காவி அணியாத புத்தன்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 11, 2012
பார்வையிட்டோர்: 12,546 
 
 

கடந்த இரண்டு நாட்களாக அவன் என் பார்வையில் பட்டுக்கொண்டே இருக்கிறான். எதேச்சையாக யன்னலுக்கால் பார்வையைப் படரவிட்டபோது, அவன் வாசலில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. கலைந்த முடியும், நாலுமுழ வேட்டியும் சட்டையுமாய் ஏதோ ஒன்றுக்கான எதிர்பார்ப்போடு இருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது.

‘யாரப்பா அது தினமும் வந்து வாசல்ல உட்கார்ந்திருக்கிறது.?’ உதவியாளனிடம் வினாவினேன்.

‘உங்களைச் சந்திக்கணும் என்று அடம் பிடிக்கிறான் சார்’ என்றான்.

‘என்னையா, ஏனாம்;?’

‘தெரியல்லை, லட்சுமி, லட்சுமி என்று சொல்லி ஒரேயடியாய் ஒப்பாரி வேறு வைக்கிறான்’

‘என்ன நடந்ததாம்..?’ ஆர்வ மிகுதியால் அவனிடமே விசாரித்தேன்.

‘என்கிட்ட சொல்ல மாட்டேன் என்கிறான். என்ர கால் போனாலும் பரவாயில்லை உன்ர
கால் போயிடிச்சே லட்சுமி என்று முனகிக்கொண்டு தலையில் அடிச்சுக்கிறான்.’

‘ஓ குடும்ப விவகாரமா?’

‘வீடு பார்க்கப்போறேன், காணி பார்க்கப்போறேன் என்று போய்த் தெரியாமல்
கண்ணி வெடியில எங்கேயாவது காலை வைச்சிருப்பா, அதிலை அகப்பட்டு கால்
போச்சுதோ தெரியலை..!’ தனது சந்தேகத்தை அவன் வெளியிட்டான்.

மனசு வேதனைப்பட்டது, எவ்வளவு சாதாரணமாய் சொல்லிவிட்டான். அமைதியாய் இருந்த இந்தமண், யுத்த பூமியாய்மாறியதேன்? தினந்தினம் இப்படியான சம்பவங்கள் நடந்ததால் அப்பாவி மக்களின் இழப்புக்கள் எல்லாம் இவர்களுக்கு சாதாரணமாய் போய்விட்டனவோ? மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல, உயிர் இழப்புக்கள்கூட கவனத்தில் கொள்ளப்படாமல், மனித உயிர்கள் மதிப்பற்றுப் போய்விடுமோ? மனிதநேயம் என்பதன் அர்த்தமே இவ்வுலகில் யாருக்குமே புரியாமல் போய்விடுமோ?

தினமும் இப்படிக் கண்ணி வெடியில் அகப்பட்டுக் காலை இழப்பவர்களில் அதிகமானவர்கள் குழந்தைகளாயும், பெண்களாயும்தான் இருக்கிறார்கள். கணக்கிட முடியாத அளவிற்கு இப்படிப் பலர் ஊனமடைந்திருக்கிறார்கள். ஒரு பெண் ஒற்றைக் காலோடு, தடி ஊன்றி, இடுப்பிலே ஒரு கைக்குழந்தையைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு..! பார்த்ததும் பதறிப்போனேன்! செல் வந்து இவர்கள் வீட்டு முற்றத்திலே நின்ற பனைமரத்தில் பட்டு வெடித்துச் சிதறியபோது அங்கே நின்ற கணவன் அந்த இடத்திலேயே இறந்துபோனானாம். இவள் ஒற்றைக் காலை இழந்து, குழந்தைக்காக உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டு வாழவேண்டிய பரிதாபநிலை! எந்த ஒரு வருமானமும் இல்லாத, நாதியற்ற அவளது கண்ணீர்க் கதையைக் கேட்டதும் என்னை அறியாமலே எனது கண்கள் பனித்தன.

பாவம் இந்தப் பெண்ணாய்ப் பிறந்தவர்கள்! குடும்பத்தில் யாருக்கு என்ன நடந்தாலும் இறுதியில் பாசம் என்ற வலையில் சிக்கி, உளரீதியாகவும், உடல்ரீதியாகவும், தாயாய், மனைவியாய், மகளாய், தோழியாய் எங்கேயும், எப்போதும் அனேகமாய் பாதிக்கப்படுவர்கள் இந்தப் பெண்களாய்த்தானே இருக்கிறார்கள்!

கால் இழந்தவர்களுக்கு பொய்க்கால் கட்டும் இந்த ஜெயப்பூர் கிளை நிறுவனத்தின் பொறுப்பதிகாரியாக சென்ற வருடம்தான் நான் பொறுப்பை ஏற்றிருந்தேன். நான் பொறுப்பெடுத்த நேரமோ, அல்லது யுத்தத்தின் அகோரமோ, கொஞ்ச நாட்களாக பொய்க்கால் கட்ட வந்தவர்களாலும், அதற்குரிய பயிற்சி எடுக்க வந்தவர்களாலும் ஒரு வைத்தியசாலைபோல் இந்த இடம் நிரம்பி வழியத் தொடங்கிவிட்டது.

இராணுவம் ஆக்கிரமிப்பு செய்த பிரதேசங்களில் தமிழ்மக்கள் மீளக் குடியேறியபோது இராணுவத்தால் தங்கள் பாதுகாப்பிற்காகப் புதைத்து வைக்கப்பட்ட பீ4 அன்ரி பார்ஷனல் கண்ணி வெடிகளும், முகாங்களில் இருந்து அவ்வப்போது மக்கள் குடியிருப்புகள் மீது ஏவப்பட்ட செல்களும்தான் இதற்கெல்லாம் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும். கண்ணி வெடிகள் எங்கே எந்த மூலையில் புதைத்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியாமல் அப்பாவி மக்கள், நடந்து போகும்போது தவறுதலாக அதன்மேல் கால்வைக்க, அவை வெடித்துச் சிதறி அவர்களைத் தினமும் பலி எடுத்துக் கொண்டே இருந்தன. இராணுவம் வெளியேறிய பகுதிகளில் புதைக்கப் பட்டிருந்த இந்தக் கண்ணி வெடிகள் இன, மத வேறுபாடின்றி அப்பாவி மக்களின் உயிரைத் தினமும் பலி எடுத்துக் கொண்டே இருந்தன. நாகரிகமடைந்த எந்த ஒரு நாடும் இதுபோன்ற அநாகரிகமான, மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபட்டு, இதுபோன்ற கண்ணிவெடிப் பிசாசுகளை நிலத்தில் புதைத்து வைத்து அப்பாவி பொதுமக்களின் உயிரைப் பலி எடுப்பதில்லை.

விவசாயிகள் தங்கள் சொந்த நிலத்தில் மீளக் குடியேறியபோது பச்சைப் பசேலென்று
கதிர்விளைந்திருந்த நிலங்கள் எல்லாம் உயிர் குடிக்கும் கண்ணி வெடிகளாய்
விளைந்திருந்ததைப் பார்த்ததும் பயந்து போனார்கள். அதைப் பயிரிட்ட இராணுவமோ
ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்து, அப்பகுதியில் காலாகாலமாய் வாழ்ந்த பொதுமக்களின் ஜனநாயகரீதியான தொடர் போராட்டத்தால், அவர்களின் எதிர்ப்பைத் தாங்கமுடியாமல் பின் வாங்கிப் போயிருந்தது.

கண்ணி வெடிகளில் அகப்பட்டு காலை இழந்தவர்களுக்கு இந்த நிறுவனம்
அவர்களுக்குத் தேவையான பொய்க் கால்களைத் தயாரித்து அவர்கள் அந்தப்
பொய்கால்களின் உதவியுடன் நடப்பதற்கு வேண்டிய எல்லாப் பயிற்சிகளையும்
கொடுத்து வந்தது. இதை எப்படியோ கேள்விப்பட்ட கந்தசாமியும் தினமும் அங்கே
வந்து அதற்குப் பொறுப்பானவர்களைச் சந்திப்தற்காகக் காத்திருந்தான்.

அவனை உள்ளே அழைத்து வரும்படி உதவியாளனிடம் செல்லவே, அவன் வெளியே சென்று கந்தசாமியை அழைத்து வந்தான்.

எனக்கு எதிரே வந்து நிற்பது, சூதுவாது அற்ற ஒரு அப்பாவி கிராமத்து விவசாயி
என்பது அவனது நடையுடை பாவனையிலிருந்து என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
அவனது முகத்தில் மட்டும் எதையோ இழந்துவிட்ட சோகம் குடியிருந்தது.

‘என்னப்பா, இங்கே எதுக்கு வந்தே..?’ அவனிடம் மெல்ல வினாவினேன்.

‘இங்கே வந்தால் பொய்க்கால் பொருத்தலாம் என்று சொன்னாங்க, அதுதான்
உங்ககிட்ட உதவிகேட்டு வந்தேனுங்க.’ பெரிய எதிர்பார்ப்போடு வந்திருக்கிறான்
என்பது அவனது பேச்சிலிருந்து புரிந்தது.

‘யார் இதைப்பற்றிச் சொன்னாங்க..?’

‘நம்ம கிராமத்துப் பையன் சின்னராசுதான் சொன்னான். இப்படித்தான் ஒருநாள்,
செல் வந்து எங்க கிராமத்திலே விழுந்து வெடிச்சபோது அவனுக்கும் ஒருகால்
போயிடிச்சுதுங்க. இங்கே வந்து பொய்க்கால் பொருத்தி இப்போ மெல்ல மெல்ல
நடக்கிறானுங்க, சீக்கிரம் சைக்கிள்கூட ஓட்டப்போறேன்னு ரொம்ப உஷாராய்ச்
சொன்னானுங்க!’

‘அப்படியா? முயற்சி செய்தால் முடியாதென்று ஒன்றுமே இல்லையப்பா!
ஒவ்வொருவருடைய பயிற்சியையும், மனோபலத்தையும் பொறுத்தது. ஆமா, இதற்கு
நிறைய செலவாகுமே..?’

‘பரவாயில்லைங்க, பணத்தைவிட எனக்கு இது..?’

‘உன்னோட ஆதங்கம் புரியுதப்பா!. பணம் பெரிசில்லையா?’

‘அன்னிக்கு லட்சுமி காலை வைக்காட்டி, பின்னாலே வந்த என்னுடைய கால் அல்லவா
போயிருக்கும். மற்றவங்க லட்சுமியைப் பார்த்து ‘நொண்டி’ என்று பழிக்கும்போது என்னையே பார்த்துப் பழிப்பதுபோல எனக்குள்ளே ஒருவித காழ்ப்புணர்வு ஏற்படுதுங்க. என்ன செலவானாலும் இந்தக் குறையை எப்படியாவது நீங்கதான் நிவர்த்தி செய்யணும். மற்றவங்க துணையில்லாமல் மெல்ல மெல்ல நடந்தாலே போதுமுங்க.’ பவ்வியமாய் என்னிடம் சொன்னான்.

‘உன்னோட மனநிலை எனக்குப் புரியுது கந்தசாமி. அப்படின்னா வேலையை உடனே
தொடங்க வேண்டியதுதான்!’ என்றேன்.

‘வந்து.. பணம்..?’

‘பணத்திற்கு இப்ப ஒண்னும் அவசரமில்லை. பொய்க்கால் பொருந்துமா இல்லையா
என்று காலைப் பரிசோதித்து பார்த்துத்தான் சொல்லமுடியும். எங்கே லட்சுமி?
உள்ளே அழைச்சிட்டுவாப்பா!’ என்றேன்.

கந்தசாமி தயங்கினான்.

‘நீங்கதான் மனசு வைச்சு கொஞ்சம் வெளியே வந்து பார்க்கணும்!’

நடக்கவே முடியாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ?

‘சரி, நானே வந்து பார்க்கிறேன்.’ என்று சொல்லி அவனுடன் வெளியே சென்றேன்.

‘வண்டி என்றானே, ஆட்டோவில் வந்திருப்பானோ?’ என்று என் கண்கள் ஆட்டோவைத்
தேடின. ஓரு ராக்ரர் வண்டியும் அதனோடு இணைக்கப்பட்ட ரெயிலர்பெட்டியையும்
தவிர வேறு எந்த வண்டியும் வெளியே இல்லை.

‘எங்கேப்பா வண்டி?’

கந்தசாமி என்னை அழைத்துச் சென்று ரெயிலர் பெட்டியைக் காண்பித்தான். உள்ளே
பசுமாடு ஒன்று தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு படுத்திருந்தது.

‘ல..ட்சு..மி…?’ ஏமாற்றத்தோடு கேட்டேன்.

‘இதுதாங்க லட்சுமி, இதுக்குத்தாங்க கால் போயிடிச்சு’ என்று சொல்லி
லட்சுமியை அன்போடு தடவிக் கொடுத்தான்.

லட்சுமி மூன்று காலில் எழுந்து நிற்க முயற்ச்சி செய்து, முடியாமல் போகவே
வேதனையோடு முனகிக் கொண்டு மீண்டும் படுத்துக் கொண்டது.

எனக்கு எல்லாமே புரிந்துபோயிற்று. பணச்செலவை நினைத்து மனிதருக்கே
பொய்க்கால் கட்டத் தயங்கும் இந்தக் காலத்தில,; தான் வளர்த்த பசுவிற்குப்
பொய்க்கால் கட்டி அதை நடமாடச் செய்வதில் அவனுக்கு உள்ள அக்கறையை நினைத்து வியப்படைந்தேன். மனிதர்களால் இங்கே வந்து தங்கள் குறைகளைச் சொல்லி அழமுடியும், ஆனால் இந்த வாயில்லா ஜீவன்களால் சொல்லி அழமுடியுமா?

ஜீவகாருண்ய சிந்தனை உள்ள இவர்களைப் போன்றவர்களுக்குக் கட்டாயம் உதவி
செய்ய வேண்டும் என்று உடனேயே எனக்குள் முடிவெடுத்துக் கொண்டேன். ஊனமடைந்த ஆடு, மாடுகளைக் கசாப்புக் கடைக்குத் தள்ளிவிடுபவர்களைப் போலல்லாது வித்தியாசமானவனாய், அவைகளையும் வாழவைக்க வேண்டுமென்ற இரக்கமுள்ளவனாய் இவனிருந்தான்.

என் உதவியாளனை உடனேயே அழைத்து லட்சுமியின் கால்களை அளவெடுக்கச் சொன்னேன்.

இதுவரை காலமும் மனிதரின் கால்களையே அளவெடுத்துப் பழக்கப்பட்ட அவன், என்னை ஒரு கணம் வினோதமாகப் பார்த்துவிட்டு, தயக்கத்தோடு ஏதோ முணுமுணுத்தபடி லட்சுமியின் காலின் அளவுகளை எடுத்தான்.

‘இந்தாளுக்கு என்ன பைத்தியமா?’ என்று அவன் மனதுக்குள் என்னைத்
திட்டியிருக்கலாம். யார் என்ன சொன்னாலும் லட்சுமிக்குப் பொய்க்கால்
கட்டியே தீருவது என்று உடனேயே நான் முடிவும் எடுத்துக் கொண்டேன்.

‘பணம்..?’ என்று கந்தசாமி மீண்டும் தயங்கினான்.

‘வேண்டாமப்பா, பணம் வேண்டாம். அன்பு, பாசம், நேசம், கருணை இவை
எல்லாவற்றுக்கும் முன்னால் பணத்திற்குப் பெறுமதியே இல்லையப்பா. எப்படியும்
லட்சுமியை நடக்க வைத்துக் காட்டுவது என்னுடைய பொறுப்பு!’ என்று சொல்லிப்
பெருமிதம் பொங்க அவன் தோளில் தட்டிக் கொடுத்தேன்.

‘லட்சுமிக்கு நல்ல மனசுங்க, மனிசனுக்கு மனிசன் வெச்ச பொறியில தானே லட்சுமி
அகப்பட்டுதுங்க, பாவம் வாயில்லாத ஜீவனே தவிர என்ன சொன்னாலும் புரியுமுங்க,
மனிசனைவிட ரொம்ப உசத்தி!’

லட்சுமியைப் புகழ்ந்து பெருமைப்பட்டுக் கொண்டே அதன் கன்னத்தை இரண்டு
கைகளாலும் ஆசையோடு தடவி நெற்றியில் முத்தம் கொடுக்க, லட்சுமி செவிகளை
விரித்து கண்களை மூடி உடம்பு சிலிர்க்க வெட்கப்பட்டது.

அன்பு, பாசம், மனிதநேயம், ஜீவகாருண்யம், இவையெல்லாம் இன்னும் இந்த மண்ணில்
அழிந்து விடவில்லை, எங்கேயோ, எப்படியோ ஏதோ உருவத்தில் நிலைத்திருக்கிறது
என்ற நல்ல செய்தி அந்த அப்பாவிக் கிராமத்தவனின் கண்களிலும், செய்கையிலும்
பளிச்சென்று தெரிந்தது!.

Print Friendly, PDF & Email

1 thought on “காவி அணியாத புத்தன்

 1. இன்னொரு யுத்த காண்டம்.
  யுத்தத்தின் மனிதனின் வீழ்ச்சி மட்டுமே பேசுவதிலிருந்து மாறி, வளர்ப்புப் பிராணிகளின் நிலை பற்றியும் வித்தியாசமாகப் பேசியுள்ளார் ஆசிரியர்
  பொய்க்கால் பொருத்த, வளர்ப்புப் பசுவைக் கொண்டு வரும் மனித நேயம். அனைத்து உயிரையும் கிராமத்து மக்களின் வெள்ளந்தியான மனம் இவற்றை மிகவும் திறமையாகக் கையாண்டுள்ளார் ஆசிரியர்.
  விவசாயிகள் தங்கள் சொந்த நிலத்தில் மீளக் குடியேறியபோது பச்சைப் பசேலென்று
  கதிர்விளைந்திருந்த நிலங்கள் எல்லாம் உயிர் குடிக்கும் கண்ணி வெடிகளாய்
  விளைந்திருந்ததைப் பார்த்ததும் பயந்து போனார்கள்.
  அப்பப்பா… என்ன பயங்கரம்… கண் முன் காட்சிகளாய் விரிகின்றன.
  சினிமாக்களில் வெடிக்கும் கண்ணி வெடிகளைப் பார்த்திருக்கிறேன். கதை படிக்கும்போதும் கண்ணுக்குள் காட்சிகளைப் பார்க்கிறேன்.
  Wayne C Booth அவர்களின் Telling and Showing என்ற கட்டுரையைப் படித்திருக்கிறேன். ஒரு எழுத்தாளன் எப்படித் தன் எழுத்தின் மூலம் காட்சிப் படுத்துகிறான். காட்சிப்படுத்த வேண்டூம் என்று எழுதப் பட்ட அந்தக் கட்டுரைக்கு உதாரணமாக உள்ளது குரு அரவிந்தன் அவர்களின் எழுத்து.
  குறிப்பாக சோகமயமான யுத்தகீதத்தை உணர்வுபூர்வமாக அவர் சித்தரிப்பது மிகவும் சிறப்பு. சிறப்பினும் சிறப்பு.
  கணவனை இழந்து, கண்ணி வெடிகளால் கால்களை இழந்து, ராணுவ வக்ரவர்களால் கற்பிழந்து… இப்படி இழப்பே வாழ்க்கையாய், பெண்ணின் அவல வாழ்க்கை சித்தரிப்பு மனதைப் பிழிகிறது.
  NB:-
  யுத்தத்தின் அகோரமோ
  *அகோரம்* என்றால் அழகு என்று பொருள்
  *கோரமோ * என்று இருக்க வேண்டும் சார்.
  ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *