கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 14, 2024
பார்வையிட்டோர்: 1,526 
 
 

(2015ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

4 – மதகுருவின் துணிவு

அந்தக் காலை நேரத்திலும் கடலில் சில ஐரோப்பிய உல்லாசப் பயணிகள் சிலர் கடலில் குளித்துக் காண்டிருந்தனர். விதேசிகள் ஆனந்தமாகக் குளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இங்கு நான் சுதேசியோ உ யி ரைத் தப்ப வைப்பதற்காக ஓடிக் கொண்டிருக்கின்றேன். அவர்களுக்கு இருக்கின்ற உரிமைகள் கூட எனக்கில்லையே இவ்விதமாக அந்தக் கணத்திலும் இளங்கோவின் சிந்தையிலொரு எண்ணம் கோடு கிழித்தது. கொழும்பிலிருந்து காலிக்குச் செல்லும் புகையிரதக் கடவைகள் வழியாகக் குண்டர்களின் நடமாட்டம் சிறிது அதிகமாக விருந்ததை அவதானித்தவன் கடற்கரை மணலினுள் இறங்கியவனாகக் கடலையும் அதன் வனப்பையும், அங்கு நீராடிக் கொண்டிருந்தவர்களையும் பார்த்தவனாக இராமகிருஷ்ண மடமிருந்த திக்கை நோக்கி நடந்தான். அடிக்கொருதரம் திரும்பி நண்பன் பின்தொடர்வதை உறுதி செய்து கொண்டான். நண்பனைப் பொறுத்தவரையில் பார்வைக்குக் கிராமத்துச் சிங்கள இளைஞனைப் போன்று சிறிது வெண்ணிறமான தோற்றத்தில் சுருண்ட தலைமயிருடனிருந்தான். சிங்களம் வேறு மிகவும் இயல்பாகக் கதைக்குமாற்றல் பெற்றவன். தப்பி விடுவான். இவனைப் பொறுத்தவரையில் நிலமை வேறு. ‘ஓயாகே நம மொக்கத?’, ‘டிக்கக் டிக்கக் தன்னவா’ போன்ற ஒரு சில ஆரம்பச் சிங்கள வார்த்தைகளைத் தவிர சுட்டுப் போட்டாலும் இவனுக்குச் சிங்களம் வராது. ஒரு முறை இவனது பல்கலைக் கழக வாழ்க்கையில் நிகழ்ந்ததொரு சம்பவம் இவனது சிங்கள மேதமையினை வெளிப்படுத்தவல்லது. ஒருமுறை இவனை பகிடிவதை செய்த மாணவர்கள் சிலர் இவனிடம் அரை இறாத்தல் சீனி வாங்கி வரும்படி கூறியிருந்தனர். அப்பொழுது பல்கலைக்கழகத்துக்கு அண்மையிலிருந்த சிங்களவரொருவரின் பலசரக்குக் கடைக்குச் சென்றவன் ‘எக்கா மாறா’வென்று ஒன்றரை இறாத்தல் பாணுக்குக் கூறுவது நினைவுக்கு வரவே அரை இறாத்தல் சீனிக்கு ‘சீனி மாறா’வென்று (சீனி பாகயா’ என்றுதான் கூறவேண்டும்) கேட்டு அங்கிருந்தவர்களின் சிரிப்புக்காளானான். மேலுமின்னுமொரு சம்பவம் அவனது இரயில் பயணத்தில் நடைபெற்றிருந்தது. ஒரு முறை யாழ்தேவியில் கொழும்புக் கோட்டையிலிருந்து யாழ்நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தவனுக்கு அங்கிருந்த உணவகத்தில் ‘மட்டன் ரோ லொன்று வாங்கியுண்ணவேண்டுமென்று விருப்பம் வந்தது. அந்த உணவகமோ சிங்களவரொருவரால் நடாத்தப்பட்டதுணவகம். 

அவரிடம் ‘ரோல் கீயத’வென்று தனக்குத் தெரிந்த சிங்களத்தில் விளாத்தொடுத்தான். அதற்கவர் ‘எக்கா விசிப்பகா’ என்றார். உடனேயே இவனுக்கோ ஆனந்தம் தலைவிரித்தாடியது. ஊரில் கூட ஒரு ‘ரோல்’ ஒரு ரூபா இருபத்தியைந்து சதத்திற்கு விற்பனயாகும்போது இங்கு எவ்வளவு குறைந்த விலையில் ஒன்று இருபத்தியைந்துக்கு விற்கிறானே என்று சந்தோசப்பட்டவனாக இரண்டு ரோல்களை வாங்கி ஆசை தீர உண்டு விட்டு அதற்குரிய பணமாக ஐம்பது சதத்தை எடுத்துக் கொடுத்தான். அதற்குப் பதிலாக வெளிப்பட்ட அந்தச் சிங்களவரின் முறைப்பிற்குப் பின்னர்தான் ரோலின் விலை ‘ஒரு ரோல் இருபத்தியைந்து சதமல்ல ஒரு ரோல் ஒரு ரூபா இருபத்தியைந்து சதமென்பதே’ அவனுக்கு விளங்கியது. இந்த நிலையில் நாட்டில் நிலவிய அரசியற் சூழல் காரணமாகச் சிங்களம் படிப்பதிலேயே அவனுக்கு ஆர்வமற்றுப் போயிற்று. சிங்கள மொழியில் இவ்விதமானதொரு பாண்டித்தியம் பெற்றவனின் மொழியறிவினை இந்தச் சமயம் பார்த்து யாராவது சிங்களக் காடையன் வந்து பரீட்சித்துப் பார்த்தால் அவனது கதி அதோ கதிதான். அவனது எண்ணமெல்லாம் எப்படியாவது இராமகிருஷ்ண மடத்தினுள் சென்று விட்டால் போதுமென்பதாகத்தான் அச்சமயத்திலிருந்தது. காடையர்கள் கடந்த கலவரத்தில் விட்டு வைத்ததைப் போல் இம்முறையும் இராமகிருஷ்ண மடத்தை விட்டு வைப்பார்களென்று அவனது மனம் ஏனோ அச்சமயத்தில் நம்பியது. ஒரு வழியாக அவனும் நண்பனும் இராமகிருஷ்ண மண்டபத்தை அடைந்து விட்டார்கள். ஆனால் கைக்கெட்டியது வாய்க்கெட்டாத நிலைதான். இராமகிருஷ்ண மண்டபத்தின் முன்புற வாசற் கதவு பூட்டப் பட்டிருந்தது. வாசலின் முன்புறமாக இராமகிருஷ்ண வீதியில் காடையர் கும்பலொன்று நின்று மண்டபத்தையே வேடிக்கை பார்த்தபடியிருந்தது. அவனும் நண்பனும் அவர்களோடு அவர்களாக நின்று வேடிக்கை பார்ப்பது போல் பாவனை செய்தார்கள். அடிக்கொருதரம் கொழும்புத் தமிழர்கள் சிலர் வாகனங்களில் வந்து மடத்தின் முன்னால் இறங்கிக் கொண்டிருந்தார்கள். அவ்விதம் வந்தவர்களை உள்ளிருந்து வந்த பாதுகாவல் அதிகாரி அடிக்கொருதரம் வாசற் கதவினைத் திறந்து உள்ளே விட்டு விட்டு மீண்டும் மூடிக் கொண்டிருந்தான். அத்தகையதொரு சமயததில் அவனும் நண்பனும் அபயம் தேடி வந்த பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் சேர்ந்து உள்ளே நுழைந்து விட்டார்கள். 

மண்டபத்தினுள் மேலும் பல தமிழர்கள் என்ன நடக்குமோ ஏது நடக்குமோவென்ற பயப்பிராந்தியிருந்தார்கள். வெளியில் இன்னும் காடையர்கள் கூட்டம் வேடிக்கை பார்த்தபடியேயிருந்தது. வரவர அவர்களது கூட்டமும் அதிகரித்தபடியேயிருந்தது. உள்ளிருந்த தமிழர்களில் தமது தேன்நிலவினைக் கொண்டாட வந்து அங்கு தங்கியிருந்த இளந்தம்பதியொன்றுமிருந்தது. பார்க்கப் பாவமாகவிருந்தது. 

இத்தகையதொரு சூழலில் அங்கிருந்தவர்களில் சிறிது உயரமாகத் திடகாத்திரமாகவிருந்த தமிழ் இளைஞனொருவன் அங்கிருந்த இளைஞர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறினான்: 

“இன்னும் கொஞ்ச நேரத்திலை வெளியிலை வேடிக்கை பார்க்கிற குண்டர்கள் உள்ளுக்குள் வந்து விடுவான்கள். நாங்கள் பயப்படக்கூடாது. எதிர்த்து நிற்க வேண்டும். நடைமுறைச் சாத்தியமற்ற துணிச்சலாக அது அவனுக்குப் பட்டது. இத்தகைய சமயங்களில் ஆத்திரப்படாமல், சமயயோசிதமாக, நிதானத்துடன் சிந்தித்துப் பிரச்சினையை அணுக வேண்டும். அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்து விடக் கூடாதென்று இவனுக்குப் பட்டது. அவ்விதம் கூறிய அந்த இளைஞன் உள்ளே சென்று எங்கிருந்தோ அலவாங்கு’ அளவிலிருந்து இரும்புத் துண்டங்களைக் கொண்டு வந்து அங்கிருந்த இளைஞர்கள் கைகளில் கொடுத்தான். 

வெளியில் காடையர்களின் அட்டகாசம் வினாடிக்கு வினாடி அதிகரித்தபடியேயிருந்தது. அதனை அடிக்கொருதரம் ஜீப்புகளில் வந்து ‘ஜெயவீவா’ கோசமிட்டுச் சென்ற சிறிலங்கா இராணுவத்தினரின் உற்சாகமும் அதிகரிக்க வைப்பதாகவிருந்தது. இராமகிருஷ்ண மண்டபத்தின் முன்னால் நின்று ஸ்ரீலங்காக் காவற்படையினர் சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இவற்றால் மேலும் உற்சாகமுற்ற காடையர் கூட்டம் மண்டபத்தினுள் நுழைய முற்பட்டது. பாதுகாவல் அதிகாரிகளும் நிலைமை கட்டு மீறவே ஓடிப்போய் விட்டார்கள். காடையர்கள் உள்ளே வரமுற்படுவதைக் ஆனந்தமாகக் கண்டதும் மண்டபத்தினுள்ளிருந்த தமிழர்கள் ஆளுக்கொன்றாய் பிரிபட்டு மண்டபத்தின் ஒவ்வொரு பக்கமாய் ஓடினார்கள். அதுவரையில் இளைஞர்களுக்கு எதிர்த்து நிற்கும்படி ஆலோசனை வழங்கிய கின்றார்கள்” இளைஞன்தான் முதலில் ஓடி மறைந்தவன். 

மற்றவர்களும் கைகளிலிருந்தவற்றை அப்படி அப்படியே போட்டு விட்டு ஆளுக்கொருபக்கம் ஓடிவிட்டார்கள். இவ்விதமாக ஓடியதில் நண்பனும் இவனும் பிரிபட்டுப் போனார்கள். பெண்களெல்லாரும் படிகள் வழியாக மொட்டை மாடிக்கு ஏறிச் சென்றார்கள். அவ்விதம் சென்றவர்கள் ஒளிவதற்கு இடமில்லாத நிலையில் தண்ணீர்த் தாங்கிக்கும் மொட்டை மாடித்தரைக்குமிடையிலிருந்த சிறிய இடத்தில் நெருக்கியடித்து குடங்கிக் கொண்டார்கள். 

இளங்கோ மொட்டை மாடிக்கு வந்தபோது மொட்டை மாடியில் நீட்டிக் கொண்டிருந்த தூண்களைத் தவிர ஒளிவதற்கென்று ஏதுமில்லை. தண்ணீர்த்தாங்கிக்கடியில் குடங்கிக் கிடந்த பெண்களின் நிலை பரிதாபமாகவிருந்தது. வயது முதிர்ந்த தமிழரொருவர் வருவது வரட்டுமென்ற நிலையில் மொட்டை மாடிக்குள் நீட்டிக் கொண்டிருந்த தூணொன்றின் பின்னால் சாய்ந்தவராக வானத்தையே பார்த்தப்படியிருந்தார். அகதிகளாக விண்ணில் மேகங்கள் அலைந்து கொண்டிருப்பதுபோல் பட்டது. அப்பொழுதுதான் அவன் ஆரம்பத்தில் ஆயுதம் தந்து விரைந்து மறைந்து போன இளைஞன் நீர்த்தாங்கியின் மேல் மல்லாந்து படுத்து ஆகாயத்தையே நோக்கியபடியிருந்ததை அவதானித்தான். அவ்விதம் அவன் படுத்திருப்பதைக் கீழிருப்பவர்கள் யாரும் இலேசில் பார்த்து விடமுடியாது. 

இச்சமயம் நகரில் கலவரம் சுவாலை விட்டு எரியத் தொடங்கியிருப்பதை வெள்ளவத்தைப் பக்கமிருந்து வந்த புகைப் படலம் தெரியப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து புகையிரதப் பாதைகள் வழியாகத் தமிழர்கள் தெகிவளைக் கால்வாயை நோக்கி ஓடிக் கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. வயது முதிர்ந்த பெண்கள் சேலைகளை முழங்கால்கள் வரையில் தூக்கியபடி ஓட முடியாமல் ஓடிக் கொண்டிருந்தார்கள். எதிரிலிருந்த ‘ஓட்டல் பிரைட்டனி’ல் தங்கியிருந்த உல்லாசப்பயணிகள் சிலர் அருகில் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் பல்வேறு விதமான புகைப்படக் கருவிகள் மூலம் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இதே சமயம் இராமகிருஷ்ண மடத்தின் முன்பாக அதன் வளவில் தரித்து நின்ற யாழ்ப்பாணத்துப் பிள்ளையார் விலாசுக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்றைக் காடையர்கள் எரியூட்டினார்கள். இன்னுமொரு ஜீப் வண்டியை மண்டபத்தின் கீழ்த்தளக் கண்ணாடிச் சுவரொன்றுடன் மோதினார்கள். அத்துடன் மண்டபத்தினுள் காடையர்கள் நுழைந்து விட்டார்கள். அவர்களிலொருவன் மொட்டை மாடிக்கு வந்து எட்டிப் பார்த்தான். பார்த்தவன் “உத்தா இன்னவா” என்று கத்திச் சென்றான். மீண்டும் வந்து மொட்டை மாடியிலிருந்து கீழ்ச் செல்லும் படிகளுக்கண்மையில் நின்றவனாக அனைவரையும் இறங்கும்படி சைகை காட்டினான். அவ்விதம் இறங்கியவர்களின் கைகளிலிருந்தவற்றை பிடுங்கி விட்டுத்தான் இறங்க அனுமதித்தான். பலர் அவசர அவசரமாகத் தப்பி வந்தபொழுது கொண்டுவந்திருந்த நகைகள். பணம் போன்ற பலதையும் இழந்தார்கள். உயிருக்கே உத்தரவாதமில்லா நிலையில் யாருக்கு வேண்டும் உடமை? இவ்விதமாக இறங்கியவர்களை மீண்டும் மேலே கலைத்தது கீழிருந்து வந்த காடையர்களின் கூச்சல். மீண்டும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்காக ஓடினார்கள். பலர் ஒவ்வொரு தளங்களிலுமிருந்த கழிவறைகளில், குளியலறைகளிலெல்லாம் ஓடி ஒளிந்து நின்றார்கள். அவ்விதமாகக் கழிவறையொன்றினுள் அவனும் அந்தப் புதுமணத்தம்பதியினரும் சிறிதுநேரம் அகப்பட்டுக்கொண்டார்கள். பயத்தால் கதி கலங்கிப் போயிருந்தனர் அந்தப் புதுமணத் தம்பதியினர். 

காடையர்களில் சிலர் இராமகிருஷ்ண மண்டபத்தையும் எரியூட் முனைந்தார்கள். அதுவரையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவற்துறையினரில் சிலர் அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தார்கள். அத்துடன் அம்முயற்சியினைக் கைவிட்ட காடையர்கள் வளவுக்கு வெளியில் நின்று மீண்டும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். அச்சமயத்தில் அருகிலிருந்த தமிழர்களுக்குச் சொந்தமான வீடுகளையெல்லாம் உடைத்து அங்கிருந்த பொருட்களையெல்லாம் எடுத்துக் கொண்டு ஆண்களும், பெண்களும் சிறுவர்களும் வீதி வழியாக ஓடிக் கொண்டிருந்தார்கள். அவ்விதம் ஓடிக் கொண்டிருந்தவர்களை உற்சாகப் படுத்தும் வகையில் அடிக்கொருதரம் இராணுவச் சிப்பாய்கள் ‘ஜெயவிவா’ கோசமிட்டபடி ஜீப்புகளில் விரைந்து கொண்டிருந்தார்கள். 

அதன் பின்னர் உள் நுழைந்த காவற்துறையினர் அனைவரையும் அங்கிருந்து செல்லும்படி பணித்தார்கள். வெளியில் காடையர்களின் அட்டகாசமிருக்கையில் எங்கு போவது? அனைவரும் அருகிலிருந்த இராமகிருஷ்ண மடத்துத் தலைவரான துறவியின் வீட்டினுள் நுழைந்து கொண்டார்கள். இதே சமயம் ஆரம்பத்தில் இராமகிருஷ்ண மடத்திலிருந்து தப்பியோடுகையில் பலர் அருகிலிருந்த தென்னைகளைப் பிடித்து வெளிப்புறமாகத் தப்பியோடினார்கள். அவ்விதம் ஓடியவர்களில் ஒருவனாகத்தான் அவனது நண்பனுமிருக்க வேண்டும். இராமகிருஷ்ண மடத் துறவியின் வீட்டினுள் அடைக்கலம் புகுந்தவர்களில் அவனைக் காணவில்லை. 

பிரச்சினை அத்துடன் ஓயவில்லை. மீண்டும் தமிழர்கள் துறவியில் இல்லத்திலிருப்பதை அவதானித்து வைத்த காடையர்கள் சிலர் துறவியின் இல்லத்தைச் சுற்றிச் சுற்றியெ வந்து கொண்டிருந்தார்கள். உள்ளே அகப்பட்டுக் கொண்டிருந்தவர்களில் சிலர் கொழும்பில் செல்வாக்கான தமிழர்கள். அவர்கள் தங்கள் செல்வாக்கினைப் பாவித்து மேலிடங்கள் பலவற்றுடன் தொடர்பு கொள்ள முயன்று களைத்துப் போனார்கள். எந்தச் சமயத்திலும் காடையர்கள் உள் நுழைந்து விடலாமென்ற நிலை…. எதிர்காலம் நிச்சயமற்றிருந்த நிலையில் அனைவருமிருந்தார்கள். ஒரு சில காடையர்கள் ஆயுதங்களுடன் துறவியின் வீட்டினுள் நுழைய முற்பட்டார்கள். உள்ளிருந்து வெளியில் நடப்பதை அனைவரும் அவதானித்துக் கொண்டிருந்தார்கள். 

அந்தச் சமயத்தில்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அந்தத் துறவி உயர்ந்த ஆகிருதி படைத்தவர். கம்பீரமான தோற்றம் மிக்கவர். மிகுந்த துணிவும் நெஞ்சுரமும் மிக்கவரென்பதை அப்பொழுதுதான் அவன் அவதானித்தான். நீண்டதொரு சாய்வு நாற்காலியினை இல்லத்துக் கதவின் முன்னால் இழுத்துப் போட்டு விட்டுக் காடையர்கள் யாரும் உள் நுழைய முடியாத வகையில் மிகவும் சாவதானமாக அந்நாற்காலியில் சாய்ந்து கொண்டார். அந்தக் காடையர்களைப் பார்த்து என்னை வெட்டிப் போட்டு விட்டு வேண்டுமானால் உள்ளே செல்லுங்கள் என்னும் தோரணையில் அவ்விதமாக அவர் நடுவில் மறித்து நின்றது உள்ளே நுழைய முற்பட்ட காடையர்களை ஏதோ விதத்தில் கட்டிப் போட்டு விட்டது. அந்த மதகுரு மட்டும் அன்று அவ்விதம் தடுத்திரா விட்டால் என்ன நிகழ்ந்திருக்குமோ? அன்று மாலை வரை இந்நிலை நீடித்தது. இதே சமயம் இராமகிருஷ்ண மண்டபத்தினுள் அகப்பட்டிருந்தவர்கள் ஓரளவு நிலைமை சீராகத் தொடங்கியதும் அங்கிருந்து வசதிகளைப் பாவித்துத் தேநீர் போட்டுக் கொண்டு துறவியின் இல்லத்தில் தங்கியிருந்தவர்களுக்குக் கொண்டு வந்து தந்தார்கள். அப்பொழுதுதான் அவனது பிரிந்து போன் நண்பனை அவன் மீண்டும் சந்தித்தான். ‘என்ன நடந்தது?’ என்றவனுக்கு அவன் ‘அதுவொரு பெருங் கதை. தப்பிப் பிழைத்ததே அருந்தப்புத்தான். பிறகு விபரமாகச் சொல்லுகிறேன்’ என்றான். 

அதன் பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து அனைவருக்கும் உணவு தயாரித்துப் பகிர்ந்துண்டார்கள். இரவாகி விட்டது. அன்றிரவே லொறிகளில் ஆடுமாடுகளைப் போல் அனைவரையும் திணித்து பம்பலப்பிட்டியிலுள்ள சரஸ்வதி மண்டபத்தினுள் கொண்டுவந்து இறக்கி விட்டார்கள். 

5 – இளங்கோவின் நாட்குறிப்பிலிருந்து

சரஸ்வதி முகாமிற்கு வந்தபோது அகதிகளுக்கு எந்தவித வசதிகளும் அங்கிருக்கவில்லை. நான் என் பல்கலைக் கழகத்துத் தோழர்கள் மற்றும் ஏனைய தமிழ் இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து தாண்டர்கள் குழுவொன்றை ஏற்படுத்திக் கொண்டோம். அதன் பின் அனைவரும் தமிழக அரசினால் அகதிகளை யாழ்ப்பாணம் கொண்டு செல்ல அனுப்பப்பட்ட சிதம்பரம் கப்பலில் யாழ்ப்பாணம் செல்லும்வரையில் அம்முகாமிலேயே தங்கியிருந்து தொண்டர்களாகப் பணிபுரிந்தோம். சிதம்பரம் கப்பலில் யாழ்ப்பாணம் செல்லும் வரையில் வீட்டாருக்கு நான் உயிருடனிருக்கும் விடயமே தெரிந்திருக்கவில்லை. அகதி முகாமிலிருந்து ஏற்கனவே இலங்கை அரசின் ‘லங்காரத்னா’ சரக்குக் கப்பலில் ஊர் திரும்பியிருந்த ஊரவனொருவனிடம் என் நிலைமையினை வீட்டாருக்குத் தெரியப்படுத்தும்படி கூறியிருந்தேன். யாழ்ப்பாணம் திரும்பிய அவன் அவனது உறவினருடன் கைதடியிலேயே நின்று விட்டதால் உடனடியாக விடயத்தை வீட்டாருக்குத் தெரியப்படுத்த முடியவில்லை. நான் சிதம்பரம் கப்பலில் திரும்பிய பின்னரே அவன் ஊர் திரும்பி விடயத்தை என் வீட்டாருக்குத் தெரியப்படுத்துவதற்காக வந்திருந்தான். 

முதன் முதலாகச் சொந்த நாட்டிலேயே அகதியான அனுபவம் மனோரீதியில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே என் மக்கள் பல வருடங்களாக அனுபவித்து வந்ததொரு வாழ்வுதான். சொந்தமாக அனுபவித்தலென்பது பெரிதும் வித்தியாசமானது. உண்மையிலேயே இந்தக் கலவரத்தில் நானும், நண்பனும் தப்பியது மயிரிழையில்தானென்பது சரஸ்வதி முகாமில் பின்னர் சந்தித்த அகதிகள், சர்வதேச பத்திரிகை, வானொலிச் செய்திகள் போன்றவற்றிலிருந்து நன்கு புரிந்தது. வழக்கமாகக் கலவரங்கள் நாட்டின் ஏனைய பாகங்களில் பெருமளவுக்குப் பற்றியெரியும். தலைநகர் அநேகமாகத் தப்பிவிடும். ஆனால் இம்முறை.. தலைநகரான கொழும்பே பற்றியெரிந்தது. நாங்கள் அரச வாகனத்தில், இந்தியப் பொறியியலாளரின் புண்ணியத்தில் தப்பிச் சென்று கொண்டிருந்தபொழுது கொழும்பில் மினிவானொன்றினுள் தமிழர்களை ஒட்டுமொத்தமாகப் பெற்றோலூற்றித் துடிதுடிக்கக் கொழுத்தியிருக்கின்றார்கள். துவிச்சக்கர வண்டியொன்றில் வந்து கொண்டிருந்த தமிழனொருவனையிழுத்து அடித்துக் கொன்றிருக்கின்றார்கள். இன்னுமொருவனை நிர்வாணமாக்கி, அவமானப்படுத்தி எரியூட்டியிருக்கின்றார்கள். கிருலப்பனையில் இளம்பெண்ணொருத்தியின் கண் முன்னாலேயே அவளது பிஞ்சுச் சகோதரியைக் கொன்று, சித்தப்பிரமையாக்கிப் பலர் பாலியல் வல்லுறவு செய்து கொன்றிருக்கின்றார்கள். வழக்கம்போல் மலையகத்தில் இம்முறையும் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களான தமிழர்கள்மேல் பரந்த அளவில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. இவற்றிற்கெல்லாம் காரணமாக ஜூலை 23இல் யாழ் திண்ணைவேலியில் நடந்த பதின்மூன்று இராணுவத்தினரின் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலேயென்று ஜே.ஆர். தலைமையிலான அரசு பழி கூறியது. அதனையொரு சாட்டாக வைத்துக் கலவரத்தை ஏற்கனவே திட்டமிட்ட வகையில் ஊதிப் பெரிதாக்கியது சிறில் மைத்தியூ. காமினி திசாநாயக்க போன்ற அமைச்சர்களின் அரவணைப்பிலியங்கிய காடையர் கும்பலே. இத்தகைய சூழலிலும் எத்தனையோ சிங்கள மக்கள் தம் அயலில் வசித்த தமிழர்களைக் காடையர்களிலிருந்து காப்பாற்றியிருக்கத்தான் செய்திருக்கின்றார்கள். 

ஜே.ஆர்.ஜெயவர்த்தனே இலங்கைப் பிரதமராக 1977இல் பதவியேற்றதுமே மிகப்பெரிய இனக்கலவரமொன்று நடைபெற்றது. அதனைத் தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாகக் கூட்டணிக்கு வாக்களித்ததற்காக ‘போரென்றால் போர். சமாதானமென்றால் சமாதானம்’ என்று ஊதிப் பெரிதாக்கினார் இன்றைய ஜனாதிபதி. அரசியலில் பழுத்த தந்திரம் மிக்க குள்ளநரியென்று ஜே-ஆரைக் கூறுவது நன்கு பொருத்தமானதே. அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவுக்கும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்துக்கு மிடையிலேற்பட்ட ஒப்பந்தத்தைக் கண்டிக்குப் பாதயாத்திரை சென்று கிழித்தெறிய வைத்தவரிவர். அதிகாரத்தை வைத்து அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதில் சமர்த்தர். முன்னாள் பிரதமர் சிறிமா அம்மையாரின் அரசியலுரிமையையே பறித்தவரிவர். இம்முறை இவரது அரச அமைச்சர்கள் தலைமையிலேயே திட்டமிட்ட வகையில் தமிழர்களுக்கெதிரான இனக்கலவரங்கள் அவ்வப்போது கட்டவிழ்த்து விடப்பட்டன. 1981இல் யாழ் நாச்சிமார் கோவில் முன்றலில் நடந்த தேர்தல் கூட்டத்தில் பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்டதைச் சாக்காக வைத்து அமைச்சர்களான காமினி திசாநாயாக்கா போன்றவர்கள் யாழ் கோட்டையிலிருக்கையிலேயே யாழ்நகரில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் தீக்கிரையானது. இம்முறையும் கலவரத்தைத் தணிப்பதற்குப் பதில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அதனை நியாயப் படுத்தியிருக்கின்றார். திண்ணைவேலியில் இராணுவத்தினர் கொல்லப்படுவதற்கு முன்னரே இன்னுமொரு இனக்கலவரம் பெரிய அளவில் நடைபெறுவதற்கான சூழல் நாட்டில் தோன்றி விட்டது. இக்கலவரத்தைச் சாக்காக வைத்துத் தமிழ் அரசியற் கைதிகளைக் கொல்லுவதற்கும், தமிழரின் பொருளாதாரத்தை உடைப்பதற்கும் அதே சமயம் ஜே.வி.பி. போன்ற தனது அரசியல் எதிரிகளைப் பழி வாங்குவதற்கும் ஜே.ஆர். அரசு திட்டமிட்டுச் செயற்பட்டது போல்தான் தெரிகின்றது. அத்துடன் இன்னுமொரு திட்டத்தையும் இக்கலவரத்தைச் சாக்காக வைத்து நிறைவேற்றியது. அது.. 1977இல் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து வடகிழக்கின் எல்லைப் பிரதேசங்களில் குடியேறியிருந்த மலையகத்தமிழர்களின் குடியேற்றத் திட்டங்களைச் சீர்குலைப்பது. அதனால்தான் இக்கலவரம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே இவ்வகையான குடியேற்றத் திட்டங்களில் வாழ்ந்து வந்த மலையகத் தமிழ்க் குடும்பங்கள் பலவற்றை சிறிலங்கா இராணுவம் பலவந்தமாக மீண்டும் மலையகத்துக்கு கொண்டுவந்து பற்றியெரிந்து கொண்டிருந்த கலவரத்தின் நடுவில் தத்தளிக்க விட்டது போலும். அதனால்தான் இத்தகைய குடியேற்றங்களை நடாத்திய ‘காந்தியம்’ போன்ற அமைப்புகளின் நிர்வாகத்தர்கள் பலரைக் கலவரம் தொடங்குவதற்கு முன்னரே அரசு கைது செய்து சிறைகளில் அடைத்துச் படுத்தியது. சித்திரவதை செய்தது போலும். 

இம்முறை கலவரத்தின் தன்மையும், தலைநகரிலேயே அது சுவாலை விட்டெரிந்ததும், செய்மதித் தொழில்நுட்பம் போன்றவற்றின் மூலம் தகவல்கள் உடனுக்குடன் உலகம் முழுவதும் பரவியதும் ஈழத்தமிழர்களின் பிரச்சினையை முக்கியமானதொரு சர்வதேசப் பிரச்சினையாக்கி விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சகல அரசியற் கட்சிகளும் ஒருமித்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் சொந்தமாக கொடுத்தன. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அனுபவித்தலென்பது இம்முறை ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் மிகவும் ஈடுபாடு காட்டினார். அதனால்தான் ஜூலை 15இல் ‘டெய்லி டெலிகிறாப்’ என்ற பிரித்தானியப் பத்திரிகையில் தனக்கு வித்தியாசமானது. யாழ்ப்பாண மக்களைப் பற்றியோ அவர்களது உயிர்களைப் பற்றியோ கவலையில்லை. அது பற்றித் தான் சிந்திப்பதற்கில்லையென்று ஜே.ஆர். நேர்காணலொன்றில் கூறியதைத் தொடர்ந்து பாரதப் பிரமர் இந்திரா காந்தி சீர்கெட்டுவரும் ஈழத்து நிலைமைகளையிட்டு இந்தியாவின் கவலையினை வெளிப்படுத்தினார். அதனையும் ‘டெய்லி டெலிகிறாப்’ ஜூலைக் கலவரம் ஆரம்பமாவதற்குச் சில நாட்களின் முன்னர் வெளியிட்டிருந்தது. 

நாம் அகதிகளாக சரஸ்வதி முகாமில் இருந்த காலகட்டத்தில் இந்திரா காந்தி தனது வெளியுறவுத்துறை அமைச்சரான நரசிம்மராவை உடனடியாகவே இலங்கைக்கு அனுப்பினார். தமிழகம் முழுவதும் இலங்கைத் தமிழர்களுக்காதரவாக ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதப் போராட்டங்களும் நடைபெற்றன. சாஜகான் என்னுமொரு இஸ்லாமியத் தமிழரொருவர் தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காதரவாகத் தீக்குளித்தார். எம்.ஜி.ஆர் தலையிலான தமிழக அரசு தனது சிதம்பரம் கப்பலை அனுப்பி உதவியது. இக்கலவரத்தில் ஈழத்துக் சுற்றுலாப் பயணியாக வந்திருந்த தனபதி என்னுமொரு தமிழகத் தமிழரைக் கதிர்காமத்தில் சிங்கள சிகை அலங்கரிப்பாளரொருவர் கழுத்தை வெட்டிக் கொலை செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் அரசு ஜெயவர்த்தனே அரசிடம் நஷ்ட ஈடு கோரியது. 

சரஸ்வதி அகதி முகாம் வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களைப் பெற்றுக் கொண்டேன். ஆரம்பத்தில் சில நாட்கள் அகதிகள் அனைவரும் உண்பதற்கெதுவுமில்லாமல் பட்டினி கிடந்தார்கள். அந்தச் சமயத்தில் அருகிலிருந்த பம்பலபிட்டிக் கதிரேசன் ஆலயத்துக் குருக்கள் தன்னால் முடிந்த அளவுக்கு உணவு தயாரித்து வந்தவர்களுக்கு வழங்கினார். அதனைப் பெறுவதற்காகத் தள்ளாத வயதிலிருந்த தமிழ் மூதாட்டிகள் கூட சரஸ்வதி அகதி முகாமிலிருந்து மதிலேறிக் கதிரேசன் குருக்கள் வீட்டிற்குச் சென்றார்கள். ஏனையவர்கள் வளவிலிருந்த தென்னை போன்றவற்றிலிருந்து தேங்காய், இளநீர் ஆகிய கிடைத்தவற்றையெல்லாம் உண்டு வயிறாறினார்கள். 

நாங்கள் அகதி முகாமில் இருந்த சமயத்தில் ஜூலை 27இல் மீண்டும் வெலிக்கடைச் சிறையில் மேலும் பல தமிழக் கைதிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஏற்கனவே குட்டிமணி, தங்கத்துரையுட்படப் பலர் ஜூலை 25இல் வெலிக்கடைச் சிறையில் கொல்லப்பட்டிருந்தார்கள். 

கலவரம் சிறிது தணிந்திருந்த சமயம் நானும், நண்பனும் அகதி முகாமில் தங்கியிருப்பதை அறிந்த எம் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த சில சிங்கள நண்பர்கள் பார்ப்பதற்கு வந்திருந்தனர். அவர்ளை வாசலியேயே வைத்துச் சந்தித்தோம். நடைபெற்ற சம்பவங்களுக்காக வருத்தம் தெரிவித்தார்கள். தங்களுடன் வந்து தங்கியிருக்க விரும்பினால் வரலாமென அழைப்பும் விடுத்தார்கள். நாங்கள் அவர்களது வருகைக்கும், அழைப்புக்கும் நன்றி தெரிவித்தோம். முகாமில் இருப்பதே எங்களுக்கும் அவர்களுக்கும் நல்லதெனக் கூறினோம். நாம் அவர்களுடன் தங்கியிருந்தால் காடையர்களினால் அவர்களுக்கும் ஆபத்து வரலாமென்றும் கூறினோம். நாங்கள் அவ்விதம் அவர்களது அழைப்பினையேற்றுச் செல்லாதது நல்லதென்பதைப் பின்னர் உணர்ந்தோம். அடுத்தநாளே, வெள்ளிக்கிழமையென்று நினைக்கின்றேன். கொழும்பில் ‘கொட்டியா வந்திட்டுது’ என்ற வதந்தி பரவியது. ‘கொட்டியா’ என்பது புலிக்குரிய சிங்களச் சொல். நகரில் சிங்கள மக்கள அவ் வதந்தியால் அன்று தப்பியோடினார்கள். வெள்ளவத்தையிலோ தெகிவளையிலோர் வசித்த தமிழரொருவரின் அயலில் வசித்த சிங்களக் குடும்பமொன்று அவரது வீட்டிற்கு அடைக்கலம் தேடி ஓடி வந்த அதிசயமும் நடந்தது. முதலிரு நாட்களில் நடைபெற்ற கலவரத்தில் அவரை சிங்களக் காடையரிலிருந்து அந்தச் சிங்களக் குடும்பம் காப்பாற்றியிருந்தது. இந்த வதந்தியைத் தொடர்ந்து மீண்டும் கலவரம் பலமாக வெடித்தது. ரளவுக்குச் சீரடைந்து கொண்டிருந்த நிலைமை மீண்டும் ‘கொட்டியா’ வதந்தியால் சீர்கெட்டது. சீரடைந்திருந்த நிலைமையை நம்பி நண்பன் கிருலப்பனையிலிருந்த வீடொன்றிற்குக் குளிப்பதற்குச் சென்றிருந்தவன் தலை தப்பினால் புண்ணியமென்று குடல் தெறிக்க ஓடி வந்தான். வந்தவன் தான் தப்பி வந்த பாட்டையெல்லாம் கதைகதையாக விபரித்தான். ஏற்கனவே தப்பியிருந்த தமிழர்கள் பலர் சீரடைந்து கொண்டிருந்த நிலைமையினைச் சாக்காக வைத்து மீண்டும் தத்தமது இல்லங்களின் நிலையறிவதற்காகத் திரும்பியபோது மேற்படி வதந்தி ஏற்படுத்திய கலவரச் சூழலில் சிக்கி உயிரிழந்தார்கள். ‘கொட்டியா’ என்ற சொல் எவ்வளவு தூரத்திற்குச் சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியது என்பதையும் மேற்படிச் சம்பவம் எடுத்துக் காட்டியது. 

இது இன்னுமொரு உளவியல் உண்மையினையும் எடுத்துக் காட்டியது. இலங்கைத் தீவில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக இருந்தபோதும் அவர்களுக்கொரு சிறுபான்மை உணர்வு இருக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் அருகிலிருக்கும் நாலரைக் கோடித் தமிழகத் தமிழர்கள். எங்கே ஈழத்துத் தமிழர்கள் தமிழகத் தமிழர்களுடன் சேர்ந்து தங்களைச் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையாக்கி விடுவார்களோவென்றதொரு தேவையற்ற அச்ச உணர்வு. கடந்த காலத்து ஈழத்து வரலாறும், அடிக்கடி ஈழத்தின் மேலேற்பட்ட தமிழக மன்னர்களின் படையெடுப்புகளும் அவர்களது இந்த அச்சத்தினை அதிகரிக்க வைத்தன போலும். ‘புலி’ உருவம் அவர்களது உள்ளத்தில் அச்சத்தினை ஏற்படுத்துவதற்குக் காரணகர்த்தாக்கள் அன்றைய சோழர்கள். சோழர்களின் புலிக்கொடி ஒரு காலத்தில் ஈழம் முழுவதும் பறந்தது. முதலாம் இராஜஇராஜ சோழன் காலத்தில் இலங்கை சோழர்களிடம் சோழ மன்னனான எல்லாலனுக்குப் பின்னர் அடிமைப்பட்டது. அதன் பின் அவனது மைந்தன் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் ஒளிந்தோடிய சிங்கள மன்னன் மகிந்தனிடமிருந்து மணிமுடி கைப்பற்றப்பட்டு நாடு முற்றாக அடிமைப்படுத்தப் பட்டது. சோழர்கள் காலத்திலேற்பட்ட நிகழ்வுகளை மகாவம்சம் போன்ற சிங்கள நூல்கள் விபரிக்கும். தமிழ் மன்னர்களில் சோழர்கள் காலத்தில்தான் இலங்கை முழுவதும் முற்றாக, நூறாண்டுகளுக்கும் மேலாகத் தமிழர்கள் கைகளிலிருந்தது. சோழர்களின் இலங்கை மீதான ஆட்சிக் காலகட்டத்தைத்தான் பெளத்த மதமும், சிங்கள மொழியும் முற்றாக முடங்கிக் கிடந்ததொரு காலகட்டமாகச் சிங்களவர்கள் கருதுகின்றார்கள் போலும். சிறுவயதில் படுத்திருக்கும்போது சிறுவனான துட்டகைமுனு குடங்கிப் படுத்திருப்பானாம். அதற்கு அவன் கூறும் காரணம் வடக்கில் தமிழரசும், தெற்கில் கடலுமிருக்கையில் எவ்விதம் குடங்காமல் படுப்பது என்பானாம். அதனால்தான் சோழ மன்னனான எல்லாளனை அவன் வெற்றி கொண்ட வரலாறு மிகப்பெரிய சிங்கள வெற்றியாகக் கருதப்படுகிறது. அதனால்தான் போலும் புலிக்கொடியுடன் கூடிய சோழர்களைக் கண்டு அஞ்சிய, வெறுத்த சிங்களவர்கள் மீன் கொடியுடன் கூடிய பாண்டியர்களைக் கண்டு அஞ்சவில்லை போலும். உண்மையில் பாண்டிய மன்னர்கள் சிலர் ஈழத்தின்மேல் படையெடுத்திருந்தபோதிலும் கூட அவர்களுடன் நட்பு பாராட்டுவதற்கும், அவர்களிடத்தில் பெண்ணெடுப்பதற்கும் சிங்களவர்கள் மத்தியில் எதிர்ப்போ அச்சமோ ஏற்பட்டதில்லை. இன்றைய நிலையில் இவையெல்லாம் தேவையற்ற அச்சங்கள். இவ்வகையான அச்சங்கள் சுவாலை விட்டு எரிவதற்கு அடிப்படைக் காரணிகள் சமூக, அரசியல், பொருளாதாரக் காரணங்களே. ஆயினும் சாதாரண மக்கள் இதனைப் புரிந்து கொள்வதில்லை. மக்களின் உணர்வுகளை வைத்துப் பிழைப்பினை நடாத்தும் அரசியல்வாதிகள் மட்டும் நன்கு புரிந்து கொண்டு, அவ்வுணர்வுகளை ஊதிப் பூதாகாரப்படுத்தி, அதிலவர்கள் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவற்றால் தூண்டப்படுவதும், பாதிக்கப்படுவதும் சாதாரண மக்களே. இந்த அழகான தீவில் மீண்டும் அமைதியெப்போது வரும்? மக்கள் ஒருவருக்கொருவர் மீண்டும், சகஜமாக, அன்பாகப் பழகும் நாளென்று வரும்? சேர்ந்தோ, பிரிந்தோ ஒருவருக்கொருவர் நட்புடன், சகல உரிமைகளுடனும், ஒற்றுமையுடனும் வாழுமொரு சூழல் மீண்டுமெப்போது வரும்? வருமா? 

“என்ன கொட்டக் கொட்ட முழித்திருக்கிறாய்? நித்திரை வரவில்லையா?” அருகிலிருந்த இருதட்டுப் படுக்கையின் மேற்தட்டில் படுத்திருந்த நண்பன் அருள்ராசாதான் இவ்விதம் கேட்டவன். 

“இன்று விடிய வெளியிலைப் போக இருக்கிறமல்லவா? அதுதான் மனசு கிடந்து அலைபாயிது போலை. இரவு முழுக்க நித்திரையே ஒழுங்காக வரவேயில்லை. நீ குடுத்து வைத்தவன். உன்னாலையெப்படி நித்திரை கொள்ள முடிந்தது.?’ 

“உனக்கு யாரைவாது சந்திக்க வேண்டிய தேவையிருக்கா?”

“நேற்றே இது பற்றிக் கதைத்திருக்கிறம். முதலிலை அந்த இந்திய வீட்டு அறையெப்படியென்று போய்ப் பார்ப்பம். பிடிச்சிருந்தால் அங்கேயே இருந்து கொண்டு ஒரு வேலையொன்று தேடுவம். அதுதான் முதல் வேலை. அதுக்குப் பிறகுதான் மற்றதெல்லாம்? 

“அது சரி. எங்களுக்கோ வேலை செய்வதற்குரிய சட்டரீதியான ஆவணங்கள் ஒன்றுமில்லை. முதலிலை வெளியிலை போனதும். சமூகக் காப்புறுதி நம்பர்’ எடுக்க முடியுமாவென்று பார்க்க வேண்டும். அதிருந்தால்தான் வேலை பார்க்கலாம். இல்லாவிட்டால் நல்ல வேலையெதுவும் எடுக்க முடியாது. உணவகங்களில் கள்ளமாக வேலை செய்ய வேண்டியதுதான். எனக்கென்றால் எந்த வேலையும் சமாளிக்கலாம். உன்னாலை முடியுமாவென்றுதான் யோசிக்கிறன்.”

“என்ன பகிடியா விடுறாய். எந்த வேலையென்றாலும் என்னாலை செய்ய முடியும். இதுக்கெல்லாம் வெட்கம் பார்க்கிற ஆளில்லை நான். செய்யும் தொழிலே தெய்வம். இதுதான் அடியேனின்ற தாரக மந்திரம்.  இவ்விதமாக நண்பர்களிருவரும் பல்வேறு விடயங்களைக் குறிப்பாக வெளியில் சென்றதும், புதிய சூழலை எவ்விதம் வெற்றிகரமாக எதிர்கொள்வது, இருப்பினை எவ்விதம் உறுதியாகத் தப்ப வைத்துக் கொள்வது, வாழ்வின் எதிர்காலத் திட்டங்களை எவ்விதம் வெற்றிகரமாகச் செயற்படுத்துவது?, அவ்வப்போது சோர்ந்து, தளர்ந்து போய் விடும் மனதினையெவ்விதம் மீண்டும் மீண்டும் துள்ளியெழ வைப்பது… இவ்விதம் பல்வேறு விடயங்களை நண்பர்களிருவரும் பரிமாறி, ஆராய்ந்து கொண்டிருந்த வேளையில் நகரத்துப் பொழுதும் தனக்கேயுரிய ஆரவாரங்களுடன் விடிந்தது. ஊரிலென்றால் இந்நேரம் சேவல்களின் சங்கீதக் கச்சேரியால் ஊரே கலங்கி விட்டிருக்கும். புள்ளினத்தின் காலைப் பண்ணிசையில் நெஞ்சமெல்லாம் களி பொங்கி வழிந்திருக்கும். இருந்தாலும் விடிவு எப்பொழுதுமே மகிழ்ச்சியினைத் தந்து விடுவதாகத்தானிருந்து விடுகிறது. 

6 – மழையில் மயங்கும் மனது

அன்று காலை தடுப்பு முகாம் வாசிகள் தமது காலை உணவை முடிக்கும் வேளையில் வானமிருண்டு சிறிது நேரத்திலேயே மழை பொழிய ஆரம்பித்து விட்டது. காலை பத்து மணிக்கெல்லாம் குடிவரவு அதிகாரிகள் உரிய பத்திரங்களுடன் வந்து அவற்றை நிரப்பியதும் இளங்கோவையும், அருள்ராசாவையும் வெளியில் செல்ல அனுமதித்து விட்டார்கள். தடுப்பு முகாமிலிருந்த அனைவருடனும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு வெளியில் வந்த போது ஏனோ அவர்களிருவரினதும் நெஞ்சங்களும் கனத்துக் கிடந்தன. தடுப்பு முகாமினுள் தொடர்ந்தும் கனவுகளுடனும், கற்பனைகளுடனும், சலிப்புடனும், இயலாமையுடனும் வாழப்போகும் அவர்களை நினைக்கையில் ஒருவித சோகம் கவிந்தது. அவர்களும் வெளியில் சென்றதும் தங்களை மறந்து விடாமல் அடிக்கடி வந்து பார்த்துச் செல்லுமாறு வேண்டிக் கொண்டார்கள். அதற்கு இவர்கள் கட்டாயம் வந்து பார்ப்பதாகவும், அவர்களுக்குத் தேவையானவற்றை அவ்வபோது அறியத் தந்தால் வாங்கிக் கொண்டு வந்து தருவதாகவும், வெளியில் அவர்களுக்கு ஆக வேண்டியவற்றை தம்மால் முடிந்த அளவுக்குச் செய்து தருவதாகவும் கூறி ஆறுதலளித்தார்கள். இவ்விதமாக அவர்களிருவரும் வெளியில் வந்தபோது சரியாக மணி பன்னிரண்டு. கைகளில் குடிவரவு அதிகாரிகள் தந்த பிணையில் அவர்களை விடுவிக்கும் அறிவிப்புடன் கூடிய பத்திரங்கள் மட்டுமே அவர்களது சட்டரீதியான அறிமுக ஆவணங்களாகவிருந்தன. அத்துடன் தடுப்பு முகாமில் அனுமதிக்கும்போது சிறை அதிகாரிகளிடம் கொடுத்து வைத்திருந்த இருநூறு டாலர்களுமிருந்தன. இவற்றுடன் புதிய மண்ணில், புதிய சுழலைத் துணிவுடனும், நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் எதிர்த்து நின்று எதிர்நீச்சலிடுவதற்குரிய மனப்பக்குவமும் நிறையவேயிருந்தன. பொழிந்து கொண்டிருந்த வானம் நிற்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. ஊரில் மழைக்காலங்களில் இலைகள் கூம்பிக் கிடக்கும் உயர்ந்த தென்னைகளாக இங்கு பார்க்குந் திசையெல்லாம் உயர்ந்து கிடந்தன காங்ரீட் விருட்சங்கள்.. மழைகளில் நனைந்தபடி அமைதியாகச் சென்றுகொண்டிருந்தனர் நகரத்துவாசிகள். நூற்றுக் கணக்கில் நகரத்து நதிகளாக விரைந்து கொண்டிருந்தன வாகன அணிகள். அவ்வப்போது ஒருசில நகரத்துப் புறாக்கள் தமது மழைநீரில் நனைந்து கூம்பி கிடந்த சிறகுகளை அடிக்கடி சிலிர்த்து விட்டுத் தமது உணவு வேட்டையினைச் சோடிகளாகத் தொடர்ந்து கொண்டிருந்தன. ‘புதிய வானம்! புதிய பூமி’! எங்கும் பொழிந்து கொண்டிருக்கும் மழை! அதுவரை நான்கு சுவர்களுக்குள் வளைய வந்துவிட்டுப் பரந்த உலகினுள் சுதந்திரக் காற்றினைத் தரிசித்தபடி அடியெடுத்து வைத்தபொழுது மனதுக்கு மகிழ்ச்சியாகவிருந்தது. 

‘லாங் ஐலண்ட்’இல் வசிக்கும் அந்த இந்தியத் தம்பதிகளைத் தொலைபேசியில் அழைத்து தங்களது வருகையினை உறுதி செய்து விட்டு நண்பர்களிருவரும் தமது பயணத்தைத் தொடர்ந்தனர். பாதாள ரயில் நிலையத்தை அடைவதற்கு முன்னர் அருகிலிருந்த உணவகமொன்று சென்று தேநீரோ காப்பியோ அருந்தினால் நல்லது போல் படவே நுழைந்து கொண்டனர். சிறியதொரு உணவகம். கூட்டமில்லை. ஒரு சிலரே மழைக்கு ஒதுங்கியிருந்தனர் போல் பட்டது. வீதியை அண்மித்திருந்த யன்னலோரம் அமர்ந்து தேநீர் அருந்தியபடி வீதியில் விரைந்து கொண்டிருந்த மானுடர்கள் மேல் தம் கவனத்தைத் திருப்பினர். எத்தனை விதமான நிறங்களில் மனிதர்கள்! பெரும்பாலும் வந்தேறு குடிகள். எதற்காக இந்த விரைவு! எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, இங்கு வந்து எதற்காக இவ்விதம் ஆலாய்ப் பறக்கின்றார்கள்? 

இளங்கோவின் சிந்தையில் தடுப்பு முகாம் வாசிகள் பற்றிய சிந்தனைகள் மெல்லப் படர்ந்தன. இதற்காகத் தானே அங்கே, அந்தச் சுவர்களுக்குள் அவர்கள் கனவுகளுடன் காத்துக் கிடக்கின்றார்கள். ஊரிழந்து, உற்றார் உறவிழந்து, மண்ணிழந்து, நாடு தாண்டி, கடல் தாண்டி வந்து இவ்விதம் அகப்பட்டு அந்தச் சுவர்களுக்குள் வளைய வரவேண்டுமென்று அவர்களுக்குக் காலமிருக்கிறது. 

மழை இன்னும் விட்டபாடில்லை. பொழிந்து தள்ளிக் கொண்டிருந்தது. உணவகத்தின் யன்னற் கண்ணாடியினூடு பார்க்கையில் ஊமைப் படமொன்றாக நகரத்துப் புறக்காட்சி விரிந்து கிடந்தது. மழை பொழிவதும், மனிதர்கள் நனைந்தபடியதில் விரைவதும், பின்னணியில் விரிந்து கிடந்த நகரத்துக் கட்டட வனப் பரப்பும்.. எல்லாமே ஒருவித அமைதியில் விரைந்து கொண்டிருக்கும் சலனப் படக்காட்சியாக காலநதியில் மிதந்தோடிக் கொண்டிருந்தன. சாலையோரம் இரு ஆபிரிக்க இளைஞர்கள் மழைக்குள் விரையும் மனிதர்களுக்குக் குடைகளை விற்றுக் கொண்டிருந்தார்கள். மீண்டும் அவனது கவனம் மழைக்காட்சியில் படிந்தது. மழைக்காலமும், காட்சியும் அவனுக்குப் பிடித்தமான இயற்கை நிகழ்வுகள். அவனது பால்ய காலத்தில் வன்னி மண்ணில், வவுனியாவில், கழிந்த அவனது காலத்தில் ஆரம்பமான அந்த இரசிப்பு அவனது வாழ்வு முழுவதும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அப்பொழுது வன்னியினொரு பகுதியான வவுனியாவின் பெரும்பகுதி விருட்சங்களால் நிறைந்திருந்தது. கருங்காலி,முதிரை, பாலை, வீரை. தேக்கு எனப் பல்வேறு விருட்சங்கள். மூலைக்கு மூலை குளங்களும், ஆங்காங்கே வயல்களும் நிறைந்து இயற்கையின் தாலாட்டில் தூங்கிக் கிடந்த அம்மண்ணின் வனப்பே வனப்பு. அத்தகைய மண்ணில் குருவிகளுக்கும், பல்வேறு காட்டு உயிரினங்களுக்குமா பஞ்சம்? பாம்புகளின் வகைகளை எண்ண முடியா? கண்ணாடி விரியன் வெங்கணாந்தி,மலைப்பாம்பு தொடக்கம், நல்லப்பாம்பு வரையில் பல்வேறு அளவில் அரவங்கள் அக்கானகங்களில் வலம் வந்தன. மர அணில்கள் கொப்புகளில் ஒளிந்து திரிந்தன. செங்குரங்குகள் தொடக்கம் கரு மூஞ்சிக் குரங்குகளென அவ்வனங்களில் வானரங்கள் ஆட்சி செய்தன. பச்சைக் கிளிகள், கொண்டை விரிச்சான் குருவிகள், மாம்பழத்திகள், குக்குறுபான்கள், அடைக்கலான் குருவிகள், தேன் சிட்டுகள், காட்டுப் புறாக்கள், நீர்க்காகங்கள், ஆலாக்கள், ஆட்காட்டிகள், ஊர் உலாத்திகள், மைனாக்கள், காடைகள், கௌதாரிகள், ஆந்தைகள், நத்தைகள், காட்டுக் கோழிகள், தோகை விரித்தாடும் மயில்கள்.. நூற்றுக் கணக்கில் புள்ளினங்கள் நிறைந்திருந்தன. இரவென்றால் வன்னி மண்ணின் அழகே தனிதான். நட்சத்திரப் படுவதாக விரிந்து கிடக்கும் இரவு வானும், ஆங்காங்கே படர்திருக்கும் கானகங்களும், அவற்றில் ஓங்கி ஒன்றுபட்டு நிற்கும் விருட்சங்களும், படையெடுக்கும் மின்மினிப் பூச்சிகளும் நெஞ்சினைக் கொள்ளை கொள்ளுவன. மழைக்காலமென்றாலே வன்னி மண்ணின் அழகே தனிதான். பூரித்துக் கிடப்பாள் நிலமடந்தை. இலைகள் தாங்கி அவ்வப்போது சொட்டும் மழைத்துளிகளின் எழிலில் நெஞ்சிழகும். குளங்கள் பொங்கிக் கரைமீறிப் பாயுமொலி காற்றில் வந்து பரவுகையில் உள்ளத்தே களி பெருகும். குளங்கள் முட்டி வழிகையில் ஆங்காங்கே கட்டப்பட்டிருக்கும் சிறிய மதகுகளைத் திறந்து விடுவார்கள். அச்சமயங்களில் மதகுகளின் மேலாக வழியும் நீரினூடு விரையும் விரால்களைப் பிடிப்பதற்காக மனிதர்களுடன், வெங்கணாந்திப் பாம்புகளும் இரவிரவாகக் காத்துக் கிடக்கும் வன்னி மண்ணின் மாண்பே மாண்பு. முல்லையும் மருதமும் பின்னிப் பிணைந்து கிடந்த வன்னி மண்ணின் மழையழகு ஒருவிதமென்றால், நெய்தலும், மருதமும் பின்னிக் கலந்திருந்த யாழ் மண்ணின் கரையோரக் கிராமங்களின் மழையழகு இன்னுமொரு விதம். ‘சட்டசடவென்று’ ஓட்டுக் கூரைகள் தடதடக்க இடியும், மின்னலுமாய்ப் பெய்யும் பேய் மழையினை, இரவுகளின் தனிமைகளில் படுத்திருந்தபடி, வயற்புறத் தவளைகளின் ஆலாபனையினைச் செவிமடுத்தபடி, பாரதியின் மழைக்கவிதையினைப் படித்தபடியிருப்பதிலுமொரு சுகமிருக்கத்தான் செய்கிறது. 

திக்குக ளெட்டுஞ் சிதறி தக்கத் 
தீம்கரிட தீம்கரிட தீம்கரிட தீம்கரிட
பக்க மலைக ளுடைந்து வெள்ளம் 
பாயுது பாயுது பாயுது தாம்தரிகிட 
தக்கத் ததிங்கிட தித்தோம் அண்டம் 
சாயுது சாயுது சாயுது பேய்கொண்டு 
தக்கை யடிக்குது காற்று தக்கத் 
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட.. 
வெட்டியடிக்குது மின்னல் கடல் 
வீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது: 
கொட்டி யிடிக்குது மேகம்; கூ 
கூவென்று விண்ணைக் குடையுது காற்று; 
சட்டச்சட சட்டச்சட டட்டா என்று 
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்; 
எட்டுத் திசையு மிடிய மழை 
எங்ங னம்வந்தத டா. தம்பி வீரா! 
அண்டங் குலுங்குது. தம்பி! தலை 
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல் 
மிண்டிக் குதித்திடு கின்றான்; திசை 
வெற்புக் குதிக்குது; வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடுகின்றார்; என்ன 
தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்!
கண்டோம்! கண்டோம்! கண்டோம்! இந்தக் 
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!
 

சொற்களுக்குள்ள வலிமையினை, சிறப்பினைப் பாரதியின் கவிதைகளில் காணலாம். ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்றதும் நம்பிக்கையும், உற்சாகமும் கொப்பளிக்கத் துடித்தெழுந்து விடும் மனது திக்குகளெட்டுஞ் சிதறி, பக்க மலைகளுடைத்து, வெட்டியடிக்கும் மின்னலுடன், கொட்டியிடிக்கும் மேகத்துடன், கூவிட்டு விண்ணைக் குடையும் காற்றுடன் பாயும் மழையில் மூழ்கி விடுகிறது. மழைக்காட்சியினை மிகவும் அற்புதமாக வரித்துவிடுமொரு இன்னுமொரு கவிதை ஈழத்துக் கவிஞன் கவீந்திரனின் (அ.ந.கந்தசாமி) கவிதை. பாரதியின் கவிதை மழைக்காட்சியினைத் தத்ரூபமாக விளக்கி நின்றால் கவீந்திரனின் ‘சிந்தனையும், மின்னொளியுமோ அக்காட்சியினூடு இருப்பிற்கோர் அர்த்தத்தையும் விளக்கி நிற்கும்.

‘சாளரத்தின் ஊடாகப் பார்த்திருந்தேன் சகமெல்லாம்
ஆழ உறங்கியது அர்த்த ராத்திரி வேளையிலே,
வானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க,
மோனத்தை வெட்டி யிடியொன்று மோதியதே!
‘சட்’ டென்று வானம் பொத்ததுபோல் பெருமாரி
கொட்டத்தொடங்கியது. ‘ஹேர்’ ரென்ற இரைச்சலுடன்
ஊளையிடு நரியைப் போல் பெருங்காற்றும் உதறியது.
ஆளை விழுத்திவிடும் அத்தகைய பேய்க்காற்று
சூறா வளியிதுவா உலகினையே மாய்க்க வந்த
ஆறாத பெருஊழிக் காலத்தின் காற்றிதுவா?
சாளரத்துக் கதவிரண்டும் துடிதுடித்து மோதியது.
ஆழிப்பெரும் புயல்போல் அல்லோலம் அவ்வேளை 
உலகம் சீரழிவிற்ற(து); அப்போ வானத்தில்
மாயும் உலகினுக்கு ஒளிவிளக்கந் தாங்கிவந்த
காயும் மின்னலொன்று கணநேரம் தோற்றியதே.
கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
ஊன்றியெழுந்தன இவ்வொளிமின்னல் செயல் என்னே?
வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?
ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய
மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற 
சேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும் 
சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில் 
தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன் 
ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.
இந்த வாறாகச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன். 
புந்தி நடுங்கப் புரண்டதோர் பேரிடி நான் 
இந்த உலகினிற்கு வந்தடைந்தேன்; என்னுடைய 
சிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ?

 
ஊரெல்லாம் உறங்கும் அர்த்த ராத்திரியில் பொத்துக் கொண்டு பெய்யும் மாரி வானம்! ஊளையிடும் நரியாகப் பெருங்காற்று! பேய்க்காற்று! கொட்டுமிடித்தாள இசையில் வான் வனிதையென மின்னல்! அவளின் கணநேரத்து நடனம் கவிஞனிடமோ சிந்தனைப் பொறியினைத் தட்டியெழுப்பி விடுகிறது. மண்ணின் மக்களுக்கு அம் மின்னல் ஒரு சேதி சொல்வாள். அதுவென்ன? அவளின் வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ? வாழுமச்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதந்து சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு ஓடி மறைகிறாள் அவ்வான் வனிதை. வாழும் சிறு கணத்தில் தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்துவிட்டு ஆவிபிரிந்து விடும் அவளின் இருப்பில்தான் எத்துணை சிறப்பு! மழையை எத்தனை முறை இரசித்தாலும் அவனுக்கு அலுப்பதில்லை. அத்தகைய சமயங்களிலெல்லாம் அவனது சிந்தையில் மேற்படி கவிதைகள் வந்து நர்த்தனமாடுகின்றன. மழையினை இரசித்தலுக்கு அவையும் கூட நின்று துணை புரிகின்றன. மழைக்காட்சியும், அதன் விளைவாகப் படம் விரித்த பால்யகாலத்து நினைவுகளும், பிடித்த கவிகள், கவிதைகளும் ஓரளவுக்குச் சோர்ந்திருந்த மனதுக்கு மீண்டும் உற்சாகத்தினைத் தந்தன. ஒரு கண வாழ்விலும் ஒளி தருமொரு மின்னல்! மின்னலாயிருப்போம், எதிர்ப்படும் இன்னலெலாந் தகர்த்தெறிவோமென்று மனது குதியாட்டம் போடுகிறது. 

– தொடரும்…

– குடிவரவாளன் (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 2015, ஓவிய பதிப்பகம், பட்லகுண்டு, தமிழ்நாடு.

(நவரத்தினம் கிரிதரன், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்)  ஒரு குறிப்பிடத்தக்க கனேடிய. ஈழத்து எழுத்தாளர். இவர் பல சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள். ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை ஆக்கியுள்ளார். பதிவுகள் இணைய இதழின் ஆசிரியரும் ஆவார். வ.ந.கிரிதரன் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாக கொண்டவர். இவரின் தந்தை பெயர் நவரத்தினம். இளமையில் வவுனியாவில் வாழ்ந்த இவர். வன்னி மண்ணின் பற்று காரணமாக வ என்று தன் பெயருக்கு முன் சேர்த்து கொண்டார். ஆரம்ப கல்வியை வவுனியா மகாவித்தியாலத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *