கிளியோளியோ அவளின் அறையில் இல்லை. அவள் வீட்டில் இருந்தால் ஜாஸ் இசை இருக்கும் என்பதால் அந்த இசையற்ற மௌனம் அசாதாரணமானது. கிளியோ ஜாஸ் இசையை நேசிக்கிறாள். ‘இது மனித குலத்தின் ஆன்மாவின் ஒலி’ என்கிறாள். அவளின் அறை காலியாக உள்ளது அவளுடைய பயணப் பை அங்கு இல்லை. அவளை இழந்த உணர்வு அவளின் வளர்ப்புத் தாயான ஸாராவுக்கு ஏற்படுகிறது.
நான்கு மொழிகள் பேசக்கூடியவள் கிளியோ.பியானோவில் அழகான பல இராக இசைகளை வாசிக்கக்கூடியவள்.சமையல் அல்லது தோட்டத்து வேலைகள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் போதும் மனம் கவரும் ஏதோ ஒரு இசையைக் கேட்கும் கலாரசிகையான புத்திசாலித்தனமான கிளியோ இன்று அவளின் பல தரப்பட்ட பொருட்களால அலங்கரிப்பட்ட அறையில் இல்லை. வீட்டை விட்டு காணாமல் போனாளா அல்லது வாழ்க்கையிலிருந்து காணாமல் போனாளா?
கிளியோவைத் தத்தெடுத்து வளர்த்த ‘அம்மா’ ஸாரா பல யோசனைகளுடன் கிளியோவின் படுக்கைக்கு அருகில் ஒரு மரக்கட்டை போல விறைப்பாக நிற்கிறாள். ஸாராவால் நகர முடியவில்லை. பய உணர்வு அவளைச் சூழ்ந்திருப்பதை அவளால் தாங்க முடியவில்லை. வெளியில் இலையுதிர்காலக் காற்று பலமாகவும் கோபமாகவும் இருக்கிறது. குடிபோதையில் இருக்கும் குண்டன் பலவீனமான பாதிக்கப்பட்டவரைத் தாக்குவதைப் போல அது கண்ணாடி ஜன்னலைத் தாக்குகிறது. சூரியன் வெளிச்சம் குறைந்து பரிதாபமாக இருக்கிறான். கிளியோவின் மறைவில் சூரியனும் மகிழ்ச்சியடையவில்லை போலும்.
‘கிளியோ ஒருநாள் நம்மை விட்டுப் போய்விடுவாள் என்று எனக்குத் தெரியுமா?’ ஸாரா தன்னைத்தானே கேட்டுக் கொள்கிறாள். கிளியோவின் மனதில் ஏதோ மாற்றங்கள் இருப்பதாக ஸாரா நீண்ட காலமாக அறிந்திருந்தாள். எனவே ஒரு நாள் அவள் அவர்களை விட்டு வெளியேறுவாள் என்று அவளுக்குச் சாடையாகத் தெரியும் என்பதை அவள் ஒட்டு மொத்தமாக மறைக்க முடியாது.
‘கிளியோவைத் தத்தெடுக்கலாமா?’ என்ற கேள்வியை அவள் கணவன் ஒலிவர் தயக்கத்துடன் கேட்ட நேரம் ஸாராவுக்கு இன்றும் நினைவிருக்கிறது. இதே அறையில் சுமார் பத்தொன்பது வருடங்களுக்கு முன்பு ஒலிவர் நின்று கொண்டிருந்தான். அவன் பதட்டத்துடன் விரல்கiளச் சுரண்டிக் கொண்டிருந்தான் ஒலிவர் ஒரு உயரமான மனிதன். சுமார் ஆறு அடி இரண்டு அங்குலங்கள். ஆனால் அவன் ஒரு பலவீனமான ஆத்மாவைப் போல; ஸாராவின் பதிலுக்காக அன்றுஅங்கேயே நின்றான்.
‘அழகிய குழந்தையான கிளியோவுக்கு ஒரு தாய் தேவை’ ஒலிவரின் குரல் கெஞ்சியது.
தனது மனைவி கல்பனா மற்றும் அவர்களின் இரண்டு சிறிய தத்தெடுக்கப்பட்டமகன்களை ஒரு கார் விபத்தில் இழந்த தனது நண்பர் மார்க் என்பனுக்கு உதவ ஒலிவர் விரும்பினான். மார்க் அவனின் அன்பான குடும்பத்தின் மறைவுக்குப் பிறகு முற்றிலும் துக்க மனநிலையில் இருக்கிறான்.அத்துடன் மார்க் அவனுடையகுழந்தை கிளியோவையோ அல்லது அவனையோ சரியாகக் கவனிக்கவுமில்லை என்று ஒலிவருக்குத் தெரியும்.
தாயில்லாத மகளைத் தத்தெடுப்பதன் மூலம் ஒலிவர் தனது நண்பருக்கு உதவ விரும்பினான்..ஸாரா எந்த தயக்கமும் இல்லாமல் ‘ஆமாம் ஆமாம் ஆமாம்’ என்று மிகவும் மகிழ்ச்சியுடன் சொன்னாள். இந்த வேண்டுகோளுக்காகவே அவள் காத்திருந்தாள். கிளியோ பிறந்த நாள் முதல் கிளியோவை ஸாரா அன்புடன் நேசிக்கிறாள்.
கிளியோ பிறந்தபோது ‘நீல நிற கண்கள் கொண்ட பொன்னிறமுள்ள மார்க்கும் கருங்கூந்தல் கொண்ட இந்திய அழகி கல்பனாவும் ஒரு அற்புதமான குழந்தையை உருவாக்கியிருக்கிறார்கள்’ என்று ஸாரா நினைத்தாள். மார்க் மற்றும் கல்பனா ஆகிய அந்த இருவரும் ஒருவருக்கொருவர் என்ற நியதியில் பிறந்த ஜோடிகளhக அவர்களின் நண்பர்கள் முன் தோன்றினர். கல்பனா என்ற இந்திய வம்சாவழி அழகியும்; மார்க் என்ற கம்பீரமான ஆங்கில இளைஞனும் அவர்களpன் ஆரம்பப் பள்ளியில் சந்தித்தனர்;. பின்னர் கொடுமையான கார் விபத்தில் கல்பனா சொர்க்கம் செல்லும் வரை அவர்களின் பயணம் அளப்பரிய காதலுடன் தொடர்ந்தது.
அவர்கள் இருவரும் பல விடயங்களை அறியும் ஆவலுடன் பல நாடுகளுக்கு ஒன்றாகச் சென்று பயணித்தார்கள். கல்பனாவின் தாய்நாடான இந்தியாவுக்கு அடிக்கடி சென்றார்கள். கல்பனாவின் தாய் சொல்லிய இதிகாச புராண கதைகளையும் அதில் சொல்லப் பட்டிருக்கும் மாயா ஜாலக் கதைகளையும கேட்டு வளர்ந்தவள் கல்பனா.ஆனால் மார்க் தன் மனைவியுடன் இந்தியா சென்றபோது அக்கதைகளில் பெண்கள் நடத்தப்படும விதங்களையும் அத்துடன் இந்தியக் கடவுளர் பலர் போர் ஆயதங்களுடனிருப்பதையும் விமர்சித்தபோது ‘தமிழர் நாகரீகசரித்திரம் சமத்துவத்தை அடிப்படையாகக்கொண்டது. ஆனால் காலக்கிரமத்தில் சமயம் என்ற பெயரில் மனிதமற்ற முறையில் சாதி மத பேதங்கள் உண்டாக்கப் பட்டு இந்திய மக்கள் ஒருநாளும் ஒருத்தரை ஒருத்தர் சரிசமமாகப் பார்க்க முடியாத மாதிரி சமூக அமைப்பை மாற்றி அமைத்திருக்கிறது’ என்ற விளக்கத்தைச் சொன்னாள கல்பனா.
கல்பனா மிகவும் மதப்பற்றுள்ள பெண். அசைவ உணவுகளை விரும்புவள். பெரு முதலாளிகளின்; பேராசைக்காக பொதுமக்களுக்குத் தெரியாத பல ராசாயனக் கலவைகளுடன் உண்டாக்கப்பட்ட குளிர்பானங்களையும் உணவுகளையும் தவிர்ப்பவள். இறைவன் தந்த எங்கள் வாழ்க்கையைத் தங்கள் வியாபார இலாபத்திற்காகப பயன்படுத்தும் பேராசையாளர்களின் உணவுகளைச் சாப்பிட்டு எமது உடல்களை ஏன் சிதைத்துக்கொள்ள வேண்டும்?’ என்று கேள்வி கேட்பவள். மாறி வரும் பேராசை பிடித்த சமுதாய நோக்கைப் புரிந்து கொண்ட புத்திசாலி அவள். அவளின் இப்படியான சிந்தனைகளுடன் சேர்ந்து வாழந்தவன் மார்க்.
அத்துடன் அவள் மார்க் புரிந்து கொள்ள முடியாத இந்திய புராணங்கள் பண்டைய ஞானம் மற்றும் வரலாறு மற்றும் அனைத்தையும் கொஞ்சம் படித்தவள் என்றாலும் அவள் கணவன்; மார்க் ஒரு டாக்டர்.விஞ்ஞான நோக்கில் உலகைப் பார்ப்பவன். அறிவியல் மனப்பான்மை கொண்டவன். தங்களுக்குப் புரியாத பல்வித இயற்கை அறிவியலைப் பற்றி மேலும் அறிய எப்போதும் ஆர்வமாக இருந்தான். மார்க்கின் கொள்ளுப் பாட்டன் மிஸ்டர் ஹரி மில்லர் என்பவர்; ஒருகாலத்தில் தொல்லியல் ஆய்வாளராக இருந்த எஜிப்து நாட்டுக்குக் கல்பனாவுடன்; சென்றபோது மார்க் அந்த நாட்டின் பழம் சரித்திரத்தையும் அதன் சரித்திரத் தடயங்களையும் கண்டு மலைத்துவிட்டான். ‘எஜிப்தில் பல அரசர்களுக்கு பிரமிட் கட்டியிருக்கிறார்கள். ஆனால் உலக மகா அழகியாகவும் ஆளுமையுள்ளவளாகவும் மதிக்கப் பட்ட எஜிப்திய பேரரசி கிளியோபாட்ராவுக்கு ஏன் ஒரு பிரமிட் இல்லை அல்லது புதையல் இடம்கூட இல்ல?’ என்று துக்கத்துடன் கேட்டாள் கல்பனா.
மார்க் மற்றும் கல்பனா இருவரும் தங்களுக்கு நிறைய குழந்தைகளுடன் ஒரு பெரிய குடும்பத்தை விரும்பியதால் குழந்தைகளைப் பெற தீவிரமாக விரும்பினர். மார்க் அவனது குடும்பத்தில் ஒரே பிள்ளை. கல்பனாவுக்கு ஒரு சகோதரி மற்றும் சகோதரர் இருந்தனர். ஆனால் அவளின் சகோதரர்கள் இருவரும் அவர்கள் பிறந்து வளர்ந்த லண்டனை விட பொருளாதார வசதியைத் தரும் ஒரு சிறந்த வாழ்க்கைக்காக வேறு நாடுகளுக்குச் சென்றுவிட்டனர்.
மார்க் மற்றும் கல்பனா தங்களுக்கு குழந்தையைப் பெற முயற்சித்தபோது சில வருடங்கள் கடந்தும் அவர்களுக்குப் பிள்ளைகள் பிறக்காததால் அவர்கள் ஒரு தாயிடமிருந்து இரட்டைக் குழந்தைகளைத் தத்தெடுத்தனர். அக்குழந்தையின் தாய் அவளின் காதலனால் கைவிடப்பட்ட திருமணமாகாத ஒரு இளம் ஆங்கிலப் பெண். தன்னால் அக்குழந்தைகளுக்கு நலவாழ்க்கை கொடுக்கமுடியாது என்றுணர்ந்த அந்த இளம் தாய் தங்களுக்குத் தத்தெடுக்கக் குழந்தை தேடிக்கொண்டிருந்த மார்க்-கல்பனா தம்பதிகளைச் சந்தித்து மிகவும் வருத்தத்துடன் அவர்கள் கைகளில் தன் பிஞ்சுக் குழந்தைகளைக் கொடுத்தாள்.
பிறந்து சில மாதங்களே ஆன ஒரு ஜோடி இனிய ஆண் சிறுவர்கள் மார்க்- கல்பனா தம்பதிகளின் வாழ்க்கையில் மகிழ்வைக் கொடுத்து அவர்களின் சோகமான வாழ்க்கையைமாற்றியமைத்தனர்.
‘அன்பான கவனிப்பு தேவைப்படும் இந்தக் குழந்தைகளை நீங்கள் மிகவும் நேசத்துடன் கவனித்துக்கொள்வீர்கள் என்று எனக்குப் புரிகிறது. உங்களின் மகிழ்ச்சியை உங்களின் பாசம் கலந்த புன்னகையில் புரிந்து கொள்கிறேன்’அந்த ஆங்கில இளம்தாய் கண்ணீருடன் சொன்னாள்;.
‘இந்தக் குழந்தைகள் உனது பெருந்தன்மையால் எங்களுக்குக் கிடைத்த அன்பளிப்பு என்று நினைக்கிறோம்.அத்துடன் நாங்கள் இந்தக் குழந்தைகளின் வைத்திருக்கும் அன்பை ஆசரிவதித்து இறைவன் எங்களுக்கும் ஒரு நாள் சொந்தமாக ஒரு குழந்தையைத் தரலாம்’. என்று மார்க் -கல்பனா தம்பதிகள் நம்பிக்கையுடன் அந்தத் தாய்க்குச் சொன்னார்கள்.
கல்பனா தொடர்ந்து கர்ப்பம் தரிக்க முயன்றாள்.
இயற்கையான எந்த முன்னேற்றமும் இல்லாமல் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் ‘இன் விட்ரோ’ கருத்தரித்தல் (IVF) மூலம் ஒரு குழந்தையைப் பெற;;;;றனர்.
அவர்களுக்கு ஒரு பெண்; குழந்தை பிறந்ததும் கல்பனா-மார்க் தம்பதிகள் தங்கள் குழந்தைக்குக் கிளியோ என்று பெயர் வைத்தனர். கிளியோவின் அற்புத அழகை ரசித்த ஸாரா அவர்களின் நீண்டகால நண்பனான மார்க்கிடம் நகைச்சுவையாக ‘ குழந்தை இவ்வளவு பேரழகாக இருக்கிறாள். குழந்தை கிளியோவை நீங்கள் மரபணு மாற்றம் செய்து உருவாக்கினீர்களா? என்று கேட்டாள். மார்க் ஒரு மரபணு ஆராய்ச்சி ஆய்வகத்தில் பணிபுரிந்தான். அங்கு அவர்கள் எதிர்கால சந்ததியினரின் முன்னேற்றத்திற்காக பல சோதனைகளை நடத்தினர்.
‘என்ன பரிசோதனை?’ என்று ஒருநாள் ஆர்வத்துடன் கேட்டாள் ஸாரா.
மார்க் அவளைப் பார்த்து புன்னகைத்தான். ஆனால் பதில் சொல்லவில்லை.
‘இது ரகசிய பரிசோதனையா?’ ஸாரா மேலும் அறிய விரும்பினாள்.
“ஓ இல்லை.விஞ்ஞானிகள் எதிர்கால முன்னேற்றத்திற்காகச் செய்யும் பல பரிசோதனைகளை விளங்கிக் கொள்ளாத இந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நாங்கள் சில நேரங்களில் நெறிமுறையற்ற ஒன்றைச் செய்கிறோம் என்று நினைத்து கட்டிடத்தை சேதப்படுத்துகிறார்கள்”
‘அப்படியா?’ஸாரா வியப்புடன் கேட்டாள்.
‘விலங்குகள் மீது பரிசோதனை செய்வது மரபணு மாற்றுவது அல்லது மனிதர்களை குளோனிங் அதாவது பிரதி செய்வது அல்லது அது போன்ற விஷயங்களை நாங்கள் ஆய்வதாக எங்களைக் குற்றம் சாட்டுகிறார்கள்’. மார்க் நகைச்சுவையாக விளக்கினாலும் அவன் குரலில் இருந்த பதட்டத்தை அவளால் உணர முடிந்தது.
இதற்கிடையில் ஸாரா ஒலிவர் தம்பதிகளுக்கு தங்களுக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் பிடிக்கத் தொடங்கிவிட்டது. ஸாராவுக்கு இரண்டு கருச்சிதைவுகள் ஏற்பட்டன. ஸாரா கவலை மற்றும் மனச்சோர்வுடன் நாட்களை நகர்த்தினாள்.
கல்பனா- மார்க் தம்பதிகளின் வாழ்வில் நடந்த திடீர் சோகம் மார்க்கின் குடும்பத்தினரையும் கல்பனாவின் குடும்பத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்களுடன் நீண்டநாட்களாக நண்பர்களாக இருந்ததால் ஒலிவர் தனது நண்பன் மார்க் அனுபவிக்கும் சொல்லமுடியாத சோகத்தை உணர்ந்தான். சட்டென்று நடந்த ஒரு பயங்கர விபத்தில் கல்பனாவும் அவர்கள்; தத்தெடுத்து இரு பையன்களும் இறந்தபோது மார்க் ஒரு குறுகிய காலத்திலேயே மிகவும் ஆழ்ந்த மனச்சோர்வுக்கு ஆளாகிவிட்டான். கிளியோ சிறு குழந்தையாயிருந்ததால் அவளை விபத்து நடந்த அன்று கல்பனாவின் தாயின் பாதுகாப்பில் விட்டுச் சென்றிருந்தாள..
மார்க் மற்றும் அவரது வயதான மாமியார் குழந்தையுடன் போராடியபோது ஒலிவர் தனது நண்பருக்கு உதவ நினைத்தான். அவர் கிளியோவைத் தத்தெடுக்க முடிவு செய்தான்;.
பல மாதங்கள் யோசித்த பிறகு தன் குழந்தையை நண்பனுக்குக் கொடுப்பது பற்றி யோசித்து யோசித்து நிச்சயமற்ற உணர்வுக்குப் பிறகு. இறுதியில் மார்க் ஒப்புக்கொண்டான். அது அவனுக்கு ஒரு வேதனையான அனுபவமாக இருந்தது என்பதை அவரைச் சுற்றியிருந்தவர்கள் புரிந்து கொண்டனர்.
அப்போது கிளியோவுக்கு இரண்டு வயது. தான் தத்தெடுத்த சிறிய குழந்தை கிளியோவுடன் ஒலிவர் மார்க்கின் வீட்டில் ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் செலவிட்டான். மார்க்கின் கொள்ளுத் தாத்தாவுக்குச் சொந்தமான பல பெட்டிகளும் புத்தகங்களும் இருந்த பாதாளநிலவறை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது .
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆபிரிக்காவில் ஆராய்ச்சியாளராக இருந்த மார்க்கின் தாத்தா மிஸ்டர் ஹரிமில்லர் எஜிப்திய பழைய வரலாற்றைத் தொல்துறை மூலம் ஆய்வு செய்து பல உண்மைகளை உலகுக்குக் கொண்டு வந்த வல்லுனரில ஒருத்தர்..அவரின் ஆய்வு ஆவணங்கள் பல பெட்டிகளாக அவரின் பேரனான மார்க்கின் வீட்டின் நிலவறையில் குவிந்து கிடந்தன.
தனது மகள் கிளியோவை ஒலிவர்-ஸாரா தம்பதிகளுக்குதத்தெடுப்பு நடைமுறை முடிந்ததும் மார்க் லண்டனில் இருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு நாட்டிற்கு ஆய்வாளராகப் பணியேற்றுக் கொண்டு சென்றார். அவர் பல நூறு வருடங்களாச் சொந்தமாகவிருந்த தனது மூதாதையர் வீட்டை கிளியோவுக்கு எழுதிவிட்டு, அதை கவனித்துக்கொள்ளுமாறு ஒலிவரிடம் கேட்டார்.
முதல் பத்து ஆண்டுகளில் மார்க் பல முறை கிளியோரைப் பார்க்க வந்தார். அதற்குள் அவர் மறுமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் தனது புதிய குடும்பத்துடன் வாழ்ந்தார்.அவருக்கு லண்டனின் எல்லையில்; அவரின் மிகவும் வயதான தாய்வழிப் பாட்டியார் ஒருத்தர் தவிர யாருமில்லை. அவரின் பெற்றோர் கிளியோ பிறக்க முதலே இறந்துவிட்டார்கள். சில தூரத்து உறவினர்கள்; வெளி நாடுகளில் வாழ்கிறார்கள். சில சொந்தக்காராகள்; இங்கிலாந்தில் பலமூலைகளிலும் வாழ்கிறார்கள்.
லண்டனில் கிளியோவைப் பராமரிக்க ஒலிவர்-ஸாரா மட்டுமல்லாது கிளியோவின் பாட்டியும் மார்க்கின் பாட்டியுமிருந்தனர்.
மார்க் அடிக்கடி கிளியோவைப் பார்க்க தனது புதிய குடும்பத்துடன் வந்தார். சென்ற முறை லண்டனுக்கு மார்க் வந்தபோது கிளியோ பன்னிரண்டு வயது. மிகவும் உயரமாக வளர்ந்திருந்தாள். அவளுடைய வயதுக்கு விதிவிலக்கான புத்திசாலி. அவளால் நான்கு மொழிகள் பேச முடியும். கிளியோவை அடிக்கடி சந்தித்து அன்பும் அரவணைப்பும் அன்பும் கொண்ட தனது வயதான பாட்டியிடமிருந்து தனது பெற்ற தாயின் மொழியான தமிழைக் கற்றுக் கொண்டாள். அவளின் தமிழ்ப் பாட்டியார் சனிக்கிழமைகளில் தமிழ்ப் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அங்கு கிளியோ விரைவாக தமிழில் நன்றாக எழுத வாசிக்கக் கற்றுக்கொண்டாள். கிளியோ தனது தமிழ்ப் பாட்டியிடமிருந்து பழைய இதிகாச புராண கதைகளைக் கேட்டு மகிழ்ந்தாள். மார்க்கின் பாட்டி பிரெஞ் ஆசிரியையாகவிருந்தவர்.எனவே கிளியோ மகிழ்ச்சியுடன் அந்த மொழியையும் கற்றுக்கொண்டாள். ஆங்கிலம் தமிழ் பிரெஞ்சு ஆகிய மூன்று மொழிகளும் அவளுக்கு தொடர்புடையவை.ஆனால் அவள் கிரேக்க மொழியையும்; படிப்பதற்காகத் தேர்ந்தெடுத்தபோது எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்!
‘ஏன் கிரேக்க மொழி? மேற்கத்திய நாகரிகம் கிரேக்கத்திலிருந்து வந்தது என்பதாலா?’ ஒலிவரும் ஸாராவும் உற்சாகமாகக் கேட்டார்கள்.
கிளியோ புன்னகையுடன் “என் தாய்மொழி தமிழ் உலகின் பழமையான மொழிகளில் ஒன்று. எனவே நான் அதைக் கற்றுக்கொண்டேன்.
என் அப்பா எனது கொள்ளுப் பாட்டனாருக்குச் சொந்தமான சாமான்களை நான் பதினான்கு வயதான பின்தான் திறக்கவேண்டுமென்று எனது தந்தை சொல்லியிருந்தார். என் கொள்ளுத் தாத்தாவிடம் எகிப்தில் இருந்து வந்த பண்டைய பொருட்கள் ஏராளம். ஏன் என்று வியந்தேன். என்னவென்று பார்க்கத் துடித்தேன். சில பெட்டிகளைத் திறந்து பார்த்தபோது என் கொள்ளுத் தாத்தா ஹரி மில்லரைப் பற்றிய ஒரு தகவல் கிடைத்தது.
எகிப்தின் பண்டைய வரலாற்றுப் பகுதியில் புதையலைத் தோண்டும் காலனித்துவவாதிகளில் எனது தாத்தா ஹரி மில்லரும் ஒருவர் என்று புரிந்து கொண்டேன். மிகவும் பழைய பட்டுத் துணியால் சுற்றப்பட்ட ஒரு சிறிய வெள்ளி நாணயமும் அத்துடன் என்னால் புரிந்தகொள்ள முடியாத சில பொருட்களையும் நான் கண்டேன். அது உண்மையில் எஜிப்தின் பெரிய அழகியான கிளியோபாட்ராவுடன் ஏதோ தொடர்புடையது என்று நான் உடனே நினைத்தேன். அந்த உணர்வு ஏன் எனக்கு சட்டென்று வந்தது என்று எனக்குத் தெரியாது. அந்தப் பெட்டியைத் திறந்ததிலிருந்து கிளியோபாட்ராவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஏதோ ஒன்று சொல்கிறது. எனவே நான் அவளுடைய மொழியில் ஆர்வமாக இருக்கிறேன்.கிளியோவின் மொழியான கிரேக்க மொழியைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்’
கிளியோ முகத்தில் ஒரு பரந்த புன்னகையுடன் சொன்னாள். ஒரு நொடி ஸாரா பழைய எஜிப்திய சரித்திரக் கதாநாயகி கிளியோபாட்ராவை நினைத்துக் கொண்டாள். இப்போது அவள் என்றோ மறைந்து விட்ட பேரழகி கிளியோபாட்ராவின் உருவில குட்டி கிளியோ தன் முன்னால் நிற்பது தெரிந்தது.
ஸாவுக்கு உடல் சிலிர்த்தது.சட்டென்று பல விடயங்களையும் யோசித்துக் கொண்டே கிளியோவிடம் சங்கடமான குரலில் கேட்டாள்.
‘அப்போ உங்க அப்பா அம்மா ஏதோ ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக உனக்கு கிளியோ என்று பெயர் வைத்தார்கள் என்று நினைக்கிறாயா?’
கிளியோ ஸாராவிடம் குனிந்து அவளை மென்மையாக முத்தமிட்டு ‘நான் கிளியோபாட்ராவின் ‘குளோனிங்காக’ இருக்கலாம் என்று உங்களுக்குத் தெரியாது’ என்றாள். கிளியோ ஒரு பெரிய ஜோக் சொன்னது போல் சிரித்தாள். கிளியோ அவளை முத்தமிட்டபோது ஒரு குளிர்ந்த காற்று அவளைக் கடந்து செல்வதை ஸாரா உணர்ந்தாள்.
‘கடந்த காலத்தில் நான் கிளியோபாட்ராவின் பராமரிப்பு வேலை செய்தேனா? ஒலிவர் அவளுக்கு மெய்க்காப்பாளனா?’ ஸாரா தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.
‘உங்கள் அழகான குழந்தையை மரபணு மாற்றியமைத்தPர்களா’ என்று மார்க்கிடம் ஸாரா என்றோகேட்டது நினைவுக்கு வந்தது.?
மார்க்கின் கொள்ளுத் தாத்தா கிளியோபாட்ராவுக்குச் சொந்தமான எதையாவது எஜிப்திலிருந்து கொண்டு வந்தாரா? கிளியோபாட்ராவின் ரகசிய பொருள் அல்லது பாதுகாக்கப்பட்ட உடல் பாகம் ஏதாவது இருந்ததா? மார்க் ஒரு பிரதியை குளோனpங் செய்ய பயன்படுத்தியிருக்கலாமh? ஸாரா இந்த கேள்விகளை தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். ஆனால் சில காரணங்களால் அவளால் ஒலிவருடன் இந்த விடயம் பற்றிப் பேசமுடியவில்லை. ஸாராவுக்கு கல்பனாவுடனிருந்த இறுக்கமான சினேகிதத்தால் கல்பனா சொல்லும் மறுபிப்பு அல்லது அவதாரங்கள் பற்றிய சிந்தனைகளும் வந்தன. ஸாரா ஒலிவருக்குத் தெரியாமல் எஜிப்தியப் பேரரசி கிளியோபட்ரா பற்றி ஆய்வு செய்தாள்.
பேரழகி கிளியோபாட்ரா கி.மு 69ல் பிறந்து கி.மு.55ல் அரசியாகி கிமு 30ல் ஆண்டு இறந்த மிகவும் பேரழகும் ஆளுமையும் கொண்ட சரித்திரத்ததையுடையவள். கிமு.323ல் அலெக்ஸாண்டரின் ஆளுமைக்குள் வந்த கிரேக்க பாரம்பரியத்தைக் கொண்டவள் என்றாலும் அவளின் தாய் கிரேக்க-எகிப்திய கலப்பான ஒரு உயர்குடும்பத்திலிருந்த அதீத அறிவுகொண்ட ஒரு பெண் சமயகுரு என்று சொல்லப் படுகிறது. கிளியோபாட்ராவின் தகப்பனால் அதியுயர் அறிவும் ஆற்றலும் கொண்ட பெண்ணாக வளர்க்கப் பட்ட அரசியான கிளியோபாட்ரா எஜிப்திய மிக உயர் பெண்தெய்வமான ‘ஐஸிஸின்’; ஒரு அம்சமாகக் கருதப்பட்டவள்.
அவள் அவர்களின் பாரம்பரிய வழக்கப்படி அவளின் பெற்றோர்கள் இறந்தபின் அவளின் தம்பியைத் திருமணம் செய்தவள். அதன்பின்னர் நடந்த பல அரசியல் சதிகளின் மாற்றத்தால் யூலியஸ் சீசரை மணந்து சிசேரியன் என்ற மகனைப் பெற்றவள். யூலியஸ் சீசரின் படுகொலைக்குப் பின் அவனின் தளபதியாகவிருந்த மார்க் அன்டனியைத் திருமணம் செய்து மூன்று குழந்தைகளைப் பெற்றவள். எஜிப்தை முன்னேற்றப் பல சட்ட திட்டங்களை அமைத்தவள்.இயற்கையை மேம்படுத்தி எஜிப்திய விவசாயத்தை விரிவு படுத்தியவள். அவள் மருத்துவம் வானிலை போன்ற பல்கலைகள் படித்தவளானதால் அக்காலத்திலிருந்த பல அரசர்களின் மதிப்பை; பெற்றவள்.அவளின் வானிலை பற்றிய அறிவால் யூலியஸ் சீசர் தங்களின் நாட்கணிப்iயும் எஜிப்தில் இருந்ததுபோல் ஒருவருடத்தில் 365 நாட்களாக மாற்றினார்.
அவள் வாழ்ந்த காலத்தில் பல போராட்டங்கள் சதிகள் படுகாலைகளைக் கண்டவள்.கடைசியாக யூலியஸ் சீசரின் சொந்தக்காரன் ஒக்டேவியன் எஜிப்துக்குப் படையெடுத்து வந்தபோது அவளின் அன்பன் மார்க் அன்டனி இறந்தான் என்ற செய்தியைக்; கேள்விப்பட்டுக் கிளியோ தற்கொலை செய்து கொண்டதாக வரலாறு சொல்கிறது. ஆண்களால் தங்களுக்கு வசதியாகவும் தங்களைப் பெருமைப் படுத்தவும் எழுதப் பட்ட சரித்திரங்களை ஸாரா பல கேள்விக் குறிகளுடன் படிப்பவள். சமய குரவராக இருந்த தாய்க்குப் பிறந்த கிளியோபாட்ரா அவர்களின் எஜிப்திய பாரம்பரிய நம்பிக்கையின்படி தற்கொலை செய்வது தவறு.அவள் தற்கொலை செய்து இறந்தாள் என்ற செய்தி உண்மையா என்று ஸாரா தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். முக்கியமாகக் கிளியோபாட்ரா என்ற அரசி மிகவும் ஆளுமைiயாக எஜிப்தைக் காப்பாற்றப் போராடியதை மறைத்து அவளை வெறும் செக்ஸ் ஆசை பிடித்து யூலியஸ் சீசரையும் மார்க் அண்டனியையம் மயக்கினாள் என்று ஆண்களால் எழுதப்பட்ட சரித்திரத்தை முற்று முழுதாக வெறுப்பவள் ஸாரா..இதெல்லாவற்றையும் ஆய்வு செய்தபின் மிகவும் அறிவு வாய்ந்த இளம் பெண்ணான கிளியோ ஏன் தன்னை கிளியோபட்ராவுடன் தொடர்பு படுத்;த முனைகிறாள் என்பதை ஸாரா சிந்திக்கத் தொடங்கிளாள்.
கிளியோவுடன் கிரேக்க மொழியைக் கற்றுக்கொள்வது பற்றி பேசிய சில மாதங்களின் பின் மார்க் இங்கிலாந்துக்கு வந்தான். பன்னிரண்டு வயதே நிரம்பிய தன் மகள் சுற்றுச் சூழல் அழிவு முதல் வானவியல் உலக அரசியல் எனப் பல்வேறு விஷயங்களைப் பற்றி அறிந்த வளர்ந்த பெண்மணியைப் போல பேசுவதைக் கண்டு அவர் மிகவும் வியப்படைந்தான்!
மார்க் தனது மகளை அருகிலுள்ள பார்க்குக்கு அழைத்துச் சென்றான். ஸாராவுக்க அவர்கள் மிகவும் நேரம் கழித்து வந்தபோது அவர்கள் சென்றது ஒரு நீண்ட நடைப்பயணமாகத் தெரிந்தது. அவர்கள் திரும்பி வந்தபோது கிளியோ மிகவும் அமைதியாக இருந்தாள். மார்க் மிகவும் சோர்வாக இருந்தான். மார்க் சில நாட்களில் லண்டனை விட்டு வெளியேறினான். அவர்கள் என்ன பேசினார்கள்? மார்க் ஏன் இவ்வளவு சோகமானஅமைதியாகவும் கிளியோ ஒரு தவிப்புக் கலந்த அமைதியாகவும் இருந்தார்கள்? ஸாரா ஒன்றும் புரியாமல்த் தவித்தாள்.
ஸாரா தேவையில்லாமல் கிளியோவைப் பற்றி அதிகம் கவலைப்படுவதாக ஒலிவர் எப்போதும் அவளிடம் கூறுவதால் ஸாராவால் பல கேள்விகளை ஒலிவரிடம் கேட்க முடியவில்லை.
அதற்குப் பிறகு மார்க்கிடமிருந்து ஒரு கொஞ்ச காலம் எந்த வருகையும் இல்லை. ஆனால் வழக்கமான அழைப்புகள் தொடர்ந்தன.
கிளியோ வளர வளர அவள் ஒரு பெரிய சிந்தனை மாற்றங்களுடன் காணப்பட்டாள்.
‘அவள் பள்ளியில் நன்றாகப் படிக்கிறாள்’ என்று ஆசிரியர்கள் கூறினர்.
அவள் தனது வாழ்க்கையில் என்ன செய்ய விரும்புகிறாள் என்பதில் தீவிரமாக இருந்தாள். சாதாரண இளம் பெண்கள் போலல்லாது பல இலட்சியங்களை மனதில் வளர்க்கும் பெண்ணாகத் தெரிந்தாள். பேராசை பிடித்தவர்களால் முன்னெடுக்கப் படும் இயற்கை அழிவையுண்டாக்கும் செயல்களுக்கெதிராகக் குரல் கொடுத்தாள்.
‘எதிர்கால மனிதர்களின் நீதிக்கான போராட்டம்’. என்றாள்.’ இறைவன் நமக்குத் தந்த பூமியை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை’ என்று ஒலிவரிடமும் ஸாராவிடமும் கோபமாகச் சொல்வாள்.
இளமையான வயதடைந்த கிளியோ ஒரு அற்புத அழகுடையவளாகத் தெரிந்தாள். ஆனால், ஆண்களில் எந்த விதமான ஒரு ஈர்ப்புமற்ற இளம் பெண்ணாக வளர்ந்தாள். முடிந்தவரை பல விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருந்தாள். இயற்கையைப் பற்றி அறிவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறாள்.சூடான நாடுகளிலிருந்து முக்கியமாக ஆபிரிக்காவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் பலவிதமானகவர்ச்சியான தாவரங்களை வாங்கினாள். பண்டைய நாகரிகங்கள் புதிய தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்கிறாள். மேலும் விண்வெளியை ஆராய பயணம் செய்ய விரும்பினாள்.
சில வேளைகளில் கிளியோ ஆழ்ந்த சிந்தனையிலிருப்பதை ஸாரா கவனித்தாள்.ஒரு நாள் அவள் ஸாராவிடம் கேட்டாள்.அவளின் வாழ்க்கை இப்படி ஏன்மாறியது? அவளை மாற்றியமைத்தது யாருடைய யோசனை? ‘
ஸாரா அவளது கேள்விக்கு பதில; தேடத் தயங்கினாள்.
ஆனால் ஒருநாள் சட்டென்று,’ எஜிப்திய அழகியின் வாழ்க்கையில் கிளியோபாட்ராவின் தாய் தகப்பன் இறந்ததுபோல் தான் கொண்டு வந்த ஏதோ ஒரு சாபத்தால் தன் தாயும் சகோதரர்களும் சடுதியாக இறந்ததாக என் அப்பா நினைத்திருப்பார் என்று நினைக்கிறீர்களா?’ கிளியோ இந்தக் கேள்வியைக் கேட்டபோது ஸாரா திடுக்கிட்டு விட்டாள்.
‘என்ன? நீ என்ன சொல்கிறாய் கிளியோ.. .’?
ஸாரா வாக்கியத்தை முடிக்கவில்லை.கிளியோ உடனடியாக கேட்டாள் ‘என் கொள்ளுத் தாத்தா கொண்டு வந்த கிளியோபாட்ராவின் சில உயிரியல் பகுதிகளிலிருந்து என் தந்தை என்னை குளோனிங் செய்தார் என்று நினைக்கிறீர்களா?’
ஸாராவால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. நீண்ட காலத்திற்கு முன்பு ஸாரா அதைப் பற்றித்தான் நினைத்தாள். அவர்களின் நண்பன் மார்க்கிடம் ‘இப்படி ஒரு பேரழகை ஏதோ ஒரு மரபணு மாற்றத்தில் செய்தீர்களா?’ என்று கேட்டதையும் அவன் தர்ம சங்கடப் பட்டதையும் ஸாரா நினைவு கூர்ந்தாள்.
கிளியோ எட்டு அல்லது ஒன்பது வயதாக இருந்தபோது ‘கிளியோ என்ற இந்த குட்டிப் பேரழகி எஜிப்திய அழகி கிளியோபாட்ராவின் அவதாரம் என்று வேடிக்கையாகப் பேசப்பட்ட காலங்களை அவள் நினைத்துப் பார்த்தாள். நிலவறையில் பழைய பொருட்களுடன் கிளியோ அதிகமாக விளையாடுவது ஸாராவை ஒருவித பயத்துடன் சிந்திக்க வைத்தது என்று ஒலிவர் நினைத்தார்.அதனால் தற்போதைய கிளியோவின் கேள்விகள் குழந்தைப் பருவ கற்பனையை அடிப்படையாகக் கொண்டவை என்று அவர்கள் நினைத்தார்கள்.
‘கிளியோபாட்ராவைப் பற்றி என் கொள்ளுத் தாத்தாவின் பெட்டிகளில் நிறைய தொல்பொருள் விஷயங்களைப் பார்த்தேன். தாத்தா மனதில் கிளியோபாட்ரா மீது காதல் கொண்டிருக்கலாம். தாத்தாவின் உண்மையான பெயர் பெயர் ஹரி மார்க் மில்லர். கிளியோபாட்ராவின் காதலன் மார்க் அண்டனியைப் போலவே அவரது நடுப் பெயரும் இருந்திருக்கிறது.தனது பேரனான என் தந்தைக்கும் மார்க் என்று பெயர் வைத்திருக்கிறார். தனது பெயரில் மார்க் என்ற பெயரும் இணைந்திருந்ததால் பழைய பிறவியில் அவர் கிளியோவின் காதலுக்குரிய அன்பன் மாhக் அன்டனி ஆக இருந்திருக்கலாம் என்று கற்பனை செய்தாரா தெரியாது.
‘என் கொள்ளுத் தாத்தா எஜிப்திலிருந்து அந்தப் பண்டைய பொருளைக் கொண்டு வந்ததற்கு ஏதோ ஒரு காரணம் இருப்பதாக என் தந்தையும் நினைத்திருக்கலாம். ஒருவேளை கொள்ளுத்தாத்தாவின் பண்டைய இரகசிய பொருட்களை ஆராய்ந்து மேற்கொண்டு ஏதாவது கண்டுபிடித்திருக்கலாம். எனவே அவர் தனது கொள்ளுத் தாத்தாவின் விருப்பத்தை மகிழ்விக்கவும் கிளியோபாத்ராவின் ஏதோ ஒரு கலத்திலிருந்து என்னை குளோனிங் செய்யும் பரிசோதனையை மறுபிறப்பு போன்ற நம்பிக்கையள்ள என் அம்மாவின் கோரிக்கையால் பயன்படுத்தியிருக்கலாம். கிளியோபாட்ரா எஜிப்திய-கிரேக்கம் கலந்த வம்சாவளியைச் சேர்ந்தவள் என்பதால் ஒரு இந்தியத் தாயினுடையதும் ஆங்கில- மரபிலிருந்து வந்த தனது மரபணுவையும் சேர்த்துப் பரிசோதனை செய்து என்னைப் படைத்திருக்கலாம்.’’
பெரும்பாலும் கிளியோ இப்படி நகைச்சுவையாக பேசும்போது ஸாரா விஷயத்தை மாற்றிவிடுவாள். ‘ஏன் கிளியோ தன்னை அன்னியமாக நினைக்கிறாள்?
பிரித்தானிய கலப்பு நிறப் பெண்ணாகப் பிறந்ததால் அவள் தன்னைப் பற்றி வித்தியாசமாக நினைகிறாளா?
ஆங்கிலேயத் தம்பதிகளான ஸாரா- ஒலிவர் இருவரிடமிருந்தும் கிளியோ வித்தியாசமாகவும் அன்னியமாகவும் உணர்ந்தாளா? அல்லது கொள்ளுத் தாத்தாவின் கிளியோபாட்ராவின் பண்டைய சேகரிப்புகளால் அவள் உண்மையில் உண்டாக்கப் பட்டவளா? அதனால் சுரப்பிகள் மாறும் இளவயதில் அவள் உணர்வுகளும் மாறி சொல்ல முடியாத மனக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டாளா?
கிளியோ தன் கொள்ளுப் பாட்டனின் பண்டைய சேகரிப்புடன் விளையாடும்போது தற்செயலாக, உண்மையாகவே ஏதோ விதத்தில் பாதிக்கப் பட்டதாகத் தன் தந்தையிடம் சொன்னாளா? கிளியோ தெரிந்தோ தெரியாமலோ தான் உருவாக்கிய பெண்ணாக மாறியதை கிளியோ தெரிந்து கொண்டதால் அதிர்ச்சியான மார்க் லண்டனுக்கு வருவதை நிறுத்திவிட்டாரா?’
ஸாராவின் எண்ணங்கள் பல கேள்விகளால் நிரம்பியது. சில நேரங்களில் கிளியோவின் நடத்தைகள் அத்துடன் அவளின் தேவையற்ற பேச்சுக்கள் என்பன ஸாராவுக்கு யதார்த்தமாக இருப்பதாகச் சில வேளைகளில் அவள் உணர்ந்தாள். அந்த உண்மையைக் கிரகிக்க ஸாரா நடுங்கினாள்.
ஸாராவும் ஒலிவரும் கிளியோவின் மனம் எப்படியோ மாறுகிறது என்று உணரத் தொடங்கினர். கிளியோவின் உள் எண்ணங்கள் அவளின் யதார்த்தத்தை இழக்கச் செய்தன. அவள் பியானோ வாசிப்பதை நிறுத்திவிட்டாள். ஜாஸ் இசையை ஆவலுடன் கேட்கவில்லை.
தனது பலவசதிகள் நிறைந்த மகிழ்வான எதிர்காலத்தை மட்டும் யோசிக்காமல் ஒட்டு மொத்த உலகத்தின் எதிர்கால மாற்றங்களையும் கவனிக்க வேண்டுமென்று சொன்னாள்.
‘சுற்றுச்சூழல் மாற்றங்களால் பேரழிவைத் தடுக்க நாம் ஏதாவது செய்ய வேண்டும். உங்களுக்குத் தெரியும் பழைய நாட்களில். சர்வாதிகாரிகள் உலகின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு தங்களுக்குத் தடையாகவிருந்த உள்ள எவரையும் மற்றும் அனைத்தையும் அழிக்க வேண்டியிருந்தது’ என்பாள் கிளியோ.
‘‘உங்களுக்குத் தெரியுமா அமெரிக்காவைக் கண்டு பிடிக்கச் சென்ற மேற்கு ஐரோப்பியரால் அங்கு நான்காயிர வருட உயர் சரித்திர வாழ்க்கை வாழ்ந்த பழம்குடி சிவப்பு இந்திய மக்கள் பல கோடிகள் படுகொலை செய்யப் பட்டார்கள்.அவர்கள் கைதிகளாக நகரங்களுக்கு அப்பால் நகர்த்தி வைக்கப் பட்டுக் கண்காணிக்கப் படுகிறார்கள். தென் அமெரிக்கா மெக்ஸிக்கோ பகுதியிலிருந்த மாயன் இன மக்களும் அவர்களின் நாகரீக சின்னங்களும் அழிக்கப் பட்டன. தென் அமெரிக்க வடபகுதி ‘அஷ்டெக’;.இனமக்களின நாகரிகம் அத்துடன் பெரு என்ற நாட்டில் அபரிமிதமாக வாழ்ந்த ‘இங்கா’ இனமக்களின் நாகரீகம் என்பன நிர்மூலமாக்கப்பட்டன. இதெல்லாம் உரோம ஏகாதிபத்தியம் ஒருகாலத்தில் தொடங்கிய ஆதிக்க வெறி மாதிரியான் தொடர்வுகள். மத்திய தரைக் கடல் நாடுகளின் உணவு நைல் நதிக்கரையோர விவசாயத்தில் தங்கியிருந்தது.அதைத் தன்னுடையதாக்க எஜிப்திய அரசி கிளியோபாட்ராவை அழித்து விட்டு பல்லாயிர வருடநாகரீகம் கொண்ட எஜிப்திய சரித்திரத்தையே மாற்றி விட்டான் ஒக்N;டவியன் என்ற அதர்மவாதி.
ரோமரின் படை கி.மு 30 தொடக்கம் கி.பி.641 வரை எஜிப்து மட்டுமல்லாமல் கி.மு.43- தொடக்கம் கி.பி 410; வரை பிரித்தானிய தீவு போல் மற்ற நாடுகளையும் சீரழித்தார்கள்.அன்று இங்கிலாந்தில் பரந்து வாழ்ந்த பழம்குடி பிரித்தானிய மக்களான ‘கேலிக்’ என்ற மொழி பேசிய ‘செல்டிக்’; இன மக்கள் இன்று கோர்ன்வெல் வேல்ஸ் ஸ்கொட்லாந்து அயர்லாந்து என்று ஒதுக்கப்பட்டு வாழ்கிறார்கள். உரோமருக்குப்;பின் வட ஐரோப்பாவிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்த ‘வைக்கிங்ஸ’; ஜேர்மனியிலிருந்து வந்த ‘ஸக்ஸன்ஸ’; அதன்பின் நோர்மண்டி-பிரான்சிலிருந்து வந்த ‘நோர்மன’; என்று படையெடுத்தவர்களின் பரம்பரையினரால்; பிரிட்டன் இன்று ஆளப்படுகிறது.;’ கிளியோவின் விளக்கங்கள் ஸாராவையும் ஒலிவரையும் திக்கு முக்காடப் பண்ணின.
ஸாராவும் ஒலிவரும் கிளியோ பல கற்பனைவாதமாகப் பல விடயங்களைச் சிந்திக்கிறாள் என்று நினைத்தார்கள். நிகழ்காலத்தில் அல்லது எதிர் காலத்தில் முக்கியமான ஒருவராகத் தன்னைக் கற்பனை செய்வது வளர்ந்து வருவதன் ஒரு பகுதியாகும் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
கிளியோ பதினேழு வயதாக இருந்தபோது ‘கனவு தேசம்’ என்ற நாட்டில் ஜனாதிபதி தேர்தலில் நிற்கப் போகும் ஒருவரின் புகைப்படங்களை செய்தித்தாளில் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘பாருங்கள் இவன் கிளியோபாட்ராவைக் கொன்றுவிட்டு அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்று கதை பரப்பி விட்டு அழகான எஜிப்து தேசத்தை அழித்த ‘ஒக்டேவியன்’ போல இருக்கிறான் அல்லவா?’ என்று கேட்டாள்.
அந்தஅரசியல்வாதி இளைஞனாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஸாரா பார்த்தாள்.
‘ம் இந்த அரசியல்வாதி அப்படியே ஒக்டேவியன் போலவே இருக்கிறான்.’ ஸாரா தயக்கத்துடன் முணுமுணுத்தாள்.
கிளியோவை தனது கற்பனையில் மேலும் செல்ல ஊக்குவிக்க அவள் விரும்பவில்லை. ‘இந்த அரசியல்வாதி தேர்ந்தெடுக்கப்பட்டால் உலகம் பல பேரழிவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதைத் தடுக்க வேண்டும் ஒட்டு மொத்த மக்களின் நன்மைக்காகப் பல பெண்கள் இதுவரை பல தடவைகளில் போராடியிருக்கிறார்கள் அது சரித்திரம்.
இவரின் கொள்கைகளை எதிர்த்து என்னைப் போல பல பெண்கள் போராடப் போகிறார்கள்.ஈவிரக்கமில்லாத இவன் செயலால் பலர் இறக்கலாம். பல நாடுகள் சின்னா பின்னப் படலாம். நானும் ஒரு போராட்ட நேரத்தில் கொல்லப் படலாம். நீதிக்காக சமத்துவத்துக்காகப் போராடுவதில் பிரித்தானிய பெண்கள் ஒரு நாளும் தயங்கியதில்லை. இந்த மாதிரி தலைவர்கள் உலக அழிவைக் கொண்டு வருவார்கள். பெண்கள் உலகின் கண்கள்.பெண்கள்தான் உயிர் படைப்பவர்கள் அவர்கள்தான் உணவழிப்பவர்கள். உலகம் பெண்களால் வாழ்கிறது.இயற்கையின் சக்திகள் பெண்மையானவை. நிலத்தில் பயிர் விளைகிறது பல்லின உயிர்கள் பிறக்கின்றன.நீரில் உயிர்கள் பிறக்கின்றன.காடுகளின் மரங்கள் மக்கள் உண்ண காய்களும் பழங்களும் உயிர்வாழ பிராணவாயவும் கொடுக்கின்றன. அவற்றையெல்லாம் தனிப் பட்டோர் சொந்தமாக்கி வலிமையற்றோரை அழிக்க இந்த ‘ஒக்டேவியன’; உருவில் ஒரு பாவி ஆசைப்படுகிறான்.’’என்று கிளியோ வருத்தத்துடன் சொன்னாள்;.
ஒக்டேவியன் போல் தோற்றமளித்த அரசியல்வாதி தேர்தலில் வெற்றி பெற்றார்.உலகம் மாறத் தொடங்கியது. தன்னலமும் பயங்கர உணர்வுகளும் கொண்ட அந்த ‘ஒக்டேவியன்’ உருவம் படைத்த தலைவன்போல் பல படுமோசமான தலைவர்கள் உருவானார்கள்.உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் தலைவர்கள். மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பவர்கள் மக்களுக்காக பெரிதாக எதுவும் செய்யவில்லை. தன்னலத்தை முன்னெடுக்கும் தனிப்பட்டோர் கைகளில் ஒரு நாட்டு மக்களின் பொதுச் சொத்தைக் கொடுத்தார்கள். அதன் எதிரொலியால் இயற்கை அழியத் தொடங்கியது. இயற்கையால் பராமரிக்கப்படும் காலநிலை மாற்றம் கண்டு பல்வேறு பேரழிவுகள் வெள்ளம் தீ நிலநடுக்கம் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
”நம் அனைவருக்கும் கடவுள் பரிசாக வழங்கிய அழகான இயற்கையை அழித்ததற்காக உலகம் கடவுளால் தண்டிக்கப்படுகிறது. உலகம் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது நாம் ‘கலியுகம்’ என்ற புதிய சுழற்சியை நோக்கிச் செல்கிறோம் என்று கிளியோ ‘உலகின் முடிவு’ என்ற புத்தகத்தை கையில் வைத்திருந்தபோது கூறினாள்.அப்போது அவளுக்கு பதினெட்டு வயதுதான்.
‘ஓ மை காட் கிளியோ மிகவும் குழப்பமாக இருக்கிறார். கிளியோவின் தமிழ் பாட்டி இந்திய புராணங்கள் மற்றும் அடித்தளத்தில் உள்ள பண்டைய எகிப்திய தொல்பொருள்களால் அவளுக்கு வந்த சிந்தனைச் சிக்கல்கள் அத்துடன் உலகில் தொடரும் இயற்கை பேரழிவுகள் பற்றிய கதைகள் கிளியோவை மிகவும் வருத்தமடையச் செய்கின்றன’ஸாரா அழுதாள்.
அதன் பின் கிளியோ பல்கலைக் கழகம் சென்றாள். ‘ஜெனட்டிக் என்ஜினியரிங்’ படித்தாள். பல்கலைக் கழக வாழ்க்கை படிப்பு அத்துடன் அங்கு பழகும் சினேகிதர்களால் கிளியோவின் மன நிலை மாறும் என்ற ஸாரா-ஒலிவர் தம்பதிகள் எதிர்பார்த்தனர்.
கிளியோ பல்கலைக்கழகத்தில் சிறந்த விதத்தில் பட்டம் பெற்றாள். தனியாகத்தான் வீட்டுக்கு வந்தாள். ஆண் சனேகிதனோ அல்லது ஒரு பெண் சினேகிதியுடனோ பெரிய நெருக்கமாகப் பழகியதாகத் தெரியவில்லை. ஆனால் மிகவும் பெரிய தொகையில் பல விடயங்களைப் பேசும் அவளைப் போன்ற பல நண்பர்கள் இந்த உலகத்தை சிறப்பாக மாற்றுவதில் ஆர்வமாக அவளுடன் சினேகிதமாகவிருந்தனர். கிளியோ முன்னெப்போதையும் விட உறுதியாக இருந்தாள்.
எதிர்காலத்தின் முன்னேற்றத்திற்காக உலகை மாற்றச் சிந்தித்தாள். சமத்துவம் நியாயம் மற்றும் இந்தப் பூமிக்கிரகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் சிறந்த எதிர்காலத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் அவள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். உலகை மாற்றுவதற்கான ஆர்ப்பாட்டங்களில் அவள் நிறைய நேரம் செலவிட்டாள்.
‘’எனது கொள்ளுப் பாட்டன் மாதிரியான விஞ்ஞான சிந்தனையாளர்களான பிரித்தானியர் மட்டுமல்லாமல் ப்ரான்ஸ் ஹிட்லரைத் தலைவராகக் கொண்ட ஜேர்மன் போன்ற பல நாடுகளிலிருந்து எஜிப்து இந்தியா போன்ற இடங்களுக்குப் போய்ப் பல அமரிமிதமான செல்வத்தை மட்டுமல்ல தொல்லியல் அதி; சக்திகளின் அறிவையும் திருடியிருக்கிறார்கள். ஆதிகாலம் தொடக்கம் இந்தியா பாரசீகம் எஜிப்து போன்ற நாடுகள் பல்லறிவுகளில் முதன்மை பெற்றிருந்தபடியாற்தான் அலெக்ஸாண்டர் எஜிப்தைக் கைப்பற்றினான்.பாரசீகம் தொடங்கி இந்தியாவரை சென்றான். அதன்பின்தான் மேற்குலகம் செல்வத்தில் முன்னேறியது விஞ்ஞானத்தில் உயர்ந்தது.
கடந்த நூற்றாண்டு; இரஷ்யா லைகா என்ற நாயையை 1957ல் விண்ணுலகத்திற்கு அனுப்பியது. அமெரிக்கா 1969ல் நீல் ஆர்ம்ஸ்ரோங் தலைமையில் மனிதர்களைச் சந்திரனுக்கு அனுப்பியது. பல விஞ்ஞானிகள மனிதர்களைப் பிரதி அதாவது ‘க்லோனிங்’ செய்யும் முயற்சியின் முன்னோட்டமான மிருகங்களைப் பிரதி எடுக்கும் புதிய விஞ்ஞானத்தில் நுழைந்தார்கள். 1996ல் ஸ்கொட்லாந்திலுள்ள ‘றோஸலின்’ இன்ஸ்டிடியுட்டிலிருந்த விஞ்ஞானிகள்‘டொலி’ என்ற பெயரில் ஒரு பெண் ஆட்டைப் பிரதிப் படைப்பாக அதாவது-’க்லோனிங’; செய்தார்கள்.
அதுபோலவே எனது கொள்ளுப் பாட்டன் இரகசியமாக வைத்திருந்த மரபணு மூலம் 1999ல் எனது தந்தை என்னை கினியோபாட்ராவின் பிரதியாக உருவாக்கினார் என்று நான் ஏன் நினைக்கக் கூடாது.அதுபோல் பலரை உருவாக்கியிருக்கலாம் என்று ஏன் நம்பக் கூடாது.எனது தந்தை தனது ஆராய்ச்சிக்காக எங்கெல்லாமோ சென்றார். என்ன பண்ணினார்.மனிதர்களை மட்டுமல்லாத பல அழிவு சக்திகளையும் உருவாக்கவில்லை என்று யார் கண்டார்கள. அந்த அறிவு விடயங்களைத் தங்கள் ஒற்றர்கள் மூலம் திருடும் மற்ற நாடுகள் இப்படி எத்தனையோ விடயங்களைத் தங்கள் தன்னலத்திற்காகச் செய்வார்கள் என்பதும் நிச்சயம்தானே’’கிளியோவின் கேள்விகளால் ஒலிவரும் ஸாராவும் குழம்பிவிட்டார்கள்.
பின்னர் கோவிட் -19 வந்தது. “பன்னாட்டு நிறுவனங்கள் இயற்கையின் வலயத்தை அழித்துவிட்டதால் இந்த வைரஸ் உலகின் மாறிவரும் பயங்கர வடிவத்தின் ஒரு பகுதியாகும். சமீபத்தில் அமெரிக்காவில் ‘இசாயா’ சூறாவளி ஓடிய விதத்தைப் பார்த்தீர்களா? ‘ என்று கிளியோ அழுதாள்.
“தடுக்க முடியாத சுற்றுச்சூழல் மாற்றங்கள் தொடரும்போது இந்த வைரஸ் பூமிக் கிரகத்தில் மில்லியன் கணக்கானவர்களைக் கொல்லும். மேலும். வைரஸ் தொடர்பான அரசியல்வாதிகளின் அறியாமை மற்றும் பரவலைக் கட்டுப்படுத்த பொருத்தமற்ற நடவடிக்கை ஆகியவற்றால் மக்கள் மிகத் தொகையில் இறக்க நேரிடும்.” கிளியோ கோபத்தில் கத்தினாள்.
‘எங்கள் உடல்கள் நாங்கள் வாழும் பூமிக் கிரகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன’ அவள் குழந்தையைப் போல அழுதாள். ஆனால் ஒரு ஆசிரியரைப் போல ஸாராவுக்கும் ஒலிவருக்கும் விஞஞானம் மற்றும் சுற்றாடல் சூழ்நிலை பற்றிய பாடங்களை விளக்குவதைப் போல அவள் தொடர்ந்து பேசினாள்.
“நமது உடலில் மூன்றில் இரண்டு பங்கு நீர் உள்ளது. இது இந்தப் பூமிக்கிரகத்தில் உள்ள தண்ணீரின் அளவைப் போலவே உள்ளது. நமது முக்கிய உறுப்புகள். மூளை ஈரல் இதயம் நுரையீரல் மற்றும் சிறுநீரகங்கள் என்பன கிரகத்தின் பூமி காற்று நீர் வெப்பம் மற்றும் விண்வெளி ஆகியவற்றில் உள்ள பெரிய சக்திகளைப் போலவே உள்ளன. அவை அனைத்தையும் நாம் மாசுபடுத்துகிறோம். உலகம் எப்படி வாழும்?. நீங்கள் மாசுபட்ட தண்ணீரைக் குடிப்பீர்களா அல்லது மாசுபட்ட காற்றை சுவாசிப்பீர்களா அல்லது மாசுபட்ட வயலில் உற்பத்தி செய்யப்படும் உணவை சாப்பிடுவீர்களா?.
அவளது கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்வது? ஸாரா மற்றும் ஒலிவர். ஓரளவு அவளுடன் உடன்பட்டார்கள். ஆனால் அவர்களால் என்ன செய்ய முடியும்?
“ஓ டார்லிங் உலகை மாற்ற நம்மால் எதுவும் செய்ய முடியாது”ஸாரா கிளியோவை அன்புடன் அணைத்துக் கொண்டாள்.
‘ஒக்டேவியன் போல் பேராசை பிடித்த தலைவர்களைத் தேர்ந்தெடுத்ததற்காக கடவுள் நம்மைத் தண்டிக்கிறார்’ கிளியோபாட்ராவைக் கொன்றவனைப் போல தோற்றமளிக்கும் தலைவரின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி உண்மையான வலியில் ஒரு குழந்தையைப் போல கிளியோ சத்தமாக அழுதாள்.
. ஸாராவும் ஒலிவரும் கிளியோவின் மனநிலையைப் பற்றி மிகவும் கவலைப்பட்டனர். ‘லாக்டவுனில் தனிமை அவளது மனதை சமநிலையற்றதாக ஆக்குகிறதா?’ சாரா யோசித்தாள்.
‘தயவு செய்து என்னைப் பைத்தியம் பிடித்தவள் போலவும் உண்மையைச் சொன்னதற்காக சிறையில் அடைக்கப்படவேண்டியவள்; போலவும் பார்க்காதீர்கள்’. கிளியோ விலகிச் சென்றாள்.
‘ஒக்டேவியன்’ தோற்றம் மீண்டும்’கனவு தேசத்’ தேர்தலில் நின்றது. அதே மாதிரி உலகின் பிரமாண்டமான நாடுகளில் ஒன்றான ‘மாயை தேசத்தின்’ பகுத்தறிவற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட இப்போதிருக்கும் மாறுவேடப் பிரியன்;தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவான் என்று பெருமூச்சி விட்டாள். ‘அங்கு இயற்கை அனர்தங்கள் உக்கிரமடையும்.மனித நேயம் சின்னாபின்மான சிக்கல்களை எதிர்நோக்கும்.பெண்கள் மிகவும் வன்மையுடன் நடத்தப் படுவார்கள்..பிறந்த குழந்தைகளையே குண்டுகள் போட்டழிக்கும்’சாப’ தேசத்தின்’ கொடிய பயங்கரத் தலைவனால் அவனுடைய மக்களே ஒருகாலத்தில் பழையபடி நாடோடியாவார்கள். ‘பலமற்ற நாடுகளில் பிரிவினையுண்டாக்கி அவர்களுக்கு ஆயுதம் விற்றுப் பிழைக்கும் வலிமை வாய்ந்த நாடுகள் அவர்களின் பேராசையால் வலுவிழந்து வறுமைகாணும் நாள் விரைவில் வரும். ஐம்பெரும் சக்திகளின் ஆவேசத்தால் இந்தப் பூவுலகில் இயற்கையின் தண்டனை அதிகரிக்கும்’ என்று கிளியோ வருத்தப்பட்டாள்.
திடீரென வெளிநாட்டில் இருந்து மார்க்கின் குடும்பத்தினரிடம் இருந்து கிளியோவின் தந்தை மார்க் கோவிட் -19 நோயால் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. இத்தனை ஆண்டுகள் ஆய்வகத்தில் இருந்து உலக முன்னேற்றத்திற்காக உழைப்பதாகச் சொன்ன உலகப் புகழ்பெற்ற புகழ்பெற்ற ஆராய்ச்சி மருத்துவர் ஒருவர் காலமானார்.
கிளியோ அந்தத் துயர் தாங்காமல் இயல்புநிலைத் தொடர்பை இழந்தாள். வெளி உலகக் கதவை மூடிக் கொண்டாள். பல நாட்கள் வெளியில் வரவே இல்லை. யாரையும் காணவில்லை. மிகக் குறைவாகவே சாப்பிட்டாள். பெரும்பாலும் கதவின் பின்னாலிருந்து ஸராவிடம் சில வார்த்தைகள் பேசினாள்.
பலத்த காற்று லண்டனை கோபத்துடன் தாக்கியது. “காற்றின் கடவுளான ‘வாயு’ பூமியில் உள்ள சுயநலவாதிகள் மீது கோபம் கொள்கிறார். மழையைப் பாருங்கள். அது என் தந்தையை நினைத்து அழுகிறது. இயற்கைக்கு எதிரான கொடுமையை நிறுத்த அது நம்மை எச்சரிக்கும் இடி முழக்கத்தைக் கேளுங்கள்’. கிளியோ பல ஆண்டுகளுக்கும் மேலாக அவளைப் பார்க்காத தனது தந்தையை நினைத்து அழுதாள்.
‘போன தடவை இங்கு வந்தபோது என் தந்தை என்னிடம் கோபமா இருந்தான்’ என்று ஸாராவிடமும் ஒலிவரிடமும் மென்மையான குரலில் சொன்னாள்.
கிளியோ தொடர்ந்தாள் ‘பாதாள அறையிலுள்ள பெட்டிகளில் உள்ள எதையும் திறந்து தொடக்கூடாது என்று அவரது தாத்தா எனது தந்தையிடம் அவரின் சிறுவயதில் கூறினாராம். பெட்டிகளிலிருந்து தன்னை விலக்கி வைப்பதற்காக தனது தாத்தா தன்னை பயமுறுத்துகிறார் என்று எனது தந்தை நினைத்தாராம். அதனால் அவர் அதன் அருகில் சென்றதே இல்லையாம். ஆனால் ஒருநாள் தற்செயலாக ஏதோ ஒரு விடயமாக நிலவறைக்குச் சென்றபோது ’என்னைத் திறந்து பாரேன்’ என்ற குரல் கேட்டது போலிருந்ததாம். அவருக்கு அப்போது ஆறு வயதாக இருக்கலாமாம். குழந்தை மனம் ஏதோ உற்சாகத்தில் பெட்டியிடம் செல்ல அவசரமாக அங்கு வந்த அவரது தாத்த எனது அப்பாவை இழுத்துக்கொண்டு மேலே வந்தாராம். அது நடந்த சில மாதங்களில் எனது தந்தையின் பெற்றோர் எஜிப்த் நாட்டுக்குக் கப்பலில் சென்றபோது கப்பல் விபத்துக்குள்ளாகி இறந்து விட்டார்களாம’.
‘அதே ஆறுவயதான காலகட்டத்தில் என் சகோதரர்கள் அடித்தளத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவர்கள் சாவியைக் கண்டுபிடித்து ஒரு பெரிய பெட்டியைத் திறந்தனர். பெரிய பெட்டியில் சில பொருட்களை வைத்து விளையாடினார்களாம். அடுத்த நாள் அவர்கள் என்தாயுடன் ஒரு விபத்தில் இறந்துவிட்டனர்.இதைத்தான் அவர் என்னிடம் சொன்னார்” என்றாள்.
கிளியோ தொடர்ந்தாள் ‘நான் வீட்டில் ஒலிவருடன் இருந்தபோது நான் பாதாள அறைக்குச் சென்றேன். ஒரு சிறிய எலி சுற்றி ஓடிக்கொண்டிருந்தது. எலியைத் துரத்திக் கொண்டிருந்த போது சாவியைக் கண்டுபிடித்து பெரிய பெட்டியைத் திறந்து பட்டுத் துணியில் சுற்றியிருந்த நாணயத்தையும் மற்றப் பொருட்களையும் பார்த்தேன். ஆனால் நான் வேறு எதையும் தொடவில்லை. சாவியை கண்ட இடத்திலேயே வைத்தேன்.
அப்பா லண்டன் வந்தபோது நாங்கள் பார்க்குக்குப் போயிருந்தபோது அவரிடம் இதைப் பற்றிச் சொன்னேன். அவர் என் மீது மிகவும் கோபமாக இருந்தார். உண்மையைச் சொல்லியும் அப்பா என்னைக் கோபித்தது பற்றி வருத்தப்பட்டேன். அண்மையில் கோவிட் வந்து வீட்டோடு அடைபட்டுக் கிடந்தபோது பாதாள அறைக்குச் சென்று அதை மீண்டும் திறந்தேன். ஆனால் ஏனோ என் அப்பாவின் நினைவு வந்ததால் பலவற்றை என்னால் தொட முடியவில்லை. ஆனால் கிளியோபாட்ரா பக்கத்தில் நிற்பதாக உணர்ந்தேன். நான் பெட்டியைத் திறந்ததால்தான் எனது தந்தை இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். நான் நேசிக்கும் நபர்கள் இறந்துவிட்டார்கள். ஏனென்றால் நான் அவர்களுக்கு துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவந்தேன்’. அவள் தொடர்ந்தாள்.
கிளியோபாட்ரா வாழ்ந்தகாலத்தில் அவளுக்கு நெருக்கமான பலர் மரணமடைந்தார்கள். அதுதான் எனக்கும் நடக்கிறது. என்னில் அன்புள்ள பலர்; இறந்து விட்டார்கள்.பல்கலைக் கழகம் சென்ற போது நான் ஒரு அற்புத அழகியாக இருப்பதாகப் பல இளைஞர்கள் என்னைச் சுற்றியலைந்து சொன்னார்கள். நான் அவர்களில் அனுதாபப் பட்டேன்.அவர்கள் என்னை நெருங்க நான் விடவில்லை. அவர்கள் மிகவும் புத்திசாலியான மாணவர்கள. உலக நன்மைக்கு நிறையச் செய்யும் திறமையுள்ளவர்கள்;. கிளியோபாட்ராவுடன் உறவு கொண்ட யூலியஸ் சீசரும் மார்க் அண்டனியும் அவளின் அன்புக் குழந்தைகளும் கொலை செய்யப் பட்டதுபோல் என்னை விரும்பும் யாரும் அநியாயமாக இறப்பதை நான் விரும்பவில்லை.ந
நான் உங்களுக்கும் ஏதோ ஒரு பிரச்சினையைத் தருவேனோ என்ற பயம் எனக்குண்டு. ஆனால் அப்படி நடக்காமலிருக்கப் பிரார்த்திக்கிறேன்.’ கிளியோ கட்டுப்படுத்த முடியாமல் அழுதாள்.
“ஓ என் அன்பே உன்னை நீயே குறை கூறாதே சாபங்கள் மற்றும் அற்புத மாயங்களையும் நம்பாதே. உங்கள் அம்மாவுக்கு ஒரு கார் விபத்து ஏற்பட்டதுஃ துரதிர்ஷ்டவசமாக தனது சொந்த வாழ்க்கை மற்றும் அவர்கள் தத்தெடுத்த மகன்களின் வாழ்க்கையையும் இழந்தார். அதற்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ஸாரா கிளியோவுடன் சேர்ந்தழுதாள்.
கிளியோ அறையை விட்டு வெளியே வந்தபோது அவள் முற்றிலும் வித்தியாசமாக இருந்தாள். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மெலிந்து காணப்படும். அவள் மிகவும் சோகமாக காணப்பட்டாள். “மார்க் அந்தோணி தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு கிளியோபாட்ரா இறந்துவிட்டாள்” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.
‘ஆனால் ஒக்டேவியனின் சக்தியை அழிக்கும் வரை இந்த கிளியோ இறக்க மாட்டாள். பிரம்மாண்டமான இயற்கையின் சக்தியைத் தொடர்ந்து அவமதிக்கும் அவனைத் தடுத்து நிறுத்த வேண்டும். எனது உயிர் போவதாக இருந்தாலும் இந்த உலக பாதுகாப்புக்காக ஒக்டேவியன் போன்ற தலைவர்களை எதிர்த்துப் போராடும் சக்திகளுடன் சேர்ந்து கொள்வேன்.பெண் சக்தி அபரிமிதமானது. ஆனால் அரசியல் சதியாளர்கள்; தங்கள் ஒற்றர்களால் எங்களுக்கு ஆபத்துகளையுண்டாக்கலாம்.’
இவற்றைச் சொல்லும்போது கிளியோ குரல் வலுவாகவும் உக்கிரமாகவும் இருந்தது. அவள் முகம் சிவந்திருந்தது. அவளுடைய கண்கள் ஒரு ஜோடி நெருப்புப் பந்துகளைப் போல இருந்தன. அவளுக்குப் புத்தி பேதலித்து விட்டதா? ஸாரா யோசித்தாள். இப்போது கிளியோ அவளின்; அறையில் இல்லை.
கிளியோ ஒக்டேவியனைத் தேடுகிறாளா?
எங்கே அவள் போய்விட்டாள்! எங்கே? தேடுவது? என்ன செய்வது? ‘ஸாரா பயத்துடன் யோசிக்கிறாள்.
(யாவும் கற்பனை)
– லண்டன் ஆகஸ்ட் 2020