கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 5, 2023
பார்வையிட்டோர்: 2,077 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதைமூலம்: ஸெல்மா லேகர்லாப், ஸ்வீடன்

மலைப் பாதை வழியாக ஒரு கிழவி நடந்து கொண்டி ருந்தாள். மெலிந்து குறுகியவள்தான், எனினும் முகத்தின் வண்ணம் வாடவில்லை, சதைக் கோளங்கள் மரத்துத் தொய்ந்து திரித் திரியாகத் தொங்கவில்லை. அவளுடைய நடையிலும் கிழடு தட்டவில்லை. நீண்ட சட்டையும் லேஸ் வைத்துத் தைத்த குல்லாயும் போட்டுக் கொண்டிருந்தாள். கையில் ஜெப புஸ்தகமிருந்தது. கழுத்துத் துணி யில் லவண்டர் பூக்கொத்து ஒன்றைச் சொறுகி இருந்தாள்.

மலைச்சரிவிலே மரங்கள் வளரக்கூடிய வளத்தைக் குளிரினால் இழந்துவிட்ட பிராந்தியத்திலே அவள் ஒரு குடிசையில் வசித்து வந்தாள். விசாலமான பனிக்கட்டி ஆறு ஓரத்தில் அந்தக் குடிசை இருந்தது. மலையுச்சிக்கு மூடியிட்ட பனிக்கட்டிகள் திரண்டு இந்த ஆற்றுக்கு ஜீவ னைத் தந்து பள்ளத்தாக்குவரை உந்தித் தள்ளி ஓட்டியது. அங்கே அந்தக் கிழவி தன்னந் தனியாய் வசித்து வந்தாள். அவளது உற்றார் உறவினர் யாவருமே செத்து மடிந்துவிட்டார்கள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. கர்த்தருடைய ஓய்வு நாள். அவள் சர்ச்சுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தாள். புனிதயாத்திரையால், அவளது மனம் ஏனோ மகிழ்ச்சியால் தழைக்காமல் சோர்வால் தள்ளாடியது, உபதேசியார் சாவைப்பற்றியும் செத்து மடிந்த பாவிகளின் ஆத்மாக்களைப் பற்றியும் அன்று செய்த உபதேசம் அவள் மனத்தில் வெகுவாய்ப் பதிந்திருந்தது. தான் இப்போது வசிக்கும் குடிசைக்கும் மேலே மலையுச்சியிலே பாவிகளின் ஆத்மாக்கள் கணக்கிலடங்காமல் திசைகெட்டுத் தடுமாறித் திரிகின்றன என்று சிறு பிள்ளைப் பிராயத்தில் யாரிடமோ கேட்டிருந்தது அவளுக்கு ஞாபகத்துக்கு வந்தது. பனிப்பாறைகள் மீது உலாவித் திரியும் இந்தக் களைப்பறியாச் சாயைகளை ஊசிக் குளிர்காற்று விரட்டி விரட்டி வேட்டையாடுகிறது என்று கதை கதை யாகக் கேட்டதெல்லாம் நினைவுக்கு வந்தது. மலைப்பயம், மகா பயப்பிராந்தி அவளைப்பற்றிக்கொண்டது. அவளது குடிசை பயங்கரத்தைத் தரும் எட்டாத்தொலைவில், உச் சாணிச் சரிவில் இருப்பதாக அவளுக்குப்பட்டது. அந்த மலையுச்சியில் திரியும் மாயாவிச் சமுதாயம் கீழே இறங்கி விட்டாலோ. என்ன நினைப்பு. தன்னந்தனியாக அந்தக் குடிசையில் அவள் வசிக்கிறாள். தனிமைப்பாடு என்ற அந்த நினைப்பு எப்பொழுதுமே அவள் மனதைத் தின்று கொண்டிருந்தது. சோகப்படுதாவைப் போட்டு மூடியது. அதை நினைக்க அக்னேட்டாவுக்கு மனம் இன்னும் கொஞ் சம் சோகத்தில் அழுந்தியது. மனிதப் பூண்டற்ற இடத்தில் அவ்வளவு தொலைவில் வசிப்பதென்றால் கஷ்டந்தான்.

அவள் தனக்குள்ளாகவே பேசிக் கொள்ள ஆரம்பித்தாள். அந்தமலைத் தனிமையிலே இருந்திருந்து அவளுக்கு அந்தப் பழக்கம் வந்து விட்டது. ‘அடியே நீ அங்கே அந்தக் குடிசையிலே உட்கார்ந்து நூற்றுத் தள்ளுகிறாய். பட்டினி கிடந்து மடியாமலிருக்க ஓயாமல் ஒழியாமல் நூற்று நூற்றுச்சாகிறாய். நீ உசிரோடே இருப்பதால் யாருக்குச் சந்தோஷம்? எண்டியாராவது இருக்காளா? உன்னுடையவர்கள் யாராவது உசிரோடே இருந்தால் ஒருவேளை அப் படி இருக்கலாம். இன்னும் கொஞ்சம் தள்ளி ஊருக்குப் பக்கத்திலே நீ குடியிருந்தா யாருக்காவது உபயோகமா இருக்காதா? நாயும் பூனையும்கூட உன்னுடன் வளரவொட்டா மல் உன் வறுமை தடுக்கிறது வாஸ்தவந்தான். இருந்தாலும் அகதி என்று வருகிறவன் முடக்க இராத்திரி உன்னால் இடம் கொடுக்க முடியுமே. வழியைவிட்டு அவ் வளவு தள்ளி இருப்பார்களா ? ‘அம்மா நாக்கு வாளுது’ என்று வருகிற நாடோடிக்கு ஒரு சிரங்கைத் தண்ணீராவது கொடுக்கலாமே. அப்படி இருந்தாலும் நாலு பேருக்கு உபகாரமாப் பொழுதைக் கழிப்பதாக நீ திருப்திப்படலாமே.’

அவள் பெருமூச்சு விட்டாள். நூற்பதற்குச் சணல் நார்கொடுக்கும் குடியானப்பெண்கள்கூடத்தான் செத்துப் போனதாகக் கேள்விப்பட்டால் ஒரு பொட்டுக் கண்ணீர் விடுவார்கள் என்று நினைத்தாள். மனதிலே குறை வைக் காமே கடவுளுக்குப் பொதுவா உழைக்க அவள் முயன்ற தில் சந்தேகமில்லை. அவளைவிடத் தொறனயா வேலையைச் செய்யக் கோடான கோடி இருக்கவும் கூடும்.

சர்ச்சில் இத்தனை வருஷங்களாக அந்த மூலையில் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்துப் பார்த்துக் கண் பூத்துப்போன உபதேசியாருக்கு அவள் அங்கே உட்கார்ந்திருக்கிறாளா இல்லையா என்பதில் அக்கரை கூட இருக்காது என்று அவள் மனதில் ஒரு நினைப்புத் தோன்ற அவளுக்கு அழுகை வந்தது.

‘நான் செத்து மடிந்தவள்தான். நான் இருந்தால் என்ன? செத்தால் என்ன? அதில் யாருக்கு அக்கரை? குளிரும் துன்பமும் என்னைப் பனிக்கட்டியோடு பனிக்கட்டியாக உறைய வைத்து விட்டது. நானில்லாவிட்டாலும் என் நெஞ்சுஅப்படிப் போச்சு. என்னைத் தேடுகிறவர்கள் என்று யாராவது ஒருத்தர் இருந்தால், நான் உபகாரமாக இருக்கக்கூடிய ஒருவரை நீ எனக்குக் காண்பித்துக் கொடுத்தால் நான் இப்படியே உடம்பைக் கீழே போட்டு விட்டுச் செத்துப் போவேன்’ என்று வானத்தை நோக்கி விரலை ஆட்டி ‘பத்திரம் காட்டினாள்’.

அந்தச் சமயத்தில் நெட்ட நெட்டென்று வளர்ந்து முகத்தில் சந்தோஷக்களை அற்ற ஞானம் ததும்பும் முக தேஜஸ் கொண்ட சாமியார் அந்த வழியாக அவளை நோக்கி வந்தார். அவள் மனம் சங்கடப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டு கொண்டு போகும் திசையை விட்டுத் திரும்பி அவளுடன் நடக்கலானார். தான் உபகாரமாக இருக்கக்கூடிய ஒருவரைக் கடவுள் தன்னிடம் அனுப்பா விட்டால், பனிப்பாறையில் சஞ்சரித்துத் திரியும் அந்த சஞ்சல ஜீவன்கள் போல ஆகிவிடப் போவதாக அவள் கூறினாள்.

‘கடவுளால் அப்படிச் செய்ய முடியுமே’ என்றார் சாமியார்.

‘இந்த உசரத்தில் கடவுளுக்குச் சக்தி கிடையாது என்பது உங்களுக்குத் தெரியவில்லையா’ என்றாள அக்னேட்டா. ‘இங்கே குளிரைத் தவிர, தனிமையைத் தவிர வேறு ஒன்றுமில்லே’ என்றாள்.

இவர்கள் மலைச்சரிவில் நெடிய தூரம் உயர ஏறிச் சென்றார்கள். பாசியும் ஊசிக் கதிர்போன்று இலைவிடும் குத்துச் செடிகளும் இருந்த பாதை வழியாக நடந்தார்கள். ஒருபுறம் பாறைச்சரிவு, பனிப்பாறையின் அடியிலே காணப்பட்ட குடிசையைக் கண்டார் சாமியார்.

‘ஓகோ! அங்கேயா நீ குடியிருக்கிறாய்? அங்கே நீ தனியாக இல்லியோ, போதுமான ஆட் கூட்டம் இருக்குமே.. அங்கே பாரு.’

இப்படிச் சொல்லிக் கொண்டே சாமியார் விரல்களை வளையம் போல் சுருள வளைத்துக் கொண்டு அதனூடே அவள் பார்ப்பதற்கு இசைவாக இடது கண் அருகில் காட்டினார். அக்னேட்டா பயந்து போய்க் கண்களை மூடிக் கொண்டாள். அங்கே எதுவாவது பார்க்கக் கூடியது இருந்தாலும் எனக்குப் பார்க்கப் பிரியமில்லை. இங்கே இருந்து தொலையறதே போதும் என்றாள்.

‘சரி போய் விட்டு வா. இன்னொரு தடவை பார்க்கலாம்னா முடியாது’ என்றார் சாமியார்.

வார்த்தை, ஆசையைத் தட்டித் தூண்ட, வட்ட வளையத்தின் ஊடே பனி மூடிய மலையைப் பார்த்தாள். முதலில் ஒன்றும் தெரியவில்லை, அதிகமாக ஒன்றும் தெரியவில்லை. பிறகு கொஞ்சங்கொஞ்சமாக வெள்ளையாக ஏதோ பனிக்கட்டி மேலே நடமாடுவது மாதிரி தெரிந்தது:

முதலில் பஞ்சு என்று அவள் நினைத்தாள். லேசாநீல ஓட்டத்துடன் கூடிய சாயைகள் எல்லாம் பாவியான ஆத் மாக்கள். கோடானு கோடி.

குறிக்கிக்கிடந்த கிழ அக்னேட்டா காற்றடிபட்ட இலை போலவெடவெடவென்று நடுங்கினாள். குழந்தைப் பிராயத் தில் அவள் கேட்டிருந்ததெல்லாம் அங்கே தெரிந்தது. செத்து மடிந்தவர்கள், துர்மரணப் பட்டவர்கள், அங்கே, நித்தியமான குளிரிலே சொல்ல வொண்ணாத உளைச்சல் களை அனுபவித்துக் கொண்டு திரிந்தார்கள். மீண்டும் பார்த்தாள். அந்தக்கூட்டத்தில் ஏறக்குறைய எல்லோரும் ஏதோ நீண்டு வெளுத்த ஒன்றைப் போர்த்தியிருந்தனர். ஆனால் தலைக்கும் காலுக்கும் மட்டிலும் ஒன்றுமில்லை. அங்கே கணக்கிலடங்காதோர் சஞ்சரித்துத் திரிந்தார்கள். அவள் பார்க்கப் பார்க்க மேலும் மேலும் கூட்டம் ஓய் வில்லாமல் வந்து கொண்டே இருந்தது. சிலர் நிமிர்ந்து நடைபோட்டுத் தலைவணங்காமல் நடந்தார்கள். மற்றவர் கள் நடந்து செல்லுவதே குதித்துக் குதித்துப் போவது போல இருந்தது. அவர்கள் ஒவ்வொருத்தர் காலும் பனிக்கட்டி குத்தி இரத்தப்பிரவாகம் வழிந்தபடி இருந்தது.

கொஞ்சம் சூடு ஏறாதா என்று உடம்போடு உடம்பு ஒட்டி நெருங்க அவர்களில் பலர் முயன்றனர். ஆனால் சாவின் விரைத்துப் போன குளிர்ச்சிதான் அவர் களுடைய உடலை விட்டுப் படர்ந்தது. அதனால் அவர்கள் நெருங்கவும் பயந்து விலகிச் சென்றார்கள். மலை உச்சியிலே விளைந்த குளிர்ச்சி அவர்கள் உடலிலிருந்து பிறந்தது, அவர்கள் தான் பனிக்கட்டியை உருக விடாதபடி செய் கிறார்கள். மூடு பனிக்கு இவ்வளவு ஊசிக் குளிர்ச்சி கொடுத்தார்கள் என்று நினைக்கும் படியாயிருந்தது.

சிலர் நடமாடாமல் பனியில் விறைத்துப் போய் வருஷக்கணக்காய் நிற்பது போலும் தென்பட்டது. அவர்களுடைய உடம்பின் மேல் பகுதிதான் தெரிந்தது. மற்றதெல்லாம் பனிக்கட்டியுள் மறைந்து மூழ்கிக் கண் ணுக்குத் தெரியாமல் கிடந்தன.

பார்க்கப் பார்க்க கிழவிக்கு மனத்தில் பதட்டம் நின் றது. பயம் நீங்கியது. முன்போல் பயப்படாமல் துன்பப்படும் அந்த ஆத்மாக்களுக்காக அவள் பரிவு கொண்டாள். அவர்களுக்குத் தங்க இடமில்லை. வெட்டுண்டு சிதைந்த காலைத் தரிக்க இடமில்லை. அவர்களும் அந்தக் கொடும் குளிரில் ஈட்டிக் குத்துபோல் உடம்பைத் துளைக்கும் குளிரில் எப்படி நடுங்குகிறார்கள்!

அந்தக் கூட்டத்தில் சிசுக்களும் உண்டு. அவர்கள் முகத்தில் இளங்களை மாறிவிட்டது, முகம் குளிரால் நீலம் பாரித்துப் போயிருந்தது. அவர்கள் விளையாடுவது போலத் தெரிந்தது. ஆனால் அவர்கள் மகிழ்ச்சி யெல் லாம் செத்து மடிந்து கிடந்தது. அவர்கள் வெடவெட வென்று நடுங்கிக்கொண்டு தொண்டு கிழங்களைப்போல நடந்தார்கள். பையன்களும் பெண்களும் மாதிரியாகவா தெரிந்தது? அவர்களுடைய கால்களெல்லாம் பனிக் கட்டிகளையே நாடி அதன்மேல் ஊன்றுவதுபோலத் தெரிந்தது.

சாமியார் கையை எடுத்துவிட்டார். கிழவி கண் களுக்கு வெற்றுப் பனி வனாந்தரம் தவிர வேறு ஒன்றும் புலப்படவில்லை. அங்கும் இங்குமாகப் பனிக்கட்டி சில திக் காலுக்கு ஒன்றாகக் கிடப்பதுபோலத் தென்பட்டது. ஆனால் அவை மடிந்து மறைந்தவர்களின் உயிரையே அடக்கி வைத்திருந்தது. பனிப்பாறையில் நீலச்சாயம் பனிக்கட்டியில் சிக்கிக்கிடந்த உடம்பிலிருந்து வரவில்லை. பனிச் சிதள்களைக் காற்று எற்றி விரட்டியது. இருந்தாலும் வளையத்துக்குள் பார்த்ததெல்லாம் வாஸ்தவம் என்று நிச்சயித்துக்கொண்டு, ‘இவர்களுக்கு ஏதாவது உபகாரம் செய்வதற்கேதும் வழி உண்டா?’ என்று கேட்டாள்.

நன்மை செய்வதற்கு அன்புக்கு உரிமை கிடையாது என்றோ அல்லது பரிவுகொண்ட மனம் ஆறுதல் சொல் லக்கூடாது என்றோ கடவுள் எப்போதாவது தடை செய் திருக்கிறாரா? என்று பதில் கேள்வி போட்டுப் பதில் அளித்தார் சாமியார்,

இப்படிச் சொல்லி விட்டுச் சாமியார் தன்வழியே சென்றார். அக்னேட்டா வேகமாகத் தன் குடிசைக்கு நடந்தாள். உள்ளே போய் உட்கார்ந்து சிந்திக்க ஆரம்பித்தாள்.

பனிப்பாறையில் திசை கெட்டுத் திரியும் அந்தப் பாவிகளுக்கு என்னவிதமாக உதவி செய்ய முடியும் என்பதை அவள் சாயங்காலம் முழுவதும் உட்கார்ந்து யோசித்தாள்.

தான் ஏகாந்தியாக இருப்பதை நினைக்க அவளுக்குப் போதில்லை.

மறுநாள் காலை அவள் கிராமத்துக்குச் சென்றாள். அவளுக்கு மனம் உள்ளுக்குள்ளாகவே பூரித்தது. சின் சுமை கழன்றுவிட்டது. போகும்போது தனக்குத் தானே பேசிக்கொண்டு நடந்தாள்.

‘செத்துப் போனவர்களுக்கு சிகப்புக் கன்னமும் சிலுக்கு உடையும் வேண்டாம். உடம்பிலே கொஞ்சம்வெது வெதுப்பு இருந்தால்போதும் என்று அல்லாடுகிறார்கள். சிறுசுகளுக்கு அந்நினைப்பேது? உலகத்தில் மீந்து நிற்கும் கிழடுகெட்டைகள் நெஞ்சைத் திறந்துகாட்டி அழைக் காது போனால் மரணத்தின்எல்லையற்ற குளிர்க்கொடு மையிலே அவர்களுக்குத் தாரகம் ஏது?’

அவள். பலசரக்குக் கடையில் ஒரு பெரிய கட்டு மெழுகு திரி வாங்கினாள். குடியானத்தி ஒருத்தியிடம் ஒரு வண்டி விறகு கொண்டுவர உத்தரவு போட்டாள். என்றும் கொண்டு போவதைவிட இரட்டிப்புச் சுமை சணல் நூற்பதற்காக எடுத்துச் சென்றாள்.

சாயங்காலமாச்சு. வீட்டுக்குத் திரும்பினாள். வந்து விட்ட பிற்பாடு ஜெபம் செய்தாள். தைரியமூட்டிக் கொள்ள தெய்வ கீதங்களைத் திரும்பத் திரும்பப் பாடினாள். இருந்தும் அது கீழ் நோக்கியே சாய்ந்தது.மனதில் நினைத் ததைச் செய்ய இந்தக் கோழைத்தனம் தடை செய்ய வில்லை. தன்னுடைய படுக்கையைக் குடிசையின் உட் கூடத்தில் விரித்துப் போட்டாள். வெளிக்கூடத்திலிருந்த கணைப்பு அடுப்பில் கைநிறைய விறகெடுத்துப் போட்டுப் பற்றவைத்தாள். இரண்டு மெழுகு திரிகளை ஏற்றி ஜன்ன லில் வைத்தாள். வீட்டு வாசல் கதவை முடிந்தமட்டிலும் விரியத் திறந்துவைத்தாள். அப்புறம் அக்னேட்டாக் கிழவி போய்ப் படுத்துக்கொண்டாள்.

இருட்டில் கிடந்து சப்தம் கேட்கிறதா என்று காதைக் கூர்மையாக வைத்திருந்தாள்.

ஆமாம்; அதுகள் காலடிச் சத்தமாகத்தான் இருக்க வேண்டும்.

சில பனிப்பாறைகளில் வழுக்கி வருவதுபோலக் கேட்டது. வேறு யாரோ ஒருவர் முனங்கிக்கொண்டே உள்ளே நுழைவதற்குப் பயந்துபோய் குடிசையைச் சுற்றித் தயங்கித் தயங்கி நடப்பதுபோல் கேட்டது.

அக்னேட்டாவுக்கு இதற்குமேல் தாங்க முடியவில்லை. படுக்கையைவிட்டுத் துள்ளி எழுந்தாள். ஒரே ஓட்டமாக ஓடி வெளிக்கதவைப் படார் என்று இழுத்து மூடித் தாளிட்டாள். இதை யார் தாங்க முடியும்? ரத்தமும் சதை யும் பயந்து துடிக்காமல் எப்படிச் சகித்துக்கொண்டு இருக்கும்?

குடிசைக்கு வெளியே ஒரு நெடிய பெருமூச்சுக் கேட் டது. கால் வலி தாங்க மாட்டாமல் தள்ளாடித் தள்ளாடி நடந்து செல்லும் காலடிச் சத்தம் தூரத்தில் பனிப்பாறை நோக்கி மங்கி மறைவது கேட்டது. தேம்பித் தேம்பியழும் சப்தமும் அவள் காதில் விழுந்தது. அப்புறம் ஒன்றுமே கேட்கவில்லை. அதற்கு அப்புறம் கிழவி அக்னேட்டா வுக்கு மனம் இருப்புக்கொள்ளாமல் தவித்தது.

வழக்கம் போல் தனக்குத் தானே பேசிக் கொண்டாள்.

‘அடி முட்டாளே. மெழுகு திரிகள் அணைந்து போகுமே, அனலும் அணைந்து போகுமே. அவை என்ன காசா, லேசா.நீ வடிகட்டின கோழை என்பதற்காக இத்தனையும் வீணாகி நாசமாகிறதா?’

அவள் மறுபடியும் படுக்கையை விட்டு எழுந்திருந் தாள், உடம்பு நடுங்கியது. பல் கிட்டியடித்தது. வெளிக் கூடத்திற்கு வந்து வாசற்கதவை விரியத் திறந்தாள். மறுபடியும் போய்ப் படுத்துக்கொண்டு அவள் காத்திருந்தாள்.

இப்போது பயம் அகன்றுவிட்டது. அகதிகளை விரட்டிவிட்டோமே, இனிமேல் தைரியமாகத் திரும்பி வருவார்களோ என்ற பயந் தவிர அவளுக்கு வேறு ஒரு கவலை யுமில்லை.

பிறகு இருட்டில் கூப்பிட ஆரம்பித்தாள். சிறு பிராயத்தில் அவள் ஆடுமேய்த்துத் திரிந்தபொழுது மந்தைகளை அப்படித்தான் அழைப்பது வழக்கம்.

‘என் குட்டிகளா, அருமைக் குட்டிகளா வாருங்கள், வாருங்கள்’ என்றழைத்தாள். மலைச் சிகரத்திலிருந்து குடிசைக்குள் நேராகப் பெருங்காற்று பாய்ந்தடித்தது போலிருந்தது.

கிழவியின் காதுக்குக் காலடிச் சத்தமோ அழுகைக் குரலோ கேட்கவில்லை. வீட்டுக்குள் நுழைந்த காற்றின் ஓலந்தான் கேட்டது.

‘அவர்களைப் பயப்பட வைத்துவிடாதே’ என்று யாரோ சொல்லுவது போலக் கேட்டது.

கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனாலும் வெளியறை யில் அது கொள்ளுமட்டும் கூட்டம் வந்திருப்பதாக அவள் உணர்ந்தாள். சுவர்கள் இற்று விழுந்துவிடுமோ என்று நினைக்கும்படி அவ்வளவு நெருக்கம். அப்போது கிழ அக்னேட்டா மனதில் மகிழ்ச்சியும் திருப்தியும் நிறைந்தது. கைகளை நெஞ்சில் மடக்கி வைத்துக்கொண்டு கண்ணுரங்கலானாள்.

விடிந்தபோது நடந்ததெல்லாம் சொப்பனம் என்று நினைத்தாள். ஏனென்றால் வெளி அறை பழைய படியே தான் இருந்தது. நெருப்பு எரிந்து எரிந்து அவிந்துவிட்டது. மெழுகுதிரிகளும் அப்படியே. திரிகளில் சொட்டு மெழுகுகூட மிஞ்சவில்லை.

உயிரோடு இருக்கும்வரை அக்னேட்டா இந்தப்படியாகச் செத்தவர்களுக்காகப் பாடுபட்டாள். அவள் கஷ்டப்பட்டுப் பகல் முழுவதும் நூற்றாள். ஒவ்வொரு ராத்திரியும் வெளியறையில் நெருப்பேற்றி வைக்க இப்படி உழைத்தாள்.

அவள் சந்தோஷமாக வாழ்ந்தாள். ஏனென்றால் யாராவது ஒருவருக்கு உபகாரமாக வாழ முடிகிறது என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது.

பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை அவள் சர்ச்சில் வழக்கம்போல் உட்காருமிடத்தில் இருக்கவில்லை. கிராமத்துக்காரர்கள் என்னமோ ஏதோ என்று பார்த்து வர அவளுடைய குடிசைக்குப் போனார்கள். அவள் செத்துப் பிரேதமாகக் கிடப்பதைக் கண்டு அடக்கம் செய்வதற்காகச் சவத்தைக் கிராமத்துக்கு எடுத்துவந்தார்கள்.

அக்னேட்டாவின் சவத்துக்குப் பின்னால் கல்லறைத் தோட்டத்திற்கு வெகுபேர் போகவில்லை. கூடப்போனவர்கள் முகத்திலும் வருத்தமிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் பெட்டியைக் குழிக்குள் இறக்கப்போகும்போது திடீரென்று கல்லரைத் தோட்டத்துக்குள் நெட்ட நெடிய, மகிழ்ச்சிக்களையற்ற,ஞானத்தேஜசுடைய சாமியார் நின்றார். பனிமூடிய மலையுச்சியைக் காட்டினார். கல்லறைக் குழியரு கில் நின்றவர்கள் மலைச்சிகரம் முழுவதும் இளஞ்சிவப்புப் பூத்துச் சிகரம் முழுவதையும் பிரகாசமாக முழுக்காட்டியதைக்கண்டார்கள். சிகரத்தின் குறுக்கே சிறுசிறு ஒளித் திரள் வரிசை வரிசையாகச் செல்வதைக் கண்டார்கள். மெழுகு திரி ஊர்வலமாக நடந்து செல்வதுபோலிருந்தது. பனிப்பாறையில் அகதிகளாகத் திரியும் பாவிகளுக்கு செத்துப்போன கிழவி வாங்கிய மெழுகு திரிகளின் தொகைக்கு அன்று வெளிச்சம் தெரிந்தது.

‘கடவுளைத் துதிப்போமாக. தனக்காக வருந்த ஒருவரும் அற்ற அவள் மலைகளின் மகா தனிமையிலே நேசர்களைப் பெற்றுவிட்டாள்’ என்றார்கள் ஜனங்கள்.

– தெய்வம் கொடுத்த வரம், தமிழில்: புதுமைப்பித்தன், முதற் பதிப்பு: செப்டம்பர் 1951, ஸ்டார் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *