குதிரைக் கொம்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 14, 2020
பார்வையிட்டோர்: 7,835 
 

சிந்து தேசத்தில் அந்தப்புரம் என்கிற நகரத்தில் ரீவண நாயக்கன் என்ற ராஜா இருந்தான். இவன் ஒரு சில யுகங்களின் முன்பு இலங்கையில் அரசாண்ட ராவணனுடைய வம்சம் என்று சொல்லிக் கொண்டான். இவனுடைய சபையில் எல்லா சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்த பல பண்டிதர்கள் விளங்கினார்கள்.

ஒரு நாள் அரசன் தனது சபையாரை நோக்கி, “குதிரைக்கு ஏன் கொம்பில்லை?” என்று கேட்டான். சபையிலிருந்த பண்டிதர்கள் எல்லாம் திகைத்துப் போனார்கள். அப்போது கர்நாடக தேசத்திலிருந்து அந்த அரசனிடம் சம்மானம் வாங்கும் பொருட்டாக வந்திருந்த வக்ரமுக சாஸ்திரி என்பவர், தான் அந்தக் கேள்விக்கு விடை சொல்வதாகத் தெரிவித்தார். அரசன் அனுமதி தந்தவுடன் மேற்படி வக்ரமுக சாஸ்திரி பின்வருமாறு கதை சொல்லத் தொடங்கினார்.

“கேளீர், ரீவண மஹாராஜரே, முற்காலத்தில் குதிரைகளுக்கெல்லாம் கொம்பிருந்தது. இலங்கையில் அரசாண்ட தமது மூதாதையாகிய ராவணேசுரன் காலத்தில், அந்த ராஜனுடைய ஆக்கினைப்படி பிரமதேவன் குதிரைகளுக்குக் கொம்பு வைக்கும் வழக்கத்தை நிறுத்திவிட்டான்” என்றார்.

இதைக் கேட்டவுடன் ரீவண நாயக்கன் உடல் பூரித்துப் போய், “அதென்ன விஷயம்? அந்தக் கதையை விஸ்தாரமாகச் சொல்லும்” என்றான்.

வக்ரமுக சாஸ்திரி சொல்லுகிறார்:

“இலங்கையில் ராவணன் தர்மராஜ்யம் நடத்திய காலத்தில் மாதம் மூன்று மழை பெய்தது. அந்தக் காலத்தில் ஒரு வருஷத்துக்குப் பதின்மூன்று மாசமும், ஒரு மாசத்துக்கு முப்பத்து மூன்று தினங்களும் ஒரே கணக்காக ஏற்பட்டிருந்தன. ஆகவே பதினொரு நாளுக்கு ஒரு மழை வீதம், வருஷத்தில் முப்பத்தொன்பது மழை பெய்தது. பிராமணர் நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்து நாலு கலை ஞானங்கள், ஆயிரத்தெட்டுப் புராணங்கள், பதினாயிரத்தெண்பது கிளைப் புராணங்கள், எல்லாவற்றிலும் ஓரெழுத்துக்கூடத் தவறாமல் கடைசியிலிருந்து ஆரம்பம்வரை பார்க்காமல் சொல்லக்கூடிய அத்தனை திறமையுடனிருந்தார்கள். ஒவ்வொரு பிராமணன் வீட்டிலும் நாள்தோறும் தவறாமல் இருபத்து நாலாயிரம் ஆடுகள் வெட்டிப் பலவிதமான யாகங்களை நடத்தி வந்தார்கள். ஆட்டுக் கணக்கு மாத்திரம்தான் புராணக்காரர் சொல்லியிருக்கிறார். மற்ற மிருகங்களின் தொகை அவர் சொல்லியிருக்கலாம். இப்படியே மற்ற வருணத்தாரும் தத்தம் கடமைகளை நேராக நிறைவேற்றிக் கொண்டு வந்தார்கள். எல்லா ஜீவர்களும் புண்யாத்மாக்களாகவும், தர்மிஷ்டராகவும் இருந்து இகத்தில் இன்பங்களையெல்லாம் அனுபவித்துப் பரத்தில் சாக்ஷத் பரமசிவனுடைய திருவடிநிழலைச் சார்ந்தனர்.

அப்போது அயோத்தி நகரத்தில் அரசு செலுத்திய தசரத ராஜன் பிள்ளையாகிய ராமன், தனக்கு மூத்தவனாகிய பரதனுக்குப் பட்டங்கட்டாமல் தனக்கே பட்டங்கட்டிக் கொள்ள விரும்பித் தனது தந்தையை எதிர்த்துக் கலகம் பண்ணினான். பிதாவுக்குக் கோபமுண்டாய் ராமனையும் லட்சுமணனையும் ராஜ்யத்தை விட்டு வெளியே துரத்தி விட்டான். அங்கிருந்து அவர்கள் மிதிலை நகரத்துக்கு ஓடிப் போய், அந்நகரத்து அரசனாகிய ஜனகனைச் சரணமடைந்தார்கள். அவன் இவர்களுக்கு அபயம் கொடுத்துக் காப்பாற்றி வருகையில் ராமன் மேற்படி ஜனகராஜன் மகளாகிய சீதையின் அழகைக் கண்டு மோகித்து, அவளைத் திருட்டாகக் கவர்ந்து கொண்டு தண்டகாரண்யம் புகுந்தான்.

அங்கு ராமர், லட்சுமணர் முனிவர்களை யெல்லாம் பல விதங்களிலே ஹிம்சை செய்தனர். யாகங்களைக் கெடுத்தனர். இந்த விஷயம் அங்கே அதிகாரம் செய்து வந்த சூர்ப்பநகைத் தேவியின் காதில் பட்டது. ராவணன் தங்கை யாகையாலும், பிராமண குலமானபடியினாலும், ரிஷிகளுக்கு ராமன் செய்யும் துன்பத்தைப் பொறுக்கமாட்டாதவளாய், அவள் அந்த ராமனையும் அவன் தம்பி லட்சுமணனையும் பிடித்துக் கட்டிக் கொண்டு வரும்படி தனது படையினிடம் உத்திரவு கொடுத்தாள். அப்படியே ராம லட்சுமணரைப் பிடித்துத் தாம்பினாலே கட்டிச் சூர்ப்பநகையின் சன்னதியிலே கொண்டு சேர்த்தனர். அவள் அவ்விருவரையும் கட்டவிழ்த்து விடும்படி செய்து பலவிதமான கடூர வார்த்தைகள் சொல்லிப் பயமுறுத்திய பிறகு ராஜபுத்திரராகவும், இளம் பிள்ளைகளாகவும் இருந்தபடியால், இதுவரை செய்த துஷ்ட காரியங்களையெல்லாம மன்னிப்பதாகவும், இனிமேல் இவ்விதமான காரியங்கள் செய்தால் கடுந்தண்டனை கிடைக்குமென்றும் சொல்லி, நானாவிதமான புத்தி புகட்டிய பின்பு, அவர்களைச் சிறிது காலம் அரண்மனையிலிருந்து விருந்துண்டு போகும்படி செய்தாள்.

அப்போது சீதை சூர்ப்பநகையிடம் தனியாக வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கையில், ராமன் தன்னை வலிமையாலே தூக்கிக் கொண்டு வந்தானென்றும், தனக்கு மறுபடியும் மிதிலைக்குப் போய்த் தனது பிதாவுடன் இருக்கப் பிரியம் என்றும் சொன்னாள். இதைக் கேட்டு சூர்ப்பநகை மனமிரங்கி, சீதையை இலங்கைக்கு அனுப்பி, அங்கிருந்து மிதிலையில் கொண்டு சேர்க்கும்படி ராவணனுக்குச் சொல்லியனுப்பினாள். ராவணனுடைய அரண்மனைக்கு வந்து சேர்ந்தவுடனே அவளை மிதிலைக்கு அனுப்பும் பொருட்டு நல்ல நாள் பார்த்தார்கள். அந்த வருஷம் முழுவதும் நல்ல நாள் கிடைக்கவில்லை. ஆகையால் சீதையை இரண்டு வருஷம் தனது அரண்மனையிலே தங்கிவிட்டுப் போகும்படி ராவணன் ஆக்கினை செய்தான்.

தண்டகாரண்யத்தில் ராமன் சூர்ப்பநகையிடம் “சீதை எங்கே?” என்று கேட்டான். மிதிலைக்கு அனுப்பி விட்டதாகச் சூர்ப்பநகை சொன்னாள். ‘எப்படி நீ இந்தக் காரியம் செய்யலாம்?’ என்று கோபித்து லட்சுமணன் சூர்ப்பநகையை நிந்திக்கலானான். அப்போது சூர்ப்பநகை தன் இடுப்பில் பழங்கள் அறுத்துத் தின்னுவதற்காகச் சொருகி வைத்துக்கொண்டிருந்த கத்தியைக் கொண்டு லட்சுமணனுடைய இரண்டு காதுகளையும், கால் கட்டை விரல்களையும் நறுக்கி விட்டாள்.

இவளுடைய வீரச் செய்கையைக் கண்டு ராமன் இவள் மேல் மோகங் கொண்டு, ‘அட! சீதையைத் தான் மிதிலைக்கனுப்பி விட்டாய், என்னை நீ விவாகஞ் செய்து கொள்ளு’ என்றான். இதைக் கேட்டவுடனே சூர்ப்பநகை கன்னமிரண்டும் சிவந்து போகும்படி வெட்கப்பட்டு ‘நீ அழகான பிள்ளைதான். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம். ஆனால், அண்ணா கோபித்துக் கொள்ளுவார். இனிமேல் நீ இங்கிருக்கலாகாது. இருந்தால் அபவாதத்துக்கு இடமுண்டாகும் என்றாள்.

அப்போது ராமன்: ‘சீதையை எப்போது மிதிலைக்கனுப்பினாய்? யாருடன் அனுப்பினாய்? அவள் இப்போது எவ்வளவு தூரம் போயிருப்பாள்?’ என்று கேட்டான்.

அதற்குச் சூர்ப்பநகை, ‘இனிமேல் சீதையின் நினைப்பை விட்டுவிடு. அவளை இலங்கைக்கு அண்ணன் ராவணனிடத்தில் அனுப்பியிருக்கிறேன். அவன் அவளை மிதிலைக்கு அனுப்பினாலும் அனுப்பக்கூடும். எது வேண்டுமானாலும் செய்யக்கூடும். மூன்றுலகத்திற்கும் அவன் அரசன். சீதையை மறந்துவிடு’ என்றாள்.

இதைக்கேட்டு ராமன் அங்கிருந்து வெளியேறி எப்படியேனும் சீதையை ராவணனிடமிருந்து மீட்க வேண்டுமென்று நினைத்துக் கிஷ்கிந்தா நகரத்திற்கு வந்து சேர்ந்தான். அந்தக் கிஷ்கிந்தா நகரத்தில் அப்போது சுக்கிரீவன் என்ற ராஜா அரசு செலுத்தினான். இவனுக்கு முன் இவனுடைய தமையனாகிய வாலி ஆண்டான். வாலிக்கும் ராவணனுக்கும் மிகுந்த சிநேகம். இரண்டு பேரும் ஒரு பள்ளிக்கூடத்திலே கணக்கு வாசித்தார்கள். மூன்று உலகத்திலும் கப்பம் வாங்கின ராவணனன் ‘கிஷ்கிந்தா பட்டணத்துக்கு வாலி யாதொரு கப்பமும் செலுத்த வேண்டியதில்லையென்று சொல்லிவிட்டான்.

இந்த வாலி தூங்கிக் கொண்டிருக்கையில் தம்பி சுக்கிரீவன் இவன் கழுத்தை மண்வெட்டியால் வெட்டியெறிந்துவிட்டு இவன் மனைவியாகிய தாரையை வலிமையால் மணந்து கொண்டு அனுமான் என்ற மந்திரியின் தந்திரத்தால் ராஜ்யத்தை வசப்படுத்திக் கொண்டான். இதைக் கேட்டு ராவணன் மகா கோபத்துடன் சுக்கிரீவனுக்குப் பின்வருமாறு ஓலையெழுதியனுப்பினான்.

“கிஷ்கிந்தையின் சுக்கிரீவனுக்கு இலங்கேசனாகிய ராவணன் எழுதிக் கொண்டது. நமது சிநேகனைக் கொன்றாய். உன் அண்ணனைக் கொன்றாய், அரசைத் திருடினாய். இந்த ஓலை கண்டவுடன் தாரையை இலங்கையிலுள்ள கன்யாஸ்திரீ மடத்துக்கு அனுப்ப வேண்டும். ராஜ்யத்தை வாலி மகன் அங்கதனிடம் கொடுக்க வேண்டும். நீ சந்நியாசம் பெற்றுக்கொண்டு ராஜ்யத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும். இந்த உத்தரவுக்குக் கீழ்ப்படாத விஷயத்தில் உன் மீது படையெடுத்து வருவோம்.”

மேற்படி உத்தரவு கண்டவுடன் சுக்கிரீவன் பயந்து போய் அனுமானை நோக்கி ‘என்ன செய்வோம்? என்று கேட்டான். அனுமான் சொல்லிய யோசனை என்னவென்றால்,

‘வாலியிடம் பிடித்துக்கொண்ட தாரையையும் பதினேழு வயதுக்குட்பட்ட வேறு பதினேழரைக் கோடிப் பெண்களையும் ராவணனுக்கு அடிமையாக அனுப்ப வேண்டும். ராவணனாலே ஆதரித்துப் போற்றப்படும் வைதிக ரிஷிகளின் யாகச் செலவுக்காக நாற்பதுகோடி ஐம்பது லட்சத்து முப்பத்து நாலாயிரத்து இருநூற்று நாற்பது ஆடுமாடுகளும், தோற் பைகளில் ஒவ்வொரு பை நாலாயிரம் படி கொள்ளக் கூடிய நானூறு கோடிப் பைகள் நிறைய சோமரசம் என்ற சாறும் அனுப்பி அவனைச் சமாதானம் செய்து கொள்ள வேண்டும். இளவரசுப் பட்டம் அங்கதனுக்குச் சூட்டுவதாகவும் வருஷந்தோறும் நாலாயிரம் கோடிப் பொன் கப்பம் கட்டுவதாகவும் தெரிவிக்க வேண்டும். இத்தனையும் செய்தால் பிழைப்போம்’ என்று அனுமான் சொன்னான்!

சுக்கிரீவன் அப்படியே அடிமைப் பெண்களும் ஆடுமாடுகளும் சாறும், முதல் வருஷத்துக் கப்பத் தொகையும் சேகரம் பண்ணி அத்துடன் ஓலையெழுதித் தூதர் வசம் கொடுத்தனுப்பினான். தூதர்கள் ஆடுமாடுகளையும், சாற்றையும் ராவணன் அரண்மனையிலே சேர்ப்பித்தார்கள். அடிமைப் பெண்களையும் பணத்தையும் முனிவரிடம் கொடுத்தார்கள். ஓலையை ராவணனிடம் கொடுத்தனர். போகிற வழியில் தூதர் அடிக்கடி தோற்பயிலுள்ள சாற்றை குடித்துக் கொண்டு போனபடியால் தாறுமாறாக வேலை செய்தார்கள். ராவணன் தனது நண்பருடன் ஆடுமாடுகளையெல்லாம் அப்போதே கொன்று தின்று அந்தச் சாற்றையும் குடித்து முடித்தவுடனே ஓலையைப் பிரித்து வாசித்துப் பார்த்தான். அடிமைப் பெண்களும் பணமும் ஏன் தன் வசம் வந்து சேரவில்லையென்று விசாரணை செய்தான். முனிவர்களின் மடங்களில் சேர்த்துவிட்டதாகவும், அவர்கள் அந்தப் பணத்தையெல்லாம் யாகத்திலே தட்சிணையாக்கி யெடுத்துக் கொண்டபடியால், இனிமேல் திருப்பிக் கொடுப்பது சாஸ்திர விரோதமென்று சொல்லுவதாகவும், அடிமைப் பெண்கள் ஆசிரமங்களிலிருந்து பெரும்பாலும் ஓடிப் போய் விட்டதாகவும் செய்தி கிடைத்தது.

தூதர்களையெல்லாம் உடனே கொல்லச் சொல்லிவிட்டு அந்த க்ஷணமே சுக்கிரீவன் மேல் படையெடுத்துச் செல்லும்படி சேனாதிபதியிடம் ஆக்கினை செய்தான். அப்படியே நல்லதென்று சொல்லி சேனாதிபதி போய்ப் படைகளைச் சேகரித்தான். இந்தச் செய்தியெல்லாம் வேவுகாரர் மூலமாகக் கிஷ்கிந்தைக்குப் போய் எட்டிவிட்டது. உடனே அனுமான் சொற்படி சுக்கிரீவன் தனது படைகளைச் சேர்த்தான். ராவணன் படை தயாரான பிறகும், அதை நல்ல லக்னம் பார்த்து அனுப்ப வேண்டுமென்று காத்துக் கொண்டிருந்தான். இதற்குள்ளே அனுமான் தன்னுடைய ஜாதி ஒரு விதமான லேசான குரங்கு ஜாதியாகையால் விரைவாகக் குரங்குப் படைகளைத் திரட்டிக் கொண்டு இலங்கையை நோக்கிப் புறப்பட்டான். இவனுடைய சேனையிலே ராம லட்சுமணரும் போய்ச் சேர்ந்தார்கள். இந்தச் சேனையிலே நாற்பத்தொன்பது கோடியே தொண்ணூற்று நாலு லட்சத்து முப்பத்தேழாயிரத்து முந்நூற்றைம்பத்தாறு காலாளும், அதற்கிரட்டிப்பு குதிரைப் படையும், அதில் நான்கு மடங்கு தேரும், அதில் எழுபது மடங்கு யானைகளும் வந்தன.

இவர்கள் இலங்கைக்கு வருமுன்னாகவே ராவணன் சேனையிலிருந்து ஒரு பகுதி இவர்களை எதிர்த்துக் கொன்று முடித்துவிட்டன. ராம லட்சுமணர் மாத்திரம் சில சேனைப் பகுதிகளை வைத்துக்கொண்டு ரகசியமாக இலங்கைக்குள்ளே வந்து நுழைந்து விட்டார்கள். இந்தச் செய்தி ராவணன் செவியிலே பட்டது. உடனே ராவணன் ‘ஹா! ஹா! ஹா! நமது நகரத்திற்குள் மனிதர் சேனை கொண்டு வருவதா! இதென்ன வேடிக்கை! ஹா! ஹா! ஹா!’ என்று பேரிரைச்சல் போட்டான். அந்த ஒலியைக் கேட்டு ஆதிசேஷன் செவிடனாய் விட்டான். சூரியமண்டலம் தரை மேலே விழுந்தது. பிறகு ராவணன் ராமனுடைய சேனைகளை அழித்து, அவனையும் தம்பியையும் பிடித்துக் கொண்டு வரும்படி செய்து, இராஜகுமாரர் என்ற இரக்கத்தினால் கொல்லாமல் விட்டு, அவ்விருவரையும் தனது வேலையாட்களிடம் ஒப்புவித்து ஜனகன் வசம் சேர்க்கும்படி அனுப்பினான். பிறகு சீதையும் மிதிலைக்குப் போய்ச் சேர்ந்தாள்.

மறுபடி, ஜனகன் கிருபை கொண்டு அந்த ராஜனுக்கே சீதையை விவாகம் செய்து கொடுத்துவிட்டான். அப்பால் ராம லட்சுமணர் அயோத்திக்குப் போய்ப் பரதனுக்குப் பணிந்து நடந்தார்கள். இதுதான் நிஜமான “ராமாயணக் கதை” என்று வக்ரமுக சாஸ்திரி ரீவண நாயக்கன் சபையிலே கதை சொன்னான்.

அப்போது ரீவணன்: “சாஸ்திரியாரே, குதிரைக்கு ஏன் கொம்பில்லை என்று கேட்டால் இன்னும் அதற்கு மறுமொழி வரவில்லையே?” என்று கேட்டான்.

வக்ரமுக சாஸ்திரி சொல்லுகிறான்.

ராமன் படையெடுத்து வந்த செய்தி கேட்டு, ராவணன் “ஹா”, “ஹா”, “ஹா”, என்று கூச்சலிட்டபோது, சத்தம் பொறுக்கமாட்டாமல் சூரியமண்டலம் கீழே விழுந்ததென்று சொன்னேனன்றோ? அப்போது சூரியனுடைய குதிரையேழுக்கும் கொம்பு முறிந்து போய்விட்டது.

சூரியன் வந்து ராவணன் பாதத்தில் விழுந்து, “என் குதிரைகள் சாகா வரமுடையன. இவற்றைப் போல் வேகம் வேறு கிடையாது. இவற்றிற்குக் கொம்பு முறிந்து போய் விட்டது. இனி உலகத்தாரெல்லாம் என்னை நகைப்பார்கள். என்ன செய்வேன்?” என்று அழுது முறையிட்டான். ராவணன் அந்தச் சூரியனிடம் கிருபை கொண்டு பிரமதேவனிடம், “இனிமேல் ஒரு குதிரைக்கும் கொம்பில்லாதபடி படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் சூரியனுடைய குதிரைகளை யாரும் நகைக்க இடமிராது” என்று சொன்னான். அது முதலாக இன்று வரை குதிரைக்குக் கொம்பில்லாமல் பிரமதேவன் படைத்துக் கொண்டு வருகிறான்.

இவ்விதமாக வக்ரமுக சாஸ்திரி சொல்லியதைக் கேட்டு ரீவண நாயக்கன் மகிழ்ச்சி கொண்டு மேற்படி சாஸ்திரிக்கு அக்ஷ்ரத்துக்கு லட்சம் பொன்னாக அவர் சொல்லிய கதை முழுவதிலும் எழுத்தெண்ணிப் பரிசு கொடுத்தான்.

– நன்றி: https://www.projectmadurai.org, கதைக் கொத்து, சி.சுப்ரமணிய பாரதி. பாரதி பிரசுராலயம், 1967.

Print Friendly, PDF & Email

யார் முதல்வன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

தவிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)