கிடைக்காத ப்ரமோஷன்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 7, 2017
பார்வையிட்டோர்: 5,317 
 

என் பெயர் சேஷாத்ரி. எனக்கு கடந்த பத்து நாட்களாக மனசே சரியில்லை.

காரணம், நான் மிகவும் எதிர்பார்த்திருந்த ஜெனரல் மானேஜர் ப்ரமோஷன் எனக்கு கிடைக்கவில்லை. இனி எப்போதும் கிடைக்கப் போவதுமில்லை. கடந்த இருபது வருடங்களாக ஆக்ஸி நிறுவனத்திற்கு நேர்மையாக நான் உழைத்ததிற்கு இதுதான் எனக்கு கிடைத்த பரிசு.

நான் முதலில் ஆக்ஸியின் தலைமையகமான கல்கத்தாவில்தான் பணி புரிந்தேன். பிறகு அதன் சென்னையின் புதிதாக தொடங்கப்பட்ட கிளைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்தேன்.

அதன் சீஇஓ டெபாஷிஷ் முகர்ஜி, ஆக்ஸியில் வேலை பார்த்த சுகன்யாவை டாவடிச்சு கல்யாணம் பண்ணிக்கொண்ட சம்பவங்களை விலாவாரியாக ‘இரண்டு பேர்’ கதையில் படித்திருப்பீர்கள். கல்யாணம் அவர் பர்சனல் விஷயம்.

ஆனால் இப்ப என்னோட பிரச்சினை, சுகன்யாவின் பெரியப்பா மகன் ரித்தீஷ், எனக்கு கிடைக்கவேண்டிய ஜெனரல் மானேஜர் பதவிக்கு வருகிறான் என்பதுதான். அடுத்தவாரம் ஜாயின் பண்ணுகிறான்.

இதில் எனக்கு இரண்டு பிரச்சினைகள். ஒன்று நான் எதிர்பார்த்து ஆசைப்பட்ட ப்ரமோஷன் எனக்கு கிடைக்கல. ரெண்டாவது என்னைவிட இருபதுவயது சின்னவனான ரித்தீஷ், சி.இ.ஓவின் உறவுக்காரன் என்கிற ஒரே காரணத்துக்காக, நான் ஆசைப்பட்ட இடத்திலேயே, அதுவும் என்னோட மேலதிகாரியா வந்து உட்காரப்போவது. இதை நினைக்க நினைக்க என்னால தாங்கிக்கவே முடியல. இது எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்.

ரிசிக்னேஷன் லெட்டர டெபாஷிஷ் மூஞ்சியில விட்டு எறியலாம்னா, அப்புறம் சோத்துக்கு நான் சிங்கியடிக்கணும். இப்பவே எனக்கு நாற்பத்திஎட்டு வயசு. இருபது வருடங்களா வேலை பாக்கிற கம்பெனியில நேத்திக்கு வந்த பொடிப் பயலுக்கு கீழே வேலை பார்க்கறது எனக்கு ஈகோ ப்ராப்ளம். சரி, ராஜினாமா பண்ணலாம்னு பார்த்தா அது என்னோட சர்வைவல் ப்ராப்ளம்.

டெபாஷிஷ் முகர்ஜிகிட்ட போய் சண்டை போடலாம்னா, அவன்தான் என்னைக்கூப்பிட்டு, “மிஸ்டர் சேஷ், உங்களோட அப்ரைசல் நல்லபடியாகத்தான் இருக்கு. ஆனா எதிர்பாராம சுகன்யாவிடமிருந்து எனக்கு ஏகப்பட்ட பிரஷர். அதுனால ஜிஎம் போஸ்டுக்கு உங்கள ப்ரமோட் பண்ண முடியல. பட் ஜிஎம் சாலரி ரேஞ்சுக்கு உங்கள கொண்டுவரச்சொல்லி ஹெச் ஆர் டேவிட்டுக்கிட்ட சொல்லிட்டேன்…

ப்ளீஸ் இத பெரிசு பண்ணாம கோஆப்பரேட் பண்ணுங்க. அதுதவிர உங்களுக்கு தனியா ஒருதொகைய வவுச்சர் பேமென்ட்ல நான் தருகிறேன்.” என்றான்.

“அவன் சின்னப்பையன் டெபாஷிஷ், அவன்கிட்டபோய் நான் எப்படி ரிப்போர்ட் பண்றது…”

“நானும்தான் உங்களைவிட சின்னவன். இப்ப என்கிட்ட நீங்க ரிப்போர்ட் பண்ணலையா?”

“நான் இருபது வருஷத்துக்கு முன்னால இங்க சேரும்போதே நீங்க எனக்கு உயரதிகாரியா இருந்தீங்க. உங்களுக்கு என் வேதனை புரியாது. ஜிஎம் ரேஞ்சுக்கு பணம் தரேன், வவுச்சர் பேமன்ட் அது இதுன்னு சொல்லி என்கிட்ட சொல்றதுக்கு இது என்ன சம்பளப் பிரச்சினையா? என்னோட தன் மானப் பிரச்சினை. நான் உட்கார வேண்டிய சீட்ல நேத்திக்குவந்த ஒரு சின்னப்பையன், அதுவும் உங்களுடைய சொந்தக்காரன் வந்து என்னையே கேள்வி கேட்கப்போகிற எரியும் பிரச்சினை. என்னோட இருபதுவருட உழைப்பு வீண்.”

சரலென வெளியே வந்துவிட்டேன். நீங்களே சொல்லுங்க எனக்கு எப்படி இருக்கும்?

டெபாஷிஷுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்கிற வெறியில், ஒருவாரம் முன்பு ஆக்ஸிக்கு போட்டியாக வந்திருக்கும் ப்யூர் ஏர் மல்டிநேஷனல் கம்பெனிக்கு ஜிஎம் போஸ்டுக்கு அப்ளை பண்ணியிருந்தேன். அதோட எம்.டி. பாஸ்கரன், ஜி.எம்.போஸ்ட்டுககு என்னை நேரில் பார்க்க விரும்புவதாக, அவருடைய செக்ரட்டரி நித்யா என்பவள் போன் பண்ணிச் சொன்னாள். எனக்கு இந்தச் செய்தி ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்தது.

இன்று மாலை ஏழுமணிக்கு லீமெரிடியன் ஹோட்டலில் சந்திப்பதாக ஏற்பாடு. நான் ஆறரை மணிக்கே ப்ளேசர், டையில் மிக நேர்த்தியாக உடையணிந்துகொண்டு, லீமெரிடியன் சென்று லாபியில் காத்திருந்தேன்.

இந்த வேலை கிடைச்சா இன்னிக்கு நைட்டே ஈ-மெயில் அனுப்பி ஆக்ஸி வேலைய விட்டுரலாம்….நாளை அந்த ரித்தீஷ் வேலையில் சேரும்போது அவன் மூஞ்சில முழிக்கவேண்டாம். டெபாஷிஷ் ஷாக் ஆயிடுவான்.

சரியாக ஏழு மணிக்கு ஒரு அழகிய யுவதி ஒயிலாக என்னிடம் வந்து, “ஆர் யூ மிஸ்டர் சேஷாத்ரி?” என்றாள். “யெஸ்” என்றவுடன், “ஐயாம் நித்யா.” கைநீட்டி என் கையைப் பற்றிக் குலுக்கினாள். நட்புடன் சிரித்தாள். என்னை அவளுடன் வரச்சொன்னாள். ‘இவளுக்காகவே ப்யூர் ஏர்ல சேரலாம் போலிருக்கே’ என்று நினைத்துக்கொண்டு, அவள் பின்னால் குட்டிபோட்ட பூனை மாதிரி சென்றேன்.

அரை இருட்டில் ஒரு பார் இருந்தது. அதற்குள் கூட்டிச் சென்றாள். அதன் ஒரு ஓரத்தில் இருக்கும் டேபிளில் அமர்ந்திருந்தார் பாஸ்கரன். நித்யா என்னை அறிமுகப் படுத்தியதும், என் கையைக் குலுக்கி, “வாட் வில் யு ஹாவ்?” என்றார்.

நான் வாழ்க்கையில் இதுவரை குடித்ததில்லை. “ஐ வில் ஹாவ் எனி ஜூஸ் தட் யூ ஆர்டர்” என்றேன். நித்யா என்னருகில் அமர்ந்துகொண்டாள்.

அவருக்கும் நித்யாவுக்கும் ப்ளடிமேரி ஆர்டர் செய்துவிட்டு, எனக்கு ஒரு ஆரஞ்சு ஜூஸ் சொன்னார். இருவரும் இண்டியாகிங்க்ஸ் பற்ற வைத்துக் கொண்டனர். மஞ்சள் சிவப்பில் கொண்டு வைக்கப்பட்ட ப்ளடிமேரியை இருவரும் உறிஞ்ச ஆரம்பித்தனர்.

நான் கல்கத்தாவில் இருந்தபோது, சில ஹிந்திப் படங்களில் ஹெலன் குடிப்பதையும், புகைப்பதையும் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒருபெண் மது அருந்துவதையும், சிகரெட் புகைப்பதையும் இன்றுதான் நான் நேரில் பார்க்கிறேன்.

விஷயத்துக்கு வராமல் இருவரும் என்னிடம் ஆக்ஸியைப்பற்றி நிறைய கேட்டறிந்தனர். சற்று நேரம் கழித்து பாஸ்கரன், “மிஸ்டர் சேஷாத்ரி ஐயம் ஹாப்பி. யுவர் மன்த்லி பேமென்ட் வில் பி டூ லாக்ஸ் ப்ளஸ் ஒன் கார் பார் யுவர் எக்ஸ்க்ளூசிவ் யூஸ்” என்று சொல்லிவிட்டு, ப்ளடிமேரியை மறுபடியும் மெதுவாக உறிஞ்சினார்.

எனக்கு பயங்கர சந்தோஷம்.

“சார், ஒன்ஸ் ஐ கெட் தி ஆர்டர், ஐ வில் ரிசைன் ப்ரம் ஆக்ஸி.”

“நோ…நோ, டோன்ட் ரிசைன். யு ஒன்லி பாஸ் ஆன் த வைட்டல் இன்பர்மேஷன் டு நித்யா….மெயின்லி பிராடக்ட் இன்போ, மார்க்கெட்டிங் ஸ்ராட்டஜி எக்செட்ரா. நித்யா வில் டிஸ்கஸ் வித் யூ இன் டீடெய்ல். பாட்டம்லைன் இஸ் யு வில் ஒர்க் பார் அஸ் ப்ரம் ஆக்ஸி.”

எனக்கு முகம் இருண்டது.

நித்யா தனது ஒருபக்க மார்பை தாராளமாக திறந்து காட்டியபடி என்னை உரசிக்கொண்டு மெல்லியகுரலில், “டோன்ட் ஒர்ரி மிஸ்டர் சேஷாத்ரி….ஐ வில் கைட் யு….திஸ் இஸ் நத்திங் பட் இண்டஸ்ரியல் எஸ்பியனேஜ்.” என்றாள்.

எனக்கு நன்றாகப் புரிந்தது. ‘அடப்பாவிங்களா…வேறு வேலைதேடி வந்தால் என்னை மாமா வேலைக்கு கூப்பிடுகிறார்களே. ச்ச்சே எவ்வளவு கேவலமான பிழைப்பு..’

எழுந்துநின்று, “ஐயாம் நாட் இன்ட்ரஸ்ட்டட்” என்று சொல்லிவிட்டு கிளம்ப எத்தனித்தபோது நித்யா “மிஸ்டர் சேஷாத்ரி யு ஆர் ஸ்கேர்ட் அண்ட் கன்ப்யூஸ்ட்” என்றாள்.

“நோ, ஐயம் நாட் கன்ப்யூஸ்ட். யு போத் ஆர் ட்ரங்க் அண்ட் லாஸ்ட் பாலன்ஸ்.”

அந்த இடத்தைவிட்டு அகன்றேன்.

‘தேர்தலின்போது ஒரு ஓட்டுக்கு இவ்வளவு என்று பாமரர்களை அரசியல்வாதிகள் விலை பேசுவது போன்று, என்னையும் ஒரு கேனப்பயலாக நினைத்து விட்டார்களே! எவ்வளவு கேவலம்!’ வேதனையுடன் ஹோட்டலைவிட்டு வெளியேறினேன்.

வாழ்க்கையில் நான் நினைத்ததெல்லாம் நடக்கவில்லைதான். அதற்காக நான் இதுவரை சோர்ந்துவிடவில்லை. வாழ்க்கையே ஒரு நேர்மையான போராட்டம்தான்.

மறுநாள் காலை ரித்தீஷ் ஜி.எம் ஆகச் சேர்ந்தபோது, அவனைக் கட்டிப்பிடித்து வாழ்த்துச் சொன்னேன்.

அருகில் இருந்த டெபாஷிஷ் என்னை நன்றியுடன் அணைத்துக் கொண்டார்.

Print Friendly, PDF & Email

1 thought on “கிடைக்காத ப்ரமோஷன்

  1. ஒரு சிறுகதைக்கு உரிய இலக்கணம் இந்தக் கதையில் ஏராளமாக இருக்கிறது. புதிய எழுத்தாளர்கள் நிறைய கற்றுக் கொள்ளலாம். இதன் ஆசிர்யருக்கு நன்றிகள்.
    ஜனனி, திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *