கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 28, 2024
பார்வையிட்டோர்: 1,684 
 
 

(2015ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27

25 – பப்லோவென்றொரு சமர்த்தனான முகவன்

இளங்கோவின் குறிப்பேட்டிலிருந்து…. 

வாழ்க்கை வழக்கம் போலவே உருண்டோடிக் கொண்டிருக்கிறது. ஒரு சில சமயங்களில் சலிப்பு மிகவும் அதிகமாகி நம்பிக்கை தளர்ந்து விடுகிறது. அச்சமயங்களிலெல்லாம் எந்தவிதமான எதிர்மறையான சிந்த 60) தாக்கவிடாமலிருப்பதற்காக நேரம் காலமென்றில்லாமல் நகர் முழுவதும் அலைந்து திரிந்து கொண்டிருப்பேன். அருள் கூட சில சமயங்களில் என் அலைச்சலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அறையிலேயே தங்கி விடுவான். இவ்விதமான சமயங்களில் நகரை, நகர மாந்தரை, சூழலை, சமூக வாழ்க்கையினை எனப் பல்வேறு விடயங்களை அறியும்பொருட்டுக் கவனத்தைத் திருப்பினேன். அவ்வப்போது நகரத்தின் பிரதான நூலகத்துக்குச் செல்வதுமுண்டு. ஒரு சில சமயங்களில் புரூக்லீன் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் நண்பர்களைச் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதலாக அளவளாவி வருவதுமுண்டு. 

இதே சமயம் அனிஸ்மான் கூறியபடி மான்ஹட்டனிலிருந்த பலசரக்குக் கடையொன்றை நடாத்திக் கொண்டிருந்த குஜராத் தம்பதியினரிடமிருந்து வேலை வழங்கற் கடிதமொன்றினையும் எடுத்து வேலை செய்வதற்குரிய அனுமதிப்பத்திரத்துக்காக விண்ணப்பித்தோம். அதே சமயம் அனிஸ்மான் கூறியபடியே எம் விடயத்தில் சட்டவிரோதமாகத் தடுப்புக் காவலில் வைத்ததனாலேற்பட்ட மனித உரிமை மீறல்கள் விளைவித்த பாதிப்புகளுக்காக அமெரிக்க அரசிடம் நட்ட ஈடு கேட்டும் விண்ணப்பித்தோம். நாட்கள்தான் வேகமாகச் சென்று கொண்டிருந்தனவே தவிர காரியமெதுவும் நடக்கிறமாதிரித் தெரியவில்லை. இதே சமயம் மீண்டும் பகல் நேரங்களில் வேலை தேடும் படலத்தை ஆரம்பித்தோம். இவ்விதமாகக் காலம் சென்று கொண்டிருந்தபோதுதான் ஒருநாள் நண்பகற் பொழுதில் மகேந்திரனைச் சந்தித்தேன். 

இவன் கிரேக்கக் கப்பலொன்றில் பல வருடங்களாக வேலை பார்த்து விட்டு அண்மையில் அக்கப்பல் நியூயார்க் வந்திருந்த சமயம் பார்த்து இங்கேயே தங்கி விட்டவன். இப்பொழுது என்னைப்போல் வேலை தேடிக் கொண்டிருந்தான். ஒரு நாள் வழக்கம் போல் பகல் முழுவதும் அலைந்து திரிந்து சலித்துப் போய் நாற்பத்திரண்டாவது வீதியிலிருந்த பிரதான பஸ் நிலையத்தில் பொழுதினை ஓட்டிக் கொண்டிருந்தபொழுது அவனாகவே வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தான் வேலை தேடித்தருமொரு முகவனைச் சந்திக்கப் போவதாகவும் அவன் மிகவும் திறைமைசாலியென்று கேள்விப்பட்டிருப்பதாகவும், நான் விரும்பினால் நானும் அவனுடன் அந்த முகவனைச் சந்திக்க வரலாமென்றும் கூறினான். அவனது கூற்றிலிருந்த உற்சாகம் சலித்துக் கிடந்த என் மனதிலும் மெல்லியதொரு நப்பாசையினை ஏற்படுத்தியது. அத்துடன் மகேந்திரன் கூறிய இன்னுமொரு விடயம்தான் எனக்கு மீண்டும் அத்தகையதொரு நப்பாசையினை ஏற்படுத்தக் காரணமாகவிருந்தது. அவனறிந்தவகையில் இந்த முகவன் அவனைச் சந்திக்கும் முதல்நாளிலேயே உடனடியாக வேலைக்கு அனுப்பி விடுவானாம். அதுதான் அவனது சிறப்பாம். அவன் அமெரிக்க மண்ணில், குறிப்பாக நியூயார்க் மாநகரில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் மக்களனைவருக்கும் ஆபத்தில் அபயமளிக்கும் கடவுளாம். அவன் இவ்விதமாகவெல்லாம் அந்த முகவனைப் பற்றி அளந்து கொட்டவே நான் கேட்டேன்: “இதையெல்லாம் எங்கையிருந்து நீ அறிந்து கொண்டனி”. அதற்கவன் வழியில் சந்தித்த ஸ்பானிஷ்காரனொருவன் கூறியதாகவும், அவன் தந்திருந்த பத்திரிகையொன்றிலும் இந்த முகவனின் விளம்பரம் வந்திருந்ததாகவும், அதில் கூட இவனைச் சந்திக்கும் எவரையும் உடனடியாகவே வேலை செய்யுமிடத்திற்கு அனுப்பிவிடுவதில் இவன் சமர்த்தனென்று குறிப்பிடப்பட்டிருந்ததைத் தான் பார்ததாகவும் கூறியபொழுது எனக்கும் அந்த முகவன்பேரில் நல்லதொரு அபிப்பிராயமேற்பட்டது. இதன்விளைவாக நானும் மகேந்திரனுடன் சேர்ந்து அந்த முகவனிடம் செல்வதற்குச் சம்மதித்தேன். விடா முயற்சியில்தானே வாழ்க்கையின் வெற்றியே தங்கியுள்ளது. ஊக்கமது கைவிடேலென்று அவ்வைக் கிழவி கூட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்துரைத்திருக்கின்றாளல்லவா. 

பப்லோ ஒரு ஸ்பானிஷ்கார முகவன். மிகவும் அழகிய தோற்றமும், மயக்கும் குரல்வாகும் வாய்க்கப்பட்டவன். அவனும் நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கண்மையிலுள்ள சிறியதொரு காரியாலயத்தில் தன் தொழிலை நடாத்திக் கொண்டிருந்தான். நாங்களிருவரும் அவனைச் சந்தித்தபொழுது அவன் சிறிது ஓய்வாகவிருந்தான். ஓரிருவர்தான் அவனைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தார்கள். அவர்களையெல்லாம் அனுப்பிவிட்டு எம்மிடம் வந்தவன் எங்களிருவரையும் தன்னறைக்கு அழைத்துச் சென்றான். எங்களிருவரின் சோகக் கதைகளையும் மிகவும் ஆறுதலாகவும், அனுதாபத்துடனும் கேட்டான். அதன்பிறகு அவன் கூறினான்: “உங்களைப் போல்தான் நானும் ஒருகாலத்தில் தென்னமெரிக்காவிலிருந்து இந்த மண்ணுக்குக் கனவுகளுடன் காலடியெடுத்து வைத்தவன். அதனால் உங்களது உள்ளத்துணர்வுகளை என்னால் நன்கு உணர முடிகிறது. அன்று நானடைந்த வேதனையான அனுபவங்களின் விளைவாகத்தான், இவ்விதமாக இந்த மண்ணில் நான் அன்று வாடியதைப் போல் வாடும் உங்களைப் போன்றவர்களுக்கு உதவுவதற்காக இந்த வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தையே ஆரம்பித்தேன். இதற்காக நான் அறவிடுவதும் கூட அப்படியொன்றும் பெரிய கட்டணமல்ல. ஐம்பது டாலர்கள் மட்டும்தான்”. 

அதன்பின் எங்களிருவரையும் வேலை தேடுவதற்கான விண்ணப்படிவங்களை நிரப்பும்படி தந்தான். தான் எங்களிருவரையும் நல்லதொரு தொழிற்சாலைக்கு அனுப்பப் போவதாகவும், அதற்கேற்ற வகையில் அனுப்புமிடத்தில் எம் வேலை அனுபவங்களைக் கூறவேண்டுமெனவும் அறிவுரைகள் தந்தான். ஐம்பது டாலர்களைக் கட்டிய மறுகணமே தொலைபேசியில் யாருடனோ எம்மிருவரின் வேலை விடயமாகக் கதைத்தான். உடனடியாகவே அனுப்பி வைப்பதாகவும் உறுதியளித்தான். அதன்பிறகு எங்கள் பக்கம் திரும்பி “நண்பர்களே! இன்று நீங்கள் யார் முகத்தில் விழித்தீர்களோ! உங்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. உங்களிருவரையும் நகரிலுள்ள நல்லதொரு ‘மெயிலிங்’ தொழிற்சாலைக்கு அனுப்பப் போகின்றேன். வேலையும் அவ்வளவு சிரமமானதல்ல. மெயில்களை தரம் பிரிப்பதுதான் பிரதானமான வேலை. அது தவிர வழக்கம்போல் தொழிற்சாலைக்குரிய பொதுவான வேலைகளுமிருக்கும். வேலையை மட்டும் ஒழுங்காகச் செய்தீர்களென்றால் உங்களிருவருக்கும் நல்லதொரு எதிர்காலமே இருக்கிறது. என்னை உங்களின் கடவுளாகவே கொண்டாடுவீர்கள்.” இவ்விதம் கூறியவன் குயீன்ஸ்சில் ‘ஸ்டெயின்வே’ பாதாள இரயிற் தரிப்பிற்கண்மையிலிருந்த தொழிற்சாலையொன்றின் முகவரியைத் தந்து, அங்கு சென்றதும் மனேஜர் டோனியைச் சந்திக்கும்படி கூறி வாழ்த்தி அனுப்பி வைத்தான். 

மகேந்திரனோ இதனால் பெரிதும் ” உற்சாகமாகவிருந்தான். “பார்த்தியா. ஆள் வலு கெட்டிக்காரன்தான். இவனைப் பற்றிக் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான்” என்றான். இதே சமயம் என் நெஞ்சிலும் ஆனந்தம் கூத்தாடாமலில்லை. இந்த வேலை கிடைத்ததும் இரவு அருளிடம் கூறி அவனை அதிசயிக்க வைக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டேன். அத்துடன் அவனையும் அடுத்தநாள் பப்லோவிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்த வேண்டுமென்றும் மேலதிகத் திட்டமொன்றினையும் போட்டேன். இவ்விதமான திட்டங்கள், கனவுகளுடன் அத்தொழிற்சாலையினைச் சென்றடைந்தோம்.’ரிசப்ஷனில்’ இருந்தவளிடம் மனேஜர் டோனியைச் சந்திக்க வந்த விடயத்தைக் குறிப்பிட்டோம். அச்சமயம் அவ்வழியால் வந்த நடுத்தர வயதினான வெள்ளை நிறத்தவனொருவன் “நான் தான் நீங்கள் குறிப்பிடும் டோனி. யார் உங்களை அனுப்பியது பப்லோவா” என்றான். நாம் அதற்கு “ஆம்” என்று பதிலளிக்கவுமே அவன் உடனடியாக எங்களிருவரையும் அருகிலிருந்த உணவறைக்குக் கூட்டிச் சென்றமர்த்தினான். அத்துடன் பின்வருமாறும் கூறினான்: ‘உண்மையைச் சொன்னால் எனக்கு இந்த ப்ப்லோவை யாரென்றே தெரியாது. அண்மைக் காலமாகவே இவன் என் பெயரை எப்படியோ தெரிந்து கொண்டு உங்களைப் போல் பலரை இங்கு இவ்விதமாக அனுப்பி வைக்கின்றான்.” . எங்களிருவருக்கும் பெரிதும் திகைப்பாகவிருந்தது. இதனை நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை. டோனி மேலும் தொடர்ந்து “யாரவன்? வேலை வாய்ப்பு தேடித்தரும் முகவனா?” என்றான். அதற்கு நாங்களிருவரும் ‘ஆமென்று தலையாட்டவே அவன் கேட்டான் “இதற்காக நீங்களேதாவது பணம் கொடுத்தீர்களா?” இதற்கும் நாம் பரிதாபமாக ‘ஆமென்று பதிலிறுக்கவே அவன் சிறிது பரிதாபப்பட்டான். அத்துடன் கூறினான்: “இந்த விடயத்தில் நான் கூறக் கூடியது இது ஒன்றுதான். இந்த விடயத்தை இங்குள்ள காவற் துறையினரிடம் சென்று முறையிடுங்கள். இல்லாவிட்டால் இவன் தொடர்ந்தும் உங்களைப் போல் பலரை ஏமாற்றிக் கொண்டேயிருப்பான். என்னை இந்த விடயத்தில் நீங்கள் சாட்சியத்திற்காக அழைத்தால் வந்து கூறத் தயாராகவிருக்கிறேன்.” 

அச்சமயத்தில் மகேந்திரனின் முகத்தைப் பார்த்தேன். என்னைப் பார்ப்பதற்கே கூச்சப்பட்டுக் கொண்டிருந்தான். வெளியில் வந்தபொழுது சிறிது நேரம் இருவருமே ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை. காவற் துறையினரிடம் முறையிடும்படி டோனி கூறியது நினைவுக்கு வந்தது. எப்படி முறையிடுவது? நாங்களோ வேலை செய்வதற்கும் அனுமதியற்ற சட்டவிரோதக் குடிகள். சட்டவிரோதமாக வேலை செய்வதற்காகப் பணம் கொடுத்தோமென்று எவ்விதம் அவர்களிடம் முறையிடுவது? எங்களைப் போன்றவர்களின் நிலையினைப் பயன்படுத்திப் பணம் பறிப்பதற்குத்தான் எத்தனையெத்தனை கூட்டங்களிங்கே? 

அச்சமயம் மகேந்திரன் பப்லோவைப் பற்றி ‘அவனைச் சந்திக்கும் முதல்நாளிலேயே உடனடியாக வேலைக்கு அனுப்பி விடுவானாம். அதுதான் அவனது சிறப்பாம். அவன் அமெரிக்க மண்ணில், குறிப்பாக நியூயார்க் மாநகரில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் மக்களனைவருக்கும் ஆபத்தில் அபயமளிக்கும் கடவுளாம்’ என்று கூறியது நினைவுக்கு வந்தது. இலேசாகச் சிரிப்பும் வந்தது. “என்ன சிரிக்கிறாய்?” என்றான் மகேந்திரன். 

“நீ அவனைப் பற்றி ஆரம்பத்தில் கூறியதை நினைச்சதும் சிரிப்பு வந்ததென்றேன். 

அவன் புரியாத பார்வையுடன் என்னைப் பார்த்தான். 

நான் கூறினேன்: “நீ தானே சொன்னாய் அவன் முதல்நாளிலேயே வேலைக்கு அனுப்பி விடுவதில் வல்லவனென்று. அதை நினைச்சுத்தான் சிரித்தேன். ஒரு விதத்திலை அதுவும் சரிதான். எங்களையும் உடனேயே வேலை செய்யுமிடத்துக்கு அனுப்பி விட்டான்தானே. வேலைக்கு அனுப்புவதிலை கெட்டிக்காரனென்றுதானே சொல்லுகிறான். வேலையை எடுத்துத் தருவதிலை கெட்டிக்காரனென்று அவன் கூறவில்லைதானே. இந்த விதத்திலை அவன் தன்னைப் பற்றிப் பண்ணியிருக்கிற விளம்பரம் சரிதானே” 

இதைக் கேட்டதும் மகேந்திரனின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே! 

அன்றிரவு அறைக்குத் திரும்பியபொழுது அருள்ராசா கேட்டான்: “ஏதாவது கொத்தியதா?”. சென்ற விடயம் வெற்றியா, தோல்வியா அல்லது காயா பழமா என்பதற்குப் பதிலாக நாம் ‘கொத்தியதா’ என்ற சொல்லினைப் பாவிப்பது வழக்கம். அந்த வழக்கத்தில்தான் அருள்ராசா அவ்விதம் கேட்டான். ஆனால் அவனுக்குப் பப்லோவென்றோர் அரவம் கொத்திய விடயத்தை எவ்விடம் தெரிவிப்பது? 

26 – நடுவழியில்

ஸ்பானிஷ்கார முகவனான பப்லோவுடனான அனுபத்தின் பின்னர் இளங்கோ முகவர்களின் மூலம் வேலை தேடும் படலத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தான். நேரடியாகவே நகரில் அலைந்து திரிந்து வேலை தேடும் படலத்தை ஆரம்பித்தான். சட்டவிரோதக் குடிகள் மில்லியன் கணக்கில் வசிக்குமொரு மாநகரில் தனக்கேன் வேலையொன்றை எடுப்பது சிரமமாகவிருக்கிறதென்று எண்ணியெண்ணி மனம் சலித்தான். இருந்தாலும் சோர்ந்து விடாமல் முயன்று கொண்டிருந்தான். இத்தகையதொரு சந்தர்ப்பத்தில்தான் அவன் ஜெயரட்ணத்தை மான்ஹட்டன் நகரத்துத் தெருக்களிலொன்றில் தற்செயலாகச் சந்தித்தான். ஈழத்தின் வன்னிமாவட்டத்தின் முக்கிய நகர்களிலொன்றான வவுனியாவைச் சேர்ந்தவனவன். நாற்பத்தியாறாவது தெருவிலுள்ள இத்தாலியனின் உணவகமொன்றில் பகல் நேரத்தில் உணவக உதவியாளனாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இளங்கோ அன்றாட வாழ்வுக்கே திண்டாடுவதைப் பார்த்த அவன் இளங்கோவுக்குப் பின்வருமாறு புத்திமதியொன்றைக் கூறினாள்: “இளங்கோ உனக்கு விருப்பமென்றால், பகல்நேரத்தில் ஓரிரு மணித்தியாலங்கள் செய்யக் கூடியதொரு சிறு வேலையொன்றுள்ளது. அதனை உனக்கு எடுத்துத் தரலாம். ஆனால் உன்னால் அதனைச் செய்ய முடியுமோ தெரியாது.. 

இவ்விதம் ஜெயரட்ணம் இழுக்கவே இளங்கோ “பரவாயில்லை ஜெயம். சொல்லு. முடிந்தால் செய்யிறேன். பார்ப்பம்” என்றான். 

அதற்கு ஜெயரட்ணம் “வேலையொன்றும் பெரிதாகக் கஷ்டமான வேலையில்லை. மத்தியான நேரத்தில் பதினொரு மணியிலிருந்து இரண்டு மணிவரையிலை எங்கட ரெஸ்ட்ராண்டிறிற்கு வருகிற ஓர்டர்களுக்குரிய சாப்பாட்டைக் கொண்டு சென்று குடுப்பதுதான். ‘டெலிவரி’ வேலை. சில நேரத்திலை கிட்டடியிலையும் இருக்கும். சில நேரத்திலை ஹை ரைஸ் பில்டிங்கிலை ஐம்பது அறுபது புளோரென்று ஏறி இறங்கவேண்டியும் வரும். பெரிதாகச் சம்பளமெதுவும் தரமாட்டான்கள். மினிமத்திற்கும் குறைச்சுத்தான் தருவான்கள். ஆனா சாப்பாட்டை ஓரடர் பண்ணுறவங்கள் நல்லா டிபஸ் தருவாங்கள். அதெல்லாம் உனக்குத்தான். மற்றது…” 

“மற்றது.. என்ன..” என்றான் இளங்கோ. 

அதற்கு ஜெயரட்ணம் தொடர்ந்து விளக்கமளித்தான்: “மத்தியானச் சாப்பாடும் தருவாங்கள். எங்கடை ரெஸ்டாரண்டிலிருந்து என்னத்தை வேண்டுமென்றாலும் எடுத்துத் தின்னலாம். அந்த விதத்திலை பார்க்கேக்கை பரவாயில்லையென்று சொல்லலாம். இன்னொரு நல்ல வேலை கிடைக்கிற வரையிலை கொஞ்ச நேரம் செய்யிறதாலை உனக்குத்தான் நல்லது. நல்லா யோசித்துச் சொல்லு. இன்றைக்கு முழுக்க நல்லா யோசி. விருப்பமென்றால் நாளைக்கே எங்கட ரெஸ்டாரண்டிற்கு பத்து மணி போலை வா. முதலாளிக்கு உன்னை அறிமுகம் செய்து வைக்கிறன்.” 

இதற்கு அடுத்த நாள் மறுமொழி கூறுவதாகக் கூறி விட்டு இளங்கோ ஜெயரட்ணத்திடமிருந்து விடைபெற்றான். அன்று தன்னிருப்பிடம் திரும்பும்போது பாதாள இரயிலில் அதுபற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தான். ஒரு விதத்தில் ஜெயரட்ணம் கூறுவதும் சரியாகவே பட்டது. பகற்பொழுதில் மூன்று மணித்தியாலங்கள்தான் வேலை. மணிக்கு மூன்று டாலர்கள் தருவார்கள். ஐந்து நாட்கள் வேலை செய்தால் நாற்பத்தியைந்து டாலர்கள் சம்பளமாகக் கிடைக்கும். அது அறை வாடகைக்கும், ஒரு போத்தலுக்கும் போதும். மூன்று மணித்தியாலத்திலும் பத்திலிருந்து இருபது டாலர்கள் வரையில் டிப்ஸ் கிடைக்குமென்று ஜெயம் கூறியிருந்தான். அந்த வழியில் பதினைந்து டாலர்களென்று பார்த்தாலும் வாரத்திற்கு எழுபத்தைந்து டாலர்கள் வரையில் வரும். எழுபத்தைந்தும் நாற்பத்தைந்தும் நூற்றியிருபது டாலர்கள் வரையில் வருமானம் வரும். அதே சமயம் மத்தியானச் சாப்பாடு இலவசமாகக் கிடைக்கும். அதற்குரிய செலவாகப் பத்து டாலர்களைப் போடலம். அந்த வகையில் வாரத்திற்கு ஐம்பது டாலர்கள் வரையில் வரும். ஆக மொத்தம் வாரம் நூற்றியெழுபது டாலர்கள் வரையில் வருமொரு தொழிலாக அதனைக் கருதலாம். அதுவும் மூன்றே மூன்று மணித்தியாலங்கள்தான் வேலை. செய்து பார்ப்பதில் தவறெதுவுமில்லை. கிழமைக்கு ஐம்பது டாலர்களையாவது சேமிக்க வேண்டும். அவ்விதம் சேமித்தால் ஒரு மாதத்திலை இருநூறு டாலர்கள வரையில் சேமிக்கலாம். ஆறு மாதங்கள் இவ்விதம் செய்தாலும் குறைந்தது ஆயிரத்தி இருநூறு டாலர்கள் வரையிலாவது சேர்க்கலாம். குறைந்தது கையில ஆயிரம் டாலர்கள் சேரும் வரையிலாவது இவ்விதம் வேலை செய்து பார்ப்பதில் தவறெதுவுமில்லை. இன்னுமொரு நியூயார்க் மாநகரத்து அனுபவமாக இதுவும் இருந்து விட்டுப் போகட்டும். இதற்குப் பிறகு கோஷிடமும் அவனுடைய தொழிற்சாலையிலேதாவது வேலை கிடைக்குமாவென்று முயன்று பார்க்க வேண்டும். அதுவே அவன் நியுயார்க் மாநகரத்தில் இவ்விதமாகச் சட்டவிரோதமாகச் செய்யும் இறுதி வேலையாகவிருக்க வேண்டும். அதுவும் பிழைத்தால் இந்த நகருக்குப் பிரியாவிடை கூறிவிட வேண்டியதுதான். 

எந்த நாட்டுக்குப் போகவென்று ஆரம்பத்தில் பயணத்தைத் தொடங்கினானோ அந்த நாட்டுக்கு கனடாவுக்குச் சென்று விட வேண்டியதுதான். உலகத்தின் சொர்க்கபுரியான அமெரிக்காவின் பிரதான நகரான நியுயார்க் மாநகரில் இதுவரையில் உணவகத்தில் ‘கிட்டார்’ அடித்துப் பார்த்தாகி விட்டது; மழைக்குக் குடை பிசினஸ் செய்து பார்த்தாயிற்று: நடைபாதை வியாபாரமும் செய்தாயிற்று; போதாதற்கு விளம்பரங்களும் விநியோகித்துப் பார்த்தாயிற்று. இனி மத்தியான உணவினை விநியோகித்துப் பார்ப்போம்; அதுவும் சரியில்லாவிட்டால் கோஷின் தொழிற்சாலையிலும் ஏதாவது வேலை கிடைக்கிறதாவென்று பார்ப்போம். ஒரு சமயம் அனிஸ்மானிடம் தொடுப்பதாகக் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ள அமெரிக்க அரசுக்கெதிரான மானநஷ்ட வழக்கில் அதிர்ஷ்டமடித்தால் இங்கேயே இருந்து விட வேண்டியதுதான். இவ்விதமாகச் சிந்தனை பல்வேறு வழிகளிலும் கிளைவிட்டோடும் நதியாகவோடியது. இளங்கோ பெரிதும்  சிந்தனை வயப்பட்டிருந்தான். 

அன்று அவன் நகர் முழுவதும் அலைந்து அறைக்குத் திரும்பும்பொழுது இரவு மணி பத்தைத் தாண்டி விட்டது. பாதாள இரயிலில் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தவனை ஒரு குரல் நனவுலகுக்கு மீட்டு வந்தது. 

“உனக்கு ஆட்சேபனையேது மில்லையென்றால் உன்னுடன் கொஞ்சம் கதைக்கலாமா?”

அவனது இருக்கைக்கெதிரிலிருந்த பெண்ணொருத்தியின் குரல்தானது. பார்ப்பதற்கு ‘பாப்’ பாட்டுக்காரி ‘சிந்தி லோப்பர்’ அவளது புகழ்பெற்ற பாடலான ‘Time After Time’ இல் வருவதைப் போல் பல்வேறு வர்ணங்களிலான ஆடைகளுடனும், கூந்தலுடனுமிருந்தாள். அவனது அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்க்கையில் அறிமுகமான பாப் பாடகி சிந்தி லோப்பர். அவளது ‘நேரத்திற்கு நேரம்’ என்ற மேற்படி பாடலை அவன் இரசித்துக் கேட்பதுண்டு; பார்ப்பதுண்டு. அவளது உணர்ச்சி பூர்வமான குரலில் அந்தப் பாடலைக் கேட்பது அவனுக்குப் பிடிக்கும்..நள்ளிரவில் படுக்கையில் படுத்திருந்தபடி, கடிகாரத்தின் ‘டிக்’ ‘டிக்’ ஒலியினைக் கேட்டபடி பிரிந்த காதலனைப் பற்றிய நினைவுகளில், நினைவுகளுடன் மல்லாடியபடி பாடும் பாடல் சிந்தி லோப்பரின் அற்புதமான குரலிலும், நடிப்பிலும் சிறந்து விளங்கும். எண்பதுகளில் ஒரு கலக்குக் கலக்கிய பாடலது. 

If you’re lost you can look and you will find me 
Time after time. 
If you fall I will catch you I’ll be waiting 
Time after time. 
After my picture fades and darkness has 
Turned to gray 
Watching through windows you’re wondering 
If I’m ok 
Secrets stolen from deep inside 
The drum beats out of time 

என்று அவள் பாடும்பொழுது உணர்வு பூர்வமாக உருகியுருகிப் பாடுவாள். அவனுக்குப் பிடித்த வரிகள். பார்வைக்கு சிந்தி லோப்பரைப் போலவேயிருந்த அந்த வெள்ளைக்காரப் பெண் தன்னுடன் எதைப் பற்றிக் கதைக்கப் போகின்றாளோவென்று வியந்தபடி தனது சிந்தனையைக் கலைத்த அவளையே நோக்கினான் இளங்கோ. அத்துடன் “எனக்கேதும் ஆட்சேபனையில்லை. தாராளமாகவே நீ கதைக்கலாம்” என்றும் கூறினான். 

“நானும் அப்பொழுதிருந்து பார்த்துக் கொண்டே வருகிறேன். அப்படியென்ன பலமான ஆழ்ந்த யோசனை?” என்றாள். 

அதற்கவன் “சிந்திப்பதென் பொழுது போக்குகளிலொன்று. சிந்திக்கும்பொழுது நான் என்னையே மறந்து விடுவதுண்டு.” என்றான். 

அதற்கவள் தன் அகன்ற விழிகளை மேலும் விரித்தபடி “சிந்திப்பதுன் பொழுது போக்கா? ஆச்சரியமாகவிருக்கிறதே! எத்தனையோ பொழுதுபோக்குகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தவிதமான பொழுதுபோக்கு பற்றி இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்” என்று வியந்தாள். அதை விட்டால் ஒவ்வொரு கணமும் இருப்புக்காகப் போராடுமவன் வாழ்க்கையில் வேறென்ன பொழுது போக்கிருக்க முடியும்? கனவுகள், கற்பனைகள், திட்டங்களெனச் சிந்திப்பதையும், இழந்தவற்றை இரை மீட்டு மகிழ்வதையும் விட்டால் வேறென்ன பெரிய பொழுது போக்கிருக்க முடியும்? செலவில்லாத பொழுது போக்குகளிலொன்று இவ்விதம் சிந்திப்பது. அவனது தற்போதைய பொருளியல் நிலைக்கேற்ற நல்லதொரு பொழுதுபோக்கு. 

அவன்: செலவில்லாத பொழுது போக்கு இதுபோல் வேறென்னவிருக்க முடியும்?”

அவள்: “ஒரு விதத்தில் நீ கூறுவதும் சரிதான்” 

அவன்: “ஒன்று சொல்வேன் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டாயே?” 

அவள்: “நிச்சயமாக நினைக்க மாட்டேன். நீ தாராளமாகக் கூறலாம்.” 

அவன்: “இரவின் மடியில் இழந்த நாட்களின் நினைவுகளை இரை மீட்டபடி சிந்தி லோப்பர் பாடும் ‘நேரத்துக்கு நேரம்’ பாடல் கேட்டிருக்கிறாயா?” 

அவள்: (ஆச்சரியத்துடன்): “உனக்கு அவளைத் தெரியுமா? சிந்தி எனக்கு மிகவும் பிடித்த பாடகி. அவளது இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். உனக்கும் பிடிக்குமா?” 

அவன்: “எனக்கும் கேட்பதற்குப் பிடித்த பாடல்களிலொன்று இந்தப் பாடல். நான் சொல்ல வந்தது…” 

அவள்: “ஆம். ஆம். நீ ஏதோ சொல்ல வந்தாய். இடையில் குறுக்கிட்டு விட்டேன். அப்படியென்ன சொல்ல வந்தாய்?’ 

அவன்: “உன்னைப் பார்த்தால் அந்தப் பாடகியைப் போலவே தோற்றத்திலிருக்கிறாய். அவளைப் போலவே கூந்தலை பல்வர்ணங்களில் அலங்கரித்திருக்கிறாய். ஆடைகளையும்தான். குறிப்பாக உன் அகன்ற கண்களும், வட்ட முகமும், சிரிப்பும் கூட அவளையே எனக்கு ஞாபகப்படுத்துகிறது” 

அதைக் கேட்டதும் அவள் பலமாகச் சிரித்தாள். அத்துடன் கூறினாள். “இதையா கூற வந்தாய்? உனது பாராட்டுதல்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. என் சிநேகிதிகள் கூட அவ்விதம்தான் கூறுவார்கள். பல சமயங்களில் நானும் அவளைப் போலவே ஆடைகள் அணிந்து கொள்வதும், தலையலங்காரம் செய்து கொள்வதும் வழக்கம். உண்மையில் நீ இவ்விதம் கூறுவது எனக்கு மகிழ்ச்சியைத்தான் தருகிறது. என் அபிமானப் படகிகளொருத்திபோல் நானிருக்கிறேனென்று நீ கூறுகிறாய். எவ்வளவு பெருமையாகவிருக்கிறது தெரியுமா? நன்றி. நன்றி. மிகவும் பற்பல நன்றி..” 

இவ்விதமாக அவர்களது உரையாடல் பல்வேறு விடயங்களைத் தொட்டுத் தொடர்ந்தது. 

“உன்னுடன் இதுவரையில் இவ்விதம் கதைத்துக் கொண்டு வந்தது மகிழ்சியாகவிருந்தது. இந்த இரவினை ஒருபோதுமே மறக்க மாட்டேன். உனக்கு விருப்பமென்றால் இந்த இரவினை உன்னுடன் கழிப்பதில்கூட எனக்கு ஆட்சேபனையேதுமில்லை. எங்காவது உணவகத்துக்கோ அல்லது கிளப்புக்கோ செல்லலாம். என்ன சொல்லுகிறாய்?’ 

அவனுக்கு அவளது வெளிப்படையான பேச்சு வியப்பினைத் தந்தது. அவளது வெளிப்படையான பேச்சும், நடத்தையும் அவளது நல்லுள்ளத்தை வெளிப்படுத்தின. அத்துடன் அவன் கூறினான்: “உன் அழைப்புக்கு நன்றி. ஆனால் தற்போது நான் முக்கியமானதொரு விடயமாக ஒருவரை சந்திக்க வேண்டியிருக்கிறது. மன்னித்துக் கொள். நடுவழியில் என் பிரயாணத்தை உன் சந்திப்பு மூலம் சிறப்பித்ததற்கு என் நன்றி பல. இந்த இரவையும், உன்னுடனான இந்தச் சந்திப்பையும் ஒருபோதும் மறக்க மாட்டேன். சிந்தி லோப்பரின் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு சமயமும் நீயும் என் நினைவுக்கு வருவாய்” என்றான். மூஞ்சுறு தான் போக வழியைக் காணவில்லை. விளக்குமாறைத் தூக்கச் சொல்கிறாள். ஒருவேளை சாப்பாட்டுக்கே ‘ததிங்கிணதோம்’ போடவேண்டிய நிலையில் கிளப்புக்கு அழைக்கிறாள்? 

அவள் இறங்குவதற்கான தரிப்பிடம் வந்ததும் சிறிது வாடிய வதனத்துடன் சிறிய காகிதத்துண்டொன்றில் தனது தொலைபேசி இலக்கத்தையெழுதி அவனிடம் தந்தபடி “எப்பொழுதுதாவது நீ என்னைச் சந்திக்க விரும்பினால் இந்தத் தொலைபேசி இலக்கத்துக்கு அழை. நல்லதொரு சந்திப்பினைத் தந்ததற்காக இந்த இரவுக்கு நன்றி..இந்தப் பயணத்தில் நல்லதொரு துணையாகவிருந்ததற்கு உனக்கும் நன்றி” என்றவள் சிந்தி லோப்பரின் Time After Time பாடலில் வரும் ‘If you’re lost you can look and you will find me Time after time If you fall I will catch you I’ll be waiting Time after time’ என்ற வரிகளைப் பாடி அவனை நோக்கிக் கண்களைச் சிமிட்டியபடி விடைபெற்றாள். 

அவனது தனித்த பயணம் அந்த நள்ளிரவில் தொடர்ந்தது. 

27 – இன்று புதிதாய்ப் பிறந்தேன்

நாளை மறுநாள் அவன் அமெரிக்க மண்ணில் காலடி வைத்துச் சரியாக ஒருவருடமாகப் போகின்றது. இளங்கோவுக்குக் காலத்தின் கடுகதிப் பயணம் ஆச்சரியத்தைத் தந்தது. பால்யகாலத்தில் ஒரு வருடம் ஒன்பதுவருடங்கள் போல ஆறுதலாக விரைந்ததுபோல் இப்பொழுது நினைத்துப் பார்க்கும் போதிருக்கிறது.எந்தவித வாழ்க்கைப் போராட்டங்களையும் சுமக்க வேண்டிய பொறுப்புகளின்றி, சுதந்திரச் சிட்டுக்களாகப் பெற்றோரின் அரவணைப்பில் பொழுது எவ்வளவு ஆறுதலாக, இனிமையாகக் கழிந்தது? இரவுகளில் கொட்டிக் கிடக்கும் சுடர்களை மின்மினிகளை. முழுநிலவை, பெருவிழி ஆந்தைகளை, நத்துக்களை, அணில்களை, விண்ணில் கோடிழுக்கும் நீர்க்காகங்களை, குக்குறுப்பான், கொண்டைக் குருவி, மாம்பழத்திக் குருவி, ஆலா, ஆட்காட்டி, ஊருலாத்தி, கிளி, மைனா, மணிப்புறாவெனப் புள்ளினங்களையெல்லாம் இரசிப்பதற்கு நிறையவே பொழுதுகளிருந்தன. ஆனால் இன்று…இருத்தற் போராட்டத்தின் சுமைகளையெல்லாம் தாங்கவேண்டிய சூழலில், இரசிப்பதற்குக் கூடப் பொழுதுகளில்லை? அவ்வளவு விரைவாக அவற்றின் பயணம்! இருந்தாலும் இவ்வளவு இடர்களுக்கிடையிலும் ஒரு சில நூல்களையாவது படிப்பதற்கு அவனால் முடிந்தது. சிந்திப்பதற்கு முடிந்தது. இந்த ஒரு வருடத்தில் அவன் வாழ்வு ஏதாவது பயன்களைப் பெற்றிருக்கிறதா? பொருளியல்ரீதியில் பலவகை அனுபவங்களைத்தவிர எந்தவிதக் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுமில்லை. ஆனால் ஒன்று- இந்த அனுபவங்கள் மிகுந்த பயனுள்ளவை. இருப்பின் பல்முனைத் தாக்குதல்களையும் உறுதியுடன் உள்வாங்கி, நம்பிக்கையுடன் எதிர்த்து நடை பயிலும் பண்பினை அவனுக்கு அளித்துள்ளவை இந்த அனுபவங்கள்தான். அச்சமில்லை, அமுங்கதலில்லை. நடுங்குதலில்லை நாணுதலில்லை. பாவமில்லை, பதுங்குதலில்லை. ஏது நேரிடினு மிடர்ப்பட மாட்டோம். கடல்பொங்கி எழுந்தாற் கலங்க மாட்டோம். யார்க்கு மஞ்சோம். எதற்கு மஞ்சோம். எங்கு மஞ்சோம். 

எப்பொழுது மஞ்சோம். வான் முண்டு. மாரியுண்டு. ஞாயிறுங் காற்றும் நல்ல நீரும், தீயு மண்ணும்,திங்களு மீன்களும் உடலுமறிவு முயிரு முளவே’ என்னும் உறுதியான மனப்பாங்கினை அவை அவனுக்களித்துள்ளன. 

வவுனியா நண்பன் ஜெயரட்ணத்தின் உணவகத்திலும் சிறிது காலம் நண்பகற் பொழுதில் உணவு விநியோகிக்கும் பணியாளாகப் பணி புரிந்து பார்த்து விட்டான். அதற்குப் பின் சிறிது காலம் வங்க நண்பன் கோஷின் தொழிற்சாலையிலும் தொழிலாளியாக வேலை பார்த்தான். அதுவும் ஓரிரு மாதங்களே நீடித்தது. அதன் பின் வழக்கம்போல் மீண்டும் இருப்புடனான போராட்டம் தொடங்கி விட்டது. ஏற்கனவே முடிவு செய்திருந்ததன்படி மேலும் இந்த மண்ணில் தொடர்ந்திருப்பதை நினைத்துப் பார்க்கவே அவனால் முடியாததாகவிருந்தது. எந்தவிதச் சட்டபூர்வமான ஆவணங்களுமின்றி பொருளியல்ரீதியில் ஒருவித உறுதியான நிலையினை அடைந்து, ஆழமாக வேரூன்றுவதற்கு முடியாமலிருந்தது. இந்த நிலையில் அவன் ஒரு முடிவுக்கு வந்தான். நாளை மறுநாள் இந்த மண்ணில் காலடிவைத்துச் சரியாக ஒருவருடமாகிறது. அடுத்த வருடத்தின் முதல் நாளன்று அவனால் இந்த மண்ணில் ஒரு கணம்கூட இருக்க முடியாது. நாளை மறுநாளிரவு அவனது வாழ்வின் அடுத்த கட்டம் ஆரம்பமாகவேண்டும். மீண்டும் முதலிலிருந்து, 

அடிமட்டத்திலிருந்து, நம்பிக்கைகளுடன், கனவுகளுடன் எதிர்பார்ப்புகளுடன், உற்சாகத்துடன் அவனது இருத்தலுக்கான பயணம் தொடங்க வேண்டும். இதற்கு ஒரே வழி.. எந்த மண்ணை நோக்கிக் கடந்த ஆவணி மாதத்தில், ஈழத்தில் வெடித்த இனக்கலவரத்தைத் தொடர்ந்து அவன் புறப்பட்டானோ, எந்த மண்ணை நோக்கிய அவனது பயணம் இடையில் இந்த மண்ணில் தடைபட்டதோ, அந்த மண்ணை நோக்கி, கனடாவை நோக்கி, அவனது பயணம் மீண்டும் புதிதாக ஆரம்பிக்க வேண்டும். கையிலுள்ள இருநூறு டாலர்களுடன் அவன் மீண்டும் தன் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். இவ்விதமாக இறுதித் தீர்மானமெடுத்தவுடன் அன்றிரவு அவன் தன் அறை நண்பர்களுக்குத் தன் எதிர்காலத்திட்டங்களை எடுத்துரைத்துப் பிரிவதற்கு முன்னர் அவர்களுடன் இறுதிப் பொழுதினை மகிழ்ச்சியுடன் கழிக்க வேண்டுமென்றும் எண்ணிக் கொண்டான். இவ்விதமாக உறுதியானதொரு முடிவினைத் தன் எதிர்காலம் பற்றியெடுத்ததும், அவனது நெஞ்சின் பாரம் சிறிதளவு குறைந்தது. அந்தவிடத்தை களியுடன் கூடியதொரு உற்சாகம் கலந்த உணர்வுகள் ஆக்கிரமித்துக் கொண்டன. அன்றிரவு அறை நண்பர்களுடன் ஆனந்தமாகக் கூடிக் கதைத்தான். 

அவனது முடிவுக்கு கோஷ் ஆதரவளிக்கவில்லை. அவனது நிலைப்பாடு இளங்கோ இன்னும் சிறிது காலமாவது இருந்து முயன்று பார்க்கலாமென்பதாகவிருந்தது. ஆனால் அருள்ராசா அவ்விதமே சிறிது காலம் மேலுமிருந்து முயன்று பார்ப்பதற்கு முடிவு செய்திருந்தாலும், இளங்கோவின் திட்டங்களுக்குத் தடைபோட அவன் விரும்பவில்லை. இவ்விதமாக அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தபொழுது கோஷ் இவ்விதமொரு கேள்வியினைத் தொடுத்தான்: 

“உங்களுக்கு இழைத்த மனித உரிமை மீறல்களுக்காக உங்களது வழக்கறிஞரின் ஆலோசனையில் அமெரிக்க அரசுக்கெதிராக வழக்கு போட்டீர்களே? அதன் நிலை என்னவாச்சு?” 

இதற்கு அருள்ராசாவே இடைமறித்துப் பதிலளித்தான்: அண்மையில் எங்கள் சட்டத்தரணியைச் சந்தித்தப்பொழுது இதுபற்றி நாங்களும் அவரிடம் கேட்டிருந்தோம்?” 

கோஷ்: “அதற்கவனென்ன சொன்னான்?” 

அருள்ராசா. “அவனது பதில் புதிராகவிருந்தது. அவன் கூறினான் நாங்கள் அந்த வழக்கினைத் தொடர்ந்து நடத்தினால் அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தினால் ஊரிலுள்ள எங்களது உறவினர்களுக்குப் பிரச்சினைகள் வருமாம்? அதனால் அவ்வழக்கை அப்படியே போட்டுவிடுவதே நல்லதாம். எனக்கென்றால் அவனது கதை விளங்கவேயில்லை. அப்படியென்றால் எதற்காக அவனாகவே எங்களைத் தூண்டி அவ்விதமாக வழக்குப் போடும்படி செய்தான்?” 

இதற்கு கோஷ் இவ்விதமானதொரு காரணத்தை முன்வைத்தான்: “எனக்கென்றால் இந்த விடயத்தில் அவனை நம்ப முடியாமலிருக்கிறது…என்னைப் பொறுத்தவரையில் நான் என்ன நினைக்கிறேனென்றால்…” 

இவ்விதம் கோஷ் டை நிறுத்தவே இளங்கோவும் அந்த உரைடாடலில் கலந்து கொண்டான்: “கோஷ். உன்னைப் போல்தான் எனக்குமிந்த விடயத்திலொரு சந்தேகம். முதலில் உன்னுடையதைக் கூறு.”. 

கோஷ்: “நான் என்ன நினைக்கிறேனென்றால்… அமெரிக்க இராஜத் திணைக்களம் அவனுடன் சேர்ந்தொரு இணக்கத்துக்கு வந்திருக்கலாம்.

இந்த வழக்கை எடுக்காமல் அப்படியே விடுவதற்கு உங்களது வழக்கறிஞருக்கு அமெரிக்க அரசால் ஏதாவது கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டு, பணமேதாவது கைமாறியிருக்கலாம். யார் கண்ட டது? நீங்களோ சட்டவிரோதக் குடிகள். இந்த வழக்கை அவன் தொடர்ந்து நடத்தி, ஒரு சமயம் வெற்றியடைந்திருந்தால், உங்கள் நிலையிலுள்ள பலர் மேலும் இதுபோன்ற வழக்குகள் தொடர்வதற்கு அதுவொரு முன்மாதிரியாகவந்து விடக்கூடிய சாத்தியமுமிருக்கிறது. அவ்விதமானதொரு சூழல் அமெரிக்க அரசுக்கு அரசியல்ரீதியிலும், பொருளியல்ரீதியிலும் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகளிருப்பதையும் மறுப்பதற்கில்லை. இவற்றைப் பார்த்தால் ‘மேசைக்கடியால்’ பணம் கைமாறப்பட்டு முளையிலேயே இந்த வழக்கு கிள்ளியெறியப்பட்டுவிட்டதுபோல்தான் எனக்குத் தோன்றுகிறது. 

அருள்ராசா: “என்னைப் பொறுத்தவரையில் நான் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை. அவனாகவே ஆரம்பித்தான். அவனாகவே முடித்துக் கொண்டான். 

இளங்கோ: “என் நிலையும் அதுதான். நாங்கள் ஆரம்பிக்காதவொன்று. சமயம் வந்தால் ஒருகாலத்தில் உண்மையினை அறிய முயற்சிக்கலாம். அவ்வளவுதான்.” 

கோஷ்:” என்றாலும் உங்களது வழக்கறிஞன் சரியான கெட்டிக்காரன்தான். அவன் காரியம் முடிந்து விட்டது.பணம் அவனது கைக்கு வந்திருக்கும்பட்சத்தில் அவன் கவலை முடிந்தது.”

அத்துடன் அவர்கள் அந்த விடயம் பற்றிய உரையாடலினை நிறுத்திவிட்டு வேறு விடயங்களில் கவனத்தைச் செலுத்தினார்கள். இந்தச் சமயத்தில் திருமதி பத்மா அஜீத் அவர்களது அறைக்கு அவ்வாரத்துக்குரிய வாடகைப் பணத்தை வாங்கும்பொருட்டு வந்தாள். வந்தவள் அவர்களது உரையாடலிலும் பங்கெடுத்துக் கொண்டாள். “என்ன பலமானதொரு விடயத்தைப் பற்றி உரையாடுவதைப் போலொரு தோற்றம் தெரிகிறதே..” என்றாள். 

அதற்கு கோஷ் “நீங்கள் கூறுவது சரிதான். உங்களுக்குத்தான் பெருத்த நட்டம்?” என்றான். 

அதற்கு திருமதி அஜீத் “என்ன எனக்குப் பெருத்த நட்டமா? என்ன சொல்லுகிறீர்கள்? எனக்கு ஒன்றூமே விளங்கவேயில்லையே?” என்றாள். 

அதற்கு கோஷ் “பின்னே! இளங்கோ மாதிரி நல்லவனொருவனை வாடகைக்கு இந்த மண்ணில் தேடிப்பிடிப்பதென்பது அவ்வளவு இலகுவான வேலையா என்ன.” என்றான். 

அப்பொழுதுதான் திருமதி அஜீத்துக்கு விடயம் ஓரளவுக்கு விளங்கியது. அவள் இளங்கோ பக்கம் திரும்பியவளாக “என்ன இளங்கோ? கோஷ் சொல்லுவது உண்மையா? நீ இந்தவிடத்தை விட்டு வேறெங்காவது போகப் போகிறாயா?” என்றாள். 

இதற்கு அருள்ராசா பதிலளித்தான்: “அவன் இந்த இடத்தை விட்டுமல்ல, இந்த மண்ணையும் விட்டுப் போகப் போகின்றான். அதுபற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம்.” 

திருமதி பத்மா அஹித் இளங்கோவைப் பார்த்து “எங்கு போவதாக உத்தேசம்?” என்றாள். 

இதற்கு இளங்கோ வழக்கம்போலவே அவளை ‘திருமதி பத்மா அஜித்’ என்று விளித்துப் பின்வருமாறு தொடர்ந்தான்: “இந்த மண்ணில் காலடியெடுத்து வைத்து ஒருவருடமாகப் போகிறது. இதுவரையில் பொருளியல்ரீதியிலும்சரி, குடியுரிமைரீதியிலும் சரி ஒருவித முன்னேற்றங்களுமில்லை. இந்த நிலையில் தொடர்ந்தும் என்னால் இங்கிருக்க முடியாது. அதுதான் கனடா போவதாக முடிவு செய்திருக்கிறேன்.” 

திருமதி அஜித்: “அதுசரி. நீயோ சட்டவிரோதக் குடி. எந்தவிதச் சட்டரீதியான ஆவணங்களும் உன்னிடமில்லை. இந்த நிலையிஉல் கனடாவுக்குள் எவ்விதம் நுழைவாய்? அங்கு இதைவிடப் பெரிதாகப் பிரச்சினைகளேதும் வந்துவிடாதா?”

கோஷ்: “அதைத்தான் நானும் சிந்திக்கிறேன். திருமதி பத்மா அஜித் கூறுவதிலும் நியாயமிருப்பதாகத்தான் படுகிறது. இளங்கோ இதுபற்றி இந்தக் கோணத்தில் நீ சிந்தித்துப் பார்த்திருக்கிறாயா?” 

இளங்கோ: “நீங்கள் சொல்வதும் ஒருவிதத்தில் சரிதான். ஆனால் நானறிந்த வரையில் கனடா அகதிகள் விடயத்தில் மிகவும் நெகிழ்ச்சியான போக்குள்ள நாடு. இங்கிருந்து என்நாட்டைச் சேர்ந்த பலர் இதுவரையில் எல்லையைக் கடந்து சென்றிருக்கிறார்கள். பலருக்கு அந்நாட்டு நிரந்தரவசிப்பிட உரிமைகூட கிடைத்திருக்கிறது. அங்கு உள் நுழைந்து விட்டால் எல்லாமே நல்லதாக முடிந்து விடும். ஆனால்…” 

கோஷ்: “ஆனால்.. என்ன?” 

இளங்கோ: “எல்லையைக் கடக்கும்போது கனடியக் குடிவரவு அதிகாரிகளின் கணினியில் என் பெயரைக் கொண்ட இன்னொருவரின் பெயரில் யாராவது பயங்கரக் குற்றங்கள் செய்திருக்கிற ஒருவரின். ‘இண்டர்போல்’ போன்ற சர்வதேசப் பொலிசாரால் தேடப்படுகின்ற ஒருவரின் பெயர் இருக்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். அத்தகையதொரு சூழலில் நிலைமை மோசம்தான். உள்ளேயே வைத்துவிட்டாலும் வைத்து விடுவார்கள். ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவே.” 

திருமதி பத்மா அஜித் (ஒருவிதப் பெருமூச்சுடன்); “இளங்கோ. எந்தவிதப் பிரச்சினைகளுமில்லாமல் நீ அங்குபோய்ச் சேர்ந்து நல்வாழ்க்கையொன்றை ஆரம்பித்து விட்டாயென்றால் எனக்கது போதும். போனால் எங்களை மறந்து விடாதே. அவ்வப்போது அழைத்து விசாரித்துக் கொள்.” 

அருள்ராசா: “இளங்கோ. நீ முதலிலை போ. உன்ர நிலயைப் பார்த்துப் பிறகு நான் வாறன்.” 

கோஷ்: “இளங்கோ. நீ போவதென்று முடிவு செய்து விட்டாய். உன் எதிர்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துக்கள். போவதென்றால் எப்பொழுது செல்வதாகத் திட்டம்?” 

இளங்கோ: “நாளை இரவே செல்வதாகத் திட்டம்.” 

கோஷ்: “இளங்கோ. நீ ஒரு வித்தியாசமான பேர்வழி. முடிவு செய்து விட்டாயானால் ஒரு நிமிடம் கூடத் தாமதிக்க மாட்டாய். அப்படியா?” 

இளங்கோ: “கோஷ். அப்படியில்லை. இந்த மண்ணில் ஒரு வருடம் வரையில்தான் தங்குவதென்பது ஆரம்பத்திலேயே நான் உறுதியாக முடிவு செய்திருந்த விடயம். இந்த ஒரு வருடம் முடியப் போகிறது. இந்த நிலையில் தொடர்ந்திருப்பது என்னைப் பொறுத்தவரையில் சிரமமானது. 

இச்சமயம் திரு.அஜித்தும் வந்து அவர்களது கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அவரும் இளங்கோ கனடா செல்லவிருக்கிற விடயம் பற்றி அறிந்ததும் சிறிது கவலைப் பட்டார். அத்துடன் கூறினார்: “நண்பர்களே. இளங்கோவின் பிரியாவிடையினையிட்டு நாம் இன்று சிறியதொரு விருந்து வைத்தாலென்ன?” 

இச்சமயம் இடையில் புகுந்த திருமதி பத்மா அஜித் “இன்றைய சமையல் என்னுடையது. நல்லதொரு சிக்கன் பிரியாணி செய்யப் போகின்றேன். என்ன சொல்லுகிறீர்கள்?” 

எல்லோரும் திருமதி பத்மா அஜித்தின் லோசனைக்குச் சம்மதித்தார்கள். வளைக்கரத்தால் உணவுண்டு எத்தனை நாட்களாகி விட்டன? கசக்குமா அவர்களுக்கு. 

2 

அன்றிரவு அறை நண்பர்களுடனும். அஜித் தம்பதியினருடனும் பொழுது கழிந்தது. திருமதி பத்மா அஜித்தின் கைவண்ணத்தை பிரியாணியின் சுவையில் காணக்கூடியதாகவிருந்தது. அதன்பின்னர் அனைவரும் இளங்கோவின் எதிர்காலச் சிறப்பிற்காக வாழ்த்திவிட்டுப் படுக்கைக்குத் திரும்பினார்கள். சிறிது நேரம் இளங்கோவும், அருள்ராசாவும் வீட்டின் முன்புறத்தில் வந்தமர்ந்து கொண்டு உரையாடினார்கள். அறையினுள் தூக்கத்திலாழ்ந்து கிடந்தவர்களைத் தங்களது உரையாடல் குழப்பி விடக்கூடாதேயென்ற எண்ணத்தில் வெளியிலிருந்து உரையாடுவதே சரியாகப் பட்டது. 

இளங்கோவின் உள்ளத்தில் உற்சாகம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. 

தற்போது அவன் வாழ்வில் நிலவும் சூழலுக்கொரு முடிவு வரப் போவதையிட்டுண்டான களிப்பு. மீண்டுமொருமுறை அவன் முதலிலிருந்து இருத்தலுக்கான போராட்டத்தை ஆரம்பிக்கப் போகின்றான். மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்கப் போவதையிட்டு அவன் கவலைப் படவில்லை. வாழ்க்கையின் சவால்களை எப்பொழுதுமே உற்சாகத்துடன் எதிர்கொள்பவனவன். இந்த மண்ணில் எந்தவித முன்னேற்றங்களுமின்றி நிச்சயமற்றதொரு இருப்பில் தொங்குவதைவிட அது எவ்வளவோ மேல். அருள்ராசாவுக்கு இளங்கோ கனடா போவதையிட்டு ஒருவிதத்தில் சிறியதொரு கவலை. இனி அவன் தனித்துப் போகப்போகின்றானே. இது அவனது கவலைக்குக் காரணம். ஆயினும் இளங்கோ எடுத்த முடிவையிட்டு அவன் கவலைப்படவில்லை. முடிவுகளையெடுப்பதில் இளங்கோவுக்கிருக்கும் துணிச்சல் அவனுக்கில்லை. அவனது கடவுச்சீட்டு இன்னும் அமெரிக்கக் குடிவரவுத் திணைக்களத்திடம்தானிருக்கிறது. இந்நிலையில் நடந்த உண்மைகளைக் கூறித்தான் இளங்கோ கனடாவிற்குள் நுழையத் தீர்மானித்திருக்கிறான். அவ்விதம் நுழையும்போது அமெரிக்காவில் ஏற்கனவே அகதிக்காக விண்ணப்பித்திருக்கிறாயே அதற்கான பதிலைப் பெற்றபின் வா’வென்றால், அங்கிருந்து மீண்டும் திருப்பியனுப்பினால் என்ன செய்வது? இளங்கோ இந்த விடயம் பற்றியும் சிந்தித்துப் பார்த்திருக்கின்றான். அதற்கும் அவனொரு காத்திரமான பதிலை வைத்திருக்கிறான். முதலாவது கடந்த ஒருவருடமாக இங்கு அவனுக்கு வேலை செய்வதற்குரிய எந்தவிதச் சட்டரீதியான ஆவணங்களுமில்லை. எந்தவித அரச உதவிகளுமில்லாமல், சட்டரீதியாக வேலை செய்து வயிற்றை நிரப்புவதற்கு முடியாமலிருக்கிறது. அடுத்தது வேலை வழங்கலுக்கான கடிதம் பெற்று சட்டத்தரணியூடு விண்ணபித்தும்கூட இதுவரையில் அதற்கான பதிலேதும் வரவில்லை. இதுவரையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஒருவாறு காலத்தைத் தள்ளியாகி விட்டது. இனியும் அவனால் இத்தகையதொரு நிலையினைத் தொடர்ந்தும் தாங்க முடியாது? இதுதான் அவனது பதில். இதனையும் மீறி அங்கிருந்து மீண்டும் திருப்பியனுப்பினால் வேறென்ன செய்வது? மீண்டும் இங்கு வந்து மட்டையடிக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை. ஆயினும் அதற்காக இவ்விதம் முயன்று பார்க்காமலிருக்க முடியாது. 

அருள்ராசா கூறினான்: “இளங்கோ! உனக்கிருக்கிற துணிச்சல் எனக்கில்லை. நீ அங்கு போனதும் விரிவாக அங்குள்ள நிலைமையையெல்லாம் அறிவி. அதுக்குப் பிறகுதான் நான் முடிவு செய்ய வேண்டும்” 

அதற்கு இளங்கோ “கட்டாயம் எல்லாவற்றையும் விசாரிச்சு, எனக்கு ஏற்படுகிற நிலைமைகளெல்லாவற்றையும் அறிவிக்கிறன். அதுக்குப் பிறகு ஆறுதலாக நீ வரலாம். அவசரமில்லை” என்றான். 

அதற்கு அருள்ராசா “எல்லாம் நல்லதுக்குத்தான். இங்கை மட்டும் ‘சோசல் கார்ட்’டெல்லாம் கிடைச்சிருக்குமென்றால் இங்கையே போவென்று கலைக்கும் மட்டும் இருந்திருக்கலாம். பார்ப்பம் எனக்காவது கெதியிலை கிடைக்குதாவென்று. அது மட்டும் கிடைச்சுட்டுதென்றால் நான் கடைசிவரை அகதிக்கோரிக்கைக்குப் பதில் கிடைக்கிறவரை இங்கேயே தங்கி விடுவன்.” என்றான். 

இவ்விதமாக உரையாடிக் கொண்டிருந்துவிட்டு திரும்பினார்கள். அருள்ராசா சிறிது நேரத்திலேயே தூங்கி விட்டான். இளங்கோவுக்கோ வழக்கம்போல் இத்தகைய சந்தர்பங்களிலேற்படுவதுபோல் தூக்கம் வருவதற்குத் தயங்கியது. சிறிதுநேரம் தூங்குவதற்கு முயன்றான்; முடியாமல் போகவே உணவறைக்கு வந்து சிறிது நேரம் பாரதியின் கவிதைகளைப் புரட்டினான். சிறிது நேரம் குறிப்பேட்டினில் பார்வையை ஓட்டினான். வழக்கம்போல் பாரதியின் கவிதைகளும், குறிபேடும் அவனது ஓரளவு சோர்ந்திருந்த உணர்வுகளைத் தட்டியெழுப்பின. மண்ணில் தெரியுது வானம் அதுநம் கைவசப்பட லாகோதோ? எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்கிறுதியிற் சோர்வோமோ?’. குறிப்பேட்டினைத் திறந்தவன் அன்றைய இரவுப் பொழுதின் தன் உள்ளத்துணர்வுகளையதில் கொட்டத் தொடங்கினான். 

இளங்கோவின் குறிப்பேட்டிலிருந்து….. 

‘கடந்த ஒருவருடம்தான் எவ்வளவு விரைவாகக் கழிந்து விட்டது! இந்த மண் மீதிலான என்னனுபவங்கள் பல்வேறு உண்மைகளை எனக்குப் புரிய வைத்துள்ளன. உலகின் சொர்க்கபுரியாக விளங்கும் இந்த மண்ணின் மறுபக்கத்தை எனக்கு இந்த அனுபவங்களே உணர்த்தி வைத்தன. தனியுடமையின் கூடாரமாக விளங்குமிந்த மண்ணில் எத்தனை தனி மனிதர்கள் தடுப்பு முகாம்களுக்குள் வாடிக் கொண்டிருக்கிறார்கள். வறுமையின் பிடிக்குள் சிக்கி எத்தனை ஆயிரக்கணக்கில் மக்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு புறம் வாழ்வதற்கு எவ்வளவோ வழிவகைகள். மறுபுறத்திலோ வாழுவதற்கான உரிமைகளே மறுக்கப்பட்ட நிலையில் மாயும் மக்கள் கூட்டம். மில்லியன் கணக்கில் இந்த மண்ணில் வாழும் சட்டவிரோதக் குடிகளின் உழைப்பில் சுகித்து வாழுவதற்கு யாருமே தயங்குவதில்லை. ஆனால் அதே சமயம் அவர்களுக்குரிய உரிமைகளைக் கொடுத்து அவர்களது கடின உழைப்புக்கு அங்கீகாரம் கொடுப்பதில் மட்டுமென்ன தயக்கம்? இவ்விதம் தயங்குபவர்கள் அவ்வளவு சட்டவிரோதக் குடிகளையும் ஒட்டுமொத்தமாக நாட்டை விட்டு அனுப்பி வைக்கலாமே? ஆனால் அதுமட்டும் முடியாது? அவ்விதம் அனுப்பினால் அதனாலேற்படும் இடைவெளியை ஈடுகட்டுவதற்குரிய தொழிலாளர்களின்றி உணவகங்கள். தொழிற்சாலைகளெல்லாம் முடங்கிக் கிடக்க வேண்டியதுதான். சொந்த மண்ணில் தலை விரித்தாடும் அடக்குமுறைகளைத் தாங்க முடியாமல் நுழையும் அகதிகளைச் சட்டவிரோதக் குடிகளாக்கித் தடுப்பு முகாமில் வைத்திருக்கிறது. ஆனால் ஒருகாலத்தில் செல்வம் நாடி இந்த மண்ணுக்குச் சட்டவிரோதமாகப் படையெடுத்த, இந்த மண்ணின் பூர்வீக குடிகளை நிர்மூலமாக்கிய, ஐரோப்பியர்களின் வழித்தோன்றல்கள்தானே இன்றைய மக்களில் பெரும்பான்மையினர். உலகின் பல்வேறு திக்குகளுளிருந்தும் அரசியல், பொருளியல் காரணங்களுக்காக இம்மண்ணை நோக்கிப் படையெடுக்கும் மக்களைச் சட்டவிரோதக் குடிகளாக்கி சிறுமைப்படுத்துவதற்கு நவ அமெரிக்கர்களுக்கென்ன தார்மீக உரிமை இருக்க முடியும்? தங்களது தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக உலகெங்கும் இவர்களால் அரசியல்ரீதியில், இராணுவரீதியில் புகுந்து விளையாட முடியும். ஆனால் அதன் விளைவாகப் பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகளாக வந்தால் ஏற்பதில் மட்டும் தயக்கமேன்? 

இந்த மண்ணின் அமைப்பில் பல நல்ல அம்சங்களுள்ளன. முக்கியமாக அறிவியற் தொழில் நுட்ப வளர்ச்சி. மிகவும் கடினமாகத் தொலைநோக்குடன் உழைக்கின்றார்கள். ஒருபுறம் அரசின் தேசிய பாதுகாப்பு, அபிவிருத்திக் கொள்கைகளால் உலகம் பற்றியெரிகிறது. இயற்கை வளங்கள் துறையாடப்பட்டுச் சமநிலை குலைக்கப்படுகின்றது. மறுபுறம் இந்த மண்ணில் வாழும் மக்களால் தொலை நோக்கில் சிந்தனை முன்னெடுக்கப்படுகிறது. அரசின் நடவடிக்கைகளையிட்டுக் கண்டனம் பலமாக முன்வைக்கப்படுகின்றது. சூழல் பாதுகாப்புக்காக, மூன்றாம் உலகத்து முன்னேற்றத்துக்காக இலாபநோக்கற்ற ரீதியில் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமான, நம்பிக்கை மிகுந்த, ஆற்றல்மிக்கதொரு பக்கமிருக்கிறது. அதே சமயம் இன்னுமொரு இருண்ட பக்கமும் அதற்கிருக்கிறது. நம்பிக்கையிழந்த, சந்தேகத்துடன் கூடிய, சுயநலம் மிகுந்த எதிர்மறையானதொரு பக்கமது. அறிவியற் தொழில்நுட்ப வளர்ச்சிகள். கலை இலக்கியங்களில் காணப்படும் முன்னேற்றகரமான போக்குகள். பொருளியற் வளர்ச்சி இவையெல்லாம் அதன் நல்ல பக்கங்களென்றால் அதன் இருண்ட பக்கங்களாக வலிமை குன்றிய உலக நாடுகள்மீது அது தொடுக்கும் ஈவிரக்கமற்ற யுத்தங்கள் (பிஞ்சுக் குழந்தைகள், பெண்கள், விரோதிகள்,முதியவர்கள், நோயாளிகளென எத்தனை அப்பாவி உயிர்களை அது காவு கொள்கிறது). சமுதாயத்தில் உலாவும் பலவேறு மனநோய் பீடித்த சமூக விரோதிகள், இனவாதச் சேற்றில் புதைந்துள்ள அமைப்புகள், அகதிகளை அடைத்து வைக்கும் தடுப்பு முகாம்கள்.. இவையெல்லாம் விளங்குகின்றன. 

இவ்விதமாக இளங்கோ குறிப்பேட்டில் தன் உள்ளத்துணர்வுகளைக் கொட்டித்தீர்த்தான். எழுதவெழுத மனத்திலொரு தெளிவு அமைதி பிறந்தது. அந்தத் தெளிவுடனும், அமைதியுடனும், அதன் விளைவாக கிளர்ந்தெழுந்த ஒருவிதப் பரவசத்துடனும் மேலும் எழுதத்தொடங்கினான்: 

‘சிறியதொரு நீலவண்ணக் கோளின் மீது வாழும் மனிதர் எதற்காக இவ்விதம் பல்வேறு பிரிவுகளுக்குள் சிக்கி வாழ வேண்டும்? ‘யாதும் ஊரே! யாவரும் கேளீர்’ என்று வாழுவதற்குரிய பக்குவத்தைத் தடுப்பதெது? எத்தனை விதமான ஏற்றத்தாழ்வுகளால் இந்த உலகு நிறைந்து கிடக்கிறது? வெளியினூடு பிரமாண்டமானதொரு வேகத்தில் விரையும் கோளிது. இதன் விரைதலை உணரமுடியவில்லை. பரந்த இந்தப் பிரபஞ்சத்தில் இதன் அற்பத்தன்மையினை அறிந்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும் அறிவின் பல்நிலைகளில் நிற்கும் மாந்தர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கிறார்கள். போர்களால், ஏற்றத்தாழ்வுகளால் இந்த அழகிய கோள் ஒவ்வொரு கணமும் சீரழிந்து கொண்டிருக்கிறது. பெருகும் இரத்த ஆற்றில் அடிபட்டுச் செல்லும் உயிரினங்கள்தானெத்தனை? சகமனிதரை, உயிர்களைக் கொன்றொழிப்பதில்தான் எத்தனையெத்தனை வழிமுறைகள்! போர்கள், அவற்றின் அழிவுகளெல்லாம் இன்று திரையில் நடைபெறும் கூத்துக்களாகிவிட்டன. அழிவுகளுக்குப் பின்னால் உறைந்து கிடக்கும் இரத்த ஆறுகளை, துயர்மிக்க உணர்வுகளை யாரறிவார்? யாருணர்வார்? அறிந்தால், உணர்ந்தால் இவ்விதம் கொல்வதில் நாட்டம் செல்லுமோ? ஒரு குழந்தையின் பிஞ்சு உடல் சிதைக்கப்படும்போது அதன் பெற்றோரின் உள்ளங்கள் என்ன பாடுபடும்? யாரோ ஒருபிள்ளையென்று பேசாமல் போய்விட முடிகிறதா? மனிதரால் உருவாக்கிய மதம், மொழிக்காக எத்தனை ஆயிரக்கணக்கில் யுத்தங்கள்! இரத்தக் களரிகள்! இந்தச் சிறிய கோள் எத்துணை அற்புதமானது! இதனற்புதத்தினை உணராமலிதையிவ்விதம் சிதைப்பதெதற்காக? உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!’ என்று வாழ ஏன் முடியவில்லை?’ 

இவ்விதமாக மேலும் மேலும் தூக்கம் கண்களைத் தழுவும் வரையில் எழுதித்தீர்த்தான். ஒரு கட்டத்தில் நித்திராதேவியின் அரவணைப்பின் கனம் அதிகமாகிவிடவே அவளுடன் தன்னை மறந்து சங்கமமானான் இளங்கோ. 

4 

மறுநாள் பகல்முழுவதும் இளங்கோ மான்ஹட்டன் முழுவதும் அலைந்து திரிந்தான். கடந்த ஒரு வருடமாக அந்த மண்ணில் அலைந்து திரிந்த வீதிகள், இடங்களையெல்லாம் மீண்டுமொருமுறை பார்வையிட்டான். ஹரிபாபு, அவன் மனைவி இந்திரா, ஹென்றி இவர்களிடமெல்லாம் கூறி விடைபெற்றான். அன்றிரவு பஸ் நிலையத்துக்கு அவன் அருள்ராசாவுடன் புறப்பட்டபோது கோஷ், அஜித் தம்பதிகள் எல்லோரும் வழியனுப்ப வந்தனர். இளங்கோ இதனைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் இதை விட மிகப்பெரிய ஆச்சரியமென்னவென்றால் ஹரிபாபுவும், இந்திராவும் அவனை வழியனுப்ப வந்திருந்தது தான். எல்லோரும் அவனது எதிர்கால வாழ்வு நன்கமைய வாழ்த்துத் தெரிவித்தார்கள். 

அவன் புறப்படும் நேரம் வந்தது. சோகம் கவிந்த முகங்களுடன் நின்ற அவர்களனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு இளங்கோ பஸ்ஸிலேறி மூலையிலிருந்த இருக்கையொன்றில் சென்றமர்ந்தான். அந்த நள்ளிரவில் அவனையும் சக பயணிகளையும் ஏற்றிக் கொண்டு அந்த பஸ் ‘தொராண்டோ’ மாநகரை நோக்கிப் புறப்பட்டது. தொலைவில் விரிந்திருந்த இரவுவானில் சுடர்க் கன்னிகள் அவனது புதிய பயணத்தையெண்ணிக் கெக்கலி கொட்டி நகைத்துக் கொண்டிருந்தார்கள். ‘நட்சத்திரக் கன்னியரே ! நகைக்கவா செய்கிறீர்கள். நல்லாக நகையுங்கள். நகையுங்கள். உங்கள் நகைப்பில் நானொருபோதும் துவண்டு விடப்போவதில்லை. ஆனால் உங்கள் நகைப்பில் நானறியும் அர்த்தமே வேறு. மோனித்துக் கிடக்கும் வெறுமை படர்ந்த வெளிகளை ஊடுருவி நீங்கள் அனுப்பும் ஒளிக்கதிர்களின் தொலைதூரப் பயணங்கள் என்னைப் பிரமிக்க வைக்கின்றன. வெற்றிடங்களைத் துளைத்து, பல்வேறு காலகட்டங்களிலிருந்தும் எத்தனை துணிச்சலுடனவை தம் பயணத்தை ஆரம்பித்திருக்கின்றன. தனிமைகளைக் கண்டு, தொலைவுகளைக் கண்டு பயமற்ற அவற்றின் பயணங்களுடனொப்பிடுகையில் என் பயணத்துக்கொரு அர்த்தம்கூட இருந்திட முடியுமா?’ 

நள்யாமத்துப் பொழுதினில் புறப்பட்ட பஸ் அதிகாலையில் கனடாவை நெருங்கிக் கொண்டிருந்தது. அடிவானில் விடிவெள்ளி முளைக்கத் தொடங்கி விட்டது. ‘அதிகாலை மெல்லிருட் போதுகளில் அடிவானில் நீ மௌனித்துக் கிடக்கின்றாய்! படர்ந்திருக்கும் பனிப்போர்வையினூடு டுருவுமுந்தன் நலிந்த ஒளிக்கீற்றில் ஆதரவற்றதொரு சுடராய் நீ ஆழ்ந்திருப்பாய் விடிவு நாடிப் போர் தொடுக்கும் என் நாட்டு மக்களைப் போல. விடிவின் சின்னமென்று கவி வடிப்போர் மயங்கிக் கிடப்பார். ஆயின் சிறுபோதில் மங்கலிற்காய் வாடிநிற்கும் உந்தன் சோகம் புரிகின்றது. அதிகாலைப் போதுகளில் சோகித்த உந்தன் பார்வை படுகையிலே, என் நெஞ்சகத்தே கொடுமிருட் காட்டில் தத்தளிக்கும் என் நாட்டின், என்மக்களின் பனித்த பார்வைகளில் படர்ந்திருக்கும் வேதனைதான் புரிகின்றது. விடிவினை வழிமொழியும் சுடர்ப்பெண்ணே! வழி மொழிந்திடுவாய்! 

இளங்கோ தன் புதிய பயணத்தைத் துணிச்சலுடனும், நம்பிக்கைகளுடனும் எதிர்பார்த்து ஆரம்பித்திருக்கின்றான். இயற்கைத்தாயே! போதுமென்றே திருப்தியுறும் பக்குவத்தைத் தந்துவிடு ! தாயே! இயற்கைத்தாயே! உந்தன் தாள் பணிந்து கேட்பதெல்லாம் இதனைத்தான்! இதனைத்தான்! விதியென்று வீணாக்கும் போக்குதனை விலக்கி விடு! மதி கொண்டு விதியறியும் மனத்திடத்தை மலர்த்தி விடு ! வளர்த்து விடு! கோள்கள். சுடர்களெல்லாம் குறித்தபடி செல்வதைப்போல் வாழும் வாழ்வுதனை என் வாழ்நாளில் வளர்த்து விடு! தாயே! இயற்கைத்தாயே! உந்தன் தாள் பணிந்து கேட்பதெல்லாம் இதனைத்தான்! இதனைத்தான்!’ 

கனடா எல்லையினை அடையும் பொழுது எது நடந்தாலும் அதனை ஏற்கும் பக்குவத்தை அவன் பெற்றிருந்தான். விரிந்திருக்கும் ஆகாயமும், பூமியும் இருக்கும்வரை, இங்குள்ள உயிரினங்களொவ்வொன்றுமே தான் வாழும் சூழலுடன் தப்பிப்பிழைத்தலுக்காகப் போராடிக் கொண்டுதானிருக்கிறது. தப்பிப்பிழைத்தலில்தானே உயிரினம் ஒவ்வொன்றினதும் இருப்பின் தொடர்ச்சியே தங்கியுள்ளது. எத்தகைய சூழலையும் துணிச்சலுடன், உறுதியுடன், நம்பிக்கையுடன் உள்வாங்கித் தொடர்ந்து நடைபயில்வதற்குரிய பக்குவத்தை அவனது அமெரிக்க மண்மீதான அனுபவங்கள் மேலும் அதிகமாக்கி விட்டுள்ளன. அந்த அனுபவங்களின் துணையுடன் அவன் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கின்றான். நம்பிக்கையுடன் வாழ்க்கை அற்புதமாக விரிந்து கிடக்கின்றது. 

இப்பூமிப்பந்தின் நானா திக்குகளிலும் போர்களினாலும், அடக்குமுறைகளினாலும் ஏதிலிகளாக மக்கள் கூட்டம் உறவுகளைப் பிரிந்து இருத்தலுக்கானதொரு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது; சொந்தமண் பற்றிய கனவுகளுடன் அவர்களின் பயணம் பல்வேறு திக்குகளிலும் தொடருகின்றது. ஒட்டி உறவாடிச் சொந்தம் கொண்டாடிய மண்ணுடன் மீண்டும் பின்னிப் பிணைந்து சுகித்திட முடியாத சுழல்கள்! போர்கள்! புகுந்த இடத்திலும் வாழ்வின் ஒவ்வொரு கணமும் தப்பிப் பிழைத்தலுக்கான போராட்டங்கள். அங்குமில்லை. இங்குமில்லை. நம்பிக்கைக் கனவுகளுடன் தொடரும் திரிசங்கு வாழ்க்கை.

வாயுக் குமிழிக்குள் வளையவரும் விரையும் வாழ்வு! உணராத உயிர்களால் குமிழி என்று உடையுமோ? குமிழியின் நிலையற்ற தன்மையினை உணராத உயிர்களோ உள்ளிருந்து கும்மாளமிடுகின்றன. குமிழியினை உடைப்பதென்றே கங்கணம் கட்டி நிற்கின்றனவா! ஆயினும் அவனது பயணம் மீண்டும் தொடங்கும் மிடுக்கெனத் தொடர்கிறது. ‘தீமையெலாம் அழிந்துபோம்! திரும்பி வாரா!’ வென்னும் நம்பிக்கையில் தொடரும் பயணமது! ‘எப்போதுஞ் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்குங் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாது தொடரும் பயணமது! ‘இன்று புதிதாய்ப் பிறந்தோமென்று எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு, தின்று விளையாடியின்புற்றிருந்து வாழுமொரு’ பயணமது! பஸ் இருளைத் துளைத்துக் கொண்டு எல்லையினை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. இந்த இருளின்பின்னால் நிச்சயமாக விடிவொன்று மலருமென்ற நம்பிக்கையில் தொடரும் பயணமது. 

(முற்றும்)

– குடிவரவாளன் (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 2015, ஓவிய பதிப்பகம், பட்லகுண்டு, தமிழ்நாடு.

(நவரத்தினம் கிரிதரன், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்)  ஒரு குறிப்பிடத்தக்க கனேடிய. ஈழத்து எழுத்தாளர். இவர் பல சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள். ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை ஆக்கியுள்ளார். பதிவுகள் இணைய இதழின் ஆசிரியரும் ஆவார். வ.ந.கிரிதரன் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாக கொண்டவர். இவரின் தந்தை பெயர் நவரத்தினம். இளமையில் வவுனியாவில் வாழ்ந்த இவர். வன்னி மண்ணின் பற்று காரணமாக வ என்று தன் பெயருக்கு முன் சேர்த்து கொண்டார். ஆரம்ப கல்வியை வவுனியா மகாவித்தியாலத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *