையில் பாதியைத் தோட்டத்து வேலியின்மேல் காயப் போட்டு விட்டுப் பாதியை இடுப்பிலே சுற்றிக்கொண்டு நின்றாள். ‘பாவம், அவளிடம் இருப்பதே ஒரே ஒரு புடவைதான் போலிருக்கிறது!’ என்று நினைத்த தீபாவுக்கு என்ன தோன்றிற்றோ என்னமோ, கூர்க்காவை விட்டு அவளைக் கூப்பிடச் சொன்னாள்.
அவன் வந்து “அம்மா உன்னைக் கூப்பிடறாங்க!” என்றதும், “பறித்த பூக்களைத்தான் கடைக்குக் கொடுத்தனுப்பி விட்டேனே, என்னிடம் பூ ஏது?” என்றாள் அவள்.
“இல்லேன்னா வந்து சொல்லேன்!” என்றான் அவன்.
“அதை நீயே சொல்லக் கூடாதா?” என்று அலுத்துக் கொண்டே வேலியின் மேல் போட்டிருந்த புடவையை எடுத்துத் தோளின் மேல் போட்டுக் கொண்டு அவள் அவனைத் தொடர்ந்தாள்.
அதற்குள் பட்டுப் புடவையும் கையுமாக வந்து வாசலில் நின்று கொண்டிருந்த தீபா “தீபாவளியும் அதுவுமாகப் புதுப்புடவை கட்டாமல் இருக்கலாமா? இந்தா, இதைக் கட்டிக்கொள்!” என்றாள்.
“என்னை மன்னியுங்கள், அம்மா! எந்த வேலையும் செய்யாமல் நான் யாரிடமும் எதையும் வாங்கிக் கொள்வதில்லை” என்றாள் பொன்னாயி.
– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.