குன்னாங் குன்னாங் குர்ர்ர்ர்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 10, 2016
பார்வையிட்டோர்: 12,590 
 

அலைபேசியில் நாம் என்னதான் விதவிதமான ரிங்டோன்கள் வைத்திருந்தாலும், சாவுச் செய்தியைத் தாங்கிவரும் அழைப்பு மணி, சங்கொலியென தனியாக உள்ளுணர்வுக்கு எச்சரிக்கையடித்தே ஒலிக்கும்போல!

அப்படித்தான் ஒலித்தது, தம்பியிடம் இருந்து வந்த அந்த அழைப்பு. இரவு 11 மணியை நெருங்கும் வேளை. சற்றே தயக்கத்துடன்தான் எடுத்தேன்.

என் குரலுக்குக் காத்திராமல் பதற்றமாகச் சொன்னான்… ”நம்ம குன்னாங்குர்ரு போய்ட்டான்டா.’

என் மௌனம் உணர்ந்தவனாகத் தொடர்ந்தான். ”நேத்துகூட சாக்கடைச் சண்டைனு தெருவையே அலறவெச்சுட்டு இருந்தான். அதுக்காக நீ உடனே கிளம்பி வந்துடாத. இப்பத்தான வந்துட்டுப்போன. சும்மா தகவல் சொல்லலாம்னுதான்!”

குன்னாங் குன்னாங் குர்ர்ர்ர்1

‘குன்னாங் குன்னாங் குர்ர்ர்ர்ர்ர்’ என யார் காதில் எப்போது கத்தப்போகிறான் என எவனுக்கும் தெரியாது என்பதால், அவன் பக்கத்திலேயே போக மாட்டார்கள் என் தெருக்காரர்கள். 50 வயது முரட்டு ஆள் அப்படிக் கத்தினால் தாங்குமா காது ஜவ்வு? அதை அறியாதவர்களும் அவன் அருகில் போக முடியாத அளவுக்குத்தான் அவன் தோற்றமும் இருக்கும். அவன் பைத்திய மனநிலையைச் சாதகமாக்கி 50 வயதுக்காரரை ‘அவன்… இவன்…’ என்று சொல்கிறேனே… இதுதான் அவன் நிலை.

கித்தான் சாக்குகளைக் கண்டால், விட மாட்டான். அதை எடுத்துக்கொண்டு ஓடி, கத்தரித்து பனியன்போல மாட்டிக்கொள்வான். ரெயின் கோட்போல சணல் சாக்கை தலையில் போத்திக்கொண்டு, அவனுடைய இரண்டு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்லும் அழகை, சரியாக காலை 9 மணிக்குப் பார்க்கலாம். மாட்டின் கொம்பில், அவனுடைய மதிய உணவுத் தூக்குச்சட்டி தொங்கும். வாலில் குஞ்சலம் கட்டிவிட்டிருப்பான். எங்கள் ஊரில் அந்தக் காலத்திலேயே பெர்முடாஸை அறிமுகப்படுத்தியவன்.

அதுபோலவே, கார்ப்பரேட் ஐ.டி கலாசாரத்தையும் அவன் அன்றே வெற்றிகரமாகச் செயல்படுத்தி இருந்தான். சிறிய அட்டையில், மாட்டின் பெயர் (நம்பர் 1 அல்லது 2. மாடுகள் அதிகம் சேர்ந்து, இந்த எம்ப்ளாயி நம்பர் இரண்டு இலக்கம் ஆகும் என்று நம்பினான்), ‘உரிமையாளர்’ என அவன் பெயர், விலாசம் எழுதி அதை மாட்டின் மணியில் கட்டிவிட்டிருப்பான். பழைய பேன்ட்களை பாத்திரக் கடைக்காரர்களிடம் போய் வாங்கி வந்து, அதை முட்டிக்கு சற்று மேல் வரை வெட்டி, டவுசர்போல் போட்டுக்கொண்டு, சில்லு சிதறியதால் குப்பையில் தூக்கிவீசப்பட்ட குளிர்கண்ணாடியை மாட்டிக்கொண்டு, மாடுகள் சகிதம் நடந்து போனான் என்றால், கம்பரின் ‘கோலம்காண் படலம்’ தோற்றுவிடும்.

‘பேங்க் ஆபீஸர்கூட இப்பிடி டாண்னு இருக்க முடியாதுடா!’ எனத் தெருவில் யாராவது சொல்கிறார்கள் என்றால், மிகச் சரியாக மாலை 6 மணிக்கு மேய்ச்சல் மாடுகளோடு திரும்புகிறான் என்று அர்த்தம். வெயில் காலங்களில் அரை அடி ஈச்சந்தட்டியை எங்கிருந்தாவது எடுத்துவந்து, நான்கு குச்சிகளை முட்டுக்குடுத்து, என்னென்னவோ செய்து மாட்டின் மீது கட்டிவிடுவான். ‘வெய்ய தாங்காதுப்பா பாவம்’ என்பான் அவனாகவே. அது மாட்டுக்கு மட்டும் பந்தல் போட்டதுபோல இருக்கும். கிட்டத்தட்ட நகரும் குடிசைபோல. வீட்டுக்கு வந்ததும் அந்தத் தட்டிக்குடையை அவிழ்த்துவைத்துவிட்டு, அவனின் சிறிய வீட்டின் முன் இருக்கும் வேப்ப மரத்தடியில் கட்டிவிடுவான். மரத்தின் அடியில் பட்டியக்கல் பதியப்பட்டிருக்கும். அங்கு நின்றுதான் குளிப்பான். பெரிதாக வளர்ந்த மரம் என்றாலும் அவனுக்கு ரெண்டு கப், மரத்துக்கு ஒரு கப் என ஊற்றிக்கொண்டிருப்பான். அந்தக் கிறுக்கனுக்கு, நாள் தவறாமல் நார் போட்டு முதுகு தேய்த்துவிடுவாள் அவன் மனைவி. நிறைய மஞ்சள் தேய்த்துக் குளித்த மங்கலமான முகத்தில், ஒரு ரூபாய் அளவுக்கு பொட்டு வைத்து நிற்கும் அந்த அம்மாவை, அப்போது மட்டும்தான் வெளியே பார்க்க முடியும்.

ஏழு… ஏழரை வாக்கில் தெருமுக்கில் இருக்கும் சைக்கிள் கடையில் நாங்கள் அமர்ந்திருக்க, மெள்ள அங்கு வருவான். பளிச்சென வெயிலில் காயப்போட்டிருந்த வேறு கித்தான் சாக்கை அணிந்திருப்பான். உரப்படி வாடை மெள்ளப் பரவும். எல்லோரும் காதுகளைப் பொத்திக்கொள்வோம். சிரித்துக்கொண்டே எங்களைக் கடந்துபோவான். சற்று நேரத்தில் எல்லாம் ‘குன்னாங் குன்னாங் குர்ர்ர்ர்’ என்ற சத்தம் தூரத்தில் இருந்து மெலிதாக ஒலிக்கும். எவன் காதையோ பதம் பார்த்திருக்கிறான் எனச் சிரித்துக்கொள்வோம்.

அவன் எவ்வளவுக்கு எவ்வளவு பேசாமல் மௌனமாக இருக்கிறானோ, அதற்கு நேர் எதிராக திடீரென சில நாட்களில் பேசித் தீர்ப்பான். பேச்சு என்றால் சாதாரணப் பேச்சு அல்ல. ‘அகர முதல எழுத்தெல்லாம்…’ என்று இழுத்து, ‘வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சம்… ஆஹா’ என்பான். அவன் சொல்லும் அந்த ‘ஆஹா’வில் உன்னதங்களை அனுபவித்த உணர்வு இருக்கும். அப்போது எல்லாம் அவன் பேச்சின் பைத்தியக் கிளர்ச்சிக்கு மயங்கி, ஒரு ஸ்டூலைப் போட்டு ஆளை மடக்கி உட்கார வைத்துவிடுவோம்.

”ஏன்ய்யா குர்ரு… அந்தக் காலத்துலயே ஹீரோகணக்கா அத்தையைத் தூக்கிட்டு வந்து புரட்சிக் கல்யாணம் பண்ண ஆளாம்ல நீயி?”

இந்தக் கேள்விக்கு அவன் மனநிலையைப் பொறுத்து பதில் வரும்… ரசனையாக.

”அட ஏனப்பா என்னை லந்து பண்றீக? ஆனாலும், கெனா கண்டதுபோல இருக்குய்யா. எங்க அப்பாரு கெட மாடுகளை ஓட்டிக்கிட்டு ஊர் ஊராப் போவாரு. அப்ப நான் இந்தா இத்தத்தண்டி ஆளா இருப்பேன். அவருகூடயே போவேன். மீசையை முறுக்கிட்டுத் தொடையை ஒரு தட்டுத் தட்டினேன்டா, ஒரு பய பக்கத்துல வர முடியாது. சும்மா கிடுங்குனு கெடக்கும் உடம்பு. ஒரு தடக்க அவுக ஊர்ல கெட மாடு போட்டிருந்தோம். ரவைக்குப் பொழுதுபோகலைன்டு மந்தைப் பக்கம் போனேன் பாரு. இருட்டுல இருந்து சத்தமான சத்தம்… முக்குது மொனகுது!”

‘ம்ம்ம்’ கொட்டவில்லை என்றால், எழுந்து போய்விடுவான். அதற்காக கண்ட இடத்தில் கொட்டக் கூடாது. அவன் அதற்கான அவகாசம் கொடுக்கும்போது, சரியாக ‘ம்ம்ம்’ கொட்ட வேண்டும். கதைசொல்லிகளின் ஊக்கம் அந்த ‘ம்ம்ம்’தான் என்பதை நிரூபிப்பான்.

”ம்ம்ம்…”

”சத்தம், பாலத்துக்கு அடில இருந்து வருது. என்ன ஏதுன்டு பார்ப்போம்னு குதிச்சேன். பார்த்தா, குத்துயுரும் கொலையுருமாக் கெடக்கா. அவ இடுப்புல இருந்து ஒழுகுற ரத்தம் இருட்லயும் நல்லாத் தெரியுது!”

”ம்ம்ம்…”

”பச்ச ரத்தத்தோட பிசுபிசுப்ப மனுச உடல்ல தொட்டுப் பாக்குறது கொடுமைடா பசங்களா… ஆகாதுடா சாமி… ‘என்னாடியம்மா ஆச்சு?’ன்றேன்!”

”ம்ம்ம்…”

”’ஒருத்தன்னு சொல்லிக் கூட்டுவந்துட்டு, மலமாடு கெணக்கா ஆறேழு கஞ்சா கிராக்கிக இப்பிடிப் பண்ணிப்புட்டு, காசும் குடுக்காமப் போய்ட்டானுக. **** பயலுக…’னு முக்கி மொனகிப் பேசுறா.”

ஒவ்வொரு முறையும் கூட்டத்தில் ஒருவருக்கு இந்த நிகழ்வு அதிர்வைத் தரும்.

‘போடி எடுபட்டவளே. வவுத்துப் பொழப்புக்கு இதத்தானா செய்வாக பொம்பள? நீ சாணி அள்ளுவியா… சொல்லு? கூட்டிப்போறேன்’னு சொன்னனோ இல்லையோ, படக்குனு நிமிர்ந்து பாத்தா பாரு ஒரு பார்வை சென்மத் துக்கும் மறக்காது… கூட்டிப் போனேன். உடம்பயே குடுத்தவ, வேலைன்டு வந்துட்டா உசுரக் குடுக்க மாட்டாளா? அப்பிடி வேலை பார்த்தா. ஆனா, அவ தொழில் பண்ணவன்டு தெரிஞ்சு எங்கப்பாரு எதிர்த்தாரு. ‘என்ன ஆளுகடா?’னு கேட்டாரு. ‘பொம்பள சாதிய்யா’ன்டேன். ‘கட்டுனா கொல்லுவேன்டா’னாரு. நான் கேக்கலயே. நம்ம மனசைவிடவாடா ஒரு ஜமீனு? மனசுக்குப் பிடிக்கலைன்டா ‘அப்பன் ஆத்தாவுக்குப் பிடிக்கலைன்டு’ சால்ஜாப்பு சொல்லிக் கழட்டிவிடுற காவாளிப் பயலா நானு? கண்ணாலம் கட்டினேன். இந்தா ஆகிப்போச்சு ஆயுசு… மகராசியா இருக்காளா… இல்லியா?”

”ம்ம்ம். அப்புறம் எப்பிடிய்யா இப்பிடி ஆன?”

”எப்பிடி?”

குன்னாங் குன்னாங் குர்ர்ர்ர்2

என்ன பதில் சொல்ல முடியும்? ‘பைத்தியமாக எப்படி ஆனாய்?’ என்று ஒரு பைத்தியத்திடம் கேட்பது அவ்வளவு எளிதானது அல்ல. எனவே, அப்படியே விட்டுவிடுவோம்.

எல்லாம் அந்த அரை மணி, ஒரு மணி நேரம்தான். சட்சட்டென மாறிக்கொண்டே இருக்கும் அவன் மனநிலை. இன்ன விதமானவன் என்று அவனை முடிவுசெய்ய முடியாத தன்மை கொண்டவன்.

குழாயடி குடத்தில் தண்ணீர் நிரம்பியதும், அவன் உடலில் இருந்து அரை அடி முன்னால் தள்ளி அந்தக் குடத்தைப் பிடித்துக்கொண்டு சற்றே முன்னோக்கி வளைந்து, திடுதிடுவென ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு முன்னர் வந்து, இறக்கிவைக்காமல் தடால் எனப் போட்டுவிடுவான். குடம் உடைந்துபோகும். ‘சூடா இருக்குப்பா தண்ணி’ என்பான் கையை உதறிக்கொண்டே!

அவன் தெருவில் எங்கு நின்றாலும் அங்கிருக்கும் தெரு முக்கியஸ்தர்கள் அவனை விரட்டிவிடுவார்கள், காதைப் பொத்திக்கொண்டே. ‘கிறுக்குப்பயலே… போட்டேன்னா ஒண்ணு… போறியா இல்லியாடா’ – கையில் இருக்கும் குச்சியை ஆட்டி, அடிப்பதுபோல் பாவனையில் அவர்கள் அதட்டும் வீர வசனத்தைக் கேட்டு ஓடுவான். பாவமாக இருக்கும்.

ஒருமுறை போஸ்ட் மாஸ்டர் வரதராஜன் வீட்டின் முன் போலீஸ் ஜீப். தெரு ஆட்கள் பதறினோம். ‘ஆபீஸர் வீடு’ என்றே எங்களால் அழைக்கப்பட்ட வீட்டில் இருந்து, வரதராஜன் இறுகிய முகத்துடன் வெளிப்பட்டார்.

சட்டென விஷயம் பரவியது. அதாவது அவரின் மகள் யாரையோ காதலித்திருக்கிறாள். இவர் சம்மதிக்கவில்லை என்றதும், ஸ்டேஷனில் வைத்து திருமணம் செய்துகொண்டுவிட்டாளாம். சமரசம் பேச வந்த இன்ஸ்பெக்டரிடமும் ஊர்க்காரர்களிடமும் தன் நிலையை விளக்கும்விதமாக, தடால் என ஒரு வாளித் தண்ணீரை எடுத்து நடுவாசலில் நின்று தலையில் ஊற்றிக்கொண்டு உள்ளே போய்விட்டார். எங்களுக்கோ… ‘நம்ம ஏரியா பொண்ணை இன்னோர் ஏரியாக்காரன் உஷார் பண்ணிட்டானே…’ என்ற வெறுப்பு ஒருபுறம்; ‘ச்சே… எப்பேர்ப்பட்ட பெரிய மனிதர் இப்படித் தலை குனிய வேண்டியதாகிவிட்டதே’ என்ற பரிதாபம் மறுபுறம்.

குன்னாங் குன்னாங் குர் என்ன செய்தான் தெரியுமா? ஒரே நொடிதான். எங்கோ ஓடியவன் பனை ஓலையை மடக்கி மடக்கி, எல்லோர் கையிலும் திணித்து, பதநீரை அதில் ஊற்றிக்கொடுத்துக்கொண்டே, ‘குன்னாங் குன்ன்னாங் குர்ர்ர்ர்’ எனக் கத்திவிட்டு, ‘நம்ம தெரு பொம்பள பிள்ளைக்குக் கண்ணாலம்ப்பா’ என்று எல்லோரையும் மகிழ்ச்சியான மனநிலைக்கு மாற்றிவிட்டான். அதன் பிறகு தெருக்காரர்கள் மெள்ள மெள்ளப் பேசி, அன்று இரவில் ஆபீஸரைச் சமாதானப்படுத்தி புதுமணத் தம்பதியை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.

மறுநாள் வீட்டு அளவில் திருமணம் என ஆபீஸர் முடிக்க, எல்லோரும் அவர்கள் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். வெளியே அந்தப் புது மாப்பிள்ளை குன்னாங் குன்னா குர்ரின் தோற்றம் பார்த்து, அவனை உள்ளே வர அனுமதிக்காமல் கத்தி வெளியேற்றிக்கொண்டிருந்தார். பயந்துபோன குன்னாங் குன்னாங் குர், வழக்கம்போல் முணுமுணுத்துக்கொண்டே போவதைப் பார்க்கும்போதுகூடத் தோணவில்லை எங்களுக்கு… அவனை உள்ளே அழைத்துப்போக வேண்டும் என்று!

ஒருநாள் தெருவே திடீரென அல்லோலகல்லோலப்பட்டது. பெரிய ராட்சத சிமென்ட் கல் அரவை மெஷினும், ரோடு ரோலரும் தெருவை அடைத்துக்கொண்டு நின்றன.

பஞ்சாயத்து போர்டில் இருந்து சிலரும், இரண்டு அதிகாரிகளும் வந்து தெருவை அளப்பதும் பார்ப்பதுமாக இருந்தார்கள். முக்கியஸ்தர்கள் சட்டென சட்டை பட்டனை மாட்டிக்கொண்டே ஒவ்வொருவராக அருகில் சென்றனர். நாங்களும் அவர்களின் வட்டத்துக்கு அடுத்ததாக அரை வட்டத்தில் நின்றோம்.

”தார் ரோடு போட சாங்ஷன் ஆயிருச்சு. செம்மண் புழுதிப் பஞ்சாயத்து இனி இருக்காது. அதான் பார்த்துட்டு இருக்கோம்!”

கருகருவென அடர்த்தியான தார் ரோடு என நினைக்கும்போதே, தார் வாசமும் மகிழ்ச்சியும் குடிகொண்டுவிட்டது எங்களுக்கு.

”அதெல்லாம் வேணாம்ப்பா. கொழந்தைங்க வெளையாடுற தெருவா இல்லியா? முட்டி பேந்துபோகும் பேந்து…” – நாகுச்சாமி மெள்ள குரல் எழுப்ப, உடனே அதிகாரி, ”யாருப்பா அது? நாகு… உன்கிட்ட அனுமதி வாங்க வரலை. தகவல் சொல்றோம். கவர்மென்ட் ஆர்டர்யா இது!” என்று அதட்டல் போட்டார்.

நாகு சட்டெனக் கிளம்பிவிட்டார். மற்ற முக்கியஸ்தர்களான கிருஷ்ணமூர்த்தி மற்றும் வரதராஜன் ஆகியோரிடம் அதிகாரிகள் ஏதோ பேசினார்கள். பூம்பூம் மாடுபோல இவர்கள் இருவரும் நன்றாகத் தலையசைப்பதும், குனிவதும், நிமிர்வதும், அத்தனை பற்களையும் காட்டிச் சிரிப்பதும் தெரிந்தது.

கிருஷ்ணமூர்த்தி மற்றும் வரதராஜன் வீட்டின் முன்னர் இருந்த அசோக, நெட்டுலிங்க மரங்களைக் கடகடவென வெட்டிக்கொண்டிருந்தார்கள் ஆட்கள். நாகுவின் வீட்டின் முன்பகுதியில் கொஞ்சம் ஆக்கிரமிப்பு என்பதால், அதையும் பெயர்த்து எடுத்துவிட்டிருந்தார்கள். டேப்பை எடுத்துக்கொண்டு அவர்கள் அளக்க அளக்க, எல்லோரும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு காவல் கிடந்தார்கள். பத்திரம், அடிப்பத்திரம், சிட்டா அடங்கல்… எனத் தேட ஆரம்பித்தார்கள். அரை நாளில் தெருவே மாறிப்போய் இருந்தது. ‘சம்மர் கிராப்’ என்ற பெயரில் கராச்சா மண்டையாக அடித்துவிடுவார்களே… அதுபோல ஆகிவிட்டது.

அந்திவேளையில் தெரு எப்போதும் பொன்நிற அழகோடு இருக்கும். அன்று ஏனோ, சோபை இழந்து இருள் கவியத் தொடங்கி இருந்தது.

குன்னாங் குன்னாங் குர்ரின் வீட்டின் முன், ஆட்கள் தங்கள் கோடரி இத்தியாதிகளை இறக்கி, மரத்தை ஒருவன் தட்டிப்பார்த்தபோது, மாடுகள் சகிதம் வந்த குன்னாங் குன்னாங் குர், அவனிடம் நெருங்கி காதில் பெருங்குரலெடுத்துக் கத்தினான்… ”குன்னாங்… குன்னாங்… குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!”

காதைப் பொத்திக்கொண்டு ஓடினான் அந்த ஆள். அவனுடன் இருந்த மற்றவர்கள் என்னமோ ஏதோ என்று நினைத்து, இவனை அடித்துத் தள்ளிவிட்டார்கள். நாங்கள் உடனே அங்கு குழும, தெருவின் முக்கியஸ்தர்கள், ‘அவன் கிறுக்குப் பயலப்பா… விடுங்க’ என்று சொல்லி விலக்கிவிட்டார்கள். குன்னாங் குர்ரிடம், ‘டேய்ய்… ரோடு போட வந்துருக்காங்கடா. அந்தப் பக்கம் போ’ என வழக்கம்போல் குச்சியைக் காட்ட, திமிறி எழுந்தவன், மாடு கட்டும் சங்கிலியை கையில் எடுத்து எல்லோரையும் சகட்டுமேனிக்கு விரட்டத் தொடங்கினான். ஒருவனுக்கு விழுந்த அடியில் முதுகில் சதை பிய்ந்தது.

இரவு முழுவதும் மரத்துக்கு அடியில் அமர்ந்திருந்தான். அதிகாலையில் எங்கிருந்தோ வைக்கோலை எடுத்துவந்தவன் மாடுகளுக்குப் போட்டுவிட்டு, மரத்தைவிட்டு அகலவில்லை. ஊர்த் தலைவர், தெருக்காரர்கள்… என யார் யாரோ முயன்றும் அவன் மூர்க்கம் அகலவே இல்லை.

‘பைத்தியக்காரன்… பைத்தியக்காரன்… கொல்லப்போறேன் பாரு’ என்ற வரதராஜனைப் பார்த்துச் சிரிசிரியெனச் சிரித்தான். அவர் வீட்டு வாசலில் வெட்டப்பட்ட நெட்டுலிங்க மரங்களின் துண்டுகள் சிதறிக்கிடந்தன.

சில வாரங்களுக்குப் பிறகு தெருவில் அற்புதமான தார் ரோடு போடப்பட்டு, மெத்மெத்தென இருந்தது. குன்னாங் குன்னாங் குர்ரின் வீட்டுக்கு முன்னர் லேசாக வளைந்து கொடுத்திருந்தது. மரமும் தெருவை நோக்கி லேசாக வளைந்து அழகாக இருந்தது.

நல்ல மழையில் நனைந்துகொண்டே மதுரையை அடைந்திருந்தது பேருந்து. வழியில் இருக்கும் ஊர் நிறுத்தத்தில் இறங்கி தெருவுக்குள் நுழைந்ததும், குன்னாங் குன்னாங் குர்ரின் வீட்டு வாசலில் பந்தல் போடப்பட்டு சாவு டியூப்லைட் கட்டி இருந்தார்கள்.

”எவனோ பைத்தியக்காரன் செத்துப்போயிட்டான்னு அங்கே இருந்து வந்தியாடா?” -காபி டம்ளரை கையில் கொடுத்துவிட்டு அம்மா கேட்க, பதில் சொல்லாமல் வெளியே வந்தேன்.

இத்தனை வருடங்களில் தார் ரோடு சிமென்ட் ரோடாக மாறி இருந்தது. ரோட்டை ஒட்டி, புதிதாக சாக்கடை கட்டி முடித்திருந்தார்கள். சிமென்ட்டின் ஈர வாசம், நூல் பிடித்ததுபோல் நேராகச் சென்ற சாக்கடை, குன்னாங் குன்னாங் குர்ரின் மரத்துக்கு அருகில் வளைந்து, அரை வட்டம் அடித்து பின் தெரு வரை நீண்டு ஓடியது.

குன்னாங் குன்னாங் குர்ரின் சாவுக்குக் கட்டப்பட்ட டியூப்லைட் வெளிச்சத்தில், மழைத் துளிகள் மரத்தில் இருந்து சொட்டிக்கொண்டே இருந்தன!

– செப்டம்பர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *