கிராதார்ஜுனீயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 29, 2022
பார்வையிட்டோர்: 5,339 
 
 

முதல் பாகம் | பாகம் இரண்டு

(மகாபாரதத்தை எழுதிய வியாஸ பகவான் வனபர்வா பகுதியில் சிறுகதையாக எழுதியுள்ளார் வேடன் உருவத்தில்வந்த சிவபெருமானுக்கும் வில் விஜயனாகிய அர்ஜுனனுக்கும் இடையே நடந்த யுத்தம் பற்றியது. இந்த (கிராத = வேடன்) கதையினை கிராதார்ஜுனீயம் என்ற ஒரு பெரும் காவியமாக எழுதியவர் மிகவும் புகழ் பெற்ற கவி பாரவி ஆவார். இந்த காவியம் சமஸ்கிருத மொழியில் உள்ள ஐந்து பெரும் காவியங்களில் ஒன்று ஆகும். கிராதார்ஜுனீயம் காவியத்தில் அநேக அரச நீதிகள் மற்றும் மாண்புகள் உள்ளன. கவி பாரவியின் ஒப்பற்ற, உன்னத, மிகச்சிறந்த படைப்பு ஆகும். இந்த ஒரே ஒரு காவியத்தை மட்டுமே அவர் எழுதியுள்ளார். இதன் மூலம் பெரும் புகழ் அடைந்தவரானார்)

கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நடந்த யுத்தம் ஒரு முடிவிற்கு வந்தது. கௌரவர்கள் வெற்றி வாகை சூடினார்கள் பாண்டவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதனால் நியம அநுஸாரப் பிரகாரப் படி யதிஷ்டிரர் தன் தம்பிகளுடன் வனவாசம் செய்ய வேண்டி வந்தது.

பாண்டவர்கள் வனவாசிகளாக இருந்த பொழுது, யுதிஷ்டிரருக்கு நாட்டை ஆளும் துரியோதனன் பற்றியே சிந்தனையாக இருந்தது. துரியோதனன் நாட்டை எவ்விதம் அரசாள்கிறான் என்று அறிய மிகவும் ஆவல் கொண்டார். அதனால் ஆரண்யத்தில் வசிக்கும் வேடன் ஒருவனை அழைத்தார். தன்னுடைய எண்ணங்களைத் தெரிந்து கொள்வதற்காக அந்த வேடனை ஹஸ்தினாபுரம் சென்று உளவு அறிந்து வரும் படி அனுப்பினார்.

ஹஸ்தினாபுரம் சென்று துரியோதனனுடைய ராஜ்ய பரிபாலனம் எவ்வாறு உள்ளது என்பதனை வேவு பார்க்க தயாரான வேடுவனும் பிரம்மசாரியைப் போன்ற மாறு வேஷத்தில் ஹஸ்தினாபுரம் சென்றான்.

உளவறிந்து வனத்திற்கு திரும்பினான் வேடன். யுதிஷ்டிரரை முதலில் முகமன் கூறிப் போற்றி வணங்கினான். பிறகு தான் ஹஸ்தினாபுரமு சென்று அங்கு கண்ட முழு விஷயங்களைப் பற்றிச் சொல்லலானான்.

ஹஸ்தினாபுரி அரசனாக துரியோதனன் ராஜ சிம்ஹாசனத்தில் மகிழ்வாக அமர்ந்து விட்டான் அரசனாகி விட்டாலும் கூட பாண்டவர்களாகிய உங்கள் மீது பெரும் பயம் கொண்டவனாகவும் இருக்கிறான். துரியோதனன் நீதி தவறாமல் ராஜ்ய சாசனம் புரிந்து மிக நல்ல ஆட்சியை நடத்தி வருகிறான். அவன் தனது சேவகர்களை நண்பர்கள் போன்று அரவணைத்துச் செல்கிறான். தனது நண்பர்களை பந்துக்கள் போன்று பரிபாலனம் செய்கிறான். பந்துக்களை தனது எஜமானர்கள் போன்று கருதி கவனம் செலுத்துகிறான்.

நாட்டிலுள்ள தலைவர்களும் அரசன் துரியோதனனுடைய கட்டளைகளை தலைமேல் கொண்டு சிறந்த பணியாற்றுகின்றனர். ராஜ்யத்தில் எங்கும், எதுவும் யாவையும் மிகச் சிறப்பானதாக உள்ளன. நாட்டில் உள்ள ஒற்றர்களும் அரசன் துரியோதனனுக்கு மிகுந்த விசுவாசம் உடையவர்களாக இருக்கின்றனர். அவர்கள் அடுத்த நாட்டு அரசர்களுடைய விருத்தாந்தங்கள் பற்றியும் துரியோதனனிடம் வணங்கி தெரியப் படுத்துகிறார்கள். இவ்விதமாக துரியோதனன் மிகவும் சிறந்த அரசனாக பிரபல்யம் அடையவிருக்கிறான். அதனால் அரசன் துரியோதனனை எவ்விதம் வெற்றிக் கொள்ள இயலும் என்ற உபாயங்களை நீங்கள் ஆலோசித்து மிகவும் சிந்தித்து செயல் பட வேண்டும் “

இவ்விதமாக ஹஸ்தினாபுரம் சென்று துரியோதனனுடைய ஆட்சி நிலவரங்களைக் கண்டு ஒற்று அறிந்து வநுத வேடன் கூறினான்.இதனைக் கேட்டறிந்த யுதிஷ்டிரர் ஓற்றனுக்கு உகந்த பரிசுகளை அளித்து விடைகொடுத்து அனுப்பி வைத்தார்.

திரௌபதியிடமும், தனது தம்பி பீமனிடமும். ஒற்றன் கூறிய விஷயங்களைப் பற்றிக் கூறுகிறார் யுதிஷ்டிரர். அவரது பேச்சுக்களைக் கேட்ட திரௌபதி தனது கருத்துக்களைச் சொல்லலானாள்.

“ஹே! நாதா! எப்பொழுதும் புருஷர்கள் பெண்களின் எண்ணங்களுக்கோ, கருத்துக்களுக்கோ மதிப்புக் கொடுப்பது இல்லை. விருப்பங்களையும் பிரகடனம் படுத்துவதில்லை. இருந்தாலும் நான் எனது துயரங்கள், மனவலி யாவற்றையும் உங்களிடம் கூறுவதற்கு விழைகிறேன்.

நீங்கள், உங்கள் பத்தினிக்கு சமமாக கருதி பேணி வந்த ராஜ்யலக்ஷ்மியை இழந்து விட்டீர்கள்.இதோ, உங்கள் அருகில் இருக்கும் உங்கள் உன்பு தம்பி பீமனை எவ்விதம் இருக்கிறான் என்று பாருங்கள். பீமன் முன்பெல்லாம் அழகிய மென்மையான மஞ்சத்தில் துயில் கொள்பவனாக இருந்தான். ஆனால் தற்போதைய நிலை என்ன? பஞ்சணையின்றி கடுமையான கட்டாந்தரையில் படுத்து உறங்குகின்றான். அதுபோல அர்ஜுனனைப் பாருங்கள். முன்னொரு காலத்தில் தனது தோள்பலத்தினால் உத்திரப் பிரதேசத்தை வென்று குவியல் குவியலாகப் பொன்னும் மணியும் கொண்டுவந்தவன்.

அந்த அர்ஜுனனுடைய தற்போதைய நிலை என்ன? என்று பாருங்கள். மரவுரி தரித்து இந்த வனாந்ததரத்தில் மிகவும் கடுமையான வாழ்க்கையை அனுபவிக்கிறான். இதுபோலவே நகுல சகாதேவனும். மென்மையான உடல் படைத்த சுகுமாரர்களாகிய அவர்களின் நிலையைப் பார்த்தீர்களா? இவ்வனத்தில் கரடுமுரடான தரையில் படுத்து துயில்கின்றனர். இவ்விதமாக உங்கள் பேரன்புக்கு உரிய அருமை தம்பிகள் கஷ்டப்படுவது கண்டு உங்கள் மனம் வெதும்பவில்லையா?

எனக்கு இவைகளைப் பார்த்து அதிகமான துக்கம் ஏற்படுகிறது.நான் மிகுந்த துயரங்களை அனுபவிக்கிறேன் ஆகையினால் தர்மராஜரே! நீங்கள் இனிமேலும் பொறுமையாக இருத்தல் கூடாது. அமைதியை விட்டொழித்து வீறு கொண்டு எழுங்கள். நமது சத்ருக்களை அழித்து நாசம் செயுதல் வேண்டும்.

அமைதியாக, சாந்தமாக இருக்க வேண்டிய ஸ்வபாவ குணம் முனிவர்களுக்கு மட்டுமே உரித்தானது. அதே ஸ்வபாவம், சாந்த குணம் அரசர்களுக்குப் பொருந்தாது. யுத்தத்தில் வெற்றியடைய விரும்புபவர்களுக்கு சாந்த குணம் பொருந்தது ஆகும். அமைதியைக் கைவிடல் வேண்டும். யுத்தம் செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்தல் அவசியம் ஆகும்.”

மேறுகண்டபடி திரௌபதி யுதிஷ்டிரரிடம் தனது கருத்துக்களை வலிமையாக எடுத்துக் கூறலானாள்..

இத்துடன் கிராதார்ஜுனீயம் முதல் பாகம் முடிவுற்றது.

இரண்டாம் பாகம் தொடரும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *