குடையைக் கண்டனீங்களோ?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 26, 2021
பார்வையிட்டோர்: 5,219 
 
 

“குடையைக் கண்டனீங்களோ?” –வழமை போல ஒவ்வொரு நாளும் காலை ஆறு மணிக்கு வீட்டிலிருந்து கடைக்குப் புறப்படும் போது இடம்பெறும் குடை தேடு படலம் தான்-

“குடையைக் கண்டனீங்களோ?”

வீட்டுக்கும் கடைக்கும் இடைத்தூரம் அதிகமில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு மூன்று நிமிட நேர நடை அல்லது மூன்னூறு மீற்றர் தூரம். ஒவ்வொரு நாளும் சொல்லி வைத்தாற் போல ஆறு மணிக்குப் போகத்தான் வேணும்-தினசரிப்பேப்பர் எடுப்பதற்கு.

மழைபெய்யயில்லை..மழைக்குணமும் இல்லை. ஆறு மணிக்கு வெய்யில் அடிக்காதென்றும் தெரியும். ஆனாலும் ஒரு காரணத்தோடு தான் குடையோடு போறனான்.

சின்னஞ்சிறு பருவத்திலிருந்து நானும் குடையும்- குடையும் நானும் சேர்ந்தே இருந்திருக்கின்றோம். குடை என்னைப்பிரிந்திருந்தாலும் நான் குடையைப்பிரிந்ததில்லை.

அந்தநாட்களில்…ஐம்பதுகளில் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பில் எனக்குப்பிடித்தமான விளம்பரப்பாடல்களில் “மான் மார்க்குடைகள்- மழையோ வெய்யிலோ மான் மார்க்குடைகள்” பாடல் முதலிடம் அரை நூற்றாண்டுக்குப் பின்னும் அந்தப்பாடலை மறக்க முடியவில்லை.

அந்த நாட்களில் ஆண்கள் பாவிக்கும் குடை பெரிதாகவும் வளைந்த பிடி கொண்டதாகவும் இருக்கும்। பெண்கள் பாவிக்கும் லேடிஸ் குடை சிறிதாகவும் எடின்பரோ கோமகன்-எலிசபெத் மகாராணி படம் கண்ணாடிக்குள் வைக்கப்பட்ட பிடி கொண்டதாகவும் இருக்கும்। சிறுவர்களுக்கு மிகவும் சிறிய குடையும் இருந்தது. எல்லாக்குடைக்கும் கறுத்த நிற பருத்திநூலால் செய்யப்பட்ட துணி. கறுத்தநிற பருத்தித்துணி வெப்பத்தை கடத்தாது-தலையைச்சூடாக்காது என ஆசிரியர் சொன்னதும் நினைவிலுண்டு. குடைக்கம்பியொன்றில் MADE IN ENGLAND என்று அச்சிடப்பெற்ற அட்டை இருக்கும். இங்கிலாந்தில் செய்யப் பட்ட குடையில் அந்த நாட்டு அரசர்- அரசிப்படத்தை வைப்பது தவறில்லை.

முன்பு லேடிஸ் குடையைக் கொண்டு போறதென்றால் எனக்குச்சரியான வெட்கம். இப்போது குடைகள் எல்லாம் கலர் மயம். கறுப்புக்குடை குறைவு. மடக்குக்குடை தான் அதிகம். ஆண் பெண் சிறுவர் என்ற வித்தியாசம் இல்லாமல் யாரும் எந்தக்குடையையும் பிடிக்கலாம். ஆனாலும் சிலர் ஆடைகளுக்குப் பொருத்தமான கலரிலை விதம் விதமான குடைகளும் வைத்திருக்கிறார்கள். குடை சிறிதாகவும் மடக்கத்தக்கதாகவும் இருப்பதால் ஆண்கள் காற்சட்டைப் பொக்கற்றுக்குள்ளும் பெண்கள் கைப்பைக்குள்ளும் குடையை மறைத்துக்கொண்டு போவது இரவல் கொடுப்பதற்குப் பயந்தல்ல- மறக்காமலிருப்பதற்காகவும் மற்றப்பிரச்சனைகள் வராமலிருப்பதற்காகவும் தான். மடக்குக் குடை வாங்குவதற்கு முதல் பல தடவை பல குடை தொலைத்த அனுபவம் நிறையவே உண்டு. குடை தொலைத்த அனுபவங்கள் மட்டுமல்ல….

ஒருநாள் காலையில் கந்தோருக்குப் போகும் வழியில் குடை தொலைந்து விட்டது. மத்தியானம் மழை பெய்ததால் சாப்பிடப் போவற்காக சக ஊழியரிடம்-“ குடையைக் கொஞ்சம் இரவல் தாறீங்களோ ?” எனக்கேட்ட போது- “ தம்பி கொஞ்சக்குடையைக் கொண்டு போனால் மழையிலை நல்லா நனைவியள். முழுக்குடையையும் கொண்டு போங்கோ. பிறகு திருப்பிக் கொண்டு வந்து தாங்கோ” என்றார்.

இன்னுமொரு மழை நாள். பஸ்ஸில் அதிக கூட்டம். சீற்றில் வலு குசாலாக் குந்தி இருந்து பயணம் செய்த எனது முதுகில் என்னருகே நின்றவரின் கையில் நீட்டிக்கொண்டிருந்த நீளக்குடைகாம்பு சாரதி போடும் ஒவ்வொரு தீடீர் பிரேக்குக்கும் ஒவ்வொரு குத்து. நியாயமாகப்பார்த்தால் திடீர் பிரேக் போடும் சாரதியோடு தான் சண்டை பிடிக்க வேணும். சக பிரையாணிகள் ஆதரவு தரமாட்டார்கள் என திடமாக நம்பியதால் கோபமாக குடையோடு நின்ற பிரையாணியைப்பார்த்தேன்.-“உங்கடை குடை நெடுக என்ரை முதுகிலை குத்துது. பொறுமைக்கும் எல்லை ஒரளவு இருக்கு”.

அவர் மிக நிதானமாச்சொன்னார்-“சொறி. தம்பி இது என்ரை குடையில்லை. இரவல் வாங்கின குடை”.

அவரை நன்றாக உற்றுப்பார்த்த போது தான் அடையாளம் காண முடிந்தது. அவர் எனக்கொரு வகையில் தாத்தா முறை. எழுந்து எனது சீற்றைக் கொடுத்து விட்டு பக்கத்தில் நின்ற போது பஸ் நடத்துனர் ‘முன்னுக்குப் போ..முன்னுக்குப்போ’ என என்னை ஒரேயடியாக முன்னுக்குத்தள்ளி விட்டார். அவருக்கு வேணும்- நல்லாக வேணும்-

பஸ்ஸிலிருந்து யாரோ இறங்குவதற்காக மணியடிக்கும் சத்தம். பஸ் நிறுத்தினால் இறங்குவார் ஒருவருமில்லை. மீண்டும் மணியடிக்கும் சத்தம். பஸ் நின்றது. ஒருவரும் இறங்கவில்லை. இப்படி இரண்டு மூன்று தடவை. சாரதிக்குச்சரியான கோவம்- “நீ என்ன கொண்டக்டர் வேலை. நெடுக மணியடிக்கிறாங்கள். நிப்பாட்டினால் இறங்கிறாங்களில்லை.

பிறகு தான் என்ன நடந்தது எனத்தெரிந்தது- தாத்தாவின் கையிலிருந்த குடைத்தடி மணியடிக்கிற கட்டையிலை ஒவ்வொரு தடவையும் இடிக்க இடிக்க மணி அடிக்க அடிக்க சாரதிக்குக் கோபம் வரும் தானே? என்னை தாத்தாவுக்குப் பக்கத்தில் நிற்க நடத்துநர் விட்டிருந்தால் சாரதியிடம் ஏச்சு வாங்கியிருக்க மாட்டார்.

முன்பு வீதிக்கு வீதி குடை திருத்திக் கட்டிக் கொடுப்பவர்களுடன் வீடு வீடாகச்சென்று குடை திருத்திக் கட்டிக்கொடுப்பவர்களும் இருந்தனர். கொழும்புக்கு நான் வந்த புதிதில் வாடகைக்கு அறை தந்த அம்மாச்சி வீட்டுக்கும் ஒரு குடை கட்டுறவர் வநதார். குடை கட்டி முடிய ஐந்து ரூபாவாவது கொடுக்க வேண்டி வரும் என அம்மாச்சி எதிர்பார்த்தார். ஆனால் குடை கட்டியவரோ ஒரு ரூபா போதும் ‘ என்றார்.

அம்மாச்சிக்கு புளுகம் தாங்க முடியயில்லை.- “கொஞ்சம் இரு. பக்கத்து வீட்டிலையும் பழங்குடை கட்டக் கிடக்கெண்டு சொன்னவை” என்று புறப்பட்ட அம்மாச்சி அக்கம்பக்கத்து வீட்டாருடன் புளுகத்தைப்பகிர்ந்து பழையகுடைகளுடன் வீட்டுக்குத் திரும்பிய போது குடை கட்டுபவரும் இல்ல. பெறுமதியான பொருட்களும் இல்லை.

இன்னுமொரு முறை குடை தொலைந்த போது – நடைபாதை வியாபாரி என்னை நட்பு பாராட்டி அழைத்தான்- “யப்பான் குடை..சரியான மலிவு யப்பான் குடை”

குடையை வாங்கி வடிவாகப்பார்த்தேன். முந்திய காலக்குடைகளில் MADE IN ENGLAND என இருப்பது போல யப்பான் மொழி எழுத்துக்கள் இருந்தது. மாற்றிய பணமில்லாததால் குடை வியாபாரியிடம் ஐந்நூறு ரூபா கொடுத்து மிகுதி நானூறு வாங்க முதல் அவனைப் பொலிசார் பிடித்துக்கொண்டு சென்றனர் – குடைகளோடு சேர்த்து. மிகுதிப்பணத்தை வாங்கித்தரும் படி கேட்ட என்னையும் பொலிசார் நீதிமன்றம் கொண்டு சென்றனர் குடை வியாபாரியோடு சேர்த்து.

நீதிமன்றில் வழக்கு-‘இலங்கையில் செய்த குடைகளை யப்பானில் செய்த குடைகள் என மக்களை ஏமாற்றினது குற்றம்’.

யப்பான் மொழி தெரிந்தவர் நீதிமன்றுக்கு வரவழைக்கப்பட்டார். அவர் மொழிபெயர்த்துச் சொன்னார்-“ இக்குடை இலங்கையில் செய்யப்பட்டது “ என யப்பானிய மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. வழக்குத் தள்ளுபடி. இப்போதும் யப்பான் குடை போல பல பொருட்கள் நடைபாதையில்..

“என்ரை குடையைக் கண்டனீங்களோ?”

“ஓ….குடை. கண்டறியாத குடை. இப்ப என்ன அடை மழையோ ? குடை பிடிக்க.”-இப்படி யார் அர்ச்சனை செய்வார்களென திருமணமானவர்களுக்குத்தெரியும். தினம் தினம் அர்ச்சனை வாங்கும் ஆசாமிக்கு…

“என்ரை குடையைக் கண்டனீங்களோ?” – பேப்பர் கடைக்குப் போற வழியில் ஒரு நாய். மிகவும் மெலிந்து கனத்தைக்கு போவதற்கு நாட்களை எண்ணும் நாய். அது என்னோடு சோலி சுரட்டுக்கு வரயில்லை. ஒருக்கால் நிமிர்ந்து பார்த்த போது நான் செருமி பயம் காட்டிப் போட்டேன். பிறகு பயமில்லை என நினைத்தேன்.

பேப்பர் கடைக்குப் பக்கத்திலுள்ள பாண் நல்ல ருசி. இடையிடை பாண் கடைக்குப் போய் வரும் போது தான் அந்த நாய் என்னைச் சோதனையிட வரும். நான் குரலை உயர்த்தி தமிழில் “ அடி “ என சொன்னதும் அந்த நாய் எனக்கு வழி விடும். அந்த நாய்க்கு தமிழ் மொழி தெரியுமென நினைக்கின்றேன்.

திடீர் திடீரென சோதனை நிலையங்கள் – அப்படியாக ஒரு சோதனை நிலையம் பேப்பர் கடைக்குப் போகும் வழியில் தோன்றி விட்டது. அடையாள அட்டை கைவசமுள்ள தால் அவர்களைப்பற்றிக் கவலையில்லை. எங்கிருந்தோ ஒரு நாய் அந்தச்சோதனை நிலையத்துக்கருகே நிரந்தர வசிவிடவாசியாகிவிட்டது. நாய்களிரண்டும் நல்ல சிநேகமாகியும் விட்டன.

“அடி” எனச்சொல்லு முன் வழி விட்ட பழைய நாய்க்கு இப்போது புது உற்சாகம். உர்க்க குரைத்துக்கொண்டு கடிக்க வாறதும் அந்த நாய் அதற்குப்பக்கத்துணையாகப் பாய்ந்து பாய்ந்து வாறதும் உங்களுக்கென்ன தெரியும்? அது சரி…

“என்ரை குடையைக் கண்டனீங்களோ ? “

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *