“மறக்காம நம்ம நர்த்தன விநாயகரப் பாத்துட்டு வாங்க” என்று கிளம்பும்போதே மனைவி ஞாபகப்படுத்தியிருந்தாள்.
“நம்ம விநாயகரையாவது, மறக்கறதாவது! பொள்ளாச்சி போய் இறங்கினதும், முதல் வேலையே அவரைப் போய் பாக்கறதுதான். அதுக்கப்புறம்தான் கல்யாண வீட்டுக்கு போவேன்” என்றிருந்தார் அமுதவாணன்.
பொள்ளாச்சி, வடுகபாளையத்தில் இவர்களுக்கு சொந்த வீடு இருந்தது. அதன் வாசல் பகுதியில் ஓர் ஓரமாக சிறு மேடை அமைத்து, அதில் நர்த்தன விநாயகர் சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். அமுதவாணனுக்கு விநாயகர் இஷ்ட தெய்வம். அதனால்தான் ஊருக்கு நாலு விநாயகர் கோவில்கள் என இருந்தாலும், தனது வீட்டு வளாகத்திலேயே நர்த்தன விநாயகரைப் பிரதிஷ்டை செய்து, செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில் பூஜை செய்ய அர்ச்சகர் ஒருவரையும் சம்பளம் கொடுத்து நியமித்திருந்தார்.
மூத்த மகன் கனடாவில் குடியுரிமை பெற்று அங்கே குடும்பத்தோடு இருக்கிறான். இளைய மகன் பெங்களூருவில் செட்டில் ஆகிவிட்டான். வயதான காலத்தில் இனியும் எதற்கு இவரும் மனைவியும் பொள்ளாச்சியில் தனியே இருக்க வேண்டும் என்று அந்த வீட்டை விற்றுவிட்டு, பெங்களூருக்குச் சென்று இளைய மகனோடு தங்கிவிட்டனர்.
வீட்டை வாங்கியவர் ஒரு கிறிஸ்தவர். அதனால் வீடு விற்கும் பேச்சுவார்த்தையின்போதே, “விநாயகர் சிலையை இடிச்சுடாதீங்க” என்று அமுதவாணன் கேட்டுக்கொண்டார்.
வீட்டை வாங்கியவரான செலின் ஜோசப், “என்னங்க சார் இப்படி சொல்லிட்டீங்க! எந்த மதமானாலும் சரி; கடவுள் சிலையையோ, வழிபாட்டுத் தலங்களையோ நாங்க இடிக்க மாட்டோம். மற்ற மதங்களையும் மதிக்கறவங்க நாங்க” என்றார்.
“இல்ல,… உங்க மதத்துல பலரும் எங்க கடவுள்கள சாத்தான்னும், எங்க கோவில்களை சாத்தானோட கூடாரம்னும் பழிக்கறது அந்தக் காலத்துல இருந்தே வழக்கமாச்சே! ஸ்வாமி விவேகானந்தரே இதைப் பத்திப் பேசியிருக்காரே! சுமார் ரெண்டு வருசம் முன்னாடி, பிரபலமான உங்க மதப் பிரச்சாரகர் ஒருத்தர் கூட, ‘தமிழ்நாட்டுல எங்க பார்த்தாலும் பெரிய பெரிய இந்துக் கோயில்கள் அதிகமாயிடுச்சு. அது சாத்தானோட வேலை’ன்னு மத துவேஷமாப் பேசி, பெரிய சர்ச்சையாகி, கேஸ் கூட ஆச்சே…! அதனாலதான் முன்கூட்டியே கேட்டுக்கறேன்.”
“இந்து மதத்துல பல பிரிவுகள், ஜாதிகள் இருக்கற மாதிரியே, எங்க மதத்துலயும் பல பிரிவுகள் இருக்கறது உங்களுக்கே தெரியும். நாங்க கத்தோலிக்கர்கள். எங்க பிரிவுல மத துவேஷம் கிடையாது. நாங்க இந்துக்கள் ஏரியாவுல தெருத் தெருவா, வீடு வீடாப் போயி மதப் பிரச்சாரம் செய்யறதும் இல்லை. விரும்பி வந்தா மத மாற்றம் செய்வாங்க; அவ்வளவுதான்! அது மட்டுமல்ல; எங்க பிரிவுல, இந்து மதப் பெண்கள் மாதிரி பொட்டு, பூ வெச்சுக்கறதும் உண்டு. இதை எதுக்கு சொல்றேன்னா,… நாங்க நல்லிணக்கவாதிகள்ங்கறத உங்களுக்குத் தெரியப்படுத்தறதுக்குத்தான்.”
“நானும் அதைப் பாத்திருக்கறேன். இருந்தாலும், ஒரு சந்தேகம். வீட்டு வாசல்லயே வேற்று மதக் கடவுள் சிலை இருக்கறது உங்களுக்கு இடைஞ்சலா இருக்காதா? உங்க மதத்தவங்க எதிர்க்க மாட்டாங்களா?”
“வீட்டுக்குள்ள வெச்சிருந்தாத்தான் எங்க மத நம்பிக்கைக்கு விரோதமா இருக்கும். வெளிய இருந்தாப் பிரச்சனை இல்லை. எங்க மத்தவங்க ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. இந்துக்கள் மதம் மாறாமலேயே எங்க சர்ச்சுக்கு வர்றாங்களே,… அது மாதிரிதான்.”
அதைக்கேட்டு இவருக்குத் திருப்தி ஆயிற்று.
வீடு விற்கப்பட்டதும், “அந்த விநாயகருக்குப் பூஜை செய்ய ஒரு அர்ச்சகரை நியமிச்சிருக்கறோம். எப்பவும் மாதிரி அவர் வந்து பூஜை பண்ணிட்டுப் போறதுக்கு நீங்க அனுமதிக்கணும். அர்ச்சனை சம்பளத்தை நாங்க மாசா மாசம் அவரோட அக்கௌண்டுக்கு அனுப்பிடுவோம். நீங்க பூஜைக்கு அனுமதிச்சா மட்டும் போதும்” என்று கேட்டுக்கொண்டார்.
“அதுக்கென்ன,… தாராளமா வந்து பண்ணிக்கட்டும். அவருக்கு என்ன ஹெல்ப் வேணாலும் பண்றோம். அது மட்டுமில்ல; அவருக்கான சம்பளத்தையும் நானே கொடுத்துடறேன். எங்களால முடிஞ்ச ஒரு தெய்வ காரியமா இருக்கட்டும்” என செலின் ஜோசப் சொல்லவும், அமுதவாணன் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கொண்டார்.
“உங்களுக்குப் பரந்த மனுசுங்க” என்று பாராட்டவும் செய்தார்.
“எங்க ஊர்ல சர்ச் கட்டறதுக்கு ஒரு இந்துதான் இடம் கொடுத்தார். எத்தனையோ இஸ்லாமியர்கள் லட்சக் கணக்குல நன்கொடை கொடுத்தாங்க. அதை ஒப்பிடும்போது இது சாதாரணமான விஷயம் சார்” என்றார் செலின்.
பெங்களூரு சென்ற பிறகு அவ்வப்போது இவர் அர்ச்சகரையும், செலினையும் அலைபேசியில் அழைத்து, நர்த்தன விநாயகருக்கு பூஜை நடந்து வருவதைப் பற்றி உறுதிப்படுத்திக்கொண்டிருந்தார். கனடாவில் இருக்கும் பெரிய மகன், அங்கே வந்து அவர்களோடு சிறிது காலமாவது இருக்கும்படி வற்புறுத்தி அழைத்துக்கொண்டே இருந்தான். அதற்காகச் சென்ற அமுதவாணனும் மனைவியும் தாய்நாடு திரும்ப ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது.
அங்கே சென்றதிலிருந்து இவரது பழைய எண் உபயோகத்தில் இல்லை. அலைபேசியில் பழுது ஏற்பட்டு, சேமிப்பு எண்கள் அழிந்துவிட்டதால் செலின் மற்றும் அர்ச்சகரைத் தொடர்பு கொள்ளவும் இயலவில்லை.
தாய் நாடு திரும்பி இரு மாதங்களுக்குப் பிறகு, இப்போது பொள்ளாச்சியில் நண்பர் வீட்டுத் திருமணம். இது நண்பரின் மூன்றாவது மகன் திருமணம்தான். அதனால் இதற்காக பெங்களூருவில் இருந்து வந்தாக வேண்டும் என்று அவ்வளவு முக்கியத்துவம் ஒன்றுமில்லை. இருப்பினும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சொந்த ஊர், சொந்தங்கள், நட்புகள் ஆகியவற்றையும் பார்ப்பதோடு, நர்த்தன விநாயகரையும் தரிசித்துவிட்டுச் செல்லலாமே என்பதற்காகவே வந்திருந்தார்.
பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இறங்கியதும் ஓர் ஆட்டோ பிடித்து, காதி கடையில் விநாயகருக்கு அரை டஜன் துண்டு, பூஜை சாதனக் கடையில் பூஜைப் பொருட்கள், பூக் கடையில் அருகம்புல் மாலை, ரோஜா மாலை ஆகியவற்றை வாங்கிக்கொண்டு வடுகபாளையத்தை அடைந்தார்.
தெரு முக்குத் திரும்பும்போது, ‘கிறிஸ்தவ விநாயகர் கோவிலுக்கு செல்லும் வழி’ என்று அம்புக்குறி காட்டும் பெயர்ப் பலகை தட்டுப்பட்டு கவனத்தை ஈர்த்தது.
“என்னப்பா இது,… கிறிஸ்தவ விநாயகர் கோவில்னு போட்டிருக்குது?! விநோதமா இருக்கே…!” என்று ஓட்டுநரிடம் சொன்னார்.
“நானும் அதைத்தான் சார் யோசிச்சுட்டிருக்கறேன். இந்த ஏரியாவுல மெயின் ரோட்டுல வந்திருக்கறேன். வேற சில வீதிகளுக்கும் சவாரி போயிருக்கறேன். இந்த வீதிக்கு வந்ததில்ல. கிறிஸ்தவ விநாயகர்னா,… கிறிஸ்துவ மதத்துலயும் விநாயகர் இருக்கறாரா? இல்ல,… விநாயகர், கிறிஸ்தவ மதத்துக்கு கன்வெர்ட் ஆகிட்டாரா?” என்று கேட்டு அவர் சன்னமாக நகைத்துக்கொண்டார்.
அமுதவாணனின் முன்னாள் வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்தி இறங்கியதும், பேராச்சரியம். காம்பௌண்ட் சுவர் மீது, ‘கிறிஸ்துவ விநாயகர் என்கிற நர்த்தன விநாயகர் கோவில்’ என்ற பெயர்ப் பலகை இருந்தது.
“என்னங் சார்,… நீங்களே இங்கதான் வந்திருக்கறீங்க? அப்பறம் பேர் தெரியாத மாதிரிக் கேக்கறீங்களே…!” என்றார் ஓட்டுனர்.
“இல்லப்பா,… இது மொதல்ல எங்க வீடுதான். அதுல நர்த்தன விநாயகர் சிலையை வெச்சு வழிபட்டுட்டிருந்தோம். வீட்டை வாங்கினவரு ஒரு கிறிஸ்டின். அதனால அப்படி பேரு ஆயிடுச்சாட்ட இருக்குது” என்றபடி பயணக் கட்டணத்தைக் கொடுத்துவிட்டு, பயணப் பை, பூஜை சாதனங்கள் மற்றும் மாலைகள் சகிதம், கேட்டைத் திறந்து உள்ளே சென்றார்.
அங்கே இன்னும் பெரிய ஆச்சரியம். சாதாரண மேடை மீது நின்றிருந்த நர்த்தன விநாயகர், இப்போது ஆளளவு உயரமுள்ள அழகிய சிறு கோவிலுக்குள் நின்றுகொண்டிருந்தார். ஆவலோடு விரைந்து சென்று சுமைகளை இறக்கி வைத்துவிட்டு, கோவிலைப் பார்வையிட்டுக்கொண்டிருக்கையில், கேட் திறந்த சத்தம் கேட்டு வந்த செலின் ஜோசப்பின் முகம் ஜன்னலில் முளைத்தது. வந்திருப்பது இவரெனக் கண்டதும் அம் முகம் விரிந்து மலர்ந்தது.
“அடடே,… அமுதவாணன் சாரா…!? வாங்க சார்,… வாங்க, வாங்க!” அங்கிருந்தே வரவேற்றபடி வந்தார்.
“என்ன சார்,… ஒரு வருஷமா உங்க ஃபோனே வரல? கூப்பிட்டுப் பாத்தா, அந்த எண் உபயோகத்தில் இல்லைன்னு தகவல் வந்துச்சு. என்ன ஆச்சு? உடம்புக்கு ஏதும் சரி இல்லாம இருந்தீங்களா?” கரிசனத்தோடு விசாரித்தார்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லைங்க” என்றவர் விவரம் தெரிவித்துவிட்டு, “என்னங் சார்,… கோவில் கட்டி இருக்குது! கிறிஸ்தவ விநாயகர்னு பேரு வேற!?” என்று கேட்டார்.
“விநாயகர் வெயில்லயும், மழைலயும் நிக்கறாரே,… அவருக்கு ஒரு கோவில் கட்டிடலாமேன்னு தோணுச்சு. உங்ககிட்ட சொல்லிட்டுச் செய்யலாம்னு பாத்தா, போன் தொடர்பு இல்லாததுனால கான்டாக்ட் பண்ண முடியல. ‘நல்ல காரியம்தானே! அவர் என்ன வேண்டாம்கவா போறார்!’ன்னு அர்ச்சகரும் ஊக்கம் கொடுத்ததுனால, அவரோட வழிகாட்டுதல்படி, ஆகம முறையா கோவில் கட்டி, கும்பாபிஷேகமும் பண்ணினோம். அதுக்கு வந்த பக்தர்கள் எல்லாம், ‘கிறிஸ்தவர் வீட்டுல விநாயகர் கோவிலா? அதுவும் அவரே கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தறாரா?’ன்னு ஆச்சரியப்பட்டு, நம்ம விநாயகருக்கு கிறிஸ்துவ விநாயகர்னே பேர் வெச்சுட்டாங்க. அதுக்கப்புறம் இவரு இப்போ நம்ம ஏரியாவுயும், அக்கம் பக்கத்து ஏரியாவுலயும் பாப்புலராகிட்டார். தினமும் காலைல, சாயந்திரம் பூஜை நடக்குது. இருபது – முப்பது லேடிஸ், வீட்டுல இருக்கற ஆம்பளைங்க எல்லாரும், குழந்தைகளைக் கூட்டிட்டு வருவாங்க” என்றார்.
“உண்மையிலேயே நீங்க செஞ்சது பெரிய காரியம்தான். நாங்க வழிபட்டுட்டு இருந்த வரைக்கும் வீட்டு விநாயகரா இருந்தவரு, இப்ப ஊர் விநாயகரா ஆனது மட்டுமல்லாம, மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக் கூட ஆயிட்டார்னா, அது உங்களாலதான். உங்களை எப்படிப் பாராட்டறதுன்னே தெரியல.” அகமும் முகமும் மலர்ந்தார் அமுதவாணன்.
“வேளாங்கண்ணி மாதா கோவில், நாகூர் தர்கா, சபரிமலை ஐயப்பன், ஷீர்டி சாய்பாபான்னு மத நல்லிணக்கத்துக்கு எத்தனையோ வழிபாட்டுத் தலங்களும், மகான்களும் அடையாளமா இருக்கறாங்க. அந்த வழில நானும் ஒரு துரும்பா இருக்க முயற்சி பண்ணுனேன்; அவ்வளவுதான்” என்றார் செலின், அடக்கமாக.
“நீங்க சொல்றது சத்தியமான வார்த்தை” என்றவர், “அர்ச்சகர் நம்பரையும் மிஸ் பண்ணிட்டேன். குடுங்களேன்,… போன் பண்ணி வரச் சொல்லலாம்” என்றார்.
“இப்ப மணி நாலே கால் ஆச்சு. கொஞ்ச நேரத்துல சாயந்திர பூஜைக்கு அவரே வந்துடுவார். பக்தர்களும் வருவாங்க. அதோட சேத்து உங்களுக்கும் பூஜை பண்ணிக்கலாமே. அதுக்குள்ள நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து, காபி – டீ ஏதாவது சாப்பிடலாம், வாங்க” என வீட்டுக்கு அழைத்தார்.
“அப்படியே ஆகட்டும். எதுக்கும், பூஜை அப்புறம் செய்யறதா இருந்தாலும், விநாயகரைக் கும்பிட்டுட்டு வந்துடறேன்” என்ற அமுதவாணன், செருப்புகளைக் கழற்றிவிட்டு, விநாயகருக்கு முன்னிலையில் நின்று கண் மூடித் தொழுதார்.
“ஓம் கிறிஸ்துவ விநாயகா ஸ்தோத்திரம்! ஆமென்!”
– தகவு (இணைய இதழ்), மார்ச் 2020.
– ஹைனுன் பீவி நினைவு சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றது.