கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 20, 2024
பார்வையிட்டோர்: 1,539 
 
 

(2015ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

13 – வேலை வேண்டும் 

இன்னுமொரு பொழுது பூத்தது வழக்கம் போல் இருப்பியற் பிரச்சினைகளுடன். அருள்ராசாவும், இளங்கோவும் அன்றையப் பொழுதினை எப்படி ஆரம்பிப்பது. கழிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர். இளங்கோ இவ்விதம் உரையாடலினை ஆரம்பித்தான்: 

“அருள், எப்படியாவது இன்னுமொரு வேலையைக் கெதியிலை எடுக்க வேணும். உன்னுடைய ‘பிளான்’ என்ன?” 

“நானும் எனக்கேற்ற வேலையொன்றைத் தேடிக் கொண்டுதானிருக்கிறேன். கிடைக்க மாட்டேனென்கிறதே. எங்கை போனாலும் ‘சோசல் இன்சுரன்ஸ் கார்ட்’டை அல்லவா கேட்கிறான்கள். எனக்கென்னென்றால் ‘இமிகிரேஷன் ஓபிசு’க்குப் போய் அதை எடுக்கிற வழியை முதலிலை பார்த்தால் நல்லதென்று படுகுது. நீ என்ன சொல்லுறாய்?” 

“அருள். நீ சொல்லுறதும் நல்ல ‘ஐடியா’தான். இன்றைக்கு முதலிலை அங்கு போய் விசாரித்து விட்டுப் பிறகு அங்கிருந்தே வேலை தேடும் படலத்தைத் தொடங்குவோம்.. “

“அதுவும் நல்ல ‘ஐடியா’தான். அப்பிடியே செய்வம். அதுக்கொரு முடிவைக் கண்டு விட்டு, அது சரிப்படாதென்றால் நானும் உன்னைப் போல எந்த வேலையை என்றாலும் செய்ய என்னைத் தயார்படுத்த வேண்டும்.” 

“அது சரி. உனக்கு இமிகிரேசன் ஓபிஸ் எங்கையிருக்கிறதென்று தெரியுமே? “

“26 பெடரல் பிளாசா வில்தானிருக்கு. பிரச்சினையென்னவென்றால்…” 

“என்ன பிரச்சினை..?”

“‘சோசல் இன்சுரன்ஸ் காட்’டை எடுக்க வேண்டுமென்றால் அதற்கு வேறு சில அடையாள அட்டைகள் தேவை. முதலிலை எங்களுக்கு இன்னும் சட்டரீதியாக வேலை செய்கிறதுக்குரிய பத்திரங்களெதுவுமில்லை. ‘பாஸ்போர்ட்’ கூட கையிலை இல்லை..” 

“பாஸ்போர்ட்’ ஏனில்லை. ‘இமிகிரேசனி’டம்தானே குடுத்திருக்கிறம்தானே. அதை அவங்கள் சரிபிழை பார்க்கலாம்தானே” 

“அடுத்தது… கோஷ் சொன்னவன்…” 

“என்ன சொன்னவன்?”

“பாஸ்போர்ட் அதோடை வேலை தருபவரிடமிருந்து வேலையை உறுதி செய்தொரு கடிதமும், மற்றது வேலை செய்வதற்குரிய அனுமதிப் பத்திரமும் தேவையாம். அவை இருந்தால்தான் ‘சோசல் இன்சுரன்ஸ் கார்ட்’ எடுக்கலாமாம்.”

“அடக் கோதாரி. இதுக்கு எங்கை போறது. சாணேற முழம் சறுக்கும் போலைக் கிடக்கே…” 

“வேறை என்ன செய்யிறது. சும்மா இருக்கிறதை விட முயற்சி செய்யுறது நல்லதுதானே..” 

“இது சரி வராட்டி என்ன செய்யிறதாம்…” 

“இது சரிவராட்டி ஏதாவது சமூகசேவை செய்யும் அமைப்பொன்றிடமிருந்து சட்டரீதியான சேவையைப் பெற ‘டிரை’ பண்ணலாம். அப்படிப்பட்ட பல அமைப்புகள் இங்கை இருக்காம்” 

“எதுக்கும் முதலிலை இமிகிரேசன் பிஸுக்குப் போய் அங்கையிருக்கிற ஒரு ஓபிசரைக் கண்டு கதைப்போம். எங்களிடமிருக்கிற நாட்டிலை சட்டவிரோதமாகத் தங்கியிருக்கிற ‘இமிகிரேசன் டொக்குமன்றைக்’ காட்டி கதைப்போம். தற்போதைக்கு அது ஒன்று தான் எங்களிடமிருக்கிற ஒரேயொரு ‘டொக்குமென்ட்’. முதலிலை அதை வைத்து ஆரம்பிப்போம்” 

“நீ சொல்லுறதும் சரிதான். ‘ட்ரை’ விட வேண்டும். பண்ணாமல் என்ன நடக்குமென்று முதலிலையே முடிவெடுக்க முடியாது. கேட்காமல் எதுவுமே கிடைக்காதுதானே” 

“அதுதான் ஒரு கிறித்தவ பாட்டுக் கூட நேரம் சென்றாலும் இருக்குதே.” 

“எந்த பாட்டை நீ சொல்லுறாய்?” 

“கேளுங்கள் கிடைக்கப்படும். தட்டுங்கள் திறக்கப்படும். கேளுங்கள் கிடைக்குமென்றார் இயேசு கேளுங்கள் கிடைக்குமென்றார்” 

“சரி கேட்டுப் பார்ப்பம் இமிகிரேசன் ஓபிசரிடம். கிடைத்தால் நல்லது. கிடைக்காவிட்டாலும் எதையாவது செய்து பிழைத்துக் கொள்ள வேண்டியதுதான்.” 

“அருள்! நீ விஞ்ஞானப் புனைவுகள் பல படித்திருப்பாயே. சில புனைவுகளில் மிருகங்களை வைத்து அல்லது மனிதர்களை வைத்து செய்யும் பரிசோதனைகள் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தி விடுவதைப் பார்த்திருக்கின்றாயல்லவா? குரங்குகள் உருப்பெருத்து இராட்சதக் குரங்குகளாவதையும், மனிதர்கள் உருப்பெருத்து இராட்சத மனிதர்களாக உருமாறுவதையும் அவ்வகையான புனைவுகளில் கண்டிருப்போம் இல்லையா?” 

“இளங்கோ மேலும் தொடர்ந்தான். இவ்விதமான புனைகதைகளில் பரிசோதனைக்குள்ளாகும் உயிரினங்களை வைத்துப் பணம் பண்ணு வதற்காகத் திட்டம் போட்டிருப்பார்கள். ஆனால் உயிரினம் எப்படி யும் தப்புவதற்கு வழியைக் கண்டு பிடித்து விடுமென்பதை மறந்து விடுவார்கள். சோதனைகள் எதிர்பாராத விளைவுகளை உருவாக்கி உயிரினங்கள் மானுட குலத்துக்கு அழிவினைத்தரும் இயல்புகளுடன் தப்பிவிடும். அவ்விதம் தப்பும் உயிரினங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் அபாயகரமானவை, இல்லையா?” 

“இளங்கோ நீ கூறுவது போன்ற புனைகதைகள், ஆங்கிலத் திரைப் படங்கள் பல வெளிவந்திருக்கின்றன. நீ கூறுவதும் சரிதான் அது சரி அதுக்கும் எங்கட நிலைக்கும் என்ன சம்மந்தம்? எதுக்காக அதை இங்கை சொல்ல வாறாய்?” 

“அருள் நான் என்ன சொல்ல வாறனென்றால்.. உயிரினம் எத்தகைய சூழலிலும் தப்பிப் பிழைப்பதற்கு வழியொன்றைக் கண்டுபிடித்து விடும். நாங்களும் அவ்விதமே எத்தகைய சூழலிலும், அவை எதிர்பாராத சூழலாக இருந்தாலும் கூட, தப்பிப் பிழைப்பதற்குரிய வழியினைக் கண்டுபிடித்து விடலாம் என்பதைக் கூறுவதற்காகத்தான் அவற்றைக் குறிப்பிட்டேன். சோசல் இன்சுரன்ஸ் கார்ட் கிடைக்குதோ இல்லையோ நாங்கள் தொடர்ந்தும் வாழத்தான் போறம். இங்கை இருக்கிற வரைக் கும் எங்களாலை முடிந்த வரைக்கும் முயற்சி செய்யத்தான் வேண்டும். கார்ட் கிடைத்தால் வாழ்க்கை இலகுவாக கழியும். நல்லதொரு வேலை எடுத்து முன்னேறலாம். இல்லையென்றால் எந்தத் தொட் டாட்டு வேலையைச் செய் தென்றாலும் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.”

இவ்விதமாக அவர்களுக்கிடையில் உரையாடல் தொடர்ந்தது. எவ்விதமாவது குடிவரவுத் திணைக்கள அதிகாரியொருவரிடம் தங்களது நிலையினை விளக்கிச் சமூகக் காப்புறுதி அட்டையினைப் பெறுவதற்கு இயலுமானவரையில் முயற்சிசெய்ய வேண்டும். அவருக்கு இலங்கைத் தீவின் இன்றைய அரசியல் நிகழ்வுகளை குறிப்பாகக் கறுப்பு யூலை 83 நிகழ்வுகளை, தொடர்ச்சியாகத் தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்து விடப்படும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளை, இவற்றையெல்லாம் விரிவாக ஆதாரங்களுடன் அவருக்கு விபரிக்க வேண்டும். ஈழத் தமி ழர்கள் சம்பந்தமாக மேற்கு நாட்டு வெகுசன ஊடகங்களில் வெளி வந்த செய்திக் குறிப்புகளின் போட்டோப் பிரதிகளைச் சேர்த்து வைத் திருந்தது நல்லதாகப் போய்விட்டது. அவற்றை ஆதாரங்களாகக் காட்ட முடியும். இவ்விதமாக நண்பர்களிருவரும் உரையாடி முன்னெடுக்க வேண்டிய ஆரமப்பகட்ட நடவடிக்கைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து அவை பற்றித் தீர்க்கமான முடிவினையெடுத்தார்கள். அதன் பின் அவர்கள் ஏற்கனவே தீர்மானித்தபடி பெடரல் பிளாசாவிலுள்ள குடி வரவுத் திணைக்களத்துக்குச் செல்ல முடிவுசெய்து அன்றைய பயணத்தை அவ்விதமே ஆரம்பித்தார்கள். 

14 – வேடிக்கையான குடிவரத் திணைக்கள அதிகாரி 

வரவேற்புக் கூடத்தில் அமர்ந்திருந்த பெண் அதிகாரியிடம் முதலில் இளங்கோதான் தங்களை அறிமுகம் செய்தான்; 

“இனிய காலை உங்களுக்கு உரித்தாகட்டும்.” 

அதற்கு அந்தப் பெண் அதிகாரி “உங்களுக்கும் எனது காலை வந்தனங்கள். இன்று நீங்கள் என்ன விடயமாக இங்கு வந்திருக்கின்றீர்கள்?” என்று வரவேற்றபடி எதிர்வினாவொன்றினையும் தொடுத்தாள். 

“எனது பெயர் இளங்கோ. இவனது பெயர் அருள்ராசா. நாங்கள் இருவரும் இங்கு அரசியல் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகள்” என்று கூறிய இளங்கோ அவளுக்கு அமெரிக்கக் குடிவரவு திணைக்களத்தினால் கொடுக்கப்பட்டிருந்த விண்ணப்பத்தின் புகைப்படப் பிரதியினை எடுத்துக் கொடுத்தான். 

அதனை வாங்கிச் சிறிது நேரம் பார்த்த அந்தப் பெண் அதிகாரி பின்னர் இவ்விதம் கூறினாள்: 

“இது நீங்கள் விண்ணப்பித்த விண்ணப்பப் பத்திரத்தின் பிரதி. இதனை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. அவர்களிடமிருந்து து சம்பந்தமாக உங்களுக்குப் பதிலொன்று வரும். அதன் பின்னர் வாருங்கள்..” 

“மேடம், அது சம்பந்தமாகத்தான் இங்குள்ள அதிகாரியொருவருடன் பேச விரும்புகின்றோம். இதற்கான பதில் எப்பொழுது வருமோ தெரியாது. இந்த நிலையில் ‘சமூகக் காப்புறுதி இலக்க’ அட்டைக்குக் கூட விண்ணப்பிக்க முடியாதுள்ளது. எங்களுடன் வந்துள்ள வேறு மாகாணங்களில் வசிக்கும் எல்லோருக்கும் ‘சமூகக் காப்புறுதி இலக்க அட்டைகள்’ வழங்கப்பட்டுவிட்டன. அதில்லாமல் எங்களால் எந்தவித வேலையும் செய்யமுடியாமலுள்ளது. அதுதான் அதுபற்றி இங்குள்ள அதிகாரியொருவருடன் கதைக்க விரும்புகின்றோம். இதற்கு உதவினால் நன்றியுள்ளவர்களாகவிருப்போம்.”

இவ்விதம் இளங்கோ மிகவும் பணிவாகக் கூறியது அந்தப் பெண் அதிகாரியின் இதயத்தைத் தொட்டுவிட்டது. அதன் பிரதிபலிப்பு குரலில் சிறிது தெரிய அவள் “உங்கள் நிலை எனக்குப் புரிகிறது. என்னைப் பொறுத்தவரையில் உங்கள் கோரிக்கைக்கான பதில் வராமல் இங்குள்ளவர்களால் என்ன செய்ய முடியுமோ? எதற்கும் உங்கள் ஆசையை நான் தடுக்க விரும்பவில்லை. முயற்சி செய்து பாருங்கள். உங்களை அழைக்கும் வரையில் அங்குள்ள ஆசனங்களில் சென்று அழைப்பு வரும்வரையில் காத்திருங்கள்” என்றாள். 

இளங்கோவுக்கு அவளது பரிவான குரல் சிறிது ஆறுதலைத் தந்தது. அந்த மகிழ்ச்சி அடுத்து அவன் தொடுத்த வினாவிலும் பிரதிபலித்தது. 

“மேடம், இன்னுமொரு சிறு கேள்வி. நாங்களிருவருமே ஒரே சமயத்தில் ஒன்றாக அகதிக் கோரிக்கைக்கு விண்ணப்பித்தவர்கள். நாங்களிருவருமே ஒரே சமயத்தில் அதிகாரியொருவரைச் சந்திக்க முடியுமா? அல்லது தனித்தனியாகத்தான் சந்திக்க வேண்டுமா?” 

“ஒரே நேரத்தில் சந்திப்பது முடியாத காரியம். தனித்தனியாகத்தான் சந்திக்க வேண்டும். குறைந்தது ஒன்றிரண்டு மணித்தியாலங்களாவது காத்திருக்க வேண்டி வரலாம்.”

இவ்விதம் அந்தப் பெண் அதிகாரி கூறவும் அவளுக்கு மீண்டுமொருமுறை நன்றியினைத் தெரிவித்துக்கொண்டு கூடத்திலிருந்த நாற்காலிகளில் காத்திருக்கும் ஏனையவர்களுடன் வந்தமர்ந்து கொண்டார்கள் இளங்கோவும் அருள்ராசாவும். 

“அருள், எனக்கென்றால் சரிவருமென்று தெரியவில்லை. எதுக்கும் முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லைதானே. முயற்சி செய்து பார்ப்போம். குடியா முழுகி விடப்போகுது.” 

“என்னடா இளங்கோ. ‘பொசிட்டிவ்வா திங்க்’ பண்ணுற நீயே இப்பிடி தளர்ந்து விடலாமா? சரிவருமென்று எண்ணிக்கொண்டே இறங்கினால் எல்லாம் வெற்றிதான். இறங்குவம். காலை விடுவம். நல்லதே நடக்குமென்று நம்புவோம்” 

“ஓம் அருள். நீ சொல்லுறதும் சரிதான். எவ்வளவுதான் ‘பொசிட்டிவ்’வாக இருந்தாலும் சில சமயங்களில் மனசு சலிச்சு விடத்தான் செய்கிறது. “

“அதுக்குமொரு காரணமில்லாமலில்லை.” 

“என்ன காரணம்..” 

“எப்பொழுதுமே எங்கட, மனுசரின்ற, குணவியல்புகள் ஒரே மாதிரி இருக்காதாம். ஏறி இறங்கிக் கொண்டுதானிருக்குமாம். நிலவு பிறை நிலவாகி, முழுநிலவாகி, அமாவாசையில் மறைந்து மீண்டும் வளரத் தொடங்கிறதே. அது மாதிரித்தான் எங்கள் குணவியல்புகளும். சில நேரம் எந்தவிதக் காரணமுமில்லாமல் ஒரு பிரச்சினையுமில்லாத நேரத்தில் மனசு சலிச்சுச் சோர்ந்து கிடக்கும். இன்னொரு சமயம் தலைக்கு மேலை பிரச்சினைகள் கூடுகட்டியிருக்கைக்கே மனசு கிடந்து உற்சாகமும், ஆனந்தமும் பொங்கக் கூத்தடிக்கும்.” 

இளங்கோவுக்கு அருளின் விளக்கம் ஆச்சரியத்தை அளித்தது. 

“அருள், நீ கூறுவது சரிதான். இவ்வளவு விசயம் தெரிந்து வைத்திருக்கிறாயே.. ஆச்சரியம்தான். உளவியல் மருத்துவராகப் போயிருக்க வேண்டும். ‘மிஸ்’ பண்ணியிட்டாய்.” 

இவ்விதமாக அவர்க ளி ருவரும் அளவளவியபடியிருந்த வேளையில் அவனது பெயரை உள்ளிருந்து வந்த வெள்ளையின அதிகாரியொருவன் அழைத்தான். 

“யாரது.. இளங்கோ” 

“நான்தான்” என்றவாறெழுந்த இளங்கோ அருள்ராசா பக்கம் திரும்பியபடி “எங்கேயும் போயிடாதே. நான் வரும்வரைக்கும் இங்கைதான் நில்” என்றவன் அந்த அதிகாரியைப் பின்தொடர்ந்து உள்ளே எப்பொழுதுமே சென்றான். தன் காரியாலய அறைக்கு அவனை அழைத்துச் சென்ற அந்த அதிகாரி அருகிலிருந்த ஆசனத்திலமரும்படி சைகை காட்டினான். 

“என் பெயர் ‘டிம் லாங்கின்’. சரி, இன்றைக்கு எதற்காக இங்கு விஜயம் செய்திருக்கிறாய்?”

அவனுக்குப் பதில் சொல்வதற்கு முன்னர் இளங்கோ தன்னிடமிருந்த ஆவணங்களை, இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான பத்திரிகைச் செய்திகளின் போட்டோப் பிரதிகளை, அண்மைய யூலைக் கலவரத்தைப் பற்றி வெளிவந்த தகவல்கள், புகைப்படங்களை எடுத்துக் காட்டினான். அதிலொன்று நிர்வாணமாக்கப்பட்ட தமிழனொருவனைச் சுற்றி, அந்த அப்பாவியைக் கொல்வதற்கு முன்னதாக குடித்துக் கும்மாளமடித்துக் கொண்டிருந்த காடையர் கும்பலின் படம். அதனைப் பார்த்ததும் அந்த அதிகாரி முகம் சுளித்தான். ‘காட்டுமிராண்டிகள். காட்டுமிராண்டிகள்” என்று தனக்குள்ளேயும் சிறிது கூறிக் கொண்டான். 

அந்த அதிகாரியும் சிறிது மடங்கக் கூடிய ஆசாமியாக அவனுக்குப் பட்டது. 

“சேர், இலங்கைத் தமிழர்கள் இனரீதியில் பாதிக்கப்பட்டவர்கள். அந்தப் புகைப்படப்பிரதியில் கொல்லப்படுவதற்காகக் காத்திருக்குமந்த அப்பாவியுமொரு தமிழன்தான். நானுமொரு ஈழத்தமிழன்தான்…” 

இவ்விதம் அந்த அதிகாரிக்குத் தன் நிலையினை விபரிக்க முற்படுகையில் இளங்கோவுக்கு அந்தக் கணத்தில் அந்தப் புகைப்படப்பிரதியிலுள்ள அந்த அப்பாவித் தமிழனின் நிலை மிகவும் தெளிவாக, அனுபவரீதியாகப் புரிந்தது. நெஞ்சுணர்ந்தது. இரத்தம் சொட்டுமுடலுடன், நிர்வாணக் கோலத்தில், கூனிக்குறுகியபடி. வெறிபிடித்தாடும் மிருகங்களுக்கு மத்தியிலிருந்தபோது அவன் என்ன நினைத்திருப்பானோ? ஊரிலெங்கோ காத்து நிற்கும் அவனது மனைவியை அல்லது ‘எப்போ அப்பா வருவாரோ’ வென்று இன்பக் கனவுகளுடன் காத்து நிற்குமொரு இளங்குருத்தை அல்லது நோகும் நெஞ்சுடன் துஞ்சாதெங்கோ விழித்திருக்கும் காதலியை முதுமையில் அவனுதவியை நாடி நிற்குமந்தத் தாயை, சகோதரனை, சகோதரியையெல்லாம் நினைத்திருப்பானோ? அவனது அந்தக் கூனிக் குறுகிய தோற்றம் ஈழத்தமிழர்களின் துயரத்தினொரு குறியீடாக விளங்கியதுபோல் பட்டது. 

“சேர், வேலை செய்யாமல் இங்கு வாழ்க்கையைக் கொண்டு நடத்துவது மிகவும் சிரமமாகவுள்ளது. வேலை எடுக்க வேண்டுமென்றால் ‘சமூகக் காப்புறுதி இலக்கத்தைக் ‘ கேட்கிறார்கள்..” 

அதனைக் கேட்டதும் அந்த அதிகாரி சிறிது சிரித்தான். அத்துடன் “நியுயார்க்கிலிருக்கிறாய். நியுயார்க் உயர்ந்த கட்டடங்களுக்கு மட்டும் புகழ்பெற்றதொன்றில்லை. இன்னுமொன்றிற்கும் அது புகழ் மிக்கது. தெரியுமா?” என்றதும், இளங்கோ “தெரியும். கேளிக்கையான இரவு வாழ்க்கைக்கும் புகழ் பெற்றதுதான்” என்று பதிலிறுத்துச் சிரித்தான். அதற்கு ‘டிம் லாங்கின்’ தன் பருத்த தொந்தியசையச் சிரித்தான்: “மிக விரைவிலேயே நீ நல்லாத்தான் நியூயார்க்கைப் புரிந்து வைத்திருக்கிறாய். ஏதாவது அனுபவங்களுண்டா?” என்றும் கண்களைச் சிமிட்டினான்; அத்துடன் “அதுவல்ல சரியான பதில்” என்றும் ‘பொடி’ வைத்துப் பேசினான். 

“எனக்குத் தெரியவில்லையே” என்று பதிலுக்கு இளங்கோ தலையைச் சொரிந்தான். 

டிம் லாங்கினே தொடர்ந்தான்: “சரி சிறியதொரு துப்பு தருகிறேன். கண்டு பிடிக்கிறாயா பார்க்கிறேன். உன் இன்றைய இருப்பிலேயே பதிலும் அடங்கியுள்ளது. அதாவது என் கேள்விக்குரிய சரியான பதில் உன் இன்றைய இருப்பிலுள்ளது. எங்கே பதிலை இப்பொழுது கூறு பார்க்கலாம்?” 

இளங்கோவுக்கு அந்த வெள்ளையினத்து அதிகாரியின் போக்கு சிறிது வியப்பினைத் தந்தது. மிகவும் வேடிக்கையாகப் பேசுகிறான். வழக்கமான அதிகாரிகளுக்குரிய கண்டிப்பு, கர்வமெதுவுமில்லாமல் மிகவும் இயல்பாக, நட்புணர்வுடன், குதூகலமிக்க சிறுவனொருவனின் ஆனந்த உணர்வுடன் அவன் பேசுகிறான். அவனது கேள்விக்கு பதிலிறுக்க முடியாமல் இளங்கோ வெற்றிகரமாகப் பின்வாங்கினான். 

டிம் லாங்கினே தொடர்ந்தான்: “நியூயார்க் மில்லியன் கணக்கில் வசிக்கும் சட்டவிரோதக் குடிகளுக்கும் பெயர் போனதென்பதை எவ்விதம் நீ மறக்கலாம்? நீயே அவர்களிலொருவன்தானே. இவர்களெல்லாருமே இங்கு எந்தவிதச் சட்டரீதியான ஆவணங்களுமில்லாமல்தான் வேலை செய்கிறார்கள். அவர்களைப் போல் உன்னாலும் வேலை செய்ய முடியும். போய்ச் செய். உன்னுடைய கோப்புக்குக்குரிய சரியான மறுமொழி வாஷிங்டனிலுள்ள இராஜாங்க திணைக்களத்திலிருந்துதான் வரவேண்டும். அதன்பிறகுதான் எங்களால் எதுவும் செய்ய முடியும். இருந்தாலும் உன் நிலை பற்றிய என் பரிந்துரையினை அனுப்பி வைக்கிறேன். விரைவிலேயே உனக்கு அவர்களிடமிருந்து பதில் வருமென்று எதிர்பார்க்கிறேன். அதுவரையில் நியூயார்க் உன்னையும் வாழவைக்குமென்று நிச்சயமாக நம்புகிறேன்.” 

“அது சரி.. களவாக வேலை செய்து கொண்டிருக்கும்போது உங்களது அதிகாரிகள் யாராவது என்னைப் பிடித்து விட்டால்..” என்று இளங்கோ இழுத்தான். அதற்கு டிம் லாங்கின் “நீ தற்போது வைத்திருக்கிற ஆவணங்களைக் காட்டு. அவர்கள் புரிந்து கொள்வார்கள். நீ சட்டவிரோதமாகவிருந்தாலும் சட்டரீதியாகத்தான் பதிவு செய்து இருக்கிறாய். எனவே அவர்கள் புரிந்து கொள்வார்கள். வெருட்டினால் பசி பொறுக்கவில்லை. அதுதான் வேலை செய்கிறேன். வேண்டுமானால் தடுப்பு முகாமிலேயே கொண்டு சேர்த்து விடுங்கள் என்று சொல். ஆளை விடு என்று ஓட்டம் பிடித்து விடுவார்கள். ஒன்றுக்கும் பயப்படாதே. அமெரிக்கா நிச்சயம் உன்னை வாழ வைக்கும்” என்று பதிலுரைத்து, வாழ்த்தி வழியனுப்பி வைத்தான். 

அவனுக்கு நன்றி கூறி விட்டு வெளியில் வந்த இளங்கோவின் சிந்தையில் அந்த அமெரிக்கக் குடிவரவுத் திணைக்கள அதிகாரியின் பருத்த தொந்தியும், வேடிக்கையான பேச்சும், நியூயார்க்கில் சட்டவிரோதமாக வேலை செய்து வாழ்வதெப்படி, அகப்பட்டால் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளிடமிருந்து தப்புவதெப்படியென்று அவன் தந்த ஆலோசனைகளும் அவனைப் புதிர் நிறைந்ததொரு மனிதனாகப் புலப்படுத்தின; சிரிப்பும் கூடவே வந்தது. 

15 – நியூயார்க்கில் குடை வியாபாரம்

நண்பர்களிருவரும் குடிவரவுத் ணைக்கள அதிகாரிகளைச் சந்தித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்கள் நாற்பத்திரண்டாவது வீதியில் அமைந்திருந்த நூலகத்தை மையமாக வைத்து ‘பிராட்வே’ சாலை வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் நூலகத்திற்குச் சென்று பத்திரிகைகள், சஞ்சிகைகளைப் புரட்டினால் நல்லதுபோல் இளங்கோவுக்குப் பட்டது. அருள்ராசா இளங்கோவைப் போல் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இலக்கியமென்று எதிலும் பெரிதாக ஆர்வமற்றவன். ஆனால் கல்வி சம்பந்தமான, தொழில் வாய்ப்புகள் சம்பந்தமான, வியாபாரம் சம்பந்தமான விடயங்களில் ஆர்வமுள்ளவன். அவை பற்றிய விடயங்களை படிப்பதில் அதிகக் கவனம் செலுத்துபவன். அவனுக்கும் சிறிது நேரத்துக்கு நூலகம் சென்று ஏதாவது பிடித்த விடயங்களைப் பற்றிய பத்திரிகை, சஞ்சிகைகளைப் புரட்டினால் நல்லதுபோல் பட்டது. சிறிது நேரம் ஓய்வெடுத்ததும் போலாகுமெனப் பட்டது. இதன் காரணமாக இருவருக்கும் நூலகம் செல்வதில் எந்தவிதக் கருத்து வேறுபாடுகளும் ஏற்படவில்லை. எனவே நூலகத்தை நோக்கி நடையைக் கட்டினார்கள். அப்பொழுதும் அவர்களது சிந்தனை முழுவதும் குடிவரவு அதிகாரிகளுடனான சந்திப்பு பற்றியேயிருந்தது. இளங்கோ டிம் லாங்கைன்ச் சந்தித்திருந்தான். அருள்ராசாவுக்கு வந்து வாய்த்தவனோ டிம் லாங்கினைப் போல் அவ்வளவு வேடிக்கையானவனாக இருக்கவில்லை. வழக்கம்போல் அதிகாரிகளுக்குரிய கடின முகபாவமும், வார்த்தைகளை அளந்து, அதிகாரத்துடன் கொட்டும் தன்மையும் கொண்டவனாக விளங்கினான். எனவே அவனுக்கும் அருள்ராசாவுக்குமிடையிலான உரையாலும் மிகவும் குறுகியதாகவே அமைந்து விட்டதில் ஆச்சரியமேதுமிருக்கவில்லை. அவனொரு இத்தாலிய அமெரிக்கன். கிளாட் மன்சினி என்பது அவனது பெயர். அவனுக்கும், அருள்ராசாவுக்குமிடையில் நடைபெற்ற உரையாடலும் பின்வருமாறு சுருக்கமாக மட்டுமே அமைந்திருந்தது: 

அருள்ராசாவின் ஆவணப் பிரதிகளைப் பார்த்தபடியே குடிவரவுத் திணைக்கள அதிகாரி கிளாட் மன்சினி உனக்கு என்னவிதத்தில் உதவ முடியும்?” என்று ஆரம்ப வினாவினைத் தொடுத்தான். 

அதற்கு அருள்ராசா” சமூகக் காப்புறுதி இலக்க அட்டை எடுப்பது பற்றியே விசாரிப்பதற்காக இங்கு வந்துள்ளேன்..” என்றான். 

அதற்கு கிளாட் மன்சினி உனது விடயம் சம்பந்தமாக எங்களிடமிருந்து உனக்குரிய பதில் வரும் வரையில் எதுவும் செய்வதற்கில்லை. அதுவரை நீ பொறுத்திருக்கத்தான் வேண்டும். என்று பதிலிறுத்தான். அதற்கு மேல் அவனுடன் கதைப்பதில் எந்தவிதப் பயனுமில்லை என்பதை உணர்ந்து கொண்ட அருள்ராசா பதிலுக்கு நன்றி தெரிவித்து விட்டு வெளியேறினான். 

“அவனொரு குரங்கன். கொஞ்சங்கூட மனிதாபிமானமற்றவன். அவனுக்கு என் பிரச்சினையைக் காது கொடுத்துக் கேட்கவே பொறுமையில்லை. இந்த விசயத்திலை நீ குடுத்து வைச்சவன் இளங்கோ” 

“என்ன உனக்கு அவன் சொன்னதைத்தான் டிம் லாங்கினும் சொன்னான். என்ன அவன் கடுமையாச் சொன்னதை இவன் கொஞ்சம் வேடிக்கையாகச் சொன்னான். அவ்வளவுதான். மற்றப்படி முடிவு ஒன்றுதான்.” 

இவ்விதமாக ரையாடலைத் தாடர்ந்துகொண்டு நடந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுதுதான் இளங்கோ வானத்தைக் கவனித்தான். விரைவாகவே நகரத்துவானம் இருண்டு வந்துகொண்டிருந்தது. காற்றும் பலமாக வீசத் தொடங்கி விட்டிருந்தது. வாயு பகவானைத் தொடர்ந்து வருணபகவானின் ஆட்டம் இன்னும் கொஞ்ச நேரத்திலேயே தாடங்கிவிடும்போல் காலநிலை தென்பட்டது. 

“போகிற போக்கைப் பார்த்தால் மழை இளங்கோ கெதியிலை அடிச்சுக் கொட்டும் போலை” என்றான் அருள். 

“பாத்தால் அப்படித்தான் தெரியுது. இந்த நேரத்துக்கு ஊரிலை இருக்க வேணும். மழை பெய்யுறதிலை கூட எவ்வளவு அழகு. இங்கை சலனப்படத்தைப் பார்த்த மாதிரித்தான். பார்கலாம் ஆனால் இரசிக்க முடியாது…”

நண்பர்களின் உரையாடல் அப்படி இப்படித் திரும்பி அன்றாட வாழ்க்கைப் பிரச்சினையில் வந்து நின்றது.

“எபடியென்றாவது கெதியிலை ஒரு வேலை எடுக்க வேண்டும். ‘பேர்மனென்ற்’ வீசத் தொடங்கி வேலையாக இருந்தால்தான் கொஞ்சமாவது ” காசைச் சேர்க்கலாம். இல்லாவிட்டால் விட்டிருந்தது. உழைப்பதும் செலவழிப்பதுமாகவே பொழுது போய் விடும். காசைச் சேர்க்க முடியாது.”

“நீ சொல்வது சரிதான் இளங்கோ. ஆனால் ஒழுங்கான வேலைதான் கிடைக்க மாட்டவே மாட்டேன்கிது. என்ன செய்யலாம். எல்லாமிந்த சோசல் இன்சுரன்ஸ் கார்ட் இல்லாததால் வந்த கரைச்சல்தான்.. “

“அருள். எனக்கொரு யோசனை தோன்றுது… “

“என்ன…” 

“ஏன் நாங்கள் இன்னொருவனிடத்திலை வேலை தேட வேண்டும். நாங்களே ஏதாவது சொந்தமாகச்செய்ய முடியுமாவென்று பார்க்கலாமே… நியூயாய்க்கிலை எத்தனைபேர் சொந்தமாகத் தொழில் செய்து முன்னுக்கு வந்திருக்கிறான்கள்.. நீ என்ன சொல்லுறாய்?”

“அது சரி.. நீ சொல்லுறதும் ஒரு விதத்திலை சரியாய்த்தானிருக்கு. ஆனா கையிலையோ எந்தவிதச் சேமிப்புமில்லை. இந்த நிலைமையிலை எப்படிச் சொந்தத் தொழில் செய்யுறது. அப்படிச் செய்தாலும் எந்தத் தொழிலைச் செய்யுறது?” 

வானத்தின் கருமை கூடிக் கொண்டே வந்தது. அருகிலிருந்த கட்டடங்களிலிருந்து ஒரு சில மாடப்புறாக்கள் சிறகடித்துப் பறந்தன. இளங்கோவின் சிந்தனையிலொரு பொறி தட்டியது. 

“எனக்கொரு யோசனை வருது அருள். “

“என்ன ..?” 

“ஒரு சின்ன ‘பிசினஸ்’ செய்து பார்க்க நல்லதொரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு..” 

“எந்தச் சந்தர்ப்பத்தைச் சொல்லுறாய்? எனக்கென்றால் ஒன்றுமாய் விளங்கேலையே.. வடிவாய் விளக்கமாய்த்தான் சொல்லேன்..” 

“இன்னும் கொஞ்ச நேரத்திலை மழை கொட்டோ கொட்டென்று கொட்டப் போகுது..” 

“அதுக்கும் பிசினசுக்கும் என்ன சம்பந்தம்..?’ 

“சம்பந்தமிருக்கே.. இந்த பிசினசைச் செய்து பார்க்கிறதாலை பெரிசாய்ப் பணம் கிடைக்காட்டியும் நாங்கள் சொந்த பிசினஸ் செய்யக் கூடியவர்களாவென்று ‘டெஸ்ட்’ பண்ணிப் பார்க்க இதுவொரு நல்லதொரு சந்தர்ப்பம்…’ 

“பெரிசாகப் புதிர் போடாமல் கெதியாச் சொல்லித் தொலை. தலை வெடித்து விடும் போலைக் கிடக்கு” 

“மழைக்கும் இப்ப நாங்க செய்யப் போகிற பிசினசுக்கும் தொடர்பிருக்கென்று சொல்லியும் இன்னும் உனக்கு விளங்கவில்லையே. இப்பவாது விளங்குதா என்ன பிசினாசென்று?” 

“இஞ்சைபார் இளங்கோ. நானொன்றும் உன்னை மாதிரி பெரிய மூளைசாலியில்லை. பேசாமல் சொல்லித் தொலை. புதிர் போடுறானாம் புதிர். இருக்கிற நிலைமையிலை இதுக்கொன்றும் குறைச்சலில்லை” என்று அருள் சிறிது சலித்துக் கொண்டான். 

“உன்னிடம் எவ்வளவு டொலர்களிருக்கு அருள்?” 

“என்னத்துக்குக் கேட்கிறாய்? ஏன், கையிலை இப்ப ஐம்பது டொலர்களைவரை இருக்கு?” 

“அது காணும். என்னட்டையும் கையிலை ஒரு நாற்பது இருக்கு. ஆனால் அவ்வளவு செலவு வராது. ஆளாளுக்கு இருபது பொலர்களை வரைதான் செலவு வரும். நான் நினைச்ச பிசினசுக்கு இரண்டு பேருக்கும் சேர்த்து நாற்பது டொலர்கள் காணும்.” 

இளங்கோவே தொடர்ந்தான்: “இன்னும் கொஞ்ச நேரத்திலை மழை வந்துவிடும். அதற்குள்ளை கெதியாக பிசினசைத் தொடங்க வேண்டும். நான் சொல்ல வந்த பிசினஸ் குடை வியாபாரம்தான்..”

அருளுக்குச் சிறிது திகைப்பாகவிருந்தது. அவன் சிறிதும் இதனை எதிர்பார்க்கவில்லை. 

“என்ன குடை வியாபாரமோ.. உனக்கென்ன விசரே பிடிச்சிருக்கு? உண்மையாத்தான் சொல்லுறியோ?” 

“ஓம் அருள். உண்மையாத்தான் சொல்லுறன். குடை வியாபாரம்தான். அதிலையென்ன வெக்கம். கஷ்ட்டம். செய்து பார்க்க வேண்டியதுதான்..”

“எனக்கென்றால் ரோட்டிலை நின்று விக்கிறதுக்கு அவ்வளவு விருப்பமாயில்லை. வேறை ஏதாவது பிசினசிருந்தால் சொல்லு..” 

“இஞ்சைபார் அருள். இப்பிடி எல்லாத்துக்கும் வெக்கப்பட்டால் எங்களாலை ஒன்றுமே செய்ய முடியாது. யாரைப் பார்த்து வெக்கப்படுகிறாய்? இந்த ஊர்ச் சனங்களைப் பார்த்தா? நாளைக்கு பசியிலை கிடந்து வாடினா அவங்களா வந்து உனக்குச் சோறு போடப் போகிறான்கள்? தேவையில்லாமல் வெக்கப்படுறதை விட்டிடு. சொந்தமாகத் தொழில் செய்ய வேண்டுமென்றால் இப்பிடியெல்லாம் வெக்கப்படக் கூடாது. எங்களாலை முடியுமாவென்று பார்க்க வேண்டும். என்ன சொல்லுறாய்?” 

“நீ சொல்லுறதிலையுமொரு நியாயமிருக்கு. வெக்கப்பட்டால் வியாபாரமொன்றும் செய்ய முடியாதுதான். இறங்கிப் பார்க்க வேண்டியதுதான். இப்ப என்ன செய்ய வேண்டுமென்று நீ நினைக்கிறாய்?” 

“உனக்கொரு டசின், எனக்கொரு டசின் குடைகள் வாங்குவம். எம்பயர் ஸ்டேட் பில்டிங்கினொருபக்கம் நீ நின்று வில். மற்றப்பக்கம் நான் விக்கிறேன். ஆளுக்கு பத்துக் குடைகளை ஐந்து டொலர்களுக்கு வித்தாலும் ஒவ்வொருவருக்கும் முப்பது டொலர்களாவது மிஞ்சும். இரண்டு குடைகளும் மிச்சம். முழுவதையும் விக்க முடிஞ்சால் அது உண்மையிலேயே பெரிய சாதனை.” 

“இளங்கோ! நீ செல்லுறதைக் கேட்க நல்லாய்த்தானிருக்கு. நீ நினைக்கிறாயா விக்க முடியுமென்று. அப்பிடி வித்தால் உண்மையிலேயே நல்லதுதான். இருபது டொலர்களிலையிருந்து முப்பது பொலர்கள் லாபம். முயற்சி செய்யுறதாலை நாங்களொன்றும் இழக்கப் போகிறதில்லை. ‘நதிங் டு லூஸ்” 

அதுவரை பொறுமையாக இருந்த வானம் இலேசாகத் துமிக்கத் தொடங்கியது. அதனை அவதானித்த இளங்கோ கூறினான்: இனியும் மினக்கெடக் கூடாது. எங்கேயாவது ‘ஹோல் சேல்’ கடைகளேதாவது தெரிகிறதா பார்” 

அவர்களுடைய நல்ல காலமோ என்னவோ அருகிலேயே சிறிய மொத்தவிலைக் கடையொன்று பிராட்வே வீதியில் தென்பட்டது. அங்கு சென்று இரு ‘டசின்’ குடைகளை டசின் இருபது டொலர்களுக்கு வாங்கினார்கள். குடைகளுடன் வெளியில் வந்தபோது நண்பர்களிருவருக்கும் ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியேற்பட்டது. உலகப் புகழ்பெற்ற மாநகரில் குடை விற்பதை எண்ணுகையில் ஒருவித வியப்பும், ஆர்வமுமேற்பட்டன. நண்பர்களிருருவரும் குடைகளுடன் உலகப் புகழ்பெற்ற ‘எம்பயர் ஸ்டேட் பில்டிங்கை’ வந்தடைந்தபொழுது அதுவரை பொறுமையாகத் துமித்துக் கொண்டிருந்த நகரத்து மழை நகரத்து வானிலிருந்து கொட்டோ கொட்டென்று கொட்டத் தொடங்கி விட்டது. இடியும், மின்னலும், காற்றும் கூடிய மழை. திடீர் மழையினை எதிர்பார்க்காத நகரத்துவாசிகள் சிலர் டாக்சிகளிலேறிப் பறந்தார்கள். பணத்தில் சிக்கனம் பிடிக்கும் சிலர் கட்டடங்களின் முகப்புகளின் கீழ் காத்து நின்றார்கள். மேலும் சிலரின் கவனம் குடை வியாபாரிகளின் பக்கம் திரும்பியது. இளங்கோவும் அருள்ராசாவும்” குடை ஒன்று ஐந்து டொலர்கள் மட்டுமே. குடை! குடை!” என்று கூவிக்கொண்டே தங்களது குடை வியாபாரத்தை ஆரம்பித்தார்கள். நியூயார்க் மாநகரில் நடைபாதையில் நின்று குடை விற்பதிலுமொரு ‘திரில்’ இருக்கத்தான் இருக்கிறதென்று எண்ணிய இளங்கோ “குடை. வலிமையான குடை. நல்ல குடை. ஓடி வாருங்கள். ஒருமுறை பரீட்சித்துப் பாருங்கள். குடை ஒன்று ஐந்து டொலர்கள் மட்டுமே!” என்று பலமாகக் கத்தி பாவனையாளர்களைத் தன்பக்கம் இழுப்பதற்கு முயன்றுகொண்டிருந்தான். அதில் ஓரளவு வெற்றியும் அடைந்திருந்தான். இவ்விதமாக நண்பர்களிருவரதும் குடை வியாபாரம் ஆரம்பத்தில் மந்தமாக ஆரம்பித்து விரைவிலேயே மழையின் அதிகரிப்புடன் அதிகரிக்கத் தொடங்கியது.

– தொடரும்…

– குடிவரவாளன் (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 2015, ஓவிய பதிப்பகம், பட்லகுண்டு, தமிழ்நாடு.

(நவரத்தினம் கிரிதரன், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்)  ஒரு குறிப்பிடத்தக்க கனேடிய. ஈழத்து எழுத்தாளர். இவர் பல சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள். ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை ஆக்கியுள்ளார். பதிவுகள் இணைய இதழின் ஆசிரியரும் ஆவார். வ.ந.கிரிதரன் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாக கொண்டவர். இவரின் தந்தை பெயர் நவரத்தினம். இளமையில் வவுனியாவில் வாழ்ந்த இவர். வன்னி மண்ணின் பற்று காரணமாக வ என்று தன் பெயருக்கு முன் சேர்த்து கொண்டார். ஆரம்ப கல்வியை வவுனியா மகாவித்தியாலத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *