(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தலையாரி முருகனின் உயரம் ஐந்து அடி இரண்டு அங்குலம். தலையில் குடுமி; நெற்றியில் பட்டை பட்டையாக விபூதி. நாலு முழம் வேஷ்டியை வரிந்து கட்டி, மேலே ஒரு காக்கி நிறச் சட்டையை எப்போதும் அணிந்திருப்பான். கையில் எப்போதும் அவனைவிட ஒரு பிடி உயரமான கறுப்பு மூங்கில் கம்பு. சேரியில் அவனே ஒரு பிள்ளையார் கோயில் கட்டி இருந்தான். அதற்கு தர்மகர்த்தா, பூசாரி, பண்டாரம் எல்லாம் அவனேதான். கோயில் நிர்வாகத்துக்காக, ஊரில் சொந்த வீட்டுக்காரர்களிடம் மாசாமாசம் எட்டணாவோ நாலணாவோ அவரவர் கொடுத்ததை வசூல் பண்ணுவான். இரண்டாம் தேதி அன்று எல்லோர் வீட்டு வாசலிலும் அவனைப் பார்க்கலாம். ஒரு சின்ன நோட்டுப் புஸ்த கமும் பென்சிலும் கையில் இருக்கும். வாசலில் வந்து நின்று “சாமி!” என்று குரல் கொடுப்பான். ஊருக்கே ஐயரான கோபால சாஸ்திரியானாலும் சரி, கிராம முன்சீப் ராதாகிருஷ்ணப் பிள்ளையானாலும் சரி, போஸ்ட்மாஸ்டர் கன்னையா நாயுடுவா னாலும் சரி, பொற்கொல்லரான சொக்கலிங்க பத்தரானாலும் சரி, எல்லோரும் அவனுக்கு சாமிதான். வீட்டுக்காரர் வெளியே வந்தால் ஒரு பெரிய கும்பிடு. நோட்டுப் புஸ்தகத்தையும் பென் சிலையும் வாசல்படியில் வைத்துவிட்டுச் சற்று ஒதுங்கினாற்போல் நிற்பான். நோட்டுப் புஸ்தகத்தில் பெயரை எழுதிவிட்டுக் காசையும் அத்துடன் வைத்தார்களானால் இன்னொரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு எடுத்துக்கொள்வான்.
ஊரில் எல்லோரும் அவனுக்குச் சாமியானால், சேரியில் எல் லோருக்கும் அவன்தான் சாமியார். கோவில் கட்டி, தினம் தவறாமல் பிள்ளையாருக்கு அவன் பூஜை செய்து வந்ததாலும், நெற்றியில் பட்டைபட்டையாக விபூதி இல்லாமல் அவன் என்றும் இருந்ததில்லையாதலாலும் அந்தப்பெயர் அவனுக்குவந்துவிட்டது. சண்டை சச்சரவு ஏற்பட்டால், முன்சீப்பிடம் போவதற்குமுன் அவனிடம்தான் போவார்கள் மத்தியஸ்தத்திற்கு. நல்லது கெட்டது நடந்தாலும் அவனைக் கலந்துகொள்ளாமல் ஒன்றும் செய்யமாட்டார்கள்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்து நாலிலோ ஐந்திலோ காந்திஜி சென்னைக்கு வந்திருந்தபோது கோபால சாஸ்திரி தவறாமல் பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போய்வந்தார். அதிலிருந்து, தலையாரி முருகன் பிள்ளையார் கோவிலுக்குப் பணம் வசூல் பண்ண வந்தால், நோட்டுப் புஸ்தகத்தையும் பென்சிலையும் அவன் வாசல்படியில் வைக்குமுன் அவன் கையிலிருந்தே அவற்றை வாங்கிக்கொண்டு அவன் கையிலேயே திருப்பியும் தரத் தொடங்கினார். முருகன் என்ன புரிந்துகொண்டானோ என் னவோ தெரியாது; அவர் காரியத்தினால் உச்சி குளிர்ந்துபோனவ னாகவும் காட்டிக்கொள்ளவில்லை. அதை விகல்பமாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. எப்பொழுதும் போல் சாதாரணமாகவே கும்பிடு போட்டுக் காசைப் பெற்றுக்கொண்டு போனான்.
“ஸ்வாமி!”
சாஸ்திரி வீட்டுக்குப் பக்கத்து வீடு போஸ்ட்மாஸ்டர் கன்னையா நாயுடுவுடையது. நடுவில் இருந்த குறுக்குச் சுவர் ஓர மாக நின்றுகொண்டிருந்தார் நாயுடு. மடித்துக் கட்டின வேஷ்டி யுடன், மேலே துண்டு ஒன்றும் இல்லாமல் தொப்பையைச் சாய்த் துக்கொண்டு நின்ற அவர், சுருட்டு நெருப்பைக் குறுக்குச் சுவர் மேல் தட்டி அணைத்து, அதைக் காதில் செருகிக்கொண்டு ஒரு கனைப்பும் கனைத்துக் கொண்டார்.
“என்ன நாயுடுகாரு?”
“அந்தத் தலையாரி முருகம்பய ஒங்க கையிலிருந்தே நோட்டுப் புஸ்தகத்தையும் பென்சிலையும் வாங்கிட்டுப் போறானே! என்ன அக்கரமமுங்க! ஜோட்டாலே அடிக்க வாணாம்?”
சாஸ்திரி லேசாகச் சிரித்தார். “அவன் மேலே தப்பில்லே; நானே தான் அவன் கையிலியே குடுத்தேன். என்ன இருந்தாலும் அவனும் நம்மைப்போல மனுஷன் தானே நாயுடு ஸார்”, என்றார்.
வெறுப்புடன் முகத்தைச் சுளித்தார் நாயுடு. “என்ன போங்க எனக்கொண்ணும் புடிக்கல்லே. இந்தப் பாப்பாரு எடம் குடுத்துத் தான் இந்தப் பறப்பசங்க துளுத்துப்புட்டானுங்க! நான் நல்லாச் சொல்லுவேன். இல்லேன்னா, நாங்க இவங்களை வைக்கிற எடத் துலே வச்சிருப்போம். நீங்க குடுக்கற எடம், இப்போ அவங்க எங்களையும் தலைக்கு மேலே ஏறறாங்க! ஓங்களைக் கேட்டா, நீர் காந்தி கட்சி பேசுவீர். நீங்கள்ளாம் காந்தி கட்சி தானே?” என்றார் விறுவிறுப்பான குரலில்.
“ஏன், உங்களுக்கு காந்தியைப் புடிக்கலியா?”
“புடிக்கல்லேன்னு சொல்லல்லே. அவர் சொல்றது சிலதை எல்லாம் நானும் ஒப்புக்கறேன். ஏழைங்க குடிச்சுக் கெட்டுப் போறாங்கன்னு சொன்னாரு; அது நியாயம். வெள்ளைக்காரன் நம்ப நாட்டுலேருந்து பணத்தை எல்லாம் சுரண்டிக்கினு போரான்னு சொன்னாரு, சுதேசி சாமான்களையே வாங்குங்கன்னு சொன்னாரு; அதெல்லாம் நியாயம். ஆனா, இந்தச் சேரிப் பசங் களை நாம்ப நடு ஊட்டுலே கொண்டாந்து வச்சிக்கணும்னு சொல் றாரே, அதுமட்டும் சரியில்லே…'”
“ஏன் அப்படிச் சொல்றீங்க?”
“என்ன, ஸார், இப்படிக் கேக்கறீர்? குலத்தளவே ஆகும் குணம்னு தெரியாமலா பெரியவங்க சொன்னாங்க; அவங்களை ஒதுக்கி வச்சாங்க? வெள்ளைக்காரன் தேசத்தையே எடுத்துக்குமே. ஆள்ற பரம்பரைன்னு ஒண்ணு தனியா இருக்கு இல்லே? கண்ட வனையா ராஜான்னு சிம்மாசனத்துலே ஏத்தி உக்காரவைக்கிறானுக?”
“அது சரி, ஆனா, ராஜாவா இருக்கறதையும் ஒரு தேசத்தை ஆள்றதையும் உட்டுடுங்க. எல்லோரும் ராஜாவாப் பொறக்கல்லே; ஆனா, எல்லோரும் மனுஷாளாப் பொறந்திருக்கோம் இல்லையா?”
“அப்புடின்னா, குதிரை கழுதை எல்லாம் ஒண்ணாயிடுமா?”
“ஆகாது. ஆனா எல்லாக் குதிரையும் குதிரைதான், எல்லாக் கழுதையும் கழுதைதானே ? அதுலே ஒண்ணுக்கொண்ணு வித்தியாசம் இல்லையே? அப்புடித்தானே மனுஷாளாப் பொறந்த எல்லாரும்? இன்னொரு விஷயம் சொல்றேன் பாருங்கோ, இந்த வெள்ளைக்காராளையே எடுத்துக்குவோம்; அவாளோடே சரிநிகர் சமானமா நாம்பளும் இருக்கணும், நம்ப தேசத்தை நாமே ஆண்டுக்கணும்னு தானே நாம்ப கிளர்ச்சி எல்லாம் பண்ணிண்டிருக்கோம்; இல்லையா?’
“ஆமாம்”
“அப்போ மனுஷனுக்கு மனுஷன் வித்தியாசம் இல்லேங்கறது தானே நம்ப வாதம்? இன்னொரு விஷயம் சொல்றேன், நீங்க கோவிச்சுக்கப்படாது. முப்பது வருஷத்துக்கு முன்னாலே உங்கப் பாவும் எங்கப்பாவும் இருந்த காலத்திலே, எங்கப்பா பக்கத்திலே உங்கப்பா உக்காரமாட்டார். இப்போ நானும் நீங்களும் சரி சமானமா இருக்கிறது சர்வசாதாரணமாய்ப் போயிடுத்து. ஆனா, இன்றும் தாழ்த்தப்பட்டவாளா இருக்கிறவாளுக்கு அந்த உரிமை களைக் கொடுக்க மட்டும் நம்மிலே ரொம்பப் பேருக்கு மனசு வர மாட்டேங்கறது. நமக்கு மேலே இருக்கிறவாளோடே சம உரிமை கொண்டாடப் பார்க்கிறோம்; நமக்குக் கீழே இருக்கிற வாளுக்கு அந்த உரிமையைக் குடுக்க மனசு வல்லே. அப்படித்தானே?”
நாயுடு கசப்பை விழுங்கியவர் போல் முகத்தைச் சுளித்து, காதின் மேலிருந்து சுருட்டை எடுத்துப் பற்ற வைத்தார். சாஸ்திரி மேலும் சொன்னார்.
“என் மனசும் உங்க மனசு மாதிரிதான் இருந்தது. தினம் பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போனேன்; காந்திஜி சொன்னதை எல்லாம் கேட்டேன்; யோசிச்சு யோசிச்சுப் பார்த்தேன் ; அவர் சொல்றதுதான் சரின்னு புரிஞ்சிது. மனுஷன் ஒழுக்கத்தினாலே தான் உயரணும்; அதனாலேயே தாழணும். பொறவியினாலே இல்லை.”
நாயுடு த்சு….த்சு…என்று நாக்கினால் சப்தித்து விட்டுப் புகை விட்டுக் கொண்டே உள்ளே போய் விட்டார்.
மாயவரம், தஞ்சாவூர், கும்பகோணம் என்று மாற்றலாகி ஊர் ஊராகப் போய் விட்டுப் பன்னிரண்டு வருஷத்துக்குப் பின் உத்தியோகத்தில் ஓய்வு பெற்று மறுபடி நாயுடு ஊருக்குத் திரும்பி வந்தபோது சாஸ்திரிக்கும் ரொம்ப வயசாய் விட்டது, படுகிழம்; உச்சிக் குடுமியில் எண்ணி நாலு மயிர்; பொக்கை வாய். ஆனால் உடம்பு திடமாக இருக்கிறது, நடமாடிக் கொண்டிருக்கிறார்: பிள்ளை குட்டி இல்லாததால் பள்ளிக்கூடம் ஒன்று ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
“அசப்பிலே பாத்தா காந்தி மாதிரி இருக்கீமே! காந்தி பக்தர் இல்லே; அதான் காந்தி மாதிரி ஆயிட்டீம்! ஒரு புள்ளெயெ வச் சிக்கிட்டுப் படிக்க வச்சுப் பெரிய மனுஷனாக்கறதே ரொம்பக் கஷ்டமாருக்கு : நூறுபேர் போல புள்ளைகளைக் கட்டி மேய்கிறீமே. எப்படி முடியது இந்த வயசுலே?” என்று அவரைப் பார்க்கும் போதெல்லாம் ஆச்சரியப்படும் நாயுடு ஒரு தினம் கேட்டார். பையனுக்கு வேலைக்கு ஆர்டர் வந்திருக்கு, என்ன என்னவோ சர்டி பிகேட்டுகள் எல்லாம் கேக்கறான். எல்லாத்தியும் டைப் அடிச்சு வச்சிருக்கான்; அதெல்லாம் உண்மை நகல்னு ஒரு ஆபீசர் கையெழுத்துப் போட்டுத் தரணுமாம். உமக்கு யாரையாவது தெரி யுமா; நீர் தான் எல்லாருக்கும் வேண்டியவராச்சே?”
“அதுக்கென்ன வாங்களேன், நம்ப டிப்டி கலெக்டர் வினாய கத்துக் கிட்ட அழச்சிண்டு போரேன். ஒடனே கையெழுத்துப் போட்டுக் குடுத்துடுவன்’ என்று நாயுடுவையும் அழைத்துக் கொண்டு டிப்டி கலெக்டரின் பங்களாவுக்குப் போனார் சாஸ்திரி. இருவரையும் கைகூப்பி வணங்கி வரவேற்று, ஹாலில் அமரச் செய்து, டைப் அடித்த சர்டிபிகேட்டுகளில் கையெழுத்துப் போட் டுக் கொடுத்த டிப்டி கலெக்டரின் பவ்யத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்த நாயுடு, ஹாலில் வினாயகம் உட்கார்ந்திருந்த இடத் துக்கு மேல், சுவரில் மாட்டி இருந்த பெரிய புகைப் படத்தைக் கண் கொட்டாமல் பார்த்தபடி வெளியே வந்தார்.
“நம்ப வினாயகம் யார்னு தெரியறதா?” என்று கேட்டார் சாஸ்திரி இருவரும் வீட்டை நோக்கி நடக்கையில்.
“உம்… தெரியலே. ஒரு வேளை, நம்ப தலையாரி முருகன் இருந்தானே, அவனுக்கு ஏதாவது…?”
“நம்ம தலையாரி முருகனோடே மகனே தான் ! முருகனோடெ படம், பெரிசா என்லார்ஜ்மெண்டு, ஹால்லே மாட்டி இருந்துதே பூமாலையோடே; பாத்தீரா ?”
” பார்த்தேன்; முருகன் மாதிரி இருக்கேன்னு நெனச் சேன்…’
“முருகனே தான்! பிள்ளையார் கோயிலுக்குப் பணம் வசூல் பண்றப்போ ஒவ்வொரு சமயம், ‘என் புள்ளெ படிக்கிறான் ; சர்க்கார்லே ஸ்காலர்ஷிப் தராங்க : புஸ்தகம் வாங்கப் பணம் இல்லே; ஏதாவது இந்த மாசம் கூடப் போட்டுத் தந்தா அவனுக் கும் உபயோகமாக இருக்கும்’னு கேட்டு வாங்கிண்டு போவன் இல்லை? அந்தப் பையன்தான் வினாயகம். பி. ஏ. பாஸ் பண்ணின தும் கவர்மெண்டுலே ஆபீசராகவே வேலைக்கு எடுத்துண்டுருக்கா. பாவம், முருகன்தான் இருந்து அனுபவிக்கக் குடுத்து வைக்கல்லே. பையன் பி.ஏ. படிச்சிண்டிருக்கச்சே போயிட்டான். அப்பாவைப் போலவேதான் புள்ளே. பெரிய உத்தியோகனு ஒரு வீண் ஆடம்பரம், அதிகாரம் ஒன்றும் கிடையாது; குழந்தை சுபாவம்; பெரியவா கிட்டெ ஒரு அடக்கம், மரியாதை”
சாஸ்திரி மேலே சொன்னதொன்றும் நாயுடுவின் காதில் விழ வில்லை. பதினைந்து வருஷத்துக்கு முன் நடந்த சம்பவத்தின் நினைவிலே லயித்துப் போயிருந்தது அவர் எண்ணமெல்லாம். சாஸ்திரி சொன்னது போல் தலையாரி முருகன் வந்து அவரையும் பணம் கேட்டிருக்கிறான், பிள்ளையின் படிப்புக்கு ஏதாவது ஒத்தாசை செய்யும்படி. “அடே முருகா! இதோ பாரு, உம் புள்ளெ படிச்சு என்ன செய்யப் போறான்? கலெக்டர் வேலையா பண்ணப் போறான்? பேசாமெ வயல்லெ கொண்டுபோய் வேலைக்கி உடுவியா?…’ என்று சொல்லி அனுப்பிவிட்டார். கையிலே இருந்த காகிதங்களை – முருகன் மகன் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த காகி தங்களை – இந்தக் கைக்கும் அந்தக் கைக்குமாக மாற்றியபடி சிந்தனையில் ஆழ்ந்து நடந்தார் இப்போது.
நான்கைந்து மாசத்துக்குப் பிறகு மறுபடி அவரைப் பார்த்த சாஸ்திரி, “என்ன நாயுடுகாரு, இப்புடி எளச்சுப் போயிட்டீர்; என்ன உடம்பு?” என்று கேட்டார்.
உம்ம
உடம்புக்கு ஒண்ணும் இல்லே; எல்லாம் மனசுக்குத்தான். பாடு தேவலை, புள்ளை குட்டி ஒண்ணும் இல்லாததே ! என்னைப்போல ஒண்ணை வச்சிண்டிருக்கவும் வேண்டாம், இப்படி ஆகவும் வேண்டாம்” என்று நாயுடு சொல்லவும், அடடா, நாம்ப ஓண்ணும் கேள்விப்படலீயே என்று திடுக்கிட்டுப்போன சாஸ்திரி, “ஏன், உங்க மகனுக்கு என்ன ஆச்சு?” என்று பதற்றத்துடன் கேட்டார்.
“அப்படி, நீங்க நினைக்கிற மாதிரி ஒண்ணும் ஆகல்லே. உத்தியோகம் ஆச்சு பாருங்க அவனுக்கு?…”
“ஆமாம் ”
“அப்படி ஒண்ணும் பெரிய உத்தியோகமும் இல்லியே; குமாஸ்தா உத்தியோகம் தானே ? அது ஆனதுமே, தொரைக்கி நம்ப வீட்டுலே இருக்க சௌகரியப்படலியாம்? தனியாப் போயிட்டான் எங்க ரெண்டுபேரையும் விட்டுட்டு. நம்ப வீட்டுலே பொறந்து வளந்தவனுக்கு, இப்பொ நம்ப வீடு திடீர்னு சௌகரியம் இல்லாமெ போயிடுத்தாம்….”
“த்சொ . . த்சொ..”
“இவனுக்கு அவன் எவ்வளவு தேவலை;பார்த்தீரா?”
“எவன்?”
“நம்ப தலையாரி முருகனோட மகன்; டிப்டி கலெக்டர் வினாயகம். இன்னொருவன் இன்னொருவனா இருந்தா, இவ்வளவு பெரிய பதவி கடச்சப்புறம் தான் தலையாரி முருகன் மகன்கறதை சொல்லிக்கவே வெக்கப்படுவானோ என்னவோ. அவன் தகப்பனை மறக்காமெ, அவன் படத்தைப் பெரிசா ஹால்லே மாட்டி வச்சு, புஷ்ப மாலையாலே அலங்கரிச்சு வச்சிருந்தான் பார்த்தீரா?…”
சாஸ்திரி பேசாமல் இருந்தார். பழைய நினைவுகள் எல்லாம் அவருக்கும் வந்தன. நாயுடுவே மேலே பேசட்டுமே; கேட்போமே, என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார்;
“இன்னிக்கித்தான் பகவான் என் கண்ணை நல்லாத் தறந்து விட்டான். என் கண்ணை மூடி இருந்த அறியாமையைத் தொடச்சி விட்டான். குலத்தளவே ஆகுமாம் குணம்னு பெரியவங்க சொன்னதுக்கு உண்மையான அர்த்தம் என்னன்னு இப்பத்தான் புரிஞ்சுது. குலம்கறது பெறவியினாலே ஏற்படற நெலமை இருக்கே, அது இல்லே. ஒழுக்கத்தினாலே ஏற்படுதே, அந்த நெலமைதான்னு புரியுது. அந்தக் காலத்துலே பெரியவங்க அந்த அர்த்தத்துலே அதைச் சொல்லல்லேன்னாக்கூட அந்த அர்த் தத்துலே தான் நாம்ப அதை எடுத்துக்கணும். இல்லையா? நீர் என்ன சொல்றீர்?”
“ரொம்ப கரெக்டு நீர் சொல்றது!” என்று ஆமோதித்தார் சாஸ்திரி.
– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.