குட்டி மஸ்தான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 7, 2024
பார்வையிட்டோர்: 441 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அந்தக் கடையின் போர்டை எழுதியவர், ஒரு மார்டன் ஆர்டிஸ்டாகத்தான் இருக்கவேண்டும். வி. என்ற எழுத்தின் அடிக் கோட்டை, கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைப் போல, சற்று வளைத்துவிட்டு. மேலே கொக்கியையும் சுருக்கிவிட்டதால், லீ’ மாதிரி தெரிந்தது. ஆகையால், கடைக்கு வருபவர்கள், அந்தப் போர்டைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, நியாய லீலைக் கடை” என்று படிப்பார்கள். இதற்காகக் கடைக்காரர் “அரிசி ஸ்டாக் இல்லை” என்று சொல்வது சரியில்லைதான் அவரிடம் அதைப் பற்றிக் கேட்டால், “எதுதான் சரியாய் இருக்கு?”என்பதுடன் அப்படிக் கேட்டதற்குத் தண்டனையாகச் “சர்க்கரை (உங்களுக்கு) ஸ்டாக் இல்லை” என்பாராம்.

இந்த வில்லாதி வில்லன், அன்று வாடிக்கைக்காரர்களை எப்படி விரட்டியடிக்கலாம் என்று யோசித்தவராய், போர்டில், ‘இருப்புக்கு’க் கீழே இல்லை’ என்று எழுதிக் கொண்டிருக்கும் போது, ஒரு ஆசாமி வந்து நின்றார் கடைக்காரர் அவரைப் பார்க்காமலே “ஸ்டாக் ஒண்னும் இல்லை சார்” என்றார்.

வந்தவர் விடுவதாகத் தெரியவில்லை.

“இது நியாய விலைக் கடைதானே?”

கடைக்காரருக்குச் சுருக் கென்றது.

“ஏன், போர்டில எழுதியிருக்கது கண்ணு தெரியலியோ? சரி…சரி. ஸ்டாக் இல்லை போங்க?”

“இது தான் எனக்கு ஆபீஸ் டயம்.”

“ஆபீஸ் டைம்ல அரிசி வாங்றது தப்புங்க.”

“அரிசி வாங்கறது தப்புதான். அரிசி ஸ்டாக்கை செக்’ பண்றது தப்பில்ல.”

“நீங்க என்ன சொல்றீங்க?”

“செக்கிங் இன்ஸ்பெக்டர்னு என்னைச் சொல்லுவாங்க”.

அவ்வளவுதான். கடைக்காரரின் கடுகடு முகம், கிளுகிளுவானது. கடைக்குள் கோணிகளைச் சுமந்து கொண்டிருந்த ஒரு ஸ்டுலை எடுத்து வெளியே போட்டார். தோளில் தொங்கிய துண்டை எடுத்து அதைத் துடைத்தார். ஸ்டுல் மேலும் அழுக்காயிற்று பிறகு ஆபீசரை உட்காரும்படி சைகை செய்தார். கடைக்காரர் தட்டி விட்ட மின்காற்றில், உள்ளே உறங்கிய மைதாவம், ரவையும். கடைக்குள் ஸ்டாக்காக இருக்க விரும்பாதவைபோல், ஆபீஸரின் முகத்தில் ஸ்டாக்காயின. கடைக்காரர் தலைவிரிகோலமா, கடைக்காரப் பையனிடம் கத்தினார்.

“டேய் முனுசாமி, உடுப்பியில போயி, ஐயாவுக்குச் சூடா ஒரு ஸ்பெஷல் காபி வாங்கி வா.”

அரிசி வகையறாக்கள் மாயமாய் மறைவது போல் பையனும் மறைந்தான்.

“ஐயாவுக்குக் காபி மட்டும் போதுமா?”

“போதாது உன் ரிஜிஸ்டர்களும் வேணும்.”

“ஐயா புதுசோ?”

“ஆமாம், உன் கடைக்குப் புதுக. ஆனால் வேலைக்குப் பழசு.”

விடாக் கண்டனும், கொடாக்கண்டனும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கையில், பாட்டியம்மா ஒருத்தி வந்தாள். இந்தச் சமுதாயத்தில் நடமாடித் திரியும் மனிதர்களைப் பார்க்க விரும்பாததுபோல், அவள் முதுகு நிலத்தைப் பார்த்தது. இரண்டு கைகளும், கால்களுக்கு இணையாக, செங்குத்தாய் தொங்குவது போல் கோணைத் தென்னையைப் போல், அவள் வளைந்திருந்தாள். ஊர்ந்து வருவதுபோல் வந்த அவள் “இன்னைக்காவது அரிசி கிடைக்குமா நயினா?” என்றாள். அந்த வார்த்தை அந்த ஜீவக் கூட்டுக்குள் இருந்து வந்ததே பெரிய காரியம்!

கடைக்காரர் வார்த்தை தவறாதவர். ஆகையால் நேற்று அவளிடம் சொன்னதையே இன்றும் தவறாமல் சொன்னார்.

“அரிசி இன்னும் வரல நாளிக்கு வா.”

“தம்மா படி அரிசிக்கு எம்மாந்தரம் வர் ரதய்யா? நாயமா நயினா? கெய்வின்னு நினைச்சாக்காட்டியும் அரிசி தாய்யா, ஐயா.”

“ஆயா உன்கிட்ட எத்தனைவாட்டி சொல்றது? ஸிவில் சப்ளை கோடோன்ல இருந்து அரிசி வர்ரப்போதான் தரலாம். நான் என்ன பண்றது?”

“எப்பத்தாம்பா கோடோன் அரிசி வரும்?”

“எனக்கு ஜோலியமா தெரியும்? வர்ரப்போ வரும். சரி. நடையைக் கட்டு காலங்காத்தாலே ரோதனை பண்ணாதே.”

கிழவி, தன்னையே ரோதனை பண்ணிக் கொண்டாள். பர்மாவில் இருந்து, இரண்டாவது உலகப் போரின் போது இங்கே வந்த பலரில் அவள் ஒருத்தி. பசியால் மனிதர்கள் மிருகமாவதைப் பார்த்தவள் ஆனால், இங்குப் பசியறியாதவர்களே மிருகமாவதை இப்போது தான் பார்க்கிறாள். கடைக்காரரிடம் பேசுவதற்குச் செலவிடும் சக்தியை, நடக்கச் செலவிடலாம் என்று நினைத்தவள் போல், வந்தவழியே நடந்தாள்.

செக்கிங் இன்ஸ்பெக்டர், கடையை நோட்டம் விட்டார். “ஏய்யா, உள்ளே முப்பது நாப்பது கிலோ அரிசி இருக்கும்போல தெரியது.ஸ்டாக் இல்லேங்றே.”

“தப்புதான் ஆனால் தப்பாமல் அதைத் தனியே எடுத்து வைக்கும்படி ஒருவர் போன் பண்ணினாரு.”

“கார்டு ஹோல்டரா?”

“கார்டு ஹோல்டர்னா எவன் கவலைப்படுகிறான் சார்?”

“பிறகு யாருக்குய்யா?” கடைக்காரர், புன்முறுவலைப் பூக்க விட்டுக் கொண்டே செக்கிங்கின் காதில், அந்தத் திருநாமத்தைச் சொல்ல, அந்தக் காதின் ஆசாமி, உடம்பை ஒரு சிலிர்ப்பு சிலிர்த்துக் கொண்டே, சிம்ம சொப்பனம் கண்டவர்போல் திடுக்கிட்டு பிறகு “சரி, சரி, எனக்கெதுக்கு வம்பு ஒன் ரிஜிஸ்டர்ங்கள எடு” என்றார்.

இன்ஸ்பெக்டர் ஏ ரிஜிஸ்டர் என்று வழங்கப்படும், கார்டுக்காரர்கள் ரிஜிஸ்டரைப் புரட்டினார். அதுக்குள், உடுப்பிக்குப் போன பையன் ஓடிவந்தான். இன்ஸ்பெக்டர் காபி ஆறுவதற்காக, ரிஜிஸ்டரின் மேல் ‘டபராவை வைத்துவிட்டு, பிறகு அதை எடுத்து எடுத்துக் குடிப்பதும், அப்படி எடுக்கையில் ரிஜிஸ்டரின் பக்கங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கொண்டு ஆயிரத்து நூறு பெயர்களையும் பார்த்துக் கொண்டு வந்தவர் 18வது சீரியல் நம்பரில் உள்ள காமாட்சி, மீண்டும் 98ஆம் நம்பரில் அவதாரம் எடுத்ததையோ, 80ஆம் நம்பர் கோவிந்தனுக்கு 50ஆம் நம்பரில் பூர்வஜென்மம் இருந்ததையோ, அவர் கவனித்ததாகத் தெரிய வில்லை. ஸ்பெஷல் காபியாச்சே!

என்றாலும், காபி வாசனை மறைந்ததும், செக்கிங் இன்ஸ்பெக்டரின் இரக்கமும் மறைந்தது. ரிஜிஸ்டரைப் புரட்டிக் கொண்டே, கடைக்காரரைப் புரட்டினார்.

“யோவ், நான் வீடு வீடாய் போய், கார்டு கார்டாய்ச் செக் பண்ணனும். போலிக் கார்டு இருக்கான்னு பார்க்கணும்.”

கடைக்காரர் “அதுதான் அலிஸ்டெண்ட் கமிஷனர் ஆபீஸ்ல, கவுண்டர்பாய்ல்ஸ் வச்சி, செக் பண்ணுறாங்க. அப்படிச் செக் பண்ணு ைபிற்பாடுதான் சரக்கு வருது. செக் பண்ணுனதை ஏன் செக் பண்ணனும்?” என்றார்.

“அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஆபீஸைப்பத்தி எனக்குச் சொல்லித் தர்றியா? அந்த ஆபீஸ் இல்லாட்டா, அரிசி இன்னும் நிறையக் கிடைக்கும். நான் அங்கே இருந்துதான் டிபுடேஷன்ல போயிருக்கேய்யா. என்கிட்டேயே காது குத்றியே?”

“ஸார்! உங்க சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மட்டும் யோக்கியமா? போனமாசம் ஒரு கூத்து கேளுங்க. பொதுவா, கோடோன்ல இருந்து வந்த அரிசி வகைகளை லாரில கொண்டு வரும்போது எடை எத்தனைங்றதையும் லாரி டிரைவர் கிட்ட எழுதி அனுப்புவாங்க. போன மாதம் பின்னாலேயே எடை விவரம் வருது. நீ முன்னாலேயே வந்துட்ட லாரியில் இருந்து சரக்கை கிளியர் பண்ணு’ ன்றாங்க நான் இறக்கிட்டேன். பத்து நாள் கழிச்சி, எடை பட்டியலை அனுப்பினாங்க. லாரியில் வந்த எடையை விட அரைப்பங்கு அதிகம் போட்டு, என்கிட்ட இருந்து ரிகவரி” பண்ணிட்டாங்க இந்த மாதிரி அக்ரமம் எங்கேயும் உண்டா? நீங்களே சொல்லுங்க ஸார்”

இன்ஸ்பெக்டர் சொன்னார். “இவ்வளவு அக்கிரமம் நடந்திருக்கே, நீ ரிப்போர்ட் பண்ணினியா? புட் கமிசனருக்கு எழுதினியா?”

“இல்ல ஸார்”.

“ஏன் இல்ல? நான் சொல்லட்டுமா? உன் வீக்னஸ் கோடோன்காரங்களுக்குத் தெரியும். திருடனுக்குத் தேள் கொட்டினது மாதிரி, நீங்க அரிசி மூட்டையில் வாளி வாளியா தண்ணி ஊத்தி, ஓவர் வெயிட் பண்றிங்க. அவரும் போன்ல பேசி ஓவர் வெயிட் பண்ணிட்டார். உங்க ‘வெயிட்’ பிரச்சினையை ஜனங்களும் பார்த்துக்கிட்டு சந்தர்ப்பத்துக்காக வெயிட்’ பண்றாங்க, கியூவில் மட்டும் வெயிட் பண்றதா நினைக்காதே சரி, சரி, வா…கார்டுங்கள செக்’ பண்ணலாம் “

கடைக்காரர் ஒரு பரோபகாரி. ஆகையால் “ஐயா, தப்பா நினைக்கக் கூடாது. இப்போ ஏழை ஜனங்க வர்ர நேரம் பாவம். கஷ்டப்படுற ஜனங்க ரவைக்காவது, மைதாவுக்காவது வருவாங்க அவங்களுக்குச் சரக்குக் குடுக்கிற நேரத்துல வீடு வீடாய் அலையுறது சரியாய்த் தோனலே” என்றார்.

இன்ஸ்பெக்டரும் ஒரு பரோபகாரி. ஆகையால், “ஆமாய்யா, ஏழை ஜனங்கள காக்க வைக்கிறது தப்பு நீ ரிஜிஸ்ட்டர எங்கிட்ட கொடு, நானே செக் பண்ணி, ஏதாவது தப்புத் தண்டா இருந்தா, நேரா ஆபீஸ்ல போயி எழுதிக்கிறேன்.”

கடைக்காரர் மறுமொழி கூறாமல், திறந்த கடையைப் பூட்டினார். செக்கிங்கும் ‘கடையும்’ நடை போட்டனர். முதல் நம்பர் முனியாண்டி வீட்டுக்குப் போனார்கள். முனியாண்டியிடம் கார்டு இருந்தது. இன்ஸ்பெக்டர் திருப்தியடைந்தார்.

கடைக்காரருக்கு, போன உயிர் திரும்ப வந்தது. முனியாண்டியிடம் ரேஷன்கார்டு இருப்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, அவன் அந்த கார்டை வேற கடையில் பதிந்து வைத்திருப்பது. இதை அறிய, செக் கிங் ஸாருக்குத் தோன்றவில்லை.

இருவரும் அலையும் கோலத்தைப் பார்த்து, சிலர் தத்தம் வீடுகளை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டார்கள். ‘செக்கிங்’ இன்ஸ்பெக்டரிடம் இருந்த ரிஜிஸ்டரைப் பார்த்த சிலர், அவர்களை ‘டொனேஷனுக்கு வருவதாக நினைத்து தலை மறைந்தார்கள்.

நாலாவது சீரியல் நம்பரில் ஒரு பெண். இன்ஸ்பெக்டர் அவளிடம் “கார்டு இருக்கிறதா?” என்று கேட்க, அவர் “கார்டு இருக்கு, பனந்தான் இல்லே” என்றார். இன்ஸ்பெக்டருக்குத் திருப்தி, கடைக்காரருக்கு ஒன்றும் புரியாத மகிழ்ச்சி. அந்தப் பெண் சொல்ல வந்தது பால்கார்டைப் பற்றி, எப்படியோ கடைக்காரர் பிழைத்தார். மேலும் சில வீடுகளைப் பார்த்தார்கள். சரியாக இருந்தன. இதுதான் சமயம் என்று நினைத்த கடைக்காரர், “ஸ்ார், ஏழை ஜனங்க காத்திருப்பாங்க, போகலாமா? ” என்றார்.

“ஆமாய்யா, நீ போயிடு. நான் நிதானமாகப் பார்த்துட்டுப் போறேன்.”

கடைக்காரர் பதில் பேசாமல் கோவிந்தசாமி வீட்டைக் கண்டுபிடித்தார் கோவிந்தசாமி வெளியே போயிருப்பதாகவும், அவரிடம் ரேஷன் கார்டு இருப்பதாகவும் அண்டை வீட்டு நாராயணசாமி சொன்னார். செக்’கிங் திருப்தியுற கடை’க்குப் போன உயிர் திரும்ப வந்தது. வெளியே போயிருக்கிறார்’ என்ற நாராயணசாமியின் வார்த்தைக்கு அந்த ஆசாமி நாலைந்து மாதமாக ஊரில் இல்லை என்ற டிக்ஷனரி மீனிங்கும், அந்த ஆசாமியின் பேரில் சரக்குப் போட்டு, கடைக்காரர் சக்கையோடு போடுகிறார் என்பதும் இன் ஸ்பெக்டருக்குத் தெரியவில்லை.

போன வீட்டிற்கே, மீண்டும் போவதைப் பார்த்த இன்ஸ்பெக்டருக்கு ஒரு சந்தேகம் வந்தது. ரிஜிஸ்டரை உற்றுப் பார்த்தார்.

“ஏய்யா, இந்த வீட்ல. ராமசாமி இருக்கிறாரான்னு ஏற்கன்வே பாத்துட்டோம் இன்னொரு வாட்டி அவன் எப்படிய்யா முளைச் சான்?”

கடைக்காரர் வெலவெலத்துப் போய், ரிஜிஸ்டரைத் தாங்கிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டரின் முழங்கைக்குள் முகத்தை நீட்டினார் அவருக்கு ஒரு ஐடியா தோன்றியது. வியாபாரியாச்சே!

“ஸார். அது ராமசாமி இது இராமசுவாமி. இரண்டு பேரு ஒரே வீட்டில் இருக்காங்க எழுத்து வித்தியாசம் தெரியுதுல்லா?”

இன்ஸ்பெக்டருக்குப் பாதிச் சந்தேகம் தீர்ந்துவிட்டது. மீதிச் சந்தேகம் தீர்த்துக் கொள்ள நினைத்தவர்போல், அதை விட்டு, படிக்கட்டில் இருந்த நபரைப் பார்த்து இந்த வீட்டில் ரெண்டு ராமசாமி இருக்காங்களா?” என்றார்.

‘ஒரு ராமசாமி கூட இல்ல; ரெண்டுக்கு எங்கே போறது என்று சொல்லப்போன படிக்கட்டுக்காரர் தற்செயலாக, கடைக்காரரின் மெய்ப்பாடுகளைக் கவனித்தார். ‘இந்த வியாபாரிங்களே சுத்த மோசம் இவங்களை ஒழிச்சிக் கட்டிாைத்தான், நாடு உருப்படும். இப்படி மனத்தில் நினைத்துக் கொண்டு பேசப்போன அதே நபரின் கண்கள் இன்ஸ்பெக்டருக்குத் தெரியாமல், கும்பிடும் கடைக்காரரின் கைகளைப் பார்த்தன. கடைக்காரர் தம் சைகைகளை விரிவுபடுத்தினார். தனது கழுத்தைச் கற்றி இரண்டு விரல்கள் வட்டம் போட்டார். (அவருக்குக் கல்யாணம் ஆகிவிட்டதாம்.) கீழே ஒரு கையையும், அதற்கு மேலே ஒரு அடி தள்ளி இன்னொரு கையையும் காண்பித்துவிட்டு எட்டு விரல்களை நீட்டிக் காண்பித்தார் (அவருக்கு எட்டுப் பிள்ளைகள் இருக்காம்.) பிறகு கீழே பூமியை நோக்கி விரல்களைக் குவித்துவிட்டு, பின்னர் அதே கையை வாய்க்குக் கொண்டு வந்தார். (அவர் வாயில் மண்ணைப் போட்டுவிடக் கூடாதாம் ) படிக்கட்டு ஆசாமிக்குத் தாராள மனசு எல்லாந் திருடனுங்க இவனும் திருடுகிறான் ஒழிஞ்சி போறான் இவனைப் பிடிச்சிக் கொடுக்கிறதில என்ன லாபம்? இப்போ உதவினால், நாளைக்குக் கார்டு இல்லாமலே எல்லாம் வாங்கிக்கலாம். அந்த லட்சிய வீரரின் மனம், இரக்கத்தின் மீது உட்கார்ந்தது.

செக் கிங் மீண்டும் கேட்டார்.

“ராமசாமி இருக்கிறது மாதிரி இராமசுவாமி இருக்காரா?”

படிக்கட்டார் சிரித்தார்.

“நான்தான் ராமசாமிங்கிறது. இன்னொரு ராமசாமி இருக்கான் அவன் இப்போ, அரிசி வாங்கப் போயிருக்கான் “

இன்ஸ்பெக்டர், அந்த பாரதபிரஜையின் பதிலினால் திருப்தியடைந்தார் கடைக்காரரும் அவரும், கடைசியில் குடிசை மாற்று வாரியத்’துக்குள் நுழைந்தார்கள் 318 ஆம் நம்பர் மாரியாத்தாவைக் கண்டார்கள்.

“ஏம்மா, ரேஷன் கார்டு கீதா?”

“கீது. ஆனால் இப்போ..”

“இப்போ என்ன? சொல்லு.”

“வச்சிட்டேம்பா.”

“நீ என்ன சொல்ற?”

“அடகு வச்சிட்டேம்பா.”

இன்ஸ்பெக்டருக்கு பயங்கரமான கோபம்.

“ஏம்மா, உனக்கு புத்தி இருக்கா? அடகு வைக்கிறது இருந்தா, நம்ம நகை நட்டுகளை வைக்கணும். இல்லன்னா பாத்திரங்கள வைக்கனும். ரேஷன் கார்டையா வைக்கிறது?”

“எல்லாத்தையும் வச்சிட்டேம்பா. அதுங்க தீர்ந்து பூட்டு: அதனாலதான் இது வச்சேன்.”

“எந்த மடையங்கிட்ட வச்ச? சொல்லு அவனையும் உன்னையும் உள்ளே தள்றேன்.”

“இதோ கீறாரே, இவரண்டதான் வச் சேம்பா.”

இன்ஸ்பெக்டர், கடைக்காரரைப் பார்த்து முறைத்தாள். அவர் ஒரு நொடி மயங்கி, மறுநொடி தயங்கி பிறகு சமாளித்தார்.

“ஸார், இந்த அம்மாவுக்கு எதையும் வச்சித் திங்கறது தான் தொழிலு. ரேஷன் கார்டை அடகு பிடிக்கவும் ஆளுங்க இருக்காங்க. எவன் கிட்டேயாவது வச்சித் தொலைச்சி, அரிசி இல்லேன்னு கஷ்டப்படுமேன்னு இரக்கப்பட்டு, நான் பிடுங்கி வச்சிட்டேன்.”

இன்ஸ்பெக்டர், கடைக்காரர் சொல்வது சரிதானா என்பதுபோல் அந்தப் பெண்ணைப் பார்த்தார். கடைவாலா, சுதாரித்துப் பேசினார்.

“ஏய் பொண்ணு, உள்ளதைச் சொல்லு. இல்லன்னா ஐயா, உள்ள தள்ளிடுவாரு ஒன் கார்டு என்கிட்ட இருந்தாலும், முந்தாநாள் அரிசி தந்தேனா இல்லியா? உள்ளதைச் சொல்லு. இல்லன்னா ஐயா உள்ள தள்ளிடுவாரு. கடைக்காரர் பயமுறுத்தும் பாணியில் கேள்விகளை அடுக்கினார்.

அந்தப் பெண் பயந்துவிட்டாள். “ஆமாங்க, கடைக்காரர் முந்தாநாள் தந்தாரு வாய்க்கு அரிசி நல்லா கீது” என்று, ‘உள்ளதைச்’ சொன்னாள்.

செக்கிங்ஸ்ாரும், கடைக்கார அண்ணாச்சியும், நாதித் தெருவில் போர் டொண்டி’ அதாவது 420 ஆம் நம்பர் நல்லகண்ணுவைக் கண்டுபிடிக்க அலைந்தார்கள் நம்பரையும் காணவில்லை. நபரையும் காண வில்லை. இன் ஸ்பெக்டர் தெருப்பக்கத்தில், பீடிக் கடைக்காரரை விசாரித்தார். கடைக்காரர், கையைப் பிசைந்தார் அந்தத் தெருவில் 317க்குப் பிறகு நம்பரே கிடையாதாம். கடைக்காரர் தலையைப் பிசைந்தார். இன்ஸ்பெக்டர் தன் கண்டுபிடிப்பில் பெருமிதம் கொண்டார்.

“கடைசியில் நீயும் கள்ளக் கார்டு தானா?”

கடைக்காரர் பதில் சொல்வதற்கு முன்னால் இன்ஸ்பெக்டரின் கேள்வியைக் காதிற்போட்டுக் கொண்ட ஜிப்பாக்காரர் ஒருவர், “அந்த அநியாயத்தை ஏன் கேக்கரீங்க? கள்ள கார்டுங்க மட்டுமில்ல, தராசுத் தட்டுல அரிசியை ‘தொப்புன்னு வேகமாகப் போட்டு. தட்டை மேலே தூக்கி, அது கீழே வர்றதுக்கு முன்னாடியே அரிசியை இறக்கிடறது கூட்ட நெரிசலிலே யாரும் இதைப் பார்க்கிறது கிடையாது. இத கேக்க நாதியில்ல. மஸ்தானையும், பாக்கியாவையும் பிடிக்கிறது சரிதான். இந்தக் குட்டி மஸ்தான்களை விட்டு வைக்கிறது நாட்டுக்குச் சனி போகலன்னு அர்த்தம்.”

இன்ஸ்பெக்டர் கடைக்காரரைப் பார்த்து கோபமாக முறைத்தார். ஜிப்பாக்காரர் மகிழ்ச்சி அடைந்து அந்த இடத்தை விட்டு அகலும் வரை முறைத்தார். பிறகு கடைக்காரரைப் பார்த்து,

“யோவ் இப்படி எத்தனை போலிப் பெயருங்க வச்சிருக்கே?” என்றார்.

கடைக்காரர் பதறிப் போய் “அப்படியெல்லாம் கிடையாதுங்க லார் இந்த ஒண்ணு எப்படிய்ோ பிடிபட்…இல்ல தப்பா விட்டு. வேணுமுன்னா செக் பண்ணுங்க. “

இன்ஸ்பெக்டர், மீண்டும் ரிஜிஸ்டரைப் புரட்டினார்.

“ஏய்யா, நல்லப்பா தெருவுல 148ஆம் நம்பர் நாகராஜனுக்குக் கார்டு இருக்கா?”

“இருக்குங்க இது தப்புங்றதினாலே அது தப்பாயிடாது. போன வாரம், அவன் நாகராஜன் என் சொந்தக்காரன். ஆனால் குடிகாரப் பயல்”.

இன்ஸ்பெக்டரின் உதடு கொதித்தது

“யோவ், நான் குடிகாரனா? நான் உன் சொந்தக்காரனா?”

“ஐயா என்ன சொல்றீங்க?”

“நான்தாய்யா நாகராஜன் என்கிற செக்கிங் இன்ஸ்பெக்டர் எனக்குக் கார்டு இருக்கா? அதுவும் போனவாரம் உன் கடையில் வந்து அரிசி வாங்கினேனா? சொல்லுய்யா…”

கடைக்காரர். இப்போது உண்மையிலேயே பயந்து, முழுப் பூசணிக்காயைச் சோற்றில் திணிக்கும் வேலையை விட்டு பரிதாபமாக இன்ஸ்பெக்டரைப் பார்த்தார். இருவரும் கடைக்குத் திரும்பினார்கள். கடைக்காரர் இப்போது ஸ்டூல் எடுத்துப் போடவில்லை. பக்கத்து வீட்டுக்குப் போய் ஒரு குஷன்’ நாற்காலியைக் கொண்டு வந்து போட்டார் இன்ஸ்பெக்டரின் கோபம் அடங்கியதாகத் தெரியவில்லை பாழாப் போகிற உடுப்பிக்காரனும் அப்போது பார்த்து ஹோட்டலை மூடிவிட்டான்.

கடைக்காரர் பேச்சிைத் தொடங்கினார்.

“நான் பிள்ளை குட்டிக்காரன். ஐயா தான் மன்னிக்கணும் “

“உன் லைசென்ஸை ரத்து பண்றேனா, இல்லையா பாரு.”

“ஐயா பெரிய மனசு பண்ணனும் கடை லைசென்ஸ் போயிட்டா… நான் பிச்சைதான் எடுக்கணும் “

“உங்களைல்லாம் சும்மா விடக் கூடாதய்யா.”

கடைக்காரர் நாகாஸ்திரத்தைப் பிரயோகித்தார்

“ஐயா வீட்ல இந்த நாப்பது கிலோ அரிசியையும் கொண்டு வந்து போடுறேன் எத்தனை மணிக்கு வரச் சொல்றீங்களோ, அத்தனை மணிக்கு வாறேன். சாயங்காலமுன்னா செளகரியம். அதுக்குள்ள சர்க்கரையும் வந்திடும் “

செக்கிங் இன்ஸ்பெக்டர் யோசித்தார் பாவம் ஏழை அவன் வேட்டி கூட கிழிஞ்சி இருக்கு சட்டையில கூட பொத்தல் தலையில் எண்ணெயே இல்ல அலங்கோலமா இருக்கான் வீட்டுக்கு வரவழைச்சி புத்திமதி சொல்லலாம். ஒழிஞ்சி போறான்.

இன்ஸ்பெக்டர், கருணை உள்ளம் கொண்டவர்.

“சரி சரி, என் பெயரையும். வீடே இல்லாத ஆசாமி பேரையும் அடிச்சிடு இந்தா என் பால் கார்டு; இதையும் ரினிவ்’ பண்ணு (56ரூபாய்) இருட்டினதுக்கப்புறம் அரிசியோட வா. ஒழுங்காக இரு இல்ல. தொலைச்சிப் பிடுவேன்”

இன்ஸ்பெக்டர் போய்விட்டார்.

கடைக்காரரின் உடலை வெளியே காட்டும் ஆடைகள், 200 போலிப் பெயர்களால் 80 குவிண்டால் சர்க்கரையும், 150 குவிண்டால் அரிசியும் கிடைப்பதை ஊரின் கண்களுக்கு மறைக்கலாம். ஆனால் அவற்றை ‘பிளாக்கில்’ விற்று மாதா மாதம் சுமார் 4500 ரூபாய் வருமானம் வருவதை மறைக்கலாம் அந்தப் பணத்தினால், கடைக்காரருக்கு இரண்டு பெரிய வீடுகள் சென்னையில் இருப்பதையும், கிராமத்தில் இரண்டு கோட்டை” நிலம் இருப்பதையும் மறைக்கலாம். இது கூடப் பரவாயில்லை. இந்த எத்தர்கள் ஏழ்மைக் கோலம் போட்டு, ஏழைகளுக்குக் களங்கம் விளைவிப்பதைத் தான் அந்த ஆடைகள் மறைக்கவில்லை.

குட்டி மஸ்தானின் நியாய லீலைக் கடை’ நன்றாகவே நடக்கிறது. விவில் சப்ளைக் கார்ப்பரேஷனின் செக்கிங் ,இன்ஸ்பெக்டரின் சோதனையால் பொதுச் சொத்துக்கும் பலன் கிடைத்தது.

கடைக்காரரின் 200 போலிக் கார்டுகளில் இப்போது இரண்டு குறைந்து விட்டன.

– குற்றம் பார்க்கில் (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: நவம்பர் 1980, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

சு. சமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம், திப்பனம்பட்டியில் 1941-ம் ஆண்டு பிறந்தார். இள வயதிலேயே தந்தையை இழந்தார். கடையத்தில் ஆரம்பக்கல்வியை முடித்து பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். சு. சமுத்திரம் செங்கல்பட்டு அருகிலுள்ள காட்டுக்கரணை என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக அலுவலக வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழக அரசில் கூட்டுறவுத் துறை ஆய்வாளர், ஊராட்சி வளர்ச்சி அதிகாரி ஆகிய பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றுகையில் அதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்படவே பணியைத்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *