குதிரை வால்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 6, 2021
பார்வையிட்டோர்: 3,260 
 

அன்று அந்த உடன் வேலை செய்யும் மலாய் நண்பனிடம் உதவி கேட்காமல் போனதானது இப்போது எண்ணி வேதனை படவேண்டியதாகி விட்டது. ‘பர்சை’ எத்தனையோ தடவை வீட்டில் விட்டு விட்டு வந்த போதெல்லாம் மனம் கோணாது சாப்பாட்டு நேரத்தில் பணம் கொடுத்து உதவி செய்திருக்கிறான். முத்துசாமியும் மிக நாணயமாக அவனிடம் மறுநாளே பணத்தைக் கொடுத்து விடுவார். இப்படி இவர் மறதி மன்னனாக இருந்தாலும் அக்மால் என பெயர் கொண்ட அவன் ஒரு நாள் கூட முத்துசாமியிடம் தன் பணப்பையை மறந்து விட்டு விட்டு வந்ததாகப் பணம் கேட்டதே இல்லை. அப்படிப்பட்டவனிடம் இந்த உதவியைக் கேட்பது உசிதமாகப் படவில்லை. மறதி..! நினைக்கும்போது கொஞ்சமாக நெஞ்சின் ஒரு மூலையில் சிறியதாக ஒரு வலி. கொஞ்சம் பணமா..? கிட்டத்தட்ட முப்பத்தைந்தாயிரம் ரிங்கிட். அக்மாலிடம் பத்தோ இருபதோ கடன் வாங்கி போகிற வழியில் தங்கராசுவிடம் கொடுத்து விட்டிருந்தால் இப்போது உரிமையோடும் நிம்மதியாகவும் இருக்கலாம்.

“எவ்வளவு நேரந்தான் இப்படியே யோசனை செஞ்சுகிட்டே இருப்பீங்க… நமக்கு இருக்கிற பண நெருக்கடிக்கு… எவ்வளவோ உதவியா இருக்கும். தங்கராசு அண்ணனுக்கு ஒரு ‘போன்’ போட்டு கேளுங்கண்ணு சொன்னா… எதுவுமே பேசாம உக்கார்ந்திருக்கீங்களே..!”

மனைவி சரசுவின் முணுமுணுப்பைத் தாங்க முடியாமல் காதைப் பொத்திக் கொள்ளலாமா அல்லது விருட்டென எழுந்து வெளியில் சென்று விடலாமா..! முத்துசாமியால் அப்படிச் செய்ய முடியவில்லை… பணம் ஒரு பக்கம். மறதியால் ஏற்பட்ட மனவேதனை மறுபக்கம். இதற்கு இடையே மனைவியின் நச்சரிப்பு. கழுத்தில் கிடக்கும் சங்கிலியை அடிக்கடி கழற்றிக் கொடுப்பவளல்லவா..!

“அவசரப் படாத சரசு, தங்கராசு ரொம்பவும் நல்லவர். நாணயஸ்தவருங்கூட. பொறுமையா இருப்போம். இப்பதான… மணி எட்டு. அவரே போன் பண்ணிச் சொல்லுவார். பாரேன். அவரே சொன்னா மரியாதையா இருக்கும். இல்லன்னா. நாம பணத்துக்காக அவர நம்பாம பறக்குறோம்னு நெனச்சுக்குவார். நம்பாம அவசரக் குடுக்க மாதிரி போன் பண்றான்னு நெனக்க மாட்டரா..? நீயே சொல்லு சரசு..!”இப்படி முத்துசாமியின் வாய் சொல்லியதே தவிர, காது மட்டும் தொலை பேசி ஒலிக்காதா என ஏங்கித் தவித்தது. அது வைத்த இடத்தில் அமைதியாக உட்கார்ந்த வாக்கில் முத்துசாமியின் மனப் படபடப்பை ரசித்துக்கொண்டிருந்தது.

“முத்துசாமி… ‘கிரிக்’ன்ற சின்ன டவுனுக்குப் பக்கத்து கம்போங்ல ஒரு ‘போமோ’ மரத்தில வெத்து கடுதாசிய வச்சி தேய்க்கச் சொல்றாராம்… அதிசயத்த பாருங்க… நாலு நெம்பரும் அப்படியே தெரியுதாம்… அப்படிப்போன பலருக்கு நெம்பரு பெரிய அளவுல பட்டு இன்னைக்கு காடி, வீடு வாங்கி…குடும்பமே சொகாம்மா இருக்காங்களாம்…! நானும் ஒரு தடவக்கி பல தடவ போயிருக்கன்… ஒருக்கா சின்னதா நெம்பரு கெடைச்சிருக்கு… நம்மால பெருசா போட முடியல… பெரிய தொக போட்டா பெருசா கெடைக்கும்…!”

நெம்பர் நண்பர் ஒருவர் முத்துசாமியிடம் இப்படிச் சொன்னபோது நெஞ்சுக்குள் ஒரு நெருடல். ‘நாமும் ஒருக்கா போயி மரத்துல தேச்சி நம்ம ‘லக்க’ சோதிச்சிடுவமா..! இதுல கொஞ்சம் நஞ்சமா விட்டுருக்கோம். ஆனாலும் விட்டதை ஒரு பிடிக்க மரம் என்ன ஆகாயத்த போய் தேக்கச் சொன்னா ஏணி போட்டு ஏறிக்கூட முயற்சி பண்ணிப் புடலாம்…’ அப்போதிருந்த மன நிலையில் அப்படித்தான் நினைத்துக் கொண்டார் முத்துசாமி.

‘பேரா மாநிலத்தில தைப்பிங் நகராத்தில ஒரு ‘பன்டி’ கோயிலு இருக்கு. அங்க நம்ம ஆளுங்கமட்டும் இல்ல சீனவங்கவங்கூட நம்பிகையோட போறங்கலாம்… அந்த கோயில்ல சாயங்கால பூச நேரத்தில மணி அடிச்சவுடனே அங்கன காட்டில கெடக்கற பன்டிங்க பட படையா எறங்கி வருதுங்கலாம்… அதுங்க கூட்டாளிங்க மாதிரி நம்ம மேலய தேச்சிக்கிட்டு போவுதுங்கலாம்… அதுல ஒரு பன்டி மேல நோட்ட வச்சு தேச்சுட்டு அந்த நோட்ட எடுத்துட்டுப் போயி நெம்பர் எடுத்தா நிச்சயமா ஏறுதாம்…!’

இப்படி நெம்பர் கணிதத்தில் விற்பன்னரான ஒரு நண்பர் சொல்லப்போய் அவரும் கூட்டமாக பேருந்து ஏறிப்போய் நூறு ரிங்கிட் நோட்டுத் தாளை அங்கு வந்த பெரிய பன்றிகளில் ஒன்றைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து தேய்த்து வந்ததை ஒரே நெம்பரில் போட்டார். அன்றைக்கு வெளியான நெம்பரில் அவருடைய எண் ‘கொன்சலேசன்’ வரிசையில் நான்கில் மூன்று எண் ஏறி ஒன்று திரும்பிப் போய்விட்டது. ‘பன்றி மேல் சரியாகத் தேய்க்காமல் விட்டு விட்டோமோ… இன்னும் அழுத்தித் தேய்த்திருக்க வேண்டும் போலிருக்கிறது..!’ என தனக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டார்.

‘ஒரு ரேசுக்கு நூறு ரிங்கிட். வாரத்துல நாலு ரேசு. அப்படினா நாநூறு. ஒரு மாசத்துக்கு அப்படியிப்படின்னு பாத்தாலும் ஆயிரத்து ஐநூறு ரிங்கிட். ஒரு வருசத்துக்கு, அத பன்னண்டால பெருக்கினா பதினெட்டாயிரம் ஆச்சேப்பா… அத ஒரு பெட்டியிலபோட்டு சேமிச்சிருந்தா ஒரு பெரிய தொக நெம்பர்ல பட்ட மாதிரியில்ல இருக்கும்…!’

சக நண்பர் ஒருவர் இப்படி அறிவான ஆலோசனை சொல்லப்போய் கடுப்பெடுத்துப் போன முத்துசாமி அவரிடம் பேசாமலே விட்டுவிட்டார். ‘இவன் என்ன நமக்கு புத்தி சொல்றது..!’

ஒவ்வொரு புதன், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 7 மணிக்கெல்லாம் குளித்து முழுகி பழுப்பாறிப்போன பணியன் ஒன்றை எடுத்து மாட்டிக்கொண்டு பழைய ‘ஹோண்டா செவெண்டி’யில் ஏறிப்போய் அங்கு நெம்பர் ரிசல்டுக்காக சக நெம்பர் தோழர்களோடு ‘சீனாதே’ குடித்து ஊர் கதையெல்லாம் அலசிக்கொண்டு சீனர் ரெஸ்டாரெண்டில் காத்திருந்து… நெம்பர் தாள் வந்தவுடன் பரீட்சை எழுதிய மாணவன் போல் நண்பர் கையிலிருந்து பறிக்காத குறையாக… நெம்பர் ஏறாதபோது மனதுக்குள் கொஞ்சம் என்ன ரொம்பவே வருத்தப்பட்டு… அன்றைக்கு யாருக்காவவது பட்டிருந்தால் அவர்கள் மேல் கொஞ்சம் பொறாமைப்பட்டு அன்றைய அதிர்ஸ்டசாலி பெருந்தன்மையாக வாங்கிக் கொடுக்கும் ‘பீர்’குடித்து அது இறங்கியவுடன் எல்லாவற்றையும் மறந்து வீட்டுக்கு வந்து அடுத்த நாளைக்கு எங்கேயிருந்து கடன் புரட்டலாம் என மண்டை காய்ந்து…

‘சே இந்தப் பழம்புளிக்கும்..!’ என சின்ன வயசில் படித்த நரிக்கதை போல் நினைப்பது உண்டுதான். ‘விட்டத ஒரு நாளைக்கி புடிச்சி வாங்காமலா போவேன்… பெருசா ஒரு நாள் அடிக்கத்தான் போவுது… பாசாக்கடையில இருவதாயிரம் சொச்சத்துக்கு வச்சி மாசா மாசம் வட்டி குடுத்து முழுகாம காப்பாத்திகிட்டு வர்ற நகய சரசுக்கு மூட்டு குடுக்கத்தான் போறன்… அங்க இங்க வாங்கன கடன் முப்பதாயிரம் தேறுமா… அதுக்குதான் ஒரே நெம்பர 30 ரிங்கிட்டுக்கும் மற்றத சில்லற சில்லறையா 70 ரிங்கிட்டுக்கும் போட்டுக்கிட்டு வர்றதா இருக்கு…!’

இப்படி மனக்கணக்கு போட்டே பல வருடங்களைக் கடத்தி விட்டார் முத்துசாமி. அவருக்கு நற்பேறுதான் இன்னும் கூடி வரவில்லை. அதற்குக் கூட கிள்ளான் நகரம் லிட்டல் இந்தியா வரை சென்றுஅங்கிருந்த ஓரு சாமியாரைப் பார்த்து குளிகை, தாயத்து எல்லாம் கட்டிக் கொண்டிருக்கிறார். பார்க்காத மலாய் மந்திரவாதி இல்லை. எல்லா மரத்தடி சாமிகளையும் சாமியார்களையும் அத்துப்படியானதோடு பல சின்னச்சின்ன கோயில்களுக்கு கிடாய்களெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். பலன்தான் இன்னும் சுழியத்திலேயே இருக்கிறது.

இப்படியிருக்கும்போதுதான் இன்னொன்றையும் செய்து பார்த்தார் முத்துசாமி. வழக்கமாக நெம்பர் கடையில் வரிசையில் நின்று எடுக்கும் முறையை மாற்றி தங்கராசுவிடம் எடுக்க ஆரம்பித்தார். அவரிடம் எடுத்தவர்கள் பலருக்கு நெம்பர் பட்டதாக கேள்விப்பட்டிருந்தார்.

ஓர் ஒதுக்குப் புறத்தில் புறம்போக்கு நிலத்தில் தகர தடுப்புப் போட்டு ‘பீசி புரோ’ எனப்படும் பழை இரும்பு, இரண்டாம்தர தட்டு முட்டு சாமான்கள் வாங்கி விற்கும் கடை வைத்திருந்தார் தங்கராசு. அவர் பிழைக்கத் தெரிந்த மனிதர். பக்கத் தொழிலாக கள்ள நெம்பர் எழுதும் தொழிலையும் செய்து வந்தார். பழைய இரண்டாம் தர பொருள் விற்பனையைவிட கள்ள நெம்பர் எழுதும் தொழிலில் அவர் அதிக வருவாய் ஈட்டுவதாக முத்துசாமி கேள்விப்பட்டிருந்தார். தங்கராசு கறார் பேர்வழி. கடன் வைப்பது மட்டும் முடியாது. ஒரிரு தடைவை அப்படி எழுதி விட்டு மறுநாளே கொடுத்து விடுவார் முத்துசாமி. அதிலும் அவர் தொடர்ந்து வாடிக்கையாக எழுதும் நெம்பரை எழுதி வைத்து விடுவார் தங்கராசு. அப்படிக் கொடுத்து விட்டாலும்,‘ காசு இல்லாதவனெல்லாம் எல்லாம் நெம்பர் எடுக்க வந்துடறானுங்கப்பா..!’ என மற்றவர்களைப் பற்றிச் சொல்லும்போது முத்துசாமியையும் சேர்த்துக் குத்துவதாக இருக்கும்.

காலையில்‘கண்டிராக்ட்’ வேலைக்குப் போகும்போது பர்சை மறந்து விட்டுச்சென்றதும் தங்கராசுவிடம் வழக்கமாக பத்து ரிங்கிட்டுக்கு எழுதும்ஒரு நெம்பர் ‘ஏ’ நிலையில் ஏறியதும்தான் அவரை இப்படி அலைக்கழித்துக்கொண்டிருந்தது.

‘நாணயமான மனுசன். நான் பணம் கொடுக்காமப் போயிட்டாலும் நிச்சயமாக எழுதி வச்சிருப்பார். இன்னைக்கு நேத்தா அந்த நெம்பர எழுதுறன். 3 வருசமா விடாம எழுதுறேன்இல்ல. அவருக்கு நல்லாவே தெரியும். எழுதி இருப்பாரு. மனதைத் தேற்றிக்கொண்டு தனக்குத் தானே நம்பிக்கை ஊட்டிக் கொண்டார்.

அப்போதுதான் சரசுவின் சொற்கள் தேனீக்களாகக் கொட்டிக் கொண்டிருந்தன.

“நாஞ் சொல்றத எங்க காதுல வாங்குறீங்க… அவருக்கு ஒரு ‘போன்’ போட்டா உங்க மரியாத கொறஞ்சா போயிடும்..? இப்படியே கல்லுப்பிள்ளையார் மாதிரி இருந்தா உருப்பட்ட மாதிரிதான்..!” என துணைவி தன் மன எரிவை வார்த்தையால் கொட்டி விட்ட போது, மிகச்சரியாகத் தொலை பேசி மணி ஒலித்தது..

‘பாத்தியா, அப்பிடி அவசரப்பட்டியே தங்கராசுதான் கூப்புடுரார்… நீயே போயி எடு…’

முத்துசாமி தான் சொல்லவேண்டியதை முகக் குறிப்பாலேயே கூறி விட்டு வதனத்தில் ஒரு அலட்சிய முறுவலை வரவழைத்துக் கொண்டு தொலைபேசியை எடுக்கும்படி மனைவிக்குத் தன் கண்ணாலேயே கட்டளையிட்டார்.

“என்ன, ரெண்டாயிரமா, இப்ப அவ்ளோ பெரிய தொகைக்கு எங்க போவன்… நானே இந்த மாசம் முழுகுற நகய எப்படி மூட்டறதுன்னு தவிச்சிக்கின்னு இருக்கன்… ஏங்கிட்டப்போயி அவ்ளோ பெரிய தொக கேக்கிறியே… வேற எங்கியாச்சிலும் கேட்டுப் பாரேன்..!”

யாருக்கோ பதில் சொல்லிய மனைவி பட்டென்று தொலைபேசி கேட்பானை வைத்து விட்டுக் குசுனிக்குள் நுழைந்து கொண்டதானது முத்துசாமியின் முறுவல் பொசுங்கிப் போனதற்குக் காரணமாயிருந்தது.

‘கேட்டு விடுவோமா…? கேட்டால் என்ன நினைத்துக் கொள்ளுவார் தங்கராசு..!’ அந்த எண்ணம் மனத்தை பாறையாக அழுத்திக் கொண்டிருந்தது. இறுதியாக ஒரு முடிவெல்லைக்கு வந்தராக,‘யதார்த்தமாக தொடர்பு கொள்வதாக கூறிக்கொள்ளுவேமே’ இப்படியும் சொல்லிக்கொள்ளலாம். தங்கராசுவின் கைப்பேசிக்குத் தொடர்பு கொண்டார். எப்போதும் இல்லாத படபடப்பு அந்தக் காத்திருத்தலில் இருந்தது. நெற்றி யெல்லாம் கொஞ்சமாக வியர்த்துப் போயிருந்தது.

‘உங்கள் எண்கள் பதிவு செய்து கொள்ளப்பட்டது. தொடர்பு தற்காலிகமாக அணைக்கப் பட்டிருக்கிறது…’ என மலாய் மொழியில் மறுமொழி வந்தது. அப்போதுதான் அவருக்கும்,‘இரவு ஏழு மணிக்கு மேல கைப்பேசிய,‘ஓப்’ செஞ்சிடுவேன்… தொல்ல தாங்கமுடியலேப்பா… கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்னா அப்பக்கூட கூப்ட்டு அறுக்கறானுங்கப்பா..!’ முன்பொரு நாள் தங்கராசு அலுத்துக் கொண்டது நினைவுக்குள் ஊடாடியது.

அப்போது, சுவர்க்கடிகாரம் மணி பத்தைக் காட்டியது. ‘எதற்கும் வீட்டுக்குத் தொடர்பு கொள்ளலாமா..?’ தனக்குள் வினவிக் கொண்டு, ‘நான் எப்பவுமே பத்துக்கு முன்னாலயே படுத்துடுவேன்பா… அப்பக்கூட சில புரியாத சென்மங்க கூப்புட்டு தொலைக்குறானுங்க…’ என தங்கராசு ஒரு நாள் என்ன பல நாட்கள் அலுத்துச் சொன்ன வார்த்தைகள் நினைவுப் பதிவுக்குள்ளிருந்து வெளிவந்தது.

கொஞ்சம் கோவம் ஏற்பட்டால் அதன் வெளிப்பாடாக விரைவாகவே படுக்கைக்குச் சென்று விடுவதை ஓர் ஆயுதமாக கையில் வைத்திருந்த மனைவி அதையே அன்றும் பிரயோகித்திருந்தாள்.

எவ்வளவு நேரந்தான் தொலைக் காட்சியைப் பார்ப்பது. சிந்தனை எங்கெங்கோ சிதறிக் கொண்டிருக்கும்போது பார்க்கும் காட்சிகளும் கண்களுக்குள் அடங்காமல் ஊதி அணைக்கப்பட்ட விறகுக் கட்டையிலிருந்து வெளிப்படும் கருகிய புகையாகியிருந்தது. அன்று படுக்கையும் நொந்தது.

மறுநாள் காலை…! தங்கராசுவின் ‘பீசி பூரோ’தொழிற்கூடம் அமைதியில் மூழ்கியிருந்தது. அங்கே சிதறிக் கிடந்த பழைய இரும்புப் பொருட்களும் மனிதர்கள் பாவித்துத் துப்பிப் போட்ட சாமான்களும் பரிதாபமாகக் கிடந்தன. அவை ஒரு காலத்தில் வசதி படைத்த இல்லங்களில் கம்பீரமாக அரியணையில் அமர்ந்திருந்தவை. தூசிபடாமல் குளிரூட்டப்பட்ட அறைகளில் மனிதர்களுக்குச் சமானமாக நின்றுகொண்டோ படுத்துக் கொண்டோ அமர்ந்துகொண்டோ சொகுசு வாழ்க்கையை அனுபவித்தவை. இன்று பாவம்..!

‘பத்து ரிங்கிட்டுக்கு முப்பத்தஞ்சாயிரம் ரிங்கிட்..!’

‘மனுசன் பணத்த தனியா கட்டி வச்சிருப்பார். நாணயஸ்தன். ஒரு காசு ஏமாத்த மாட்டார். யாருக்கு நெம்பர் பட்டாலும் மறுநாள் காலையில போயி ரொக்கமா வாங்கிக்கிடலாம்..!’ பலரும் இப்படிப்பட்ட நற்சான்றிதழ் வாசித்திருக்க முகத்தில் நம்பிக்கை ரேகைகள் மின்ன தங்கராசுவின் தொழிற்கூட பலகை தடுப்பு அலுவலகத்துக்குள் பயபக்தியோடு நுழைந்தார் முத்துசாமி.

அங்கே..! அப்போது வேலைக்கார பையன் மட்டுமே இருந்தான்.

“ஐயா, உங்களுக்குத் தெரியாதுங்களா, நேற்று மொதலாளி நெம்பர் எழுதிக்கிட்டிருக்கும் போது நெம்பர் எழுதுற மாதிரி சாதா சட்டையில வந்த போலீசுகாரங்க நெம்பர் கட்டோட அவர அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க… இன்னைக்குதான் அவங்க பொஞ்சாதி போலீசு ஸ்டேசனுக்கு ஜாமீன்ல எடுக்க போயிருக்காங்க..!”

முத்துசாமியின் கண்கள் இருண்டன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *